மருத்துவமனையிலிருந்து விக்ரம் வீடு திரும்பி இரண்டு நாட்களாகியிருந்தன.
அன்று மருத்துவமனையில் வைத்து பாரதியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டு அவளின் பதிலை எதிர்பார்த்து அவளை பார்த்திருக்க, அவன் அலைபேசி தொல்லை செய்யவே அணைக்கப் போனவன் சாந்தி தேவியின் எண் மின்னவும், தவிர்க்க முடியாமல் பேசலானான்.
அவன் பேச ஆரம்பிக்கவும் பாரதி அவனை விட்டு விலகி எழுந்து நின்றது தான் அவன் கண்களுக்குள் நின்றது. சாந்தி தேவி எதோ கேட்க, பேசி முடித்துப் பார்க்கையில் பாரதி அங்கில்லை.
“அதற்குள் எங்கே சென்றாள்? அவள் வந்ததாக நான் கனவேதும் கண்டேனா?” குழப்பமாக எழப் போனவனை ரகுராம் திட்டியவாறு அமர்த்தினான்.
“பாரதி என்ன பேசினாளோ? அவள் வந்ததை இவன் மறந்து விட்டானா?” ரகுராம் அதிர்ச்சியாக விக்ரமை பார்க்க,
“அண்ணி இப்போதானே கிளம்பினாங்க” ரகுராமின் பின்னால் வந்து நின்ற மோகனா கூறலானாள்.
அதீத ஆனந்தம், அதிர்ச்சி கூட விக்ரமின் மறதிக்கு காரணமாகும் என்று மருத்துவர் கூறியிருப்பதால் அவனை ரகுராம் பொறுமையாகத்தான் கையாளுவான். மோகனாவுக்கு இது புரியாதே சட்டென்று கூறிவிட்டாள்.
“என்னாச்சு? பாரதி என்ன சொன்னா?” ரகுராம் கேட்டான்.
“அப்போ அவ வந்தது உண்மை. நான் கனவு காணலையே” மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தலானான் விக்ரம்.
என்ன நடந்தது என்று அறியாமல் இவனிடம் எப்படி பேசுவது என்றுதான் ரகுராம் விக்ரமிடம் என்ன நடந்தது என்று கேட்டறிந்து, அதற்கேற்றது போல் பேசுவான்.
முதன் முதலாக பாரதியை கனவில் கண்டு ரகுராமிடம் கூறிய பொழுது நடந்த சம்பவத்தை எதற்காக கனவில் காண்கிறான். அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து. ஒருவேளை பாரதியை சந்தித்திருப்பானோ என்று சந்தேகம் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை கேட்டான்.
“லவ் பண்ணின பொண்ணு, நடந்த சம்பவங்கள் எல்லாம் ஆழமான நினைவுகள். ஆறாத காயங்கள். கனவில் வருவது சகஜம்தான். அந்த பொண்ண மீண்டும் சந்திச்சாதான் விக்ரமோட நினைவுகள் திரும்ப வரும். வந்தால் தான் அது விக்ரமுக்கு நல்லதா? கெட்டாதான்னு தெரியும்.
பாரதியால் விக்ரமுக்கு எந்தக் கெடுதியும் நடக்காது என்றுதான் பாரதியை தேடித் கண்டு பிடித்து, வரவைத்திருந்தான். அவள் என்ன பேசி வைத்தாலோ, அதற்குள் இவன் மறந்து விட்டானே. நல்லது தான் என்று ரகுராம் நினைக்கும் பொழுதே
பாரதி வந்தாள் என்று மோகனா கூறியிருந்தாள். கூறிய பின் மறுக்க முடியாதே. “என்னாச்சு? ஏதும் பிரச்சினையா?” பாரதிக்குத்தான் இவன் நிலைமை தெரியாதே. பழைய சம்பவங்களை பற்றி ஏதும் பேசி வைத்தாளோ என்று அச்சத்தோடுதான் கேட்டான் ரகுராம்.
“இல்ல நான் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டேன். எதுவும் சொல்லாம போய்ட்டா” அப்பாவியாக பதில் சொன்னான் விக்ரம்.
உள்ளே வந்த உடன் பாரதி பேசியதை கேட்டு அவள் விக்ரமின் மேல் கோபப்படவில்லை. பழையதை பேசவும் மாட்டாள் என்று தான் ரகுராம் மோகனாவோடு வெளியே சென்றிருந்தான்.
வெளியே வந்த ரகுராம் “பாரதிக்கு யார் விக்ரம் இந்த ஹாஸ்பிடல்ல இருக்குறத சொன்னாங்க” தனக்குள்ளையே கேட்டுக் கொள்ள,
“நான் தான்” என்றாள் மோகனா.
“நீயா… உனக்கு…” என்று அவன் கேட்க்கும் முன்
“அவங்களுக்குள்ள என்ன நடக்குது. என்ன நடந்தது என்று எல்லாம் நானறிவேன். என்னிடம் எதையும் மறைக்க கூடாது. மறைத்தாலும் நான் கண்டுபிடிப்பேன்” கண் சிமிட்டினாள் மோகனா.
“என்ன சொல்லுற? என்ன நடக்குது என்று விக்ரம் சொல்லியிருப்பான். என்ன நடந்தது என்று யார் சொன்னா?” அதிர்ந்தான் ரகுராம்.
“நீதான். அன்னைக்கி குடிச்சிட்டு உளறுனியே” என்று சிரித்தாள்.
“நானா? எப்போ?” என்று யோசித்தவன் மோகனாவோடு படம் பார்த்தது ஞாபகத்தில் வரவே “அடிப்பாவி நீ சரக்கு வேற அடிப்பியா? வீட்டுல யாரும் இல்லனு சரக்கடிக்க பிளான் பண்ணி உள்ள வந்ததுமில்லாம, என்ன பார்த்ததும் படம் பாக்க வந்தேன்னு புளுகுணியா?” மோகனா அவனுக்காக போட்ட திட்டத்தை இப்படி புரிந்துக் கொண்டிருந்தான் ரகுராம்.
“சரியான அறிவாளி” என்று உள்ளுக்குள் சிரித்தவள் “ஆமா… குடிச்சிட்டு என்ன என்னவெல்லாம் பண்ண?” என்று சீண்டலானாள்.
“நானா….” உண்மையிலயே இவளிடம் தவறாக நடந்து கொண்டேனா? சந்தேகத்தை விட அச்சம் தான் ரகுராமுக்குள் மேலோங்கியது.
“நீதான்…..” மோகனா கண்சிமிட்டி சிரிக்க, விக்ரமின் அறையிலிருந்து வெளியே வந்த பாரதி விக்ரமை பார்க்குமாறு கூறி விட்டு சென்றதில் ரகுராம் மோகனா சிரித்ததை கவனிக்கத் தவறினான்.
பாரதியிடம் விக்ரம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டும் பாரதி பதில் கூறாமல் சென்றது ஏன் என்று ரகுராமுக்கு புரிந்தாலும், விக்ரமுக்கு அதை புரிய வைக்க அவனால் முடியாது அதனால் சமாளிக்கலானான்.
“ஏன்டா நீ லவ் பண்ணுறேன்னு சொல்லாம திடீரென்று கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டா எந்த பொண்ணு தான் பதில் சொல்வா? யோசிக்க வேணாமா? அதான் போய் இருப்பா” என்றான் ரகுரான்.
“ஒரு வேலை வெட்கப்பட்டுகிட்டு போயிருப்பாங்களோ, என்னவோ” என்றாள் மோகனா.
“நான் இவன சாமாதானப்படுத்தப் பார்த்தா இவ இன்னும் ஏத்திவிடுறாளே” என்று ரகுராம் மோகனாவை முறைக்கலானான்.
“இருக்கும். இருக்கும். அப்படித்தான் இருக்கும்” தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான் விக்ரம்.
தேவதை கதை
கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நோரில் உன்னையே பார்த்த
பின்பு நான் நம்பி விட்டேன்
மறுக்கவில்லை
அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிரக்கத்தில்தான்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்
காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
“என்ன பாரதி இன்னைக்கும் வேலைக்கு லீவா?” என்று கேட்டான் கார்த்திகேயன்.
என்ன பதில் சொல்வதென்று பாரதி முழிக்க,
“என்னதான் பிரச்சினை சொல்லு? இல்லனா நான் விக்ரம்கிட்ட போய் கேட்குறேன்” கார்த்திகேயன் மிரட்டவில்லை. பாரதி மனம் திறந்து வாய் திறக்க வேண்டும் என்று தான் பேசினான்.
“மெளனமாக விம்மியவள் நீண்ட நேர அமைதிக்குப் பின் “விக்ரம் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்”
“நீ ரெண்டு நாளா வேலைக்கு போகாததுக்கு காரணம் இதுதானா? சரி நீ என்ன பதில் சொன்ன?”
“நீ ஒன்னும் சொல்லாம வந்தேன் என்று சொல்லும் பொழுதே தெரியுது. நீ இன்னும் அவன மறக்கல. லவ் பண்ணுறன்னு” கார்த்திகேயனுக்கு பாரதியின் மனம் தெளிவாக புரிந்தது. அவள் அதை புரிந்துக் கொண்டாளா என்று அவனுக்கு தெரியவில்லை. என்ன குழப்பம் என்றும் புரியவில்லை.
“ஆமா… அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு சொன்னதும் என்னாச்சோன்னு என் மனசு கெடந்து தவிச்சத எனக்கு மட்டும் தான் தெரியும். அப்போ அன்னைக்கி அவன் பேசினது எதுவும் எனக்கு ஞாபகத்துல வரல. அவனுக்கு ஒன்னும் ஆகிடக் கூடாது. அவன் நல்லா இருந்தா போதும் என்று தான் என் மனசு வேண்டிக்கிட்டது.
அவன பார்த்த பின்னாலதான் நான் இன்னும் அவன லவ் பண்ணுறது எனக்கே புரிஞ்சது. அவன் கல்யாணம் பண்ணிக்கலாம்மான்னு கேட்டதும் அவன் பேசினது தான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் எதையும் மறக்கல. மறக்கவும் முடியல. மறக்க முடியாதபடி பேசிட்டானே. நான் எப்படி அவன கல்யாணம் பண்ணி அவன் கூட வாழ முடியும்? அது இந்த ஜென்மத்துல நடக்காது” கதறி அழலானாள் பாரதி.
“இங்க பாரு பாரதி. நீ இந்தியா போகணும். விக்ரமாகிட்ட வேலை பார்க்கணும் என்று சொல்லும் பொழுதே நீ இன்னும் அவன லவ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது.
உன்னால அவன மறக்க முடியல. ஏதேதோ காரணம் சொல்லி நீ அவன பார்க்கப் போனதே அவன் மேல நீ வச்ச லவ்வால என்று உனக்குத்தான் புரியல.
உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி நாம எத்தனை முறை சொல்லி இருப்போம். அப்போ எல்லாம் உன் பதில் இப்போ வேணாம். இன்னும் கொஞ்சநாள் போகட்டும் என்று சட்டென்று வருமே.
விக்ரம பார்க்கப் போறேன்னு சொன்னதும் நான் ஏன் உன்ன தடுக்கலன்னு தெரியுமா? அவன பார்த்துப் பேசி ஒரு முடிவுக்கு வருவன்னு தான். இன்னமும் நீ குழப்பத்துலதான் இருக்க.
விக்ரமுக்கு ஒருவேளை கல்யாணமாகி இருந்தா? நீயும் மூவ் ஆன்னாகி இருப்பியோ, என்னவோ, அவன் இன்னும் உன்ன லவ் பண்ணிக்கிட்டு இருக்குறது தான் பெரிய பிரச்சினையா இருக்கு.
அவனே கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு கேட்டிருக்கான். ஒன்னு நடந்தத மறந்து நீ அவனை கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும். இல்லையா, நீ பேசினத நான் இன்னும் மறக்கல என்று அவன் மூஞ்சிக்கு நேர சொல்லிட்டு வந்திருக்கணும். அதையும் செய்யாம, கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு நீ அழுது கரஞ்சா எல்லாம் சரியாகிடுமா?
அடுத்தவாரம் நாங்க திரும்ப ஆஸ்திரேலியா போலாம்னு இருக்கோம். விக்ரம கல்யாணம் பண்ணிக்கிட்டா இங்க இருக்கலாம். இல்லையா எங்க கூட கிளம்பி வா. யோசிச்சு நல்ல முடிவா சொல்லு” என்ற கார்த்திகேயன் கவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
பாரதியும், அவள் சகோதரி பார்கவியும் இரட்டையர்களாக பிறந்தாலும் ஒன்றாக வளரத்தான் முடியவில்லை.
பிறக்கும் பொழுதே பார்கவி உடல் உபாதைகளோடு பிறந்தததினால், இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கலானாள் சுப்பு லட்சுமி.
ஐந்து வருடங்களுக்கு மேல் இந்தக் குழந்தை உயிரோடு இருக்காது என்று மருத்துவர் கூறியிருக்க, தனக்கு பெண்குழந்தைகள் இல்லை என்று கார்த்திகேயனின் அன்னையும், பாரதியின் தந்தையின் அக்காவுமான கமலம் பார்கவியை தூக்கிச் சென்றாள்.
பாரதியின் தந்தையின் இறப்புக்கு பின் போக்கிடமில்லாமல் சுப்பு லட்சுமி பாரதியை அழைத்துக் கொண்டு கார்த்திகேயனின் வீட்டில் தான் தஞ்சமடைந்தாள்.
தனக்கு ஒரு சகோதரி இருக்கின்றாளென்று பார்கவி அறிந்திருந்தாலும், பாரதியை பார்த்ததில்லை. தன்னை போலவே ஒருத்தி தன்னால் செய்ய முடியாத அனைத்தையும் செய்வதை பார்த்து மேலும் ஒடுங்கலானாள்.
பாரதியை போல் தன்னால் ஓடியாடி விளையாட முடியாதே. மழையில் நனைந்தால் ஜுரம் வந்து பத்து நாட்களாக படுத்து விடுகிறேன், என்றெல்லாம் கார்திகேயனிடம் புலம்புவாள். இத்தனை நாட்களாக தன் மீது மட்டும் பாசம் வைத்திருந்த மாமா தன்னை போலவே இருக்கும் தங்கையிடம் பாசம் வைத்து விடுவாரோ என்ற ஒருவித பொறாமை சிறு வயதில்லையே பார்கவிக்குள் தோன்றலானது.
வயதுக்கு வந்த பின் பாரதியும், கார்த்திகேயனும் சிரித்துப் பேசினாலோ, ஒன்றாக இருந்தாலோ பார்கவி முகத்தை தூக்கி வைத்துக்கொள்வாள். அவளுக்கு கார்த்திகேயனை பிடித்திருந்தது. அதை சொல்லாத தெரியாமல் கோபத்தை மட்டும் தங்கையிடம் தான் காட்டுவாள்.
அவளை புரிந்துக் கொண்டு பாரதியும், கார்த்திகேயனும் நடந்துக்கொள்வார்கள்.
பார்கவிக்கு முன்னுரிமை கொடுத்தே கார்த்திகேயன் எல்லாவற்றையும் செய்யலானான். பாரதியும் விட்டுக் கொடுத்துதான் போனாள். எல்லாம் சுமூகமாக நடந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமாகிவிடுமே.
பாரதிக்கும், கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைக்கலாமா என்று சுப்பு லட்சுமி கமலத்திடம் கேட்டிருக்க,
“பாரதிய பத்தி மட்டும் யோசிக்கிற? உனக்கு இன்னொரு பொண்ணு இருக்காளே அவளை பத்தி யோசிக்க மாட்டியா?” தான் வளர்த்த பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் கேட்டாள் கமலம்.
கார்த்திகேயனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கமலத்துக்கு இல்லை. கூடாது என்ற எண்ணமும் இல்லை. பெற்ற பிள்ளைக்கு மேலாக வளர்த்த பாசம் தலை தூக்கவே கேட்டிருந்தாள்.
“அஞ்சு வயசு வரைக்கும் தான் அவ உசுரோடவே இருப்பான்னு டாக்டர் சொன்னப்போவே நான் அவளை பத்தி யோசிக்கிறது விட்டுட்டேன். இத்தனை வருஷம் அவ உசுரோட இருந்ததே பெருசு. இதுல அவளை கட்டி வச்சி கார்த்திக்கோட வாழ்க்கை வீணா போகணுமா?” என்று கூறலானாள் சுப்பு லட்சுமி.
சுப்பு லட்சுமியின் கூற்றை கமலம் மறுக்கவில்லை. திருமணம் செய்து வைத்து பார்கவி இறந்து விட்டால், கார்த்திகேயனின் வாழ்க்கை என்னாவது என்று அன்னையாக கமலத்துக்கும் கவலை இருந்ததினால் பதில் ஏதும் கூறாது அமைதியாகவே இருந்தாள்.
குளிக்கச் சென்ற அத்தையும், அன்னையும் இன்னும் வரவில்லையே என்று கிணத்தடிக்கு வந்த பார்கவி இவர்களின் பேச்சை கேட்டுவிட்டாள்.
பிறந்ததிலிருந்தே அன்னைக்கு தன்னை பிடிக்கவில்லை. அதனால் தான் அத்தையிடம் கொடுத்து விட்டாளென்று மருகிய பார்கவிக்கு சுப்பு லட்சுமியின் பேச்சு மேலும் ரணத்தை தான் கூட்டியது. தன்னை பாசமாக வளர்த்த அத்தை கூட அன்னையின் பேச்சை மறுக்காதது நெஞ்சில் ஊசியால் குத்தியது போன்று வலிக்கச் செய்யவே இனிமேலும் தான் உயிரோடு இருக்கக் கூடாதென்று தற்கொலை செய்துகொள்ள வீட்டை விட்டு ஓடியவள் வண்டியில் மோதப்போய் யாரோ அவளை காப்பாற்றி இருக்க, இவள் மயங்கியிருந்தாள்.
பார்கவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வீட்டார் பதறி துடித்துக் கொண்டு வந்தால், அவளோ யாரையும் பார்க்க மாட்டேன் என்று அடம்பிடிக்கலானாள்.
கார்த்திகேயன் பொறுமையாக பேசி என்ன நடந்தது என்று விசாரிக்க, அன்னைக்கும், அத்தைக்குமான சம்பாஷணையை கூறினாள் பார்கவி.
“எனக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்” என்று கார்த்திகேயன் வாக்கு கொடுத்தும் பார்கவி நம்ப மறுத்ததாள், வேறு வழியில்லாமல் கார்த்திகேயன் மருத்துவமனையில் வைத்தே பார்கவியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.
பார்கவிக்கு கார்த்திகேயன் கணவனாக கிடைத்தது மகிழ்ச்சியாகவும், உள்ளுக்குள் பெருமையாகவும் இருந்தாலும் அன்னை பேசியதை கேட்டதால், பாரதியிடமும், சுப்பு லட்சுமியிடமும் முகம் திருப்பலானாள்.
கார்த்திகேயன் அவள் மனநிலையை புரிந்து நடந்துகொள்வதால் சமாதானமடைந்தாலும், தன்னை போலவே இருக்கும் தங்கையால் தன் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று அச்சத்தில் பாரதியை பார்க்கும் பொழுதெல்லாம் எரிந்து விழலானாள்.
தன்னால் தன் அக்கா நிம்மதியில்லாமல் இருப்பதால் வேலையை காரணம் காட்டி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடிவெடுத்தாள் பாரதி.
தனியாக செல்வதா என்று அன்னை கேள்வி எழுப்ப, அன்னையை தன்னோடு வருமாறு அழைத்தாள். அதற்கும் பார்கவி அன்னைக்கு தன் மேல் பாசமே இல்லையென்று பேசலானாள்.
பல வருடங்களாக பிரிந்திருந்த மகளோடு இருக்கலாமென்று சுப்பு லட்சுமி கோவிலில் சந்தித்த பெண்மணியோடு பாரதியை ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாள்.
அன்னை தன் மீது பாசமாக இருப்பது போல் நடிப்பதாக பேச ஆரம்பித்த பார்கவி, கார்த்திகேயனின் உழைப்பில் வாழ்வதாக பேச வேறு செய்தாள்.
பெற்றமகள் பேசும் பேச்சுக்களால் மனம் உடைந்த சுப்பு லட்சுமி கோவில் குலமென்று சுற்றித் திரிந்தே உயிர் நீத்தாள்.
அன்னை இறந்த பின் கொஞ்சம் அடங்கிய பார்கவி திருமணமாகி இத்தனை வருடங்களாகியும் தனக்கு குழந்தை இல்லையென்று அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விசாரிப்பதாக கமலத்திடம் சண்டையிடலானாள்.
“ஆமா மாமாக்கு பாரதிய கட்டிவைக்கணும் எங்குறது தானே உங்களுக்கும் ஆச, அதுக்குத்தான் மத்தவங்க பேசுறத வேடிக்கை பாக்குறீங்க” என்று குற்றம்சாட்டலானாள்.
“என்னமா பேசுற? எனக்கு நீயும், பாரதியும் வேற வேற இல்ல. அதுக்காக உன் வாழ்க்கையை பறிச்சி அவகிட்ட கொடுக்க நினைக்கல” கண்ணீர் சிந்தினாள் கமலம்.
“சரி நாம வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாமென்று கார்த்திகேயன் அதற்கு ஏற்பாடு செய்ய, மனம் மகிழ்ந்த பார்கவி தன் தங்கை தான் அந்த வாடகை தாய் என்றறிந்ததும் கோபத்தில் கொதிக்கலானாள்.
பொறுமையிழந்த கார்த்திகேயன் பாரதி விக்ரமை காதலித்ததை கூறிய பின் சமாதானமடைந்து பாரதியை ஏற்றுக்கொள்ளலானாள் பார்கவி.
உண்மையை அறிந்து கொண்டாலும் தங்கையின் மேல் பார்கவிக்கு பெரிதாக பாசம் வரவில்லை. தன் குழந்தையை சுமப்பவள் அதையே காரணம் காட்டி தன் கணவனை தன்னைடமிருந்து பிரித்துக் கொண்டு செல்வாளோ என்றஞ்சி திருமணம் செய்து கொள்ளும்படி பார்கவி பலதடவை பாரதியிடம் கூற “என் திருமணத்தை பற்றி மட்டும் பேசாதே” என்று பாரதி திட்டவட்டமாக கூறிவிட்டாள்.
குழந்தையை சுமக்கும் தங்கையை ஒன்றும் சொல்ல முடியாமல் கமலத்தை பேசலானாள்.
மகனிடம் எதையும் கூறாமலையே இறைவனடி சேர்ந்தாள் கமலம்.
பிறந்த குழந்தையை அக்காவின் கையில் கொடுத்த பாரதி அவர்களின் வாழ்க்கையிலிருந்து விலகி மீண்டும் ஆஸ்திரேலியா சென்றாள்.
இரண்டு தாய்க்கும் சொந்தமானவள், தன் பெயரின் முதல் எழுத்தும் வருகிறது என்று தன் மகளுக்கு கவிபாரதி என்று பெயர் சூட்டினான் கார்த்திகேயன்.
அன்னையும், அத்தையும் இல்லாமல் கவியை தனியாக வளர்ப்பது சிரமமென்று தங்கையை தங்களோடு வந்து தங்குமாறு பார்கவியே அழைத்தாள்.
வேலையை காரணம் காட்டி பாரதி மறுக்க, கணவனோடும் குழந்தையோடும் ஆஸ்திரேலியாவில் குடியேறினாள் பார்கவி.
குழந்தை மீது பாரதி பாசம் வைத்தாலும் உரிமை கொண்டாட நினைக்கவில்லையென்று கூடவே இருக்கும் பொழுது தங்கையை நன்கு புரிந்துகொள்ளலானாள் பார்கவி.
தன் உடல்நிலை அடிக்கடி மோசமடைவதால் மருத்துவமையே தஞ்சம் என்றிருக்கும் பார்கவிக்கு தன் மகளை பாரதியை தவிர வேறு யாராலயும் பார்த்துக்கொள்ள முடியாதென்று தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திகேயனை வற்புறுத்தலானாள்.
“இங்க பாரு பார்கவி. நான் உன்னைத்தான் லவ் பண்ணேன். உன்னைத்தான் கட்டிகிட்டேன். பார்க்க நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்குறதால, நீ அவளாக முடியாது” என்றான்.
“நீ எப்பவும் உன்ன பத்தி மட்டும் தான் யோசிக்கிற. பிடிவாதம் பிடிக்கிற. உன் தங்கைக்கும் ஒரு மனசிருக்குன்னு புரியாதா உனக்கு?” மனைவியை திட்ட முடியாமல் கடியலானான்.
தன் பிடிவாதத்தால் தான் கார்த்திகேயனை திருமணம் செய்தது தவறு என்று புலம்ப ஆரம்பித்த பார்கவி, பாரதி விக்ரமை காண இந்தியா வந்ததும், எங்கே அவள் விக்ரமை திருமணம் செய்து கொள்வாளோ என்றஞ்சி அம்மா, அப்பா, அத்தையின் சமாதியை பார்க்க வேண்டும், என் உயிர் இந்தியாவில் தான் பிரிய வேண்டும் என்று ஏதேதோ காரணங்களை கூறி கார்த்திகேயனை அழைத்து வந்திருந்தாள்.
நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததில் மருத்துவமனையில் பார்கவி அனுமதிக்கப்பட்டிருக்க, வீட்டில் நடப்பவை அவளுக்கு தெரியவில்லை.
விக்ரம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதை பார்கவி அறிந்து கொண்டால் என்ன செய்வாளோ.