“என்ன பயம்? அவங்க உன்னை நெருங்க முடியாதுன்னு சொன்னேன் தானே?” என்று தள்ளி வந்து கேட்க, ஜீவிதா அக்காவிடம் பேச நினைத்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஜீவிதா” என்று அஜய் கத்த,
“ஜீவி” என்று அக்கா தேம்பினாள்.
“என்னக்கா. என்ன ஆச்சுக்கா?” தங்கை கலங்கி போனாள்.
தாரணிக்கு என்னவென்று சொல்வது என்று கூட தெரியவில்லை. பேச்சு ஆரம்பிக்காத வரை சரி. ஆரம்பித்து நிற்கும் நிலை வரத்தான் தாரணி மனதில் அதிகம் ஊடுருவ ஆரம்பித்தான் கல்யாண்.
கிடைக்காது, நடக்காது எனும் பொருள் மேல் தான் சில நேரம் அலாதி பிரியம் பெருகும். அப்படி தான் தாரணியும் இப்போது இருந்தாள்.
“அவர்.. அவரை எனக்கு இவ்வளவு பிடிக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை அஜய்” என்றாள் அவள் கண்ணீருடன். அஜய்க்கு திகைப்பே.
“தாரணி. விஷயம் சீரியஸா போயிட்டிருக்கு. இங்க சூழ்நிலை சரியில்லை”
“நான் தப்புன்னு எனக்கே தெரியுது. இவர் வேணாம்ன்னு. அப்புறம் வேற வரன்னு எல்லாம் என்னால யோசிக்க கூட முடியல. பியூச்சர் நினைச்சா ரொம்ப பயமா இருக்குடா”
“அவர் போன் பண்ணிட்டே இருக்கார். அப்பாவை அவங்க பண்ணது, அது என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியல. ஆனாலும் நான்” என்று அழுக, ஜீவிதாவும் கல்யாண் மெசேஜ் பற்றி சொன்னாள்.
“இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா பாரு அஜய். ஹெல்ப் பண்ணு அஜய் ப்ளீஸ்”
“அக்கா உன்கிட்ட தானே அஜு கேட்க முடியும்? ஏதாவது பண்ணுங்க அஜு ப்ளீஸ். அக்கா, சீனியர் பாவம்” என்று ஜீவியும் அவன் கை பிடித்து கேட்டாள்.
அக்கா, தங்கையை பொறுத்தவரை அஜய் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பான். அப்படி தான் இத்தனை வருடங்களும் அவன் இருந்துள்ளான்.
அவர்களின் நம்பிக்கை அஜய். அது அவனுக்கும் புரிய, என்ன செய்ய என்று ப்ரெஷர் எடுத்தான்.
அஜய்யை கவனித்திருந்த சங்கர், “என்ன?” என்று மகனிடம் வந்துவிட்டார்.
ஜீவிதாவை உள்ளே போக சொல்லியவன், “நான் கூப்பிடுறேன்” என்றான் தாரணியிடம்.
“அஜய். அஜய் ப்ளீஸ். எதாவது பண்ணுடா” என்றாள் அவள் மறுபக்கம் தவிப்புடன்.
அஜய் மூச்சை இழுத்துவிட்டவன், “நான் என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கிறேன்” என்று சொல்லி வைத்துவிட்டான்.
சங்கர் கேள்வியாக பார்க்க, மகனுக்கு அப்பாவிடம் இது பற்றி பேசவே பயமாக இருந்தது. “என்ன சொல்லு அஜய்” என்றார் தந்தை.
“இது. இதை சுமூகமா முடிக்க முடியுமாப்பா?” என்று கேட்டான்.
“முடியும் அஜய். மத்தியஸ்தர்கள் நாலு பேரை வைச்சு இனி நம்ம பொண்ணு பக்கம் அவங்க வர கூடாதுன்னு ஒப்பந்தம் பண்ணிக்கலாம்” என்றார் அவர்.
அஜய் தலையசைத்து மறுத்தான். சங்கர் அவனை யோசனையாக பார்க்க, MPயும் இவர்களிடம் வந்துவிட்டார்.
அப்பாவிடம் சொல்ல முடியாமல், “பெரியப்பா” என்றான் அவரிடம்.
“இதை நல்ல படியா, கல்யாண். அதான் அவரையே தாரணிக்கு முடிக்க முடியுமா?” என்று கேட்டுவிட,
“என்ன விளையாடுறியா நீ?” சங்கர் எகிறிவிட்டார்.
அஜய் அப்பா கோவத்தில் அமைதியாக, “இரு சங்கர். அவன் பேசட்டும்” என்ற MP, “நீ சொல்லு. என்ன திடீர்ன்னு?” என்று கேட்டார்.
தாரணி பக்கம் கை காட்ட முடியாமல், “கல்யாண் நல்ல மாப்பிள்ளை. அதான் விட வேண்டாம்ன்னு” என்று தயங்க,
“அவனை விட நல்ல்ல்ல மாப்பிள்ளைகளை நான் கொண்டு வந்து நிறுத்துறேன். நீ இப்படியே விடு” என்றார் சங்கர் முடிவாக.
“பெரியப்பா” என்று அஜய் அவரை பார்த்தான்.
“என்ன அஜய் இது? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை. பொண்ணு கேட்க சொன்னா மிரட்டிட்டு போயிருக்காங்க. அவங்களுக்கு போய் பொண்ணை கொடுக்க சொல்ற. என்ன நினைச்சிட்டிருக்க நீ உன் மனசுல?” சங்கர் பேச, மகன் தலை குனிந்தான்.
“அந்த பொண்ணு கேட்டுச்சா?” பெரியப்பா சரியாக கேட்டார்.
“இல்லை” அஜய் மறுக்க,
பெரியப்பா சிரித்தவர், “போன் பேசுறதுக்கு முன்னாடி நீ என்ன முடிவுல இருந்தன்னு எனக்கு தெரியும் அஜய். இப்போ வந்து இப்படி பேசுறன்னா, ம்ஹ்ம். புரியாம போகாது அஜய்” என்றார் அவர்.
சங்கர் மகனிடம், “தாரணிக்கு அந்த பையனை கொஞ்ச நாளா தான் பிடிக்கும் போல சொன்ன. இப்போ என்ன வேற மாதிரி இருக்கு?” என்று கேட்க, அஜய் என்ன சொல்ல முடியும்?
சங்கர்க்கு புரிந்து போனது. இளையவர்களை நினைத்து முகம் சுளித்தார். “பொண்ணே ரெடியா இருக்கும் போது நாம என்ன பண்ண? இவங்களுக்கு எல்லாம். ச்சு. என்னமோ பண்ணுங்க” என்று மகனை எச்சரித்து செல்ல,
“அங்கிள்க்கு இது தெரிய வேண்டாம்ப்பா” என்றான் மகன் அவசரமாக.
சங்கர் மகனை முறைத்து செல்ல, பெரியப்பாவும் மகனும் என்ன செய்ய என்று பேசினர். அதன்படி அஜய் போன் எடுத்து கல்யாண்க்கு அழைத்தான்.
“சொல்லு அஜய்” என்றான் அவன் பரபரப்பாக.
“தாரணிக்காக மட்டும் தான் இது. கடைசி வாய்ப்பு. நாங்க அங்கிளை ரூப் கார்டன் கூட்டிட்டு வரோம்” என்றான்.
கல்யாண்க்கு இது ஆனந்த அதிர்ச்சியே. “தேங்க்ஸ், தேங்க்ஸ் அஜய்” என்று அவன் மகிழ்ச்சி கொள்ள,
“அவரை ஹாண்டில் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு. எதுவும் ரீபிட் ஆகாம பார்த்துக்கோங்க” என்று வைத்துவிட்டான்.
இப்போது பலராமிடம் பேச வேண்டும். அஜய் கெஞ்சுதலாக பெரியப்பாவை பார்த்தான்.
அவனுக்காக பலராம் முன் அமர்ந்தவர், “இதை பேசி முடிச்சுக்கலாம். தினமும் இதே டென்சன்னா கஷ்டம்” என்றார்.
“என் பொண்ணை நான் சொந்த ஊருக்கு கூப்பிட்டுகிறேன்” என்றார் பலராம்.
“எங்க இருந்தாலும் செய்ய நினைச்சா செஞ்சிடலாம். அதுவும் சொந்த ஊர்ல. வேணாம். எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் சார். நமக்குள்ள சுமூகமா போயிடுறது பெட்டர்”
பலராம் திடீர் மாற்றத்தை உணர ஆரம்பித்தார். “நீ தானே காரணம். உன் ப்ரெண்டுக்கு பேவர் பண்ண நினைக்கிற இல்லை” என்று அஜயிடம் நேராக கேட்க, அவன் மௌனித்தான்.
பலராம்க்கு கோவம் பெருகியது. “நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன். நீங்க எனக்கு பேசுறேன்னு இப்போ பேச்சு மாறுறீங்க. பெரிய மனுஷங்க செய்ற வேலையா இது?” என்று கேட்டுவிட, அஜய்க்கு அப்பா, பெரியப்பாவை பார்க்கவே முடியலை.
சங்கர் மகன் மேல் அதிருப்தி கொண்டார். அஜய்க்கு அங்கு நிற்பதே முள் மேல் போல் இருந்தது. கடினப்பட்டு நின்றான்.
“சார் கொஞ்சம் நிதானமா இருங்க. நாங்க உங்களுக்காக தான் பேசுறோம். எத்தனை நாளைக்கு நாங்க உங்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார் MP.
“நான் அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணி வைச்சிடுவேன்” பலராம் சொல்ல, அஜய்க்கு இது அதிர்ச்சி.
“தாராளமா பண்ணுங்க. அதுக்கு முன்ன இதை முழுசா முடிச்சிடுங்க. சேனாதிபதி பத்தி எனக்கு தெரியும். எங்க வேணும்ன்னாலும் அவர் வந்து நிற்பார்”