கல்யாண் மாமாவாக வந்தால் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சியே. அக்காவை காதலித்தவனாக இல்லாமல், முறையாக பெண் கேட்டு வந்தது சிறு பெண்ணுக்கு பிடித்தது. பெற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள்.
“அஜு. அத்தைகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேச சொல்லுங்களேன்” என்றாள் கிட்சனுள் சென்று மெல்லிய குரலில்.
“ஜீவிதா. முதல்ல நீ ஹாலுக்கு போ” என்றான் அஜய்.
“உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க. நீ ரொம்ப மோசம்” சின்னவள் திட்டி கொண்டே சென்றாள்.
பலராம் அவர் முடிவில் உறுதியாக நிற்க, காமாட்சிக்கு என்ன சொல்லி ஒத்துக்கொள்ள வைப்பது என்று தெரியவில்லை. பெண்ணை பெற்றவரிடம் மல்லு கட்டவும் முடியாதே?
ஆனாலும் மிகவும் முயன்றார். கல்பனாவிடமும் பேசினார். சபையில் வைத்து கணவரை மீறி அவராலும் பேச முடியவில்லை. பலராம் மிக உறுதியாக நின்றார்.
“இல்லைங்க நீங்க என்ன சொன்னாலும் பொண்ணை கொடுக்கிறதில்லை” என்ற பலராமை பார்த்தே இருந்தார் சேனாதிபதி. அது வேறு மனைவி, மகனுக்கு கூடுதல் டென்ஷன் தான்.
“நீங்க எங்களை பார்க்காம எங்க மகனை மட்டும் பார்த்து உங்க பொண்ணை”
“கண்ணு” சேனாதிபதி பொறுத்தது போதும் என்று குரல் கொடுத்து எழுந்துவிட்டார்.
“என்ன நம்மளை வைச்சு பார்க்காம? நம்ம பிள்ளை பிள்ளை அவன்” என்று குரல் உயர்த்த, மற்றவர்களும் பதற்றத்துடன் நின்றனர்.
“மாமா. அது அவர் யோசிக்கவும்”
“என்ன யோசிக்கணும்? எதுக்கு யோசிக்கணும் முதல்ல? என் மகனை விட அவருக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுவானா?” மீசையை முறுக்கி பலராமை பார்த்தார் சேனாதிபதி.
‘இதென்ன வம்பா இருக்கு? இதுக்கு தான் நான் எடுத்ததும் மறுத்தது, இப்படி பேசினா என்ன பண்ண. பொண்ணு வாழ்க்கையா போச்சு’ பல்லை கடித்தார் பலராம்.
“தம்பி. இன்னும் என்ன பேச போற நீ? இவருக்கு நம்ம அருமை பெருமை தெரியலைன்னா தெரிய வைக்கணும். அதை விட்டு பேசிட்டு இருந்தா இப்படி தான்”
“நீங்க பொண்ணு கேட்டீங்க. நான் மறுத்தேன். இதோட இதை முடிச்சுக்கலாம்” பலராம் கை கூப்பிவிட்டார்.
ஜீவிதா, கல்பனா மட்டுமில்லாமல் போனில் இருந்த அஜய், தாரணிக்கும் டென்சன் உச்சத்தில் நின்றது.
கல்யாண், காமாட்சி முகம் கூம்பி போக, சேனாதிபதி இவரை என்ன செய்ய என்று புருவம் நெரித்து யோசித்தார். “படிச்சு பெரிய வேலையில இருக்கிற ஆளு. பதமா, இதமா சொன்னா புரிஞ்சுப்பார்ன்னு நினைச்சீங்க போல” என்று மனைவி, மகனிடம் கேட்டார்.
“மாமா. நாம போலாம்”
“போலாம் இரு கண்ணு என்ன அவசரம்?” சேனாதிபதி கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்தார். என் மகனை இவர் மறுப்பதா? தந்தை சூடு கொண்டுவிட்டார்.
பலராம் அவர் தோரணையில் அசரவில்லை. நானும் ஊர்க்காரன் தான்யா. என்ன பண்ணிடுவ பார்த்துடலாம் என்று நின்றிருந்தார்.
“ஆஹ்.. இதுதான் மேட்டர். கண்ணு புரிஞ்சுதா?” மனைவியிடம் கேட்டவர், “இங்க பாருங்க அது தொழில். இது பெர்சனல். இரண்டையும் போட்டு குழப்பிக்க கூடாது. தெரியுதுங்களா” என்றார்.
அறிவுரை சொல்லும் அவரின் பேச்சில் பலராம் தன்னை இழுத்து பிடித்தவர், “நான் என் பொண்ணுக்கு அப்பாவா முடிவு எடுக்க உரிமை உள்ளவன். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கிற கடமையும் எனக்கு இருக்கு. என் பொறுப்பை என்னை செய்ய விடுங்க” என்றார்.
“செய்ங்க செய்ங்க. ஆனா என் மகனுக்கு உங்க பொண்ணை கொடுத்தா நல்லா இருக்க மாட்டாங்கன்னு நீங்க நினைக்கிறது தான் எனக்கு இடிக்குது. அதெப்படி என் மருமக நல்லா இல்லாம போயிடுவாங்கன்னு கோவம் வருது இல்லை”
“அதுக்காக என் பொண்ணை கொடுத்தா நான் சோதனை பண்ண முடியும்?”
“சோதனை சக்ஸஸ் ஆச்சுன்னா இதோ இவங்க தான் எனக்கு சின்ன மருமகள். வாக்கு கொடுக்கிறீங்களா” என்று ஜீவிதாவை கை காட்டி அசால்ட்டாக கேட்டுவைத்தார் மனிதர்.
ஜீவிதா கண்கள் விரிக்க, மற்ற எல்லோருக்கும் பேரதிர்ச்சியே. “என்னம்மா. மாமா இப்படி பட்டுன்னு கேட்டுட்டன்னு ஷாக் ஆகிட்டியா?” என்று சின்னவளிடமே கேட்க, அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
“நான் கோவமா எழுந்ததும் நீ உன் அப்பா பக்கத்துல வந்து நின்ன பாரு. மகனே தேவையில்லை உன் அப்பாவுக்கு. ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன இளையது காளை தான் காட்டிட்ட இல்லை. பிடிச்சு போச்சுமா எனக்கு” என்றார்.
பலராம் அப்போது தான் மகள் பக்கத்திலே நிற்பதை உணர்ந்தார்.
“இங்க பாருங்க. நான் படிச்சவன், பண்பானவன் எல்லாம் இல்லை. கரடுமுரடு தான் என் அடையாளம். ஆனா என் மகன் அப்படி இல்லை. உங்க வட்டத்துக்குள்ள வரவன். உங்க வட்டத்துக்குள்ள வரவனை இழுத்துக்காம, வெளியே நிக்கிற என்னை கை காமிச்சிட்டு இருக்கீங்க”
“நம்ம பசங்க விருப்பத்தை நிறைவேத்த மனசு தான் வேணும். பெத்தவங்க யார்ங்கிற அடையாளம் இல்லை” என்றார் கட்ட பஞ்சாயத்துக்காரர்.
“என் பொண்ணுக்கு இவர்மேல விருப்பம் எல்லாம் இல்லைங்க” பலராம் சொல்ல,
“அதை லைன்ல இருக்க என் மருமககிட்டேயே கேட்டுடலாமா?” என்றார் ஜீவிதா கையில் இருக்கும் மொபைலை காட்டி.
பலராம் அப்படியா என்று மகளை பார்க்க, அவளோ இதெல்லாம் கவனிச்சிருக்காரே என்று விழித்தாள். தாரணிக்கு பக்கென்றானது. “அஜய் மாட்டிகிட்டோம்” என்றாள் நண்பனிடம் கலக்கமாக.
“ஒன்னும் இல்லை. தைரியமா இரு” அஜய் சொன்னான்.
“இங்க பாருங்க. எல்லாம் வாய் விட்டு தான் சொல்லணும்ன்னு இல்லை. முதல்ல இதை அப்பாகிட்ட சொல்லவும் முடியுமோ என்னமோ? நீங்க தான் புரிஞ்சுக்கணும். மனசுல விருப்பம் இல்லாம லைன்ல இருக்கணும்ன்னு அவசியம் இல்லையே” என்றார்.
பலராம்க்கு இது அதிர்ச்சியே. ‘என் பொண்ணுக்கு இவரை பிடிச்சிருக்கா? ஆனா என் மகளுக்கு பிடிக்கலைன்னு தான் இவர் சொன்னார்’ கல்யாணை யோசனையாக பார்த்தார்.
கல்யாண் புரிந்து கொண்டவன், “இப்போவும் அவங்களுக்கு என்மேல காதல் இருக்க வாய்ப்பில்லை அங்கிள். மாப்பிள்ளை, மேரேஜ்ன்னதும் என்னை நினைக்கிறாங்க போல” என்றான்.
“நீங்க லவ் பண்ண போறீங்களா. அதெல்லாம் முடியாது” சின்னவள் குரல் பெரிதாக வந்துவிட்டது.
பெற்றவர்கள் முறைக்க, ஜீவிதா வாயை இறுக்கமாக மூடி கொண்டாள். ஆனால் மனதில் மட்டும் எக்கச்சக்க கடுப்பு.
‘அதெப்படி அஜு யாரையும் லவ் பண்ணலாம். அதெல்லாம் தப்பு. பேட் அஜு, நேர்ல வரட்டும். முதல்ல அத்தைகிட்ட சொல்லி கொடுக்கணும்’
“எனக்குமே நீங்க பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்ற வரை இங்க பொண்ணெடுக்க இஷ்டம் இல்லை தான். ஆனா இப்போ பாருங்க ஒன்னுக்கு இரண்டு மருமகளை முடிவு பண்ணிட்டேன்” என்றார் சேனாதிபதி.
அஜய் போனை வைத்தவன், உடனே அப்பாவிற்கு அழைத்து பேசினான். “பொண்ணு கேட்க சொல்லி தப்பு பண்ணிட்டேன்ப்பா. இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலை. மிரட்டிட்டு போறார்ப்பா” என்றான் குற்ற உணர்ச்சியுடன்.
யார் என்ன என்று தெளிவாக கேட்டுக்கொண்ட சங்கர், என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.
“நான் கிளம்பிட்டேன்ப்பா. நீங்க வாங்க” என்று வைத்தான்.