இளையவர்கள் ஓரிடத்திலே நிற்க, அம்மாக்கள் புடவை எடுத்து வந்துவிட்டனர். “அதுக்குள்ள முடிச்சிட்டீங்களாம்மா” ஜீவிதா வாய் பிளந்தாள். ஒரு புடவையை நாள் முழுதும் எடுத்த ரிக்கார்ட் எல்லாம் உண்டே!

“அண்ணி உதவி பண்ணாங்க” என்று காமாட்சியை காட்டினார்.

“அண்ணியா?” இளையவர்கள் திகைக்க, கல்யாண் முகம் கொஞ்சம் தெளிந்தது.

“உங்களுக்கும் அண்ணியாம்மா” என்று அஜய் அவனின் அம்மாவிடம் புருவம் தூக்கி கேட்டான்.

“என்னை போல அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்களாம். அக்கான்னு கூப்பிட சொன்னாங்க அஜய்” என்றார் சகுந்தலா.

“அதானே பார்த்தேன்” என்ற அஜய், காமாட்சியை பார்க்க அவரோ மகனிடம் கண்ணால் பேசி கொண்டிருந்தார்.

‘இப்படி ஒரு அம்மாவை வைச்சுக்கிட்டு எதுக்கு இந்த மனுஷன் லோ லோன்னு அலையுறார்?’ அஜய் நினைத்து கொண்டான்.

“நீங்க எதுவும் வாங்கலையா?” சகுந்தலா கேட்க,

“இதோ போறோம்” என்றார்கள்.

கல்யாண் போன் செய்ய, ஒருவன் ஜுஸ் கொண்டு வந்தான். எல்லோருக்கும் கொடுக்க, இளையவர்கள் மறுத்தனர். “அட குடிங்க” என்ற காமாட்சி விட்டால் குடிக்க வைத்துவிடுவர் போல் நின்றார்.

 “உங்க அப்பா என்ன பண்றார் தம்பி?” பலராம் கேட்க,

“பிஸ்னஸ்” என்றார் காமாட்சி பட்டென.

இங்க என்ன நடக்குது என்று தாரணிக்கு தான் ஒன்றும் புரியவில்லை. அதிலும் காமாட்சி! அவரின் வேகத்தில் ஆத்தி என்றிருந்தது.

“நாங்க இங்கேயே இருக்கோம். நீ சீக்கிரம் வாங்கிட்டு வாங்க. லஞ்சுக்கு போகணும்” என்றார் கல்பனா.

கல்யாண் எல்லார் அமர, சேர் கொண்டு வர செய்தான். மதிய நேரம் என்பதால் பெரிதாக கூட்டமும் இல்லை.

இளையவர்கள் கிளம்ப, கல்யாண் அங்கேயே நின்றான். ஜீவிதாவிற்கு அவனை விட்டுச்செல்ல முடியாமல், “ப்ளீஸ் அஜு” என்றாள்.

அஜய் சரியென,  “வாங்க” என்று கல்யாணை நோக்கி கையசைத்தாள்.

“அமைதியா இரு ஜீவி. அவரை கூப்பிடாத. எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு” தாரணி சொல்ல,

“ஏன். என்ன பண்ணிட்டேன் நான்” என்று கல்யாண் அவளின் அருகில் வர, தாரணி விழித்தாள்.

“இதை விட எப்படி நான் ஜெனியூனா நான் நடந்துகிறது? நீங்க ரொம்ப பண்றீங்க. அப்பறம் எனக்கு கோவம் வந்துச்சு இங்கேயே, இப்போவே முகூர்த்தம் குறிச்சிடுவேன் பார்த்துக்கோங்க” என்று பொங்கிவிட்டான்.

அஜய் குறிச்சிடுவியா என்று நேருக்கு நேர் பார்க்க, கல்யாணும் குறிப்பேன் என்று அவன் பார்வையை எதிர்த்து நின்றான்.

“சீனியர் என்ன இது?” என்று ஜீவி அழுவது போல கேட்டாள்.

“உனக்கு தெரியாது ஜீவிம்மா. என்கிட்ட சாதாரணமா பேச கூட கூலி கேட்கிறாங்க. என்னமோ நான் டன்னனக்கா டான் மாதிரி, இவங்க என்கிட்ட இருந்து தப்பிச்சு போற அப்பாவிங்க மாதிரி. ஆக்சுவலி பார்த்தா நான் தான் பாவம். இதுங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன்”

“இவரை யாரும் இங்க கட்டி வைக்கலை” அஜய் சொல்லிவிட,

கல்யாண் திரும்பி தாரணியை தான் கோவமாக பார்த்து வைத்தான். “சீனியர். சீனியர். ப்ளீஸ்” ஜீவிதா மூவரையும் பாவமாக பார்க்க, கொஞ்சம் நிதானித்தனர்.

நொடி அமைதி கலைய, “என்ன வாங்குற?” என்று கேட்டான் அஜய்.

ஜீவிதா, லிஸ்டை மடமடவென சொல்ல, ஆளுக்கொன்றாக எடுக்க ஆரம்பித்தனர். கல்யாண் தனியாக அவளுக்கு கிப்ட் வாங்கி கொடுக்க, சின்னவள் மூத்தவர்களை பார்த்தாள்.

அவர்கள் சரியென, “தேங்க்ஸ் சீனியர்” என்று வாங்கி கொண்டாள்.

ஷாப்பிங் முடியவும் உணவுக்கு கிளம்பினர்.  பெரியவர்கள் வேண்டுகோளின் பேரில் காமாட்சி, கல்யாணும் இணைந்து கொண்டனர்.

மாலை ஸ்ரீரங்கம் போலாம் என்று சாப்பிடும் போதே முடிவாகிவிட, சங்கர் உடல்நிலையை யோசித்தான்  மகன். இவ்வளவு அலைச்சல் அவருக்கு தேவையா? என,

“போலாம் அஜய்” என்ற சங்கரின் ஆசையில், மூன்று காரும் கோவிலுக்கு சென்றது. வழியிலே கல்யாண் ஸ்பெஷல் தரிசனத்திற்காக ஏற்பாடு செய்துவிட்டான். காத்திருக்கவே தேவையில்லாமல், தரிசனம் பார்த்தனர்.

“இவங்க ரொம்ப பவரா அஜய்” தாரணி நண்பனிடம் கேட்க,

‘பயமா கூட இருக்கலாம்’ என்று மனதில் நினைத்து கொண்டான்.

கோவிலில் இருந்து கல்யாண் அம்மாவுடன் விடைபெற்று கொண்டான். எதிர்பார்த்ததை விட மிகவும் தாமதம் ஆகிவிட,  இனி கடலூர் செல்ல வேண்டாம் என்று பலராம் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்தார்.

சங்கர் மறுத்துவிட்டார். “ட்ரைவர் இன்னைக்கு முழுசா ரெஸ்ட் எடுத்துட்டார். பிரச்சனை இல்லை” என்று அவரவர் வீடு திரும்பினர்.

மறுநாள் பிள்ளைகள் சென்னை கிளம்பிவிட, நாட்கள் எப்போதும் போல சென்றது. சிறு மாற்றமாக காமாட்சி அடிக்கடி தோழிகளிடம் போனில் பேசுவார்.

மற்றபடி கல்யாண் காதல் கல்லாக தான் இருந்தது. இதில் ஜீவிதா வேறு, “சீனியர் நீங்க அக்காவை டிஸ்டர்ப் பண்ணலை தானே?” என்று அடிக்கடி கறாராக கேட்டு கொள்வாள்.

“அப்பறம் எப்படி தான் என் லவ்வை நான் எக்ஸ்பிரஸ் பண்றது ஜீவிம்மா” கல்யாண் கடுப்பானான்.

“அஜய் என்னை அவளை நெருங்க கூட விட மாட்டேங்குறான்”

“அஜு எப்படி விடுவாங்க. அதெல்லாம் நீங்க பண்ண கூடாது”

“சரிதான். நான் இப்படியே சாமியாரா போறேன் போ” என்று வைத்துவிடுவான்.

இப்படியே ஆறு மாதம் கடந்துவிட்டது. பலராம் அவரின் கடமையை ஆரம்பித்தார். “வரன் பார்க்க ஸ்டார்ட் பண்ணிடலாம். செட் ஆக டைம் எடுக்கும் இல்லை” என்றார்.

என்னமோ முதல் முறையாக தாரணிக்கு ஒரு மாதிரி இருந்தது. “நான் சொல்றப்போ  நீ  ஊருக்கு வர மாதிரி இருக்கும் தாரணி. பெரியப்பா கண்டிப்பா சொல்லிட்டார். சொந்தம் மூலமா வந்த வரன். பையன் குடும்பம் நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. நேர்ல பையனை பார்த்துட்டு முடிவுக்கு வரலாம்” என்றார் தந்தை.

தாரணி பிரேக்கில் நண்பனிடம் விஷயத்தை சொல்லி கொண்டிருக்க, கல்யாண் வந்தான். பெண் சட்டென  அமைதியாகிவிட்டாள். “நீ என்ன சொல்ற தாரு” அஜய் கேட்க,

அவள் இப்போ வேண்டாம் என்று கண்ணாலே மறுத்தாள். படபடப்பாக இருந்தவளை அஜய் புருவம் சுருக்கி பார்த்தான்.

“அங்கிள் மாப்பிள்ளை பேர் என்ன சொன்னார்?” என்று கேட்டான் அஜய்.

தாரணி அதிர்ந்து ஏண்டா என்பது போல் நண்பனை பார்த்து, ஓரக்கண்ணால் கல்யாணை பார்த்தாள். அவன் உடல் இறுக, காபி கப்பை உடைப்பது போல் அழுத்தி கொண்டிருந்தான்.

“சொந்தம்ன்னு சொன்னார் இல்லை அங்கிள். நீ இதுக்கு முன்ன அண்ணனை, அதான் மாப்பிள்ளையை  பார்த்திருக்கியா?” அஜய் மேலும் கேட்க,

“ப்ளீஸ் அஜய்” என்றாள் பெண்.

“பார்த்தது இல்லையா. சரி விடு பொண்ணு பார்க்க அண்ணா வருவார் இல்லை. அப்போ பார்த்துக்கலாம்”

“இன்னொரு முறை எவனையோ மாப்பிள்ளை, அண்ணா, நொண்ணான்னு  சொன்ன அவ்வளவுதான் பார்த்துக்கோ” என்று கல்யாண் கோவத்துடன் சொன்னான்.

“தாரணியை கட்டிக்க போறவர் எனக்கு அண்ணா தான். அவளுக்கு மாப்பிள்ளை தான். அப்படி சொல்ல கூடாதுன்னா வேறெப்படி அவரை அட்ரஸ் பண்ண முடியும்?” அஜய் அவனிடம் நேரே கேட்டான்.

“இப்போ அந்த வெண்ணையை  அட்ரஸ் பண்றது ரொம்ப முக்கியமா? எனக்கு பதில் சொல்லு முதல்ல” என்று தாரணியை கேட்டான்.

அவள் நான் என்ன சொல்ல என்று திணறினாள். “அவகிட்ட ஏன் கேட்கிறீங்க? அவ ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்?” அஜய் கேட்டான்.

“ஆமா. அவ ஏன் எனக்கு பதில் சொல்லணும்? முட்டுச்சந்துல முட்டுன முட்டாள் தானே நான்” கல்யாண் கோவம் ஏறியது.

“முட்டுச்சந்துன்னு தெரிஞ்சும் அந்த வழியில போனது உங்க தப்பு”

“வேறென்ன பண்ண சொல்ற என்னை. நீ எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருந்தா நான் குட்டிக்கரணம் அடிச்சாவது அவளை என்னை பார்க்க வைச்சிருப்பேன்”

“கொடுக்க மாட்டேன். அவ என் ப்ரெண்ட். மாமா இல்லை நான்”

“டேய் ஏண்டா இப்படி எல்லாம் பேசுற?” கல்யாண் திகைத்து போனான்.

“பின்ன நீங்க பேசுறதுக்கு நான் இப்படி தான் பதில் சொல்ல முடியும். அங்கிள் என்னை நம்பி அவர் பொண்ணை விட்டிருக்கார். ஆனா அதை வாயால அவர் சொன்னதில்லை. எனக்கு புரியும். என் ப்ரெண்ட் அவ. நான் இப்படி தான் இருப்பேன்” என்ற அஜய், எழுந்து கொண்டபடி

“இவருக்கு தேவைன்னா இவர் தான் வேற வழி பார்க்கணும். லவ் பண்ணியே தான் ஆவேன்னு வம்பா சுத்தினா அதுக்கு நாங்க பொறுப்பா? கல்யாணம் எல்லாம் இவருக்கு வேணாம் போல. இதுக்கு என்மேல வேற பாயுறார். நீ வா” என்று தோழியுடன் கிளம்பிவிட்டான்.

கல்யாண் அங்கேயே அமர்ந்து கொண்டான். கோக்குமாக்காக இருந்தது மனநிலை. அந்த நாள் முழுதும் யோசித்தவனுக்கு, பளிச்சென உரைத்தது அஜய் பேசியது.

“எஸ்.. தாரணி என்னை அக்சப்ட் பண்ணிட்டா, அதான் அவன் பொண்ணு கேட்டு போக சொல்லி இன்டைரக்ட்டா சொல்லிட்டு போறான்” கண்டுகொண்டவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

கம்பெனி பஸ்ஸில் தாரணி பக்கம் சென்று அமர்ந்தான். தாரணி கண்களை விரித்து பார்க்க, கல்யாண் அவள் கை பிடித்து நிதானமாக பிரேஸ்லெட்டை மாட்டிவிட்டான்.

தாரணி அதை மறுக்க, “ப்ளீஸ். உனக்காக முதல் முதலா வாங்கின கிப்ட். இருக்கட்டும்” என்று எழுந்து கொண்டவன், அஜய் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

அஜய் எல்லாம் பார்த்திருந்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தாரணி மனது தெரிந்த பின் அவன் எல்லை அவனுக்கு தெரியும்.

கல்யாண் மறுநாள் ஆபிஸ் வரவில்லை. தாரணியை பெண் கேட்டு பலராம் வீட்டிற்கு முன் நின்றிருந்தான்.