நதியின் ஜதி ஒன்றே! 21 1 13534 நதியின் ஜதி ஒன்றே! 21 மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள். பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார். சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். இருவருக்குள்ளும் முன் எப்போதும் போல், “சார்” என்று அழைப்பில்லை. சகுந்தலா பெண்களுடன் உள்ளே சென்றுவிட, ஆண்கள் வெளியே பந்தலில் அமர்ந்தனர். அசைவ விருந்து ஜோராக தயாராகி கொண்டிருந்தது. “சம்மந்தி” என்று பலராம் அழைக்க, சங்கர், சேனாதிபதி இருவரும் திரும்பி பார்த்தனர். பலராம் ஒரு நொடி திகைத்து தான் விட்டார். அவர் அழைத்தது சங்கரை தான். சேனாதிபதியும் திரும்பி பார்க்க, “இங்க கொஞ்சம் என்னன்னு பார்க்கணும்” என்றார் பொதுவாய். சேனாதிபதி எழுந்தவர், “வாங்க போலாம்” என்று சங்கரை அழைத்தார். “இதோ சார்” சங்கர் சொல்ல, “சாரா. அண்ணான்னு கூப்பிடுங்க” என்றார் உரிமையாய். சங்கர் மெலிதாக சிரித்து ஆமோதிக்க, “கட்ட பஞ்சாயத்துக்காரரை அண்ணான்னு கூப்பிடுறது கெத்து தான் தம்பி. அந்த பாக்கியம் உனக்கு கிடைச்சிருக்கு” என்றார் MP. “MP பேச்சுல உள்குத்து தெரியுதே” சேனாதிபதி விளையாட்டாய் கையில் இருந்த காப்பை சுழற்ற, “உனக்கு காப்புன்னா எங்களுக்கு வேஷ்டி தெரியும் இல்லை. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரே உருவு தான். பார்த்துக்கோ” என்றார் அவரும் மிரட்டலாய். “அதுக்கு தான் உங்காளுங்ககிட்ட வந்தாலே உள்ள பாதுகாப்போட தான் வரது” என்றார் சேனாதிபதி. “அந்த பாதுகாப்பை பார்த்துருவோமா” MP நெருங்க, “சும்மா இருங்கண்ணா” என்ற சங்கர், “வாங்க போலாம்” என்று சேனாதிபதியுடன் சென்றார். பலராம் சீர் நகைகள் இருக்கும் அறையில் இருந்தவர், “உங்ககிட்ட இப்போவே ஒப்படைக்கணும்” என்று கேட்டார். எப்போதும் உறவுகளுக்கு காமித்து தான் ஒப்படைப்பர். இவர் முன்னமே கேட்க, சங்கர் கேள்வியாக பார்த்தார். “இல்லை.. எங்க சொந்த பந்தம் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதான் எல்லாம் காட்ட வேணாம்ன்னு” என்று தயங்கினார். சேனாதிபதிக்கு வாய் சும்மா இருக்காமல், “உங்க சொந்த பந்தத்துல தான் பொண்ணுங்களையே கொடுப்பேன்ன்னு குதிச்சிட்டு இருந்தீங்க, இப்போ என்னடான்னா சீரை கூட காட்ட வேண்டாங்குறீங்க” என்று கேட்டுவைத்தார். பலராம் மிகவும் சங்கடப்பட்டு போனார். அவருக்கு சில விஷயங்கள் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. தாரணி, ஜீவிதா இருவரும் இவர்களை விட செழிப்பான இடத்தில் வாக்கப்பட்டிருக்க, உறவுகளின் கண்களை அது உறுத்த ஆரம்பித்திருந்தது. “வசதி வாய்ப்பு பார்த்து தான் நம்ம பசங்களுக்கு நீ பொண்ணு கொடுக்கலையா?” என்று சிலர் நேரில் கேட்டும் இருந்தனர். பலராம்க்கு இது அதிர்ச்சி, கோவம் தான். “என்ன இப்படி பேசுறீங்க மாமா? பொண்ணுங்க விருப்ப பட்டாங்கன்னு தான்“ “பொண்ணுங்க விருப்பட்டா எங்க வேணும்ன்னாலும் கையை வச்சிடலாமா?” என்று அவர் மேலும் கேட்டிருக்க, “என் பொண்ணுங்களுக்காக நான் எங்க வேணும்ன்னாலும் கை வைப்பேன் தான்” என்றிருந்தார் பலராம். அவர் மட்டுமில்லை, பலரும் இப்படி தான் பேசுகின்றனர் என்று தெரிந்த பின்தான் பலராம் இம்முடிவை எடுத்தார். அதை சம்மந்திகளிடம் சொல்ல முடியாமல் நிற்க, சங்கர் மறுப்பாய் சேனாதிபதியை பார்த்தார். “உங்களை சங்கடப்படுத்தணும்ன்னு நான் இதை கேட்கலை. எப்போவும் மனசுல பட்டதை பேசிடுவேன். அப்படி தான் இதுவும்” என்றார் சேனாதிபதி. பலராம்க்கு அவரின் கூற்றில் நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அதை அப்படியே விட நினைத்தவர், வெள்ளி பொருட்கள், நகைகளின் எண்ணிக்கை, ரொக்கத்தை சங்கரிடம் சொன்னார். தாரணிக்கு கொடுத்தது தான் என்பதால் ஒளிவு மறைவு இல்லை. “நீங்க உங்க பொண்ணுங்களுக்காக செய்றது சம்மந்தி இது. உங்களோட கௌரவமும் இதுல இருக்கு. சொந்த பந்தம் முன்னாடி காட்டுறதால” என்று சங்கர் சொல்ல வர, “இல்லை இல்லை சம்மந்தி. இவங்களுக்கு இதெல்லாம் தெரியவே வேணாம்” என்றார் பலராம். “ஏங்க? இவ்வளவு செஞ்சுட்டு ஏன் மறைக்கணும்? அப்படி யார் என்ன பேசுறாங்க, சொல்லுங்க, கேட்போம்” என்றார் சேனாதிபதி மீசையை முறுக்கி. “யார்கிட்டேயும் எதுவும் கேட்க வேண்டாம் சம்மந்தி. நீங்க அனுமதி கொடுத்தா போதும் நான் இதை எல்லாம் உங்ககிட்ட ஒப்படைச்சிடுவேன்” என்றார். “சரி. உங்க இஷ்டம். ஜீவிதாகிட்டே கொடுத்துடுங்க” என்று விட்டார் சங்கர். பலராம் உடனே ஜீவிதாவை அழைத்து அவளிடம் ஒப்படைத்தார். சீர் பொருட்கள் பெரிய வண்டியிலே இருக்க, அதை இறக்காமல் அப்படியே அஜய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். அஜய் மனைவியை கேள்வியாக பார்க்க, “அப்பா கொடுத்துட்டார், என்ன பண்ண அஜு?” என்று கேட்டாள். “அம்மாவை கேளு. அவங்க பத்திரமா எடுத்து வைப்பாங்க” என்றான். ஜீவிதா உடனே சென்று சகுந்தலாவை அழைத்து வர, அவர் எல்லாவற்றையும் பாதுகாப்பாக எடுத்து வைத்தபடி, “உன் பொண்டாட்டி வாய் மட்டும் அவ்வளவு பேசுறா அஜய், இதை எல்லாம் செய்ய தெரியாதா?” என்று கேட்டார். ஜீவிதா கடுப்பாக, அஜய் சிரித்தான். “அஜு நீங்க சிரிக்க கூடாது. உங்க வைஃபை தான் பேசுறாங்க. ஏன்னு கேளுங்க” என்றாள். “சரி தான். ஏன்ம்மா அவளை பேசுறீங்க?” அஜய் கேட்க, “நான் பேச கூடாதுன்னா அவளையே இதை எல்லாம் எடுத்து வைச்சுக்க சொல்லு” என்று எல்லாம் அப்படியே வைத்துவிட்டார். “அஜு“ “என்னடி அஜு, அஜுன்னு என் மகனை ஏலம் விட்டுட்டு இருக்க? வா, வந்து நீயே செய்” என்றார் சகுந்தலா அதிகாரமாக. “நீங்க மாமியார் கொடுமை பண்றீங்க” ஜீவிதா குற்றம் சாட்டினாள். “நீயும் மருமக கொடுமை பண்ணு ஜீவிதா” என்றான் அஜய் சிரிப்புடன். “பண்ணுவேனே. அதெப்படி விடுவேன்” என்றாள் இவள். “ஓஹ் நீ உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா. இருக்கட்டும். நான் போய் கல்பனாவை அனுப்புறேன் இரு” என்றார் சகுந்தலா. “அத்தை அத்தை ப்ளீஸ். நோ. அவங்க வந்தா நான் காலி” என்றாள் ஜீவிதா அவர் கை பிடித்து கெஞ்சுதலாக. “இப்போ மட்டும் அத்தை, அத்தையா. உன்கிட்ட நான் பேச வேண்டியதே நிறைய இருக்கு. பின்னாடி பார்த்துகிறேன்” என்று வேலையை முடித்து சென்றார். “ஜீவிதா. அம்மாக்கு உன்னை தெரியுமா?” என்று கேட்டான் அஜய். “என்னை தெரியுமான்னா? என்ன கேட்கிறீங்க அஜு?” “மக்கு. உன் அஜு புராணம் அவங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்“ “என்னது அவங்களுக்கு தெரியுமா?” இவள் அதிர்ந்தாள். “சுத்தம்“ “அஜு அதனால தான் இவங்க என்கிட்ட சரியாவே பேசலையா? அத்தைக்கு எப்படி, எப்போ தெரியும் அஜு?” என்று இவனிடம் கேட்டு நின்றாள். “நான் உன்னை கேட்டா நீ என்னை கேளு. கிளம்பு போ முதல்ல. லேட் ஆச்சு” என்று வெளியே சென்றுவிட்டான். ஜீவிதா நேரம் பார்த்து வேகமாக கிளம்பி வர, பந்தி ஆரம்பித்திருந்தது. மணமக்களை அமர வைத்து ஸ்பெஷல் கவனிப்பு. கல்யாண் அவனே நின்று பார்த்து பார்த்து பரிமாறினான். ஆனந்தனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. பலராம் மறுபக்கம் சங்கருக்கு முன் நின்று கவனிக்க, ஜீவிதா கண்கள் அடிக்கடி அப்பாவை பார்த்து மீண்டது. தாரணி திருமணத்தில் அவர் அஜய் குடும்பத்திடம் நடந்து கொண்டது கண் முன் வந்து சென்றது. எனக்காகவா? நல்ல நேரத்தில் ஜீவிதா தன் வீடு கிளம்பினாள். பாச போராட்டத்தில் பெண்ணின் கண்கள் சிவந்து போனது. அஜய் அவளை தன் தோள் சாய்த்து கொண்டான். தொடர்ந்த நாட்கள் உறவுகளின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தனர். அஜய் பக்கம் அதிகமே. அடுத்து ஹனிமூன் செல்லும் பேச்சு வர, அஜய் மனைவியை கேள்வியாக பார்த்தான். அவள் மறுப்பாக தலையசைக்க, தங்கள் அறையில் வைத்து ஏன் என்று கேட்டான். “இப்போ வேண்டாம்” என்றாள் அவள். “அதான் ஏன்?” “அது, அது வேணாம்ன்னு விடுங்க அஜு” என்று ஓடிவிட்டாள். அஜய் புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அஜய் அவனின் தொழில் கட்டிடத்திற்கு மனைவியை அழைத்து சென்றான். உரிமையாய் அவன் இருக்கையில் அவளை அமர வைக்க, பெண்ணுக்கு அப்படி ஒரு மலர்வு. ரசித்து அவன் இருக்கையை வருட, அஜய் மனைவி தலை பிடித்து ஆட்டினான். “உங்க அளவுக்கு இருக்கேனா?” என்று கேட்க, “என்னை விட பெட்டர் முதலாளி லுக்ல இருக்க” என்றவன் போட்டோ எடுத்து கொண்டதுடன் அவளை தோளோடு அணைக்கவும் செய்தான். ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க, ஒவ்வொன்றாக எல்லாம் சொன்னான். “வெளிநாடுகளுக்கு அனுப்புற முந்திரி இது” என்று எடுத்து காட்டினான். “அப்போ நம்ம ஊருக்கு எல்லாம்” ஜீவிதா கேட்க, “செகண்ட், தேர்ட் குவாலிட்டி” என்று காட்டினான். பெண்ணுக்கு கோவம். “அதென்ன நம்மூருக்கு மட்டும்” என்று ஆரம்பிக்க, “மக்கள் வாங்குற விலையில இருக்கணும் இல்லை. இதுவே இந்த காஸ்ட் வரும்” என்றான். ஜீவிதா ஏதோ கேட்க போக, “உடனே ஏன் இந்த விலை, குறைச்சு கொடுக்கலாம்ன்னு ஆரம்பிக்க கூடாது. இது தொழில், இவ்வளவு தான் ரேட். இதுல நிறைய விஷயம் இருக்கு. கவர்மெண்ட் பிக்ஸ் பண்ற விலையே இவ்வளவு. நாமும் இந்த அமவுண்ட் இன்வெஸ்ட் பண்றோம்” என்று விளக்கம் கொடுத்தான். “கூட அரிசி, பருப்பும் வெளிநாட்டுக்கு அனுப்புறோம்” என்று மற்ற தகவல் கொடுத்தான். ஜீவிதா கேட்டுக்கொள்ள, “உனக்கு என்ன பிளான்?” என்று கேட்டான்.