“அவன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணத்தான் சென்னையில் இருந்து கிளம்பி வந்தான். நான் தான் போன் பண்ணி அவன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டேன். அப்போவும் எனக்கு அவன் சப்போர்ட் பண்ணலை. கல்யாண்க்கு ஒரு வாய்ப்பு தான் வாங்கி கொடுத்தான்”

“என் மாமனார் போன் பண்ணி பேசினார். இப்போ விட்டா வேற எப்போவும் நீ கல்யாணை நினைச்சு பார்க்க முடியாது. உன் அப்பா உனக்கு வேற மாப்பிள்ளையை ரெடியா வைச்சிருக்கார்ன்னு சொன்னார். நீங்களும் மாப்பிள்ளை பத்தி பேசவும், பயந்து அவர் மேல தான் விருப்பம்ன்னு சொல்லிட்டேன். இது தான் நடந்தது”

“எப்படியும் எங்க கல்யாணம் நடந்திடும்ன்னு அஜய்க்கு தெரியும். அதை கௌரவமா நடத்தி கொடுக்கணும்ன்னு மட்டும் தான் அவன் பார்த்தான். நாங்க.. நான் மட்டும் தான் எல்லாத்துக்கும் காரணம். அஜய் இல்லை”

“எங்களை வைச்சு அவனை வேண்டாம்ன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்ப்பா. ஜீவிதா.. அவ விருப்பத்தை மறுக்காதீங்க. ப்ளீஸ். ப்ளீஸ்ப்பா” என்று தந்தை கை பிடித்து கெஞ்சி கேட்டாள் மகள்.

பலராம் மறுக்கவும் இல்லை. திட்டவும் இல்லை. தாரணி சோர்ந்து போய் வெளியே வந்துவிட்டாள்.

ஜீவிதாவிற்கு திரும்ப சகுந்தலாவிடம் இருந்து போன். இவள் எடுக்க வேண்டுமே. எடுத்தால் என்ன பதில் என்று ஆரம்பித்து விடுகிறார்.

“நீங்க இப்போவே எனக்கு மாமியார் ஆகுறீங்க” என்று ஒருநாள் கேட்டும் விட்டாள்.

“பின்ன என் மகனை கட்டினா நான் உனக்கு மாமியார் தான். இப்போவே எனக்கு பயந்துக்கோ” என்று மிரட்டல்.

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன். எல்லாம் உங்க மகனால் தான். கல்யாணம் முடியட்டும் அவரை எப்படி கொடுமை பண்றேன்னு மட்டும் பாருங்க” என்றாள் இவள்.

“எல்லா நேரமும் பிடிவாதம் பிடிச்சா ஆகிடுமா. போய் பொறுமையா பேசு போ. சீக்கிரம் எனக்கு பதில் வந்தாகணும்” என்று வைத்துவிடுவார்.

அதற்கு ஏன் எடுக்க வேண்டும். பெண் பார்த்தே இருக்க, கல்பனா எண்ணிற்கு அழைத்து விட்டார். “ம்மா. நோ. நோ” என்று அவள் அலற, அலற அவர் எடுத்துவிட்டார்.

ஜீவிதா அறைக்கு ஓடி வந்துவிட்டாள். இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. சென்னை கிளம்ப வேண்டும். அதற்குள் பேசிவிட வேண்டும்.

மறுநாள் எழுந்ததில் இருந்து சீரியசாக அலைந்தாள். “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா ஜீவிம்மா” என்று கல்யாண் கேட்க,

“ஒன்னும் வேணாம். உங்களால தான் அஜு அப்பாக்கு கெட்டவங்க ஆகிட்டாங்க போங்க” என்று நொடித்து கொண்டு சென்றாள்.

மாலையே வந்துவிட்டது. “அப்பா உங்ககிட்ட பேசணும்” என்று அவர் முன் நின்றாள் ஜீவிதா. மொத்த குடும்பமும் கூடிவிட்டது. ஜியா முதற் கொண்டு.

“எனக்கு உங்ககிட்ட என்ன பேசணும், எப்படி பேசணும்ன்னு தெரியலைப்பா. அஜு உங்களுக்கு நல்லா தெரிஞ்சவர். அவர் இப்படி, அப்படின்னு எனக்கு சொல்ல வரலை. எனக்கு அஜு வேணும். அவருக்கும் நான் வேணும் தான். நீங்க ப்ளீஸ் ஓத்துக்கோங்க” என்றாள் ஒரே மூச்சில்.

பலராம், “உனக்கு பிடிச்சா நான் ஒத்துக்கணுமா?” என்று கேட்டார்.

“மகளுக்காக”

“ஏன் நீ அப்பாக்காக நான் பார்க்கிற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லேன்”

“உங்களுக்காக நான் செய்ய எத்தனையோ விஷயங்கள் இருக்குப்பா. இது வேண்டாம்ப்பா. ப்ளீஸ்”

“உங்களுக்கு நல்லாவே தெரியும் எனக்கு இப்படி பேச எல்லாம் வராதுன்னு. பிடிவாதம் பிடிக்க சொன்னா எத்தனை நாள் வேணும்ன்னாலும் பிடிப்பேன். இது சுத்தமா வரலை. அஜு சொல்லிட்டு போயிட்டாங்க. நீங்க ஒத்துக்கவே மாட்டேங்கிறீங்க. நானும் ஆறு மாசமா வெய்ட் பண்றேன், இதுக்கு மேலன்னா என்ன பண்ண தெரியலையே” என்றாள் தளர்ந்து போனவளாக.

“பேசாம அவர் காலுல விழுந்திடு மருமகளே. ஓகே சொல்றாரான்னு பார்ப்போம்” என்று வந்தார் சேனாதிபதி. உடன் காமாட்சி.

ஜீவிதா விழுந்திடலாமா என்று அப்பாவின் காலை சீரியசாக பார்த்தாள். கல்யாண் சிரிப்பை அடக்கி கொண்டான்.

“என்ன மருமகளே இன்னுமா காலை அளந்திட்டு இருக்க. எல்லாம் நீ விழுறதுக்கு சரியா இருக்கும்” என்றார் சேனாதிபதி.

‘இவர் நிஜமா தான் சொல்றாரா? நம்ப முடியாதே. ஆனாலும் இது பெட்டர் ஐடியா தான்’ ஜீவிதா தீவிரமாக யோசித்தாள்.

ஜியா வேகமாக எழுந்து வந்தவள், “தாத்தா சொல்றார்” என்று சித்தி கையை இழுத்து கொண்டு தாத்தா காலில் விழுக போக,  “ஜீவி. ஜியா” என்று இருவரையும் பிடித்து கொண்டார் பலராம்.

குழந்தைக்கு ஆசீர்வாதம் வாங்கும் நினைவு. பலராம் தடுத்து மகளை தோள் வளைவில் வைத்து கொண்டவர், பேத்தியை ஒற்றை கையில் தூக்கி கொண்டார்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்ள, ஜீவிதா கண்ணீருடன் அப்பா தோள் சாய்ந்து கொண்டாள்.

“என் சம்மதம் இல்லாம உங்க கல்யாணம் நடக்கும், நடக்காதுங்கிறதை தாண்டி எனக்காகன்னு, என் சம்மதத்துக்காகன்னு நீங்க காத்திருந்தது எனக்கு சந்தோஷம் தான். என் பெரிய மக எனக்கு அந்த வாய்ப்பை கூட கொடுக்கலை. என் சின்ன மக எனக்காக காத்திருந்தா. இனியும் காத்திருப்பான்னு தெரிஞ்சிடுச்சு. போதும். அப்பாவா எனக்கு இது போதும். இனி அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவங்க வாழட்டும்” என்று சம்மதம் சொல்லிவிட்டார்.

சேனாதிபதி முதல் ஆளாக பலராமை அணைத்து கொண்டார். உடனே அஜய் வீட்டுக்கு தகவல் சென்றது.

இரு குடும்பமும் நாள் கடத்தவில்லை. ஒரு நல்ல நாளில் சங்கர் தன் உறவுகளுடன் பெண் பார்க்க வந்தார்.

அன்றே பூ வைத்து உறுதி செய்ததுடன், முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டது.

ஒரு மாதம் தான் இடைவெளி. வேலைகள் முழு வீச்சில் நடந்தது. சேனாதிபதி முதல் ஆளாக நின்று எல்லா ஏற்பாட்டையும் கவனித்தார்.

இடைப்பட்ட நாட்களில் அஜயிடம் ஜீவிதா பேசவில்லை. அவனே சில முறை அழைத்தான். “என்ன ஆட்டக்காரி கல்யாணம் முடிவாகவும் அமைதியாகிட்ட? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

ஜீவிதா வேலை என்று விட்டாள்.

நாள் விட்டு திரும்ப அழைத்தவன், “உனக்கு இந்த வெக்கம் வர எல்லாம் வாய்ப்பில்லை. வேற எதாவது கிறுக்குத்தனம் பண்ண போறியா?” என்று கேட்டான்.

ஜீவிதா கண்கள் விரிந்து போனது. அப்படி எல்லாம் இல்லை என்று வைத்துவிட்டாள்.

அஜய்க்கு சந்தேகமே. முகூர்த்த பட்டு எடுக்க இருவரும் வந்தனர். கவனித்து பார்த்தவன் கண்டு பிடிக்க முடியாமல் விட்டுவிட்டான்.

முகூர்த்த நாளும் வந்தது. அஜய் ஊரிலே மிக பிரமாண்டமான ஏற்பாடு. மண்டபம் எல்லாம் போதாது என்று பெரிய கிரவுண்ட் எடுத்து கொண்டனர்.

“என் கட்சிக்காரங்க எல்லாம் கண்டிப்பா கலந்துப்பாங்க” என்று பெரியப்பா நின்றுவிட்டார். பங்காளிகள், பலராம் உறவுகள் என்று அத்தனையும் சமாளிக்க வேண்டுமே.

ஆனந்தன் நண்பனாக துணைக்கு வந்துவிட்டான். கல்யாண்க்கு அலைச்சல் அதிகம். எல்லாம் விரும்பியே செய்தான். தாரணி தங்கைக்கு எல்லாம் பார்த்து பார்த்து அலங்கரித்தாள்.

முன் தினம் விருந்து. ஜீவிதா அறைக்குள் இருக்க எல்லாம் வந்து பார்த்து சென்றனர். அஜய் வர முடியாமல், தூங்கும் நேரம் வர, ஜீவிதா தூங்கியிருந்தாள்.

மறுநாள் முகூர்த்தம். மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். ஜீவிதாவிற்கு முதல் முறை ஒரு பதட்டம். கைகள் வேர்த்து கொண்டே இருந்தது.

“என்ன டென்சன்” என்று அவள் கை துடைத்து கேட்டான்.

“தெரியலை அஜு” பெண் கிசுகிசுப்பாக சொல்ல,

அஜய் சிரித்தவன், அவள் கைகளை இறுக்கமாக கோர்த்து கொண்டான். மாங்கல்யம் கைக்கு வர, முழு மனதாக ஜீவிதாவின் கழுத்தில் கட்டினான்.

பெண் ஆனந்த கண்ணீருடன் வணங்கி வாங்கி கொண்டாள். அவள் நெஞ்சில் மாங்கல்யம் விழுந்த நேரம், அப்படி ஒரு சிலிர்ப்பு. அதையே பார்த்திருக்க, அஜய் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை பார்க்க வைத்தான்.

இருவரின் பார்வையும் நேர் கோட்டில் நின்றது அவர்கள் வாழ்க்கை போல.