தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது.

ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று விட்டுவிட்டான். ஆனால் இதுவே வருடங்கள் சில கடந்து சிறியவள், பெரியவளாகி சம்பாதிக்கவும் ஆரம்பித்த பிறகும் தொடர்கிறதே.

அஜய்க்கு நேரில் அவளின் வளர்ச்சி காண கொள்ளை ஆசை. அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று நேரம் பிடித்து சென்னை வந்துவிட்டான்.

அவளோ இவனை பார்க்க மறுத்து ஓடுகிறாள். அதிலே அஜய்க்கு அதிர்ச்சி. கோவம்

அப்படியென்ன அவளுக்கு என்று தேடி சென்று பேசினால், இறுதி வரை என்னிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவே இல்லை.

நான் அவளுக்காக எடுத்து வந்த பழத்தையும் வைச்சுட்டு போறா? ஜீவிதாவா இது

நம்ப முடியவில்லை அவனால். நான் பார்த்து வளர்ந்த ஜீவிதா இவ இல்லை

முன்னமே இவளை நாம போகஸ் பண்ணியிருக்கணும். என்னை விட்டு ரொம்ப தூரமா போயிருக்கா. ஆனா ஏன்? எவ்வளவு யோசித்தும் காரணம் மட்டும் அவனுக்கு விளங்கவில்லை

பார்சலையே பார்த்திருந்தவன் மனது பாரமாகி போனது. காரை எடுக்க கூட அவனுக்கு கை வரவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான்.

ஒலித்த போனும் அவன் கவனத்தை பெறவில்லை. இதே மனநிலையில், இவளை இப்படியே விட்டு கிளம்ப முடியாதென புரிந்து போக, தாரணி வீட்டுக்கு காரை திருப்பினான்.

ஜீவிதாவும் அவளின் ஸ்கூட்டியில் பக்கத்து தெருவில் தான் இருந்தாள். அஜய் விட்டு தள்ளி வந்துவிட வேண்டும் என்று கிளம்பியவளுக்கு அதுவரை மட்டுமே அவளால் வர முடிந்தது.

அஜய் பார்த்த மகிழ்ச்சியை விட, தான் செய்து விட்டு வந்தது. அது அவளுக்கே ஏற்று கொள்ள முடியவில்லை. 

அஜுகிட்ட இப்படி நடந்துப்பியாதன்னை தானே திட்டி கொண்டவளின் கண்கள் கலங்கி போனது.

பார்சலையே பார்த்திருந்த அஜய் அவளை கலங்க வைத்தான்.

இருள் அவளின் கண்ணீர் மறைக்க, வண்டியின் மேல் சாய்ந்து கொண்டாள். நிமிடங்கள் செல்ல, பின்னால் பஸ் ஹார்ன்.

டிராபிக் அதிகமாகிவிட, வண்டியை எடுத்தாக வேண்டும். நேரே அவளின் PG சென்றுவிட்டாள் பெண்

தனிமையில் இருக்க இன்னும் அதிக வாட்டம். அஜயிடம் அவள் நடந்துகொண்ட முறை மிகவும் குத்தி வலிக்க வைத்தது

உன் மனசுல கள்ளம் வைச்சுக்கிட்டு அவரை கஷ்ப்படுத்திட்டு வந்திருக்கநியாய மனம் கேள்வி கேட்டு அவளை இன்னும் வதைத்தது.

கல்யாண் அவளுக்கு போன் செய்ய, “சீனியர்என்ற விசும்பலுடன் போன் எடுத்தாள்.

நான் கீழே தான் இருக்கேன் ஜீவி. வாஎன்றான் கல்யாண்.

ஜீவிதா வேகமாக அவனிடம் வந்துவிட்டாள். அழுத முகத்தோடு நின்றவளை, கேள்வியாக பார்த்தான்.

அஜய் வரதால நீ கிளம்பிட்டன்னு தாரு சொன்னா

சீனியர்என்றவள், எல்லாம் அவனிடம் சொல்லிவிட்டாள்.

நான் தப்பு தானே. அஜு கிட்ட இப்படி மோசமா நடந்திருக்க கூடாது இல்லை. அந்த.. அந்த பழம் கூட வைச்சுட்டு வந்துட்டேன்என்றாள் கண்ணீர் துடைத்து.

தப்புன்னு தெரிஞ்சே ஏன் பண்ணுன ஜீவி?”

அப்போ.. அப்போ தெரியல. இப்போ ரொம்ப தெரியுது சீனியர்” 

சரி வா. நாம வீட்டுக்கு போலாம்என, ஜீவிதாவும் தனியே இருக்க முடியாமல் அவனுடன் கிளம்பிவிட்டாள்.

தன்னிடம் இருக்கும் சாவியால் கதவை திறந்து அவளை விருந்தினர் அறைக்குள் அழைத்து சென்று அமர வைத்தான்

ஏங்கஎன்று கதவு திறக்கும் சத்தத்தில் தாரணி குரல் கொடுத்தாள்.

நான் தான் தாருகல்யாண் சொல்ல,

டின்னர் வாங்கிட்டு வந்துட்டீங்களா. நான் ஜியாவை தூங்க வைச்சுட்டு வரேன்என்றாள் தாரணி.

இனி தான் வாங்க போகணும்என்ற கல்யாண் குரலை தொடர்ந்து தாரணி அமைதியாகிவிட்டாள்.

தாரு உன்மேல ரொம்ப கோவமா இருக்கா. நான் டின்னர் வாங்கிட்டு வர தான் வந்தேன். நீ அழவும் இப்படியே வந்தாச்சு. ரெஸ்ட் எடு. வாங்கிட்டு வந்துடுறேன். நாம அப்புறம் அவகிட்ட பேசலாம்என்று கிளம்பினான்.

ஜீவிதா அப்படியே அமர்ந்திருக்க, காலிங் பெல் ஒலித்தது. இரண்டாம் முறை ஒலிக்க, ஜீவிதா எழ போனாள். அதற்குள் தாரணி திறந்துவிடும் சத்தம் கேட்க திரும்ப அமர்ந்து கொண்டாள்.

அஜய்என்ற தாரணியின் குரலில், ஜீவிதா உடலில் ஒரு நடுக்கம்.

உட்காரு, வா அஜய்அக்கா அவனை ஹாலில் அமர வைத்தாள்

இரண்டு பெட் ரூம் வீடு முழு அமைதியாக இருக்க அவர்கள் பேச்சு சத்தம் தெளிவாக கேட்டது.

கல்யாண் டின்னர் வாங்கிட்டு வர போயிருக்கார். தண்ணீர் குடிஎன்று தாரணி கொடுத்தாள்.

அஜய் குடித்து வைக்க, தாரணி கணவனுக்கு போன் செய்து பேசினாள். “ஜியா எங்க?” அஜய் கேட்க,

இப்போ தான் தூங்கினா. நீ ஏன் டல்லா இருக்கதாரணி அவனை கவனித்து கேட்டாள்.

ஜீவிதாவை மீட் பண்ணேன்என்றான் அஜய்.

அவளையா? எங்க?”

வழியில. அவ என்கிட்ட கடைசிவரை பேசவே இல்லை தாருசொல்லும்போதே வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது

தாரணிக்கு தங்கை மேல் இன்னும் கோவம். “அவளை என்ன ஆட வைக்குதோ தெரியல அஜய்என்றாள்.

என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவு நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்கு தெரியல. உனக்கு ஏதாவது தெரியுமா தாருஅதையே மிகவும் யோசித்த கொண்டே இருக்கிறான்.

நீ எதுவும் பண்ணலை அஜய்

ம்ஹூம் இல்லை தாரு. ஏதோ பண்ணியிருக்கேன். இல்லைன்னா அவ என்கிட்ட இப்படி நடந்துக்கவே மாட்டா

இருந்தா எனக்கு தெரிஞ்சிருக்கும் அஜய்

நான் அவளுக்காக கொண்டு வந்த பழத்தை கூட வைச்சுட்டு வந்துட்டாஎன்று அந்த பார்சலை அங்கேயே வைத்தான்.

அவளுக்காக எடுத்து வந்ததை திரும்ப ஊருக்கு கொண்டு போக முடியாது, தூக்கி போடவும் மாட்டேன். ஜியாக்கு கொடு. நீ சாப்பிடுஎன்றான்.

அஜய் அவ ஏதோ கிறுக்கு தனமா பண்ணிட்டிருக்கா. சரியாகிடுவா விடு

எனக்கு அப்படி தெரியல தாரு

உனக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு ப்ரெஷர். இவளையும் தலைக்குள்ள ஏத்திக்காத” 

ஆல்ரெடி நச்சுன்னு உட்கார்ந்துட்டா தாரு. என்னால இங்கிருந்து கிளம்பவே முடியல. நான் பார்த்து, என் கூட வளர்ந்த ஆட்டக்காரி இல்லை இவ. வேற. வேற எப்படியோ இருக்கா. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசலை. அவ குரல் எப்படி இருக்குன்னு கூட எனக்கு மறந்து போச்சு, ஒரு மாதிரி வலிக்குதுஎன்றவன் குரலே அவன் நிலைய சொல்ல, ஜீவிதா இரு கையால் வாயை மூடி சத்தமில்லாமல் அழுதாள்.

அஜய்

அவளை நான் விட்டிருக்க கூடாது. முதல்லே கவனிச்சிருக்கணும். ஆட்டக்காரி எங்க போயிடுவான்னு, ம்ப்ச். என் தப்பு தான்

டேய் போதும் விடுடா

அஜய் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டான்

கல்யாண் உணவு வாங்கி கொண்டு வந்துவிட்டவன், அஜயை வரவேற்றான். அவன் கண்கள் மூடியிருந்த விருந்தினர் அறை பக்கம் சென்று வந்தது

ஏன் ஜீவி வெளியே வரல. ஹால் பக்கம் தானே கெஸ்ட் ரூம். அஜய் வந்தது நிச்சயம் தெரியாம இருக்காதே‘ 

கல்யாண் புருவம் சுருங்கியது. ‘அஜய்கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன்னு அழுதவ, இப்போ வந்து பேசலாம் இல்லை, ஏன் காம்ப்ளிகேட் பண்ணிக்கிறா

நாமளே கூப்பிட்டுடலாமா? வரதா இருந்தா அவளே வந்திருப்பா. இப்போ போய் கூப்பிட்டா அஜய் என்ன நினைப்பான்?’ கல்யாண் விட்டுவிட்டான்.

அஜய் சாப்பிட வாதாரணி அழைக்க, அவன் மறுத்துவிட்டான்

நான் கிளம்புறேன் தாருஎன்றான் அவன்.

நீ இன்னும் சாப்பிட்ட மாதிரி தெரியலை. ப்ளீஸ் வந்து சாப்பிடுதாரணி வற்புறுத்தி அழைக்க, கல்யாணும் அழைத்தான்.

அஜய்க்கு இன்னமும் கல்யாணுடன் பெரிதான ஒட்டுதல் இல்லை

கல்யாண்க்கு அஜயுடன் பழக பிடிக்கும். ஆனால் அஜய் பார்ப்பதே அரிது. சென்னை வந்தாலும் வீட்டிற்கு வருவது குறைவு தான்

இல்லை, இருக்கட்டும். ஜியாக்கு தான் எதுவும் வாங்கிட்டு வரலை. உனக்கு பணம் அனுப்புறேன். ப்ளீஸ் அவளுக்கு பிடிச்சதா வாங்கி கொடுஎன்று கிளம்பினான்

கல்யாண் அவனுடன் நடந்தான். ஜீவிதா பற்றி அஜயிடம் பேச தோன்றியதுஆனால் இருவர் விஷயம். அவர்களே பேசுவது தான் சரியாக இருக்கும். உடன் அஜய் மனதில் என்ன இருக்கிறது என்பது வேறு புதிர் தான்

ஜீவிதா மனதில் உள்ளது அஜய்க்கு தெரிந்தால் எப்படி எடுத்து கொள்வான்? எப்படி அவளிடம் நடந்து கொள்வான்? கல்யாண்க்கு கண்டறிய முடியவில்லை.

அஜய் கார் வந்துவிட, அவன் நின்றான். “ஜீவிதாவை பார்த்துக்கோங்கஎன்றான் கல்யாணிடம்.

சொல்லும் போதே திரும்ப ஒரு வலி. அவளுக்கு நான் தானே முதன்மையாக இருந்தேன். இப்போது இவரிடம் சொல்கிறேன் என்றால் நான் அவளை விட்டு  வெகு தூரம் வந்துவிட்டேனா?

இத்தனை வருடங்கள் உணராதது இப்போது புரிகிறது. 

நெற்றியை நீவி விட்டு கொண்டவன், சுருங்கிய புருவங்களுடனே கிளம்பினான்.