நதியின் ஜதி ஒன்றே! 13 1 11384 நதியின் ஜதி ஒன்றே 13 பெண் கிளம்பியிருக்க, அஜய் காரிலே இருந்துவிட்டான். அவன் கண் முன் அந்த பார்சல். அவளுக்காக எடுத்து வந்ததை வைச்சுட்டு போவாளா? இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு கோவமா என் மேல? ஆனால் ஏன்? அஜய்க்கு புரியவில்லை. தாரணி திருமணத்தில் வைத்து நான் பேசினது எதார்த்தம். உண்மை. நான் தூரம் வந்துட்டேன். அங்கிள்க்கும் என்மேல மனசு கஷ்டம். முன்னப்போல நெருங்கி இருக்க முடியாது. பலராமும் விட மாட்டார். நன்றாகவே புரிந்தது. உடன் அவன் அப்பா, சங்கர். அவருக்கு பிடிக்கவில்லை. நடந்த எதுவும் பிடிக்கவில்லை. நான் செய்தது முதற்கொண்டு. பஞ்சாயத்து முடிந்த நாள் அன்றே மகனை கண்டித்தார். “அவர் பொண்ணுக்கு அவர் யாரையும் கல்யாணம் பண்ணி வைக்க அவருக்கு முழு உரிமை இருக்கு, நீ அதுல தலையிட்டது எனக்கு பிடிக்கல. நாம யார் அஜய் அவங்க குடும்பம் விஷ்யத்துல மூக்கை நுழைக்க?” என்று வீட்டில் வைத்து மகனை பேசினார் மனிதர். “தப்பு தான்ப்பா. ஆனா அவர் சொன்னது. கல்யாண் வேண்டாம்ன்னே வேற பையனுக்கு உடனே தாரணியை கட்டி கொடுக்க பார்க்கிறார், அது அவளை போர்ஸ் பண்ணி, பிடிக்காம நடக்க தான் வாய்ப்பு அதிகம்ன்னு” “இருக்கட்டுமே. அப்படி பண்ணாலும் என்ன இருக்கு? மக வாழ்க்கைக்காக தானே“ “நீங்களும் சேனாதிபதி அங்கிளை மறந்துடறீங்கப்பா. அவர் நிச்சயம் விட்டிருக்க மாட்டார்“ “தாரணியை சம்மதிக்க வைக்க வேண்டியது அவங்க அப்பா பொறுப்பு. அப்பறம் சேனாதிபதி மட்டும் என்ன பண்ணிட முடியும்?” “அவர் ஏற்கனவே என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டார்ப்பா” என்றான் அஜய். சங்கர் புரியாமல் பார்க்க, “கல்யாண் மேல எனக்கு விருப்பம்ன்னு தாரணி போன்ல சொன்னது அவரால தான்” என்றான் மகன். “என்ன சொல்ற நீ?” சங்கர் கேட்க, “இப்போ கேளு. எங்களுக்கு இது முதல்லே தெரியும்” என்றார் MP. “பலராம் அங்கிள்க்கு முன்னாடியே சேனாதிபதி அங்கிள் தாரணிகிட்ட பேசிட்டார். இந்த வாய்ப்பை விட்டா நீங்க சேரவே முடியாது. உன் அப்பா உனக்கு வேற பையனோட அவரச கல்யாணம் பண்ண பார்க்கிறார். அவருக்கு என் மகனை பிடிக்காமல் இல்லை. உங்க ஆளுங்களுக்குள்ள கொடுக்கணும்ன்னு பாடுபடுறார். வேற காரணம்ன்னா கூட விட்டுடலாம். இதுக்காக நீங்க உங்க விருப்பத்தை, வாழ்க்கையை தொலைக்கணுமான்னு நிறைய பேசியிருக்கார்“ “பின்னாடியே பேசின பலராம் அங்கிளும், அவங்க நமக்கு ஏத்தவங்க இல்லை. சொந்தத்துல பார்த்த மாப்பிள்ளை தான் உனக்கு சரின்ற மாதிரி பேச, தாரணி உஷாராயிட்டா. பஞ்சாயத்துல கல்யாண் மேல விருப்பம்ன்னு சொல்லிட்டா” என்றான் அஜய். “நீ அந்த பொண்ணுகிட்ட பேசியிருக்கலாம் இல்லை அஜய்“ “தம்பி. பஞ்சாயத்து முடிச்சு வர வழியில தான் அஜய் அந்த பொண்ணுகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டான். அதோட நீ என்ன நினைச்சிட்டிருக்க, அஜய் பேசினதும் அந்த பொண்ணு கேட்டுக்கும்ன்னா. நட்பு வேற காதல் வேற தம்பி” என்றார் MP. “எனக்கு புரியதுண்ணா. ஆனா பலராம் சார்க்கு புரியலையே. நம்ம மேல கோவப்படுறார்” என்றார் சங்கர். “பட்ட பட்டுக்கட்டும் நீ விடு தம்பி. அவர் மகளை தான் அவர் கேட்கணும். அஜய் அந்த பொண்ணுக்கு கௌரவமா கல்யாணம் நடக்க தான் பாடுபட்டான். இல்லை சேனாதிபதி தூக்கிட்டு போய் தான் கல்யாணம் பண்ணி வைச்சிருப்பான்” MP சொல்ல, சங்கர்க்கு அது புரியாமல் இல்லை. ஆனால் அவரும் ஓர் தந்தை ஆயிற்றே. “நீ ஏண்டா இவ்வளவு கவலைப்படுற? எல்லாம் முடிஞ்சு போச்சு. நீ உன் உடம்பை பாரு முதல்ல” என்றார் அண்ணனாக. “உங்களுக்கு தெரியாதுண்ணா. நான் அவர் மேல கஷ்டபட்டுக்கிட்டு வேலையை விட்டு வந்தேன்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட ஈகோ பார்க்காம குடும்பத்தோட கிளம்பி என்னை பார்க்க வந்திருந்தார். அவருக்கு போய் இப்படி பண்ணிட்டோமேன்னு மனசு அடிச்சுக்குது” என்றார் சங்கர். அஜய்க்கு அப்பா சொல்வது சரியென்றே இருந்தது. அந்த நேரம் பலராம் வந்தார் தானே? நீங்களும் அப்படி நினைச்சீங்களா சார் என்று நேருக்கு நேர் கேட்டு மனம் விட்டு பேசினாரே. அப்பா சொன்னது போல அந்த ஈகோ. அது அவரிடம் இல்லை தான். இத்தனைக்கும் அந்த ப்ரோமோஷன் விஷயத்தில் அவர் மேல் தப்பில்லை. நேரில் வந்து விளக்கம் சொல்லும் அவசியமும் அவருக்கு இல்லை. இத்தனை வருஷம் பழகி என்னை புரிஞ்சுக்கலை. நான் ஏன் அவரை தேடி போகணும்ன்னு பலராம் அன்று நினைத்திருந்தால்? “நீ சொல்றது பார்த்தா நல்ல மனுஷனா தான் தெரியறார் சங்கர். ஆனா இதுல நாம மட்டுமே முடிவெடுக்க முடியாது. அவர் பொண்ணு முடிவு. நாம அதுக்கு துணை நின்னோம் வைச்சுக்கலாம்” என்றார் MP. “அதுதான் என்னோட கஷ்டமேண்ணா, நாம ஏன் அவருக்கு துணை நிக்கலைன்னு“ “சங்கர். ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. அஜய் அந்த பொண்ணுக்காக யோசிச்சு பண்ணாலும் அதுல அவர் கௌரவமும் தான் அடங்கியிருக்கு. மேஜர் பொண்ணு. எப்படியும் கல்யாணம் நடந்திடும். அது அவர் தலைமையில நடக்கிறதா நினைச்சுக்கோ. அவ்வளவு தான். விடு” என்றுவிட்டார் MP. அதை கொண்டே பலராம் பத்திரிக்கை வைக்க வராததை கூட சங்கர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் நியாயம் அவருக்கு என்ற எண்ணம். அஜய் கூட திருமணத்திற்கு முன் தினமே சங்கர் கிளம்ப, ஆச்சரியம் கொண்டான். குடும்பத்தோடு மண்டபம் வந்தனர். ஆனால் பலராம் தலையசைத்து வரவேற்றதோடு சரி. கஷ்டம் இருக்கும் என்று விட்டுவிட்டார். சேனாதிபதி தேடி வந்து பேசினார். ஜீவிதா முன் நின்று எல்லாம் செய்தாள். கல்பனா அடிக்கடி விசாரித்து கொண்டார். இதிலே திருப்தி பட்டு கொண்டார் சங்கர். பலராம் பார்த்தெல்லாம் அஜயும் ஒதுங்கி நிற்கவில்லை. குடும்பத்து மனிதனாக எல்லா வேலையும் செய்தான். மறுநாள், முகூர்த்தம் அன்றும் பலராம் அதையே தொடர, சங்கரின் மனம் பாதித்துவிட்டது. அவர் அருகிலே வரவில்லை. விரோதியாக இருந்தாலும் உணவு உபசரிப்பு என்பது நம்மிடையே இன்றளவும் உண்டு. ஆனால் இரவும் பலராம் உணவுக்கு அழைக்கவில்லை. பொறுத்து கொண்டவர்க்கு, முகூர்த்த நாள் அன்றும் அவர் அழைக்காததில் தன்மானம் விழித்து கொண்டது. போட்டோ எடுக்கவும் வரவில்லை. அப்படி இனி அங்க இருக்க வேண்டுமா? அது தான் நல்லபடியே திருமணம் முடிந்துவிட்டதே? சேனாதிபதி சாப்பிட்டீங்களா என்று கேட்ட நேரம், “சாப்பிட்டோம். கிளம்பறோம்” என்றுவிட்டார். அதிலே மனைவி, மகன் புரிந்து கிளம்பிவிட்டனர். அன்றே மகனிடமும் தெளிவாக சொல்லிவிட்டார். “தாரணி உன் ப்ரெண்ட் மட்டும் தான். அந்தளவே நடந்துக்கோ தம்பி” என்று. அஜய் புரிந்து கொண்டான். மிக தெளிவாக அப்பாவின் வார்த்தைகளை உள்வாங்கி கொண்டான். பலராம் அப்பாவிற்கு செய்ததை அவனும் தானே கவனித்திருந்தான். இனி அவர் வீட்டு பங்க்ஷன் எதிலும் அவன் கலந்து கொள்வதாய் இல்லை. உறுதியான முடிவு. இதோ வருடங்கள் கடந்து இன்று வரையிலும் அந்த உறுதியிலே நிற்கிறான். தாரணி வளைகாப்பு நேரம் அவ்வளவு பாடுபட்டனர் கல்யாண் தம்பதி, சேனாதிபதி தம்பதி. அஜய் மறுத்து சென்னையிலே வைத்து தாரணிக்கு முறை செய்தான். சகுந்தலா வந்தார் மகனுடன். தாரணிக்கு தங்க வளையல் இட்டு ஆசீர்வாதம் செய்தார். அவர் வருவது தெரிந்து கல்பனாவும் சென்னை வந்துவிட்டார். அவ்வளவு வருத்தம் கல்பனாவிற்கு. நெருங்கிய உறவு சகுந்தலா. அவர் இப்படி வந்து செல்வது மனதை வருத்தாமல் இருக்குமா? பலராம் மேல் அளவில்லா கோவம் தான். அடுத்து குழந்தை பிறந்து, தொடர்ந்த எந்த பங்க்ஷனிலும் கூட அஜய் கலந்து கொள்ளவில்லை. சேனாதிபதி வீடு சென்று தான் ஜியாவை முதலில் பார்த்தான் அஜய். பலராமை அவர்கள் புரிந்து கொண்டனர். அதே நேரம் அவர்கள் சுயமரியாதையையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை. அஜயின் இந்த முடிவினாலே ஜீவிதாவை பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு இல்லாமல் போனது. வேலையை விட்டு அவன் ஊருக்கே சென்றுவிட்ட அஜய்க்கு அதன் பின்னான போராட்டம் வேறு மாதிரி இருந்தது. புது தொழில். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற அழுத்தம். பங்காளிகள் மிக தெளிவாக சொல்லிவிட்டனர். “இத்தனை வருஷம் நாங்க உன் சொத்தை பார்த்துக்கிட்டோம். இனி எங்களால முடியாது. உன் அப்பாவுக்கும் இறங்கி வேலை செய்ய முடியாது. வேலி இல்லாத சொத்தை அமுக்க, ஒரு கூட்டமே அலையுது. பார்த்துக்கோ” என்று அவனிடம் எல்லாம் ஒப்படைத்துவிட்டனர். ஒரு மகன். சொத்தும் பெரிது. அஜய்க்கு பொறுப்பு மிகவும் கூடி போனது. “நான் பார்த்துகிறேன். தொழில் ஆரம்பிக்க போறேன். நீங்க எல்லாம் என்கூட நிக்கணும்” என்று உரிமையாக கேட்டுக்கொண்டான். பங்காளிங்களுக்குள் சொத்து பிரச்சனை என்பது இல்லை. அவரவர் சொத்தும் அதிகம் என்பதால் போட்டி, பொறாமை அங்கில்லை. “அதுக்கென்ன அஜய் நீ ஆரம்பி. நாம பார்த்துக்கலாம்” என்று அவன் தோள் தட்டி உடன் நின்றனர். சங்கருக்கு மகன் மேல் நம்பிக்கை இருந்தது. அவன் என்ன செய்தாலும் தடையாக நிற்கவில்லை. கேட்ட நேரம் பணம் கொடுத்தார். பவர் கொடுத்தார். தட்டு தடுமாறி, முட்டி மோதி இதோ எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறான். நஷ்டம், அலைச்சல், பயம் என்று அஜய் அலைந்து திரிந்த வருடங்களில் அவனால் ஜீவிதாவிற்கென நேரம் ஒதுக்க முடியவில்லை. போன் செய்வான். அவளின் நினைவு வரும் நேரம் எல்லாம் போன் செய்வான். சின்னவள் எடுக்க மாட்டாள். அம்மாவிடம் பேசுகிறாள் என்று தெரியும். அவரிடம் கேட்டு கொள்வான்.