நதியின் ஜதி ஒன்றே! 10

மிகவும் பிரமாண்டமாக நடந்தேறி கொண்டிருந்தது கல்யாண், தாரணி திருமணம். இன்னும் சில நொடிகளில் முகூர்த்தம். மணமக்கள் மேடைக்கு வந்துவிட்டனர்

காதல் கை கூடிய மகிழ்ச்சியில் மணமக்களின் முகங்கள் ஜொலித்தன. ஜீவிதா அக்கா பக்கத்திலே நின்றிருந்தாள். அவளின் முகத்தில் அளவான புன்னகை

சேனாதிபதி பக்கம் ஆட்கள் மிக அதிகம். காமாட்சி ஓடியாடி எல்லாம் செய்து கொண்டிருக்க, “கண்ணுஎன்று வந்தார் கணவர்.

பையன் தாலி கட்ட போறான். வாஎன்று கையோடு அழைத்து வந்து மகன் பக்கத்தில் நிற்க வைத்து கொண்டார். அவர்களின் இளைய மகன் ஆனந்தன் அண்ணாவை வம்பிழுத்து கொண்டிருந்தான்.

நீ எல்லாம் பேசாதடா. இரண்டு நாள் முன்னாடி அண்ணன் கல்யாணத்துக்கு வந்தவன் தானே நீ?” என்ற கல்யாண் தம்பி தலையை சட்டென கலைத்துவிட்டான்.

டேய். கஷ்டப்பட்டு ஜெல் வைச்சு செட் பண்ணியிருந்தேன்டா. பொறாமை பிடிச்சவனே. மாப்பிள்ளையோட தம்பி தான் இன்னைக்கு கெத்து. அதை கெடுக்க பார்க்கிறான்என்று திட்டி கொண்டே திரும்ப செட் செய்தான்.

பலராம் மணமக்கள் பக்கம் அமைதியாக நின்றிருந்தார். மாங்கல்யம் மேடைக்கு வந்துவிட, “ஜீவிஎன்று தங்கையை அழைத்தாள் அக்கா. “அஜய் எங்கன்னு பாருஎன்றாள்.

சங்கர், சகுந்தலா மட்டும் கீழே அமர்ந்திருந்தனர். அஜய் காணவில்லை. “பந்தி பரிமாறுற இடத்துல இருக்காங்க. நான் போக முடியாதுஎன்றாள் தங்கை.

நான் கூட்டிட்டு வர சொல்லிட்டேன். ரிலாக்ஸ்என்றான் கல்யாண் இருவரிடமும்.

ஆனந்தனுடன் அஜய் வந்தான். “எங்க போன அஜய்? எங்களோட நில்லுஎன்றார் கல்பனா. பலராம் இவனை திரும்பி பார்த்துவிட்டு சிரிக்க கூட இல்லை, நேரே திருப்பி கொண்டார்.

சகுந்தலாவையும் அழைத்து மேடையில் நிறுத்தியிருக்க, பலராமை கவனிக்காதது போல் அம்மா பக்கம் நின்றான் அஜய்

ஜீவிதா இதை பார்த்துவிட்டு அவனை ஒரு நொடி  அதிகமாக பார்த்தாள்.

என்னாச்சு இவளுக்கு?” அஜய்  புருவம் சுருங்கியது. நேற்று மாலை மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஜீவிதா அமைதியாக தான் இருக்கிறாள். முன்போல் பேச்சு, ஆட்டம், ஆர்ப்பாட்டம் இல்லை.

இத்தனைக்கும் சங்கர், சகுந்தலாவிற்கு அவள் தான் எல்லாம் பார்த்து செய்தாள். மண்டபத்திலே அறை ஒதுக்கி கொடுத்து, உணவுக்கு அழைத்து சென்று, காலை அவர்களுக்கு காபி கொடுப்பது வரை எல்லாம் அவளே தான்.

ஆனால் இதில் எல்லாம் முன்பிருந்த பேச்சு இல்லை. சகுந்தலா, “என்ன ஜீவி?” என்று பல முறை கேட்டுவிட்டார்.

நண்பர்களுடன் வேலை பார்த்துவிட்டு அப்போது தான் அறைக்கு வந்த அஜய்,”அக்காவை பிரிய போற கவலையா இருக்கும்மாஎன்றவன் அப்படி தானே என்பது போல அவளை பார்த்தான்.

அதான் நீயே சொல்லிட்ட இல்லை, போ என்பது போல சென்றுவிட்டாள் சின்னவள். மேடையிலும் மிகவும் நிதானமாக நிற்க, அஜய்க்கு உறுத்த ஆரம்பித்துவிட்டது

ப்ரீயா இருக்கும் போது ஜீவி பத்தி கல்பனா அத்தைகிட்ட பேசுங்கம்மாஎன்றான் மகன்.  

நான் தான் சொன்னேன் இல்லை. பிள்ளை நார்மலா இல்லைன்னுஎன்ற சகுந்தலா தாலி கட்டும் வைபோகத்தில் கவனம் வைத்தார்

தாரணி கழுத்தில் கல்யாண் தாலி கட்டி மூன்று முடிச்சிட, அர்ச்சதை ஆசீர்வாதம் அவர்கள் மேல் மழையாய் விழுந்தது.

தாரணி கண்ணோரம் ஆனந்த கண்ணீர். கல்யாண் அதை துடைத்து, நெற்றியில் முத்தமிட, அஜய் முகத்தில் தாராள புன்னகை. பலராம் செய்கை எல்லாம் எங்கோ சென்றுவிட்டது.

மேடையில் ஆட்கள் சேர அஜய், அம்மாவை அழைத்து கொண்டு கீழிறங்கிவிட்டான். “அப்பாக்கு கூட்டத்துல சாப்பிட முடியாது. நீங்க ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் போன் பண்றேன்என்று அனுப்பி வைத்துவிட்டான்.

 

தாரணி பக்கத்திலே நின்ற ஜீவிதாவிற்கு அசைய கூட முடியவில்லை. “இந்த பேக் கொஞ்சம் வைச்சுக்கோங்க. நான் இதோ வந்துடறேன்என்றான் ஆனந்தன் இவளிடம்.

அவளுக்கே கடுப்பு. அதை முகத்தில் காட்டிவிட்டவள், “முடியாதுஎன்றாள்.

ஏங்க இந்த சின்ன பேக் வைச்சுக்க மாட்டிங்களா? மொய் பணம் இருக்குங்க

இருந்தா நீங்களே தலையில வைச்சுட்டு போங்க

எங்காளுங்க எல்லாம் சாப்பிட போயிட்டாங்கன்னு கேட்டா ரொம்ப பண்றீங்க?”

அதான் உங்க அண்ணா இருக்கார் இல்லை. அவர்கிட்ட கொடுத்துட்டு போங்க

கல்யாண் அதிர்ந்தவன், “நான் மாப்பிள்ளை ஜீவிமாஎன்றான் பாவமாக.

தாரணி, “கேட்கிறார் இல்லை. வைச்சுக்கோ ஜீவிஎன்றாள்.

இப்போவே உன் கொழுந்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர, நீயே வை இந்தாஎன்று பையை பிடுங்கி அக்கா கையில் திணித்தாள்.

அஜய் வரும் போதே பார்த்து கொண்டு வந்தவன், “மேடையில நின்னு என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஜீவிதாவை கடிந்து கொண்டவன், தாரணியிடம் இருந்து பையை வாங்கினான்.

அவங்க வீட்டு பை அது அஜு. கொடுங்கஎன்று வாங்கி திரும்ப ஆனந்தனிடமே கொடுத்தாள்.

என்ன பொண்ணுடா இவ என்பது போல் ஆனந்தன்  பார்க்க, அஜய் இவளை கண்டிப்புடன் பார்த்தான்.

அவளுக்கு பசிக்குது போல அதான்என்று தாரணி சமாதானமாக சொல்ல,

அப்படி எல்லாம் இல்லை. நான் ஏன் அந்த பையையும் சுமக்கணும்?” என்றாள் தங்கை.

ஆட்டக்காரி. கொஞ்சம் அமைதியா நில்லுஅஜய் அவள் காதுக்கருகில் அதட்டினான்.

என்கிட்டேயே இவ்வளவு வெய்ட் இருக்கு அஜுஇதுல அதையும் நான் பிடிக்கணுமா?” என்று அவனிடம் மெல்லிய குரலில் முறையிட்டாள்.

நீ அமைதி ஆகிட்டன்னு பயந்துட்டேன். கொடு இங்கஎன்று அவளின் சுமைகளை வாங்கி கொண்டவன், “என்கிட்ட கொடுங்க ஆனந்தன்என்று அவனிடமும் வாங்கி கொண்டான்.

தேங்க்ஸ் ப்ரோ. இதோ வந்துடறேன்என்று ஆனந்தன் கீழிறங்கி செல்ல,

எதுக்கு அவன்கிட்ட வாங்கின அஜுஎன்று சின்னவள் சண்டைக்கு நின்றாள்.

மேடையில எல்லார் முன்னாடி கொட்டு வாங்காத ஜீவிதாஅஜய் பல்லை கடித்தான்.

சரி எதுக்கு அவன்கிட்ட

ஆனந்தன் உன்னை விட பெரியவர். அவருக்கும் சேர்த்து தான் கொட்டு

அது முடியாது. உனக்கு அவனை பத்தி தெரியலஎன்றாள் சின்னவள் முகம் சுளித்து 

ஏன் என்ன பண்ணார்?” அஜய் சீரியஸ் ஆனான்.

பார்வையே சரியில்லை அஜு. வந்ததில் இருந்து இப்படி தான் எதாவது சாக்கு வைச்சு பேசுறார். எனக்கு பிடிக்கலைஎன்றாள்.

அண்ணியோட தங்கச்சின்னு  இப்படி வம்பு பண்றது உண்டு தான் ஜீவிதா. அதை தாண்டி போக மாட்டார்ன்னு நினைக்கிறேன். போனா நீ தாரணிகிட்ட. ம்ஹூம் வேண்டாம் உன் கல்யாண் மாமாகிட்ட சொல்லு அவரே பார்த்துப்பார்என்றான் அஜய்

ஏன் நீ எங்க போற? நீ பார்த்துக்க மாட்டியா?” 

உடனே ஆட ஆரம்பிக்காத. இனி நீங்க ஒரு பேமிலி. அடிக்கடி மீட் பண்ணுவீங்க. இதெல்லாம் ஹாண்டில் பண்ண பழகிக்கோ. நான் எங்கோ இருப்பேனோ?”

முகம் சிவக்க அஜயை அவ்வளவு கோவமாக பார்த்தாள் ஜீவிதா. “இனி இப்படி பேசாத அஜு” என்றாள் மிரட்டலாக. 

என்ன பேசாத? நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை. வளர கத்துக்கோ. நான் உன்கூடவே  இருக்க முடியுமா? இப்போ கிளம்பினா திரும்ப நான்  எப்போ உன்னை பார்ப்பேன்னு கூட சொல்ல முடியாது. தாரணியும் கல்யாண் வீட்டுக்கு வீட்டுக்கு போயிட்டா நான் உங்க வீட்டுக்கு வரவும் என்ன இருக்கு சொல்லு. இதை எல்லாம் நீயே சமாளிக்க கத்துக்கோன்னா என்னை கேட்டுகிட்டு இருக்க” அஜய் பேசி கொண்டிருக்க, 

ஜீவிதா கண்களில் இருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்தது. “ஹேய்” அஜய் அதிர, பெண் அதற்கு மேல் அங்கு, அவனிடம் நிற்கவே இல்லை. நடையே ஓட்டமாக ஓடிவிட்டாள்

அப்போ அப்பா சொன்னது போலத்தான் எல்லாமா? அஜுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லையா? பெண்ணுக்கு நிற்காமல் அழுகை வெடித்தது.

எங்கோ ஒரு அறைக்குள் பதுங்கிவிட்டாள். பலராமுடனான வாக்குவாதம் நினைவிற்கு வந்து இன்னும் கண்ணீர்.

சில வாரங்களுக்கு முன் சங்கர் குடும்பத்திற்கு பத்திரிக்கை வைக்க செல்ல வேண்டும் என்று பலராமிடம் கேட்டு கொண்டிருந்தார் கல்பனா.

நான் வரலை. நீ போய்ட்டு  வந்திடுஎன்றார் பலராம்.

ஜீவிதா டிவி பார்த்து கொண்டிருந்தவள், அதை நிறுத்திவிட்டாள்.

நான் மட்டும் போகணுமா? நீங்களும் வாங்கஎன்று கல்பனா அழைக்க,

நான் எல்லாம் வர முடியாது. அவர்களுக்கு நீ வை போதும்என்றார் கணவர்.

பலராம்க்கு தான் இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. மகளுக்காக வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டிருக்க, சொந்தங்களுக்கு அவரால் பதில் சொல்லி முடியவில்லை.

கல்பனா தான் சமாளிக்க, இவர் ஏற்பாடு எதிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லைஅவர் பங்கு பணம் மட்டும் பிடிவாதமாக கொடுத்துவிட்டார்

சேனாதிபதிக்கு வாங்கவே ஒப்பவில்லை. காமாட்சி தான் வாங்க வைத்தார். பெண் வீட்டில் தந்தை மட்டும் தான் அப்படி. மற்ற எல்லோரும் நல்ல படியே இருக்க, சேனாதிபதியும் விட்டுவிட்டார்.

பலராம்க்கு என்னமோ தான் தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம். மகளோடு, அஜய் குடும்பத்தையும் அதற்கு காரணமாக நினைத்தார்

இதில் அவர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்ல வேண்டும் என்றதில் பலராம்க்கு கோவம்.

அதென்ன நான் வைச்சா போதும், என்ன பேசுறீங்க நீங்க? மரியாதையா இருக்காது வாங்கஎன்று கல்பனா அழைத்தார்.

நான் வரலைன்னு சொன்னா விட்டுடணும் கல்பனா

அவங்க என்ன நினைப்பாங்க

என்ன வேணா நினைக்கட்டும்? அவங்க பண்ண வேலைக்கு நான் வேற வரணுமா?”

நம்ம பொண்ணு ஆசைப்பட்டதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க?”

பலராம்க்கு கோவம் வந்துவிட்டது. “அப்போ அவங்க சரி, நான் தான் தப்புன்னு சொல்றியா?” என்று மனைவியிடம் எகிறினார்.

இங்க பாருங்க நீங்க கொஞ்ச நாளா ஆளே சரியில்லை. நடந்தது நடந்து போச்சு. மாப்பிள்ளை வீட்லயும் நல்ல மாதிரி தான் இருக்காங்க. பட்டு எடுக்கிறதுல இருந்து மண்டபம் வரை நாம சொல்றது தான் நடக்குது. இன்னும் என்ன உங்களுக்கு?” என்று கேட்டார் கல்பனா.

எனக்கு என்ன? நான் அவங்களுக்கு பத்திரிக்கை வைக்க வரலை. அவ்வளவு தான்என்றார் பலராம்.

கல்பனாவிற்கு  வெறுத்து போனது, யார் செய்ததுக்கு யாரை நோவது

சின்ன பையன் என் வீட்டுக்குள்ள வெடி வைச்சுட்டான்என்று அஜயை பேசினார் பலராம்.

அக்கா கேட்டான்னு தான் அஜு பேச கூட்டிட்டு போனார். அஜு மேல எந்த தப்பும் இல்லைஎன்றாள் ஜீவிதா பொறுக்க முடியாமல்.

உன்னை யார் கூப்பிட்டா இப்போ? சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கோதந்தை மகள் மேல் பாய்ந்தார்.

அஜுவை திட்டிட்டே இருக்கீங்கப்பா. சீனியரோட அப்பா தானே எல்லாம் பண்ணார்ஜீவிதா பேச,

ஜீவி நீ பேசாமல் இருஎன்றார் கல்பனா.

ம்மா. அத்தை பேமிலி பாவம். அப்பா அவங்களை பேசிட்டே இருக்கார்

யார் அத்தை உனக்கு?”

சகுந்தலா அத்தை தான்

அவங்க உனக்கு அத்தை எல்லாம் கிடையாது. வேலையை பாரு போதந்தை சொல்ல,

நான் அத்தைக்கு பத்திரிக்கை வைக்க வரேன்ம்மாஎன்றாள் மகள்.

ஜீவிதா

ஏன்ப்பா. நீங்க திடீர்ன்னு மாறினா நாங்களும் மாறிடணுமா? அஜு என்ன செஞ்சார்? அக்காக்காக நீங்க ஒத்துக்கிட்ட மாதிரி தானே அஜுவும் சப்போர்ட் பண்ணார்” 

ஜீவிதா பேசாத

நான் பத்திரிக்கை வைக்க அம்மாவோட போறேன்

சொல்லிட்டே இருக்கேன்என்று கை ஓங்கிவிட்டார் தந்தை

என்னங்கஎன்று கல்பனா அலற, ஜீவிதா உடல் அச்சத்தில் நடுங்கியது. ஓங்கிய வேகத்தில் அடி விழுந்திருந்தால், அவள் அவ்வளவு தான்.

இனி அத்தை, அஜுன்னு பேசிட்டு இருக்காத. அவங்க நமக்கு சொந்தம் எல்லாம் ஒன்னும் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரங்களா இருந்தாங்கஇப்போ அதுவும் இல்லை

சும்மா அவங்களுக்கு பேசுறேன்னு என்கிட்ட வாங்கிடாத ஜீவிதா. உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் கல்பனாநீ பத்திரிக்கை வைக்க போ, போகாமல் இரு. என்கிட்ட வராத. புரிஞ்சுதா

ஏதோ சின்ன பொண்ணுன்னு பார்த்தா நான் பத்திரிக்கை வைக்க போறேன்னு நிற்ப. தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்கோஎன்று மகளை மிரட்டி சென்றார் தந்தை.

கல்பனா மகளை ஆதரவாக அணைத்து கொள்ள, ஜீவிதாவிற்கு தாங்கவே முடியவில்லை. “அஜு, அத்தை எல்லாம் நமக்கு சொந்தம் தானேம்மா. அப்பா ஏன் அவங்க நமக்கு யாருமில்லைன்னு சொல்றாங்கஎன்று கேட்டு கேட்டு அழுகை.

இப்போது அஜயுமே அதையே சொல்ல, சின்னவளுக்கு நடப்பது எதுவும் ஏற்கவே முடியாததாக இருந்தது. அறையை விட்டு வெளியவே செல்லவில்லை அவள்.

அஜய்க்கு அவள் கண்ணீர் வருத்தம் தான் என்றாலும், வளர வளர எதார்த்தத்தை ஏற்று கொள்வாள் என்று நினைத்து கொண்டான்.

கல்யாண், தாரணி போட்டோ எடுத்து கொண்டிருக்க, ஆனந்தன் வந்துவிட்டான்.

அவன் இவனிடம் பேச, அஜய் பதிலளித்து கொண்டே ஜீவிதாவை தேடினான். கண்ணுக்கு சிக்கவில்லை. அப்பா, அம்மா உணவு பார்க்க வேண்டும்.

அத்தை மாமா எங்க அஜய். போட்டோ எடுக்கணும்?” என்று கேட்டாள் தாரணி.

நான் போன் பண்றேன்என்று அழைத்தவன், ஜீவிதா எண்ணுக்கும் அழைத்தான். அவனின் கையில் இருக்கும் அவளின் ஹாண்ட் பேக்கிலே ஒலித்தது.

சங்கர், சகுந்தலா வந்துவிட கல்பனாவும் அவர்களுடன் மேடையேறி வந்தார். பலராம் சற்று தள்ளி தான் நின்றிருந்தார். மேடைக்கு வரவில்லை. கல்பனாவிற்கு  கணவரை நினைத்து கோவம் தான். இங்கு வைத்து என்ன பேச?

சங்கர் முகம் சுருங்கி போனது. பலராம் வரவேற்றதோடு சரி. அவரிடம் இவர்களுக்கு பெரிதான வரவேற்பு இல்லை. பத்திரிக்கை வைக்கவும் கல்பனா மட்டுமே வந்தார்

சேனாதிபதி மனைவி, மகனுடன் வந்து வெள்ளி தட்டில் பத்திரிக்கை வைத்து மரியாதை கொடுத்திருந்தார். இப்போது மண்டபத்திலும் அவர் தான் அடிக்கடி வந்து பேசினார்

பெண்கள் ஒரு பக்கம் நிற்க, கல்யாண் பக்கத்தில் அப்பாவை நிற்க வைத்து அஜய் நின்றான். கவனித்த கல்யாண் வாடி போனான்.

சேனாதிபதி தன் குடும்பத்துடன் அஜய் குடும்பத்தை நிற்க வைத்து போட்டோ எடுத்து கொண்டவர், “ரொம்ப நன்றிஎன்று சங்கர் கை பிடித்து குலுக்கினார்.

கல்யாண் முன் நின்றான் அஜய். “தாரணிக்கு எப்போவும் நான் இருப்பேன். இதை நீங்க நியாபகம் வைச்சுகிட்டா போதும்என்றான்.

மிரட்டுற. புரியுது. ஆனா இதுக்கு அவசியம் இருக்காதுஎன்ற கல்யாண், அஜயை நன்றாகவே அணைத்து கொண்டான்

ஜீவி எங்க?” என்று சகுந்தலா போட்டோ எடுக்க கேட்டு, தேடி, அவள் இல்லாமல் தான் எடுத்து கீழிறங்கினர்.

சாப்பிட்டீங்களா?” சேனாதிபதி கேட்க,

சங்கர், “ஆச்சு. கிளம்ப போறோம்என்றுவிட்டார்.

மனைவி, மகனுக்கு புரிந்து போனது. கல்பனா உறவுகளுடன் மேடையில் இருக்க, இவர்கள் அறைக்கு சென்று எல்லாம் எடுத்து வந்தனர்.

தாரணி கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது. “என்ன அஜய். எங்க கிளம்பிட்ட?” நண்பன் கை பிடித்து கொண்டாள்

ஷ்ஷ். என்ன இது தாரணி? அப்பா டையர்டா பீல் பண்றார். நீ எல்லாம் முடிச்சுட்டு வா. நாம ப்ரீயா மீட் பண்ணுவோம்என்றான்.

சகுந்தலா, சங்கர், அஜய்  விடைபெற, கல்பனா கண்களிலும் கண்ணீர். பலராம் ஆளே காணவில்லை. “ஜீவிக்கு சொல்லிடுஎன்றவர்கள் கிளம்பிவிட்டனர்.