தாரணி வயிற்றில் மூன்று மாதம் இருக்கும் போது இங்கு வந்தனர். அப்போது தான் சகுந்தலா, சங்கருக்கு திருமணம் முடிந்த புதிது. அடுத்த இரண்டாம் மாதம் அஜய் உண்டாகி இருந்தான்.
இருவரும் நலம் விசாரித்து, உணவோடு கர்ப்பவதிக்கான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததில் உண்டான நட்பு இது. சில சில வேறுபாடுகள் வந்த போதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அஜய், தாரணி ஒன்பதாம் வகுப்பு படிக்க, ஜீவிதா ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.
ஆண்களுக்கு காலை எட்டு மணிக்கே வேலை நேரம் ஆரம்பித்து, மாலை நான்கு மணிக்கு முடிந்துவிடும் என்றாலும், ஓயாத வேலையால் வீட்டுக்கு வர ஏழு எட்டு ஆகிவிடும்.
பிள்ளைகள் நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவர். கல்பனா ரவா லட்டு செய்திருக்க, ஜீவிதா காலை நடந்த சண்டையை மறந்து அக்காவுடன் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.
“ட்ரஸ்ஸை கூட மாத்துறதில்லை. இந்தா இதை போய் அஜய்க்கு கொடுத்திட்டு வா” என்று சின்ன மகளிடம் பாக்ஸை நீட்டினார்.
“இதுக்கு மட்டும் நானா? உங்க செல்ல பொண்ணை அனுப்புங்க” என்றாள் ஜீவிதா.
“எனக்கு ரிக்கார்ட் ஒர்க் இருக்கு. நீ எழுதி தரியா?” என்று தாரணி கேட்க,
“நான் ஏன் எழுதணும்?” என்று அடுத்த சண்டை ஆரம்பித்தது.
“ம்மா.. இவ ஹோம் ஒர்க்”
“ம்மா நான் கிளம்பிட்டேன்” என்று ஜீவிதா பக்கத்து வீடு ஓடி வந்துவிட்டாள்.
“அத்தை” என்று மெல்ல எட்டி பார்த்தவள், சங்கர் இன்னும் வாரததில் சுதந்திரமாக சோபாவில் சென்று அமர்ந்தாள். அவரிடம் பயம் கலந்த மரியாதை அதிகம்.
“வா ஜீவி” என்று சகுந்தலா வர, பாக்ஸை நீட்டினாள்.
“அஜய்க்கு கொடுத்துட்டு வரேன்” என்று மகனின் அறைக்கு சென்று கொடுத்து வந்தார்.
“அத்தை உங்க மகன் என் தலையில அடிச்சுட்டார்” என்று புகார் வாசித்தாள்.
“இதுக்கு தானே டப்பாவை தூக்கிட்டு வந்த” என்ற அஜய் குரல் அறையில் இருந்து வந்தது.
“அவ எனக்கு ரிப்பன் தரலன்னு கேட்டதுக்கு இவன் அடிக்கிறான். சின்ன பொண்ணுன்னு எல்லாருக்கும் நான் தான் இளைச்சவ”
“ஆஆ அம்மா” ஜீவிதா நடுதலையில் விழுந்த கொட்டில், தேய்த்து கொண்டு கத்தினாள்.
“மரியாதையா பேசு” என்று நின்றான் அஜய்.
“இவர் மட்டும் என்னை அடிக்கலாமா அத்தை?”
“முரண்டு பிடிச்சா அடி தான் விழும்”
“அவ செய்றது எல்லாம் இவருக்கு தெரியாதா அத்தை?”
“தாரு என் ப்ரெண்ட். பிறந்ததில் இருந்து அவளை தெரியும்”
“என்னையும் தானே பிறந்துதுல இருந்தே இவருக்கு தெரியும். அப்போ எனக்கும் தானே இவர் சப்போர்ட் பண்ணனும் அத்தை?”
அஜய் அறைக்கு போக, “பதில் சொல்லிட்டு போக சொல்லுங்க அத்தை” ஜீவிதா கத்தினாள்.
அஜய் திரும்பி வந்து அவள் ஜடை சுருட்டி பிடித்து முறுக்கியவன், “என்கிட்ட கேட்டா தான் பதில் வரும்” என்றான்.
“அதுக்காக பூரண கும்ப மரியாதை கொடுத்தா பேச முடியும் அத்தை?” ஜீவிதா வலியிலும் பேசினாள்.
அஜய் இன்னும் வலுவாக முடியை இழுக்க, “இவர் தானே நேத்து என்கிட்ட பேசாதன்னு சொன்னார் அத்தை?” என்றாள் ஜீவிதா.
“படிக்கும் போது வந்து நொய் நொய்ன்னு கத்தினா” என்ற அஜய் முடியை விட்டான்.
“பாருங்க யூனிபார்ம் கூட மாத்தலை. கால்ல இருக்குற சாக்ஸை கூட உருவி போட முடியாதா. ஒரு டிசிபிளின் இல்லை. நல்ல பழக்க வழக்கம் இல்லை. வாய் மட்டும் எட்டூருக்கு போகும்” முகத்தை சுளித்து கொண்டு அஜய் சொல்ல,
ஜீவிதா உதடு பிதுக்கி அழுகைக்கு தயாரானாள்.
“ஷ்ஷ்ஷ் அழுத கொன்னுடுவேன். எல்லோரையும் ஏய்க்கற மாதிரி என்கிட்ட நடக்காது”
“விடு அஜய். இப்போ பண்ணிடுவா” என்ற சகுந்தலா அவளுக்கு பூஸ்ட் கொண்டு வந்தார்.
“கல்பனா அத்தையை நல்லா ஏமாத்துறா, அங்கிள் அதுக்கு மேல செல்லம். ஹோம் ஒர்க் பண்ணாம போய் இவளால தாரணி இன்னைக்கும் திட்டு வாங்குனா. ஷட்டில் விளையாட போக கூடாது. மீறி போன பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக.
“வேணாம்ன்னா போ. ம்மா. அவளை அனுப்பி விடுங்க” என்று அஜய் அறைக்கு சென்றுவிட்டான்.
ஜீவிதா கோவமாக வீட்டுக்கு வந்தவள், “உன்னால தான் இன்னைக்கும் திட்டு வாங்கினேன். ஒழுங்கா உன் பிரென்ட்கிட்ட சொல்லி வை” என்று அக்காவிடம் கத்திவிட்டு, ஒரே மூச்சிலே முழு ஹோம் ஒர்க்கையும் முடித்தாள்.
பலராம் மகளின் படிப்பில் மகிழ்ந்து போனவர், அவளுக்கு படம் வரைய எல்லாம் உதவி செய்தார். இரவு உணவையும் அப்பாவையே ஊட்ட சொல்லி எழுதி முடித்தவள், “ப்பா வாங்க நாம ஷட்டில் விளையாட போலாம்” என்று நின்றாள்.
“இப்போ நேரம் என்னன்னு பார்த்தியா? ஒன்பதாக போகுது, தூங்க போ” என்று கல்பனா அதட்ட,
“ப்பா” என்று அப்பாவையே பார்த்து நின்றாள் பெண்.
“சரி சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும். பிள்ளை இவ்வளவு நேரம் படிச்சுது இல்லை” என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி மகளுடன் வந்தார்.
இவர்கள் பிளாக் முன் இருக்கும் இடத்திலே இருவரும் ஷட்டில் விளையாட, அந்த சத்தத்தில் அஜய் பால்கனி வந்து பார்த்தான்.
ஜீவிதா அவனை பார்த்தே இன்னும் ஜோராக விளையாடினாள்.
“ஹோம் ஒர்க் முடிச்சியா?” அஜய் சந்தேகமாக கேட்க,
“முடிச்சுட்டா அஜய். பாவம் இவ்வளவு நேரம் உட்கார்ந்து எழுதினா” என்றார் பலராம்.
“பெண்டிங் வைச்சா அப்படி தான் அங்கிள்” என்று அஜய் சொல்லி அறைக்குள் சென்றுவிட்டான்.