“சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது” என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர்.

“நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி இல்லையா? நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கிறீங்களா” என்று கடுப்பாகிவிட்டான்.

“நிஜமா தான் சொல்றியா?” என்று அப்போதும் கேட்க, பெண்ணின் புகைப்படத்தை எடுத்து காட்டினான்.

அரவிந்தனின் அப்பாம்மாவிற்கு மனவருத்தம். மகனிடம் முகம் கொடுத்து பேசவில்லை.

அறிவழகனின் உதவியை நாடினான் அரவிந்தன். “ப்ளீஸ் மாமா. பேசுங்க. எனக்காக” என்று வேண்டி கொண்டான்.

பெண்ணின் குடும்பம் பரிச்சயம் இருந்தது. நல்ல மாதிரி தான். குறை சொல்ல ஏதுமில்லை.

அன்று மகளுக்காக கேட்ட நேரம் அரவிந்தன் அவருக்கு கை கொடுத்தவன். இன்று அவனுக்காக அறிவழகன் தங்கை குடும்பத்திடம் பேசினார்.

ஒருவாறு இவர்கள் ஏற்றுக்கொள்ள, காதலிக்கும் பெண்ணின் பக்கம் முடியவே முடியாது என்று நின்றனர்.

 என்ன பேசியும், யார் சொல்லியும் அசையாது இருக்க, இறுதியாக தயாளனின் உதவியை நாடினான் அரவிந்தன்.

இன்று எல்லாம் அமர்ந்து பேச, மீனலோக்ஷ்னியை துரத்தி விட்டுவிட்டனர். “உன் அண்ணா லவ் பண்ணது தப்பில்லையாம். நான் அங்க இருக்கிறது தான் தப்பாமா? சின்ன பிள்ளை இதெல்லாம் கேட்க கூடாதுன்னு வெளியே அனுப்புறாங்க, அப்புறம் எதுக்கு எனக்கு கல்யாணம் பண்ண பார்த்தாங்களாம்” என்று வினயிடம் பொரிந்து கொண்டிருந்த நேரம் தான், வில்வநாதன் வந்தது.

பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் இருக்க, அவளின் மூலமே தண்ணீர், காபி எல்லாம் கொடுத்து, வெளியே அனுப்பிவிட்டனர். 

அதன் மூலமே வில்வநாதனை அறிந்து கொண்ட மீனலோக்ஷினி, தனியறையில் சுவற்றை பார்த்து அமர்ந்திருந்தாள்.

ஓர் ஆண் உடைந்தால் இப்படித்தான் இருக்குமா? 

யப்பா என்ன கோவம்?

சட்டுன்னு மாறிக்கவும் செய்றார்?

என்ன இருந்தாலும் தயாளன் மாமா அவருக்கு இப்படி பண்ணியிருக்க கூடாது!

அப்போ அவர் சின்ன பையனா தான் இருந்தார்ன்னு அப்பா சொல்லியிருக்கார். ஏத்துக்க முடியாம தானே போர்டிங் போனார். 

இத்தனை வருஷம் ஆகியும், அவரால அதுல இருந்து வெளியே வர முடியலையா?

அப்பா மேல ரொம்ப பாசமோ? அவருக்காகவாவது மாமா யோசிச்சிருக்கலாம்.

எனக்கெல்லாம் இப்படி நடந்திருந்தா? நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது பெண்ணிற்கு.

சும்மாவே நான் அப்பாம்மா கோண்டு. அவ்வளவு தான் ஆகியிருப்பேன். 

ஆனா மாமாவும் ரொம்ப அப்செட்டா தான் இருக்கார். பிரிஞ்சும் அப்படியே தான் இருக்காங்க. அதுக்கு சேர்ந்தே இருந்திருக்கலாம். இவராவது சந்தோஷமா இருந்திருப்பார்! என்று அவர்களை சுற்றியே நினைத்திருந்தாள்.

பானுமதி நேரம் சென்று கொண்டிருந்ததில், தானே கணவனுக்கு அழைத்தவர்,  “கூப்பிடுறேன்னு சொன்னீங்க” என்றார்.

தயாளன், “ஆஹ்ன் சொல்லு பானு” என்றார்.

“ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு. உங்க மகன் மேல இனி நான் கை வைக்கலை போதுமா?” என்றார்.

“அந்த வயசை எல்லாம் அவன் தாண்டிட்டான் பானு”

“வயசு எல்லாம் மத்தவங்களுக்கு தான். பெத்தவங்களுக்கு இல்லைங்க” பானு சொல்ல,

“ம்ம்ம். அதென்னமோ உண்மை தான்” என்றவர் மகனை நினைக்க, பானுமதி அவர் அமைதியானதில்,

“சாப்பிட்டீங்களா? அரவிந்தன் விஷயம் என்னாச்சு?” என்று கேட்டார்.

“நான் கிளம்பிட்டேன் பானு. நாளைக்கு தான் அவன்கிட்ட கேட்கணும்” 

“உங்க மகன் வரவும் அவனை விட்டாச்சு. பாவம் அவன்”

“சீக்கிரம் பேசி, அவனுக்கு முடிச்சு கொடுக்கணும்” என்றார் தயாளன்.

திரும்ப அவர் மௌனமாகிவிட, “டையர்டா இருக்கா? தூங்க போறீங்களா?” என்று கேட்க,

“ஆமா பானு. நாளைக்கு பேசுறேன்” என்று வைத்துவிட்டவர், அன்றிரவு முழுதும் தூங்கவில்லை.

விடியற்காலையில் தான் கண் அசந்தவர், ஒருமாதிரி சோம்பலுடனே அந்த நாளை கடத்தினார். அன்று மட்டுமில்லாமல் அந்த வாரம் முழுதும் அப்படி தான் சென்றது.

வில்வநாதன் அவரை பார்க்க வரவில்லை. போனிலும் அழைக்கவில்லை. “உங்களையும் எதாவது பேசிட்டானா? ஏன் உங்களை பார்க்க வரலை” என்று கணவரிடம் கேட்டார் பானுமதி.

“வேலை இருந்திருக்கும் பானு” என்று தயாளன் சொல்ல,

“அவனுக்கு வேலையா? எல்லாம் என் தலையில கட்டிட்டு ட்ரெக்கிங் போயாச்சு. என் முகத்தை கூட பார்க்கிறதில்லை. ஆனா இதுக்கெல்லாம் மட்டும் உங்க மகனுக்கு நான் வேணுமா?” என்று கணவரிடம் கடுப்படித்தார்.

“எப்போ கிளம்பினான்?” தயாளனுக்கு முகம் வாடி போனது. என்கிட்ட சொல்லாமலா?

“நேத்து நைட் தான். உங்களுக்கு சொல்ல கூட இல்லையில்லை. வரட்டும் அவனை பேசிக்கிறேன்” என்று கருவிக்கொள்ள,

“அவனை எதுவும் சொல்லாத பானு” என்று உத்தரவிட்டார் தந்தை.

“எல்லாம் அவனுக்கு இடம் கொடுத்து தான் தலையில ஏறி உட்கார்ந்திருக்கான்”

“ஏன் அப்படியே உட்கார்ந்தா தான் என்ன, நம்மால அவனை சுமக்க முடியாதா?”

“நீங்க சுமங்க, என்னால முடியாது” என்று பானுமதி சொல்லி வைத்துவிட,

தயாளன் உடனே தனபாலனுக்கு அழைத்துவிட்டார். ஓரிரு நாட்கள் சென்று பேசலாம் என்று நினைத்ததை இப்போதே பேசினார். மகன் தன்னை விட்டு தள்ளி சென்று விடுவானோ என்ற பயம் அவரின் நெஞ்சை கவ்வியது.

“எனக்கு கெஸ்ட் அவுஸ் வேணும் மாமா” என்றார் எடுத்ததும்.

“உடனே நீங்க குடிவர ரெடி பண்ணிடுறேன் மாப்பிள்ளை. ஆளுங்க ஷிப்ட் பண்ணிடுவாங்க. காலையில நாம பால் காய்ச்சிடலாம்” என்றார் அவர்.

“பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு மாமா? சும்மா குடி வரேன்”

“புது வீடு மாப்பிள்ளை. நாளும் நல்லா இருக்கு” என்றவர் அதற்கான வேலையில் இறங்கியதோடு, வீட்டினருக்கும் விஷயத்தை தெரிவித்தார்.  

பானுமதிக்கு கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது. இனி தினமும் கணவனை பார்க்கலாம். அவருடன் இருக்கலாம். அவரை கவனித்து கொள்ளலாம். மனைவியாக மகிழ்ந்தார்.

என்னதான் அவர்கள் கல்லூரியில் தயாளன் இருந்தாலும், எப்போதாவது தான் பானுமதி சென்று பார்ப்பார். இனி அந்த தூரம் இல்லை. 

பானுமதி உற்சாகத்துடன் எல்லா ஏற்பாட்டையும் பார்த்தார். சிறு பூஜையும் வைத்தவர், ஓர் இரவிலே வீட்டிற்கான பொருட்களை இறக்கி, அடுக்கிவிட்டார்.

கஜலக்ஷ்மி வெளியே சாதாரணமாக இருந்தாலும், உள்ளுக்குள் ஓர் நிறைவு. மருமகன் பக்கத்திலே இருப்பார் என்ற ஆசுவாசம், நிம்மதி. 

பேரனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, “நல்லது” என்று முடித்து கொண்டான் அவன்.

தயாளன் குடிவந்த இரண்டாம் நாள் தான் மகன் வீடு திரும்பினான். கேட்டிற்குள் கார் நுழைந்ததும் தானே கண்கள் பக்கத்து வீட்டை பார்த்தது.

தயாளனும், பானுமதியும் மாடி செடிகளுக்கு தண்ணீர் விட்டபடி ஏதோ பேசி கொண்டிருந்தனர்.

விடாது ஹாரன் அழுத்தியவன், அவர்கள் இவன் பக்கம் திரும்பவும், கண்டு கொள்ளாதது போல் வீட்டிற்குள் சென்றான்.

“அவ்வளவும் சேட்டை” என்று பானுமதி கடிய, தயாளனின் முகத்தில் ஓர் மலர்வு.

தனியாக சமைக்க ஆள் வேண்டாம் என்று இங்கிருந்தே உணவு சென்றது. கல்லூரி செல்ல கார் தயாராக நின்றது.

தயாளன் வீட்டில் இருக்கும் நேரம் தனபாலன், பானுமதி யாரேனும் ஒருவர் அவருடன் இருந்தனர். காலை உணவுடன் மகன் வருவானா என்று தந்தை வழி பார்த்திருக்க, அவனோ அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான்.

கோவமா இருக்கானா? என்று யோசித்தவர், அவனுக்கான நேரம் கொடுத்து அமைதியாக இருந்தார்.

அன்றிரவு பானுமதி மகன் வரவும், “யாரோ என்கிட்ட சாரி கேட்க போறதா கேள்வி பட்டேன்” என்றார். தயாளன் சொல்லியிருக்க மகனை வம்பிழுத்தார் பானுமதி. 

மகன் தோள் குலுக்கி கொண்டவன், “அவங்க என்னை அடிச்சது. எப்போ மறக்குதோ அப்போ கேட்கிறேன் தாத்தா” என்றான்.

“நீ பேசினது தப்புன்னு உனக்கு இன்னும் தெரியலையா” 

“அந்த தப்புனால தான் அவங்க வீட்டுக்காரர் பக்கத்துலே வந்திருக்கார்” என்றான் மகன்.

“அப்படின்னு அவர் உனக்கு சொன்னாரா? நீ எல்லாம் திருந்த மாட்ட. உனக்காக தான் அவர் வந்தது”

“சரி அப்படியே இருக்கட்டும், அதுக்காக நான் இப்போ என்ன பண்ணணுமாம்”

“அவரை போய் பார்த்து பேசிட்டு வா”

“இது எங்களோட பெர்சனல். நீங்க பேச கூடாது” என்றான் மகன் சீண்டலாக.

“நான் இல்லாம உங்களுக்குள்ள என்ன பெர்சனல் வேண்டிக்கிடக்கு?” பானுமதிக்கு கொதிப்பு.

“உங்க இரண்டு பேருக்குள்ள என்ன பெர்சனலோ, அதுதான் எங்களுக்குள்ளும்” என்று புருவம் ஏற்றி இறக்கியவன், விசிலடித்தபடி மேலேறினான்.

“எத்தனை நாள் ஆனாலும், நமக்கு திருப்பி கொடுக்காம இவன் அடங்கிறதில்லை” என்று அம்மா பொங்க,

“அப்படி இல்லைன்னா உங்களை எல்லாம் என் பேரன் எப்படி ஜெயிக்கிறது” என்று நொடித்து சென்றார் பாட்டி. 

தயாளன் அருகில் வந்ததில் எல்லாம் சரியாகிவிடவில்லை என்றாலும், ஏதோ ஒரு திருப்தி.

அதன் பின்னான நாட்கள் கொஞ்சம் இலகுவாக செல்ல, அப்பாவும் மகனும் மட்டும் சந்தித்து கொள்ளவில்லை.

இரும்புத்திரை போல் இல்லாமல், ஏதோ ஓர் பனித்திரை. 

அந்த வாரம் தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு சென்றான் வில்வநாதன். பூஜை முடிய மீனலோக்ஷ்னி மலர்வுடன் இவர்களை நோக்கி வந்தாள்.

“அடடே உள்ளூர் அழகி. வாங்க, வாங்க” என்று கஜலக்ஷ்மி வரவேற்க,

“பாட்டி” என்று மூக்கை சுருக்கியவள், பெரியவர்களிடம் பேசிவிட்டு,  மொபைல் பார்த்திருந்த வில்வநாதன் முன் நின்றாள்.

இனி எப்போதும் அன்றைய நாளின் வில்வநாதனை பார்க்கவே கூடாது என்று கடவுளிடம் மனமார வேண்டி கொண்டவள், நிமிர்ந்து தன்னை பார்த்தவனிடம் “என்னோட பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ண சென்னை போறேன்” என்றாள்.

“என்ன திடீர் அதிசயம்” அவன் புருவம் தூக்க, 

“தெரியலை. போகணும்ன்னு தோணுது” என்றாள் பெண்.

“முதல்ல முடியாது சொன்ன?” 

“இப்போ உங்க சொல் பேச்சு கேட்கணும் தோணுச்சு” என்றாள்.

“அதை விட இது தான் நம்புற மாதிரி இல்லை. கோவில்ல வைச்சு பொய் பேச கூடாது”

“நான் ஏன் பொய் சொல்ல போறேன். நீங்க என்னை சாமியோட கோர்த்து விடாதீங்க” 

இன்னமும் அவன் பார்வை மாறாமலே இருக்க, “ஏன் இப்படி? நான் அந்தளவு எல்லாம் சொல் பேச்சு கேட்காத பொண்ணு இல்லை” என்றாள்.

“சரிங்க பாண்டி நாட்டு மீனம்மாவே. நல்ல முடிவு. ஆல் தி பெஸ்ட்” என்றான்.

“நன்றி, நன்றி” என்றவள், அவனின் புன்னகை முகத்தில் தானும் மலர்ந்து போனவளாக, பெரியவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள்.

“இப்போ நீ சொன்னதை நான் ஒத்துக்கிறேன்” என்றார் கஜலக்ஷ்மி.

“என்ன பாட்டி” என்று பேரன் கேட்க,

“இவ உங்க அப்பா மாதிரி தான்னு” என்றார்.

பேரன் கேள்வியாக பார்க்க, “தனக்கு தேவையானதை அழுத்தமா சாதிச்சிக்கிறது மட்டுமில்லை, அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் விட்டு கொடுக்கவும் செய்றாளே!” என்றார்.

“என்னோட முடிவுல தான் நிப்பேன்னு இல்லாம, ஏதோ ஓர் இடத்துல அந்த முடிவை மாத்திக்கிறதுலயும் இவ உன் அப்பா மாதிரி தான்” என்றார் கஜலக்ஷ்மி.