“எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு” என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன்.
“இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க ஏக்கம், எதிர்பார்ப்புன்னு சொல்லலாம். ம்ஹ்ம். எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா” என்றார்.
“உங்களுக்கு அண்ணா மட்டும் தானே?” பானுமதி கேட்க,
“இல்லை. தங்கச்சியும் உண்டு. ஆனா இப்போ இல்லை. அவளுக்கு அஞ்சு வயசா இருக்கும் போது உடம்பு முடியாம”
“எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். எப்போ பாரு அவளோடே இருப்பேன். கொஞ்சறது, விளையாடுறது, அவளை ஸ்கூல் கூட்டிட்டு போறதுன்னு எல்லாம் அவ்வளவு இஷ்டபட்டு செய்வேன். திடீர்ன்னு அவ இல்லாம போனது எனக்கு தாங்க முடியலை”
“அப்போ பாட்டி சொன்னாங்க. உனக்கு அவ மகளா வந்து பிறப்பான்னு. ம்ம். எனக்கு பொண்ணு வேணும்” என்றார்.
பானுமதிக்கு வெட்கமும், வருத்தமும் சேர்ந்தே வந்தது. அந்த நாளில் அவருக்கு அது கஷ்டமாகவும் தெரியவில்லை.
நாலு தலைமுறையா பொண்ணு தான் பிறந்திருக்கோம். எனக்கும் பொண்ணு தான் பிறக்கும் என்று நினைத்து கொண்டார்.
இரண்டாம் குழந்தை கிடையாது என்ற அவரின் பாரம்பரியம் அவருக்கு மறந்து போனது. தயாளனுக்கும் அதை சொல்லவில்லை.
திருமணம் ஏற்பாடான நேரம், கஜலக்ஷ்மி சொல்லிவிட்டார். தயாளனுக்கு சுருக்கென இருந்தது. பானுமதி ஏன் சொல்லலை என்றும் நினைத்து கொண்டார்.
திருமணம் முடிந்து, வில்வநாதனும் பிறந்துவிட்டான். மகனை கையில் ஏந்தியதற்கு இன்றளவும் பெருமை, பூரிப்பு தான். ஆனால் மகள் இல்லை என்பது அவரின் அடிமனதை குடைய ஆரம்பித்துவிட்டது.
இத்தனை வருட ஏக்கத்தை, ஆசையை சட்டென்று தூக்கியெறிய முடியவில்லை.
மனைவியிடம் பேசினார், பெண் குழந்தையை நினைவு படுத்தினார். பானுமதிக்கு அப்போது தான் நிஜம் உரைத்தது.
கணவரின் ஆசை மகனை பார்த்ததும் மறைந்து விட்டது என்று நினைத்திருந்தவருக்கு இது அதிர்ச்சி தான்.
“அம்மாகிட்ட பேசுறேன்” என்று சொன்னார்.
“பேசு. உனக்கு கஷ்டமா இருந்தா நான் பேசுறேன்” என,
“இல்லை நான் பேசுறேன்” என்றுவிட்டார் பானுமதி.
நாட்கள் கடந்தும் அவருக்கு கஜலக்ஷ்மியிடம் இது பற்றி பேச தைரியம் வரவில்லை.
இத்தனை தலைமுறைகளாக, “பொம்பிளைங்க எந்த பாரம்பரியத்தை காப்பாத்திடுறாங்கன்னு நாங்களும் பார்க்க தானே போறோம்” என்ற நறுக்கான, நக்கலான, நம்பிக்கையில்லா, கீழ்மை படுத்தும் வார்த்தைகள், வழி வழியாக ஒவ்வொருரையும் தொடர்ந்து கொண்டிருந்தது.
அவர்களின் குடும்பத்தில் இன்னமும் இவர்களை மௌனமாக கண்காணித்து கொண்டு தானிருக்கின்றனர்.
கஜலக்ஷ்மிக்கு, அவரின் அம்மா, பாட்டிக்கு இருந்த அதே வைராக்கியம் பானுமதிக்கும் உண்டு எனும் போது அவருக்கே, அதற்கான எண்ணம் எழவில்லை.
எந்த பூதம் உள்ளே நுழைந்ததோ, எந்த நொடியில் மாறினாரோ தயாளனுக்கு தெரியாமல் குழந்தை நிற்காது இருக்க, மாத்திரை எடுத்து கொண்டார்.
வீட்டோடு மருமகன் என்ற முறையில், சில சில கசப்பான சம்பவங்களை அவ்வப்போது எதிர்கொண்டு, பொறுத்து போன தயாளன், அவரின் அண்ணாவிற்கு பணம் கொடுத்தது தெரிந்து பொங்கிவிட்டார்.
“எனக்கு தெரியாம, நான் சொல்லியும் அவருக்கு பணம் கொடுத்தியா?” என்று கடுமையான கோவம் கொண்டவர், மனைவியிடம் சில மாதமே பேசவில்லை.
“நீங்க ஏன் அம்மாகிட்ட பேசுறதில்லை. பேசுங்க டாட்” என்று வில்வநாதன் சொல்லுமளவுக்கு உறுதியாக இருந்தார் மனிதர்.
பானுமதி அவரின் கோவத்தை கரைக்க படாத பாடுபட்டு போனார். “இனி உங்களுக்கு தெரியாம ஒன்னுமே பண்ண மாட்டேன். ப்ளீஸ்ங்க. என்னை நம்புங்க” என்று சத்தியம் செய்து, போராடி தான் அவரை பேச வைக்க வேண்டியிருந்தது.
அத்தோடு அவர் மாத்திரை எடுப்பதையும் நிறுத்திவிட்டார். உள்ளுக்குள் ஒரு நில அதிர்வு வெடித்தது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
ஆனால் காலம் அவருக்கு சாதகமாக இல்லாமல் போனது. அவரின் குடும்ப மருத்துவர் மூலம் விஷயம் தயாளனுக்கு தெரிந்துவிட்டது.
மனிதர் கோபப்படுவதை விட, பாதிக்க பட்டது தான் அதிகம். சில நாட்கள் அதிலே உழன்றவர், இறுதியாக முடிவெடுத்தார்.
“என் காதலுக்கு நான் உண்மையா இருந்தேன். ஆனா உன்னோடது காதலான்னே எனக்கு சந்தேகமா இருக்கு. இனியும் நாம சேர்ந்து இருக்கிறது சாத்தியமில்லை” என்று நிலையாக நின்றுவிட்டார்.
“என் மகனை என்னோட கூட்டிட்டு போகணும்ன்னு தான் கழுத்து வரைக்கும் ஆசை. ஆனால் உனக்காக, உன் குடும்பத்துக்காக அவனை உங்ககிட்ட விட்டுட்டு போறேன். பத்திரம்” என்று கிளம்பிவிட்டார்.
அப்போதும் அவரால் மனைவி, மகனை விட்டு தள்ளி இருக்க முடியாமல் அதே ஊரில், அவர்கள் கல்லூரியில் தான் பணியை தொடர்ந்தார்.
இன்று வரையிலும் அப்படி தான் இருக்கிறார். ஆனால் அது கணவனாக சரி, தந்தையாக பெரிய தவறு என்பதை மகன் காட்டி கொண்டே இருக்கிறான்.
அந்த வயதிலும் பாதிக்கப்பட்டான். இப்போதும் அதே பாதிப்பில் தான் இருக்கிறேன்! என்பதை அவரின் நடுமண்டையில் இறக்கி விட்டு சென்றிருக்கிறான்.
பிரிவு பழகியிருக்கும், ஏற்று கொண்டிருப்பான் என்று நினைத்ததை உடைத்து சென்றுவிட்டான்.
“நீங்க என் கையை விட்டுட்டு போன வயசுலே தான் நான் இன்னமும் நின்னுட்டு இருக்கேன்” என்று தன் மனதை, அந்த காயத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறான்.
வில்வநாதன் கிளம்பிய பின், தயாளனுக்கு அங்கிருக்க கால்களும் ஒத்துழைக்கவில்லை. மனமும் ஒத்துழைக்கவில்லை. சோர்வு அவரை அதிகளவில் ஆட்கொண்டது
மகனின் வார்த்தைகளும், அவனின் முகமுமே அவர் கண்ணுக்குள் நிற்க, “நான், நான் கிளம்புறேன்மா. நீ வீட்ல சொல்லிடு” என்று மீனலோக்ஷ்னியிடம் சொன்னார்.
அவளுமே, வில்வநாதன் சென்ற பாதையையவே பார்த்திருந்தவள், தயாளனின் வார்த்தைகளில் “எப்ப, எப்படி போவீங்க மாமா. நான் அரவிந்தனை உங்களை விட சொல்றேன்” என்றாள்.
“இல்லை. இருக்கட்டும்மா. அவங்க பேசிட்டு இருப்பாங்க. தொந்தரவு பண்ண வேண்டாம்” என்றார். யாரின் முகத்தை பார்க்க கூட அறவே விரும்பவில்லை.
அரவிந்தன் தான் அழைத்து வந்திருக்க, எப்படி போவார்?
“மாமா. ப்ளீஸ். நான் டிராப் பண்றேன்” என்றாள் பெண்.
தயாளனுக்கு மறுக்க எல்லாம் தோன்றவில்லை. தலையசைக்க, வேகமாக உள்ளே சென்று மின்னலாக வந்தவள், அவளின் ஸ்கூட்டியை எடுத்தாள்.
அவளுக்கு பின்னால் அரவிந்தன் வந்து பார்க்க, இருவரும் சாலைக்கு சென்றிருந்தனர்.
என்னாச்சு? என்ற குழப்பத்தோடு நின்றான்.
இருள் சூழ்ந்த சாலையில், வண்டியின் வெளிச்சம் மட்டுமே. அந்த வெளிச்சத்தில் இருவருக்கும் ஒருவனே தோன்றினான்.
சில நிமிடங்களில் எத்தனை முகம் காட்டிவிட்டான்!
மகனை நினைத்து தயாளனுக்கு நெஞ்சம் அடைத்தது. எங்கோ, எதுவோ அதிகமான வலியை கொடுக்க, முகம் சுருக்கி வேதனை கொண்டார்.
அவரின் கைகள் தன்னிச்சையாக பெண்ணின் தோளை பற்றி கொள்ள, மீனலோக்ஷ்னி படபடத்து போனாள்.
“என்ன மாமா?” என்று வண்டியை நிறுத்திவிட,
“ஒன்னு, ஒன்னுமில்லைமா. கொஞ்சம் தடுமாறிட்டேன்” என்று சமாளித்து கொண்டார் மனிதர்.
சிறு பெண்ணை பயமுறுத்துகிறோம் என்று சுதாரித்து கொண்டவரை கண்ணாடி வழியே அவ்வப்போது பார்த்து கொண்டாள் பெண்.
அவரின் இருப்பிடத்தின் முன் வண்டியை நிறுத்த, தயாளன் இறங்கி கொண்டவர், “தேங்க்ஸ்மா” என்றார்.
மீனலோக்ஷ்னிக்கு அவரை தனியே விட்டு செல்ல தயக்கம். “நீ கிளம்பும்மா. சாரி என்னால இந்த நேரத்துக்கு நீ வர வேண்டியதா போச்சு. கூட யாரையாவது அனுப்பவா?” என்று பார்க்க,
“இல்லை. இருக்கட்டும் மாமா. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றவள், உடனே அரவிந்தனுக்கு அழைக்க போக, அவனே அங்கு வந்துவிட்டான்.
“ஏன் திடீர்ன்னு கிளம்பிட்டீங்க. சார் எல்லாம் ஓகேவா?” என்று தயாளனிடம் கேட்டான் அரவிந்தன்.