தென் பாண்டி மீனாள் 8

அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.

அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.

தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே!

பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது.

அங்கு தான் தயாளனை சந்தித்தது. சக ஊழியர்களாக பழகியவர்களுக்கு, சில மாதங்களில் மற்றவர் மேல் காதல் மலர்ந்தது.

தயாளன் அவருக்கு காதலை சொன்ன நொடி, பானுமதி தன்னை பற்றி சொல்லிவிட்டார். தனக்கு அவர் முதலாளி என்பது, தயாளனுக்கு அதிர்ச்சி தானே தவிர, காதலை விடும் எண்ணமில்லை.

“எனக்கு ஒரே கண்டிஷன் மட்டும் தான். எந்த சூழ்நிலையிலும் என்னை உங்க பிஸ்னஸ்க்குள்ள கொண்டு வர கூடாது” என்றார் தயாளன் தெளிவாக.

“கூட இன்னொரு ஆசை இருக்கு” என்று அதையும் சொல்ல, பானுமதிக்கு அன்றைய நாளில் அது பெரிதாக தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே ஏற்று கொண்டார்.

மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த தயாளனுக்கு அம்மா மட்டுமே. அண்ணா, அண்ணி குழந்தைகள் உண்டு.

இருவரின் ஆழ்ந்த அன்பு இரு குடும்பங்களையும் ஒத்துக்கொள்ள வைத்தது. திருமணம் முடித்து, தயாளனுக்காக அலுவலகத்திலே பணியை தொடர்ந்தனர்.

பானுமதி கருவுற, மகளை தனியே விட முடியாமல் கஜலக்ஷ்மி மருமகனிடம் பேசினார். தொழில் பார்க்கும் கடமையும் பானுமதிக்கு உண்டே.

ஆளுக்கொரு இடத்தில் இருப்பதா என்று யோசித்து, தயாளன் மனைவிக்காக ஊருக்கே, வீட்டுடன் மருமகனாக வந்தார். அங்கே இருக்கும் அலுவலகத்தில் பணியை தொடர்ந்தார்.

நான்கு தலைமுறைக்கு பின் வில்வநாதன் பிறக்க, கொண்டாட்டமோ கொண்டாட்டம். தயாளன் மகனை கையில் ஏந்திய நொடி, சிலிர்த்து போனார்.

வில்வநாதன் பிறந்த சில மாதத்தில், பானுமதி தொழிலுக்குள் நுழைந்தார். அம்மாவின் இடத்தை நிரப்பும் பொறுப்பை தயாளன் ஏற்றார். வேலையை விட்டார்.

“ஏன் மாப்பிளை இப்படி? நீங்க கொஞ்ச நேரம் ஆபிஸ் வந்தா கூட போதும்” என்று கஜலக்ஷ்மி பேசி பார்க்க,

“இல்லை அத்தை. நானே அட்வான்டேஜ் எடுக்க கூடாது” என்று முடித்து கொண்டார் தயாளன்.

வில்வநாதனின் பொழுதுகள் எல்லாம் அப்பாவின் மடியில், அவரின் தோளில் தான். அம்மாவை விட, அப்பாவிடம் ஒட்டுதல் அதிகம்.

கஜலக்ஷ்மி, தனபாலன் சொல்லவே வேண்டாம். செல்லமோ செல்லம். பானுமதி மட்டுமே அவனிடம் கண்டிப்புடன் இருப்பது.

அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பொழுது, தயாளன் மேற்படிப்பை தொடர்ந்தார். மகனுக்காக ஆரம்பித்த கல்லூரி அவரை ஈர்த்தது.

எல்லாம் நன்றாக சென்ற நேரம் தயாளனின் அண்ணா வந்தார். பணம் கேட்டார். பிஸ்னஸ் செய்ய போகிறேன் என்றார்.

“நானே இங்க எந்த சலுகையும் எடுத்துகிறதில்லைண்ணா. ப்ளீஸ் கேட்டு, என்னை சங்கட படுத்தாதீங்க” என்றார் தயாளன்.

“நீ மட்டும் வசதியா, பணக்காரனா வாழணும் இல்லை” என்று ஏதேதோ பேசி, தம்பியிடம் சண்டையிட்டவர், நேரே தம்பி மனைவியை சந்தித்து பேசினார்.

பானுமதிக்கு செய்யும் ஆசை வந்தது. “நம்ம ஷேர்ஸ் கூட அவர் வாங்கிக்கலைம்மா. இதாவது செய்யணும். அவர் அண்ணா நல்லா இருந்தா அவருக்கு சந்தோஷம் தானே” என்று அம்மாவிடம் பேசினார்.

கஜலக்ஷ்மிக்கு மருமகன் மேல் எக்கச்சக்க மரியாதை. “செய். செய்” என்றார் உடனே.

தனபாலன் மட்டுமே, “நீ மருமகன்கிட்ட கேட்டுட்டு செய் பானு” என்றார்.

பானுமதியும் கணவரிடம் கேட்க, “இல்லை பானு. அப்புறம் அண்ணாக்கு அதுவே பழக்கம் ஆகிடும்” என்று முடித்து கொண்டார்.

தன்னை மீறி பானு செய்ய மாட்டார் என்று நினைக்க, பானுமதிக்கு கணவரின் கொள்கை மறந்து போனது போல. சில பல லட்சங்களை தூக்கி கொடுத்துவிட்டார்.

அங்கு ஆரம்பித்தது முதல் பிரச்சனை.

அதனை தொடர்ந்து வேறு சிலதும் நடந்துவிட, பானுமதி இதை, இந்த பிரிவை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

தயாளனின் முடிவை அவரால் இன்றளவும் ஜீரணிக்க இயலவில்லை என்பது அவர் மட்டுமே அறிந்த ஒன்று.

அப்படி இருக்க, மகனே விவாகரத்து பற்றி சாதாரணமாக சொல்ல, பானுமதிக்கு எப்படி தாங்கும்?

அடித்துவிட்டார். நீண்ட வருடங்கள் சென்று இந்த அடி.

அவனின் பள்ளி படிப்பின் நேரம் எதற்கோ அடித்தது. அன்று தயாளனின் கோவம். “இனி வில்வா மேல கை வைச்ச அவ்வளவு தான். பார்த்துக்கோ” என்று கடுமையாகவே எச்சரித்திருந்தார்.

இன்று அடித்தது தெரிந்தால்? பானுமதியை கலைப்பது போல், கார் ஒன்று சர்ரென கேட்டை விட்டு பறந்து கொண்டிருந்தது.

‘மகனின் கார். எங்க போறான்? அவர்கிட்ட இருக்குமா? எவ்வளவு வளர்ந்தாலும், இவன் மட்டும் மாறமாட்டான்’ மெல்லிய புன்னகையுடன் நின்றார் பானுமதி.

கீழே தனபாலனை சண்டை பிடித்து கொண்டிருந்தார் கஜலக்ஷ்மி.

“என்ன சொன்னீங்க, இப்போ என்ன சொன்னீங்க?” என்று நம்ப முடியாமல் கேட்டார் கஜலக்ஷ்மி.

“நான் தான் சொன்னேன் லக்ஷ்மி. பேரன் சாதிச்சிடுவான்னு நினைச்சேன். ஆனா இப்படி போகும்ன்னு நினைக்கலை” என்றார் பெரியவர்.

“உங்க மருமகன் பக்கத்துலே வேணும்ன்னா நீங்க பேசுறது? எதுக்கு என் பேரனை உள்ள இழுத்து விடுறீங்க? உங்க மககிட்ட அடி வாங்குற வயசா அவனுக்கு? எப்படி அடிச்சுட்டா. கன்னமே சிவந்து போச்சு” என்று அங்கலாய்த்து கொண்டார் பாட்டி.

“லக்ஷ்மி. கோவத்தை குறைச்சு நிதானமா யோசிம்மா. நம்ம சம்மந்தி கடைசி நேரத்துல நம்மகிட்ட கேட்டது என்ன, ‘இனி என் மகனுக்கு எல்லாம் நீங்க தான். அவனை விட்டுடாதீங்கன்னு தானே?” என்று நினைவு படுத்த, கஜலக்ஷ்மிக்கு சுருக்கென இருந்தது.

“நம்ம வீட்ல நடக்கிற முதல் கல்யாணம், கடைசி கல்யாணம் எல்லாம் பேரன்து மட்டும் தான். அப்பாவா அவருக்கும் மகன் கல்யாணத்தை முன்ன நின்னு செய்யணும்ன்னு ஆசை இருக்கு. அதான் ஒரு வீட்ல இல்லைனாலும் பக்கத்துலவாவது இருக்கட்டும்ன்னு யோசிச்சோம்”

“கூட அவரை தனியா விடறதும் எனக்கு சரியா படலை. ஓர் வயசுக்கு மேல குடும்பத்தோட இருக்கிறது தான் பாதுகாப்பு” என்றார் பெரியவர்.

“அவர் பிடிவாதத்துக்கு நாம என்னங்க பண்ண முடியும்?”

“அதுக்காக அப்படியே விட்டுட சொல்றியா லக்ஷ்மி. அவங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள எப்படியோ போகட்டும். நம்ம பேரனுக்கு அவர் அப்பா.  நமக்கு அவர் ரொம்ப நல்ல மருமகன். நாம அதை மட்டும் பார்த்தா போதும்” என்றார் கண்டிப்புடன்.

“நமக்கு நல்ல மருமகன் தான். ஆனா என் பேரனை ஏங்க விட்டுட்டாரே! நாம எல்லாம் அவனோட இருந்தாலும் அவனுக்கு அவர் தான் வேணும். வீட்டை விட்டு அவர் வெளியே போன கொஞ்ச நாள்ல என் பேரன் வீட்டை விட்டு போயிட்டான்”

“பாருங்க இப்போ கூட அம்மா அடிச்சதுக்கு அவரை தேடித்தான் போறான். நம்மளை கவனிக்க விட்டானோ? ஐஸ் வைக்க கூட நிக்கலை” என்றார் கண்ணீர் துளிர்த்த கண்களுடன்.

உண்மை. அப்பாவை தேடி தான் மகன் சென்று கொண்டிருக்கிறான்.

என்னமோ இத்தனை நாள் தலையில் இருந்த கிரீடம், அம்மாவின் அடியில் கீழே விழுந்துவிட்டதாக கோவம்.

‘என்னை அடிப்பாங்களா அவங்க? என் அப்பாகிட்ட சொல்றேன், அப்போதான் அவங்களுக்கு புரியும்’ வேகமாக கல்லூரிக்கு செல்ல, அங்கு தயாளன் இல்லை.

கோபத்துடன் போன் எடுத்து தந்தைக்கு அழைத்தால், “நான் இங்க அறிவழகன் வீட்ல இருக்கேன்” என்று சொன்னதும், அங்கேயே சென்றான் மகன்.

அவர்கள் காம்பவுண்டிற்குள் வேகமாக நுழைந்தவன், எதிரில் நின்ற உருவத்தில் சட்டென பிரேக்கை மிதித்தான்.

கார் இழுத்து பிடித்து நின்றுவிட்டாலும், வழியில் நின்ற மீனலோக்ஷ்னி “ஆஹ்” என்று அலறிவிட்டாள்.

போன் பேசி கொண்டிருந்தவளுக்கு, திடீரென வில்வநாதனின் கார் வேகமாக வந்து நின்றதில், உயிர் போய் உயிர் வந்தது. அவளுக்கும், காருக்கும் ஓர் அடி தான் இடைவெளி.

வில்வநாதன் இறங்கி வர, “இப்படியா வேகமாக வரது. ஜஸ்ட் மிஸ். இடிச்சிருப்பீங்க” என்று பயத்தில் வெலவெலத்து போனாள் பெண்.

“இடிக்கலை இல்லை, அப்பறம் என்ன?” வில்வநாதன் கேட்டுவைக்க,

“என்ன இவ்வளவு கேர்லஸ்ஸா பதில் சொல்றீங்க? இடிச்சிருந்தா, பாருங்க என் போன் கீழே விழுந்திடுச்சு” என்று அதனை எடுக்க,

“உள்ள இருக்கிற என் அப்பாவை வெளியே வர சொல்லு” என்றான் அவன்.

“நீங்க வீட்டுக்குள்ள வாங்க” என்று பெண் அழைக்க,

“ம்ப்ச். அவரை வரச்சொல்லு போ” என்று சிடுசிடுத்தான்.

மீனலோக்ஷ்னி ரொம்ப தான் என்று நொடித்தபடி தயாளனிடம் தகவல் சொன்னாள். உடன் இவளின் வீட்டினரும் வெளியே வந்துவிட, பெண்ணை பார்த்து அப்படி ஒரு முறைப்பு.

அரவிந்தனின் குடும்பமும் அங்கு தானிருக்க, உள்ள வாங்க என்று உபசரித்தனர்.

“இல்லை இருக்கட்டும்” என்ற வில்வநாதன், அரவிந்தனுக்கு கண் காட்டினான். அவன் புரிந்து கொண்டு வீட்டினரை உள்ளே அழைத்து செல்ல, அப்பாவும் மகனும் மட்டும் நின்றனர்.

“நாம கிளம்பலாமா?” என்று அப்பாவிடம் கேட்க,

“ஒரு அஞ்சு நிமிஷம். உன் அசிஸ்டன்ட் கல்யாண விஷயமா பேச வந்தேன். முடிச்சுட்டு வரவா?” என்று கேட்டார் தயாளன்.

“என்னை தவிர ஊர்ல இருக்கிற எல்லோரும் உங்களுக்கு முக்கியம் இல்லை” மகன் பாய்ந்துவிட்டான்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றவனின் கை பிடித்தவர், “என்ன கோவம், தேடி இங்கேயே வந்திருக்க?” என்று கேட்க,

“ஏன் நான் இங்க வர கூடாதா?” என்றான் மகன் அதற்கும்.