“போடா” என்று கத்தியவர், “ப்பா. நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. அவனை அவரோட பேச விடுங்களேன்” என்றார்.
“பேசினா மட்டும் என் பேரனுக்கு போனது எல்லாம் கிடைச்சுடுமா” என்று கஜலக்ஷ்மி கோவத்துடன் கேட்டார்.
“ம்மா. இதுக்கு தான் நான் உங்களோட பேசலை” என்ற பானுமதி, தயாளனை நினைத்து கவலை கொண்டார்.
என்னமோ சமீப நாட்களில் அவர் தளர்வது போல் உணர்கிறார். தனியாக இருப்பதாலா, இல்லை வயது கூடுவதாலா, இல்லை மகனை தேடுகிறாரா? தெரியவில்லை.
மகனும் அதை உணர்ந்து தான், இந்த முடிவை எடுத்திருப்பானோ? பானுமதி சுருங்கிய முகத்துடன் கிளம்பினார்.
“நைட் பேரன்கிட்ட பேசணும், நேரத்துக்கு வந்திடு” என்று கஜலக்ஷ்மி நினைவு படுத்தினார்.
“வரேன்ம்மா” என்று மகள் செல்ல, “என்னாச்சு? ஏன் பானு சுருங்கிறா” என்று தனபாலன் கவலை கொண்டார்.
“உங்க மருமகனுக்காக இருக்கும்” என்று கஜலக்ஷ்மி முடித்தார்.
காலை நேரம் என்பதால் கல்லூரி வளாகம் நிரம்பி வழிந்தது. மாணவர்களிடையே நீந்தி சென்றது லேண்ட் குரூஸர் கார்.
வேகத்தை மிகவும் குறைத்து, நாளைய தலைமுறைகளை அவதானித்தபடி சென்றான் வில்வநாதன்.
அரவிந்தன் அவனுக்கு முன் அங்கிருக்க, இருவரும் தலைமை கட்டிடத்திற்கு நடந்தனர்.
வில்வநாதனை எல்லோருக்கும் தெரியும் என்பதால், மாணவர்களின் காலை வணக்கத்தை ஏற்றபடி சென்றான்.
அந்த வயதிற்கே உரிய கமெண்டுகள் ஆங்காங்கு ஒலிக்க, “அவரை பத்தி தெரியாம பேசுறாங்க. பத்து நிமிஷம் அவர்கிட்ட மாட்டினா தான் தெரியும்” என்று மீனலோக்ஷ்னி தூரத்தில் இருந்து பார்த்தே சொல்லி கொண்டாள்.
அவளின் எண்ணப்படி அதே கல்லூரியில் மாஸ்டர் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறாள்.
இன்றைக்கு புதிதான பிரின்ஸிபல் வருகிறார். ‘சுந்தவரவள்ளி மேடம் அவரின் முன்னாள் துறை தலைவராம். அதான் இவரே நேர்ல வந்திருக்கார்’ என்பதை அரவிந்தன் மூலம் தெரிந்து கொண்டிருந்தாள் மீனலோக்ஷ்னி.
வில்வநாதனின் அறைக்குள் முன்னமே துணை முதல்வர், துறை தலைவர்கள் எல்லாம் இருந்தனர். தயாளனும் ஓர் துறைக்கு தலைவர் எனும் முறையில், முதலாளிக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்.
வில்வநாதன் திரும்பி அரவிந்தை முறைக்க, அவன் தலை குனிந்து கொண்டான்.
முன்னமே, அவன் பொறுப்பேற்ற நேரமே இது போல எழுந்து நிற்க தேவையில்லை என்பதை சொல்லியாகிவிட்டது. ஆனாலும் துணை முதல்வரின் ஆணையில் இது நடந்துவிட, வில்வநாதன் இறுகி போனான்.
“நான் சின்னவன், எனக்கு இது வேண்டாம்ன்னு சொல்லியும் இதென்ன? என்னை சங்கட படுத்தாதீங்க. ப்ளீஸ் உட்காருங்க” என்றவனுக்கு அந்த நாளின் இதம் தொலைந்து போனது.
தண்ணீர் குடித்து தன்னை நிதானித்தவன், எப்போதும் போல் அவனின் இருக்கையில் அமராமல், நின்றபடியே தன் பேச்சை ஆரம்பித்தான்.
புதிதாக வரும் முதல்வரை பற்றி சொன்னவன், வேறு சிலதையும் பேச, தயாளன் மென் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
உருவத்தில் அவரை போன்று, அவரை விட கூடுதலான வளர்த்தியில், மனைவியின் ஆளுமையை எதிரொலித்து, ஜம்மென நின்ற மகனை அதிகமே ரசித்திருந்தார் தந்தை.
தினம், தினம் அவனுடனே பயணித்தால், இந்தளவு இருந்திருக்காதோ என்னமோ. தள்ளி இருப்பதாலே, மகனை கொண்டாட செய்தார் மனிதர்.
அவன் தோரணை, உடுத்தும் உடை, பேச்சு, பழக்கம், வழக்கம், முதலாளி பாங்கு இதெல்லாம் ரத்தத்திலே கலந்திருப்பது நன்றாக புரிந்தது.
‘ஆனா மைல்ட் கலர்ஸ் தான் அவனுக்கும் பிடிக்குது. வாட்ச் கலெக்ஷன் என்னை மாதிரி. பிடிச்ச சாப்பாடும் அப்படி தான்’ தேடி தேடி மகனை தன்னுடன் இணைத்து கொண்டார் மனிதர்.
‘போன வாரம் கொடுத்த ஷர்ட்டை போட்டு வருவான்னு நினைச்சேன். வேணும்ன்னே வந்திருப்பான். அடங்காதவன்!’ தயாளன் மகனை திட்டி கொண்டார்.
“சார். மேடம் கார் வந்திடுச்சு” என்று அரவிந்தன் சொல்ல, அவரை வரவேற்க சென்றனர்.
பூச்செண்டை தயாளன் கையில் அரவிந்தன் கொடுக்க, “நான் ஏண்டா?” என்று அவர் மறுத்தார்.
“உங்க மகன் ஆர்டர் சார். எனக்கு தெரியாது” அவன் விலகி கொள்ள, வேண்டாமே என்பது போல் வில்வநாதனை பார்த்தார்.
அவன் அவரை கவனிக்காதது போல், சுந்தரவள்ளியை வரவேற்க, தயாளன் பூச்செண்டை கொடுத்தார்.
தயாளனுக்கு நீண்ட நாட்கள் கழித்து, அப்பா என்ற வார்த்தை தடுமாற வைத்தது.
“ஹலோ சார்” என்று சுந்தரவள்ளி அவருக்கு சொல்ல,
சமாளித்து, “வணக்கம் மேடம்” என்று கை குவித்தார் தயாளன்.
வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் மாணவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தவன், அவரின் அறைக்கு வழி காட்டினான்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம். எனக்காக, நான் கேட்டுக்கிட்டதுக்காக சென்னை விட்டு, இங்க வந்ததுக்கு” என்றான் வில்வநாதன்.
“எத்தனை முறை தேங்க்ஸ் சொல்லுவ. பெஸ்ட் காலேஜ்ல ஒர்க் பண்றது எனக்கும் ப்ளெஷர்” என்றார் சுந்தரவள்ளி. அவன் படித்த பல்கலை கழகத்தில் கண்டிப்புக்கு பேர் போனவர்.
முன்னாள் மாணவன் என்ற இளக்கம் மட்டுமே அவரிடம். கல்லூரியின் முதலாளி என்பது இல்லை. அதுதான் வில்வநாதனுக்கு மிகவும் பிடித்தது.
மேலும் சிறிது நேரம் அவருடனே இருந்தவன், “வீக்கெண்ட் வீட்டுக்கு வரணும் மேடம்” என்ற அழைப்புடன் கிளம்பினான்.
இடைவேளி நேரம் என்பதால் மாணவர்களின் சத்தம் கூடுதலாக இருந்தது. வில்வநாதன் அவனின் அறைக்கு சென்ற சில நிமிடத்தில் தயாளன் வந்தார்.
“மாமா பேசினார். எனக்கெதுக்கு கெஸ்ட் அவுஸ். வேண்டாம்” என்றார்.
இத்தனை நாட்கள் எல்லோரின் பேச்சை மீறி கல்லூரி வளாகத்தின் குவார்ட்ஸில் இருந்தார்.
இப்போது மகன், அவர்களின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டை அவருக்கு கெஸ்ட் அவுசாக்கி வர சொல்கிறான்.
“மகனா சொன்னா கேட்பீங்களா? இல்லை முதலாளியா சொல்லணுமா?” என்று வில்வநாதன் எழுந்து கொண்டபடி கேட்க,
“நீ எப்படி சொன்னாலும் நான் அங்க வர மாட்டேன். நம்ம வீட்டுக்கு பக்கத்தில, நான் எப்படி தனியா இருக்க முடியும்?” என்றார்.
“ஏன் இருக்க முடியாது?”
“வில்வா. அது உங்களுக்கு தான் பேச்சு. புரிஞ்சுக்கோ”
“எங்களுக்குன்னா, உங்களுக்கு இல்லையா?”
“டேய் நான் பிரிச்சு பேசலை. பட் உன் தாத்தா, பாட்டியை பத்தி யோசி. அவங்களுக்கு அது சங்கடத்தை கொடுக்கும்”
“அப்படின்னு அவங்க உங்ககிட்ட சொன்னாங்களா?”
“வில்வா. நான் வரலை. டாட்” என்று முடித்தார் தயாளன்.
இவர் என்னை பார்க்கவே மாட்டாரா? எனக்காக யோசிக்கவே மாட்டாரா? மகனுக்கு ஆற்றாமையில் நெஞ்சம் ஏறி இறங்கியது. வெளிப்படையாக கோவத்தை காட்டினான்.
“வில்வா? ஸ்டே காம்” என்றார் தந்தை.
‘முடியாது’ என்று கத்த தோன்றிய நெஞ்சத்தை அழுத்தி அடக்கினான்.
“எனக்கு கிளாஸ் இருக்கு. நாம அப்புறம் பார்க்கலாம்” என்று அவர் கிளம்பிவிட்டார்.
நின்றால் மகனுக்காக தலையாட்டி விடுவோம் என்ற அச்சம்.
வில்வநாதன் அடுத்த நொடி விருட்டென்று கிளம்பினான். அந்த நாள் முழுதும் எல்லோரையும் காய்ச்சி எடுத்துவிட்டான். பானுமதி எதற்கோ அழைக்க, அவரிடம் பேச கூட அவன் தயாரில்லை.
இரவு வீட்டிற்கு வர, உணவு முடிந்ததும், கஜலக்ஷ்மி அவர் பேச நினைத்தை ஆரம்பித்தார். பானுமதி இடையிட்டு, “நாம நாளைக்கு பேசலாம்மா” என்றார்.
“இப்போ என்ன? பாட்டி பேசலாம் தானே ராஜா?” என்று பேரனிடம் கேட்க, அவன் தலையாட்டினான்.
“தொழில்ல செட்டில் ஆகிட்ட இல்லை ராஜா. இனி பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார்.
“இல்லை பாட்டி. எனக்கு டைம் வேணும்” முயன்று பொறுமையாக பேசினான்.
“இப்படி தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கேட்டப்போ சொன்ன, உனக்கும் வயசு கூடுது ராஜா. யோசிப்பா” என்றார் பாட்டி.
தனபாலனுக்கு பேரனின் முகம் சரியில்லாதது உணர, மனைவி கையை சுரண்டினார். “என்னங்க” என்று திரும்ப, பேரனை நன்றாக பார்க்கும் படி முணுமுணுத்தார்.
கஜலக்ஷ்மிக்கு நாட்கள் ஓடுவதில் அங்கலாய்ப்பு. நாங்க எல்லாம் நல்லா இருக்கும் போதே பேரனுக்கு நல்லது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு.
பிஸ்னஸ் டென்ஷன் இருக்கும், அதுக்காக பார்த்தா ஆச்சா என்று நினைத்து கொண்டவர், “சில வரன் முடிவு பண்ணி வைச்சிருக்கு ராஜா. உனக்கு அனுப்பட்டா?” என்று தொடர்ந்தார்.
“பாட்டி ப்ளீஸ். இப்போ நான் எதையும் பார்க்கிற மூட்ல இல்லை”
“சரி ராஜா. இன்னைக்கு அனுப்பலை. இரண்டு நாள் கழிச்சு அனுப்புறேன். பொறுமையா பார்த்து சொல்லு” என்றார்.
“சரி” என்று முடிக்க பார்க்க,
பாட்டியோ, “இன்னும் மூணு மாசத்துல உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு ஜோசியர் சொல்லிட்டார். அதை விட்டா வருஷம் ஆகிடுமாம். அவ்வளவு ஏன் தள்ளி போகணும்?” என்றார்.
பேரன் அமைதியாக இருக்க, “ராஜா. ஏன்ப்பா ஏதோ போல இருக்க. நாங்க பார்த்து வைக்கிறதுன்னு இல்லை. உனக்கு பிடிச்ச பொண்ணு, விரும்புற பொண்ணு இருந்தா மறுப்பே கிடையாது. உனக்கு தெரியும் இல்லை” என்றார்.
வில்வநாதன் நிமிர்ந்தமர்ந்தவன், “விரும்புறதா? லவ் பண்றதா. ஹாஹா” என்று சிரித்தான் பேரன்.
பானுமதி அவனை கூர்மையாக பார்க்க, “என்ன ராஜா? என்ன?” என்று கேட்டார் கஜலக்ஷ்மி.
“இந்த காதல் ஒரு ஸ்கேம் பாட்டி. உங்க பேரன் போய் அதை பண்ணுவானா?”
“ராஜா. அது பத்தி என்ன, விடுப்பா?” என்ற கஜலக்ஷ்மி சுதாரித்தார்.
“விடத்தான் வேணும் பாட்டி. அது தானே நம்ம பழக்கம்” என்றான் வில்வநாதன்.
“ராசா. நீ பார்க்க டையர்டா இருக்க. தூங்க போயா. நாளைக்கு பேசிக்கலாம்” என்றார் தனபாலன்.
“ஏன் தாத்தா. நான் பேச கூடாதா? காதல் பத்தி நம்மளை தவிர யாருக்கு தெரிய போகுது?”
“என்ன சொல்ல வர நீ?” பானுமதி கோவமாக கேட்க,
“உங்களுக்கு தெரிஞ்சதை தான்ம்மா. காதலிக்கும் போது ஒரு முகம், கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் வேற முகம்”
“ஏன் மாம்? நான் பேச கூடாதா? சும்மா ஜெனெரலா பேச என்ன இருக்கு?” என்று திமிராக தோள் குலுக்கினான் மகன்.
அவனின் ஆட்டிடியூட் மாற, பானுமதி மகனை நேராக பார்த்தவர், “பேசு. என்ன பேச நினைக்கிறியோ பேசு” என்றார்.
“பானு. என்ன இது? நீ முதல்ல ரூமுக்கு போ” என்று கஜலக்ஷ்மி மகளை கிளப்ப பார்க்க அம்மாவும், மகனும் அசைய மறுத்தனர்.
நீண்ட வருடங்கள் கழித்து, திரும்ப ஒரு போராட்டமா? பெரியவர்களுக்கு வருத்தமாகி போனது.
“இருக்கிறதை தான் சொல்றேன். அதுக்கேன்ம்மா உங்களுக்கு கோவம் வருது” மகன் கேட்க,
“என்ன இருக்கிறதை நீ பார்த்த. அந்தளவு எல்லாம் நீ இன்னும் வளரலை. ஞாபகம் வைச்சுக்கோ” என்றார் அம்மா.
“இதுக்கு வளரணும்ன்னு எல்லாம் இல்லை மாம். அனுபவிச்சாலே போதும். என்னை மாதிரி. உங்களை மாதிரி”
“ராஜா” என்று தாத்தா, பாட்டி அவனை கட்டுப்படுத்த பார்க்க,
அவனோ திமிறி நின்றவன், “நீங்களும் காதல் கல்யாணம் தானே? இரண்டு முகம் கான்செப்ட் ஏத்துக்க முடியாது தான்” என்றான்.
“என்ன, எந்த இரண்டு முகத்தை நீ பார்த்துட்ட, ஆஹ்ன், சொல்லுடா” என்றவரின் கை கோவத்தில் நடுக்கம் கண்டது.
மகன் அதை கவனிக்காமல், “காதலிக்கும் போது தெரியாதது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரியுமா என்ன? சொல்லுங்க மாம்” என்று கேட்டான்.
“அது எங்க பெர்சனல். நீ பேசாத”
“பேசுவேன். எனக்கு முழு உரிமை இருக்கு. உங்களுக்கு பொதுவா நான் இருக்கேன். உங்களால தான் நான் வந்தேன், உங்களால் தான் நான் பாதிக்கப்பட்டிருக்கேன். நான் பேச கூடாதா? என்ன பெர்சனல், எது பெர்சனல். எனக்கு லிமிட் வைப்பீங்களா?” என்று கத்தினான்.
“கத்தாத. தொலைச்சிடுவேன்”
“அதை செய்ங்க முதல்ல. என்னை தொலைச்சிட்டு நீங்க ஆளுக்கொரு பக்கம் சந்தோஷமா இருங்க”
“இந்த வயசுல உன்னை எப்படிப்பா தொலைக்க முடியும்”
“பானு. என்ன பேசுற நீ?” கஜலக்ஷ்மி மகள் மேல் பாய்ந்தார்.
“விடுங்க பாட்டி. அவங்களுக்கு என்னைக்கு நாம கண்ணுக்கு தெரிஞ்சிருக்கோம். அவர் மட்டும் இருந்தா போதும். அவர் சந்தோசம் போதும்”
“ஆமா அப்படி தான்டா, அதுக்கு இப்போ என்னாங்கிற நீ”
“அதுக்கு எதுக்கு பிரியணும்? ஒண்ணா இருக்க வேண்டியது தானே”
“எங்க பெர்சனல்ன்னு சொல்லிட்டேன். திரும்ப பேசினா பாத்துக்கோ” என்று விரல் நீட்டி எச்சரித்தார் பானுமதி.
“அப்படியா அப்போ சரி. இனி கல்யாணமும் என் பெர்சனல். யாரும், நல்லா கேட்டுக்கோங்க இந்த வீட்ல யாரும் அதை பத்தி என்கிட்ட பேச கூடாது” என்று கர்ஜித்தான்.
“ராஜா, என்னப்பா இது?” என்று கஜலக்ஷ்மி அதிர,
“நிதானமா இருயா, எங்களுக்காக, கோவப்படாத. உட்காரு ராசா. வா” என்று தனபாலன் அவனின் கை பிடித்து அமர வைக்க,
“நீங்க எல்லாம் இப்படி கொஞ்சி தான் அவன் மிஞ்சி நிக்கிறான். மரியாதை தெரியாதவன். அம்மாகிட்ட பேசுற முறையாடா இது” என்று பானுமதி பேச,
“சரி. நான் தப்பு. எனக்கு மரியாதை தெரியலை. நீங்க? நீங்க எப்படி? ரொம்ப சரியா?”
பானுமதி அவனை முறைக்க, “சொல்லுங்க மாம். நீங்க காதலிக்கிறீங்கன்னு வந்து நின்னப்போ உங்களை நம்பி, உங்க அவரை நம்பி, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்களே உங்க அப்பா, அம்மா அவங்களுக்கு நீங்க கொடுத்த மரியாதை சரியா?” என்று கேட்டு வைக்க, பானுமதி கண்கள் கலங்கி போனது.
“பிரியறோம் சொல்லிட்டு, அதையும் சரியா பண்ணலை. ஒரே ஊர்ல ஆளுக்கொரு பக்கம் இருக்கீங்க. அதான் வேணாம்ன்னு சொல்லிட்டீங்க இல்லை. டிவோர்ஸ் பண்ண வேண்டியது தானே” கேட்டு முடித்த நொடி,
“பளார்” சத்தம் காதை கிழித்தது.
பானுமதி கொதிப்புடன் நிற்க, வில்வநாதன் கண்கள் சிவந்து, இறுகி போய் நின்றான்.
“பானு என்ன பண்ற நீ?” கஜலக்ஷ்மி கொந்தளிக்க,
‘நான் தானே காரணம்’ தனபாலன் பேரனின் கை பிடித்திருந்தவர், தளர்ந்து போனார்.
“எங்களை டிவோர்ஸ் பண்ண சொல்றதுக்கு நீ யாருடா. ஒழுங்கா இருந்துக்கோ. பிச்சிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவர், மூவரையும் கோவமாக பார்த்து சென்றார்.