“இல்லையே” என்றவள், வேகமாக சுஜாதாவிடம் இருந்து கையை உருவி கொண்டாள்.
சுஜாதா சங்கடமாக புன்னகைத்தவர், “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. எங்களை விட்டு இருக்க மாட்டா. அதான்” என்றார்.
“நல்லாவே தெரியுது ஆன்ட்டி. அதனால தான் நானும் சொன்னேன்” என்றவனை தேடி ஆட்கள் வந்தனர்.
கஜலக்ஷ்மிக்கு வணக்கம் வைத்து, வில்வநாதனிடம் பேசினர்.
‘நின்னா திரும்ப ஆரம்பிப்பாங்க. அப்பா இப்போவே யோசிக்கிற மாதிரி இருக்கு. ஓடிடலாம்’ மீனலோக்ஷ்னி மெல்ல நழுவ பார்க்க,
“யம்மா உள்ளூர் அழகி. எங்க போற?” என்று கஜலக்ஷ்மி அவளை நிறுத்தி வைத்தார்.
‘உள்ளூர் அழகியா? பாட்டிக்கும், பேரனுக்கும் என்னை பார்த்தா எப்படி இருக்கு?’ மூக்கை சுருக்கி அங்கேயே நின்றவளிடம்,
“ஏதோ எங்களை திட்டுற மாதிரி இருக்கே?” என்று கஜலக்ஷ்மி கேட்க, வில்வநாதன் பேசி முடித்திருந்தவன், அப்படியா என்று பார்த்தான்.
“நானா, நான் ஏன் திட்ட போறேன்? இல்லையே” என்றாள் கைகளை விரித்து.
“நல்லா மாட்டினாண்ணா. என்னை கோர்த்துவிட்டா இல்லை” என்று வினய் சிரிக்க, பெண் அவனை அடிக்கண்ணால் முறைத்தாள்.
மணப்பெண்ணின் தந்தை, “சாப்பிட போலாம்மா” என்று வந்தார்.
அதிகமாக வெளியில் சாப்பிடுவதில்லை என்பதால், “இருக்கட்டும். நீங்க பாருங்க” என்றான் வில்வநாதன்.
அவரும் வற்புறுத்த முடியாமல், “நீங்க சாப்பிட வாங்க” என்று அறிவழகன் குடும்பத்தை அழைத்தார்.
மேலும் சிலர் வந்து பாட்டி, பேரனிடம் பேச, “நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்று அறிவழகன் குடும்பத்திடம் சொன்னார் கஜலக்ஷ்மி.
“சரி பெரியம்மா” என்று அவர்கள் கிளம்ப,
மீனலோக்ஷ்னி முதல் ஆளாக செல்ல, “நீ எங்க வர. ப்ரெண்ட்ஸ்களோட சாப்பிட்டதை மறந்துட்டியா?” என்று வினய் சத்தமாக கேட்டுவைத்தான்.
“டேய்” என்று அவள் பல்லை கடிக்க,
“அப்புறமென்ன நீ இங்க வா” என்றழைத்தார் கஜலக்ஷ்மி.
‘இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை’ மனதினில் புலம்பி கொண்டு வந்து அவரருகில் நிற்க,
“உட்காரு” என்று இருக்கையை காட்டினார்.
“இருக்கட்டும் பாட்டி” என்று பெண் தயங்க,
“சும்மா உட்காரு. எவ்வளவு நேரம் நிற்ப. ஆளுங்க பேச வந்துட்டே இருப்பாங்க” என்றார்.
‘சீக்கிரம் கிளம்ப மாட்டாங்க போலயே. ச்சு. ஏன் இப்படி நினைக்கிற? அதான் அப்பா சாப்பிட போயிட்டாரே. இனி இவர் யாருகிட்ட பேச முடியும்’ பெண் சமாதானமாகி கொண்டாள்.
“என்ன அத்தை, குடும்பத்தோட வந்திருக்கீங்க போல” என்று ஒருவர் ஆர்ப்பாட்டமாக வந்தார்.
மீனலோக்ஷ்னி மேல் அவர் பார்வை குறும்பாக படிய, கஜலக்ஷ்மி, “அட படவா. பேச்சை பாரு” என்று அவரின் தோள் தட்டினார்.
பெண் புரியாமல் பார்த்திருக்க, “என்னம்மா எப்படி இருக்க?” என்று விசாரித்தார்.
“ம்ம். நல்லா இருக்கேன்” என்று அவள் சொல்ல,
“சித்தப்பா சொல்லும்மா. உனக்கு அந்த முறை தான் வரும்” என்றார் அவர்.
கஜலக்ஷ்மி நிராசையுடன் கிளம்ப, கார் கூட்டத்தில் மாட்டி கொண்டது.
“நீங்க இருங்க” என்று வெளியே உள்ள இருக்கையில் அமர வைத்து செல்ல,
“பாட்டி இந்தாங்க” என்று மூச்சு வாங்க வந்து நின்றாள் மீனலோக்ஷ்னி.
“கொடு, கொடு” என்று இருவரும் அந்த சாக்லேட் டிப்பை உச்சு கொட்டி சாப்பிட்டனர்.
“ஹேய் என்ன நடக்குது இங்க” என்று வில்வநாதன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
சாக்லேட் இருவரின் உதட்டோரம் மின்ன, கஜலக்ஷ்மி வேகமாக கடித்து முழுங்கிவிட்டார்.
“நீ தான் கொடுத்தியா?” என்று பெண்ணிடம் கோவமாக கேட்க,
பழைய வில்வநாதன் ஞாபகம் வந்துவிட்டது. “ஆமா? ஏன், என்னாச்சி?” என்று பயத்துடன் நின்றாள்.
“அவங்க ஸ்வீட் சாப்பிட கூடாது” என்று பல்லை கடித்தான்.
“என, எனக்கு தெரியாது” அவள் பாவமாக சொல்லி, கஜலக்ஷ்மியை ‘ஏன் இப்படி?’ என்று பார்த்தாள்.
“நான் தான் கேட்டேன் ராஜா. அவகிட்ட கோவப்படாத” என்ற பாட்டி, “சுகர் கூடிருச்சுன்னு ஒரு மாசம் பத்தியம் இருக்க வைச்சுட்டான் என் பேரன்” என்றார்.
‘இது எனக்கெப்படியா தெரியும்?’ என்று பெண் விழித்து நின்றவள்,
வில்வநாதனின் விடா முறைப்பில், “வேப்பங்கொழுத்து சாப்பிட்டா சரியா போயிடும். நான் பறிச்சுட்டு வரவா?” என்று கேட்டுவைத்தாள்.
கஜலக்ஷ்மிக்கு உதடுகள் விரிய துடிக்க, “ஓஹ் காட்” என்று நெற்றி தட்டினான் வில்வநாதன்.
“என் பாட்டிக்கும் சுகர். அவங்க இப்படி பண்ணுவாங்க” என்று சொல்ல,
“இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நினைச்சேன். நீ வளர்ந்துட்டன்னு. ஆனா நோ, பிக் நோ” என்றான் வில்வநாதன்.
பெண்ணுக்கு முகம் வாடி போக, அவளின் வழக்கமான கஜலக்ஷ்மி கையை பிடித்து கொண்டாள்.
“ராஜா. விடுப்பா. நான் தான் கேட்டேன்” என்றார் கஜலக்ஷ்மி அவளின் கை சேர்த்தபடி.
வில்வநாதன் பார்வை அதில் படிந்து மீள, மூச்சிழுத்துவிட்டு கொண்டவன், “பாட்டி பைவ் மினிட்ஸ் ஆகும். கார் மாட்டிக்கிச்சு. ஆளுங்க பார்த்திட்டு இருக்காங்க” என்றவன்,
அவரின் பாதுகாவலருக்கு கையசைத்து ஏதோ கேட்க, அவர் உடனே கொண்டு வந்து கொடுத்தார்.
“இந்தாங்க” என்று இருவருக்கும் டிஷ்ஷியூவை நீட்டினான்.
“எனக்கு வேணாம்” என்று பெண் மறுத்து, அவளின் கர்சீப்பிலே துடைத்து கொள்ள,
“அவ்வளவு ரோஷம். ஆனா வெளியூர் போய் படிக்க சொன்னா மட்டும் அம்மா பின்னாடி ஒளிஞ்சுப்ப இல்லை” என்று கேட்டுவைத்தான்.
“ஏன் திரும்ப, திரும்ப அதையே பேசுறீங்க? நான் இங்க இருந்தா உங்களுக்கென்ன?” என்று குரல் படபடத்து வேகமாக வந்தது.
“ஓய் பாண்டி நாட்டு மீனம்மா. இவ்வளவு எமோஷன் வேண்டாம்” என்றான் வில்வநாதன்.
மீனலோக்ஷ்னிக்கு அவன் அழைத்த விதம் வித்தியாசமாக இருந்தது.
“என்னோட அனுபவ பாடத்தை, மத்தவங்களுக்கு சொல்றது தப்பா என்ன?” என்று கேட்டான்.
பெண் புரியாமல் பார்க்க, கஜலக்ஷ்மி முகம் வாடி போனது. பேரன் எதை சொல்கிறான் என்று அறியாதவரா?
“நான் ஜஸ்ட் உனக்கு ஒரு சஜஷன் தான் கொடுத்தேன். ஆனா நீ சீரியஸாகிட்ட. அதுலே உனக்கு தெரியலையா நீ தனியா நிக்க பயப்படுறன்னு?” என்று வார்த்தைகளை நிதானமாக கோர்க்க,
மீனலோக்ஷ்னி அமைதி காத்தாள். அவள் யாரென்று அவளுக்கே தெரியுமே?
“நீன்னு இல்லை. உன்னை போல, என்னை போல யார் இருந்தாலும் அவங்களுக்கு நான் இதை தான் சொல்வேன்” என்றான்.
“அப்படி என்ன கேட்க போற?” வில்வநாதன் புருவம் தூக்க,
“நீங்க போர்டிங் போனது, உங்களுக்கு வீட்ல இருக்க முடியலைன்னு தானே. ஆனா எனக்கு அப்படி இல்லையே?” என்று கேட்டவள் கை என்னமோ கஜலக்ஷ்மியை இறுக்கமாக பிடித்தது.
கஜலக்ஷ்மி அவளின் அச்சம் உணர, அதை மீறி அவள் கேட்டது பிடித்தது.
வில்வநாதன் அவளின் கேள்வியில் ஆச்சரியம் கொள்ள, “அப்போ, ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னை கேட்டீங்க, பேஸ் பண்ண முடியாம ஓடுறேன்னு. அது அப்படி இல்லை. சிலது நமக்கு பேச என்ன, நினைக்க கூட பிடிக்காது. அந்த இடமே நமக்கு ஒவ்வாது. அப்போ அப்படி இருந்தது, அதான்” என்றாள்.
வில்வநாதனிற்கு இந்த கோணம் புதிது. இப்படியும் இருக்கா? என்று யோசித்தவன், “நான் கேட்டதை மறக்காம பேசுற” என்றான்.
“எப்படி மறக்க முடியும். ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தேன். அவன் என் பின்னாடி வந்தது, என்னை தொல்லை பண்ணது எனக்கு ஒருமாதிரி அசிங்கமா இருந்தது. சுத்தமா பிடிக்காது. ஏதோ உங்களால அந்த பிரச்சனை முடிஞ்சதுன்னு பார்த்தா, கடைசில உங்களோடே சேர்த்து வைச்சு” என்று பேசி கொண்டே போனவள், வில்வநாதனின் கூர்மையான பார்வையில் கப்பென வாய் மூடி கொண்டாள்.
“என்ன சொல்ல வர நீ?” அவனின் தீர்க்கமான பார்வையில்,
“ப்ளீஸ் சார்” என்றாள் பெண். “எனக்கு பிடிக்காதது, என்னை மீறி நடக்கும் போது அங்கிருந்து ஓடி போக தான் தோணுச்சு. அவ்வளவு தான் விஷயம்” என்று அவசரமாக முடித்தாள்.
“யம்மா உள்ளூர் அழகி, என் முன்னாடியே என் பேரனை பிடிக்கலை சொல்ற?” என்று பாட்டி அதட்டினார்.
“ஆஹ்ன்” என்று அவள் கண்களை விரிக்க,
“ஓடி போகணும்ன்னு தோணுது வேற சொன்னாங்க பாட்டி” என்றான் பேரன் எடுத்து கொடுத்து.
“இல்லை. இல்லை. அப்படி இல்லை” என்று பெண் பதற,
“வேறெப்படி? அந்த மோகனும், நானும் ஒண்ணா”
“ச்சீ. பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க” பெண்ணிடம் கோவம்.
“அப்புறம்” என்று அவன் புருவம் தூக்க,
“பாட்டி உங்களுக்கும் புரியலையா? ஓயாம என்னை எல்லாம் பேசினா எனக்கெப்படி இருக்கும்? அது தான் சொன்னேன்”
“மத்தவங்க கூட பேசுறதும், என் ராஜா கூட பேசுறதும் ஒண்ணா” கஜலக்ஷ்மி கேட்க,
“இவர் உங்களுக்கு தான் ராஜா பாட்டி” என்றாள் மீனலோக்ஷ்னி.
“என்ன, என்ன பண்ண போறீங்க? நான் சும்மா தான் சொன்னேன்” என்று பெண், கஜலக்ஷ்மியின் இரு கைகளையும் பற்றி கொண்டாள்.
வில்வநாதனும், கஜலக்ஷ்மியும் ஒருவரை பார்த்து கொண்டவர்கள், கண்ணடித்து சிரிக்க, பெண் ‘ஙேஙே’ என்று விழித்தாள்.
“பயந்தியா? சும்மா மிரட்டினோம்” என்றார் கஜலக்ஷ்மி.
“பாட்டி” என்று பெண் சிணுங்க,
“நீ சொல்றது சரி. எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்கணும்ன்னு இல்லை. உன்னோட பார்வை வேற தான்” என்றான் வில்வநாதன்.
மீனலோக்ஷ்னிக்கு அகமும், முகமும் மலர்ந்து போனது. இத்தனை நாட்களாக வில்வநாதனின் வார்த்தைகள், அவளை உறுத்தி கொண்டே இருந்தது.
‘நான் அப்படி தான் இருக்கேனா, எனக்கு தைரியம், தன்னம்பிக்கை இல்லையா’ என்ற உளைச்சல் கரைந்து போனது.
“ஆனா. இது போதாது. உன்னை நீ கண்டிப்பா இம்ப்ரூவ் பண்ணிக்கணும். பொண்ணுங்கன்னா சும்மா அப்படி இருக்கணும்” என்றான் வில்வாதன்.
“சரி, சரி” என்று நல்ல பிள்ளையாக கேட்டு கொண்டவள், “அதுக்காக சென்னை எல்லாம் போக மாட்டேன்” என்றாள் நிலையாக.
வில்வநாதன் பார்வை அவள் மேல் வேறு மாதிரி படிந்து, நிமிடம் அவளிலே நிலைக்கவும் செய்தது. ‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்று பெண் யோசிக்க, கார் வந்தது.
இருவரும் விடை பெற்று கொள்ள, கஜலக்ஷ்மி, “ஏன் ராஜா அவளை அப்படி பார்த்த? என்ன யோசனை?” என்று பேரனின் பார்வை பற்றி அவனிடம் தனியே கேட்டார்.
“அவ, உங்க மருமகன் போல பாட்டி” என்றான் வில்வநாதன்.
“என்ன ராஜா சொல்ற?” அவர் முகம் சுருங்கியது.
“அரவிந்தன் அவளுக்கு அண்ணா போல. கல்யாணம் பண்ணனும்ன்னு கோவில் போனப்போ, கடைசி வரை அரவிந்தனோட அவள் பேருக்கு கூட நிக்கலைன்னு அரவிந்தன் ஒரு முறை சொன்னான்” என்று நினைவு கூர்ந்தவன்,
“அவளுக்கு தேவையானதை, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமா சாதிச்சுக்கிறா” என்றான்.
“உன் அப்பாவை போல யாரும் இருக்க வேணாம்” கஜலக்ஷ்மி பட்டென சொல்ல,
“இருக்காளே! கடைசி வரைக்கும் அவளோட முடிவுல தான் நிக்கிறா. பார்த்தீங்க இல்லை” என்றான்.
கஜலக்ஷ்மி முகத்தை திருப்பி கொள்ள, அவன் இருவரையும் ஒரே தராசில் வைத்து பார்த்தான்.