“ம்ம். போலாம்” என்று சொல்ல, பின் மாலை போல் மண்டபத்திற்கு சென்றனர்.
கஜலக்ஷ்மியும், வில்வநாதனும் ஒன்றாக வர வாசலிலே பலத்த வரவேற்பு கொடுத்து, மரியாதையுடன் மேடைக்கு அழைத்து சென்றனர்.
சொந்தம், ஒரே ஊர், தொழில் முறை பழக்கம் என்று கல்யாண பெண்ணின் தந்தை இவர்களுடனே இருக்க, “நீங்க மத்தவங்களை பாருங்க” என்று அனுப்பி வைத்தனர்.
“பெரியம்மா” என்று அறிவழகன் குடும்பத்துடன் வந்து பேசினார்.
மண்டபத்தில் கிட்டத்தட்ட எல்லார் கண்களும் இவர்கள் மேல் இருந்தது. ஓர் வருடமே முடிந்திருந்த போதும் அந்த பேச்சு மறைந்திருக்கவில்லை என்பதை அது காட்டி கொடுத்தது.
“நல்ல ஜோடி பொருத்தம் தான்” என்று யாரோ சொல்வது கஜலக்ஷ்மி காதில் விழ,
இத்தனை நாள் தூரத்திலே பார்த்திருந்த மீனலோக்ஷ்னியை சற்று அருகில் பார்த்தபடி “அந்த பொண்ணு தானே?” என்று பேரனிடம் விசாரித்தார்.
மொபைல் பார்த்திருந்தவன், “யார் பாட்டி?” என்று புரியாமல் பார்க்க,
“அதான். உள்ளூர் அழகி. என் பேரன் ஜோடி” என, பேரனிடம் முறைப்பு.
“சும்மா கூட சொல்லாதீங்க பாட்டி” என்று முகம் சுருக்க,
“நல்லா தான் இருக்கா” என்றார்.
“பேசி பாருங்க. கடுப்பாகிடுவீங்க”
“பேசிடுவோம். அறிவழகா உன் பொண்ணை வர சொல்லு” என்றார்.
“என்னை ஏன் கூப்பிடுறாங்க” மீனலோக்ஷ்னி முணுமுணுத்து அவரருகே வர,
“பேர் என்ன, என்ன படிக்கிற?” என்று கேள்விகள்.
பெண் மெல்ல எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல, வினய், “சார்” என்று அண்ணனுடன் வந்து நின்றான்.
“ஓய் மேன். எப்படி இருக்க?” என்று கேட்டான் வில்வநாதன்.
“நல்லா இருக்கேன் சார்” என்றவன், மேற்படிப்பு படிக்க சென்னை போவதாக சொன்னான்.
“நீ என்ன பண்ண போற?” என்று பாட்டி மீனலோக்ஷ்னியிடம் கேட்க,
“நம்ம காலேஜ்ல தான் மாஸ்டர் படிக்க போறேன் பாட்டி” என்றாள் பெண்.
“ஆக்சுவலி நீங்க உங்க பொண்ணை தான் படிக்க வெளியூர் அனுப்பணும் அங்கிள்” என்று அறிவழகனிடம் சொன்னான் வில்வநாதன்.
பெண்ணின் முகம் அதிர்வை காட்ட, “ஏன் தம்பி. அங்க படிச்சா நல்லதுங்களா?” என்று விசாரித்தார் அறிவழகன். பெண் இன்று சுதந்திரமாக படிக்க அவன் தானே காரணம்.
“உங்க கைக்குள்ளே வைச்சு வளர்த்தா இப்படி தான் இருப்பாங்க அங்கிள். வெளியுலகம் பார்த்தா தான் தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் வரும்” என,
“அப்படி சொல்றீங்களா?” என்று அறிவழகன் யோசிக்க, பெண்ணுக்கு திகிலாகி போனது.
“நான் இங்கேயே தான் படிப்பேன்” என்றாள் சட்டென.
“எதுக்கு அப்பா, அம்மா கைக்குள்ளே பாப்பாவா இருக்கவா?” என்று அவன் கேலியாக கேட்க,
நான் பாப்பாவா இருந்தா இவருக்கென்ன? பெண்ணுக்கு ரோஷம். “வெளியூர் எல்லாம் போக மாட்டேன்” என்றாள்.
“இரண்டு வருஷம் வினய் கூட போய் படிக்க என்ன கஷ்டம் உனக்கு?” என்று வில்வநாதன் கேட்க,
“இங்க படிச்சா என்ன?” என்று கேட்டுவைத்தாள் பெண்.
“பாப்பா என்ன இது?” என்று தந்தை கண்டிக்க,
“சார் சொல்றதை கவனி. ஏன் எடுத்ததும் மறுக்கிற?” அரவிந்தனும் அவளை அதட்டினான்.
“நான் மறுக்கலை. எனக்கு பிடிக்கலை. அவ்வளவு தான்” என்றாள் பெண் விடாமல். அவளுக்கு பயம். எங்கு அவன் பேச்சை கேட்டு சென்னை அனுப்பிவிடுவார்களோ என்று.
“உனக்காக தானே சொல்றார் பாப்பா. அங்க போனா வெளியுலக அனுபவம் கிடைக்கும். படிப்பு, தைரியம்ன்னு” என்று தந்தை ஆரம்பிக்க,
“ஏன் எங்க காலேஜ்க்கு என்ன குறை? சூப்பர் காலேஜ். எங்கிருந்தோ எல்லாம் இங்க வராங்க. நான் வெளியூர் போகணுமா? இவர் சொன்ன தைரியம், தன்னம்பிக்கைக்கு எல்லாம் தனியா கிளாஸ் வேற வைக்கிறாங்க. நான் வினய் மாதிரி இல்லை. என் காலேஜ் தான் வேணும் எனக்கு” என்றாள் பெண் வேகமாக.
அடிப்பாவி என்னை மாட்ட வைக்கிறா? வினய் அதிர, மற்றவர்களுக்கு அவள் பேச்சை மறுக்க முடியாத சங்கட நிலை.
கஜலக்ஷ்மி சுவாரஸ்யமாக பார்த்திருந்தவர், “அவ சொல்றதும் சரி தானே?” என்று கேட்டார்.
பெண்ணுக்கு ஒரு ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி. அதிலே, “பாருங்க பாட்டியே சரி சொல்றாங்க. இங்க நம்ம காலேஜ்ல கிடைக்காத எதுவும் எனக்கு அங்க போய் கிடைச்சிட போறதில்லை” என்றாள்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி பூனை மாதிரி இருந்துட்டு, இப்போ பாயுற நீ? வில்வநாதன் புருவங்களை தூக்கினான்.