‘கட்டி பிடிச்சுட்டு போடா’ என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது.
அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது.
அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மனதிற்கும் புரியும், மூளைக்கும் உரைக்கும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் முடியாது.
வில்வநாதனை போல்!
பள்ளி படிப்பில் இருந்த சமயம். புது உலகத்திற்குள் மெல்ல எட்டி பார்க்கும் வயது. பத்தாவது நல்ல மதிப்பெண் பெற்று, பதினொன்றாவதில் காலடி எடுத்து வைத்த காலம் அது.
பிடிச்ச படிப்பு, மகிழ்ச்சியான குடும்பம் என மொத்தத்தையும் உடைத்து போட்டனர் அவனை பெற்றவர்கள்.
ஓர் நாள் காலையில் பிரிய போகிறோம் என்று அறிவித்தனர்.
தனபாலனும், கஜலக்ஷ்மியும் நிற்க முடியாமல் தளர்ந்து போக,
வில்வநாதனோ, “மாம் பிராங்க் பண்ற நேரமா இது? வர என் பர்த்டேக்கு பார்ட்டி பிளான் பண்ணனும்” என்றான் சாதாரணமாக.
“வில்வா. நாங்க சொன்னது நிஜம்” என்றார் தயாளன்.
“வாட்?” வில்வநாதன் கனவு போல் விழித்தான்.
“நோ’ப்பா. ப்ளீஸ். மோசமான ஜோக் இது” என்றான் முகம் சுழித்து.
பெரியவர்களுக்கு இது பற்றி முன்பே சந்தேகம் இருந்தது போல. பூதம் வெளிவந்துவிட்ட திகைப்பில் இருந்தனர்.
வில்வநாதன் ஒருமாதிரி நிற்க, அவனின் அம்மா பானுமதி, மகனை தன்னோடு அணைத்து கொண்டார்.
“மாம். நீங்க சொல்றது நிஜம் இல்லை தானே? நான் ஏதாவது சேட்டை பண்ணியிருந்தா பனிஷ் பண்ணிடுங்க. இது போல ஓர்ஸ்ட் ப்ராங் பண்ண வேண்டாம் ப்ளீஸ்” என்றான்.
“வில்வா, இங்க வா” என்று மகனை தன்னிடம் அழைத்த தயாளன்,
“அப்பா, அம்மா சீரியஸா தான் சொல்றோம். நாங்க பிரிய போறோம்” என்றார் அவனின் மனதில் பதியும்படி.
“நான். நான் டென்த்ல எடுத்த மார்க் உங்களுக்கு பிடிக்கலையா? இன்னும் அதிகமா எடுக்கவா? நான் வேணா திரும்ப எழுதி”
“வில்வா” என்று மகனின் தோளில் தட்டி அவனை நிறுத்திய தந்தை,
“நீ இல்லைடா. நாங்க எடுத்த முடிவு இது. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்” என்றார்.
“அவன் உங்களை புரிஞ்சுக்கனுமா? சின்ன பையன் அவன். அவனை கேட்கிறீங்க. ஏன் நீங்க புரிச்சுக்க மாட்டிங்களா? என் பேரன் பயம் உங்க கண்ணுக்கு தெரியலையா?” என்று கஜலக்ஷ்மி வெடித்தார்.
தயாளன் மகன் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் அவன் முகமே பார்த்திருந்தவர், “எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு வருதுடா. நாங்களும் நிறைய முயற்சி பண்ணோம். முடியலை. அதான்” என,
“பிரிய, வாட்ப்பா. ப்ளீஸ். உங்க டீஸிங்கை நிறுத்துங்க” அப்போதும் அப்படி தான் சொன்னான் வில்வநாதன்.
“தம்பி. நீ எத்தனை முறை கேட்டாலும் இது உண்மை. நாங்க பிரிய போறோம்” என்றார் பானுமதி அழுத்தமாக.
சிறியவனுக்கு இவர்கள் தொடர்ந்து சொல்ல, பயந்து வந்தது. “அப்போ நான், நான்” என்று திக்கினான் மகன்.
தயாளன் பட்டென மகனை தன்னோடு அணைத்துக்கொள்ள, வில்வநாதன் நிதானமாக அவரிடம் இருந்து விலகியவன், தள்ளி அமர்ந்தான்.
தலை பிடித்து கொண்டவனுக்கு இன்னமும் எதையும் நம்ப முடியவில்லை.
பெரியவர்கள் ஏதோ பேச, கெஞ்ச, சண்டை போட என்று சத்தம் அதிகரித்தது.
வில்வநாதனுக்கு எதுவும் கேட்கவில்லை. காதுகள் அடைத்திருந்தது.
அவனின் கால்கள் நடுங்கி கொண்டிருக்க, கண்கள் கண்ணீரில் மிதந்தது.
“வில்வா. இங்க பாரு. நான் கிளம்புறேன்” என்றார் தந்தை அவன் தோள் தொட்டு.
நிமிர்ந்து பார்த்த மகனின் கண்கள் பெற்றவர்களை கொன்றது.
“எனக்கு என்ன சொல்ல போறீங்க?” என்று கேட்டபடி எழுந்து நின்றான் மகன்.
“உங்ககிட்ட ஒரு மாசம், இவங்ககிட்ட ஒரு மாசம் இருக்கணுமா?” என்று மேலும் கேட்க,
“நீ ஏன் ராசா அப்படி இருக்கணும்? இது உன்னோட வீடுயா. நாங்க இருக்கோம் உனக்கு” என்றார் கஜலக்ஷ்மி பேரனின் கை பிடித்து.
“எனக்கு அவங்களை பதில் சொல்ல சொல்லுங்க பாட்டி. அப்பா, அம்மா இரண்டு பேரும் எனக்கு வேணும். பிரிஞ்சு எல்லாம் என்னால முடியாது, எனக்கு என் பேமிலி வேணும்” என்றான் கத்தலாக.
“வில்வா. ப்ளீஸ் காம் டவுன்டா” தந்தை அவன் அருகில் வர,
“நோ. எனக்கு பதில் சொல்லுங்க” என்றான் மகன்.
அவர் இயலாமையுடன் திரும்பி பானுமதியை பார்க்க, கண்களை மூடி திறந்த பானுமதி, “நம்ம பேமிலி இது தான். அம்மா உன்கூட இருப்பேன். அப்பாவும் உனக்காக இருப்பார். ஆனா ஒரு வீட்ல இருக்க முடியாது அவ்வளவு தான்” என்றார்.
“அவ்வளவு தானா? ரொம்ப சாதாரணமா சொல்ற பானு” என்று கஜலக்ஷ்மி மகளிடம் கோவப்பட்டார்.
“ம்மா. ப்ளீஸ். ரொம்ப சிக்கலாக்காதீங்க. அவனை புரிஞ்சுக்க விடுங்க. உண்மையை அவன் ஏத்துக்கணும்” என்றார் பானுமதி.
“இந்த உண்மை எனக்கு வேண்டாம்” வில்வநாதன் குரல் மீண்டும் வானை தொட்டது.
“இன்னொரு முறை சத்தம் உயர கூடாது வில்வநாதா?” பானுமதி கண்டிக்க,
“கத்துவேன், நீங்க இப்படி பண்ணா இன்னும் கூட கத்துவேன்” மகன் பிடிவாதமாக நின்றான்.
“நீங்க பண்றதை எல்லாம் பண்ணிட்டு என் பேரனையே அதட்டிட்டு இருக்கீங்க” என்று கஜலக்ஷ்மி பேசினார்.
“லட்சுமி. பொறுமையா இரும்மா பேசலாம். ஆளாளுக்கு கோவப்பட்டா சரி வராது” என்றார் தனபாலன்.
“அப்போ நீங்க பேசுங்க. உங்க ஆசை மருமகன்கிட்ட கேட்டு சொல்லுங்க. அவருக்கு இங்க என்ன குறைன்னு கேட்டு சொல்லுங்க. இப்போவே” என்று கணவனிடம் நின்றார் கஜலக்ஷ்மி.
“ம்மா. ப்ளீஸ். உங்களை கெஞ்சி கேட்கிறேன். இது நாங்க இரண்டு பேருமே சேர்ந்து எடுத்த முடிவு. எங்களை எங்க வழியில போக விடுங்க” என்றார் பானுமதி.
“நீங்க உங்க வழியில போனா என் பேரன் கதி”
“அவனுக்கென்னம்மா. அவனை பார்த்துக்க நாம எல்லாம் இருக்கோமே”
“ரொம்ப சரியா பேசுற நினைப்பா உனக்கு?”
“ம்மா. நீங்க எவ்வளவு பேசினாலும் இது தான் முடிவு. எங்களை விடுங்க” என்றுவிட்ட பானுமதி,
“வில்வநாதா. உனக்கு இப்போ சில விஷயங்கள் சொன்னாலும் புரியாது. எங்களுக்குள்ள மிச்சமிருக்கிற அன்பு, வெறுப்பா மாறிட கூடாதுன்னு தான் இந்த முடிவு. அக்சப்ட் பண்ணிக்கோ தம்பி” என்றார் அவன் கை பிடித்து.
தயாளன் பொருட்கள் அறையை விட்டு வெளியே வர, வில்வநாதனுக்கு உண்மை புரிந்து போனது. உடைந்து போனான் பிள்ளை.
தயாளன் மகனை அணைக்க வர, அவர் கையில் சிக்காமல் விலகிவிட்டான். தந்தை வெளியே செல்வதை பார்க்க தைரியம் இல்லாமல் அறைக்கு ஓடினான்.
தயாளன் வெளியேறிவிட்டார். அப்பா, அம்மா பிரிந்த பிறகு அவனால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை.
அவன் இயல்பில் இருந்து மாற ஆரம்பித்தான். அதிகமான கோவம், அதிகமான அமைதி என்று நிலையில்லாமல் அவனுக்குள்ளே போராடினான்.
அப்பா, அம்மாவை அருகில் சேர்க்கவில்லை. தாத்தா, பாட்டி அவனுடனே இருந்தும் மனஅழுத்தம் கொண்டான்.
இத்தனை வருடம் இருந்த அவன் குடும்பம் இல்லை இது. உடைந்துவிட்டது. அப்பா இல்லாத வெறுமையை சமாளிக்க தெரியவில்லை அவனுக்கு
தயாளன் ஒரு கட்டத்தில் தாற்காலிகமாக அந்த வீட்டிற்க்கு வர பார்க்க, மகனோ வீட்டை விட்டு கிளம்பினான்.
போர்டிங் போக முடிவெடுத்துவிட்டான். மொத்த பேரும் எதிர்க்க, “என்னை என் வழியில போக விடுங்க” என்றான் அடமாக.
பாட்டியின் தயவால், சில லட்சங்கள் செலவழித்து அந்த வருட படிப்பை வேறொரு பள்ளிக்கு மாற்றி கொண்டான்.
கஜலக்ஷ்மிக்கு பேரன் தான் உயிர். அவனை காயப்படுத்தியவர்களை அவர் மன்னிப்பதாக இல்லை.
பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, இரண்டு வருடம் வேலை என்று இத்தனை வருடங்கள் வெளியிலே இருந்தவன், இப்போது தான் ஊருக்கு வந்திருக்கிறான்.
இடையில் வந்தாலும், மொத்தமாக வந்ததில் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
வில்வநாதனை அழைத்து வர, மொத்த குடும்பமும் சென்றது. நேராக வீட்டிற்கு வராமல் ஒரு வாரம் டூர் போல சென்று தான் வந்தனர்.
என்ன அவர்கள் எதிர்பார்த்த பழைய வில்வநாதன் தான் இல்லை.
அப்பாவை பார்க்க வேண்டுமென்றால் தேடி சென்று பார்த்துவிட்டு வருவான். ஆனால் அருகில் சேர்க்க மாட்டான்.
இதோ இந்த நொடி வரை அவர் கைகளுக்குள் அவன் போவதில்லை. அவனால் முடிவதில்லை!
அவரையே நினைத்திருந்தவனை அழைத்தார் பானுமதி. உள்ளே சென்று எடுக்க, திரையில் பானுமதி.
“தம்பி தூங்காம என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்டார்.
“நீங்க தூங்காம என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று மகன் பதிலுக்கு கேட்க,
“நாளைக்கு தான் பைனல் மீட்டிங். கொஞ்சம் ப்ரீபேர் பண்ணிட்டிருக்கேன்” என்றவர், “அப்பாவை போய் பார்த்த போல” என்றார்.
மகன் அவரையே பார்க்க, “உன் அப்பா தான் சொன்னார். ஏண்டா அவருக்கு ஒரு ஹக் கொடுத்தா தான் என்ன?” என்று கேட்க,
அவன் பதில் சொல்ல வேண்டுமே! “தம்பி நீ ரொம்ப அழுத்தமாகிட்ட” என்றார்.
“என்னை பெற்றவர்களையே அந்த பெருமை சாரும்” என்றான் மகன்.
“இப்போ நீ வளர்ந்துட்ட, இன்னமும் எங்களை புரிஞ்சுக்க முடியலையா?”
“எத்தனை மணிக்கு பிளைட் உங்களுக்கு? பிக்கப் பண்ண வரவா?” என்று வேறு பேசினான்.
“நோ தேங்க்ஸ். நானே வந்துப்பேன்” என்றார் அம்மா.
“தென் ஓகே. தூங்க போங்க. குட் நைட்” என்றவனிடம்,
“குட் நைட்” என்று கடுப்புடன் விடை பெற்றார் பானுமதி.
வில்வநாதன் உதடுகளில் மெல்லிய புன்னகை. அதனுடனே விளக்கணைத்து தூங்க சென்றான்.