கஜலக்ஷ்மி எல்லாம் முடியவும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினார். வழியிலே அவருக்கு போன் வந்துவிட்டது.
மாளிகைக்குள் கார் நுழையும் போதே கஜலக்ஷ்மி முகம் கடுகடுத்து தான் இருந்தது.
தாத்தாவும் பேரனும் அவரை புருவம் சுருக்கி பார்க்க, “எத்தனை நாளா போட்ட திட்டம் இது?” என்று பெரியவரிடம் கேட்டார் கஜலக்ஷ்மி.
“பாட்டி, என்ன ஆச்சு?” வில்வநாதன் கேட்க, தனபாலுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“கேட்டேனே, பதில் சொல்லுங்க” என்றார் தனி அறையில்.
“என்ன கேட்கிற லக்ஷ்மி? எனக்கு புரியலை” என்று பெரியவர் கேட்க, பேரனின் முகமும் பார்த்து கொண்ட கஜலக்ஷ்மி இப்போது நிதானித்தார்.
“முதல்ல உட்காருங்க லக்ஷ்மி மேடம். என்னமோ கோவமா இருக்கீங்க. ஏன்னு சொன்னா பதில் சொல்லுவோம்” என்று அவருக்கு குடிக்க கொடுத்தபடி கேட்டான் வில்வநாதன்.
கஜலக்ஷ்மி தண்ணீர் குடித்து பேரனின் கையில் கொடுக்காமல் தானே வைத்தவர், தன் போனை காட்டினார்.
அத்தனை மெசேஜ், அழைப்புகள். இன்னும் வந்து கொண்டிருக்க வில்வநாதன், கேள்வியாய் பாட்டியை ஏறிட்டான்.
“அறிவழகனோட பொண்ணை உனக்கு பேசியிருக்கிறது பத்தி கேட்கிறாங்க” என்றார்.
“வாட்?” வில்வநாதன் புருவங்களை சுருக்கினான்.
“எனக்கு இவர் மேல சந்தேகம்” என்று கணவனை ஏறிட, அவர் முழிக்கவே செய்தார்.
“பார்த்தியா. உன் தாத்தாக்கு அந்த ஆசை இருக்கு” என்று சற்று கோவமாகவே சொல்ல, பேரன் ஆச்சரியத்துடன் தாத்தாவை பார்த்தவன், அப்படியா என்ற கேள்வியுடன் புருவம் தூக்கினான்.
அவர் வேகமாக மறுத்து தலையாட்டியவர், “ஒருத்தர் கிளம்பும் போது இது மாதிரி கேட்டார், நான் அது இல்லைன்னு சொல்லாம, அதை அவங்க தப்பா புரிஞ்சு” பெரியவருக்கு அவரின் தவறு புரிந்துவிட்டது,
தப்பிக்கும் வழியாக, “இதோ. அறிவழகன் போன் பண்றான்” என்று எடுத்தவர், ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
“மன்னிச்சுக்கோங்க பெரியப்பா. எப்படி இது நடந்துச்சுன்னு எனக்கு தெரியலை. நான் இல்லைன்னு எல்லோருக்கும் சொல்லிட்டிருக்கேன்” என்றார் படபடப்புடனே.
“அறிவழகா. தெரியாம நடந்தது தானே? விடு பரவாயில்லை” பெரியவர் சமாதானம் சொல்ல, அறிவழகன் பெண்ணை நினைத்து மூச்சு முட்டி போனார்.
அவர் மறுகுவதை புரிந்து கொண்ட வில்வநாதன், பாட்டியை பேச சொல்லி கண் காட்டினான்.
“அறிவழகா” என்று கஜலக்ஷ்மி அழைக்க,
“பெரியம்மா” என்றவருக்கு வார்த்தைகள் நின்று போனது.
“நானும் கேள்விப்பட்டேன். நிறைய விசாரிக்கிறாங்க. வதந்தி என்னைக்குமே வதந்தி மட்டும் தான். தெரியாம நடந்ததுக்கு நீ கஷ்டப்பட்டுக்காத. பார்த்துக்கலாம் விடு” என்றார் கஜலக்ஷ்மி.
“சரி, சரி பெரியம்மா” அறிவழகன் ஏற்று கொள்ள,
“நாம இப்போ என்ன மறுத்தாலும், யாரும் ஏத்துக்க மாட்டாங்க. கொஞ்ச நாள் போனா அவங்களே புரிஞ்சுப்பாங்க. வைச்சுடுறேன்” என்று வைத்துவிட்டார்.
வில்வநாதன் பாட்டியை தோளோடு அணைத்து கொள்ள, அவரோ இன்னமும் கணவரை தான் சந்தேகமாக பார்த்திருந்தார்.
“லக்ஷ்மி மேடம். பாவம் அவரை விட்டுடுங்க” என்றான் பேரன் தாத்தாவிற்காக.
“அவர் முழியிலே உனக்கு புரியலையா ராஜா. ஒருநாள் என்கிட்ட இதை பத்தி ஜாடை மாடையா பேசினார். அப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்” என்றார் கத்தரிக்கும் பார்வையுடன்.
“தாத்தா, அப்படியா?” என்று பேரன் கேட்க,
“இல்லை ராசா நீயே பார்த்த இல்லை. பொண்ணு எப்படி இருக்கான்னு. உனக்கு நல்லா பொறுத்தமா”
பொறுப்பில்லாம இருக்கிறது பொறுத்தமா? பேரன் தலையாட்டி கொண்டவன், “தாத்தா ப்ளீஸ்” என்று நிறுத்திவிட்டான்.
“நீங்க இதுவரைக்கும் சேர்ந்துவிட்ட ஜோடியே போதும். திரும்ப என் பேரனுக்கும் வந்து நின்னீங்க நான் பொல்லாதவளாகிடுவேன்” என்று வெடித்தார் கஜலக்ஷ்மி.
தனபாலன் முகம் அப்படியே வாடி, வதங்கி போனது. மனைவி சொல்வதில் இருந்த உண்மையும் நடுமண்டையில் நச்சென இறங்கியது.
வில்வநாதன் அந்த நொடி ஒருமாதிரி இறுக்கம் கொண்டான். அவனை அசைக்கும் வார்த்தைகள் தான் பாட்டி சொன்னது.
இப்போது என்று இல்லை. அவன் பதினொன்றாவது படிக்கும் போது ஆரம்பித்தது. இன்று வரை தொடர்கிறது.
பாட்டியின் கோவமும், தாத்தாவின் சோர்வும் அவனை கட்டுக்குள் கொண்டு வர, “ரிலாக்ஸ் பாட்டி” என்றான்.
“தாத்தா. நீங்களும் உட்காருங்க. ஒன்னும் பிரச்சனையில்லை. இது மாதிரி வீண் பேச்சுக்கெல்லாம் நாம எப்போவும் காது கொடுக்க கூடாது. நீங்க சொன்னது தான்” என்றான்.
கஜலக்ஷ்மியும் முயன்று தன்னை மீட்டுக்கொள்ள, தனபாலன் மட்டும் மீள்வதாக இல்லை.
வெகுநாட்கள் கழித்து இந்த பேச்சு வீட்டில். மறந்திருக்கவில்லை! மற்றவரை காயப்படுத்த விரும்பாததால்!
இதோ தனபாலன் காயம் கொண்டார். வலி கொடுத்த கஜலக்ஷ்மிக்கும் இனிக்கவில்லை.
பேரனை பார்க்கவும் லேசான அச்சம். உள்ளுக்குள் அத்தனையும் போட்டு அழுத்தி கொள்வான்.
“ராஜா. நான் ஏதோ” என்று பாட்டி சமாதானமாக பேச,
“தாத்தாகிட்ட பேசுங்க. நீங்க விட்ட வார்த்தை தப்பு லக்ஷ்மி மேடம்” என்றான் பேரன்.
“அதெப்படி தப்பு? இவர்”
“பாட்டி” என்றான் பேரன் இடையிட்டு.
“முடியலை ராஜா. நானும் சாதாரண மனுஷி தான். எத்தனை நாளைக்கு நடிக்கிறது”
“கடைசி வரை. நம்ம தலையெழுத்து அது தான் பாட்டி” என்றான் பேரன் மெல்லிய புன்னகையுடன்.
“ராஜா” என்று தாத்தா, பாட்டி இருவரும் அவனை ஆளுக்கொரு பக்கமாக அணைத்து கொண்டனர்.
வில்வநாதன் அவர்களை இரு கைகளாலும் அணைத்து கொண்டவன், “டீ குடிக்கணும் பாட்டி” என்றான்.
அதன் பின்னான நிமிடங்கள் மூவர் முகமும் கொஞ்சம் தெளிந்திருக்க, டீயுடன் பலகாரத்தையும் சாப்பிட்டனர்.
தாத்தா, பாட்டியை ஓய்வு எடுக்க சொல்லி வந்தவனின் போன் ஒலித்தது. “சார் அந்த அரவிந்தனை ஜாமீன் எடுக்க மிஸ்டர் தயாளன் சார் வந்திருக்கார்” என்றனர் காவல் நிலையத்தில் இருந்து.
வில்வநாதன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன், “அனுப்பி விடுங்க” என்று வைத்தான்.
மாலை நேரம் டிராக் பேண்ட், டீஷர்ட்டுடன் கிளம்பினான். டிஃபெண்டர் கார் அவன் கைகளில் மிதமான வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது.
சில நிமிட அமைதியான பயணத்தின் முடிவில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது கார்.
மாணவர்கள் இல்லாததால் மிகவும் அமைதியாக இருந்த வளாகத்திற்குள் நிதானமாக நடந்தான்.
அவனுக்கும், அந்த கல்லூரிக்கும் ஒரே வயது. ஆம். அவன் கருத்தரித்த நேரம் இந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினர் கஜலக்ஷ்மி. வரப்போகும் சந்ததிக்கு அவரின் உன்னதமான பரிசு.
இதோ வில்வநாதனை போல், அந்த கல்லூரியும் நன்றாக வளர்ந்திருந்தது.
தென்னகத்தின் முக்கியமான அடையாளங்களில் இந்த கல்லூரியும் ஒன்று. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.
மற்ற தொழில்களின் வருமானம் அதிகளவில் இங்கேதான் பயன்படுத்தப்படுகிறது.
வில்வநாதனுக்கு இந்த கல்லூரி ஓர் சகோதரனை போல். அவனுக்கு தான் உடன்பிறப்புகளே இல்லையே?
தன் கையால் நட்டு வைத்த மரங்களை தொட்டபடி நடந்தவனின் நடை ஓரிடத்தில் நின்றது.
சற்று தள்ளி ‘அவர்’ இருந்தார். தயாளன்! உடன் ஓர் இளைஞன்.
வேஷ்டி, டீஷர்ட்டில் ஆங்காங்கே முளைத்திருந்த வெள்ளை முடிகள் மாலை வெயிலுக்கு டாலடிக்க, அவன் தோளை தட்டி கொடுத்தபடி ஏதோ பேச்சு.
வில்வநாதன் நகராமல் அவரில் நிலை கொண்டிருக்க, அவரும் இவன் பக்கம் திரும்பினார்.
மின்னலாக கண்களில் மையம் கொண்ட வெளிச்சம். அந்த இளைஞனுடன் இவனை நோக்கி வந்தார். வேகத்திலும் கம்பீர நடை.
உயரத்திற்கு ஏற்ற எடையில் வயதை கணிக்க முடியாதவராக பளிச் சிரிப்புடன் இவன் கண் முன் நின்றார்.
கைகளை கட்டி கொண்டவன், அவரை தவிர்த்து அருகில் நின்றவனை கேள்வியாக பார்த்தான்.
“அரவிந்தன்” என்றான் அவன்.
“உங்களை மீட் பண்ண நினைச்சிருந்தேன். முதல்ல ஒரு மன்னிப்பு. அப்புறம் ஒரு நன்றி சொல்லணும்” என்றவன்,
அவனே தொடர்ந்து, “உங்க இடத்துல வைச்சு அந்த ட்ரைவரை அடிச்சிருக்க கூடாது. சாரி கேட்டுக்கிறேன்” என்றான்.
“காரணம்?” வில்வநாதன் கேட்க,
“வழியில என் ப்ரெண்டை இடிச்சிட்டு, அப்படியே வந்துட்டான். ரொம்ப நேரம் பார்க்க ஆள் இல்லாமல், சீரியசாகி தான் காப்பாத்தினோம். அதான்” என்றான் அரவிந்தன்.
“இந்த சட்டத்தை எல்லாம் சார் மதிக்க மாட்டிங்களா?” வில்வநாதன் புருவம் தூக்க,
“சட்டம் பொறுமையா தண்டிக்கும். அதுவரைக்கும் எனக்கு தாங்காது. கொஞ்சம் முன்கோபக்காரன். தப்பு தான். கண்ட்ரோல் பண்ண ட்ரீட்மெண்ட் போய்ட்டிருக்கு” என்றான் அரவிந்தன்.
“அப்புறம் நன்றி. சரியான நேரத்துல வந்து கல்யாணத்தை நிறுத்தினத்துக்கு” என்று மேலும் சொல்ல,
“பேமிலி செண்டிமெண்ட் சார். மாமாக்காக தான் அதுவரை போனதே. வினய் போல தான் பாப்பாவும் எனக்கு. சொன்னா புரிஞ்சிக்கிற நிலைமையில யாரும் இல்லை. சார் வந்து கல்யாணத்தை நிறுத்துறதா இருந்தது” என்றான் தயாளனை காட்டி.
“ம்ம்” என்றவனின் தோள் தொட்டார் தயாளன்.
வில்வநாதன் அப்படியே இருக்க, தொட்ட கை தட்டியும் கொடுத்தது.
அப்போது வினய், மீனலோஷினி இவர்களை நோக்கி வந்தனர். வில்வநாதனை எதிர்பார்க்கா பார்வை பரிமாற்றம்.
“குட் ஈவினிங் சார்” என்று பொதுவாக வணக்கம் வைத்தனர்.
மணப்பெண் அலங்காரத்தில் இருந்து சுடிக்கு மாறியதில், இன்னமும் சிறு பெண்ணாக இருந்தாள் மீனலோக்ஷ்னி.
“நாங்க இரண்டு நாளைக்கு ஊருக்கு போறோம்” என்றான் அரவிந்தன் தகவலாக.
“நம்ம ஏரியாக்குள்ள தான் சார். ஸ்டேஷன்ல சொல்லிட்டேன். இங்க எல்லாம் செட்டில் ஆகட்டும்ன்னு” என்று வில்வநாதனின் பார்வையில் தானே பதில் சொன்னான் அரவிந்தன்.
“காலேஜ் இல்லையா உங்களுக்கு?” அதட்டலாக கேட்டான் வில்வநாதன்.
மாணவர்கள் முழித்து நிற்க, “லீவ் அப்ளை பண்ணிடுறோம் சார். பாப்பாக்கு இங்க இருக்க வேணாம்ன்னு” அரவிந்தனே பதில் சொல்ல,
“நீங்க ஸ்டூடெண்ட்டா?” என்று கண்டிப்புடன் கேட்டான் வில்வநாதன்.
“சாரி சார். இந்த ஒரு முறை மட்டும்” என்றான் வினய் பணிவாக.
வில்வநாதன் இருவரையும் அதிருப்தியாக பார்த்தபடி, “நம்ம ஸ்டூடெண்ட்ஸ்க்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வளர்க்க ஏற்பாடு பண்ணுங்க. போர்ட்ல பேசி அதுக்கான கிளாஸ் பாருங்க” என்றான் பட்டென.