“சூப்பர், சூப்பர்டா. என்னமோ முடியவே முடியாதுன்னு சொன்னாங்க. மோகனா கொக்கா” என்று கத்தியவன், “அவளை அப்படியே கொண்டு வந்துடுங்க. நானும் ஊர் எல்லைக்குள்ள வந்திட்டிருக்கேன். எல்லைக்கோவில்ல வைச்சு தாலி கட்டிட்டு தான் மறுவேலை” என்று எல்லையில்லா உற்சாகம் கொண்டான்.
மூர்த்திக்கும் அழைத்து தன் வீர பிரதாபங்களை சொல்ல, மூர்த்தி அலறிவிட்டார். “டேய் கிறுக்கா என்னடா பண்ணி வைச்சிருக்க?” என்று கத்தியதெல்லாம் கேட்க மகன் இல்லை. போனை வைத்து காரின் வேகத்தை கூட்டினான்.
ஊரை நெருங்கிட்டோம் என்ற நொடி, அவனின் காரை இருவர் வழி மறைத்தனர். மோகன் அவர்களை இடிப்பது போல் கடந்து செல்ல, அந்த இருவரும் பைக்கிலே அவனை துரத்தி, மடக்கி பிடித்திருந்தனர்.
அவனின் காரோடு அவனை வில்வநாதன் முன் கொண்டு வந்து நிறுத்தியும் விட்டனர்.
மோகனுக்கு கொஞ்சம் உதறல் தான். ஆனாலும் பெண் கிடைக்கா ஏமாற்றம், கோவம் அவனை அடங்காமல் எகிற வைத்தது.
“நீங்க எதுக்கு இதுக்குள்ள வரீங்க. இது எங்க பிரச்சனை. அவ எனக்கு தான். நான் விட மாட்டேன்” என்று குதித்தான்.
வில்வநாதன் பார்வையில் அவனை பிடித்திருந்தவர்கள் பிடி தளர, மோகன் இன்னும் எகிறினான்.
“என்ன இவங்க பின்னாடி வந்து ஒளிஞ்சிகிட்டா, உன் பொண்ணை விட்டுடுவேன்னு நினைச்சியா? பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருந்துகிட்டு எனக்கு விபூதி அடிக்க பார்க்கறியா?” என்று அறிவழகனிடம் கத்தினான்.
“தம்பி இங்க வந்து கத்துற வேலையெல்லாம் வைச்சுக்க கூடாது” என்று பெரியவர் கண்டிப்புடன் சொல்ல,
“அப்போ அவளை என்கூட அனுப்பிடுங்க. நான் போயிடுறேன். உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு” என்று பேசினான்.
உள்ளிருந்த மீனலோக்ஷ்னி அவன் சத்தத்தில் மிரண்டு தான் போனாள். பயம் என்பதை தாண்டி மோகன் முகத்தை பார்க்க கூட அவளுக்கு விருப்பமில்லை.
ஒவ்வாமை!
கல்லூரி சேர்ந்த முதல் வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தாள் பெண். இரண்டாம் வருடம் இவன் பார்வையில் விழுந்தாள்.
அன்றில் இருந்து ஆரம்பித்தது அவளுக்கான தொல்லை. பேருந்து நிறுத்தத்தில் வைத்து எதேர்ச்சையாக பார்த்தவன், பின்னான நாட்களில் அதையே வழக்கமாக்கி கொண்டான்.
தள்ளி இருந்து பார்க்கும் போதே பெண்ணுக்கு பிடிக்காது. இதில் சில வாரங்கள் முன்பு எதிரில் வந்து நின்று பேசினான். காதல் சொன்னான். நீ இல்லை என்றால் நான் இல்லை என்று வசனத்தில் உருகினான்.
பெண்ணவள் நேரடியாக, “எனக்கு பிடிக்கலை. ப்ளீஸ் தொந்தவு பண்ணாதீங்க” என்று மறுத்துவிட்டாள்.
அதன் பின் அவனின் ஆட்டம் அதிகமாகிவிட்டது. காதல் என்ற பெயரில் அவளை மிகவும் அச்சுறுத்தினான்.
பெண்ணவள் மற்ற ஆண்களிடம் பேசினால், அவர்களை அடிக்கவே செய்தான்.
“அழகா இருக்கன்ற ஏத்தமா? ஒரு செகண்ட் போதும், மொத்த அழகையும் அழிச்சிடுவேன்” என்று மிரட்டினான்.
போதையில் வழி மறைத்து பிரச்சனை செய்தான். படிக்க முடியவில்லை. மனதால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அப்பாவுடன் வந்து பெண் கேட்டு மேலும் நோகடித்தான்.
மூர்த்தியும் மகனை கண்டிக்காமல், அவனின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் அறிவழகன் வீட்டிற்க்கு வந்தார்.
மீனலோக்ஷ்னி முன்னமே வீட்டில் சொல்லியிருக்க, அவர்களும் மறுப்பதற்கு தயாராக தான் இருந்தனர்.
“படிக்கணும், சின்ன பொண்ணு. சரிப்பட்டு வராது” என்று எல்லாம் சொல்லியும்,
“நிச்சயம் மட்டும் வைச்சுக்கலாம்” என்று மூர்த்தி பிடிவாதமாக நின்றார். அவருக்கு மகனை சமாளிக்க முடியவில்லை.
அறிவழகன் கெஞ்சி, கோவமாக பேசியும் அவர் மாறுவதாக இல்லை. தேதி குறித்து சென்றார். புடவை, நகை வரை வீட்டுக்கு வந்தது.
பெரியவரை காண சென்றால், அவர்கள் யாரும் ஊரில் இல்லை. போனில் பேசி நிச்சயத்தை நிறுத்துவதற்கு பதிலாக, நிரந்தர தீர்வாக அரவிந்தனுடன் திருமணத்தை முடித்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.
அதுவும் தோல்வியில் முடிந்து, இதோ கண்ணெதிரே மோகன் ஆடி கொண்டிருக்கிறான்.
வில்வநாதன் அமைதியில், அவன் இன்னும் ஏதேதோ பேச, மூர்த்தி மகனை தேடி வந்துவிட்டார்.
என்ன செய்வார்களோ என்ற கிலியை மறைத்து, மூர்த்தி பேச வாய் திறந்த நொடி மகன் அவர் காலடியில் விழுந்திருந்தான்.
“மோகனு” என்று மூர்த்தி மகனை தூக்கி பிடித்த நொடி, அவரின் கைக்குள்ளே வைத்து மேலும் ஒரு அறை.
வலியில் துடி துடித்து போனான் மோகன். “அம்மா” என்ற அவனின் அலறல் மீனலோக்ஷ்னியை வாசலுக்கு வர வைத்தது.
“தம்பி, தம்பி என்ன இது” என்ற மூர்த்தி மகனை மறைத்து வில்வநாதன் முன் நின்றவர், “மேல கையெல்லாம் வைக்காதீங்க தம்பி” என்று சொல்லி கொண்டிருக்க,
நின்ற இடத்திலே எட்டி மோகனின் சட்டை காலரை பிடித்திழுத்து தன் முன் கொண்டு வந்தவன், மூக்கிலே வலுவாக குத்துவிட்டதில் ரத்தம் தரையில் கொட்ட ஆரம்பித்தது.
“அய்யோ” என்று மகனை விட மூர்த்தியின் அலறல் அதிகமாக கேட்டது.
சரிந்த மகனை தன் கையில் வைத்து கொண்டவர், கோவத்தில் “தம்பி போதும், இதுக்கு மேல கை வைச்சீங்க” என்று விரல் நீட்டி எச்சரித்தார்.
“நீட்டினா?” என்று புருவம் தூக்கி வில்வநாதன் கேட்க,
“எங்களுக்கும் ஆளுங்க இருக்கு” என்றார் அவர்.
“வர சொல்லுங்க” என்றவன், உதைத்த உதையில் மகனோடு தந்தையும் கீழே விழுந்திருந்தார்.
“ராசா. ராசா போதும்ப்பா” என்று பெரியவர் வந்து பேரன் கையை பிடித்து கொள்ள,
“இருங்க தாத்தா” என்றவன், அதே நிதானத்துடன் மூர்த்தி அருகில் சென்று அவரின் சட்டை பேக்கெட்டுக்குள் கை விட்டு போனை எடுத்தான்.
“பேசுங்க. யாரை வர சொல்றீங்களோ, வர சொல்லுங்க” என்று நின்றான்.
மூர்த்திக்கும் கோவம். போனை வாங்கி யார், யாருக்கோ அழைத்தார். சிலர் மறுக்க, சிலர் மட்டும் வருவதாக சொன்னார்கள்.
வாசலிலே இருக்கை போட்டு தாத்தாவை அமர வைத்தவன், “இன்னைக்கே இதை முடிச்சிடலாம்” என்றான் அறிவழகனிடம்.
மகளை வைத்து இதெல்லாம் நடப்பதில். தந்தைக்கு அவ்வளவு வருத்தம், வேதனை. திரும்பி மகளை பார்க்க, மீனலோக்ஷ்னி திடமாக தான் நின்றிருந்தாள்.
சுஜாதா மகளின் கை பிடித்திருந்தவர், “உள்ள போலாம் பாப்பா” என்றார்.
“இல்லைம்மா. ப்ளீஸ் நான் இங்கேயே இருக்கேன்” என்றாள் பெண்.
மோகன் அப்போதும் அவளை பார்த்து பல்லை கடிக்க, அவன் கண்ணுக்குள் வந்து நின்றான் வில்வநாதன்.
கையில் உள்ள காப்பை முறுக்கி மேலேற்றிவிட்டவன், “என்ன” என்று புருவம் தூக்கினான்.
மூர்த்தி மகனை அதட்டி, பார்வையை திருப்பினார். இதுவெல்லாம் ஆரம்பிக்காத வரை சரி. இனி வேறு வழியே இல்லை. எதிர்கொள்ள தான் வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்க, அவரின் ஆட்களும் வந்துவிட்டனர்.
உள்ளூர் என்பதால் சில நிமிடங்களிலே வந்துவிட்ட மூர்த்தியின் பங்காளிகள், உறவுகள் முதலில் பெரியவருக்கும் அவரின் பேரனுக்கும் வணக்கம் வைத்தனர்.
மூர்த்தி வேகமாக அவரின் தரப்பை எடுத்து வைத்தார். “நாங்க முறையா பொண்ணு கேட்டு போனோம். நிச்சய நாள் எல்லாம் குறிச்சாச்சு, இப்போ வந்து பெரிய வீட்டு ஆளுங்க இதுல தலையிடுறாங்க. இது எப்படி முறையாகும்” என்று பேசினார்.
“பாருங்க என் மகனை எப்படி அடிச்சிருக்கார்ன்னு. பிடிச்ச பொண்ணை கட்டுறதுக்கு இந்த பாடா”
“நீங்களே நியாயத்தை சொல்லுங்க, எப்போ இருந்து இதுல எல்லாம் பெரிய வீடு தலையிட ஆரம்பிச்சது”
“கூட சேர்ந்து தொழில் பண்றதுக்காக, இந்த அடாவடி எல்லாம் பண்ணலாமா? அடிமை மாதிரி நம்மளை நடத்த பார்க்கிறாங்க” என்று மூர்த்தி மூச்சு விடாமல், வரிசையாக குற்ற சாட்டை அடுக்கினார்.
அறிவழகனுக்கு இப்படி எல்லாம் பேச முடியுமா என்ற அதிர்வு.
மூர்த்தியின் ஆட்களுக்கே அவர் சொல்வதில் நம்பிக்கை இல்லை. அரசல், புரசலாக அவர்களுக்கும் பெண்ணின் விஷயம் தெரிந்திருந்ததில் தயங்கி தான் பெரியவரை பார்த்தனர்.
“இது பஞ்சாயத்தா? நீங்க எல்லாம் தான் தலைவர்களா?” என்று நிதானமாக கேட்டான் வில்வநாதன்.
“இல்லை, இல்லை தம்பி. மூர்த்திக்கு பேசத்தான் வந்தோம்” என்றனர் அவர்கள் பதற்றத்துடன்.
“சரி பேசுங்க” என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
“அது. அவங்க பேசி நிச்சயம் வரைக்கும் போயிருக்காங்க. இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது. அவங்களே பேசிக்கட்டுமே” என்றார் ஒருவர்.
“என்னப்பா? அறிவழகன் எங்க குடும்பம். நாங்களே பேசி முடிச்சி விட்டுடுறோம்” என்றார் பெரியவர்.
“பெரியப்பா. எங்களை கட்டாயப்படுத்தி தான் இவர் நிச்சய நாளை குறிச்சார். எங்களுக்கு விருப்பமில்லை” என்றார் அறிவழகன் முன்வந்து.
“ஊருக்கு மட்டுமில்லை, எங்க குடும்பத்துக்கும் நீங்க தான் பெரியவர். மிரட்டி பொண்ணு கேட்கிறார். இதுல இருந்து எங்களை விடுவிச்சு விடுங்க” என்றார் வேண்டுகோளாக.
“இதுக்கு என்ன பதில் சொல்றீங்க” வில்வநாதன் கேட்க, வந்தவர்கள் அமைதியாக நின்றனர்.
“உங்களை வர வைச்சது இதுக்கு தான். நாங்க முறையா சொல்றோம். இனி பொண்ணு கேட்டு இவங்களை தொந்தரவு பண்ண கூடாது. மீறி பண்றவங்க, என்னை எதிர் கொள்ள தயாரா இருக்கணும்” என்றான் உத்தரவாக.
இவங்களை எதிர்க்கிறதா? முகம் பார்த்து கொண்டவர்கள், மூர்த்தி, மோகனுடன் கிளம்ப பார்த்தனர்.
“ம்ஹூம். அவன் வேணும்” என்று மோகனை நிறுத்தி வைத்தான் வில்வநாதன்.
மூர்த்தி எவ்வளவு முயன்றும் அவரை ஆட்கள் வெளியேற்றிவிட்டனர்.
“எங்க கேட்டுக்குள்ள வந்து பொண்ணை தூக்கிற அளவு சண்டியரா நீ” என்று மோகனிடம் கேட்டவன், விட்ட அறையில் அங்கேயே மயங்கி சரிந்தான். அவனை அந்த நொடியே அவர்கள் குடோனிற்கு மாற்றிவிட்டான்.
அறிவழகனோடு, அவர்கள் குடும்பமும் நிம்மதி கொண்டதுடன், ஓய்ந்தும் போயினர்.
இதற்காக தான் இந்த ஒரு வாரமாக எவ்வளவு போராட்டம், வேதனை.
“இனி என்னை மீறி உங்க பொண்ணுகிட்ட வர மாட்டாங்க. அவங்களை படிக்க வைங்க. இந்த கல்யாண பேச்சு எல்லாம் வேண்டாம்” என்றான் அறிவழகனிடம்.
அறிவழகன் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டவர், பெரியவர் கை பிடித்து நன்றி சொன்னார்.
“நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்று கேட்டான் வில்வநாதன்.
“அவன்மேல் நிச்சயம் தப்பு இருக்காது. முன்கோபக்காரன் தான். ஆனா அநியாயமா எல்லாம் நடந்துக்க மாட்டான்” என்று அடித்து சொன்னான் தம்பி.
“அதையும் பார்ப்போம்” என்றவன், தலை குனிந்தே இருந்த மீனலோக்ஷ்னியை பார்த்தான்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பவளை அழுத்தமாக பார்த்தவனின் போன் ஒலிக்க தள்ளி சென்றான்.
மீனலோக்ஷ்னிக்கோ எல்லாம் முடிந்த நிம்மதியில் ஆசுவாச கண்ணீர். வில்வநாதன் விலகி செல்லவும் தான் அவருக்கு நன்றி சொல்லாதது உறைத்தது.
அவளின் கையில் இருந்த அவன் துண்டிலே கண்ணீரை ஒற்றி கொண்டவள், வில்வநாதனை தேடினாள்.
தள்ளி போன் பேசி கொண்டிருக்க, அறிவழகன் குடும்பம் கிளம்பியது. தலையசைத்து எல்லோருக்கும் விடை கொடுத்தான் வில்வநாதன்.
பெரியவருக்கு மீண்டும் நன்றி சொல்ல, “இனி அவ எங்க வீட்டு பொண்ணு. எங்க பொறுப்பு” என்றார் தனபாலன்.
“என் பேரன் சொல்லிட்டான் இல்லை. மீனா பொண்ணை அவன் பார்த்துப்பான்” என்றார்.
மற்றவர்கள் அதை பொறுப்பாக எடுத்து கொள்ள, ஒருவர் மட்டும் வேறு மாதிரி நினைத்தார்.
தனபாலனிடம் தனியே அதை கேட்கவும் செய்தார். “மீனலோக்ஷ்னியை உங்க பேரனுக்கு எதுவும்?” என்று நிறுத்த,
தனபாலனுக்கும் அந்த ஆசை உண்டென்பதால் சட்டென மறுக்கவில்லை. இருவரும் ஜோடியாக வந்ததை நினைத்து முகம் மலர்ந்தவர், “நடந்தா நல்லா இருக்கும்” என்றும் முணுமுணுத்தார்.
அதையே பதிலாக எடுத்து கொண்டு அவர் கிளம்ப, பெரியவர் அதை மறுக்கவும் மறந்து போனார்.
விளைவு இவர்கள் வீடு சென்று சேருவதற்கு முன், மொத்த ஊருக்கும் விஷயம் சென்று சேர்ந்துவிட்டது.
வில்வநாதன், மீனலோக்ஷ்னி ஜோடியாக்கபட்டு, ஊராரே அதை உறுதியும் செய்துவிட்டிருந்தனர்.