“இருக்கு தாத்தா. உங்க ப்ரெண்டோட மகன் தானே” என்றவன், “வணக்கம் அங்கிள்” என்று கை குவித்தான்.
அறிவழகன், “வணக்கம் தம்பி” என்றவர், “எங்க சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை. என் தங்கச்சி மகன் பேசினதை பெருசா எடுத்துக்காதீங்க” என்றார்.
தாத்தாவும் பேரனை பார்க்க, “எல்லோரும் உட்காருங்க. காபி எடுத்து வர சொல்றேன்” என்றவன், திரும்ப குடிக்க கொண்டு வர செய்தான்.
இந்த முறை மறுக்காமல் அனைவரும் பருக, அறிவழகனின் மனைவி கையில் காபியுடன் வெளியே சென்று வந்தார்.
சில நிமிட அமைதிக்கு பிறகு, தனபாலன் பேரனிடம் விஷயத்தை சொன்னார்.
“அரவிந்தன் ரைட். அவரை உடனே வெளியே எடுக்க முடியாது. ட்ரைவர்க்கு நல்ல அடி. ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு. பார்த்துட்டு தான் சொல்ல முடியும்” என்றான் வில்வநாதன்.
“தம்பி. அரவிந்தன் கொஞ்சம் முன்கோபக்காரன் தான். ஆனால் விஷயம் இல்லாம அப்படி நடந்துகிற ஆள் கிடையாது” அறிவழகன் சொல்ல,
“காரணம் என்னவா இருந்தாலும், எங்க இடத்துல வைச்சு நடந்ததை ஏத்துக்க முடியாது அங்கிள். எங்ககிட்ட பேசியிருக்கணும்” என்றான் வில்வநாதன்.
அவன் கூற்றை மறுக்க முடியாமல் நிற்க, “இன்னமும் அரவிந்தன் வெளியே வந்தா, கல்யாணம் பண்ற எண்ணத்துல இருக்கியா அறிவழகா?” என்று பெரியவர் கேட்க,
“கண்டிப்பா பெரியப்பா. அந்த மூர்த்தி ஊர்ல இல்லை. அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு பார்க்கிறேன்” என்றார் அவர்.
“யாருக்கோ பயந்துகிட்டு, படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்றீங்களா?” வில்வநாதன் ஏற்றுக்கொள்ள முடியாமல் கேட்டான்.
“எனக்கு மட்டும் ஆசையா தம்பி. அந்த மூர்த்தி சரியில்லை. என் பொண்ணோட பாதுகாப்பை பார்க்கணும்” என்று அறிவழகன் வேதனையுடன் சொன்னார்.
“அவங்க வீட்டு மூத்த மருமகளை கூட இப்படி தூக்கிட்டு வந்து தான் கல்யாணம் பண்ணாங்க தம்பி. அந்தாளுக்கு இதெல்லாம் புதுசில்லை” என்றனர் மற்றவர்கள்.
“உங்க பொண்ணோட பாதுகாப்பு தான் பிரச்சனைன்னா இனி அது எங்க பொறுப்பு. படிக்கிற வயசுல படிக்க வைங்க. அதுவும் அவசியம் தான்” என்றான் வில்வநாதன்.
“இனி நான் பார்த்துகிறேன் அறிவழகா. நீ கவலைப்படாத” என்றார் தனபாலன் உறுதியாக.
இருவர் உள்ளே வந்தவர்கள், காரை எடுத்து செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. சுஜாதா நடுங்கி போய்விட்டார்.
வினய்க்கும் வேர்த்து போக, “இவங்க நம்ம ஊர் இல்லை. வெளியூர் ஆளுங்க போல” என்றான்.
நேரத்தை பார்த்துக்கொண்ட வில்வநாதன், “நம்ம எல்லைக்குள்ள தான் இருப்பாங்க” என்றவன், போன் எடுத்து பேசினான்.
சுஜாதா நிற்க முடியாமல் அமர்ந்து விட, வினய் அத்தை கை பிடித்து நின்றான்.
“எங்க வீட்டு பொண்ணுன்னு தானே இவ்வளவு அமைதியா நிக்கிறார். நாம இவரை நம்ப வேண்டாம் அத்தை. ஆளுங்களுக்கு பேசலாம்” என்று வினய் சொல்லி போன் எடுக்க,
வில்வநாதன் திரும்பி ஒரு பார்வை. “ஸ்டே காம்” என்றான் அதட்டலாக.
“இல்லை. எல்லையில் இருக்கிற ஆளுங்ககிட்ட சொல்லி” என்றவன், வில்வநாதனின் பார்வையில் மொபைலை வைத்துவிட்டான்.
“இவங்களை விட வேறு யாரும் பாப்பாவை பத்திரமா கொண்டு வர முடியாது வினய்” என்றார் சுஜாதாவும்.
அடுத்த ஐந்தாம் நிமிடம் அதே கார் அலுங்காமல், குலுங்காமல் கேட்டிற்குள் வந்தது. பெண் அதிலிருக்க, சுஜாதாவின் மூச்சு சீரானது.
நடுக்கத்தோடு இருவரும் காரை நிறுத்தி இறங்க, பெண் அப்போது தான் தூக்கம் கலைந்து, கண்களை தேய்த்து விட்டு கொண்டிருந்தாள்.
இருக்குமிடம் விட்டு அசையாமல் நின்றிருந்த வில்வநாதன் முன் இருவரும் நின்ற நொடி, இருவரின் கன்னமும் பழுத்து போனது.
அந்த சத்தத்தில் பெண்ணின் தூக்கம் முற்றிலும் பறந்து போக, கண்களை விரித்து வில்வநாதனை பார்த்தாள்.
அந்த இருவரையும் அங்கேயே கட்டி வைக்க, சுஜாதா மகளை கீழிறங்க சொன்னார்.
மீனலோக்ஷ்னி அச்சத்துடன் கீழிறங்க, வில்வநாதனின் அசையா பார்வை அவளை தடுமாற வைத்தது.
தன் முன் நின்ற பெண்ணவளிடம், “தூக்கம் போதுமா?” என்று கேட்டான்.
அவள் ஆமா, இல்லை என்று இருபக்கமும் தலையசைக்க, “இப்போ என்ன நடந்ததுன்னாவது தெரியுமா?” என்று மேலும் கேட்டான்.
அவளுக்கு எதுவும் புரியவில்லை. விழித்து நின்றவளை கைகட்டி பார்த்தான்.
மணமகள் அலங்காரத்தில் நின்றவளின் அசரடிக்கும் அழகு அவன் கண்ணுக்கு தெரியவில்லை. மாறாக அவளின் பொறுப்பற்ற தன்மை தான் அவன் கண்களை இடுங்க வைத்தது.
குழந்தை தனம் மிச்சமிருந்த முகம், பெற்றவளின் கை பிடித்து நிற்க வில்வநாதன் நிதானத்திற்கு வந்தான்.
“தண்ணீர் கொண்டு வா” என்று வினய்க்கு சொல்ல,
அவன் பிரமிப்போடே சென்று எடுத்து வந்தான். நின்ன இடத்துல இருந்தே அஞ்சு நிமிஷத்துல வர வைச்சுட்டாரே! யோசித்தபடி வந்த வினயிடம், சுஜாதாவிற்கு கொடுக்க சொன்னான். அவர் நன்றியுடன் வேகமாக குடித்தார்.
“மாமா கேட்கிறார் அத்தை” என்றான் வினய்.
“நீங்க உள்ள போங்க” என்று இருவரிடமும் சொன்னவன், “போய் முகம் கழுவிட்டு வா” என்று மீனலோக்ஷனிக்கு தோட்டத்தின் பக்கம் காட்டினான்.
பக்கத்தில் இருந்த காருக்கு செல்ல, ட்ரைவர் வேகமாக லாக் எடுத்தார். அதில் இருந்து அவன் சிறிய டவலை கொண்டு வந்து கொடுத்தான்.
பெண் தயங்கியபடி வாங்கி முகம் துடைத்து கொள்ள, நெற்றியில் இருந்த பொட்டு டவலுடன் வந்தது.
வில்வநாதனிடம் டவலை நீட்டி, பின் இழுத்து கொள்ள, வில்வநாதன் புருவம் சுருங்கியது.
“அதுல என் ஸ்டிக்கர் இருக்கு” என்று வேகமாக சொன்னவள், எடுத்து காட்டினாள்.
“ம்ம். வைச்சுக்கோ” என, நெற்றியில் சரியாக வைத்து கொண்டவள், “டவலை வாஷ் பண்ணிடுறேன்” என்று அவன் மறுக்க வருவதை கூட கேட்காமல் ஓடி சென்று அலசி கொண்டு வந்தாள்.
“இதை ஈரத்தோட உள்ள வைக்கணுமா?” வில்வநாதன் கேட்க,
“காய வைச்சு தரணுமா?” என்று அவனிடமே கேட்டாள் பெண்.
“அப்புறம் ஐயன் யார் பண்ணுவா?” என்று கேட்க,
“நான், நானே பண்னடுறேன்” என்று பெண் அவசரமாக சொன்னாள்.
“ஐயன் பாக்ஸ் வேணுமா?” அவன் சீரியசாக கேட்க,
“ஆ. ஆமா” என்றவளுக்கு, இவர் கேலி பண்றாரா என்ற சந்தேகம் வந்தது.
“தூக்கம் தெளிஞ்சிடுச்சா” என்று கேட்க,
“நீங்க அவங்களை அடிச்சதுலே தெளிஞ்சிடுச்சு” என்றாள் பெண் கண்களை விரித்து.
“ரைட். தூக்கம் முக்கியம் தான். ஆனா இந்தளவு தூங்கணும்ன்னு இல்லை. உஷாரா இருக்கணும்” என்றான்.
என்ன நடந்தது என்று புரியாவிட்டாலும், சுஜாதாவின் கலங்கிய முகம் அவளை தலையாட்ட வைத்தது.
“உள்ள போலாம்” என்று இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.
இருவரும் ஒரே நேரத்தில் காலடி எடுத்து வைத்து வந்ததை கவனித்திருந்த தனபாலனின் ஆசை இன்னும் கூட தான் செய்தது. ஆனால் அதை எப்போதும் போல உள்ளேயே அமுக்கி கொண்டார்.
இந்த வயதில் விவாகரத்து வாங்கும் தெம்பு இல்லை அவருக்கு.
“நல்ல ஜோடி பொருத்தம்” என்று பெருமூச்சுடன் மெல்ல முணுமுணுத்தார்.
அதை அருகிலே இருந்தவர் கேட்டுவிட்டதை தனபாலன் கவனித்திருக்கவில்லை.
சுஜாதா மூலம் விஷயம் தெரிந்திருந்த அறிவழகன் மகள் வரவும் ஓடி வந்து அவளின் கை பிடித்து கொண்டவர், “ரொம்ப நன்றி தம்பி” என்றார்.
மற்றவர்களும் பெண்ணின் நலனை பார்த்து, ஆசுவாசம் கொண்டவர்கள், “இங்கங்கிறதால தப்பிச்சோம். இதுவே வெளியேன்னா என்ன பண்ணியிருப்போம்” என்று பதட்டமும் கொண்டனர்.
“நம்ம வீட்டுக்குள்ளே வந்து பொண்ணை தூக்குற அளவு தைரியம் வந்துடுச்சா. இதை விட கூடாது ராசா” என்று தனபாலன் சொல்ல,
“இனிமே இது என் பிரச்சனை தாத்தா. அவங்களை நான் பார்த்துகிறேன்” என்றான் வில்வநாதன் நிதானமாகவே.