வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார்.

பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். ‘இந்த அப்பா எப்போதான் வருவார்?’

‘ஆன்ட்டி வேற என்ன நினைச்சாங்களோ? என் மகன்கிட்ட உதவியும் வாங்கிட்டு, சண்டையும் போடுறான்னு. காட் அப்படி மட்டும் இருக்க கூடாது. எல்லாம் இவரால. இங்கிருந்து கிளம்புற வரை அவர் பக்கமே திரும்பிட கூடாது’ என்று மனதில் வில்வநாதனை அர்ச்சித்து கொண்டாள்.

கஜலக்ஷ்மி அவளை பார்த்து புன்னகைத்தவர், “பாரு நான் உன்னை ராணின்னு கூப்பிட்டது சரியா இருக்கு” என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

‘கண்டிப்பா இவங்களும் வில்லங்கமா தான் சொல்வாங்க’ பெண் நினைக்க,

அதே போல, “ராஜாகிட்ட இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டை போட ராணியால மட்டும் தான் முடியும்” என்றார்.

“பாட்டி ப்ளீஸ். அவர் இங்க சாப்பிட வைச்சதுக்கு தான் அந்த பேச்சு பேசினார்” என,

“இருக்கும். என் பேரன் அப்படி தான்” என்று தலையசைத்தார் அவர்.

“என்ன உங்க காதுல என்னை திட்டுறாங்களா மேடம்” என்று வில்வநாதன் கேட்க,

“ஒரேடியா அப்படி சொல்ல முடியாது ராஜா” என்றார் அவரும் வில்லங்கமாய்.

‘நோ, நான் கண்ட்ரோல மிஸ் பண்ண கூடாது. வேணும்ன்னே வம்புக்கு இழுக்கிறாங்க’

“லட்சுமிமா. சாப்பாடு பரிமாற சொல்லுமா” என்றார் தனபாலன்.

ஆட்கள் பரிமாற, மீனலோக்ஷ்னி தனக்கு தேவையானதை மட்டும் வைத்து  சாப்பிட்டாள்.

காலையில் இருந்து சரியாக சாப்பிடாத வயிறு, உணவை காந்தமாக உள்ளிழுத்து கொண்டது. “மீனா பொண்ணு. இதை வைச்சுக்கோ. நல்லா இருக்கும்” என்று பாட்டி பார்த்து வைக்க,

“இதையும் வை லட்சுமி. நல்லா சாப்பிடும்மா” என்றார் தனபாலன்.

“அவளுக்கு இது பிடிக்கும். அறிவழகன் அடிக்கடி சொல்லுவார். ம்ஹூம். அதை விட, இது சாப்பிடுமா” என்று தயாளன் அவளை கவனிக்க, பெண் பிள்ளை என்ற அன்பு, கரிசனை, தயாளனின் ஏக்கம் எல்லாம் அங்கு நன்றாகவே வெளிப்பட்டது.

பொறுக்குமா மகனுக்கு. “க்கும்” என்று கனைத்தான் வில்வநாதன்.

அதுவரை அவனுக்கு பிடித்த பதார்த்தங்களை எல்லாம் தயாளன் மனைவிக்கு ஜாடை காட்டி வைக்க சொல்ல, அவனோ  “எனக்கு வேணாம் மாம். போரடிக்குது. ப்ளீஸ். நானே வைச்சுக்கிறேன்” என்று வீம்பாக மறுத்துவிட்டதை வசதியாக மறந்துவிட்டான்.

மீனலோக்ஷ்னி உஷாராக, “அவளோட வீட்ல பண்றது போல ஸ்பூன் பீடிங் பண்ணாதீங்க பாட்டி. மேடத்தை  கொஞ்சம் வளர விடுங்க” என்றான்.

‘எங்க வீட்ல எனக்கு ஸ்பூன் பீடிங் பண்றதை இவர் எப்போ பார்த்தாராம்?’ பெண்ணுக்கு வார்த்தைகள் வெளிவர துடித்தது.

“இருக்கட்டும் ராசா. சின்ன பிள்ளை தானே?” என்று தனபாலன் சொல்ல,

“நீ தேங்காய் பால் எடுத்துக்கோம்மா” என்றார் தயாளன்.

“ஏன் மேடம் குருமா எல்லாம் சாப்பிட மாட்டாங்களாமா? விட்டா ஊட்டிடுவார் போல” என,

“உங்களுக்கு வேணும்ன்னா, நீங்க உங்க அப்பாவை ஊட்டிவிட சொல்லி சாப்பிடுங்க, யார் வேணாம்ன்னா இப்போ” என்று மீனலோக்ஷ்னி பேசிவிட்டாள்.

“நான் என்ன உன்னை மாதிரி பாப்பாவா?”

“நீங்க பாப்பா இல்லை. முரட்டு ராஜா”

மற்றவர்கள் வாய்க்குள் சிரிக்க, தயாளன் சத்தமாக சிரித்துவிட்டவர், “சரியா சொன்னம்மா. இப்போன்னு இல்லை. சின்னதுல இருந்தே அவன் முரடு தான்” என்றார் மகனை வம்பிழுத்து.

“உங்க மகனுக்கு ரொம்ப கசக்குது போல மாமா. ஸ்வீட் சாப்பிடுறாரான்னு கேளுங்க பாட்டி” என்று மீனலோக்ஷ்னி அப்பாவியாக சொல்ல,

“பாட்டி உங்க உள்ளூர் அழகியை வாய மூட சொல்லுங்க” என்றான் அவன் முறைத்து.

“அவ உனக்கும் அழகி தான் ராஜா” என்றார் கஜலக்ஷ்மி.

“பாட்டிடிடி”

“எல்லாம் ஒரே ஊர் இல்லை. அதை சொன்னேன்” என்று பின் வாங்கிவிட்டவர், “உனக்கு ஐஸ்கிறீம் எடுத்துட்டு வர சொல்லவா?” என்று பெண்ணை உபசரித்தார்.

“அவளுக்கா, உங்களுக்காம்மா?” என்று பானுமதி அம்மாவை ஏறிட,

“இரண்டு பேருக்காகவும் இருக்கும்மா. அன்னைக்கு மண்டபத்துல வைச்சு சாக்லேட் டிப் சாப்பிட்டதை பார்க்கணுமே” என்று எடுத்து கொடுத்தான்.

‘அடப்பாவி. அது எப்போ நடந்தது! இப்போ போட்டு கொடுக்கிறதை பாரு’ என்று கண்களை விரித்தவள், “எனக்கு வேணாம் பாட்டி” என்றாள் ரோஷத்துடன்.

“சாக்லேட் டிப் தான் பிடிக்குமோ?” என்று வில்வநாதன் கிண்டலாக கேட்க,

“ஆமா. அப்படி தான். கேட்டா வாங்கி கொடுத்துடுவீங்களா?” என்று கேட்டாள் அவள்.

“ராசா. போதும்யா. அவளை வம்பு பண்ணாத” என்ற தனபாலன், உணவு முடியவும் இனிப்பை எடுத்து வர சொன்னார்.

எல்லா நேரமும் இனிப்பு இருப்பதில்லை. உணவு கட்டுப்பாடு அதிகமே. ஆனால் இன்று கஜலக்ஷ்மி செய்ய சொல்லியிருக்க, பானுமதி அம்மாவை ஆச்சரியமாக பார்த்தார்.

விருந்துக்கு, சிறப்பு விருந்தினர் என்றால் மட்டுமே செய்வது பழக்கம். மீனலோக்ஷ்னிக்கு அவர் அளிக்கும் வரவேற்பில், மகளின் புருவங்கள் சுருங்கியது.

“உனக்கு ஊஞ்சல் பிடிக்கும் இல்லை. இங்க இருக்கு. வா” என்று தயாளன் அவளை அழைக்க,

அப்போதே பார்த்து, அதன் அழகில் ஈர்க்கப்பட்டிருந்தாலும், தயங்கினாள் பெண்.

“வாம்மா. என்ன யோசனை” என்று தனபாலனுடன் மூவருமாக அங்கு சென்றனர்.

மேல் கூரையிட்டு, பலம் வாய்ந்த தேக்கில், அழகான வேலைப்பாட்டுடன், இருவர் தாராளமாக அமரமளவு, மெல்லிய மணி ஓசையுடன் இருந்த ஊஞ்சலில், ஆவலாக அமர்ந்து கொண்டாள்.

முகம் அப்படியே விளக்கு போட்டது போல் ஜொலிக்க, மெல்ல அசைந்தாடினாள்.

“இவ்வளவு ஆசையை வைச்சுகிட்டா தயங்கி நின்னா?” என்றார் கஜலக்ஷ்மி.

வில்வநாதன் அவளின் ஜொலித்த முகத்தை பார்த்து தோள் குலுக்கி கொண்டவன், போன் ஒலிக்க தள்ளி சென்றான். “என்னமா ஸ்பெஷல்?” என்று கேட்டார் பானுமதி.

“நானே உன்கிட்ட பேசணும்ன்னு இருந்தேன் பானு. இவளை நம்ம ராஜாக்கு பேசுவோமா?” என்றார் ஆர்வமாக.

பானுமதிக்கு இந்த சந்தேகம் இருந்ததில், “உங்க ராஜாக்கு ஓகேவாமா?” என்று மகனை பற்றி விசாரித்தார்.

“அவனுக்கு வேணாமாம்” என்றார் வாடிபோய்.

“அப்புறம் எப்படி இந்த ஆசையை வைச்சிருக்கீங்க?”

“சொன்னா கேட்டுப்பான்ற நம்பிக்கை தான். சரிதானே ராஜா?” என்று வந்த பேரனிடம் கேட்டார்.

“உங்க கான்வோ தெரியாம எதை சரி சொல்லட்டும் நான்”

“அதான். மீனா பொண்ணை உனக்கு பேசத்தான்”

“இது எப்போலிருந்து” என்று அவர்களுடன் இணைந்து கொண்ட தயாளன் எல்லார் முகத்தையும் கேள்வியாக பார்த்தார்.

“எனக்கு ரொம்ப வருஷமா மாப்பிள்ளை. உங்க மாமியாருக்கு இப்போ கொஞ்ச மாசமா” என்றார் தனபாலன்.

“உங்களுக்கு ஓகே இல்லையா?” என்று கஜலக்ஷ்மி மூவரையும் கேட்டார்.

“எனக்கு சந்தோஷம். நம்ம குடும்பத்துக்கு நல்லாவே பொருந்தி போவா” என்று தயாளன் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள,

“அவ உங்களை மாதிரி குணம் கொண்டவ. அழுத்தம் அதிகம்” என்றான் வில்வநாதன் பட்டென.

“ஏன் அதிலென்ன உனக்கு குறை?” தயாளன் மகனிடம் கேட்டார்.

“என் அம்மா மாதிரி நானும் சந்நியாசியா வாழணுமா?”

“வில்வநாதா உன்னை பத்தி மட்டும் பேசு” என்று கண்டித்தார் பானுமதி.

“நானும் என்னை பத்தி தான் சொல்றேன். எதாவதுன்னா இவங்க பொட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவாங்க. நம்மை யோசிக்க மாட்டாங்க. என்னை மாதிரி நாளைக்கு என் மகனும் கஷ்டப்படணுமா?”

“உன்னை கஷ்டப்படுத்திட்டேன் தான். அதுக்காக எல்லோரும் அப்படியே இருக்க மாட்டாங்க வில்வா” என்றார் தயாளன் பொறுமையுடன்.

“அதுக்கென்ன கேரண்டி. இதோ என் தாத்தா, பாட்டி கூடத்தான் உங்களை மலையாட்டம் நம்பினாங்க”

“அவங்க நம்பிக்கைக்கு இப்போவும் நான் உண்மையா தான் இருக்கேன். என்னோட கடைசி மூச்சு வரை பானு தான் என் பொண்டாட்டி, நீ மட்டும் தான் என் மகன்”

“அப்படி மட்டும் எதாவது பண்ணியிருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் உங்க மகன் யாருன்னு” என்று கர்ஜித்துவிட்டான் வில்வநாதன்.

“டேய் நான் அப்படி சொல்லலைடா. கடவுளே. அது” என்று தயாளன் பதறிவிட,

“நீங்க எப்படி சொல்லியிருந்தாலும் இது தான் என் பதில்” என்று மூச்சு வாங்கி நின்றான் மகன்.

தயாளன் சொல்ல வந்தது தவறாக போய்விட்டது என்பதை மற்றவர் புரிந்து கொள்ள, தயாளன், ‘ச்சு’ என்று நெற்றியில் அறைந்து கொண்டார்.

“ராசா. கோவாடாதயா. மருமகன் சொல்ல வந்தது வேற. நீ கொஞ்சம் நிதானத்துக்கு வாப்பா” என்று தனபாலன் பேரனின் கைபற்றி தட்டி கொடுத்தார்.

மீனலோக்ஷ்னி அவன் சத்தத்தில் பதறி எழுந்து நிற்க, ஊஞ்சல் அவளை இடித்து தள்ளிவிட்டது.

“அம்மா” என்ற அவளின் சத்தத்தில் எல்லாம் இவளிடம் ஓடிவர, இளையவன் வேகமாக வந்து ஊஞ்சலை நிறுத்தி, அவளின் தோள் பற்றி தூக்கிவிட்டான்.

“அடிபட்டிடுச்சா” என்று அவன் ஆராய, முட்டிக்கு கீழ் லேசாக தோள் சிராய்ந்துவிட்டது.

மேக்சியில் நன்றாக தெரிய, “இப்படி உட்காரு” என்று ஊஞ்சலில் அவளை அமர்த்தினான்.

கஜலக்ஷ்மி மருந்து எடுத்து வர சொல்ல, “எனக்கு ஒன்னுமில்லை, அது சின்ன காயம் தான்” என்று எழ போனாள்.

“இப்போ எதுக்கு எழுந்துக்கிற, உட்காரும்மா” என்று திரும்ப அமர வைத்த பாட்டி, காலுக்கு மருந்து போட போக,

“ப்ளீஸ் பாட்டி. நானே போட்டுகிறேன்” என்று வாங்கி கொண்டாள்.

“முழங்கையிலும் அடிபட்டிருக்கு பாரு” என்று வில்வநாதன் கவனித்து சொல்ல, பானுமதி அவளுக்கு உதவினார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி” என்று பெண் மறுக்க,

“அத்தை சொல்லு” என்றார் அவர் மகனை பார்த்தபடி.

‘ஓஹோ எல்லாம் ஒரே கட்சியா?’

“அம்மா நீங்க அறிவழகன் அண்ணாகிட்ட பேசுங்க” என்றார் பானுமதி இவர்கள் மட்டும் இருக்கும் நேரம்.

“பேசுங்க. ஆனா உங்க அழகியே, இந்த சம்மந்தத்தை வேணாம்ன்னு தான் சொல்லுவா” என்றான் வில்வநாதன் உறுதியாக.