“அந்த காம்பவுண்ட் எனக்கு பிடிக்கல தாத்தா” என்று தோள் குலுக்க,
“பிடிக்கலையா? அதுக்கு இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணுவியா? இந்த சுவரை கட்ட எத்தனை லட்சம் ஆகும்ன்னு தெரியுமா?” என்று தயாளன் மகனின் செயலை கண்டித்தார்.
“எல்லா நேரமும் பணத்தை மட்டுமே பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க தாத்தா”
“உன் அம்மா தான் கோடீஸ்வரி. உன் அப்பா அப்படி இல்லை, ஞாபகம் வைச்சுக்கோ” என்றார்.
“அவரை ஞாபகம் வைச்சு தான் இதெல்லாம்ன்னு சொல்லிடுங்க” என்று அவன் விலகி நடக்க,
“வில்வா. நில்லு” என்றார் தந்தை.
அழுத்தமாக கண்களை மூடி திறந்தவன், ‘சொல்லுங்க’ என்பதாய் அவர் முன் நின்றான்.
“மாப்பிள்ளை, இது நாங்க எல்லாம் சேர்ந்து எடுத்து முடிவு தான். ஒவ்வொரு முறையும் இந்த கேட்டுக்கும், அந்த கேட்டுக்கும் நடக்க எனக்கு சிரமமா இருக்கு. அதான்” என்று தனபாலன் சமாளிக்க,
“மாமா. எனக்கு இவனை தெரியும். உங்களையும் தெரியும்” என்று அவரின் பேச்சை தடை செய்த தயாளன்,
“நீ பண்றது சின்ன பிள்ளை தனமா இருக்கு. இந்த காம்பவுண்ட் உடைக்கிறதால மட்டும் ஒன்னும் ஆகிடாது” என்றார் மகனிடம்.
“அது எனக்கு தெரியும். ஆனாலும் செய்வேன். சின்ன பிள்ளை தனமா இருந்தாலும் பரவாயில்லை. அப்படி தான் செய்வேன்” என்றான் வில்வநாதன்.
தயாளனுக்கு மகனின் மனது புரியாமல் இல்லை. தனி தனி வீடு என்றில்லாமல், ஒரே வீடாக மாற்ற பார்க்கிறான்.
ஆனால் இதனால் மட்டும் எல்லாம் மாறிவிடாதே?
‘நான் மாற வேண்டும். என் மனது மாற வேண்டும். சிலதை ஏற்று கொள்ள வேண்டும். சிலதை மறக்க வேண்டும்’
இப்போதெல்லாம் அதிகமாக தவிக்கிறார், யோசிக்கிறார், குழம்பி கொள்கிறார்.
வயது கூடிவிட்டதா, பக்குவம் அதிகமாகி விட்டதா, தனிமை கொள்கிறதா, குடும்பத்தை தேடுகிறதா? எதுவோ ஒன்று தன் உறுதியில் இருந்து பின் வாங்க ஆரம்பிக்கிறார்.
அதற்கு சாட்சியே இந்த வீட்டிற்கு குடி வந்தது. அதை இன்னும் பெருக்குவதை போல மகனின் செயல்கள் இருக்க, குற்ற உணர்ச்சி தான் தந்தைக்கு.
“சரி. நீ செய். நைட் அங்க வா. உன்கூட பேசணும்” என்றார் தயாளன்.
“வரலை” என்றான் நொடியும் இல்லாமல்.
“வில்வா”
“எனக்கு வேலை இருக்கு. தாத்தா நீங்க பாருங்க” என்று வீட்டுக்குள் நடந்துவிட்டான்.
தனபாலனுக்கு பேரனின் செயல் சங்கடம். மருமகனின் வாடிய முகத்தில் தானும் வாட்டம் கொண்டார்.
“சரியாகிடுவான் மாப்பிள்ளை. கொஞ்ச டைம் கொடுப்போம்” என்றார் சமாதானமாக.
“இன்னும் கூட டைம் எடுத்துக்கட்டும் மாமா. ஆனா என்னோட பேச மாட்டேங்கிறான். முன்னவாவது வருவான். பேசுவான். இப்போ அதுவுமில்லை” என்று சென்றார்.
பேரனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டார் தனபாலன்.
அன்றைய நாள் மீட்டிங் சென்று காரில் வீடு திரும்பி கொண்டிருந்த வில்வநாதன், “எல்லாம் ஓகே?” என்று அரவிந்தனிடம் கேட்டான்.
“எஸ் சார்” என்றவனிடம் அந்த பழைய எனர்ஜி இல்லை.
“என்னாச்சு மேன்?”
“அதான் சார். என் லவ். இன்னமும் அவங்க வீட்ல ஒத்துக்கலை”
“ம்ம். நேரம் கொடுத்து பாருங்க”
“வில்லங்கமே அங்க தான் சார். இத்தனை நாள் காத்திருந்தோம். உனக்கும் வயசு ஆகுது. இனியும் முடியாது. பொண்ணு பார்க்க போறோம்ன்னு என் அப்பாம்மா புதுசா ஆரம்பிக்கிறாங்க சார்” என்றான் நொந்து போய்.
“ஹாஹா. சுத்தி சுத்தி அடிக்கிறாங்க போல” என்று வில்வநாதன் புன்னகைக்க,
“வலிக்குது, முடியலைன்ற ரேஞ்ச்ல தான் நானும் இருக்கேன் சார்” என்ற அரவிந்தனுக்கும் மெல்லிய புன்னகை.
“போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் கெத்தா போய்ட்டு வந்தவருக்கு இதென்ன ஜுஜுபி சோதனை?”
“யார், அந்த மூர்த்தியோட பையனா?” வில்வநாதன் புருவங்கள் இடுங்கி கொண்டது.
“ஆமா சார். மீனு இருக்கிற ஏரியால தான் இருக்கான் போல. அவனோட இருந்த பையன் தான் இவகிட்ட வம்பு வளர்க்க ட்ரை பண்றான்னு சொன்னா”
“எப்போலிருந்து”
“இந்த ஒரு வாரமா”
அந்தளவு தைரியமா? “அவங்க அட்ரஸ் கொடுங்க. என் கான்டெக்ட் வைச்சு கண்ட்ரோல் பண்ணலாம்” என்று வாங்கி கொண்டவன், அன்றே பேசி அவளின் பாதுகாப்பை உறுதி செய்தான்.
“உங்க மாமாகிட்ட சொல்லிடுங்க ” என,
“தேங்க்ஸ் சார். எங்க அத்தை வெறுத்து போய் இப்போவே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அவ ப்ரொஜெக்ட் முடிச்சா போதும்ன்னு கல்யாணம் வைச்சுடுவாங்க” என்றான்.
“பிரச்சனைன்னு வந்தாலே நீங்க இதை தானே பண்றீங்க?”
“அப்படி இல்லை சார். மாமா அவ வேலைக்கு போகட்டும்ன்னு யோசிச்சி தான், எனக்கு முடிக்க பார்த்தாங்க. ஆனா திரும்ப இதுவேன்னு போது அவங்களும் பாவம் தானே”
“ம்ம். அவங்க இடத்துல வேறென்ன செய்ய முடியும்? ப்ரொஜெக்ட் முடிக்கிற வரை பார்த்துக்கலாம்” என்று உறுதியளித்தான்.
அன்றிரவு உணவின் போது இதை வீட்டில் பேசியவன், “மூர்த்தியை கூப்பிட்டு கண்டிச்சு வைங்க தாத்தா. நாம சொல்லியும் திரும்ப ஆரம்பிக்கிற அளவு தைரியம் இருந்தா முதல்ல நம்மகிட்ட வர சொல்லுங்க” என்றான்.
“அந்த பையன் என்ன இவ்வளவு மோசமா இருக்கான்? கல்யாணம் பண்ணியும் அடங்கலையா? மூர்த்திக்கு இது தெரியுமான்னு தெரியலை. காலையிலே வர சொல்லி பேசிடுறேன்” என்றார்.
“பேச என்ன இருக்கு? மீனா பொண்ணுகிட்ட பிரச்சனை பண்ணா கண்டிப்பா அவனை விட கூடாது. சரியான பாடம் கத்து கொடுக்கணும்” என்றார் கஜலக்ஷ்மி.
“நீங்க ஏன்ம்மா இவ்வளவு கோவப்படுறீங்க?” பானுமதி புரியாமல் கேட்க,
“அவ நல்ல பொண்ணு பானு. படிக்கிற பிள்ளையை போய் ஓயாம தொந்தரவு பண்ணா என்ன அர்த்தம்?”
“அவங்க அப்பா திரும்ப கல்யாணம்ன்னு ஆரம்பிச்சுட்டார் பாட்டி”
“நினைச்சேன். அந்த அறிவழகனுக்கு வேற வேலை இல்லை. அந்த ராஸ்கல் தோலை உரிக்கிறதை விட்டுட்டு, நம்ம வீட்டு பொண்ணை படுத்துறது” கஜலக்ஷ்மி கடுப்பாகி விட்டார்.
தனபாலன் மனைவியை ஆச்சரியமாக பார்த்திருந்தவர், “உனக்கும் மீனாவை பிடிச்சிடுச்சா” என்று தனிமையில் கேட்டார்.
“நான் எப்போ பிடிக்கலை சொன்னேன்” என்றார் அவரோ.
“அது சரி. நம்ம பேரனுக்கு எதுவும் யோசிக்கிறியா?” என்று நூல் விட்டு பார்க்க,
கஜலக்ஷ்மி நொடி மௌனித்தவர், “நான் அவளை முதல்ல பார்த்து பழகியிருந்தா கண்ணை மூடிட்டு அந்த உள்ளூர் அழகியை என் பேரன் ஜோடியாக்கியிருப்பேன். ஆனா நீங்க முதல்ல சொன்னது தான் எனக்கு இப்போவும் யோசிக்க வைக்குது” என்றார்.
“அவ்வளவு பெண்ணாதிக்கவாதியா நீ?”
“திரும்ப சொல்லுங்க” என்று இடையில் கை வைத்து நின்றார் பாட்டி.
“இல்லை, ஏதோ சொல்லி, ஏதோ வந்திடுச்சு போல. நீ விஷயத்துக்கு வா. நான் முதல்ல சொன்னதுனால என்ன இப்போ?” தனபாலன் நெஞ்சை நீவி விட்டு கொண்டார்.
“அதெப்படி ஏதோ சொல்லி, ஏதோ வரும். நான் இதை அப்புறம் பார்த்துக்கிறேன்” என்று தனபாலனை அப்போதைக்கு விட்டவர்,
“அதனால தான் நானும் சொன்னேன். ரொம்ப நல்ல மாதிரி. குடும்பத்துக்கு ஏத்த மாதிரி விட்டு கொடுத்து போவார்ன்னு சொன்னீங்க. அவர் என்னடான்னா ஒரேடியா விட்டு கொடுத்து தனியா போயிட்டார்”
“அவர் இப்போவும் நல்ல மாதிரி தான்”
“அதனால தான் கஷ்ட போடுறோம்” என்று முடித்துவைத்தார் கஜலக்ஷ்மி.
தனபாலன் தொங்கி போனவராக தூங்க செல்ல, கஜலக்ஷ்மி நெடு நேரம் தூங்காமல் விழித்திருந்தார்.
மறுநாள் மூர்த்தியை வரவைத்து கேட்க, அவரோ “சத்தியமா எனக்கு தெரியாதுங்கய்யா. வேலை பார்க்க போறேன்னு தான் போனான். மருமகளை அடுத்த மாசம் கூப்பிட்டுகிறேன்னு சொன்னான்” என்று பதற,
“அவன் வம்பு வளர்க்கவே அங்க போன மாதிரி தான் இருக்கு மூர்த்தி. என் பேரன் அந்த ஏரியா போலீஸ்கிட்ட பேசிட்டான். உன் மகன் எக்குத்தப்பா மாட்டினா நாங்க பொறுப்பு இல்லை. பார்த்துக்கோ” என்று எச்சரித்து அனுப்ப, மூர்த்தி வெளியே வந்ததும் முதல் வேலையாக மகனுக்கு அழைத்து பேசினார்.
வில்வநாதன் காலை உணவிற்கு வந்த நேரம் தாத்தா அவரிடம் சொல்ல, “எனக்கு இந்த மூர்த்தி மேலயே நம்பிக்கை இல்லை தாத்தா” என்றான் வில்வநாதன்.
“நாம டீலர்ஷிப் கேன்சல் பண்ணிட்டோம். உள்ளூர்ல யாரும் அவங்களை நம்பி தொழில் பண்ண மாட்டேங்கிறாங்க. பழி வாங்க கூட திரும்ப இதை ஆரம்பிச்சிருக்கலாம்” என்றான்.
“என்ன ராசா சொல்ற? அறிவழகன் பொண்ணை ஏதும்”
“அந்தளவு எல்லாம் போக விட மாட்டேன் தாத்தா. அந்த பையன் செமத்தியா வாங்கி தான் அடங்க போறான். பார்த்துக்கலாம் தாத்தா” என்றபடி அலுவலகம் கிளம்பினான்.
“ராஜா. என்னை மெயின் ஆபிஸ்ல விட்டுடு” என்று கஜலக்ஷ்மி பேரனின் காரில் ஏறிக்கொண்டார்.
“சொல்லுங்க லக்ஷ்மி மேடம். என்ன பேசணும்?” என்று வில்வநாதன் காரின் வேகத்தை குறைத்து கேட்க,
“உன் கல்யாண விஷயம் தான் ராஜா” என்றார்.
“இன்னும் கொஞ்சம் மட்டும் டைம் கொடுங்க பாட்டி” என்றான் அவன்.
“உன் அப்பா நம்ம வீட்டுக்கு வர வரைக்கும் நீ ஒத்துக்க மாட்டன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு ராஜா”
“என்ன திடீர்ன்னு. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே” என்று ஆச்சரியம் கொள்ள,
“இப்போ இருக்கு. நீ சொல்லு” என்றார் அவர்.
“ம்ம்” என்று ஓரிரு நிமிடங்கள் சாலையை பார்த்திருந்தவன், “சரி வரும்ன்னு எனக்கு தோணலை பாட்டி” என்றான்.
“என்ன ராஜா சொல்ற. உனக்கு பிடிக்கலையா?”
“அந்தளவு எல்லாம் போக வேண்டாம் பாட்டி. அவளோட குணம் எனக்கு சரி வரும்ன்னு தோணலை”
“உன் அப்பா மாதிரி அவளை சொன்னியே ராஜா”
“அதனால தான் பாட்டி சொல்றேன். என் அம்மா மாதிரி நானும் தனியா இருக்க முடியாதே”
“ராஜா. பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத” பாட்டி பதறினார்.
கனத்த அமைதிக்கு பிறகு, “அவ சென்னை போனது உனக்காக தானே?” என்று கேட்டார்.
“இருக்கலாம்” என்றான் அவன்.
“ஆனா காரணம் நீங்க நினைக்கிறது இல்லை” என்று அவரின் கற்பனையை தடுத்துவிட்டான்.
‘அவ முன்னாடி பிரேக் ஆகிட்டேன். எனக்கு ஏதாவது ஆறுதலா செய்யணும்ன்னு என் பேச்சை கேட்டாங்க மேடம்’ என்று சரியான முறையில் நினைத்து கொண்டான்.
கஜலக்ஷ்மி, “என்னமோ சொல்ற. எனக்கு அவளை பிடிச்சிருக்கு. சரி போ” என்று அலுவலகத்தில் இறங்கிக்கொண்டார்.
மேலும் சில வாரங்கள் சத்தமில்லாமல் நகர, காலையிலே வில்வநாதனின் போன் ஒலித்தது.
“வில்வநாதன் ஹியர்” என்று எடுக்க,
“நான் மீனலோக்ஷ்னி. எனக்கு உங்க ஹெல்ப் வேணும்” என்றாள் பெண்.
“என்னாச்சு அங்க எல்லாம் ஓகே தானே?”
“இல்லை. நீங்க கொஞ்சம் வர முடியுமா?”
“அர்ஜென்ட்ன்னா உடனே ஆளுங்களை அனுப்புறேன்”
“உங்களை கேட்டேனே நான். பிஸியா இருந்தா பரவாயில்லை. வேண்டாம்” என்று வைத்துவிட்டாள் பெண்.
வில்வநாதனுக்கு அவளின் செயல் கோவத்தை கொடுத்தது. அதென்ன பேசிட்டு இருக்கும் போது வைக்கிறது?
அரவிந்தனுக்கு பேச நினைத்து அப்போது தான் அவர்கள் எல்லாம் கோவிலுக்கு சென்றுள்ளது நினைவிற்கு வந்தது. குலதெய்வ கோவில். இரண்டு நாள் பயணம். அதனால் தான் என்னை அழைத்தாளா?
மேனேஜருக்கு அழைத்து, “சென்னைக்கு அடுத்த பிளைட்ல டிக்கெட் பாருங்க” என்று வைத்தவன் கிளம்பி வர,
“என்ன ராசா இவ்வளவு காலையில” என்று கஜலக்ஷ்மி கேட்டார்.
“சென்னைக்கு பாட்டி. போன்ல சொல்றேன்” என்று காருக்கு சென்றவன், அவருக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.
“அது தான் நான் பண்ண மிஸ்டேக். ஒரு நாள் ஷாப்பிங், படம் பார்த்துட்டு போலாம்ன்னு”
வில்வநாதன் முறைப்பில், “இங்க பாருங்க. ப்ளீஸ் திரும்ப கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாதீங்க. நான் ரொம்பவே டையர்டா தான் இருக்கேன்” என்றாள் வேகமாக.
“அதான் இவ்வளோ குறைவா வாய் பேசுறியா?”
“நான் எப்போ வாய் பேசி நீங்க பார்த்தீங்க?” பெண் சண்டைக்கு கிளம்பிவிட்டாள்.
“இப்போ வேற என்ன பண்றியாம்?” அவன் கேலியாக கேட்டவன், “இதுக்கு நீ ஊர்லே இருந்திருக்கலாம். இப்போ அக்சப்ட் பண்றேன். நீ சரி தான். அம்மா முந்தானை இவ்வளவு காஸ்டலி இல்லை. அலைச்சலும் கொடுக்காது” என்றான்.
பெண்ணுக்கு ரோஷம் வெடித்து கொண்டு வந்தது. “உங்ககிட்ட ஹெல்ப் கேட்டது என் தப்புதான்னு நல்லா புரிய வைச்சுட்டீங்க. நானே பார்த்துகிறேன்” என்றாள்.
“என்னை வர சொல்லி இன்சல்ட் பண்றியா நீ?”
அவனை அதிர்ந்து போய் பார்த்தவள், “இன்னுமா முடியலை” என்று அங்கேயே அமர்ந்துகொண்டாள். வில்வநாதன் உதடுகளில் மெல்லிய புன்னகை.
“யார் சார் நீங்க” என்று ஒருவர் அதிகாரமாக கேட்க, திரும்பி பார்த்தவனிடம் அந்த புன்னகை மறைந்திருந்தது.