“நான் என்ன வேணும்ன்னா கத்துறேன்? உனக்காக தானே, நேரம் போகுது இல்லை” என்றார் அவர்.
“உனக்காகன்னு வந்து நிக்கிறோம் அறிவழகா. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர சொந்தம் உனக்கு, பார்த்துக்கோ” என்று மற்றவரும் பேச, அறிவழகனுக்கு வாயே திறக்க முடியா நிலை. பொறுத்து கொண்டார்.
மணப்பெண்ணை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்க, வந்ததோ போலீஸ்.
அரவிந்தனை வெளியே வர சொல்ல, எல்லோரும் பதறி போயினர்.
அரவிந்தனுடன் மொத்த பேரும் வாசலுக்கு ஓட, காவலர்கள் அரவிந்தனை அழைத்து செல்ல வேண்டும் என்றனர்.
“என்னாச்சு சார்? ஏன் எங்க பிள்ளையை அழைச்சிட்டு போகணும்?” என்று ஆளாளுக்கு கேட்க,
“யார், யார் கம்பளைண்ட் பண்ணது? மூர்த்தி, மூர்த்தியா சார்?” அறிவழகன் கேட்க,
“மூர்த்தியா? இல்லைங்க” என்றனர்.
‘அப்பாடா’ என்று ஆசுவாசம் கொண்டாலும், “வேறு யார்?” என்று கேள்வி.
“பெரியவர்” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அவரா?” யாருக்கும் நம்பிக்கை இல்லை.
“பெரியவர் எங்க பையன் மேல கம்பளைண்ட்டா? வாய்ப்பு இல்லை”
“ஆமா அவர் அப்படி செய்ய மாட்டார்”
“நீங்க மாத்தி சொல்றீங்க”
“மூர்த்தி சொல்லி தான் கல்யாணத்தை நிறுத்துறீங்க, எங்களுக்கு தெரிஞ்சு போச்சு” என்று யாரும் நம்பாமல் பேச,
“நாங்க ஏன் மாத்தி சொல்ல போறோம்? அதுவும் பெரியவரை வைச்சு. நீங்க ஏதா இருந்தாலும் பெரியவர்கிட்ட பேசிக்கோங்க” என்று காவலர்கள் அரவிந்தனை விடாமல் அழைத்து கொண்டு சென்றுவிட்டனர்.
சூரியன் உதித்திருக்க, மாளிகையில் அவ்வளவு அமைதி. வேலைகள் சத்தமே இல்லாமல் நடந்து கொண்டிருக்க, பட்டு அங்கவஸ்திரத்தை அணிந்தபடி வந்தார் தனபாலன்.
காலை உணவு அவருக்கு பரிமாறபட, “ராசாக்கு சாப்பாடு போயிடுச்சா?” என்று விசாரித்தார்.
“அனுப்பிட்டோம்ங்கய்யா” என்ற பின்னே அவர் உணவில் கை வைத்தார்.
மாளிகையின் மேற்பார்வையாளர் வந்தவர், பெரியவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுத்திருந்தார்.
“உங்களை பார்க்க அறிவழகன் வந்திருக்கார் அய்யா” என்று செய்தி சொல்ல,
பெரியவர் மலர்ந்த முகத்துடனே அவரை சந்திக்க சென்றார். அங்கு அவர் மட்டுமில்லாமல், நெருங்கிய சொந்தங்களும் இருந்தனர்.
குடிக்க உபசரித்ததை வெறுமனே கையில் வைத்திருந்தவர்கள், பெரியவர் வரவும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
“வாங்க, உட்காருங்க” என்று இருக்கையை காட்டியவர், தானும் அமர்ந்து கொண்டார்.
எல்லாம் அலங்காரத்துடன் இருக்க, “என்ன விஷேஷம் அறிவழகா?” என்று விசாரித்தார்.
“நடக்க இருந்த விஷேஷம் நின்னு போனது தான் விஷேஷம்” என்றார் அவர் தளர்ந்து போய்.
“என்ன சொல்ற?” பெரியவர் புரியாமல் பார்க்க,
“எங்க மகன் என்ன பண்ணியிருந்தாலும் எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே. அநியாயமா அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திட்டீங்களே. அதுவும் கல்யாண நாள் அதுவுமா?” என்று அறிவழகனின் தங்கை மனம் தாங்காமல் கேட்டார்.
பெரியவருக்கு புரியவில்லை. புருவங்களை சுருக்க, அவர்களின் காரியதரிசி வேகமாக வந்து, “நேத்து நைட் நடந்தது. அந்த பையன், அரவிந்தன் இவங்க மகன்” என்றார்.
இப்போது புரிந்தது எனும் விதமாக தலையாட்டியவர், “அநியாயமா எல்லாம் இல்லைமா. அவன் பண்ணது தப்பு” என்றார் தனபால்.
“எங்க லாரி ட்ரைவரை குடோனுக்குள்ள வைச்சு வெறி பிடிச்ச மாதிரி அடிச்சிருக்கான். கையையும் உடைச்சுவிட்டான். ஹாஸ்பத்திரியில போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தா தான் ஆச்சுன்னு சொல்லிட்டாங்க. எங்களை என்ன பண்ண சொல்றீங்க?” என்று கேட்டார் பெரியவர்.
“அண்ணா அப்படி பண்ணி இருந்தா நிச்சயம் காரணம் இருக்கும்” என்று அவன் தம்பி சொன்னான்.
“காரணம் என்னவா இருந்தாலும், அடிச்சது தப்புன்னு சட்டம் சொல்லுது. இனி அது படி தான் போயாகணும்” பெரியவர் சொன்னவர்,
அறிவழகன் முகம் வாடி இருக்கவும், “என்ன அறிவழகா?” என்று கேட்டார்.
“இன்னைக்கு என் பொண்ணுக்கும், தங்கச்சி மகனுக்கும், அதான் அரவிந்தனுக்கும் கல்யாணம் வைச்சிருந்தோம்” என்றார்.
“கல்யாணமா?” பெரியவர் திரும்பி காரியதரிசியை பார்த்தார்.
“நமக்கு சொல்லலைங்க” அவர் சொல்ல,
“ரகசியமா ஏற்பாடு பண்ணது பெரியப்பா” என்றார் அறிவழகன்.
“ஏன் ரகசியமா செய்யணும்? எதாவது பிரச்சனையா?” அக்கறை கொண்டு விசாரித்தார் தனபாலன்.
அறிவழகனின் அப்பாவும், பெரியவரும் பால்ய காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர் தவறி இருக்க, நண்பரின் மகன் கலங்குவது இவருக்கு வருத்தமே.
அறிவழகனுக்கு சொல்லவும் குரல் எழவில்லை. பிரச்சனைகளை கையாள கூடியவர் இல்லை அவர்.
அதனாலே வம்பு என்று வந்ததும், அதை தீர்க்கும் வழியாக இதை தான் தேர்ந்திடுத்திருந்தார்.
கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் மகளை கிட்டத்தட்ட வற்புறுத்தி தான் திருமணத்திற்க்கு சம்மதிக்க வைத்திருந்தார்.
தங்கை மகனிடமும் மல்லு கட்டி தான் முகூர்த்தம் வரை வந்தது.
இப்போது அதுவும் நின்று போக, அவரின் கலக்கம் அதிகமாகிவிட்டது.
பெரியவர் கேள்விக்கு பதில் சொல்ல குரல் செருமி கொண்டவர், “என் பொண்ணை கொடுக்க சொல்லி, மூர்த்தி பிரச்சனை பண்றார்” என்றார்.
“அவனா?” தனபாலுக்கு பிடிக்கவில்லை. நல்ல வசதியான ஆள் தான். ஆனால் நல்லவனில்லை.
“மகனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். பொண்ணை கொடுத்தே ஆகணும்ன்னு நிக்கிறாங்கய்யா. நாங்களும் நேர்ல போய் பேசி பார்த்துட்டோம், கேட்க மாட்டேங்கிறார்”
“நீங்களா கொடுத்தா நல்லது. இல்லை தூக்கிட்டு போய் என் மகனுக்கு கட்டி வைப்பேன்னு மிரட்டுறார்”
“அந்த பையன் அவங்க அப்பாவை மிஞ்சிடும். ஆகாத பழக்கம் எல்லாம் அத்துப்படி. அவனுக்கு போய் நம்ம பொண்ணை எப்படி கொடுக்க?”
“அதான் தங்கச்சிகிட்ட பேசி, கல்யாணம் வைச்சோம்” என்று பங்காளிகள் அங்கலாய்த்து கொண்டார்கள்.
“எனக்கு நீ இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாமே அறிவழகா?” என்று பெரியவர் கேட்க,
“உங்களை பார்க்க வந்திருந்தேன் பெரியப்பா. நீங்க யாரும் ஊர்ல இல்லை” என்றார் அறிவழகன்.
“போலீஸ்கிட்ட போக வேண்டியது தானே?” என்று கேட்டார்.
“போனோம். அவன் பணம் தான் பேசுச்சு”
“நான் பேசுறேன். இனி அவனால எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்” என்றார் பெரியவர்.
“அதுக்கில்லை. இவன் போனா வேற ஒருத்தன்”
“புரியலை”
“உங்களுக்கு தெரியாதது இல்லை. எங்க பொண்ணு ரொம்பவே அழகுங்க. நிறைய பேர் கண்ணு உறுத்துது”