முகூர்த்தம் 5
இதழ்வளைவில்
சிறகு விரித்து
காற்றெங்கும்
பறக்கிறது
உன் புன்னகை
”டேய் ராஜா இரு டா நம்ம சொந்தக்கார பொண்ணு கூட இங்க தான் படிச்சாளாம் அவளும் பட்டம் வாங்க வந்திருப்பா, பார்த்திட்டு போயிடலாம்”
“நம்ம சொந்தத்தில நான் ஒருத்தன் தான் பட்டம் வாங்குற அளவுக்கு படிச்சிருக்கேன், நீங்க சொல்ற பொண்ணு அப்பிடியே படிச்சிருந்தாலும் அரியர் வச்சு நம்ம குடும்ப பாரம்பரியத்தை காப்பாத்தியிருப்பா மா, நீங்க வாங்க”
“ரொம்ப அதிகமா பேசாதா டா, நீ சொல்றதெல்லாம் உங்க குடும்பத்துக்கு தான் ஒத்துவரும், இவள் என் சொந்தமாக்கும் கண்டிப்பா நீ சொல்ற மக்கு பொண்ணா இருக்க மாட்டா”
”அம்மா என்ன மா இப்படி பொசுக்குனு பிரிச்சு பேசீட்டீங்க”
”அதை விடு அவளைத் தேடி கண்டுபிடிக்கணுமே”
“ஊரு பேரு எதுவும் தெரியாம கண்டுபிடிக்கணும்னா, எப்படி மா, என் ப்ரெண்ட்ஸ் கூப்புடுறாங்க நீங்க அவளை தேடிகிட்டு இருங்க, நான் போய் அவங்கள பார்த்திட்டு வரேன், போகும் போது கூட்டீட்டு போறேன் மா”
“டேய் டேய் இப்படி விட்டுட்டு போறியே டா” என்ற மகாலட்சுமியின் குரல் அவனை எட்டவே இல்லை.
அந்த மனிதக்கூட்டத்தில் கரைந்து அவன் எங்கே சென்றான் என தேடுவதா, இல்லை, தன் உறவினர் பெண்ணைத் தேடுவதா என குழம்பிப் போய் நின்றிருந்தவரின் தோளைப் பற்றி யாரோ அழைக்க அங்கே சீதா நின்றிருந்தார்.
”வாங்க அண்ணி உங்களைத் தான் எப்படி தேடி கண்டுபிடிக்கிறதோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன், நல்லவேளை நீங்களாவே வந்துட்டீங்க,”என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் மகாலட்சுமி.
“நானும் தேடிட்டு இருந்தேன் அண்ணி, மைவிழி தான் உங்கள காமிச்சா,”
“அடடா அப்பிடியா, எங்க அவளை காணோம்”
“ப்ரெண்ட்ஸ் கூட பேசீட்டு இருக்கா இப்போ வந்துடுவா”
”பேசட்டும் பேசட்டும் இனி எப்ப பாக்க போறாங்களோ, இன்னிக்கு தானே கடைசி நாள் எல்லாரும் காலேஞ்ல பாத்துகுறது”
“ஆமா அண்ணி , உங்க பையன் எங்கே”
“உங்கள மீட் பண்ணனும்னு சொல்லவும் என்னைய விட்டு ப்ரெண்ட்ஸ பாக்க போயிட்டான். அந்த கல்யாணத்தில் பார்த்ததை வச்சு என்னை சரியா அடையாளம் கண்டுபிடிச்சிட்டாளே,”
“அது சரி, அவளுக்கு நியாபக சக்தி அதிகம் அண்ணி, அப்ப வாங்க நாம போயி உக்காருவோம் ஃபங்க்ஷன் ஆரம்பிக்க போறாங்க.
தூரத்து சொந்தமான சீதாவும் மகாலட்சுமியும், ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்ட போது, தங்கள் குடும்ப விவரங்களை பகிர்ந்த கொண்ட போது தான் தெரிந்தது ராஜாவும் மைவிழியும் ஒரே கல்லூரியில் படிப்பது.
பெற்றோர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அங்கே பொறியியல் பட்டம் பெற்றுக் கொண்டிருந்தனர் ராஜாவும் மைவிழியும்.
“ஏங்க அவங்களாம் வர்ற நேரமாயிடுச்சு, இவ இன்னும் பொறுமையா கிளம்பிகிட்டு இருக்கா பாருங்க, என்ன தான் பிள்ளையோ”
“விடு சீதா அதெல்லாம் பாப்பா சரியா கிளம்பீடும், நீ ஏன் டென்ஷனா இருக்க,”
ராஜேந்திரனை பலமாய் முறைத்தவர் எப்ப பாரு உங்க பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணிகிட்டே இருங்க, நாளைக்கு போற இடத்துல ஒண்ணு சொன்னாலும் இங்க இருந்து போவீங்களா”
“என் பொண்ணு யாரும் எதுவும் சொல்ற அளவுக்கு நடந்துக்க மாட்டா, அவளுக்கு தெரியும், நல்லது கெட்டது”
“அப்படி சொல்லுங்க பா, சும்மா எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிகிட்டு”
“அடேயப்பா இவ்வளவு சீக்கிரமா கிளம்பீட்ட போல” என்று தன் அன்னை நக்கலாய் கேட்கவும்,
“இப்ப என்ன மாப்பிள்ளை வந்து கியூல வந்தா நிக்குறாங்க”
“அடியே என் வாயை கிளராத, நீயும் உங்கப்பாவும் பண்ற அலும்புக்கு, இன்னும் மாப்பிள்ளைங்க கியூவுல வந்து நிக்குறமாதிரி இருந்தா தரையில் நடக்க மாட்டீங்க ரெண்டும் பேரும்”
“ஹா ஹா ஹா, கூல் கூல் மா”
“கூல் இல்லைடி, காபி போட்டு வச்சிருக்கேன் அவங்களுக்கு”
“உன் இங்கிலீஸ கொண்டு போய் இங்கிலாந்தில விக்கணும் சீதாம்மா,” என்றுவிட்டு ராஜேந்திரனும் செல்வியோடு சேர்ந்து சிரிக்க,
அதே நேரம் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
வரவேற்று பரஸ்பரம் உபசரித்து பேசிக் கொண்டிருந்தனர். உள்ளே செல்விக்கு இவ்வளவு நேரம் இருந்த இயல்பு நிலை மலையேறி காணாமல் போயிருந்தது.
வெளியே ஒரு முதிர்ந்த பெண் குரல் அதே போல் ஒரு ஆண்குரல் இரண்டு குரல்கள் மட்டுமே அவளுக்கு கேட்டது.
”என்ன இது இவ்வளவு அமைதியான ஆளா மாப்பிள்ளை” என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
எப்படியும் தன்னை அழைப்பார்கள் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்றாலும் மனம் படபடத்தது.
அரைமணி நேரத்திற்கு மேலாகியும், அவர்களும் அழைத்தபாடில்லை.
ஒருவேளை வரதட்சணை எவ்வளவு குடுக்குறதுன்னு டிஸ்கஷன் ஓடுதா, அதெல்லாம் குடுக்கக் கூடாது வாங்கக்கூடாதுன்னு சொன்னாலும் யாரும் திருந்த மாட்டாங்களே
அப்படிப்பட்ட வரனை தனக்கென பார்க்கமாட்டார்கள் என்றாலும், புத்தி சும்மாயிருந்தால் தானே, தன்னை போல அது சிந்திக்க ,
சிந்தனையை கலைக்கவென சீதா அழைத்தார்.
“அம்மாடி செல்வி, இங்க வாம்மா”
ஆர்ப்பாட்டமின்றி வந்து நின்றவளுக்கு மகாலட்சுமியை கண்டதும் வந்ததது கண்ணீரா இல்லை என்றோ மனதில் பூட்டிப்போட்ட நினைவுகளா …. புரியாமல் நின்றவளின் கைகளில் இருந்த காபி கோப்பைகள் இடம் மாறியது.
தன்னை ஆராய்ச்சி செய்து தன் உணர்வுகளுக்கான அறிக்கை வெளியிடுவதே மூளை மனதிற்கு இட்ட கட்டளை.
முதல் கண்ட அறிக்கையில், ஏமாற்றம், ”யாரை எதிர்பார்த்து ஏமாந்தாய் செல்வி ”
காரணம் மாப்பிள்ளைக்கான ஆசனத்தில் மனதில் வந்து அமரப்போகிறவன், அன்று வரவே இல்லை.
கல்லூரிக் காலத்தில் மகாலட்சுமியைக் கண்டிருக்கிறாள் ஆனால் அவரின் பிள்ளை யாரென்று அவளுக்கு தெரியாதே.
“அவனும் வர்றதா தான் இருந்தது, சட்டுனு எதோ வேலையினு வர்ற வழியிலயே இறங்கி போயிட்டான். அவன் போட்டோ இது தான். அவனும் உன்னை பார்த்ததில்லை டா செல்வி, உன் போட்டோ தர்றியா “
“வாங்க அத்தை” என்று புன்னகைத்தவளின் முகத்தில் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களிடம் புகைப்படத்தை வாங்கியவள், அதை தன் டேபிளின் மீது வைத்துவிட்டு தன்னுடைய புகைப்படத்தை தேடத்துவங்கினாள்.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தும் கலைந்து மாப்பிள்ளையின் போட்டோ மீது விழ சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு தன் புகைப்படத்தை ஒரு கவரில் இட்டு அவர்களிடத்தில் கொடுத்தாள்.
அவள் உள்ளே சென்றதே தன் மகனின் புகைப்படத்தைக் காணத்தான் என்று எண்ணிய மகாலட்சுமியோ,
”என்னம்மா போட்டோவை பார்த்தியா என் பையனை பிடிச்சிருக்கா” என்று கேட்க, அவள் திரும்பி தன் தாயைப் பார்த்தாள்.
“இதோ ஒரு நிமிசம் அண்ணி” என்று கூறிய சீதா அவளை அறைக்குள் அழைத்துச் சென்று,
“அவங்க பிடிச்சிருக்கான்னு கேட்டா சொல்லவேண்டியது தானே, எதுக்கு என்னைய பாக்குற”
“இல்லைம்மா இன்னும் பாக்கவே இல்லை”
“என்ன பாக்கலை,”
“அவங்க குடுத்த போட்டோவை”
“பாக்காம இவ்வளவு நேரம் என்ன பண்ணுன”
“என் போட்டோவைத் தேடினேன் மா”
“அதுக்கென்ன அவசரம், சரி எங்க வைச்ச முதல்ல எடுத்து பாரு”
“இங்க தான் மா வச்சேன்”
“இருக்கா இல்லையா”
“டேபிள் மேல தான் மா வைச்சேன்”,
“கால் முளைச்சு வேற எங்கயும் போயிடுச்சா”
இருவரும் தேடிக் கொண்டிருக்க, வெளியிலிருந்து ராஜேந்திரன் குரல் கொடுத்தார்”
“சீதா எங்க போயிட்ட, அக்கா கூப்பிடுறாங்க பாரு”
“இதோ வந்துட்டேங்க”
“என்ன அண்ணி அம்மாவும் பொண்ணும் பெரிய டிஸ்கஷனா “
“இல்லை அண்ணி அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“அப்ப முடிவு பண்ணீட்டீங்கல்ல”
“அது வந்து”
“என்ன ரொம்ப யோசனை பண்ணுறீங்க போலயே”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி அவளுக்கும் ரொம்ப பிடிச்சிருக்காம்” என சீதா கூறிவிட அங்கே எதிர்த்து பேசவும் முடியாமல், அவன் யாரென்றும் தெரியாமல் நின்றிருந்தாள் செல்வி.அவளை மீறி “அம்மா” என்று அழைத்துவிட்டு பேசமுடியாமல் குனிந்து கொண்டாள்.
ராஜேந்திரன் உட்பட அனைவரும் அதை நாணம் என்று எடுத்துக் கொள்ள, சீதாவோ இந்த சம்பந்தத்தை விட்டுவிடக் கூடாது என்ற முனைப்பில் இருந்தார்.
அதற்கு மேல பேசிய எதுவும் அவள் காதில் ஒலிக்கவில்லை. பெரியதாய் எதிர்பார்ப்பு ஆசை என்று தன் திருமண விசயத்தில் எதையும் வளர்த்துக் கொள்ளாதவள் தான் என்றாலும்,
தன் வாழ்வின் திருப்புமுனை இத்தனை சட்டென்று தன்னை திசை திருப்பும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் அந்த புகைப்படத்தை தேடி எடுத்து பார்க்க விரும்பாமல் கட்டிலில் சாய்ந்தாள்.
அவர்களை வழியனுப்பி விட்டு வந்த ராஜேந்திரனின் முகத்தில் அத்தணை மகிழ்ச்சி, காரணம் மகாலட்சுமிக்கும் பரிபூரண சம்மதம் என்ற செய்தி. மகாலட்சுமி ஒரு முறை வாக்கு கொடுத்துவிட்டால் அதை நடத்தியே தீரும் ரகம்.
தன் மகன் தன் பேச்சை தட்ட மாட்டான் என்று தனிகர்வமே உண்டு அவருக்கு. ஆனால் ராஜேந்திரன் அப்படி இல்லை, எதுவாகினும் தன் மகளின் முடிவுகளைக் கலக்காமல் முடிவு செய்ய மாட்டார். தன் மகளின் முடிவுகளில் ஒரு தெளிவு, நிதானம் இருக்குமென்று அவருக்கு தெரியும், அதிலும் அவள் இந்த மாப்பிள்ளைக்கு இத்தணை சீக்கிரத்தில் ஒப்புக் கொள்வாள் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை.
மகளுக்கு நல்வாழ்வு அமைந்துவிட்டது என்ற அப்பாவிற்கே உண்டான களிப்பில் அவர் இருக்க, அதனை கலைக்க மனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”அம்மாடி, இனி பிஸினஸ் எல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ நல்லா வீட்டில இருந்து ரெஸ்ட் எடுத்துக்கோ,”
“அப்பா…”
“இனிமே நான் சொல்றதைதான் நீ கேக்கணும் சரியா, முக்கியமா இனி பேங்க்கு நீ போக வேணாம், அந்தப்பக்கம் கூட நீ போகக்கூடாது”
“ம்ம் சரிப்பா”
அவரிடம் சரி என்றாலும், ஏன் பேங்கிற்கு போகவேண்டாம் என்று சொல்கிறார், ஒரு வேளை அந்த பாங்க் மேனேஜரைப் பற்றி அப்பாவிற்கு தெரிந்திருக்குமோ, என்ன நினைத்திருப்பார், கடவுளே…..
இத்தணை நாள் இல்லாமல் திடீரென்று இந்த பெண்பார்க்கும் படலம் அதற்குத் தானா…. அந்த மேனேஜர் யார் என்று தெரிந்திருக்குமோ, அவனின் நடவடிக்கைகளை யாரேனும் பார்த்து அப்பாவிடம் சொல்லியிருப்பார்களா….
அம்மா கூட அதனால் தான் அந்த மாப்பிள்ளை புகைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியும் எனக்கு சம்மதம் என்று அறிவித்தாரா…
சராசரிப்பெண்ணாகவா என்னைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்….
என்னை நானே நெருப்பு வளையத்தில் இட்டு இத்தணை நாளாய் காத்திருந்தது இப்படி ஒரு பெயருக்குத்தானா….