முகூர்த்தம் 13

எனக்கான வார்ப்புகளில்
யார் நிரப்பியது உன்னை

உயரப்பறக்கும் சிறகில்
உதிர்ந்த ஓர் இறகாய்

எங்கிருந்து வந்தாய்….

”உன்னை எங்கெல்லாம் தேடுறது செல்வி, என்ன இதெல்லாம், நீ இப்படி ரியாக்ட் பண்ணுவைன்னு நான் நெனக்கலை” என்று தன் மகள் கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியும் , அதே நேரம் ஏன் இப்படி செய்தாள் என்ற ஆதங்கமும் ஒருங்கே பொங்க நின்றிருந்தார் ராஜேந்திரன்.

“நீங்க யாரு”

“யாரா, பெத்த அப்பனைப் பார்த்து கேட்கிற கேள்வியா செல்வி இது, அதுவும் நீயா கேட்கிற”

“ செல்வியா அது யாரு, ஐ திங்க் நீங்க வேற யாரையோ தேடி வந்திருக்கீங்க, சாரி நீங்க யாருன்னே எனக்கு தெரியாது, சோ வேற எங்கயாச்சும் போய் தேடுங்க” என்றவளின் பேச்சு மட்டுமல்ல, தோற்றம் பார்வை என அனைத்துமே மைவிழிச்செல்வியிடமிருந்து மாறுபட்டிருந்தது, ஆனால், செல்வியின் முகத்தை அப்படியே பிரதிபலித்தது அவள் முகம்.

ஆனால் அதன்பின் அவள் அங்கே நிற்கவில்லை.

“செல்வி செல்வி நில்லுமா”

“தமிழ்நாட்டுக்குள்ள வந்ததுமே இப்படியா, அடக்கடவுளே, யாருங்க நீங்க சத்தியமா எனக்கு உங்களைத் தெரியாது சொன்னாக்கேளுங்க”

“என்ன நடந்துச்சுன்னு இப்போ நீ யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்தே, மாப்பிள்ளை கண்ணை முழிச்சதும் உன்னைத் தான் கேட்டார் மா, உன் மாமியார் உன்னை என்ன சொல்லிருந்தாலும் மாப்பிள்ளைக்காக நீ வந்து தான் ஆகணும், அவங்க சொன்னது உனக்கு என்னையும் அம்மாவையும் கூட மறக்க வைச்சிடுச்சில்ல, பரவாயில்ல செல்வி, வா வீட்டுக்கு”

“மை காட்…. யாரு சார் நீங்க…? சொன்னாப் புரிஞ்சுக்காம பேசிகிட்டே இருக்கீங்க,”

“அய்யோ கடவுளே, இதென்ன கொடுமை”

“கொடுமை தான் உங்களுக்கில்லை எனக்கு, ஊருக்கு புதுசுன்னா, எப்படியெல்லம் ஏமாத்துறீங்க, இதெல்லாம் என்ன பிழைப்போ, உங்களுக்கு தேவை காசு தான்னா, தயவு செஞ்சு வாங்கிக்கோங்க என்னை விடுங்க” அந்த முகம், தன்னைக் கண்டு இப்படி ஒரு பாவனையும் பேச்சையும் உதிர்க்கும் என கனவிலும் எண்ணாத அந்த தந்தையுள்ளம் அதிர்ச்சியில் வேலை செய்ய மறுத்து அவரையும் வீழ்த்தியது.

மயங்கி விழுந்த ராஜேந்திரனை என்ன செய்வது என புரியாமல் திகைத்து நின்றிருந்தாள் அந்த யுவதி. ஒற்றை நிமிடம் நீடித்திருக்குமா இந்த நிலை அது கூட இருக்காது, அவளின் மூளையோடு இதயமும் வேலை செய்யத் துவங்கியது.

அடுத்த அரைமணிநேரத்தில் அவசர உதவி சிகிச்சையில் ராஜேந்திரன் இருந்தார்.

”அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், என் கண் முன்னால் ஒரு உயிர் பரிதவித்து கிடப்பதை ஒரு நாளும் என்னால் ஒப்புக் கொள்ள இயலாது, என் கடமையை செய்து விட்டேன், இனி நான் இங்கிருக்க தேவையில்லை” என முடிவு செய்து அவள் கிளம்ப எத்தனிக்கையில்,

” எங்கடி போன, ஒரே நாள்ல ஆளே தலைகீழா தெரியுற, பேண்ட்டும் சட்டையும், நல்லா வளர்ந்திருந்த முடியெல்லாம் வெட்டிவிட்டு, என்னடி இதெல்லாம், உன்னைத் தேடி அப்பா வந்தாங்க நீ எப்படி இங்க, அப்பா எங்கே?” என்று தன்னைப் பார்த்து கேள்வியாய் அடுக்கிக் கொண்டிருந்த சீதாவை ஏதோ ஒரு விசித்திர ஜந்துவை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன், வாயைத் திறந்து பதில் சொல்றாளா பாரு” என்று அவள் பின்னாடியே சென்ற சீதாவை கவனிக்காமல் அவள் முன்னே செல்ல, அவசர சிகிச்சை பிரிவிலிருந்த செவிலியர் வந்து, ராஜேந்திரன் பேசண்ட் அட்டெண்டர் யாருங்க “ என்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத சீதாவோ ராஜேந்திரனா ,அவர் என் வீட்டுக்காரர் தான் சிஸ்டர் அவருக்கு என்னாச்சு”

“அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் மா,”

“அய்யோ கடவுளே”

“ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதீங்க மா, அதோ பாருங்க அந்த பொண்ணு தான் அவரை அட்மிட் பண்ணாங்க”

அந்த செவிலி காட்டிய திசையில் கையில் அலைப்பேசித் திரையை தீண்டியவாரே நடந்து சென்று கொண்டிருந்தாள் மலர்விழி.

முற்றிலும் மாறாக வந்து நிற்கும் மகளைப் பார்ப்பதா, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்ப்பதா, கண்விழித்த நேரமாய் மைவிழியைக் கேட்டுக் கொண்டிருக்கும் மருமகனுக்கு பதில் சொல்வதா எனப் புரியாமல் நின்று விட்டார் சீதா.

சட்டென சுதாரித்தவர் கணவனைக் காணச் சென்றார். அதே நேரம் வாசலில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞனோடு சென்று கொண்டிருந்தாள் மலர்விழி.

விடிகையில் மலர் தன் விழிகளை நிறைத்திருப்பாள் என்ற கனவுகளோடே விடியலுக்காக காத்திருந்தவனை சற்றும் சட்டை செய்யாமல் பொழுது அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.

கோடையைக் கடந்து மாதங்கள் ஆன போதும் வெயில் மட்டும் குறைந்த பாடாய் இல்லை, ஜன்னல் வழியே வந்த வெப்பமான வெளிச்சம் முகத்தில் சுட்டு வைக்க, பூபதி அவசரமாய் தன் கைப்பேசியைத் தேடினான்.

மணி ஒன்பதைக் கடந்து அரைமணிநேரம் ஆகிவிட்டது என அது கட்ட அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தவன், சில நொடிகளில் அடுத்த செய்ய வேண்டியதை முடிவெடுத்துக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில், தான் வந்த பைக்கை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு, ஆட்டோ பிடித்து நகரைத்தாண்டி சென்று கொண்டிருந்தான்.

ஆட்கள் அதிகமில்லாத அந்த பேருந்துநிலையத்தின் முகப்பில் தலையில் துப்பட்டா சுற்றியபடி கையில் ஒற்றை பர்ஸை வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டான்.

“எவ்வளவு நேரமா நிக்குறது உனக்காக, இது தான் எட்டு மணியா”

“ரொம்ப திட்டாத பக்கி, விடிய விடிய வேலை பாக்குறேன், காலையில கொஞ்சம் கண் அசந்துட்டேன் அதுக்கென்னமோ ஓவரா பேசுற”

“நான் ஓவரா பேசுறேனா ஏண்டா பேசமாட்ட, 

“பின்ன என்னவாம்”

“எருமை எருமை உன்ன ஒரு ஆளுன்னு நம்பி உன்கிட்ட என்னோட பிரச்சனையை சொன்னேன் பாரு “

“ஹே ஹே ரிலாக்ஸ் காலையிலயே ஆரம்பிக்காத, முக்கியமான ஒரு இடத்துக்கு போறோம் அங்க அதைவிட முக்கியமா ஒருத்தரை மீட் பண்ணப் போறோம், சோ கொஞ்சம் அமைதியா வா, அங்க நெறைய எனர்ஜி தேவைப்படும்”

“ஏண்டா வேலை விசயமா ஒருத்தரை பாக்க போறோம்னு தானே நீ சொன்ன, ஒரு வேளை வயல்காட்டு வேலையா அதுனால தான் எனர்ஜி வேணும்ங்குறியா நான் காலையில கூட ஒண்ணும் சாப்பிடாம வந்துட்டேனே”

“குடிக்க கேட்டா கூட எவனும் தண்ணி குடுக்கமாட்ரான், இதுல விவசாய வேலை எங்க, அதுல உனக்கு வேலை வேற வேணுமாக்கும், “

“தெய்வமே ஆரம்பிச்சுடாதா உன் புள்ளிவிவரக் கணக்கு எல்லாத்தையும்”

“நான் ஆரம்பிக்கலை, இன்னும் கொஞ்ச நேரத்தில நீ ஆரம்பிப்ப பாரு,, இங்க தான் இறங்கு”

இப்படி ஒரு இடத்தை இத்தணை நாளில் அவள் கண்டதே இல்லை, இதே இடத்தை எத்தனையோ முறை கடந்து சென்றிருக்கிறாள், ஆனால் இன்று தான் உள்ளே வந்து பாக்கிறாள்.

வெளியா சாலையிலிருந்து பார்ப்போர்க்கு வெறும் அடர்ந்த புதரய் காட்சியளிக்கும் இந்த இடத்தினுள் இத்தனை அழகாய் ஒரு சோலைவனம்.

மரங்களும் பூச்செடிகளும் ,புற்தரையும் இது அத்தணைக்கும் மையமாய் சிறு குளம் அதில் தாமரை மலர்கள் திடீரென பாதை மாறி சொர்க்கத்திற்கே வந்துவிட்டோமோ என்றொரு குழப்பம் அவள் முகத்தில் மின்னி மறைந்தது.

தயங்கி தயங்கி இவள் செல்ல முன்னால் சென்று கொண்டிருந்த பூபதியின் நடையிலிருந்தே அவனுக்கு இது மிகவும் பழக்கப்பட்ட இடமென்று புரிந்தது.

உள்ளே உள்ளே செல்லச் செல்ல மனதில் இனம் புரியாத படபடப்பு, அழுதே கரைந்த இரவுகளின் நினைவுக்களின் இனிமைகள் மட்டும் கண் முன் வந்து போனது, மனதிற்கு பிடித்த எதுவோ இங்கு இருக்கின்றது என உறுதியாக நம்பினாள் அவள்.

பார்க்க மிக அருகில் இருப்பது போல் தோன்றினாலும் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது.

“இன்னும் எவ்வளவு தூரம் டா பாவி, என்று பூபதியை திட்டிக் கொண்டே கீழே என்ன இருக்கிறது என்று பார்த்து பார்த்து நடந்தவள் எதிரில் எதன் மேலோ பலமாய் மோதிக் கொண்டாள்.

நிமிர்ந்து பார்த்த அந்த நொடி உயிருக்குள் மின்சாரம் பாய்ந்தது. எதிரில் நின்றது ராஜா, மோதிக் கொண்டது செல்வி இரு நெஞ்சத்தின் புயல்களும் சங்கமித்ததில் மையலின் மையம் கொண்டது காதல்.

அவன் கண்களோ ஏன் என்று கேள்வி கேட்க, இவள் நெஞ்சமோ நீ என்று பதில் கூற, தாழ்ந்து விட்ட அவள் விழிகளுக்கு, தடுக்கி விழுந்தவனாய், தடுமாறி நின்றான், இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாய் காதலே என்று காற்றில் கானம் பாட அவன் குரலுக்கோ தெம்பில்லை, நெஞ்சம் மடைதிறந்த வெள்ளமாய் சந்தோஷத்தில் குதூகலிக்க, விட்டு செல்ல நினைத்த வாழ்க்கையை வேரில் பூத்த மலரொன்று நிறுத்திவைத்த மகிழ்ச்சி தீரும் முன்னே, அவள் அவன் கையை விட்டு நழுவ நினைத்து பின் வாங்கினாள்.

இறுக்கி பிடித்தவனின் தலை இடம் வலமாய் ஆட, அவள் கண்களில் கார்முகில் கோர்த்து அடைமழைக்கு தயாராகி இருந்தது.

காதல் உனக்குள் மொட்டுவிடுகையில் எனக்கு அதில் பிடித்தமில்லை, பிடித்தம் வருகையில் நீ என் அருகில் இல்லை, பலகாலம் பசியில் வாடிய பின் பாலருவியாய் கண்ணில் பட்டாய் கருத்தை நிறைத்த காதலோடு கவி பாட எண்ணுகையில் கணவனும் நீயே என்றதில் களிப்பு கரை காணவில்லை, ஆனாலும் விதி வலியது, என்னை உன்னிலிருந்து பிரித்துவிட்டது, ஒரே அச்சில் வார்த்தாலும் உடைந்தால் இணையா காந்தங்களாய் ஆகிவிட்டது மனங்கள். என்று அவள் மனம் பரிதவித்துக் கொண்டு தனித்தே நிற்க,

போது போதும் என்னை காக்க வைத்தது இன்னும் என்னை என்ன செய்ய உத்தேசம், என்னால் இனிமேல் உன்னை விட்டு தனியாக இருக்க முடியாது என, அவன் அவளை அணைத்திருந்தான்.

நெஞ்சோடு சேர்த்து கொண்டான், நெருக்கத்தில் நொருங்கிப் போனது அவளின் அத்தனை அர்த்தமற்ற அபத்தங்களும், க்டல் சேர்ந்த நதியானாள், தடையில்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

மூச்சு விட மறந்த நொடிகளிலிருந்து வெளிவந்தது அவளே, அவன் முகத்தை கையில் ஏந்திக் கொண்டாள். கண்ணோடு கண் நோக்கினாள், வாய் பேச்சிற்கு வேலை இல்லை என்பார்கள் ஆனால் இங்கே தலைகீழாய், அவன் கண்ணை ஆழநோக்கி “ஐ லவ் யூ ராஜா” என்றாள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று மனம் ஆனந்த கூத்தாட, ”லவ் யூ டூ பேபி, லவ் யூ எ லாட்ட்ட்ட்” என்று அவளைத் தூக்கி தட்டாமாலையே சுற்றிவிட்டான் ராஜா.

தேவர்கள் அந்நேரம் பூத்தூவி ஆசீர்வதித்தார்களோ இல்லையோ பூபதி குலுக்கியதில் அந்த மரத்தின் மேல் படர்ந்திருந்த முல்லைப்பூக்கள். அவர்கள் மேல் விழுந்தது.

சுற்றிலும்  மாந்தர்கள் இருந்தும் தெரியாத மாயாலோகத்திலுருந்து வெளியே வந்தவர்கள், அப்பொழுது தான் சுற்றிலும் பார்க்க, பைக்கில் சாய்ந்த படி, பூபதியும் மலர்விழி ஒருபுறம், தன் ராயல் என்ஃபீல்டில் அமர்ந்தபடி சேதுபதி மறுபறம் அமர்ந்திருப்பதைப் பார்த்தனர்.

“ஹப்பாடி ஒரு வழியா நம்மளை கண்ணு தெரிஞ்சிடுச்சு மச்சான்” என்றான் சேதுபதி.

“அப்படீங்குற எனக்கு அப்படி தெரியலையே மச்சான், இன்னும் அவங்களுக்கு எங்க இருக்கோம்னு புரியவே இல்லை டா” சேதுபதியோடு சேர்ந்து கொண்டான் பூபதியும்,

“பூமி பூமி தான் காலை வைங்க பாஸ், வானத்துல பறந்தது போதும்” என்று மலரும் அவள் பங்கிற்கு கூற,

இதுவரை அனுபவிக்காத சுழலில் சிக்கிக் கொண்டாள் செல்வி, இன்பமான அவஸ்தையாகிப் போனது அவளுக்கு, அவனோ கைகளை விடாமல் பிடித்துக் கொண்டே நிற்க அனைவர் முன்னுமா இப்படி என்று அவளுக்கு வெட்கமாகிப் போக, எப்போதும் தலைநிமிர்ந்து நடக்கும் அவள் நாணி நின்றாள்.

ராஜாவுக்கோ குஷி பலமடங்காய் இருந்தது, கையில் செல்வி கண்ணில் நண்பர்களென ஒன்று கூடிவிட்ட சந்தோஷத்தில், செல்வியே காதலைச் சொன்ன எதிர்பாராத இன்பதிர்ச்சி வேறு எல்லாம் ஒன்று கூடியிருந்ததில் அந்த நிமிடம் உலகத்திலேயே தன்னைப் போல் யாரும் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது என சிறு கர்வம் கூட எட்டிப்பார்த்தது அவனில்.

ஆனால் இந்த சூழல் இப்படியே இருக்கவிட விதி  அத்தனை சுலபமானதா என்ன, தன் இருகைகளையும் தேய்த்து பரபரத்தப்டி அடுத்த திட்டத்தை அவிழ்த்துவிட்டது.

கைகளை நன்றாக ஒரு முறை உதறிக் கொண்டான் வேந்தன். இரவிலிருந்து கைகளை பின்னால் கட்டி வைத்திருந்தது கைகளே இல்லாததது போல் இருந்தது அவனுக்கு, வலியும் மறத்துப் போன நிலையில், மூளை மட்டும் தெளிவாய் வேலை செய்து, கட்டை அவிழ்த்துவிட்டான், வரிசையாக, வாயில், காலில் என அத்துணை கட்டுகளையும், களைந்து எழுந்து நின்று சாவதனாமாய் சோம்பல் முறித்தான்.

இன்னும் தான் எங்கிருக்கிறோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.

மரத்தால் ஆன அவ்வீட்டில் பேருக்கு கூட வெளிச்சம் எட்டிப்பார்க்கவில்லை, பலமணி நேரம் கடந்து மீண்டும் இரவாகி விட்டதா, என்று குழம்பிக் கொண்டிருந்தான்.

பழகிய இடத்திலேயே இருட்டிற்கு கண்கள் பழகினாலும் பொருட்களை எடுக்க சிரமப்படக்கூடிய இடத்தில் என்ன செய்வதென ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

கைகளை நீட்டியபடி, காற்றில் தேடிக் கொண்டிக்கொண்டே ஒரு அடி எடுத்து வைக்க எங்கோ பாதாளத்தில் விழுந்துவிட்டதைப் போல் அலறினான்.