“தில்லைபுரி ராணிக்கு என் வணக்கங்கள்”
“வாருங்கள் மந்திரியாரே! என்ன நான் சொன்னபடி எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் தானே?”
அதிகாரமாய் கேட்டு நின்றாள் தில்லைபுரி ராணி என்றழைக்கப்பட்ட வசந்தவள்ளி, அதுவே அவளின் சிற்றூரின் பெயர்.
“எல்லாம் தயார் ஆகிவிட்டது அரசியே. அதற்காகத்தானே இன்றைக்கு ஒன்றுமில்லா இவ்வழக்கை அரசவை வரை கொணர்ந்தோம். அதற்கு நல்ல பயன் தரும் வகையில் இன்று ஒரு பெரிய நிகழ்வு நடக்கப்போகிறது அரசி. இந்த நிகழ்வு இந்த தடாகபுரி அரசுக்கு பேரிடியாகதான் இருக்கப்போகிறது”
தில்லைபுரியை சேர்ந்த ஒருவரை இந்தசபையில் மந்திரியாக்கி விட்டிருந்தாள் வசந்தவள்ளி தான் நினைப்பதை நிறைவேற்ற. இப்போது மந்திரி கூறியதை கேட்டு நன்கு சிரித்த வசந்தவள்ளி
“இன்று என் கனவு நனவாகப்போகிறது மந்திரியாரே. என் மகன் இளந்திரையன் அரசனாகி இந்நாட்டை ஆளப்போவது உறுதி” என்றாள்.
“ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை அரசி அவர்களே. தாங்கள் கூறும் இந்த திட்டத்தை நம் இளவரசர் இளந்திரையனை வைத்தே நிறைவேற்றி இருக்கலாமே. ஏன் அவரை இதுவரை தங்களின் எந்த திட்டத்திலும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்?”
மந்திரி தன் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வியை கேட்டு வைக்க “இளந்திரையனா? அவனுக்கு இந்த ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவு அவனுக்கு தழலேந்தியின் மீது ஒருவித சகோதர பாசமும் இருக்கிறதே. இளந்திரையனிடம் இத்திட்டத்தை இப்போது கூறினால் நம் திட்டத்திற்கு முதல் முட்டுக்கட்டையாக வந்து நிற்பது அவனாகதான் இருப்பான்” என்று தன் பற்களை கடித்து பேசினாள் வசந்தவள்ளி.
“அரசியே தாங்கள் கூறுவதை வைத்து பார்த்தால் தற்போது தழலேந்தியை முடமாக்க நாம் ஆட்களை ஏவியிருப்பதை இளவரசர் கண்டுகெண்டால் என்ன செய்யப்போகிறோம்?”
மந்திரி குழப்பமாக கேட்டு வைக்க “அதற்கும் நான் ஒருவழி வைத்திருக்கிறேன் மந்திரியாரே. தழலேந்தியின் மீது சிறு வயதிலிருந்தே இளந்திரையனுக்கு ஒரு நல்ல எண்ணம் உள்ளது. அதை முதலில் நாம் அழிக்க வேண்டும். அதற்கும் இப்போது எல்லாம் அவனிடம் நான் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். நல்லதொரு சந்தர்ப்பம் வரும்போது அவனை முழுமையாக நம்ப வைக்கும்படி செய்வேன்”
வசந்தவள்ளி கூறியதை கேட்டு மகிழ்ந்த அந்த மந்திரி “நான் சென்று வருகிறேன் தில்லைபுரி அரசியே” என கிளம்பிவிட்டார்.
அவர் வெளியேறிய சில நிமிடங்கள் சென்று இளந்திரையன் உள்ளே வந்தான்.
“தாயே வணக்கம். என்ன நம் தில்லைபுரி மந்திரியார் இங்கு வந்து போகிறார்? என்ன நடக்கிறது?”
“நாங்கள் இருவரும் வேறு என்ன பேசிக் கொள்ள போகிறோம் இளந்திரையா உன்னை இந்த தடாகபுரி நாட்டின் மன்னராக்கி அழகு பார்ப்பது தானே எங்களின் எண்ணம். அதைப்பற்றி தான் பேசினோம்”
தன் தாய் கூறியதை கேட்டு புன்னகைத்த இளந்திரையன் “ஏன் தாயே இருவரும் இவ்வளவு கடினப்படுகிறீர்கள். தழலேந்தியிடம் கேட்டால் அவனே தன் ராஜ்ஜியத்தை எனக்கு தந்து விடுவான். என்னை கேட்டால் நானே இத்தடாகபுரியின் அடுத்த அரசன் என்பேன். கவலையை விடுங்கள் இந்த தடாகபுரியை என் கைக்குள் கொணர்வது எப்படி என எனக்கு நன்கு தெரியும்”
இளந்திரையனின் பேச்சை கேட்டு அவனுக்கு தழலேந்தியின் மீது உள்ள பற்றை நன்கு புரிந்து கொண்ட வசந்தவள்ளி ஒன்று கேட்டாள்.
“நான் ஒன்று கேட்டால் உன் மனதிலிருந்து பதில் கூறுவாயா இளந்திரையா?” தன் மகன் ஆம் என்று தலையசைத்தப்பின்
“இப்போது தழலேந்தி உனக்கு இந்த ராஜ்ஜியத்தை விட்டுதரவில்லை என்றால் என்ன செய்வாய்? இந்நாட்டின் அடுத்த அரசன் என இங்கு அரண்மனையில் வாயில் காவலனிலிருந்து இந்நாட்டு மக்கள் வரை அனைவராலும் அறியப்படுபவன் அவன்.
அவன் எப்படி உனக்கு ராஜ்ஜியத்தை விட்டு தருவான். சிறுபிள்ளை தனமாக பேசுகிறாயே மகனே” என கேட்டுவிட்டு அவன் யோசனை முகத்தை பார்த்து மனது நிறைந்தார் வசந்தவள்ளி.
“எனக்கு புரியவில்லை தாயே நானும் இந்நாட்டின் இளவரசன் தானே. அப்போது எனக்கும் சம உரிமை உண்டல்லவா?”
“இல்லை இளந்திரையா நீ வெறும் தாய்வழியால் இங்கு பந்தம் கொண்டவன். உன் நாடு தில்லைபுரியே. ஆனால் இங்கு உரிமையுள்ள இளவரசன் என்றால் அது தழலேந்தி ஒருவனே. இப்போது சொல் என்ன செய்ய போகிறாய்?”
வசந்தவள்ளி இளந்திரையனை நன்கு குழப்பி விட்டு அதன்மூலம் பெரிய மீனை பிடிக்க திட்டம் போடலானாள். அவன் அன்னை கூறியதை கேட்ட இளந்திரையன் வீராவேசத்துடன் பேசினான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது தாயே. நானே இந்நாட்டின் அடுத்த அரசனாவேன். அதற்கு இடையில் எது வந்தாலும் யார் வந்தாலும் அவர்களை பாரபட்சம் இன்றி கொன்று நான் மகுடம் சூட்டுவேன்”
அவன் கூறியதை கேட்டு “அது தழலேந்தியாய் இருந்தாலுமா இளந்திரையா?” என்ற வசந்தவள்ளியின் வினாவிற்கு ஏதும் பேசாது அமைதியாக அப்படியே வெளியேறினான் இளந்திரையன்.
“எனதருமை மகனே! இதே போல் நீ இருந்தால் போதும் உன்னை தழலேந்திக்கு எதிராய் திருப்பி அவனுக்கு பதிலாய் உன்னை நான் விரைவில் இந்நாட்டு அரச மகுடத்தில் ஏற்றிடுவேன்” என களிப்பில் மிதக்க துவங்கினாள் வசந்தவள்ளி.
தடாகபுரியின் காந்தாரி காடு…
காந்தாரி காடு அடர்ந்த மரங்களின் வீடு எனலாம். வானுயர்ந்த பல மரங்கள் பல மருத்துவ செடி கொடிகள் என பசுமைக்கு பெயர் போன இந்த காட்டில் உள்ளே நுழைந்தால் மனம் முற்றிலும் அமைதி பெறும். அதே நேரம் இங்கு பல இடங்களில் பல மர்மங்களும் மறைந்து இருக்கவே செய்கிறது. அந்த காட்டில் தான் இளவரசன் தழலேந்தி தன் தோழன் எழிலரசனுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
“தழலேந்தி நீ ஏன் நேற்று இந்த வனத்தின் எல்லை காவலுக்கு வந்தாய். மற்ற வீரர்களை வைத்து நான் பார்த்துக் கொள்ளமாட்டேனா? இப்போது பார் நம் வீரர்கள் இன்னும் வந்து சேரவில்லை” எழிலரசன் அங்கலாய்பாய் கேட்க
“எழிலரசா இங்கு இருப்பது இளவரசன் தழலேந்தி அல்ல உன் நண்பன் இந்த நாட்டின் சாதாரண காவல் வீரன். எல்லோரையும் போல் நானும் இந்த காவல் பணியில் ஈடுபடுவதே நியதி” தழலேந்தி நியாயமாய் பேசி வைத்தான்.
“பொல்லாத நியதி உனது தந்தைதான் இந்நாட்டின் அரசர் நீயோ அடுத்த அரசன். நானெல்லாம் உன் நிலையில் இருந்திருந்தால் இந்நேரம் நன்றாக அரண்மனையில் படுத்து ஓய்வில் இருந்திருப்பேன். இதெல்லாம் எங்கே உனக்கு புரியப்போகிறது”
பெருமூச்சுடன் பேசிய நண்பனை கண்டு சிரித்த தழல் வேறெதுவும் பேசாது அவனுடன் மேலும் நடந்தான். அவர்கள் அருவியை நெருங்கும் நேரம் ஏதோ பயங்கரமான சத்தம் கேட்க இருவரும் அந்த இடத்திற்கு வேகமாக ஓடினர்.
அங்கு அவர்கள் பார்த்த காட்சியில் இருவரும் ஒருநிமிடம் தங்களின் மெய் மறந்து அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கலாயினர். அப்படி அங்கு என்ன தான் நடக்கிறது என்று பார்த்தால், நான்கு ஐந்து ஆட்களுடன் ஒரு பெண் வாளெடுத்து சண்டையிட்டு கொண்டிருந்தாள்.
அவள் வாள் வீசும் அழகை கண்டு தழலேந்தி மனதளவில் சுகமாக வீழ்ந்து போனான். அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அவள் கூந்தல் ஆடும் விதத்தை கண்டவன் மனது அந்த கூந்தலிலே காலம் முழுவதும் கழித்திட அவன் மனம் அந்த நிமிடம் உவகை கொண்டது.
எவ்வளவு நேரம் அவளை பார்த்திருந்தானோ எழிலரசன் அவன் சிரத்தை பிடித்து அசைத்த பின்னரே நிகழ்காலத்திற்கு வந்தான் இளவரசன்.
“என்ன தழலேந்தி இப்படி சிலை போல் நிற்கிறாய். அங்கே ஒரு சிறு பெண் ஆறு ஆண்களுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறாள் வா நாமும் சென்று உதவலாம்”
அவன் அழைத்த பின்னரே தழல் அங்கிருந்த நிலை உணர்ந்து அவனும் சென்று உதவினான். இப்போது மூவர் சேர அங்கிருந்தோர் அவர்கள் மூவரின் வாள் வீச்சில் வீழ்ந்து போயினர்.
சண்டை முற்று பெற்றவுடன் அங்கிருந்த வேறு ஒரு பெண் வேகமாக ஓடிவந்து சண்டையிட்ட பெண்ணை அணைத்துக் கொண்டாள்.
“தடாகை ஏன் இப்படி செய்தாயடி. நான் சிறிது நேரத்தில் பயந்துவிட்டேன் தெரியுமா. உனக்கு வாள் வீச தெரியும் என்பதற்காக எல்லோரிடமும் சண்டைக்கு சென்றுவிடுவாயா. நீ எதற்காகடி அந்த தடியன்களுடன் சண்டைக்கு சென்றாய்”
கடிந்து கொண்ட வஞ்சிக் கொடியை தானும் அணைத்துக் கொண்டாள் தடாகை.
“அடியே கொடி நான் தடாகைக்குழலியடி. இந்த தடாகைபுரியின் வீரம் என்னுள் உள்ளது. என் கண் முன்னால் யாரேனும் தவறிழைத்தால் என்னால் பார்த்துக் கொண்டு அமைதியாய் செல்லமுடியாது. நீ கவலை கொள்ளாதே என்னை பார்த்துக் கொள்ள எனக்கு நன்றாகவே தெரியும்”
அவள் கூறியதை கேட்டு சரி என்பதாய் தலை அசைத்த கொடி அப்போதே அவர்கள் அருகில் இருப்பவர்களை கண்டு தடாகையிடம் அவர்களை சுட்டிக் காட்டினாள்.
ஆம் அங்கிருந்தது தடாகையும் கொடியுமே. வஞ்சிக்கொடி வீட்டிற்கு வந்த தடாகை அதன்பின்னரே அவள் வரவு காந்தாரி காட்டிற்கு செல்ல என வஞ்சிக்கொடியிடம் தடாகை கூற வஞ்சிக்கொடி முதலில் மறுத்துப் பார்த்தாள்.
ஆனால் அவள் வீட்டில் வைத்து ஏதேதோ பேசி கொடியை சம்மதிக்க வைத்து அவள் துணைக்கு வந்த காவலர்கள் அறியாமல் பின் வாசல் வழி வெளியேறி இருவரும் இங்கே நீராட வந்திருந்தனர்.
இப்போது கொடி சுட்டிக் காட்டியவர்களை திரும்பி பார்த்த தடாகை “மிக்க நன்றி வீரர்களே! தாங்கள் எனக்கு தக்க சமயத்தில் வந்து உதவி புரிந்தீர்கள்” என்றாள் பணிவாக.
“தளபதியின் மகளுக்கு என் வணக்கங்கள்!” வஞ்சிக்கொடி தடாகையின் பெயர் கொண்டு அழைக்கவுமே அது யார் என கண்டுக் கொண்டான் தழலேந்தி. அவளை பார்த்து சில ஆண்டுகள் கடந்திருந்ததால் பார்த்தவுடன் அவளை அடையாளம் தெரியவில்லை அந்த இளவரசனுக்கு.
ஆனால் அந்த பெயர் ஒன்று போதுமே அவள் யார் என அறிய. எனவே அவளை தளபதி மகள் என்றே அழைக்க திடுக்கிட்டு அவனை பார்த்தாள் தடாகை.
பின்னே அவளே தந்தையிடம் பொய் உரைத்து தோழியோடு திருட்டுத்தனமாக வந்திருக்க இவன் எடுத்தவுடன் தளபதி மகள் என்றால் என்னதான் செய்வாள் அவளும். தழலேந்தி தடாகையின் அந்த ஒருநிமிட தடுமாற்றத்தை நன்றாகவே கண்டுக் கொண்டான்.
‘அப்போது தளபதியை ஏய்த்து விட்டு தான் இங்கே வந்திருக்கிறாயா குழலி. ஆனால் என்னிடம் வந்து மாட்டிக்கொண்டாயே!’ மனதிற்குள் குறும்பாக எண்ணிக் கொண்ட தழல் மேலே பேசினான்.
“நாங்கள் வராது போயாருந்தாலும் தாங்களே அவர்களை உங்களின் வாளின் கீழ் கொண்டு வந்திருப்பீர்கள் தேவி”
தழலேந்தியின் வார்த்தைகளில் இருந்த பணிவு அவன் கண்களில் இல்லை. அவன் கண்கள் இரண்டும் அப்பட்டமாக அவளை விழுங்கும் பார்வை பார்த்து வைத்தது. அவன் கண்கள் பேசிய பரிபாஷையில் அதுவும் ஒரு ஆடவனின் பார்வையில் முதல்முறை லேசாக தடுமாறி நின்றாள் தடாகை.
“நா.. நான் தளபதியின் மகள் என்று எப்படி சரியாக கண்டுக் கொண்டீர்கள்?” அதே தடுமாற்றத்துடன் தடாகை கேட்க
“இந்நாட்டில் தடாகைக்குழலி என்றொரு பெயர் கொண்ட பெண், அதுவும் இவ்வளவு வீரம் வாய்க்கப்பட்டவள் எங்கள் தளபதியின் ஒரே மகள் என இந்நாட்டில் அறியாதவர்கள் யாரும் உண்டா என்ன” பதில் புன்னகையுடன் கேட்டு வைத்தான் தழலேந்தி.
“ஓஓ.. சரி வீரரே நாம் இதற்குமுன் எங்கேயும் பார்த்திருக்கிறோமா? எனக்கு தங்களை எங்கேயே பார்த்தது போல் தோன்றுகிறது. ஆமாம் தங்களின் பெயர் என்ன?” தடாகை கேட்டவுடன் எழிலரசன் வேகமாக பதில் கூற வந்தான்.
அவன் பேசும்முன் அவன் கையை பிடித்து தடுத்த தழலேந்தி “மாறன் என்பது என் பெயர், நான் சாதாரண காவல் வீரன். நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை தேவி” என முற்று முழுதாக பொய் உரைக்க எழிலரசனோ வாயைப் பிளந்தது பார்த்திருந்தான் தழலேந்தியை. இந்த மாறனாக வரும் தழலேந்தியால் தடாகையின் வாழ்வில் என்னென்ன மாற்றம் வருமோ?