கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கிருக்கும் பள்ளியின் பெயரை குறிப்பிட்டவள், “நான் அங்க ரெண்டு வருஷம் படிச்சேன் சார். நீங்ககூட எனக்கு அப்போ சயின்ஸ் க்ளாஸ் எடுத்தீங்க, குடும்ப கஷ்டம்னு ஒருதடவை புக்ஸ், நோட்ஸ் வாங்க ஹெல்ப் கூட பண்ணீங்க.” என்று அவளே அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த ஊர் மற்றும் பள்ளியின் பெயரைக் கேட்டதும் நொடி நேரம் பழைய நினைவுகள் வந்து சென்றது.

தொண்டை செருமி நினைவுகளுக்கு பின் செல்லத்துடிக்கும் மனதை இழுத்துப்பிடித்து நிறுத்தி, “அப்படியா? நியாபகம் இல்லமா.” என்றான் நிலாவிடம்.

“அன்னைக்கு ஸ்கூல்ல மீட்டிங் ஹால் வெளில உங்க பொண்ணோட உங்களை பாத்ததும் ஷாக் ஆகிட்டேன் சார். நீங்களும் என்னை நியாபகம் வச்சிருப்பீங்களானு அன்னைக்கு யோசனையா இருந்துச்சு. அப்புறம் பேசலாம்னு பாத்தா உங்களை பாக்க முடியல.” என்று நிலா மேலும் பேச, லேசாக தலையசைத்தான் சக்திவேலன்.

“மேடமை பாப்பாவை கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க சார். இங்க பக்கம்தான்.” என்று அவள் அந்த தெருக்கோடி நோக்கி கை காண்பிக்க, 

“இருக்கட்டும்மா. என் பிரெண்ட் ஊருக்கு போகணும், நாங்க கிளம்புறோம்.” என்று நாசுக்காய் சுவாதியை கைகாட்டி சொல்லி கயலை கைப்பிடித்து நகர்ந்தான். சுவாதியும் அவனை தொடர்ந்து நடக்க, சாலையின் எதிர்புறத்தில் சென்ற ஆட்டோவை நிறுத்தி அவர்களை ஏற்றிவிட்டு இவன் பின்தொடர்ந்தான். செல்லும் அவர்களை புருவ முடிச்சுடன் பார்த்து நின்றாள் நிலா. அவர்கள் பார்வை விட்டு மறையும் வரை நின்றவள் தலையை உலுக்கிக்கொண்டு வீடு நோக்கி நடக்க, அவளை ஆராய்ச்சியாய் பார்த்து நின்ற ரவி சக்தி வீட்டை அவள் கடக்கையில் கைநீட்டி நிறுத்தினான்.

“அண்ட இடம் இல்லைனு இங்க ஒண்டிக்கிட்டு இப்போ யாரோடையோ கொளாவிட்டு வர… அப்படியே அவங்களோட போ வேண்டிதுதான. விட்டது சனினு க்காவை தலை முங்க சொல்லியிருப்பேன்.” என்றவனை முடிந்த மட்டும் முறைத்த நிலா, “நான் வேலை பாக்குற ஸ்கூல்ல டீச்சர் அவங்க.” 

நெற்றி சுருங்க தலையை முன்னே சரித்தவன், “பேர் சொல்லு நான் விசாரிக்கணும்.”

“சும்மா பேசுனாகூட தப்பா. அப்படி என்ன என் மேல சந்தேகம் உங்களுக்கு?” ஆயாசமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“நீ மூச்சுவிடுறதை கூட நான் நம்புறதா இல்லை.” என்றவனைப் பார்த்து பெருமூச்சுவிட்டவள் சக்திவேலன் பெயரை சொல்லி அவனிடம் என்ன பேசினாள் என்றும் கூற, “எப்போ கடலூர்ல இருந்த? சொல்லவே இல்ல?” 

“அஞ்சாவது ஆறாவது எல்லாம் அங்கதான் இருந்தேன். ஏன் அந்த வீட்டு விலாசமும் வேணுமா?” 

“சொல்லு சொல்லு விசாரிக்கணும்.” என்று ரவி போனை எடுத்துக்கொண்டு தயாராய் இருக்க,

“நியாபகம் இல்லை.” என்றாள் கூம்பிப்போன முகத்துடன்.

“ன்னா?”

“எவ்ளோ அட்ரெஸ் நியாபகம் வச்சிக்க முடியும்? குத்துமதிப்பா இங்க இருக்கு இந்த தெரு பக்கத்துல இருந்தோம்னு தான் சொல்ல முடியும்.”

“உன் அப்பன் அப்படி என்ன வேலை பண்ணான் இப்படி நாடோடி மாதிரி போற இடமெல்லாம் அட்ரெஸ் போட்டு வச்சிருக்கான்.” என்றதும் சுறுசுறுவென அவளுக்கு கோபம் தலைக்கேற அப்படியே திரும்பி தங்கியிருக்கும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய் ந்தா… பேசிட்டு இருக்கும் போதே போறது என்னா பழக்கம்? இதைத்தான் உன் அப்பன் ஆத்தா சொல்லிக்குடுத்தாங்களா?” என்று ரவி கத்த, அவள் நடையின் வேகம் கூடியதே தவிர இவன் புறம் திரும்பிக்கூட இல்லை.

“என்ன வம்பு பண்ணிட்டு இருக்க நீ?” அவன் சத்தம் கேட்டு வெளியே வந்த சக்தி, ரவியின் பார்வை செல்லும் திசை நோக்கி தன் கவனம் குவிக்க, வேகநடையிட்டு செல்லும் நிலாவைக் கண்டதும் விஷயம் பிடிபட்டது அவளுக்கு.

“அவளை ஏன் சீண்டிட்டே இருக்க? அப்படி என்ன பண்ணிடுவானு இப்படி பயப்படுறேனு தெரில.”

“இங்க இவ்ளோ பேர் இருக்கப்போ நீ ஏன் ராஜா அண்ணனையும் என்னையும் மட்டும் உன் கூடவே வச்சிருக்க?”

‘இதென்ன கேள்வி?’ என்றுதான் பார்த்தாள் சக்தி.

“எங்க மேல இருக்குற நம்பிக்கைல தானே எங்கள பக்கத்துல வச்சிருக்க. அந்த இடத்தை சும்மா ஈஸியா அவ தட்டிட்டு போக பாக்குறா… எப்படி விட முடியும்?” என்று எதிர்கேள்வி எழுப்புபவன் எண்ணத்தை அத்தனை எளிதில் மாற்ற முடியாது என்று புரிந்து போனது சக்திக்கு.

“பாவம்டா அவ. நம்மள நம்பி வந்திருக்கா, பாத்து பேசு.” 

“எல்லாம் பாத்துக்கலாம் வுடு. சரக்கு கைமாறி மாசம் ஆச்சு இன்னும் துட்டு வந்தபாடில்லை. ரெண்டு தட்டு தட்டி வாங்கிட்டு வரேன்னாலும் வேண்டாங்குற.” என்று கேட்க, சுற்றி முற்றி பார்த்துவிட்டு உள்ளே சென்றாள் சக்தி.

பின்தொடர்ந்த ரவி, “க்காவ்…”

“எங்க என்ன பேசணும்னு முதல்லேந்து சொல்லிக்குடுக்கணுமா நானு?” என்று சக்தி முறைத்த முறைப்பில் ரவியின் வேகம் குறைந்தது.

“மெல்ல தான் பேசுனேன்.”

“நல்லா பேசுன… பாதி துட்டு கைக்கு வந்து அதை கைமாத்தி வுட்டாச்சு. மீதி சரக்கை ரொட்டேஷன் விடுறப்போ எல்லா கணக்கையும் முடிச்சிடலாம். அடுத்து எந்த ஏரியாவுக்கு எவ்ளோ சப்ளை பண்ணனும்னு மட்டும் பாரு.”

“பாக்குறேன் பாக்குறேன்.” முனகிக்கொண்டே கிளம்பிவிட்டான் ரவி.

மறுபுறம் வீட்டிற்கு செல்லவும் சுவாதியை கிளம்பச்சொல்லி உந்தி, ஒரு பிரிவு போராட்டத்திற்கு பின் அவளை அனுப்பி வைக்க, அத்தனை நேரம் மகிழ்வில் விரிந்திருந்த கயல் முகம் உம்மென்று ஆனது. அதை கவனித்தாலும் காட்டிக்கொள்ளாது இயல்பாக மகளிடம் பேச்சுகொடுத்து உறங்க வைத்தான் சக்திவேலன். உறங்கி எழுந்தால் சரியாகிவிடுவாள் என்ற அவன் எண்ணத்திற்கு மாறாய் மறுநாள் காலையும் கயல் முகம் சோர்வை கொண்டிருக்க, அவன் மனமும் சுணங்கியது.

“ஸ்கூல் முடிஞ்சதும் இன்னைக்கும் பீச் போலாமா பாப்பா? வெயில் குறைஞ்சிடும் ஜாலியா விளையாடலாம்.” என்று ஆசைகாட்ட கயல் முகம் தெளிந்தது.

“ஜாலி ப்பா…” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள, அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் சக்திவேலன்.  இனி முடிந்தமட்டும் சுவாதியை தவிர்க்க வேண்டும் என்று நினைத்த நொடி அதற்கு எதிர்பதமான நிகழ்வுகள் அரங்கேறத் துவங்கியது அவனுக்குத் தெரியவில்லை. 

வழக்கம் போல் கயலை வகுப்பில் விட்டு அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

அன்று மதிய உணவு இடைவெளியில் தோழிகளுடன் உணவு முடித்து கைகழுவி வந்த சமயம் எதிர்ப்பட்ட நிலா கயலைப் பார்த்து சிரிக்க, கயலும் மலர்ந்த புன்னகை வீசினாள்.

“சாப்புட்டு முடிச்சாச்சா?”

வேகமாக தலையசைத்தவள், “நேத்தி நீங்க என்கிட்ட பேசவே இல்லை.”

“உன் அப்பாகூட பேசிட்டு இருக்கும்போதே நீங்க கிளம்பிட்டீங்களே…”

“சுவாதி ஆன்ட்டி ஊருக்கு போகணும்ல அதான் சீக்கிரம் கிளம்பிட்டோம்.” சோகமாக கயல் உதட்டை பிதுக்கினாள். 

“உங்க கூட இருந்தது சுவாதி ஆன்டியா? நேத்தி பீச்சுக்கு அம்மா வரலையா?”

“அம்மாவா?” என்று நொடி நேரம் விழி விரித்த கயல் தலை குனிந்து அமைதியாகிவிட்டாள்.

“என்னாச்சு?”

ஒன்றுமில்லை என்று கயல் தலையசைத்தாலும் ஏதோ இருக்கிறது என்று புரியுமளவுக்கு விவரமானவள் தானே நிலா. இங்கிதமும் சிறுமியின் மனதையும் கருத்தில் கொண்டு அந்த பேச்சை அப்படியே கத்தரித்தாள்.

ஆனால் கயல் என்ன நினைத்தாலோ, “என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் அம்மா இருக்காங்க. என் அம்மாவை மட்டும் கடவுள் சீக்கிரம் கூட்டிக்கிட்டாரு.” 

‘அச்சோ?’ என்று கயலுக்காக நிலாவின் மனம் துடிக்க, கயல் கைபிடித்து அருகே இருந்த மர நிழலுக்கு கூட்டிச் சென்று அமர வைத்தாள். உடன் வந்த சிறுமி இவர்களை பார்த்து நிற்க, அவளையும் கயல் அருகில் அமரச் சொல்லி நிலா கண்காண்பிக்க, “க்ளாஸ்க்கு நேரமாச்சு.” என்றது அந்த சிட்டு. 

நிலா கயலைப் பார்க்க, “நேரமாச்சா?” என்று கேட்டாள் கயல்.

“இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு.” என்ற நிலா ஆதுரமாய் கயல் தலையை வருடிவிட்டு, “அம்மா கடவுள்கிட்ட இருந்தாலும் உன்னைத்தான் நினைச்சுகிட்டு இருப்பாங்க. கயல் நல்லா படிக்குறாளா சமத்து குட்டியா இருக்காளானு உன்னை பாத்துட்டே இருப்பாங்க. உனக்கு என்ன புடிக்குமோ அதை எல்லாம் அப்பா மூலமா கொடுக்க வைப்பாங்க.” 

“நிஜமாவா? என்ன புடிக்குமோ அதெல்லாம் தர சொல்லுவாங்களா?” என்று ஆர்வமாய் கயல் நிமிர்ந்து பார்க்க, எதற்கு இத்தனை ஆர்வம் என்று சந்தேகமாக பார்த்தாள் நிலா. 

“சொல்லுங்க ஆன்ட்டி. எனக்கு பிடிச்சதெல்லாம் அம்மா அப்பாகிட்ட சொல்லுவாங்கதானே?” என்று கேட்க, என்ன சொல்வது என்று தெரியாது தலையை ஆட்டி வைத்தாள் நிலா. 

“நேத்தி ரொம்ப ஜாலியா இருந்துச்சி. சுவாதி ஆன்டி என்கூடவே இருந்தா தினம் ஜாலிதானே? டெய்லி அவங்களே ஸ்கூலுக்கு கிளம்ப டிரெஸ் பண்ணி விடுவாங்க, புடிச்சது எல்லாம் செஞ்சு கொடுப்பாங்க, என்கூட கார்ட்டூன் பாப்பாங்க, விளையாடுவாங்க. நாங்க ஜாலியா பேசிட்டே தூக்குவோமே.” என்று கயல் ஆர்பாட்டமாய் சொல்ல, தலையே சுற்றியது நிலாவுக்கு. 

பேசத்தெரியாது பேசிவைத்துவிட்டோமோ. இப்போது கயல் சென்று இதனை சக்திவேலனிடம் கூறினால் ஐயோ என்று ஐயம் பரவ, படாரென எழுந்தவள், “பெல் அடிக்க போறாங்க க்ளாஸ் போங்க.” என்று அவர்களை அனுப்பிவைத்துவிட்டு கைபிசைந்து நின்றுவிட்டாள்.