*4*

தன்னருகில் அமர்ந்திருக்கும் சக்தியை பார்ப்பதுமாய் பின் குனிந்து கொள்வதுமாய் இருந்த நிலாவை கண்ணாடி வழியே கோவத்துடன் பார்த்த ரவி, “இன்னாத்துக்கு இப்போ நீ க்காவை லுக் வுட்டுட்டு இருக்க? அதான் இளையராஜாகிட்ட பாடம் கத்துக்கிட்டதாட்டம் சோககீதம் வாசிச்சு அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டியே.” என்று அதட்டலாய் பேச, “ரவி கம்முனு இரு.” என்ற சக்தியின் கண்டனம் எல்லாம் அவன் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. 

அவனது ஆவேசக்குரலில் அதிர்ந்து விழித்த நிலா, “இல்..லை போ…போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போட்டதும் என்னை அனுப்பிடுவீங்களா?” என்று ஐயத்துடன் கேட்டாள் நிலா.

“அட்டை பூச்சு ஒட்டுனா ஒட்டிக்கோ கட்டிக்கோனு ஆராவது கூடவே வச்சிப்பாங்களா?” என்ற ரவியின் தலையில் லேசாக தட்டிய சக்தி,

“அந்த புள்ளையே பயந்து கிடக்குது. நீ சவுண்ட் விட்டுட்டு இருக்க. வேகமாக போ ரவி.”

“இதெல்லாம் எனக்கு சரியாப்படல. பாத்துக்கோ சொல்லிட்டேன்.” என்ற ரவி அதன்பின் வாய் திறக்கவில்லை. 

புலரத் துவங்கிய அக்காலை பொழுதினில் கதிரவன் தன் கதிர்களைப் பரப்ப, ஆட்டோவின் பக்கங்கள் வழியே எட்டிப்பார்க்கும் இளஞ்சூட்டை அனுபவித்தபடி ஆட்டோவில் பயணித்தனர் மூவரும். இரவு முழுதும் அந்த மருத்துவமனையில் ஓய்வெடுத்து காலை ரவியை வரவழைத்து காவல் நிலையம் சென்றுகொண்டிருந்தனர்.

அந்த பகுதி காவல் நிலையம் வரவும் தயங்கித் தவித்த நிலாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் சக்தி. நேற்று இரவு விசாரித்த காவலர்கள் இன்று இல்லை. வாயிலில் இருந்த காவலரிடம் தகவல் கூறிக் காத்திருக்க, அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் சக்தியைக் கண்டுகொண்டு குனிந்து தங்களுக்குள் ஏதோ முணுமுணுப்பதுமாய் நிமிர்ந்து அவளைப் பார்ப்பதுமாய் இருந்தனர். இதையெல்லாம் கவனித்தாலும் கவனிக்காதது போல் இருந்தாள் சக்தி. ஆனால் அவளின் பின்புலம் அறிந்தமையால் அவர்களை அதிகம் காக்க வைக்காமல் நிலாவிடம் விவரம் சேகரித்து ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு தேவைப்பட்டால் அழைக்கிறோம் என்று அனுப்பி வைத்தனர்.

அனைத்தையும் சக்தி இருக்கும் தைரியத்தில் முடித்த நிலா வெளியே வந்ததும் தயக்கமாய் சக்தியை பார்க்க, என்ன என்பது போல் புருவம் உயர்த்தினாள் சக்தி. 

“தேவைப்பட்டா கூப்புடுறோம்னு சொன்னாங்களே. அடிக்கடி வர மாதிரி இருக்குமா அக்கா?”

பதிலுக்கு அலட்சியமாய் சிரித்த சக்தியோ, “கூப்புட்டுட்டாலும்.” என்று கேலியாக இதழ் வளைத்தாள்.

“அப்போ… நான் வீட்டுக்கு போலாமா?” 

“போலாம் நிலா. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசியிருக்கேன். உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்ல சொல்லி உன்னை கடத்துனவங்க யாருனு கண்டுபுடிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்காக நீ அலட்சியமா இருந்துடாத. கவனமா இருக்கனும். உன் சொந்தக்காரங்க யாரையும் துணைக்கு கூட்டி வச்சிக்க.” என்றதுமே நிலாவின் விழிகள் கண்ணீர் சுரந்தது.

“துணைக்கு யாரும் வரமாட்டாங்க அக்கா…” கலக்கமாய் சொல்லிய நிலாவின் தோற்றமே நிலையின்மையை காட்டியது. 

“மாமா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா இப்படி யாரும் இல்லையா?” 

“ஒரு சித்தப்பா இருக்காங்க. வெளிநாட்டுல இருக்காங்க. சித்தி துணைக்கு வரமாட்டாங்க. நானும் அங்க போய் பழக்கமில்லை.” என்றவளை கூர்ந்து பார்த்தாள் சக்தி.

அதில் மேலும் கலக்கமுற்ற நிலா, “என்னக்கா? உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேனா?”

இல்லை என்று சக்தி தலையாட்ட, “இவங்களால தொந்தரவு வரும்னு தெரிஞ்சா கவனமா ஒதுங்கி போகலாம். என்னை இங்க கடத்தி கூட்டிட்டு வந்தது யாருனே தெரியாதப்போ என்னை எப்படி நான் காப்பாத்திப்பேன் அக்கா?” என்று பயத்தில் வெளிறிப் போய் கேட்க, நிலாவைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. 

ரவியைத் திரும்பி ஒருபார்வை பார்த்த சக்தி, “இங்க பாதுகாப்பா தங்க ஒரு இடம் ஏற்பாடு பண்றேன் உனக்கு ஓகேவா?” 

“யாரும் என்னை ஒன்னும் பண்ணிட மாட்டாங்கல்ல அக்கா?” இன்னும் தெளியாத கலக்கத்துடன் கேட்டவளின் முகம் வெகுவாய் கலங்கி, கசங்கியிருந்தது.

“நாந்தான் சொல்றேன்ல அப்புறம் என்ன பயம் உனக்கு?” என்ற சக்தியின் கேள்விக்கு பதிலுக்கு முன் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது நிலாவிடம். 

“நான்… நான் சுயநினைவோட இருந்தா கூட எனக்கேதாவது ஒன்னுனா என்னை காப்பாத்திக்க போராடுவேன். ஆனா நேத்தி நடந்தமாதிரி நினைவே இல்லாதப்போ ஏதாவது ஆச்சுன்னா… அதை நினைச்சாலே நடமாட பக்குனு இருக்கு அக்கா.” என்றாள் நிலா மேலும்.

“நான் தங்கியிருக்கிற ஏரியாவிலே ஒரு வேலையும் நீ தங்க இடமும் ஏற்பாடு பண்றேன். அங்க எங்க ஆளுங்களை மீறி ஒருத்தரும் உள்ள வர முடியாது. உனக்கு ஓகேனா சொல்லு போலாம்.” 

“நீங்க இருப்பீங்கல்ல அக்கா?” என்று உறுதிப்படுத்திக்கொண்டே சம்மதமாய் தலையசைத்தாள் நிலா.

“ஆட்டோல ஏறு.” என்ற சக்தியும் நிலாவை உள்ளே விட்டு ஏறிக்கொள்ள, ஆட்டோவை இயக்கிய ரவி அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகம் நோக்கி செல்லவும் புரியாது பார்த்தாள் சக்தி.

“எங்க போற ரவி?”

“நீ கம்முனு இருக்கா… அது ஏதோ கதை கட்டுது நீயும் அதை நம்பிகிட்டு உடனே ஏரியாவுக்குள்ள வுடுறேங்குற.” என்றவன் சக்தியின் அதட்டலைக் கூட பொருட்படுத்தாது ஓரிடத்தில் ஓரமாய் ஆட்டோவை நிறுத்தினான்.

“எதுக்கு இங்க நிறுத்தியிருக்க?” என்ற சக்தியிடம், “கீழ இறங்கு க்காவ்…” என்றவன் சக்தி கீழிறங்கவும் உள்ளே அமர்ந்திருக்கும் நிலாவைப் பார்த்து, “உனக்கு தனியா சொல்லனுமா? இறங்கு கீழ… கொஞ்சம் இடம் கொடுத்தா சொகுசா குந்திக்குறது.” 

“என்னடா பண்ணிட்டு இருக்க நீ?” சக்தி அவனை முறைக்க, லேசாக துளிர்த்த பயத்துடன் கீழே இறங்கினாள் நிலா.

“இந்தா இந்த இடம் தெரியுதா?” என்று அவன் நிலாவைப் பார்க்க, சக்தியும் சுற்றத்தை கவனித்தாள். நிலா ஐயத்துடன் விழிகளை சுழற்றி பார்த்துவிட்டு இல்லை என்பதாய் தலையசைக்க, “என்னா தெரியலையா… ராத்திரி இங்கதான் வந்து என் ஆட்டோல வுழுந்த நீ. கண்ணை நல்லா துறந்து பார்த்து எங்கிருந்து வந்தேன்னு ஒழுங்கா சொல்லிப்புடு.” என்றதும் சக்தி இப்போது கண்களில் உருப்பெருக்கியை கொண்டு பார்ப்பது போல் அனைத்தையும் கவனித்துப் பார்த்தாள்.

ஆனால் நிலாவோ திறுதிறுவென விழித்து நின்றாள்.

“என்ன?” என்ற ரவியின் அதட்டல் குரலில் அவள் உடல் வெளிப்படையாகவே உதறல் எடுத்தது. 

“பொறுமையா ரவி?” என்ற சக்தியின் கவனம் அந்த பகுதியை ஒருமுறை வட்டமடித்தது. நிறைய கிளை சந்துகள் இருக்கும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தாலும் இரவு ஆனால் வீட்டிற்குள் அடைந்துவிடுவர் என்று புரிந்தது. சந்தேகம்படும்படி எதுவும் சிக்கவில்லை என்றாலும் எங்கும் எந்த சந்திலும் பொந்திலும் எவரும் பதுங்கி ஒளிந்திருக்கலாம் என்று கணக்கிட்டவள் நிலாவைப் பார்க்க,

“எனக்கு சரியா தெரியல.” என்றாள் அவள். 

“அதெப்படி தெரியாம போகும்.” என்றும் குதித்த ரவியை சக்தி தான் அடக்கினாள்.

“அந்த நேரத்துல தப்பிச்சா போதும்னு தான் இருக்கும் ரவி. அந்த பொண்ணை மூச்சுவிட விடு. சும்மா படுத்தாம வீட்டுக்கு விடு ஆட்டோவை.”

“நீ சும்மா இருக்கா… இதெல்லாம் சூட்டோட விசாரிச்சிடனும். இந்தா பாரு, உனக்கு நியாபகம் இல்லை சரி. தோராயமா எவ்வளவு தூரம் ஓடி வந்திருப்பேனு சொல்லு. மிச்சத்தை நாங்க பாத்துக்குறோம்.”

“பத்து நிமிஷம் ஓடி வந்திருப்பேன்.” என்று குத்துமதிப்பாக நிலா சொல்ல, ரவி அவளை சந்தேகமாகவே பார்த்து நின்றான்.

“உன் போன் நம்பர் கொடு. நான் கூப்பிட்டு பாக்குறேன்.” என்று அலைபேசி எண் வாங்கி அழைப்பு விடுக்க, அது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. 

“க்காவ் பேசாம ஏதாவது லேடீஸ் ஆஸ்டல் பாத்து சேர்த்து வுட்டுடலாம். இதையெல்லாம் மடியில கட்டிட்டு அலையணுமா?” என்று பார்க்க,

“இப்போ நீ ஆட்டோ எடுக்கலைனா நானே எடுத்துடுவேன்டா.” என்று சக்தி மிரட்டிய பின்தான் ஆட்டோவை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு திருப்பினான்.  

வரும் வழி நெடுக சுற்றத்தை கவனித்தபடி வந்தாள் நிலா.

அவளை பரிவாய் பார்த்த சக்தி, “உன் வீட்லேந்து ட்ரெஸ், செர்டிபிகேட் எல்லாம் எடுக்கணும்ல? என்ன படிச்சிருக்க?” 

“பத்தாவது முடிச்சிருக்கேன்.”

“நாளைக்கு ஆள் அனுப்பி உன்னோடது எல்லாம் எடுத்துக்கலாம்.” என்று சக்தி பேச்சை முடித்துக்கொள்ள, “ரொம்ப தாங்குற க்கா நீ…” என்று முனகிக்கொண்டு ஆட்டோ ஓட்டினான் ரவி.

ஆட்டோ சக்தி வீட்டில் நிற்கவும் இறங்கிய சக்தி, “நிலாவை நம்ம ராஜா வீட்டுக்கு பக்கத்துல இருக்குற சாந்தி அக்கா வீட்டுல நான் சொன்னேன்னு விட்டுட்டு வா. அங்கேயே தங்கிக்கட்டும்.”

வேறெங்கோ தன்னை அனுப்பப்போகிறார்கள் என்று சக்தியின் பேச்சை கொண்டே கணித்த நிலா, “அக்கா எங்க?” என்று பதறி சக்தி கையைப் பற்றி அவளை ஒட்டி நின்றுக்கொள்ள, ஆதரவாய் அவள் கை பிடித்தழுத்திய சக்தி, “இந்த தெரு முனையிலதான் சாந்தியக்கா வீடு இருக்கு. புள்ளைங்க புருஷன்னு யாருமில்லாம தனியாத்தான் இருக்காங்க. நீ அங்க தங்கிக்கோ. என்ன வேணும்னாலும் அவங்ககிட்ட தயங்காம கேளு. உனக்கு வேண்டியது செஞ்சி கொடுப்பாங்க.”

“அப்போ உங்களோட இருக்க முடியாதா?” என்று தவிப்பாய் பார்த்த நிலா, நகரமாட்டேன் என்பது போல் சக்தி கையை பிடித்துக்கொண்டாள்.

“ன்னாதுக்கு இப்போ படம் காட்டுற. உன்னை இத்தாண்டி தூரம் கூட்டியாந்ததே பெருசு. மூடிட்டு வா.” என்றான் ரவி இரக்கமில்லாமல்.

“அது பயத்துல பேசுது.” என்ற சக்தி இமை மூடித் திறந்தவள், “என்னதான் யாரையும் நம்ப முடியாதபடி சூழ்நிலை அமைஞ்சாலும் ஏதோவொரு கட்டத்துல யாராவது ஒருத்தரை நம்பித்தான் ஆகணும் நிலா. கல்லெறிஞ்சி மனசை கலைக்குற கூட்டத்துக்கு மத்தியில அந்த கல்லை பொறுக்கி கூடு கட்டி ஒரு பாதுகாப்பான சூழல் அமைச்சுக்குற கூட்டமும் இருக்கு. அப்படியான ஒரு இடம் இது. என்னை நம்புற மாதிரி இந்த தெருவுல இருக்குற எல்லாரையும் நீ நம்பலாம்.” என்று தைரியம் சொல்லியே அவளை மீண்டும் ஆட்டோவில் ஏற்றிவிட்டாள்.

“பத்திரமா விட்டுட்டு அந்த பொண்ணோட வீட்டுக்கு ஆள் அனுப்பி துணி, செர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு வர சொல்லு. அப்படியே ஒரு போன் ஏற்பாடு பண்ணிக் கொடு அந்தப்பொண்ணுக்கு.” என்று ரவியிடம் சொல்லி அனுப்பினாள்.

முறைத்துக்கொண்டே அவன் சென்று விட்டுவர, ராஜாவும் வந்துவிட்டான். அதற்குள் குளித்து உடைமாற்றி வந்த சக்தி சாதத்தை வடிக்க,

“பேசாம அந்த பொண்ணை உனக்கு சோறாக்க வுட்டிருக்கலாம் க்காவ். இப்போ அதுக்கு எல்லாம் சொகுசு பண்ணிவுட்டு தண்டம் அழ வேண்டியதிருக்கு.” என்ற ரவியிடம் இதற்கு மேல் புரிய வைக்க முடியாது என்று சக்தி தன் வேலையைப் பார்க்க, 

“உனக்கு அந்த பொண்ணு மேல அப்படி என்ன காண்டு?” என்று அவன் தோள் தட்டினான் ராஜா.

“எனக்கு என்னமோ உறுத்திட்டே இருக்கு ண்ணா. சொன்னா க்கா கேக்க மாட்டேங்குது.”

“விடுடா சக்திக்கு தெரியும்.”

“இதையே சொல்லுங்க.”

“அவ்வளவு சந்தேகமா இருந்துச்சுன்னா அந்த பொண்ணு வீட்டுக்கே போய் விசாரிச்சிட்டு வா.” என்றான் ராஜா.

“நீங்க சொல்லலைனாலும் போவேன். இங்க எப்படி வந்துச்சு, யார் தூக்குனா என்னனு விசாரிப்பேன்.”

“நல்லது.”

“தானா வந்து ஆட்டோ மேல வந்து வுழுந்துட்டு புழுகுது. நீங்களும் நம்பிட்டு இருக்கீங்க.” என்ற ரவியை திசை திருப்பும் பொருட்டு,

“நாளைக்கு ஆக வேண்டியது எல்லாம் பாத்தாச்சா?” என்று பேச்சை மாற்றினாள் சக்தி.

“எல்லாம் ஆச்சுக்கா. செமையா பண்ணிடலாம்.” என்ற ரவியின் குரலில் அத்தனை ஆர்ப்பாட்டம். ராஜா புன்னகை முகமாய் நின்றிருக்க, சக்தியின் வதனமும் இளகியிருந்ததோ என்று எண்ணுமளவுக்கு அவள் முகத்தில் ஒரு பொலிவு.

“கவுன்சிலர் குடோனுக்கு போய் சரக்கை பாக்குறியா சக்தி?” என்ற ராஜா அடுத்த பேச்சை துவங்க, புரியாது பார்த்த சக்தி, “என்னைக்கு நாம பகல்ல சரக்கை பாத்திருக்கோம் இன்னைக்கு கேக்குறீங்க? என்ன விஷயம்? ஏதாவது பிரச்சனையா?”

“பிரச்சனையெல்லாம் இல்லை. எப்போதும் நம்ம இடத்துல வச்சி ரொட்டேஷன்ல விட்டுத்தான் பழக்கம். இந்த தடவை நம்ம ஏரியா விட்டு வெளில சரக்கு இறக்கியிருக்கோம். கவனமா பண்ணணும்ல.”

“ஆமா க்காவ்… அண்ணா சொல்ற மாதிரி கவுன்சிலர் இடத்துல இறக்குனதால எதிர்க்கட்சிகாரன் கண்ணுல சிக்க வாய்ப்பிருக்கு. நாளைக்கே பிரச்சனைன்னா கவுன்சிலர் நம்மள கோர்த்துவுட்டு அவன் நல்லவனாகிடுவான்.” என்றான் ரவியும் யோசனையாய்.

பொங்கி வந்த கஞ்சியை கலக்கி வடித்து இறக்கியவள் வெற்றிலை பெட்டியோடு அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

“நீங்க சொல்றது புரியுது. ஆனா நாமளும் எத்தனை வருஷம் இப்படி குண்டு சட்டியில குதிரை ஓட்டுறது? பெருசா இறக்குனாதான் பெரிய பெரிய ஆளுங்களை தெரிஞ்சிக்க முடியும். இன்னும் இன்னும் நம்ம சக்தியை விரிவுபடுத்த முடியும்.” என்றவளின் திட்டம் இருவருக்கும் தெரியுமாதலால் அவள் பேச்சிற்கு மறுப்பு சொல்லவில்லை. அதற்காக அதன் சாதக பாதகங்களை அலசி ஆராயாமலும் இல்லை. 

“இன்னைக்கு எங்க வேலை?” என்று ரவி பார்க்க,

“பக்கத்து ஏரியாவுல கந்துவட்டி பஞ்சாயத்து ஒன்னு இருக்கு. அதை முடிச்சிவிடனும். நம்ம பசங்க ஒரு நாலு பேரை கூப்பிடுக்க, போய்ட்டு வந்துரலாம்.” என்றவள் அன்றைய நாளில் இருந்த பஞ்சாயத்தை முடித்து நிம்மதியாய் உறங்க, படாரென கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தாள்.

பதட்டத்தில் உயர்ந்த மூச்சுக்கள் வெளியே கேட்கும் அரவம் வெடிச்சத்தம் என்று உணரவும் தணிந்து இயல்புக்கு வந்தது.

‘இவனுங்களை… எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்குறது இல்லை…’ என்று புலம்பிக்கொண்டே முடியை அள்ளி கொண்டையிட்டவள் பாய், தலையணையை சுருட்டி ஓரமாய் வைத்துவிட்டு உடையை சரி செய்துகொண்டு வெளியே வந்தாள். 

சூரியன் மேலெழுந்து அதன் கதிர்களை பரப்பத் துவங்கிய நேரம் வானம் செம்மஞ்சள் பூசியிருக்க, ஆர்ப்பரிக்கும் ஆழியின் ஓசை இன்னிசையாய் அவள் செவித் தீண்டியது. கண்களை மூடி ஆழ மூச்சிழுத்தவள் அன்றைய நாளின் முக்கியத்தை உணர்ந்து சில இனிய நிகழ்வுகளை அசைபோட, புன்னகை தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது. கனிந்து பொலிவுற்ற முகம் சட்டென மீண்டும் கேட்ட வெடிச்சத்தத்தில் எரிச்சலாய் சுருங்க, இமை பிரித்தவள்,   

“அடேய் திருந்தவே மாட்டீங்களாடா?” என்று சலித்துக்கொண்டே இடுப்பில் கை வைத்து நின்றாள்.

“ஆப்பி புறந்தநாளு க்காவ்…” என்று அவள் முன் வந்து கத்தினான் ரவி. அவன் கத்தலில் செவி இரண்டையும் உள்ளங்கை கொண்டு மூடிக்கொண்டாள் சக்தி.

பின்னோடே சன்னச்சிரிப்புடன் வந்த ராஜா, “எல்லாம் தயாரா இருக்கு. கோவிலுக்கு போலாமா?”

“இவன் கிறுக்கத்தனம் பண்ணாம பாத்துக்கோங்க.” என்று நொடித்துவிட்டு நகரப்போனவளை அக்கம்பக்கம் உள்ளவர்கள் நிறுத்தி வாழ்த்து கூறினர்.

“உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப சக்திமா…”

“எங்களோட ஆயுசையும் சேர்த்து நீ வாழனும் ஆத்தா…”

“கேக் உண்டா க்காவ்?” என்று வாழ்த்துக்கள் வந்த வண்ணமிருக்க, ஓட்டமும் நடையுமாய் சக்தியை நோக்கி அந்த தெரு முனையிலிருந்து வேகமாக வந்தாள் நிலா.  

“இவ்ளோ காலையில வந்திருக்க ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவளை பிடித்துக் கேட்க,

“உங்களுக்கு பிறந்தநாள்னு சாந்தியக்கா சொன்னாங்க. வெடி சத்தமும் கேட்டுச்சு அதான் வந்தேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா.” என்று மலர்ந்த முகமாய் அவள் வாழ்த்த, அளவான நகைப்புடன் ஏற்றுக்கொண்டு உள்ளே சென்றாள் சக்தி.

“அக்கா புறந்தநாளுக்கு வெடி எல்லாம் தூள் பறக்குது. பெருசா கொண்டாடுவீங்களா அண்ணா?” தன்னை முறைத்த ரவி புறம் மறந்தும் திரும்பாது ராஜாவிடம் கவனம் செலுத்தினாள் நிலா. 

“நம்ம தெரு ஆளுங்களுக்கு மூணு வேலை சாப்பாடு அப்புறம் இந்த தெருவுக்கு துப்புரவு செய்ய வரவங்க, காய்கறி மீன் விக்குறவங்க, இப்படி யார் வந்தாலும் இன்னைக்கு இங்கதான் சாப்பாடு. பக்கத்து தெருவுல இருக்குற கோவில்லையும் சக்தி சார்பா அன்னதானம், பிரசாதம் எல்லாம் உண்டு.”

“புதுசா வந்தவங்களுக்கு எல்லாம் எதுக்கு சோப்பு போட்டு விளக்கிட்டு இருக்க ண்ணா? நீ க்காவை கூட்டிட்டு கோவிலுக்கு கிளம்பு. இங்க நான் எல்லாம் பாத்துக்குறேன்.” என்ற ரவி நிலா புறம் பார்வை செலுத்தி, “ஓய் அட்டை பூச்சி வெங்காயம் வெட்ட ஆள் குறையுது வந்து வெட்டிக் கொடு.”

“நானா?” என்று அவள் அதிர்ந்து விழிக்க,

“அப்படியே சொகுசா இருந்திடலாம்னு பாத்திகளோ. வெட்டுனா சோறு எப்படி வசதி?” என்று அதட்ட, 

“டேய் ஏன்டா?” என்று பார்த்தான் ராஜா.

“நீ கம்முனு இருண்ணா. இதை நான் டீல் பண்ணிக்கிறேன்.” என்று நிலாவை அதட்டி, மிரட்டி வேலை வாங்க அழைத்துச் சென்றான்.

தெருவுக்கே சமைக்கவென அந்த தெருவின் மற்றொரு முனையில் இருக்கும் ஒரு காலி இடத்தில் கொட்டகை மற்றும் தடுப்பு போட்டு சுடச்சுட உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் குளித்து புது பேன்சி பட்டு சேலை உடுத்தி, கண்ணில் மையிட்டு, தோதாய் வளையல்கள் அணிந்து, கேசத்தை அழகாய் பின்னி  அம்சமாய் தயாராகி நின்றாள் சக்தி. வாசலில் அவளுக்காக காத்திருந்த ராஜா அவளைக் கண்டதும் மெச்சுதலாய் பார்த்து பாராட்ட, சின்ன சிரிப்புடன் ஆட்டோவில் ஏறி அவனுடன் கோவிலுக்கு சென்றாள்.

கோவிலில் எல்லாம் தயாராய் இருக்க, இவர்கள் சென்றதும் பிரத்யேக அபிஷேக ஆராதனை நடந்தது. அங்கிருந்த ஒரு மணி நேரமும் கண்களை மூடி இறைவனிடம் தன் அனைத்து புலன்களையும் ஒருங்கிணைத்து சமர்ப்பித்துவிட்டாள்.

“சக்தி பிரசாதம் விநியோகம் பண்ணனும்.” என்று லேசாக அவள் புறம் சரிந்து ராஜா சொல்லவும்தான் இமை பிரித்து நடப்புக்கு வந்தாள்.

இரண்டொரு நொடி மீண்டும் தெய்வத்திடம் வேண்டிவிட்டு வந்து பிரசாதம் விநியோகிக்க, ஒரு தொன்னையில் அவளுக்கும் கொஞ்ச வைத்து அனுப்பிவிட்டான் ராஜா. வழக்கமாக சக்தி விநியோகிக்க தொடங்கி வைத்துவிட்டு அவளுக்கென கொஞ்சம் வாங்கி ஆற, அமர நிதானமாக உண்டு மனநிறைவை உணர்வது அவள் வாடிக்கை. இன்றும் தொன்னையில் வாங்கிக்கொண்டு அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துகொண்டாள்.

மறுபுறம் சக்திவேலன் வீட்டில் அப்பா என்று கத்தி ஊரை கூட்டிக்கொண்டிருந்தாள் கயல்விழி. அவனோ என்றுமில்லாமல் மகளை முறைத்து நின்றான்.

“புதுசா புடிவாதம் பிடிக்க எங்க கத்துகிட்ட நீ?”

“அப்பா இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே தான… கோவிலுக்கு போகலாம் அப்பா…”

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீ ஸ்கூலுக்கு கிளம்பு.”

“என் பர்த்டேக்கு எப்போவும் கோவிலுக்கு போவோமே. ஏன் இன்னைக்கு போக தேவையில்லை சொல்றீங்க?” 

“கயல்.” தந்தை கண்டிப்பு காட்ட காட்ட மகளின் பிடிவாதம் கூடியது.

“சுவாதி ஆன்டி கூட உங்களுக்கு விஷ் பண்ணிட்டு கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க.”

“அதுக்காக எல்லாம் போக முடியாது பாப்பா. ஸ்கூலுக்கு நேரமாகுது நீ போய் கிளம்பு.” அவனுக்குள்ளும் இன்று என்ன புகுந்ததோ மகளிடம் எப்போதும் பொறுமையை கடைபிடிப்பவன் அன்று பிடிவாதமாய் நின்றான்.

“அப்பா”

“கயல் போ’ன்னு சொன்னேன்.” என்று கடுமையாக பேசவும் கயல் கண்கள் சட்டென கலங்கி முகம் சுருங்கிவிட்டது. தொங்கிவிட்ட முகத்துடன் அவள் திரும்பி அறைக்குள் செல்ல, தகப்பன் மனமும் மகள் பின்னே சென்று மண்டியிட்டது.

“சீக்கிரம் கிளம்புனா கோவிலுக்கு போய்ட்டு ஸ்கூல் போலாம்.” என்று அவன் சொல்லவும் வேகமாக ஓடிவந்து வந்து கட்டிக்கொண்டாள் அவன் இளவரசி.