*2*

தான் வேலை செய்யும் அதே பள்ளியில் கயல்விழியை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தான் சக்திவேலன். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. புது பள்ளி, புது சூழ்நிலை, புதிய சீருடை என்று மருண்ட விழிகளுடன் தந்தை கையை பற்றிக்கொண்டு தன் வகுப்பு நோக்கி நடந்தாள் கயல்விழி. மகளை போலவே சுற்றத்தை நோட்டமிட்டபடி நடந்தான் சக்திவேலனும்.

கயல்விழியின் வகுப்பு வரவும் மகள் கையை விட்டவன் அவள் தோளை லேசாக பிடித்து முன்னே நகர்த்தி, “இதுதான் பாப்பா க்ளாஸ். இங்கதான் பாப்பாவோட புது பிரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லாருக்கும் ஹாய் சொல்லிட்டு உக்காந்துக்கோங்க. மிஸ் வந்ததும் க்ளாஸ் எல்லாம் ஒழுங்கா கவனிக்கணும்.” என்று மகளை உள்ளே அனுப்பியவன் வெளியே நின்றபடியே ஐயமுறாமல் புது வகுப்பறையில் மகள் மாணவர்களோடு கலந்து அமர்கிறாளா என்று பார்த்தான். சற்று தயக்கம் இருந்தாலும் இவளைக் கண்டதும் புன்னகைத்த சிறுமியை கப்பென்று பிடித்துக்கொண்டு அவளுடன் இரண்டாவது நீண்ட இருக்கையில் அமர்ந்துகொண்டாள் கயல்விழி.

நொடியில் அச்சிறுமியை தோழியாக்கி சலசலக்க ஆரம்பித்த கயல் தந்தை நினைவு வந்தவளாய் நிமிர்ந்து பார்த்து விரிந்த இதழுடன் கையசைக்க, அப்போது தான் மூச்சே வந்தது சக்திவேலனுக்கு. புது இடத்தில் பொருந்த சிரமப்படுவாளோ என்று அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த தயக்கங்களை அப்போதே விடுத்து விரிந்த புன்னகையுடன் மகளுக்கு கையசைத்து தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றான். அங்கு பணி நியமன உத்தரவை சமர்ப்பித்து நிற்க, வாழ்த்து கூறி பள்ளி பற்றி பொதுவான தகவல்கள் பகிர்ந்து உதவியாளருடன் அவனை அனுப்பிவைத்தார் தலைமை ஆசிரியர். 

அன்றைய நாள் அறிமுகங்களுடனும் ஒரே ஒரு வகுப்புடன் அவனுக்கு நிறைவு பெற, பள்ளி மணி அடித்த சில நொடிகளில் கிளம்பியவன் மகள் வகுப்பு இருக்கும் புறம் செல்ல, புன்னகையுடன் அவனை நோக்கி வந்தாள் அவன் இளவரசி.

வேக எட்டுகள் வைத்து மகளை நெருங்கியவன் அவள் கை பிடித்து, “பாப்பா ஹாப்பியா?” என்று முகம் பார்க்க, தலையை பலமாய் ஆட்டியது சிட்டு.

“இந்த க்ளாஸ் எனக்கு புடிச்சிருக்கு அப்பா. எல்லாரும் வந்து பேசுனாங்க. அப்புறம் ஸ்னேகா என் க்ளோஸ் பிரெண்ட் ஆகிட்டா.” என்று கதை சொல்லிக்கொண்டு வந்தாள் கயல்விழி.

அவளுடன் பேசிக்கொண்டே வண்டி நிறுத்துமிடம் வந்தவன் மகளை தூக்கி பைக்கின் முன்னே அமர வைத்து தானும் அமர்ந்துகொள்ள, “அந்த ஸ்கூல் மாதிரியே இங்கேயும் க்ளாஸ் முடிஞ்சி பைக் கிட்ட வந்து வெய்ட் பண்றேன் அப்பா.” என்றாள் மகள் சமத்தாய்.

அவளின் சமத்து கண்டு மெச்சியவன், “ஒரு வாரம் போகட்டும்டா. அதுவரை அப்பாவே உன் க்ளாஸ் வந்து கூட்டிக்கிறேன். அங்க இருந்தமாதிரி தனியா எல்லாம் இங்க எங்கேயும் போகவோ நிக்கவோ கூடாது சரியா?” 

“சரிப்பா.” என்று நன்றாக தலையாட்டினாள் மகள். பள்ளி வாகனங்களும் மாணவர்களின் மிதிவண்டிகளும் வெளியேற முண்டியடித்துக் கொண்டிருக்க, கூட்டம் குறையட்டும் என்று ஆசிரியர்கள் வாகனம் நிறுத்துமிடத்திலேயே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“உங்க பொண்ணா சார்?” என்று ஓரிரு ஆசிரியர்கள் அவர்களை விசாரித்துவிட்டு கடக்க, 

“அப்பா… அப்பா அவங்கதான் என் க்ளாஸ் மிஸ்.” என்று ஒரு ஆசிரியரை காண்பித்து அன்று நடந்தவற்றை ஒப்புவித்தாள் மகள்.

மகளின் ஆசிரியர்கள் யார் யார் என்று கேட்டு தெரிந்துகொண்டவன் அவள் வகுப்பாசிரியரிடம் தன்னைத் தவிர யாருடனும் மகளை அனுப்ப வேண்டாம் என்று மகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக ஒருமுறை சொல்லி வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு கூட்டம் குறையவும் வெளியேறினான். 

வீடு அருகில்தான் என்றாலும் சமைக்க காய்கறிகள் வாங்க வேண்டி இருந்ததால் வண்டியை சந்தை புறம் திருப்பினான். 

“காய் வாங்க போறோமா அப்பா?” கடைகள் இருக்கும் பகுதியில் அவன் வண்டியை நிறுத்தவும் கேள்வியாய் பார்த்த மகளை தூக்கி இறக்கிவிட்டவன் அவள் கைப்பிடித்து ஒரு கடைக்குச் சென்று காய்கறிகளை பார்த்து பொறுக்கி எடுக்க,

“கடையெல்லாம் மூடாம இன்னும் வியாவாராம் பார்த்துட்டு இருக்கியா நீ?” என்று வாட்டசாட்டமாக இருந்த ஒருவன் வந்து கடையில் இருந்த மேசையை வேகமாய் தட்டி கத்த, சற்று மிரண்ட கயல் சட்டென நகர்ந்து சக்திவேலனின் சட்டையை பிடித்துக்கொண்டாள்.

ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த சக்திவேலன் எடுத்த காய்கறிகளை அப்படியே வைத்துவிட்டு மகளை கைகளில் தூக்கிக்கொண்டு வெளியேற,

“சார் சார் வாங்கிட்டு போ சார்…” என்று கடை உரிமையாளர் கத்துவதை காதில் வாங்கவே இல்லை அவன்.

“கஸ்டமர் இருக்கும் போது என்ன ண்ணாவ் இப்படி பண்ணுறீங்க. இதோ இப்போ வந்தாரே அவர் வாங்கிட்டு போவோவும் கடையை அடைக்கலான்னு இருந்தேன். வியாவாராம் போச்சே…” என்று புலம்பிக்கொண்டே எழுந்தார்.

“எங்க அண்ணா வூட்டுல எழவு வுழுந்துருக்கு. உனக்கு உன் வியாவாராம் பெருசா…” என்று கணீர் தொண்டையில் அவன் சலம்புவது சக்திவேலன் காதில் விழுந்தாலும் விழாதது போல் அங்கிருந்து வண்டியை கிளப்பிவிட்டான்.

“ப்பா என்னாச்சு?” என்று கயல் நிமிர்ந்து பார்க்க, 

“ஒன்னுமில்லடா. அது ஏதோ பிரச்சனை. நாம வீட்டுக்கு போகலாம்.” என்று அழைத்து வந்தவன் அவர்கள் தெரு நுழைவில் இருக்கும் கடையில் கொஞ்சமாய் அன்றைக்கும் மறுநாளுக்கும் தேவையான காய்கறிகள் மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்தான். 

வீட்டு முன்னே வண்டியை நிறுத்திவிட்டு அவன் மேலேறுவதை பார்த்த சதாசிவம், “இன்னைக்கு சந்தையில இருக்குற கடை எல்லாத்தையும் அடைக்க சொல்லி பிரச்சனை பண்ணதா கேள்விப்பட்டேன். கடையெல்லாம் திறந்திருக்கு போலையே?” என்று அவன் கையிலிருக்கும் காய்கறிப்பையை பார்த்துக்கேட்டார்.

“ஒருசில கடை திறந்திருந்துச்சு. வாங்கலாம்னு போனா அதையும் அடைச்சிட்டாங்க. இது நம்ம தெரு முனையில் இருக்குற கடையில வாங்குனேன். என்ன பிரச்சனை சார்?” என்ற சக்திவேலன் கயல் கைபிடித்து நின்றுவிட்டான்.

“கவுன்சிலர் அக்கா பையன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டானாம். அதுக்குதான் இத்தனை அக்கப்போரு. முதல்ல கட்சில இருக்குற பெரியாளுங்க இறந்தாதான் பிரச்சனை பண்ணுவாங்க. இப்போ அவங்க குடும்பத்துல இருக்குறவங்க செத்தாலும் நாம அல்லல்பட வேண்டியதிருக்கு.” என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன், 

“இவங்க சொந்த இழப்புக்கு மொத்த ஊரையும் வலுக்கட்டாயமா துக்கம் அனுசரிக்க வைக்கிறது எல்லாம் என்ன மாதிரியான மைண்ட்செட்டுனே  தெரில.” என்று அதிருப்தி வெளியிட்டு மேலேறினான் சக்திவேலன்.

“என்னாச்சுப்பா?” என்று கயல் மீண்டும் துவங்க,

“நம்ம கஷ்டப்பட்டா மத்தவங்களும் கஷ்டப்படணும்னு நினைக்குற இடியட்ஸ்டா அவங்க… அவங்க பிரச்சனை எல்லாம் நமக்கெதுக்கு. நாம வீடு செட் பண்ணலாம் இன்னைக்கு. உனக்கு ஹோம்ஒர்க் இருக்கா? நைட் உப்புமா பண்றேன் சாப்புடுறீயா?” என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தவன் மகளுக்கு கைகால் கழுவிவிட்டு உடைமாற்ற வைத்து அமர வைக்க, சுவாதி அவனுக்கு அழைத்துவிட்டாள்.

பொதுவாக பேசிவிட்டு அவன் அலைபேசியை கயலிடம் கொடுக்க, கயல் ஒருமூச்சு அவளிடம் பேசித் தீர்த்தாள். புன்னகையுடன் மகளை பார்த்தபடி இட்லிக்கு அரைக்க அரிசி உளுந்தை ஊறவைத்துவிட்டு வீட்டு வேலைகளில் இறங்கிவிட்டான் அவ்வீட்டுத் தலைவன். 

***

“க்காவ் இதெல்லாம் பண்ணனுமா? அவனை நாமளே படமாக்கிட்டு அந்த படத்துக்கு நாமளே மாலை போடுறது எல்லாம் கடுப்பின் உச்சம் க்காவ்…” என்று ரவி பெரிய மாலையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து புலம்பினான்.

“நாம போலைன்னா தப்பாகிடும் ரவி.” என்ற ராஜனை அலட்சியமாக பார்த்த ரவி,

“என்னா ஆயிடும் இப்போ? நாமதான் போட்டோம்னு ஆரும் கண்டுபுடிக்க முடியாது ண்ணா.”

“அவன் சாவுறதுக்கு முன்னாடி ராத்திரி முழுக்க ஒருசொட்டு தண்ணி கொடுக்காம கட்டி வச்சது, அவனை கன்னம் கன்னமா அறைஞ்சது எல்லாம் போஸ்ட் மார்ட்டம்ல தெரியவரும். அப்புறம் கவுன்சிலர் வலை வீசி தேட ஆரம்பிச்சிடுவாரு.”

“அவர் வலை வீசுனா நாம சிக்கிடுவோமோ? நழுவுற மீனு நம்மா க்கா… அதெல்லாம் சுளுவா வெளில வந்துடலாம்.” என்ற ரவியை பார்வையாலே அடக்கிய சக்தி,

“ராஜா சொல்றதுதான் கரெக்டு ரவி. நாம பொழைக்க சூதானமா இருந்தாமட்டும் போதாது. கொஞ்சம் பொதுவெளில நடிக்கவும் தந்திரமாவும் இருக்கத்தான் வேணும். நீ அங்க வரவேணாம். நான் ராஜாவோட நம்ம ஆளுங்களை கூட்டிட்டு ஒரு எட்டு போய் தலை காட்டிட்டு வந்துடுறேன்.” என்ற சக்தியின் பேச்சுக்கு அங்கு எதிர்பேச்சு இல்லை. 

ராஜா கண் காண்பிக்க, உடன் இருந்தோர் மாலையை எடுத்துக்கொண்டு இரண்டு ஆட்டோக்களில் புறப்பட்டனர். முதல் ஆட்டோவின் பின்னிலிருந்து சக்தி இறங்க, ஓட்டுனருடன் அமர்ந்திருந்த ராஜாவும் இறங்கிக்கொண்டான். இரண்டாம் ஆட்டோவில் வந்த அவர்களின் ஆட்கள் மாலையை ராஜாவிடம் கொடுக்க, குளிர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை வெறித்துப் பார்த்த சக்தி பெயருக்கு துக்கம் அனுசரித்து நகர, ராஜா மாலை போட்டான். இவர்களைக் கண்டதும் ஓடிவந்த கவுன்சிலர் அவர்களை சற்று தள்ளி அழைத்துச் சென்று,

“யாரோ வேணும்னு பண்ணி இருக்காங்க. என் மருமவன் கை, கால கட்டிவச்ச மாதிரி அடையாளம் இருக்கு. நீதான் விசாரிச்சு சொல்லணும் சக்தி. இவனை இப்படி ஆக்குனவங்களை சும்மா விடமாட்டேன்.” என்று ஆத்திரத்தில் நரம்பு புடைக்க பேச, ராஜாவும் சக்தியும் முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளாது,

“எங்க ஏரியா பொண்ணு மேல உங்க மருமவன் கைவச்ச விஷயம் என் காதுக்கு வந்ததும் உங்களுக்காக பொறுத்துகிட்டு உங்களை பாத்து பேசணும்னு நினைச்சிட்டு இருக்கும்போது இப்படி ஆகியிருக்கு. நம்ம அடுத்த கன்சைன்மெண்ட்டுக்கு தொல்லை குடுக்குறான் ஒருத்தன். இது அவன் பார்த்த வேலையா கூட இருக்கலாம்.” என்று திசை திருப்ப முயன்றாள் சக்தி.

அது நன்றாக வேலை செய்தது. ஏனெனில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கவென சமீபத்தில் புதிதாக ஒருவன் முளைத்திருக்கிறான். அவன் விவரங்களை நினைவிற்கு கொண்டுவரும் விதமாய் கவுன்சிலர் யோசித்து, “அந்த நார்த் இந்தியா பார்ட்டியா?”

“அவனைவிட்டா வேற யாருக்கு இங்க உங்க குடும்பத்து மேல கைவைக்க தில்லு இருக்கும்.” என்று இன்னும் ஏற்றிவிட்டான் ராஜா.

“இந்த நேரத்துல குடும்பத்துக்கு ஒத்தாசையா இருக்கனும் நீங்க. நாங்க இருக்கோம் பாத்துக்க மாட்டோமா?” என்று சக்தி பேச,

“உங்கிட்ட சொல்லிட்டேன்ல இனி நீ பாத்துப்பனு எனக்கு நம்பிக்கை இருக்கு சக்தி. நான் என் அக்காவை பாக்குறேன்.” என்று நகர்ந்தார் கவுன்சிலர்.

“திருடன் கையிலேயே சாவியா?” என்று மெல்ல ராஜா முணுமுணுத்துக்கொண்டே முன்னே செல்ல, பொங்கும் சிரிப்பை லாவகமாய் அடக்கிக்கொண்டு கிளம்பினாள் சக்தி.

ஆட்டோவில் ஏறியதும் திரும்பிப்பார்த்த ராஜா, “வீட்டுக்குத்தான சக்தி?” என்று கேட்க தலையசைப்பு வந்தது சக்தியிடமிருந்து.

வீடு வரை அமைதியாக வர, ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ராஜா பணம் கொடுக்க,

“உள்ள வை ண்ணா… அக்காகிட்ட காசு வாங்குவேனா நானு? சும்மா ஏதாவது பண்ணிக்கிட்டு…” என்று கிளம்பிப்பார்த்தான் ஆட்டோக்காரன்.

“பெட்ரோல் ஓசியிலையா தராங்க. கொடுத்தா மூடிட்டு வாங்கிட்டு போகணும்.” என்று சக்தி சத்தம் போடவும் பம்மிக்கொண்டே பணம் வாங்கிச் சென்றான் ஆட்டோக்காரன்.

பின்னோடே அவர்களது ஆட்களும் வந்துவிட அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு ராஜாவை அழுத்தமாய் பார்த்துச் சென்றாள் சக்தி. புரிந்துகொண்டவன் ரவியிடம் கண் காண்பிக்க, அவர்களிடம் ஏதோ வேலை சொல்லி அனுப்பிவைத்துவிட்டு வந்தான் ரவி.

“க்கா எப்போ ஆட்டோ எடுக்க?” என்று நேரத்தை பார்த்துக்கொண்டே ரவி கேட்க, 

“இன்னும் நாழி ஆகட்டும். அதுக்குள்ள வயித்துக்குள்ள எதையும் போட்டுக்கிட்டு வந்துடு.” என்றவள் காலை சமைத்து வைத்திருந்ததை எடுத்து உண்ண அமர்ந்தாள்.

“என்னாத்துக்கு நீ தினம் காலையில வடிச்சதையே ராவு வரைக்கும் வச்சி திங்குற? நீ ம்ம்ன்னா வகை வகையா ஆக்கிப்போட இந்த தெருவுல குமரிலேந்து கிழவி வரைக்கும் காத்து கிடக்குதுங்க. நீ என்னடான்னா தினம் இந்த பழைய மோர் சோறை கட்டிட்டு அழற.” என்று பொறுக்கமாட்டாமல் கேட்டான் ரவி. 

சக்தி ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை. அவள்பாட்டிற்கு பானையில் இருக்கும் சோறை தட்டில் கொட்டி கொஞ்சம் மோர் விட்டு சின்ன வெங்காயமும் ஊறுகாயும் வைத்து உண்ண ஆரம்பித்தாள்.

“ண்ணா நீ சொல்ல மாட்டியா? நீ சொன்னா கேக்கும்.” என்று ரவி தாங்காமல் ராஜாவைப் பார்த்தான்.

“சக்திக்கு எதுவும் நாம சொல்லணும்னு இல்லை. அதுக்கே எல்லாம் தெரியும்.” என்று முடித்துக்கொண்டவன் தன் வீட்டிற்கு சென்றுவிட, சக்தி முன்னே பொத்தென்று அமர்ந்த ரவி,

“சோத்த போடு. அப்படி என்னதான் நீ பொங்குற சோறுல இருக்குனு இன்னைக்கு நான் கண்டுபுடிக்குறேன்.” என்று புஜத்தில் சட்டையை தூக்கிவிட, சட்டென சோற்றுப் பானையை தன்னருகே இழுத்த சக்தி, “வளருர புள்ளை நல்லா திங்கணும். போய் வீட்டுல சாப்புடு.” என்று கண்களை உருட்டினாள்.

“ஆமா நான் வளருற புள்ளை இவங்க வளந்து வாழ்ந்து கெட்ட கெழவி. நாக்கு செத்த மாதிரி தினம் பழைய சோறு திங்குறது.” என்று பேசியவனை, 

“ரவி.” என்ற ஒரே அழைப்பில் அடக்கினாள் சக்தி. அவள் குரல் பேதத்தை உணர்ந்தவன் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து சென்றான். 

அவன் கிளம்பவும் அங்கு பரவிய தனிமையில் இறுகியிருந்த முகத்தசைகள் தளர, மடிந்து அமரப்போன தோள்களை இறுக நிறுத்தி மீண்டும் இறுக்கம் பூசிக்கொண்டாள் சக்தி.

ஒருமணி நேரம் சென்று இருள் நன்றாக படரத்துவங்கிய நேரம் ஆட்டோவுடன் வந்தான் ரவி. வீட்டிற்கு வெளியே வந்த சக்தி இடமும் வலமுமாய் தெருவை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டைப் பூட்டினாள். ஆள்நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது அவர்கள் தெரு. ராஜா முன்னே ரவி அருகில் அமர்ந்துகொள்ள, சக்தி பின்னே ஏறிக்கொண்டாள். அந்த தெருவை தாண்டும் வரையில் மெளனம் ஆட்சி புரிய, அதன்பின் ரவியே துவங்கினான்.

“இந்த தடவை எவ்ளோ சரக்கு வருது?” 

“பத்து சி.” என்றான் ராஜா.

“பத்தா?” என்று ரவி வாய் பிளக்க,

“நீயே காட்டிக்கொடுத்துடாதடா.” 

“போன முறை வந்த அஞ்சுக்கே நம்ம வூட்டுல இடமில்லை. இப்போ பத்து’னா எப்படி?”

“கவுன்சிலருக்கு சொந்தமான இடத்துல வைக்க ஏற்பாடு ஆகியிருக்கு.” என்றாள் சக்தி. 

“அந்தாள் இடத்துலையா? இதுவரை எல்லாம் பண்ணது நாம… இப்போ அவர் இடம் தரேன்னு மடத்தை புடிச்சிடப் போறாரு.” என்ற ரவியின் தலையை லேசாக தட்டிய ராஜா,

“நீயே இவ்ளோ யோசிக்கும் போது சக்தி யோசிக்காதா? கம்முனு வா…” என்று அதட்ட, “க்காவை ஆரும் ஏச்சிடக் கூடாதுனு சொன்னது ஒருகுத்தமா.” என்றவன் மீன்பிடி துறைமுகம் நோக்கி வேகமாக ஆட்டோவை செலுத்தினான். கொஞ்சம் தள்ளி நெரிசல் குறைந்த சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ திடுமென யாரோ வந்து ஆட்டோவில் மோதி கீழ விழ, சடன் பிரேக் போட்டான் ரவி.

சக்தி வேகமாக இறங்கப்பார்க்க, “நீ இரு சக்தி.” என்றுவிட்டு ராஜா இறங்கிச் சென்று பார்க்க ஒரு பெண் தலையில் லேசான ரத்தக்காயத்துடன் மயங்கிக் கிடந்தாள்.

“பொண்ணுக்கு அடிபட்டிருக்கு.” என்று சக்தியிடம் வந்து சொல்ல, விரைந்து ஆட்டோவின் முன் சென்றவள் அந்த பெண்ணின் கன்னத்தை தட்டினாள்.

“ஏய் பொண்ணே… இங்க பாரு… எழுந்துரு…” என்று அழைத்துப் பார்க்க, அசைவில்லை அப்பெண்ணிடம். 

“மயங்கிடுச்சு.” என்று சக்தி சொல்ல,

“நீ வுடுக்கா… நவுத்தி போட்டு போவோம். நமக்கு வேலை காத்துக்கிடக்கு.” என்று வந்தான் ரவி.

அவனை எரித்துவிடுவது போல் பார்த்த சக்தி, “பொட்ட புள்ளையை அப்படியே வுட்டு போவ சொல்ற. இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா நானு?” 

“ம்ச்… ஆம்புலன்சுக்கு கூப்புட்டு ஏத்திவுட்டு கிளம்புவோம். நம்ம இப்போ அங்க போகணும் நியாபகம் இருக்குல்ல?” என்று ரவி பார்க்க,

“அதை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல இந்த பொண்ணை கூட்டிட்டு ஆஸ்பித்திரி போனும். தூக்குங்க.” என்று அந்த பெண்ணின் தோள் பிடித்து எழுப்ப முயற்சிக்க, ராஜா அப்பெண்ணின் காலை பிடித்து தூக்க என ஆட்டோவில் ஏற்றினார்கள். 

“தேவையில்லாததை இழுத்து வுட்டுக்குற நீயி… அதுவே தானா வந்து ஆட்டோவுல விழுந்துச்சு. இதெல்லாம் சரியாப்படல க்காவ்…” என்று சொல்லிக்கொண்டே ரவி ஆட்டோவை எடுக்க, அப்பெண்ணிடம் அலைபேசி இருக்கிறதா என்று தேடினாள் சக்தி.

“போன் கூட இல்லை.” 

“பாத்துக்கலாம் சக்தி.” என்றான் ராஜா. 

“சீக்கிரம் போ ரவி…” என்ற சக்தியை முறைத்துக்கொண்டே ஆட்டோவை மருத்துவமனை நோக்கி செலுத்தினான் ரவி.