சாமான்களை ஏற்றிச் சென்ற லாரி முன்னே சென்றிருக்க, மூன்றரை மணி நேர பயணத்தின் இடையில் காரை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். முன்னிரவில் சென்னை வாகன நெரிசலில் போராடி பட்டினப்பாக்கம் வந்துவிட்டிருந்தனர். பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும் தெருவொன்றில் அவன் வீடு பார்த்திருந்தான். அந்த தெருவுக்கு பின்னே அவன் வேலை செய்யும் பள்ளி இருப்பதால் கடற்கரை ஒட்டி இருந்தாலும் சில அசவுகரியங்களை கருத்தில் கொள்ளாமல் மாடி வீடு பார்த்திருந்தான்.
வீட்டின் உரிமையாளர் இவன் வருகைக்காக காத்திருந்தார்.
“பயணம் எல்லாம் ஓகேதான சார்?” என்று பெயருக்கு விசாரித்து வீட்டு சாவியை ஒப்படைத்தவர் கிளம்பிவிட, கயலை தூக்கிக்கொண்டு மாடியேறினான்.
“அப்பா நானு நானு…” என்று சாவியை வாங்கி வீட்டை திறந்தாள் அவன் இளவரசி.
வீட்டின் ஒவ்வொரு மூளையையும் ஆர்வமுடன் மகள் ஆராய்வதை புன்னகையுடன் பார்த்திருந்தான்.
“ப்பா… இந்த ரூம்ல பால்கனி இருக்கு.” என்று மகள் குதூகலமாய் கத்த, அவளது மகிழ்வு இவனையும் தொற்றி இருக்க வேண்டும். சற்று உரக்க சிரித்தபடி அறைக்கு சென்று பால்கனி கதவை திறந்துவிட்டான்.
ஆர்வமுடன் பால்கனி கம்பி நோக்கி கயல் நடக்க,
“எட்டி பாக்கக்கூடாது பாப்பா. சாதாரணமா இங்க நின்னு பாத்தாலே கடல் தெரியும்.” என்று ஓரிடத்தில் மகளை நிற்க வைத்தான். அங்கிருந்து பார்த்தாலே ஆர்ப்பரிக்கும் ஆழியும் அதில் பயணிக்கும் சில படகுகளும் புள்ளியாய் தெரிய, ஆர்வமுடன் பார்த்து நின்றாள் கயல். சில நொடிகள் விட்டவன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு, “அப்புறம் பாக்கலாம். இப்போ திங்ஸ் செட் பண்ணலாமா?” என்று கேட்டுக்கொண்டே லாரியிருந்த பெட்டிகளை இறக்க சொல்லிவிட்டான்.
வேலையாட்கள் அனைத்தையும் தூக்கி வந்து வைக்க, கீழ் வீட்டில் இருந்தவர் நோட்டமிட்டபடி மேலே வந்தார்.
“நான் சதாசிவம், ரிட்டையர்டு பேங்க் எம்பிளாயீ. நீங்க?” தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவனைப் பார்க்க,
அருகிலிருக்கும் ஒரு பெரிய பள்ளி பெயரை சொன்னவன், “அங்க சயின்ஸ் டீச்சரா ஜாயின் பண்ண வந்திருக்கேன். அந்த ஸ்கூலோட மெயின் பிரான்ச்ல ஒர்க் பண்ணேன் இப்போ கொஞ்சநாள் இங்க மாத்தி போட்டிருக்காங்க.” என்றவன் மென்னகையுடன், “சக்திவேலன்.” என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.
அவரோ அதை கருத்தில் ஏற்றாமல் பட்டும்படாமல் கண்களை வீட்டிற்குள் உலாவவிட்டு, “நீங்க ரெண்டு பேர்தானா? வீட்டுக்கார அம்மா வரல?” என்று கேட்க, அவன் முகத்தில் இருந்த இலகுத்தன்மை மறைந்து இறுக்கமாக மாறியது. வித்தியாசம் உணர்ந்தவர் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டார்.
***
“க்காவ் என்ன அமைதியா இருக்க? என்னா தில்லு இருந்தா நம்ம ஏரியா பொண்ணு மேலேயே கையை வச்சிருப்பான். அவனை அப்படியே வுட்டா எல்லாருக்கும் பயம் வுட்டு போயிடும் க்காவ்…” என்று ரவி துள்ள, அவனை அமைதியாக பார்த்தபடி ஒற்றை காலை மடக்கி மற்றொன்றை நீட்டி விரலில் சுண்ணாம்பை வழித்து வெத்தலையில் இட்டவள் அதனுடன் பாக்கையும் வைத்து மடித்து வாய்க்குள் அதக்கினாள்.
வெற்றிலை பாக்கு சிவப்பிற்கு ஏற்ப நெற்றியில் சிவப்பு நிறப் பொட்டும் இரு கைகளில் கண்ணாடி வளையல்களை அடுக்கி இருந்தவள் சற்று சிறியளவு பொட்டு வைத்தால் அம்சமாய் இருப்பாளோ? கவர்ந்திழுக்கும் நிறம் கூட முகத்தில் இருக்கும் கடுமை விரட்டியடித்துவிடும். விரிந்துகொண்ட கூந்தலை அள்ளி தூக்கி முடிந்து கொண்டையிட்டவள் மிகப் பொறுமையாக எந்தவித சலனமுமின்றி இதழ் பிரியாது வெத்தலையை மெல்ல,
“நீ இப்படி இருக்க மாட்டியே க்காவ்… என்னா மேட்டரு?” என்று சத்தமிட்டான் மற்றொருவன்.
“நீ ம்ம்னு சொல்லுக்கா அவனை தூக்கியாந்து பிளேடால ஒரு கோடு போட்டுறேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தினான் கூட்டத்திலிருந்த மற்றொருவன்.
நன்றாக மென்றவள் வெற்றிலை சிவப்பை உமிழ்ந்து அருகிலிருந்த மண் குடுவையில் துப்பிவிட்டு அங்கு ஓரமாய் நின்ற முதியவரை பார்க்க, அவளின் பார்வை உணர்ந்தவர் பொங்கும் கோபத்தோடு, “அருவாமனை புடிச்ச கை என்ன பண்ணிடுங்குற தெனாவட்டுல என் பொண்ணு மேல கைவச்சவனை என்ன பண்ணனுமா நீயே பாத்து பண்ணிவிடு சக்திமா…” என்க, பட்டென எழுந்தவள் உடுத்தியிருந்த பருத்தி சேலையின் முந்தியை உதறி இடுப்பில் சொருகி தன் இடப்புறம் பார்க்க, அதற்காகவே காத்திருந்தவன் போல் அடுப்பறை சென்று அரிவாள்மனை எடுத்துவந்து நீட்டினான் ராஜா.
இவள் மறுப்பாய் தலையசைக்க, அவன் முதியவரைப் பார்த்து, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க.” என்ற நொடியில் விறுவிறுவென ஓடியவர் தன் வீட்டிற்கு சென்று தன் பதினான்கு வயது மகளை அழைத்து வந்தார்.
அழுது வீங்கிய முகத்தோடு துப்பட்டாவை திருகியபடி வந்தவள் நடுக்கத்துடன் சக்தி முன் நிற்க, “இப்படி பயந்து நிக்கவா உன் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்குது? ஏதோ அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு வீட்டு வேலை செய்ய ஒத்தாசைக்கு போனோமா வந்தோமான்னு இருக்கனும்.” என்றவளை திடுக்கிட்டு அச்சிறுமி நிமிர்ந்து பார்க்க,
“அதைவுட்டு உன்கிட்ட வாலாட்டி வம்பு பண்ணவன் பிடரியை வெட்டாம வாயை மூடிக்கிட்டு வந்தா ஆச்சா… புடி முதல்ல…” என்று அந்த அரிவாள்மனையை வாங்கி நீட்ட, புரியாத பார்வையுடன் அதை வாங்கினாள் அச்சிறுமி.
உடனே சக்தி விடுவிடுவென தெருவில் இறங்கி நடக்க, ஒன்றும் புரியாமல் இவர்கள் அனைவரும் அவள் பின் ஓடினர். தேங்கி நின்ற அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் அந்த பாழடைந்த வீட்டிற்கு சென்றான் ராஜா. ஆதவன் மறைந்து இருள் சாய்ந்த அந்த வேளையில் ராஜாவுடன் செல்ல எல்லாம் அச்சிறுமிக்கு பயமில்லை. சக்தி எப்படி அக்காவோ அப்படி ராஜா அங்கிருப்பவர்களுக்கு அண்ணன்.
சிதலமடைந்த அந்த வீட்டிற்குள் இருளை விரட்டும் வண்ணம் ஒரு குண்டு பல்ப் மட்டும் எரிய, நடுவே கை கால்கள் நாற்காலியோடு கட்டப்பட்டு வாயில் துணி கொண்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தான் ஒருவன்.
“உன்னைய பத்தி தெரிஞ்சும் நான் குதிச்சிருக்க கூடாது.” என்று அசட்டு சிரிப்பு உதிர்த்த ரவிக்கு விஷயம் புரிந்து போனது. அவனே சென்று கட்டி வைத்திருப்பவன் முகத்தில் இப்படியும் அப்படியுமாய் இரு கன்னங்களிலும் அரை விட்டு மயக்கத்தில் இருந்தவனை எழுப்பியிருந்தான்.
சக்தி அவளாகவே சென்று அவன் வாயடைந்திருந்த துணியை எடுத்துவிட, மூச்சு முட்டி தெளிந்ததில் ஒருபாடு இருமியவன் சீற்றத்துடன், “நான் யாருனு தெரியாம என் மேல கை வச்சிருக்கீங்க.”
“உன் மாமன் ஏரியா கவுன்சிலர் அதான சொல்லப்போற…” என்று இளக்காரமாக கேட்ட சக்தி ராஜாவுக்கு கண்காட்ட, அவன் அந்த சிறுமியை முன்னே செல்லும்படி உந்தி சக்தியிடம் அழைத்து வந்தான்.
“இவனை என்ன பண்ணனுமோ பண்ணு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்.” என்று அழுத்தி சொல்ல, சக்தியை ஏறிட்டாள் சிறுமி.
“என் மேல ஒரு கீறல் விழுந்தாலும் நீங்க எல்லாம் இருக்குற இடம் தெரியாம போயிடுவீங்க.” கவுன்சிலரின் மருமகன் கத்த, சக்தி காதை தேய்த்தாள் என்றால் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.
“நீதான் வந்திருக்கிற இடம் புரியாம கத்திட்டு இருக்க மாமோய்…” என்ற ரவி அந்த சிறுமியிடம் திரும்பி, “அவனை பேச வுட்டு வேடிக்கை பாத்துட்டு நிக்குற. சட்டுபுட்டுனு சோலியை முடிச்சிவிடுமா… நாங்க டிஸ்போஸ் பண்ணிட்டு அடுத்த வேலை பாக்க போவணும்ல.”
“ஹே… வேணாம். இனி இந்த மாதிரி பண்ணமாட்டேன். என்னை விட்டிருங்க.” கவுன்சிலர் மருமகன் கெஞ்சத்துவங்க,
“இனி பண்ண மாட்ட சரி ஆனா முன்னாடி பண்ணியிருக்கியே ராசா. அதுக்கு தண்டனை அனுபவிக்கனோம்ல.” நக்கலாய் கேட்ட சக்தி தன் அருகில் நடுங்கும் கரத்தில் அரிவாள்மனையை இறுக்கமாக பற்றியிருப்பவளை கண்டு இடவலமாய் தலையசைத்தவள் அச்சிறுமி பின்னே சென்று நின்று நடுங்கும் கரம் மீது தன் கரத்தை அழுத்தமாக வைத்தவள், “பயந்துட்டே இருந்தா இந்த உலகம் உன்னை வாழ விடாது. துணிஞ்சு இறங்கணும்.” என்று வேகமாக அரிவாள்மனையை உயர்த்த, வேண்டாம் என்ற அலறல் கயவனிடமிருந்தும் அச்சிறுமியிடமிருந்தும் ஒருசேர வந்தது.
அந்தரத்தில் நின்ற கையிலிருந்து அரிவாள்மனை நழுவி நங்கென்ற சத்தத்துடன் கீழே விழ, மடங்கி அமர்ந்த சிறுமி முகத்தை கைகளில் மறைத்துக்கொண்டாள். உடல் குலுங்கியது. சுவாதீனமாய் வந்தது குரல்.
“புரியாம பேசாத புள்ளை. இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது.” என்று கையை மடித்துக்கொண்டு அடிப்பது போல் முன்னேறினான் ரவி.
“விடு ரவி. படிச்ச புள்ளை அதுக்கு தெரிஞ்ச வழியை சொல்லுது.” என்ற சக்தி, “நீங்க போய் இவளை வீட்ல விட்டுருங்க.” என்று ராஜாவுடன் அச்சிறுமியை அனுப்பிவைத்த சக்தி துணியைக் கொண்டு அந்த கயவன் வாயை அடைத்துவிட்டு ரவியிடம் கண்காட்டி வெளியேறினாள்.
“என்ன க்காவ்?” என்று கேட்டபடி வந்த ரவியிடம், “எப்போதும் முடிக்குற மாதிரி முடிச்சி விட்டுரு.” என்றுவிட்டு செல்ல, இருளில் தனியே நடந்து செல்லும் அவளை பார்த்தபடி அடுத்து செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டான் ரவி.