அழகான விடியல் என்பது இது தான் போலும். தனது அறையில் தன்னருகில் கணவனும் மகனும் வெகு நாட்கள் சென்று. கையால் மகனது கேசத்தை வருடி கொண்டே இருந்தாள் அனு.
நடு நாசியில் மகள் பசிக்கு அழுக அவளுக்குப் பசியாற்ற எழுந்தவள் இவர்களை கண்டு அதிர்ந்து போனாள். கண்டது கனவா என்று தனதருகில் உறங்கும் கணவனையும் மகனையும் வெறித்துக் கொண்டு இருந்தாள். சில நொடிகளில் மகளது அழுகை சற்று கூட.
வேகமாக அவளுக்குப் பசியாற்றி விட்டு அவளை உறங்க செய்து மகனிடம் வந்தவள், அவனுடனே அமர்ந்து விட்டாள். எப்படி இவர்களது வரவை உணராமல் உறங்கினேன்? என்று தன்னையே கடிந்து கொண்டு கண்ணால் தனது உயிர்களை உண்டு கொண்டிருந்தாள்.
நேரம் சென்றதே தெரியவில்லை ஒரு வருட ஏக்கத்தை பார்த்தே கரைப்பது போல் இருந்தது அனுவின் பார்வை. நன்கு விடிந்து விட மீண்டும் வினு பிரியா சினுங்க அவளது அழுகையில் விழித்து விட்டான் ராகேஷ்.
இன்னும் தூக்கம் கண்ணைச் சுழட்ட முயன்று விரட்டிய வாரே தனது மனைவியைப் பார்த்து கொண்டிருந்தான். அனுவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் கண்கள் கலங்கி நின்றது பேரிளம் பெண்ணுக்கு.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்களே ஒழிய பேச முயற்சி செய்யவில்லை.அனு மகளுக்கு பசியாற்றி விட்டு எழுந்து கொள்ள அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகேஷ்.
குழந்தைக்காகக் கை நீட்ட மகளைக் கணவனிடம் கொடுத்து விட்டு அழுகை முட்டி கொண்டு வர. அதற்கு மேல் நிற்காமல் வெளியில் சென்று விட்டாள்.
அறையிலிருந்து அழுது கொண்டே வரும் மகளைப் பார்த்த இராமநாதன் “எதுக்கு அழுகை? அதுவும் விடியறப்போ ஹ்ம்ம்!”
“ஒன்னுமில்லப்பா தம்பன் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல அதான் அவனைப் பார்த்தவுடனே அழுக வந்துடுச்சு”
“அது மட்டுமா என்ன?” என்று சிரிக்கச் சிரிக்கும் தந்தையைக் கலவரமாகப் பார்த்து வைத்தாள் அனு. அவளது பார்வையை உணர்ந்தவர் போல
“என்ன ஏன்மா வில்லன் மாதிரி பார்க்குற. சில வலிகள் நல்லது அனு”அவர் சொல்ல வருவது புரிந்தாலும். இனி பிரிவில் வாட முடியவே முடியாது என்ற நிலையில் இருந்தவள்.
“சரிதான்ப்பா, ஆனா இனியும் வலி வேண்டாம். என்னால பிள்ளையை விட்டுட்டு இருக்க முடியாதுப்பா பாவம் அவன்”
“ஹ்ம்ம்!… சரி” எந்த வித எதிர்வாதம் செய்யாமல் சரியென்றவரை சிறு அதிர்வு கொண்டு பார்க்க அதற்கும் சிரித்தார்.
“அப்பா!”
“அனு இப்போ ரோஷன் எட்டாவது தானே படிக்கிறான்?”
“ஆமாப்பா”
“ஒரு மூணு மாசம் மெடிக்கல் லீவு எழுதி கொடுத்துட்டு அவனை எங்கிட்ட விட்டிட்டு போங்க” தந்தையின் பேச்சில் கவலை பிறக்க.
“அப்பா அவர்?”
“எங்கிட்ட பேசட்டும் நானும் பேசுறேன். உன்னவர் மாட்டேன்னு வம்பு பண்ணுனா நானும் வம்பு பண்ணுவேன் உன்னை அனுப்ப மாட்டேன். அப்புறம் நீ அப்பாவ கோச்சுக்கக் கூடாது.
இல்ல நீ யாரு என் குடும்ப விஷியத்தைக் கேட்க. என் பையன் என் கணவன் இப்படி தான் இருப்பான்னு சொன்னா நான் விலகி போயிடுறேன் முடிவு உன் கையில அனு” என்றவரை அனு அதிர்ந்து
“அப்பா! என்னப்பா? அப்படி நான் யோசிச்சா இந்த ஒரு வருஷம் அவங்களைப் பார்க்காம பேசாம இருப்பேனா” சிறு ஆதங்கம் அவளிடம்.
“இந்த நம்பிக்கை இருந்தா சரி சாப்பிட ஏற்பாடு பண்ணுமா நான் குளிச்சிட்டுக் கோவில் போயிட்டு வரேன்” என்றவர் அவரது வழமையைப் பார்க்க செல்ல ஒருவித தவிப்போடு காலை வேலையைச் செய்யத் தொடங்கினாள் அனு. இடையே தாயிக்கு தகவல் கொடுக்க எண்ணி வேலை செய்து கொண்டே போன் போட்டாள்.
“என்ன அனு சொல்லுற?”
“ஆமா மா ரோஷனும் அவரும் வந்து இருக்காங்க”
“இந்த மனுஷன் என்ன செய்யக் காத்திருக்கார்னு தெரியலையே? அவர் சொல்லுற மாதிரி ராகேஷ் பிள்ளையை விட மாட்டார்டி”
“அப்போ என்னையும் அப்பா விட மாட்டார்”
“அனு என்ன பேச்சு இது அவர் தான் புரியாம பண்ணுறாருனா நீயுமா?”
“மா அப்பா சொல்லுறது சரிதான் அன்னைக்கு ரோஷனுக்கு எதாவது ஆகிருந்தா என்ன பண்ணிருப்போம்?” என்றதும் எதிர் முனை மௌனம்
“சொல்லுங்கம்மா?”
“ஒன்னுமே பண்ண முடியாம போயிருக்கும் வெளில தலை காட்டி இருக்க முடியாது”
“தெரியுதுல எனக்கு என் பிள்ளை படிச்சுப் பட்டம் வாங்கித் தரதை விட ஒழுக்கமா இருக்கனுமா என் புள்ள எனக்கு வேணும்”
“ப்ச்”
“என்னமா”
“என்ன இருந்தாலும் அவர் பண்ணது சரின்னு சொல்ல முடியாது அனு. அதை விட அவர் பேசிய பேச்சு அதுவும் என்னை” என்றவர் கண்ணில் நீர் வடிய சிறு தேம்பல் ஷர்மிளாவிடம்.
“போனு சொல்லல ஆனா அது மாதிரி தான் பேச்சு இருந்துச்சு. என் நிலைமை இப்படியா ஆகனும்? எங்க அம்மா அப்பா வேணுன்னு தோணுது இப்போ” வயது போனாலும் பெற்றவர்களுக்கு என்றும் குழந்தை தானே.
“மா நீங்க முதல கிளம்பி வாங்க நான் அப்பாகிட்ட சொல்லி கார் அனுப்புறேன்”
“வேணாம் அண்ணன் கார்ல கொண்டு வந்து விடுவாங்க நான் வரேன், ஆனா ஒன்னு எனக்கு வாழவே பிடிக்கல அனு.
அங்க வந்து உங்கப்பா என்ன சொல்வார்னு தெரியல அப்படி எதாவது ஆகாத மாதிரி பேசி வச்சாரு நான் தனியா எங்கயாவது போயிடுவேன்”
“மா! மா! என்ன பேசுற நானே நொந்து போயிருக்கேன். ஏற்கனவே எல்லாம் என்னால தானு கலவையா இருக்கு இதுல நீங்க வேற இப்படி சொன்னா” என்று அனுவும் அழுக
“சாரி சாரி அனுமா நான் கிளம்பி வரேன் பார்த்துக்கோ அழுகாத. ராகேஷ் அப்பா பேசும் போது அன்னைக்கு மாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கோ எனக்கு அது தான் பயமே”
“அதை எண்ணி தான் எனக்கும் பதட்டமா இருக்கு”
“சமாளி உங்க அப்பாகிட்ட கொஞ்சம் தெளிவா பேசு உன் பேச்சை அப்பா கேட்பார்”
“முடிஞ்ச வரை முயற்சி பண்ணுறேன்மா சரி நான் வைக்கிறேன் நீங்க உடனே கிளம்பி வர வழிய பாருங்க” என்றவள் போனை அனைத்து விட்டு வேலையைப் பார்க்க தொடங்கிய நேரம்.
“மா!” என்று வந்து நின்றான் ரோஷன் தயங்கி தயங்கி தாயின் அருகில் வர கூடப் பயந்து நின்றான் ரோஷன். அவனது தயக்கம் கண்டு அழுதே விட்டாள் அனு.
தாய் அழுகவும் வேகமாக நெருங்கியவன் அவளை அணைக்கத் தடுமாறி நிற்க. தனது மகனை நெஞ்சோடு அனைத்து கதற. அவனோ ஒரு வருட பிரிவில் கிட்டாத தனது தாயின் வாசனையை நுகர்ந்து மார்பின் மத்தியில் புதைந்து போனான். சொர்க்கம் எதுவென்றால் தாயின் சேலையின் சுகந்தமே.
“மா! நான் நல்ல பையன் தான்மா” தகவல் போல் சொல்ல.
“தம்பன்!”
“மா! இனிமே தப்பு பண்ண மட்டேன்மா நான்…” என்று மேல பேசி கொண்டே போக.
“தம்பன் காம் டவுன் உன்னை யாரு கெட்ட பையன்னு சொன்னா? நீ நல்ல பையன் தான். என் தங்கம், என் அப்புன், என் தம்பன் நீ” என்று முகம் முழுக்க முத்தம் வைத்த தாயை இறுக்கி காட்டி கொண்டான் அவனது உடல் ஒரு மாதிரி நடுக்கம் கொண்டது.
அந்த நடுக்கமே தாயை அவன் எத்தனை தூரம் தேடிருப்பான் என்பதைச் சொல்லாமல் சொன்னது. தாயும் மகனும் தங்களை மறந்து தனி உலகில் நிற்க அவர்களைக் கலைத்தது இராமநாதனின் குரல்.
தாத்தனை பார்த்ததும் ரோஷன் அவரை முறைத்தவாறே விலகி நிற்க. அவனைக் கண்டு கொள்ளாமல் “அனு சாப்பாடு எடுத்து வை நான் கோவில் போகனும்”
“சரிப்பா என்றவள் ரோஷன் பிரஷ் பண்ணிட்டு வா அம்மா பால் தரேன்”
“ஹ்ம்ம்! மா பாப்பா எப்போ முழிப்பா?”
“திரும்பத் தூங்கிட்டாளா?”
“ஆமா அப்பா பக்கத்துல தான் படுத்திருக்கா”
“இப்போ முழிச்சுடுவா பாப்பா நீ அப்பாவை எழுப்பிவிடு ரோஷன்”
“சரிமா” என்றவன் உற்சாகமாகச் சென்றான்.
அதன் பின் நேரம் வேகமாகச் செல்ல ராகேஷ், ரோஷன் குளித்து முடித்துக் காலை உணவை முடித்து விட்டு வினுவுடன் விளையாண்டு கொண்டு இருந்தனர்.
அதுவரையில் ராகேஷ் அனுவிடம் பேச வில்லை அவளும் முயற்சிக்க வில்லை இருவரும் ஒரு வித பயத்திலும் பதற்றததிலும் இருந்தனர்.
விளையாடும் தந்தை மகனை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் இராமநாதன். அவர் வரவை உணர்ந்து இருவரும் விளையாட்டை நிறுத்தி எழுந்து நிற்க.
அவர்களைப் பார்த்தவாறே “சாப்பிடீங்களா ராகேஷ்?”
“ஹ்ம்ம் ஆச்சு மாமா”தனது ஜோல்னா பையைக் கழட்டி சோபாவில் வைத்து விட்டு அமர. அவர் எதிரில் வந்து அமர்ந்து கொண்டான் ராகேஷ். தந்தை பக்க வாட்டில் நாற்காலியின் கை பிடியில் அமர்ந்து கொண்டான் ரோஷன்.
“அவன் இப்போ ஓகே தான் அவனுக்கு ரொம்ப இறுக்கத்தைக் கொடுத்தா அதுவே..” மேலும் பேச போன ராகேஷை தடுத்தார் இராமநாதன்.
“நிறுத்துங்க என்ன இறுக்கம் இப்போ. நான் அவனை எங்கூட வச்சுக்கக் கேட்கல மூணு மாசம் எங்கூட இருக்கட்டும். இவன் இங்க இருந்ததே இல்லையா?”
“மாமா?”
“ரொம்பப் பேசிட்டோம் ராகேஷ் இனி பேசுனா அது சரிவராது. ஒரு அளவுக்கு மேல என்னால உங்ககிட்ட பேச முடியாது. எனக்கு என் பொண்ணு நல்ல இருக்கனும்.
அவ பிள்ளைங்க நல்ல இருக்கனும் பணம் இல்லாட்டியும் பரவாயில்ல நல்ல பண்பு இருக்கனும்” என்றதும் ராகேஷ் என்ன பேசுவது என்று தெரியாமல் ரோஷனை பார்க்க அவனோ அழுகும் நிலையில் இருந்தான்.
“நீங்க அவனை விட்டுட்டு போங்க இதுவும் வீடு தான் இருக்கட்டும் அனுவையும் பாப்பாவும் உங்க கூடக் கூட்டிட்டுப் போகலாம்”
“சரி மாமா நான் இரண்டு நாள் இருந்துட்டு போறேன்” என்றவன் வெடுக்கென எழுந்து ரோஷனை அழைத்துக் கொண்டு வெளியில் செல்ல. அனு யோசனையுடன் அறைக்குள் சென்று விட்டாள்.
வெளியில் வந்த ராகேஷ் தனது காரில் அமர்ந்தவுடன் “ப்பா எனக்குப் பயமா இருக்குப்பா அன்னைக்கு மாதிரி என்னை அடிச்சுட்டாருனா ” என்றவன் மகனை இறுக்க அனைத்துக் கொண்டு.
“அப்படியெல்லாம் செய்ய மாட்டார் ஜஸ்ட் நீ எப்படி இருக்கன்னு பார்க்க தான் செய்வார். முன்னாடி உன்னை இங்கையே இருக்கச் சொல்லி சொன்னார் இப்போ த்ரீ மன்த்ஸ் தானே” ரோஷன் மௌனமாக இருக்க.
“கண்ணா பாப்பாவும் அம்மாவும் பாவம் தானே எத்தனை நாள் விட்டுட்டு இருப்பாங்க?”
“ஆமா அம்மா அழுதாங்க மார்னிங்”
“பார்த்தியா ரொம்ப சோர்வா இருக்கா அம்மா. சம்திங் லுக் ஆல்சோ அவளையும் பாப்பாவையும் பார்க்கணும் உங்க தாத்தா கொஞ்சம் கண்டிப்பு தான் ரோஷன். ஆனா உங்கூட எவுளோ ஜாலியா இருப்பார். பட் ஹீ ஸ் அ நைஸ் பர்சன் அண்ட் குட் அப்பா அவர்”
“பட் பேட் தாத்தா”
“ஹா ஹா ஹா ஏண்டா?”
“என்கிட்ட பேசவே இல்லப்பா முறைச்சுகிட்டே போறார். காலையில அம்மா கிட்ட பேசிட்டு வெளில வந்தேன் என்னைப் பார்த்து முறைக்கிறார். அவர் கூட எப்புடி நான் இருக்க? அதுவும் த்ரீ மன்த்ஸ்”
“ப்ளஸ் கண்ணா எனக்காக அம்மாக்காக” என்றதும் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு ரோஷன் மௌனம் சாதிக்க.
“சரி ரோஷன் நான் திரும்பப் பேசுறேன் அவர்கிட்ட, ஆனா அம்மாவை விட மாட்டார் கார்னர் பண்ணுவார்” என்றதும் பயந்த ரோஷன்.
“நோ! நோ! நான் இருக்கேன், பட் த்ரீ மன்த்ஸ் முடிஞ்ச உடனே என்னை வந்து கூட்டிட்டு போயிடனும் ப்ரோமிஸ் பண்ணுங்க”
“ப்ரோமிஸ் த்ரீ மன்த்ஸ்க்கு ஒரு நாள் கூட நீ எக்ஸ்ட்ரா இருக்க வேண்டாம் என்ன?”
“ஹ்ம் சரிப்பா பட் ஸ்பென்ட் ஒன் வீக்”
“ஓகே நான் ஒரு வாரம் இருக்கேன்” என்றவன் மகனை வித விதமாகச் சமாதானம் செய்து கொண்டு வெளியில் கூட்டி சென்று சரி கட்டி வீட்டுக்கு அழைத்து வந்தான்.
ஒரு வாரம் தாய் தந்தையுடன் மகிழ்ந்திருந்தவன் அவர்கள் கிளப்பும் நாள் வர கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தான்.
கார் கண்ணில் மறையும் வரை அழுது கொண்டே பார்த்திருந்த ரோஷனை கையைக் கட்டி பார்த்துக் கொண்டு இருந்தார் இராமநாதன்.
இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு பயணத்தைத் தொடங்கியதால் வினு தூங்கி விடப் புயலாக வண்டியை ஓட்டி கொண்டு இருந்தவனை அனு தயங்கி பார்த்து வைத்தாள்.
இன்னும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசி கொள்ளவில்லை அவசிய பேச்சுக்கள் மட்டுமே அதுவும் உணவை கொண்டு.
நல்ல கருமை பொங்கிய இருளில் ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய ராகேஷை கேள்வியாக அனு பார்க்க. அத்தனை கோபமாக அவளை இழுத்து அனைத்தவன் அதை விடக் கோபமாக அவளது இதழை கவ்விட இறுக்கமாக அனைத்து கொண்டாள் அனு. வெகு நேரம் சென்று விட்டவன் அனு பேச வர.
“பேசாதடி”
“ராகேஷ் ப்ளஸ்” என்றவள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டு அவனது கழுத்தில் புதைந்துப் போகக் கோபத்தை அடக்க வழியில்லாமல் இறுக்கி கொண்டான் ராகேஷ்.
அங்கே படுக்கத் தயாரான இராமநாதன் கண் மூடி கடவுளை வேண்டி கொண்டு படுத்துக் கண் மூட. தூக்கம் வராமல் அவரது அருகில் படுத்து உருண்டு கொண்டிருந்தான் ரோஷன்.
வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூடப் பேச மறுக்கும் தாத்தன் மீது கோபமான கோபம். அதை விடத் தனியாக இருப்பது பெரும் கொடுமையாக இருந்தது.
அவர்களது வீட்டில் கணினி, அவனுக்கெனத் தனிப் போன், நவீன விளையாட்டுக் கருவி என ஏராளமான பொழுது போக்கு உள்ளது.
ஆனால் இங்கு ஒரு மணி நேரத்திற்கே முடியவில்லை இதில் மூன்று மாதமென்றால் என்று ரோஷன் பயந்த வேலை அவனை இராமநாதன் தன்னுடன் இழுத்து அனைத்துக் கொள்ள.
தாத்தனது தீடீர் செயலில் ஏனோ அழுகையும் கோபமும் சரி விகிதம் பொத்துக் கொண்டு வர “விடுயா ஜோல்னா பை என்ன விடு நீ ஒன்னும் என்ன கொஞ்ச வேணாம்”