பனிமலர் சூரியா படிக்கும் பள்ளியிலேயே மலர் ஆசிரியை வேலைக்காக நேர்காணல் மூலம் தேர்வாகி இருந்தாள். பள்ளி திறந்தபின் போவதாக இருந்தாள். அதற்குள் தன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு அவளிடத்தில்.
செண்பகம் ஆச்சியை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சூரியா வந்து உதவி செய்ய இருவருமாய் அந்த வீட்டை அழகு படுத்தி விட்டனர்.
தனஞ்செயனை வண்டியில் ஏற்றி கொண்டு சிவா, மலர் இருக்கும் தெரு வழியாக சென்று கொண்டிருக்க, மலரும் சூர்யாவும் வெளியே வந்தனர்.
தனஞ்செயன் சூர்யாவை கண்டதும் முகம் மலர, அவளும் கண்டு கொண்டாள் அவனை.
“ஏம்ல யார் அது ?? ஏன் கத்துத ??” என்று சூரியாவின் கையை பிடித்து இழுத்தபடிமலர் கிசுகிசுக்க.
“அக்கா அவங்க தனா மாமா… துபாயில் இருந்து வந்துட்டாங்க போலிருக்கு, தீனா அண்ணே சொல்லவே இல்லை” என்றவள்.,”அக்கா ஒரு வார்த்தை பேசிட்டு வாரேனே… !!” என்று இறைஞ்சுதலாய் சிணுங்கிட அவளும் சரி என்றாள்.
“வாங்க மாமா எப்ப வந்தீங்க…?உட்காருங்க அண்ணன் எதுவுமே சொல்லலை நீங்க வந்திருக்கீங்கனு… என்ன சாப்பிடுறீங்க….???” சூரியா படபடக்க மலருக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் தங்கை இத்தனை படபடப்பாளா என்று
“நேத்து தான் வந்தேன் சூர்யா… எப்படி இருக்க…?? இன்னும் அதே வகுப்பு தானா… ??” என்று கிண்டல் செய்ய
சிவாவும் மலரை பார்த்தபடி .,”ஆமா டா ஜெய் இந்த வருஷமாவது பாஸ் ஆகிடலாம்’னு டீச்சர் அக்காவை வர வச்சு இருக்காங்க இல்ல டீச்சர்” என்று இழுத்திட
மலர் சிவாவை முறைத்து விட்டு.,” நான் காபி எடுத்துட்டு வரேன் “என உள்ளே சென்றாள் .
“இந்தாரு மாமா… நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.ரெண்டு வருஷம் டைபாய்டு அம்மை’னு வந்ததால ஸ்கூல் போகலை, அதனால தான் போன வருஷம் ப்ளஸ் ஒன் முடித்து இதோ இந்த வருஷம் ப்ளஸ் டூ பரிட்சையும் எழுதிட்டேன்.பெருசா பேசுறீங்க… நான் என்ன உங்க ஆளு வடிவரசி மாதிரி கோட் அடிச்சு படிக்கிறேன் னு நினைச்சிங்களா..??”. சிவாவை வாரினாள் சூரியகாந்தி.
“இந்தாரு சன் ப்ளவரு!, என்னை நாலு கெட்ட வார்த்தையில வேணும்னா திட்டிக்க. அதுக்காக அந்த புள்ளைய என் ஆளு’னு சொல்லாத “என்றான் கடுப்பாக.
“அட நீ தான் இப்படி சொல்ற மாமா. அவ ஊரெல்லாம் உன்னை தான் கட்டப் போறதா சொல்லிட்டு திரியிறா.நாங்க பரிட்சை முடிச்சு வரும் போது கூட எங்க குரூப் பிள்ளைக கிட்ட வந்து பேசும் போது சொன்னா, எனக்கென்னமோ உனக்கு வடிவரசியை தான் கட்டப் போறாங்கனு தோணுது….” என்றாள் கிண்டலாக.
“இந்த பாரு… ஒழுங்கா ஓடி போயிடு இதை சொல்ல தான் எங்களை கூப்டியா நீ…? டேய் ஜெய்! போகலாம் வாடா “என்று சொல்லும் போதே மலர் காஃபியுடன் வந்தாள்.
மலரை கண்டதும் மனம் குறுகுறுக்க அமர்ந்து கொண்டான். காஃபியை நீட்டவும் இருவரும் எடுத்து கொண்டனர்.
“இவங்க யார் சூர்யா ??”என்று தனஞ்செயன் மலரை பார்த்து வினவிட, சிவா சற்று கலக்கமாக தன் அண்ணனை பார்த்தான்.
“என்ன இவன் விசாரிக்கிறான் அய்யய்யோ….?! டேய் அண்ணா இந்த பக்கம் உன்னை கூட்டிட்டே வந்திருக்க கூடாது நானு. அச்சோ பார்க்கிறானே பார்க்கிறானே… டேய் வேணாம் டா அது என் ஆளு டா… முதல்ல என் லவ்வை சொல்லனும். “ மனதில் உருப் போட்டு கொண்டிருந்தான் சிவா.
தனஞ்செயன் கேட்ட கேள்விக்கு மலரே பதில் அளிக்க, இருவரும் பேசி கொண்டிருந்தனர். மலருக்கு உள்ளூர அத்தனை சிரிப்பு சிவாவின் முகம் போன போக்கிலும் பட்ட அவஸ்தையிலும்
“இது சரிப்படாது… டேய் சிவசக்தி இவிங்க சொற்பொழிவுல இடைவேளையை போடு..“என நினைத்து கொண்டு.,” ஹ்ஹான் அண்ணே நம்ப முனியம்மா கெழவிக்கு ஃபாரின் சென்ட் தரணும்னு சொன்ன வா போவோம். நமக்கு ஆயிரம் ஜோலி கெடக்கு… அட வாண்ணே அப்புறம் கூட வந்து பேசலாம் முனியம்மா கிழவியோட கடைசி ஆசை துபாய் சென்ட் அடிக்கணும்னு ஆசை நிறைவேறாம பொட்டுனு போயிடப் போகுது…” வம்படியாக இழுத்து கொண்டு சென்றான் சிவா.
சூரியா சிரித்துக் கொண்டே .,”மாமா காஃபி டம்ளரை குடுத்துட்டு போ” என்று சொல்ல ஒரே மிடறில் காபியை குடித்து விட்டு டம்ளரைக் கொடுத்தவன் இதெல்லாம் நியாயமே இல்லை என்று சொல்லி விட்டு தன் அண்ணனை இழுத்துக் கொண்டு ஓடினான்.
மலருக்கு அவன் செய்கையைக் கண்டு நகைப்பு தான் வந்தது.
நாட்கள் நகர திருவிழா களை கட்டியது. பொன்னர் உடல்நிலை சற்று தேர்ந்திடவும் வந்து விட்டார் மலர் இருந்த வீட்டிற்கு.
“இதோ வந்துட்டேன் பாட்டா… ஏன் உடம்பை அலட்டிக் கொண்டு இந்த வெயில்ல வாறீரு… யார் கிட்டயாவது சொல்லி விட்டு இருந்தா வந்திருக்க போறேன். ” என்றாள் பனிமலர்.
“அதெல்லாம் இருக்கட்டும் நீ ஏன் பொருவே இங்க வந்து கெடக்க, அரண்மனையாட்டம் ஊடு இருக்கு இந்த ஓட்டுல வந்து இருக்கியே???” மனம் தாங்காமல் ஆதங்கமாய் கேட்டார்.
“ஏன் இது என் அம்மா இருந்த வீடு தானே?இதுக்கென்ன குறை நான் இங்க தான் சந்தோஷமா இருக்கேன் பாட்டா” என்றாள்.
“அது சரி உன்கிட்ட பேசி மிச்சம் கொண்டு போக முடியுமா…? கல்யாணங்காட்சி ஆகாம தனியா இருக்கிறது எனக்கு சரிப்படலை நான் சீக்கிரம் உனக்கு ஒரு மாப்ளையை தேடி பிடிக்கிறேன்…” என்றார்.
“அட போ பாட்டா உனக்கு வேற ஜோலி இல்ல. “என்று கடுங்காப்பியை கொடுத்தாள்.
கடுங்காப்பியை மிடறு மிடறாக அருந்தியபடி.,” ஏன் பொருவே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா தேவலை. மாப்ள பார்க்கவா… ??”என்றவரை அமைதியாக பார்த்தவள் “நான் இன்னும் நகை எதுவும் சேர்க்கலை பாட்டா.சும்மா கட்டிட்டு போவாங்களா…?இப்ப தானே வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன் …இனிமே சேர்த்து அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் நினைச்சாலே மலைப்பா இருக்கு பாட்டா…. நான் பேசாம இப்படியே இருந்துக்கிறேன்…” என்றவளை கோபமாக பார்த்து விட்டு… ” நீ என்ன ஒண்ணும் இல்லாத ஆளா? பொன்னனோட பேத்தி. உன் அப்பா யார் னு தெரியும் இல்ல வார்டு மெம்பர்…. அது மட்டுமில்லாமல் நமக்கு நம்ம பாட்டன் பூட்டன் விட்டு போன சொத்தே நிரம்பி கெடக்கு… காடு கரை இருக்கு… ஏதோ ஒண்ணுமில்லாத வீட்டு புள்ள மாதிரி பேசுற… ம்ம்ம்… உன் பாட்டனுக்கு தெம்பு அப்படியே தான் இருக்கு பொருவே… இப்பவும் வேட்டியை மடிச்சு கட்டி காட்ல இறங்கினேனா சூரியன் உச்சிக்கு போறதுக்குள்ள ஒரு ஏக்கருக்கு வரப்பு கட்டிருவேன்… உனக்கு ஒண்ணும் சேர்க்காமையா இந்த பேச்சு எடுத்தேன்… ஏன் செண்பா உன் பேத்தி கிட்ட இதெல்லாம் சொல்ல மாட்டியாக்கும்…. ” நொடித்து கொண்டார் பொன்னன்.
“ஏம்ல மலரு… உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை…. ஏட்டி ஒழுங்கா கல்யாணத்தை பண்ணிட்டு குடும்பம் நடத்தற வழியைப் பாரு…. ஏண்ணே நீ மாப்ளயை பாரு… இவள மேடையில் ஒக்காத்தி(உட்கார) வைக்கிறது என் பொறுப்பு” என்றார் செண்பகவல்லி ஆச்சி.
“அது சரி உங்க ரெண்டு பேருக்கும் என்னை துரத்துறதுல அம்புட்டு சந்தோஷம் போங்க” என்று காபி டம்ளரை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
சூரியாவின் அண்ணன் தினகரனும் அங்கே வந்து விட்டான். “என்ன சொல்லுது என் தங்கச்சி…. மலர் மா தண்ணி குடுடா….” என்று அமர்ந்தான்.
“அண்ணா வாங்க வாங்க… ” என தண்ணீர் சொம்பை நீட்ட, மலரை பார்த்து விட்டு ஆச்சரியமாக “மலர் நல்லா வளர்ந்துட்ட…! பாட்டன் சொன்னது சரி தான். சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்கணும் உனக்கு… பாட்டா நல்ல பையனா பாருங்க சீர்வரிசை எல்லாம் நம்ம சூரியாக்கு எடுத்து வச்ச மாதிரி மலருக்கும் எடுத்து வைப்போம்” என்றான்.
மலர் சிரித்தபடி .,”ஒரு முடிவோட தான் இருப்பீங்க போலிருக்கு… அண்ணா எனக்கு மாப்ள பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும் எங்க அண்ணியை எப்போ கண்ணுல காட்டுவீங்க…. இந்த லீவ் லயே கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாருங்க “என்றாள் மலர்.
“அது சரி… ஆச்சி மலரு நல்லா பேச ஆரம்பிச்சிடுச்சு … முன்ன எல்லாம் ஒரு பேச்சு வாங்கங்காட்டியும் பெரும்பாடா இருக்கும் ” என்று சிரித்தான்.
“அவ டீச்சர் ஆகிட்டா டா பேசாம எப்படி இருப்பா ஏல நீ அவளை சின்னவனு நினைக்கியா…???” என்றார் ஆச்சி.
**********
நாட்கள் செல்ல திருவிழா துவங்கியது.
“அக்கா மொளைப்பாரி நல்லா வளரனும் வேண்டிக்கிட்டே போடு… நம்ம மொளைப்பாரி தான் டாப் க்ளாஸா இருக்கணும் அவ அவ வாயை பொளந்துகிட்டு பார்க்கனும்” என்று சூரியகாந்தி சொல்ல மலரும் சிரித்தபடியே போட்டாள். மலர் கவனிப்பில் முளைப்பாரி செழித்து வளர்ந்திருந்தது.
இங்கே மலரின் சித்தி வேலைக்கார பெண்மணியிடம் முளைப்பாரி போடும் வேலையை கொடுத்திருந்தார்.
“மம்மி இப்பவே சொல்லிட்டேன் ஸ்டீரிட்டை சுத்தி வரும் போது தான் தூக்கிட்டு வருவேன் அப்புறம் எல்லாம் நீங்க தான் கொண்டு வரணும்…. ஒரே பேட் ஸ்மெல் வரும்” என்று முகத்தை சுளித்தாள் வடிவரசி.
வேலை செய்யும் பெண்மணியோ மனதினுள் .,’இது இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா அவ்வளவு தான் கருத்தம்பட்டியே எனக்கு அடிமைனு சொல்லி இருக்கும். எவன் படாத பாடுபட குடுத்து வச்சிருக்கானோ !!!’என்று பேசினார்.
“ஏய் சரசா என்னை வேடிக்கை பார்க்கிற …போய் எடுத்து வை போ….” என்று மிரட்டி விட்டு ,”அரசி நீ போய் சாப்பிடுறா “என்று அனுப்பி விட்டு சங்கரனிடம் மெதுவாக,” உங்க கிட்ட பேசனும்” என்றார் முத்துலெட்சுமி.
“என்னம்மா சொல்லு பஞ்சாயத்து ஆபிஸுக்கு போகணும், நேரம் ஆச்சு “என்றார் .
“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போனா ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது… ” என திட்டி விட்டு .,” நம்ம கருப்பசாமி அண்ணே இருக்காரு இல்ல அவரு மகனுக்கு பொண்ணு கேட்கிறாக… ரெண்டு பசங்க இருக்கானுக இல்ல ஒருத்தனுக்கு உங்க பெரிய மவளையும் ஒருத்தனுக்கு சின்ன மவளையும் பேசி முடிக்கலாம் னு யோசித்தேன்…நல்ல குடும்பம்… சண்டை சச்சரவு னு எதுவும் கிடையாது… திருவிழா முடிஞ்சதும் பேசி முடிப்போம்…நம்ம கிட்ட இருக்கிற நகை பெரியவங்க நகை மொத்தமும் உங்க மவளுக்கு போட்டு விட்டு அரசிக்கு என் நகைங்க இருக்கு அதை போடுவோம்” என்றார் பெருந்தன்மையாக .
“உன் மனசு யாருக்கு வரும் முத்து… அதை சிலரால தான் புரிஞ்சுக்க முடியலை “என்று தன் தந்தையை பார்த்து கூறி விட்டு.,” நீ சொல்றது போல திருவிழா முடிஞ்சதும் அவங்களை பொண்ணு கேட்க வர சொல்லுவோம் “என்று வெளியே சென்றார்.
திருவிழா துவங்கியது… அம்மனுக்கு கரகம் பாலித்து தேரில் அலங்காரமாக பவனி வந்தாள் முத்து மாரியம்மன்… இளைஞர்களின் உதவியால் வீதி உலா வந்த தாயாரை பக்தி பரவசத்துடன் வேண்டிக் கொண்டனர் மக்கள். ஒவ்வொரு நாள் இரவும் கரகாட்டம் ஒயிலாட்டம் மேடை நாடகம் என்று கலகலத்தது கருத்தம்பட்டியே…
மாவிளக்கு எடுத்து கொண்டு செல்ல இளம்பெண்கள் தயாராக இருக்க தப்பு எனும் பறை அடித்து மாவிளக்கை தயாராக வைத்திருக்கும்படி கூறிவிட்டு சென்றனர் தப்பு கலைஞர்கள். ஊரை சுற்றி வந்து அனைவரையும் அழைத்து கொண்டு வலம் வந்தனர்.
மலரும் சூரியாவும் தயாராக நின்றனர் பொன்னுசாமியின் வீட்டு வாசலில் தப்பு கலைஞர்கள் வந்ததும் இருவரும் சூரியாவின் அன்னையுடன் கிளம்பினர்.
வடிவரசி முழு அலங்காரத்துடன் வந்திருந்தாள். முத்துலெட்சுமி மாவிளக்கு தட்டுடன் வர தேங்காய் பழத்தை வடிவரசியிடம் கொடுக்க அவளோ சலித்து கொண்டாள்.
“கை வலிக்கும் மம்மி “என்று சிணுங்க சூரியா .,”ம்ம்க்கும் ஆரம்பிச்சுட்டா அல்ட்டாப் சுந்தரி, மேக்கப்பை பாரு ஏதோ பேஷன் ஷோ போற மாதிரியே” என்று சொல்ல மலரோ .,”சூரியா அமைதியா வால “என்று அழைத்து சென்றாள்.
இங்கே இளைஞர் பட்டாளம் இளம்பெண்களின் வருகையை எதிர்பார்த்து நின்றனர்.
“மாப்ள…. இந்த புள்ளைகளை எல்லாம் பாரேன் என்னா மேக்கப்பு பகுமானமா வர்றாளுக பாரு… அம்பூட்டும் ரோஸ் பவுடரை அப்பிட்டு வருதுக…. ” என சிவா சொல்ல.,” ஆமா பங்கு” என்று வீரமலை சொன்னவுடன் மற்றவர்களும் சிரித்தனர்.
“ஏலேய் சிவா அங்க வர்றவங்கள்ள உன் தங்கச்சி, என் தங்கச்சி எல்லாரும் வர்றாங்க “என்றான் தினகரன்.
“வாடா நல்லவனே… சரி துபாயில் இருந்து வர்ற சேக் டிரெஸு போடலை” என்று கேட்க அவனோ சிரித்தபடியே.,” மச்சான் அதை உங்க அண்ணன் கிட்ட கேட்கறது….. “என்று வம்பிழுத்தான் தினகரன்.
“ஏன் டா உங்க பஞ்சாயத்துக்கு நான் சொம்பு தண்ணியாடா? “தனஞ்செயன் நக்கலடிக்க வெற்றி தான், “உங்க அண்ணன் தம்பி பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கங்க டா…. இப்ப பாரு கலர் கலரா பட்டாம் பூச்சி வருது பார்க்கலாம் … “எனும் போதே மஞ்சள் விளக்கொளியில் பளிங்கு சிலை போல ஜொலித்தபடி வந்தாள் பனிமலர்.
அங்கே ஒருவன் டிப் டாப்பாக பீட்டர் இங்லாண்ட் சட்டையணிந்து ***** சென்ட் நறுமணம் தூக்கியடிக்க, கூலர்ஸ் அணிந்து ஸ்டைலாக மாருதி எஸ்டீமில் சாய்ந்து நின்றான்.
சிவா மலரைக் கண்டதும் மயங்கி நின்றான்.
வெற்றியின் தோள் மீது கையைப் போட்டபடி .,”மச்சான் இவ என்ன டா இவ்வளவு அழகா இருக்கா… ஹையோ இப்பவே கிறக்கமா இருக்கே… ” மயங்கி சரிந்தவன்,”மச்சான் நான் விழுந்துட்டேன் டா இவ கிட்ட…. ” என்க அவனது அண்ணன் தனஞ்செயனும் அங்கே தான் பார்த்துக் கொண்டிருந்தான். தினகரன் சிவாவின் தங்கை பாக்யாவை விழியுயர்த்த அவளும் நாணமாய் தலை குனிந்தாள்.
உன் ரெட்டைசடை கூப்பிடுது முத்தம்மா என்று பாடல் ஓட
இளைஞர்கள் விசிலடித்து வெடி வகையறாக்கள் கொழுத்தி வானவேடிக்கை நடத்தினர்.
இங்கே பனிமலரை பற்றி நினைத்த சிவாவோ .,”இதுக்கு
மேல தாங்காது நம்ம லவ்வை சொல்லிட வேண்டியது தான்” என்று முடிவெடுத்தான்.
மறுநாளே மலரை தனியே அழைத்து சென்று தன் விருப்பத்தை கடிதம் மூலம் தெரிவிக்க நினைத்து அதனை அவளிடம் கொடுத்தும் இருந்தான்.
“என்ன இது ??”
“பிரிச்சு பார்க்கிறது… !!”
“ஏன் வாயைத் திறந்து சொல்றது ??” இடக்காகவே பேசினாள்.
“சொல்ல முடிஞ்சா சொல்லி இருக்க மாட்டேனா ??அதை படிச்சிட்டு உன் முடிவை சொல்லு … மொளைப்பாரி தூக்கிட்டு வரும் போது உன் முடிவையும் சொல்ற… “
மறுநாள் மொளைப்பாரி தூக்கி கொண்டு பெண்கள்
அனைவரும் சென்றனர். சிவாவோ மலரின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.