பனிமலர் தன் ஆச்சியிடம் அவரை விட்டு எங்கும் போவதில்லை போவதென்றால் இருவரும் சேர்ந்து செல்வோம் என கூறி விட்டு மிதுக்கு வத்தல் குழம்பு வைக்க சென்றாள்.
“ஆச்சி மணக்க மணக்க வத்தகுழம்பு ரெடி, சுட்ட அப்பளமும் ரெடி வா வா !!”என்று அழைத்தபடியே சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
“ஏம்லே, வத்த குழம்புக்கு தோதா ஒரு சில்லு தேங்காய் வச்சு துவையலை அரைச்சிருக்க கூடாது…” என்க
அவளோ.,” ம்ம்க்கும் ராத்திரியில் தேங்காய் துவையல் தின்னா செமிக்குமா…? இப்ப சாப்பிடு காலையிலைக்கு அரைச்சு தாரேன்… நல்லா சுண்ட வச்சுட்டேன் கொழம்பை… நாளைக்கும் இதையே சாப்பிட்டுக்குவோம் …”.என்றவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு, தட்டில் இருந்த சோற்றை பிசைந்து உருண்டை பிடித்து பேத்திக்கு கொடுத்தார்.
“ஏன் ஆச்சி கையில என்ன வச்சிருக்க.? நீ பிசையிற சோறு அமிர்தம் மாதிரி ருசிக்குது. நான் இவ்வளவு நேரம் சாப்டேன் எனக்கு ருசிக்கலை…” என்றவளிடம் நாணமாய் சிரித்து .,”கையில தேன் தடவி வச்சிருக்கு.போடி கோட்டிக்காரி… தட்டை கழுவி ஊத்திட்டு வா காலையில் வெள்ளென கிளம்பிட்டா வெயிலுக்கு முந்தி போயிடலாம் “என்றார்.
“பாட்டனுக்காவ போகனும் ஆச்சி அவ்வளவு தான்… மத்தபடி எனக்கு போகவே பிடிக்கலை… ஆனா நீ தான் எந்நேரமும் அங்க போய் இருந்துக்க சொல்ற” என்று சலித்து கொண்டாள்.
“சரிடி கொணட்டாம தூங்கு” என்றவர், தனது சேலையை விரித்து படுத்தார்.
மறுநாள் காலையில் மணப்பாறைக்கு கிளம்பினர். பயணம் முழுவதும் மலரின் மனம் எதை எதையோ யோசித்தது.
மணப்பாறையில் இறங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு, கருத்தம்பட்டி போவதற்கு மினி பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
***********
காலையிலேயே தன் அம்மா சொன்ன வேலையை கேட்டிடாமல் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிய சிவசக்திபாலன் நேரே டீக்கடைக்கு சென்றான். அங்கே அவனது நண்பர்கள் அவனுக்கு முன்பாக இருந்தனர்.
“மாப்ள நீ லேட்டு… உன் மாமன் மக பள்ளி கூடத்துக்கு போயாச்சு போ…சைக்கிளை பஞ்சர் பண்ணோம்’ல அதனால பஸ்ல கிளம்பி போயிட்டா… ” என்றான் நண்பன் வெற்றிவேல் .
“சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சு இல்ல அது போதும்… அவளைப் பார்க்க எவன் வந்தான்…?ஒரு டீ சொல்லு மச்சான்… காலையிலேயே அதை செய் இதை செய்னு ஒரே நச்சரிப்பு… ஏன் மாப்பு வலது கண் எழுந்திருச்சதுல இருந்து துடிச்சுக்கிட்டே இருக்கு என்ன விஷயம் னு தெரியலை… உனக்கு ஏதாவது அதை பத்தி தெரியுமா என்ன ??”என்று பேசியபடியே வந்தமர்ந்தான் சிவா.
“டேய்! ஏதோ நல்லது நடக்கப் போகுது போல அதான்…”
“இருக்கலாம்… ஒரு வேளை நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம அழகுக்கு ஏத்த மாதிரி ஏதாவது பொண்ணு கூட பார்க்கலாம்…. ” என்று திரும்ப, அங்கே அவனது அத்தை மகள் வடிவரசி சிரித்தபடி நின்றிருந்தாள்.
“மாப்பு நீ சொன்ன பொண்ணு இதானே…” தோழன் கிண்டல் செய்தான்.
“டேய் கொப்பரை தேங்கா…துருவி விட்ருவேன் செவனேனு இரு… மகனே கொன்றுவேன் உன்னை “முணுமுணுத்தவன் வடிவரசி அருகே வந்து ” சொல்லு மா அரசி வடிவரசி…. என்ன விஷயம்..?” என்றான்… ஈஈஈஈ என்று பல்லை காட்டியபடி வேறு வழி, இல்லை என்றால் மாமன் ரோட்டில் எல்லோர் முன்னிலையில் திட்டினான் என அவன் வீட்டிற்கு சென்று கண்ணைக் கசக்கிடுவாள், திட்டு விழுவதோ இவனுக்கு தான்.
“மாமா… உங்களை அத்தை சாப்பிட வர சொல்லுச்சு… !”நாணிக் கோணி சொன்ன விதத்தில் சக்திக்கு எரிச்சல் கிளம்பாத குறை தான்.
“இதை சொல்லவா இம்புட்டு தூரம் வந்த…? நான் வரேன் மா நீ போ…” உள்ளே எரிச்சலுடன் வெளியே சிரித்தபடியே கூறினான்.
“சரிங்க மாமா” கோணலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு கிளம்பினாள்.
“யப்பா ஏழரை போயிருச்சு” என்றபடி டிஃபன் கடைக்குள் நுழைந்தவன் ., இட்லி தோசையை நீர்த்த சாம்பாரும் ,காரமான வரமிளகாய் சட்னியும் ,தொட்டு உண்டு விட்டு வெளியே வந்தான்.
நண்பர்கள் குழு வண்டியை எடுத்து கொண்டு ஊரை சுற்றி விட்டு மதிய வேளையில் அவ்வூரின் பேருந்து நிலையத்தின் நிழற்குடையில் வந்தமர்ந்தனர் .
கொண்டைக்கடலையை வேக வைத்து அதற்கு வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு தாளித்து கூம்பு வடிவ காகிதத்தில் மடித்து தந்தார் எழுபது வயது இருளாண்டி .
“டேய்! கடலை வாங்குடா கொறிப்போம் “என்று சிவாவின் நண்பன் வீரமலை சொல்ல
“ஏன் நீ வாங்குறது…? பாக்கெட் ல இருந்து காசை எடுக்க மாட்டியே…” என்றபடியே காசைக் கொடுக்க வீரமலை கடலை வாங்க ஓடினான்.
“தாத்தா அட கடலை விக்கிற தாத்தா அட நில்லுயா” என்று தலை தெறிக்க ஓடி கடலையை வாங்க அங்கே அவன் தந்தை வந்து விட்டார்.
“வயசான ஆளு அவரு கூட உழைச்சு சாப்பிட நினைக்கிறாரு. தின்னுட்டு தடிமாடு கணக்கா அலையிறானுவ… ஏன் டா தோட்டத்துல தண்ணி பாய்ச்ச சொன்னா இங்க என்ன கடலை வாங்கிட்டு திரியுற… போடா மோட்டார் கரண்டு வந்திருக்கும்… “என்று விரட்ட, ” போறோம் போறோம்” என்று லுங்கியை மடித்து கட்டி விட்டு நண்பனை நோக்கிச் சென்றான்.
“இதெல்லாம் எங்க திருந்த போவுது… ” என்று திட்டிவிட்டு போனார்.
“என்னவாம் டா உன் அப்பாவுக்கு… !”
“தண்ணி பாச்சனுமாம்… காவேரி தண்ணி குழாயில ஒழுகுற மாதிரி ஒழுவுது அதை பாய்ச்ச ஒரு ஆளாம்… 5 ஹெச் பி மோட்டர்ல குத்தால அருவி மாதிரி பாயறது போல பேசிட்டு இருக்கார்… விடு மாப்பு நீ கடலையை கொறி” என காலாட்டியபடி கடலையை கொறித்தான் வீரமலை .
“அட விடு மச்சி இது என்ன நமக்கு புதுசா என்ன .. மினி பஸ் வருது அதை பாரு” என்றபடியே சிவா கடலையை கொறிக்க, பனிமலர் தனது ஆச்சியுடன் இறங்கினாள் .
கடலையை வாயில் போட்டபடியே… “டேய்… டேய்ய்ய்ய்ய்ய் மாப்ள.. பங்காளி… இது யாரு டா… புதுசா ஒரு மஞ்சக்கிளி… என்னடா மழை பேஞ்சதும் அடிக்கிற வெயிலாட்டம் ஒரு கலருல… ” வாய் விட்டே கூறி விட்டான் சிவசக்திபாலன்.
“ஆச்சி இங்கன இருந்து நடந்து தான் போகணும் நடந்துருவியா இல்ல வண்டி ஏதும் வந்தா ஏத்தி விடவா… ??”பனிமலர் கேட்டபடியை கையை பிடித்து இறக்கி விட்டாள்.
“ஏட்டி தெரியாத வண்டியில ஏத்தி விட்டு என்னை கடத்திட்டு போயிட மாட்டானுவளா…? நான் நடப்பேன் இன்னும் நாலு மைலு தொலைவு… வாட்டி போவோம்…” என்று வீராப்பாக நடந்த ஆச்சியை சிரிப்புடன் பார்த்தவள் அவருடனேயே நடந்தாள்.
“மாப்ள… ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு நான் போயிட்டு இந்தா வந்திடுறேன்… “வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து பனிமலரின் முன்பு போய் நின்றான்.
“ஏன் பாட்டி யாரு வீட்டுக்கு வந்தீக….? ” என்று கேட்க
“அதை தெரிஞ்சு நீர் என்ன பண்ண போறீரு…? ஏம்ல யாருல நீ… முன்ன பின்ன தெரியாதவக கிட்ட விசாரிக்கிற நீ என்ன போலீசா…?”என்று நக்கலாக பேசி விட்டு பேத்தியின் கையை பிடித்து கொண்டு நகர்ந்தார் செண்பகவல்லி ஆச்சி.
“அட உதவி பண்ண கேட்டா கோபப்படுறீகளே… ஆமா உங்க ஊரு திருநெல்வேலி பக்கமா என்ன நெல்லை தமிழ் வாசம் வீசுது… ” என்றான் அவனும் விடாது.
“ஏம்ல இப்ப உனக்கு என்ன வேணும்..?ஏன் எங்க பின்னால வார… நாங்க ரெண்டு பேரும் பிரசிடண்ட் வீட்டுக்கு போறோம் நீ உன் சோலியை பாரு… “என்று வெட்டியபடி நடந்தார்.
“கெழவி மசியாது போலவே… என்ன செய்யலாம்? “எனும் போதே அவனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“சொல்லு மாப்ள.. யூ நோ ஹெல்ப் பண்ண வந்தா கூட உதாசீனம் பண்றாக… யூ க்நோ பேசிக்கலி ஐம் எ சமூக சேவகர் னு உனக்கே தெரியும்… ஆனா வெளியூர்காரங்களுக்கு தெரியுமா அதான்.,சரி விடு மாப்ள என்ன பண்ண… கேட்காமலேயே உதவி பண்றது நம்ம ரத்தத்திலேயே ஊறிப் போச்சு.. எது நாலு பேருக்கு ரத்தம் கொடுக்கணுமா இதோ வந்துட்டேன்.. ஏன்னா நமக்கு உதவி பண்றது தான் முக்கியம்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே திரும்பி பார்க்க பனிமலரும் அவள் ஆச்சியும் வெகு தூரம் நடந்து சென்றிருந்தனர் .
பனிமலர் போகும் வழி எல்லாம் நோட்டம் விட்டு கொண்டே செல்ல, காணுகின்ற பக்கம் எல்லாம் காய்ந்த நிலங்கள் தான் வரவேற்றது.
“ஏன் ஆச்சி எப்படி காஞ்சு கெடக்கு பாரேன்… சரியா பராமரிக்க கூட இல்லாம போட்டு வச்சிருக்காங்க… நான் எல்லாம் இப்படி விட மாட்டேன்பா” என்று பேசியபடி செல்ல பக்கத்தில் நடந்து சென்ற பெரியவர் ஒருவர் தானாய் பேசினார்.
“எங்களுக்கு மட்டும் போட்டு வைக்க ஆசையா மா…? தண்ணி பஞ்சம் தலை விரித்து ஆடுது. குடிக்க தண்ணி கிடைக்கறதே குதிரை கொம்பால இருக்கு, இதுல எங்க இருந்து நாங்க விவசாயம் பார்க்கிறது… மழை தான் வருஷா வருஷம் ஏமாத்திட்டு போகுதே… இந்த மரங்களாவது இருக்கேன்னு சந்தோஷப்படும் போது கசா(கஜா) புயல் வந்து எல்லாத்தையும் சாச்சிடுச்சு… என் தென்னந்தோப்பு, மாந்தோப்பு எல்லாம்…. அப்படியே மகாபாரத போர்ல செத்து கெடந்த வீரர்களை போல சாஞ்சு கெடந்தது மா… அதுல கரண்டு போயி … மரங்களை ஓர்ஸ் (அப்புறப்படுத்த ) பண்ண தான் சரியா இருந்துச்சு… ஆமா எந்த ஊர் தாயி…? இங்கன யாரை பார்க்க வந்திருக்கீங்க? ” என்றார் நடந்து கொண்டே.
“அடி ஆத்தி அவுக வீட்டுக்கா அது இன்னும் ஒரு கல் தொலைவு இருக்கே ஆயா…வண்டி அங்கன நிக்குமே நீ ஏன் பஸ் ஸ்டாண்டில் இறங்குன…?இரு இரு நான் யாரையாவது வர சொல்றேன் வண்டியில போய் இறங்கிக்கிடுங்க… ஆமா அவருக்கு நீ என்ன வேணும்…” என்றவர் தூரத்தில் யாரையோ அழைத்து இருவரையும் பனிமலரின் தந்தை வீட்டில் இறக்கி விடும்படி கூறினார்.
சங்கரன் மகள் என்று கூறாமல் பொன்னர் பேத்தி என்றவள் ஆச்சியை பத்திரமாக ஏற்றி விட்டு., “ஆச்சி நான் நாலு எட்டுல நடந்து வந்திடுவேன் நீங்க போய் இறங்கிக்கிடுங்க” என்று அனுப்பி வைத்து விட்டு நடக்க அவரே “அட சங்கரன் பொண்ணா மா நீ, வேதவல்லி மகளா… நல்லா நெடுநெடுனு வளர்ந்துட்ட அடையாளம் தெரியலை மா நான் சங்கரனுக்கு பங்காளி மொறை உனக்கு சித்தப்பா… ” என்று விட்டு இன்னொரு வண்டியை வரவழைத்து பனிமலரையும் ஏற்றி விட்டார்.
இருவரும் வீட்டிற்கு செல்ல அங்கே மலரின் சித்தி முத்துலட்சுமி வேலையாட்களிடம் ஏதோ வேலை ஏவிக் கொண்டிருந்தார். இவர்களை கண்டதும் முகத்தை சுருக்கி இயல்பாக்கி விட்டு .,”வாங்க” என்றபடி தன் வேலையை தொடர்ந்தார்.
தாத்தாவின் அறைக்கு வேகமாக சென்றவள் கட்டிலை பார்க்க அங்கே அவரோ ஒடுங்கிப் போய் படுத்திருந்தார்.
“பாட்டா! ” ( தாத்தாவை பாட்டா என்றே அழைத்திடுவர்) என்று தன் பேத்தியின் குரலை கேட்டதும் இடுங்கிய கண்களை விரித்து பார்த்தவர்.,” ஆயா பெரியபுள்ள, வந்துட்டியா?!”என்றவரின் குரல் கம்மியிருந்தது.
“உடம்புக்கு என்ன பண்ணுது…? போன வாரம் கூட நல்லா தானே பேசுனீங்க…” கண்கள் பனித்தது மலருக்கு.
“ஒண்ணும் இல்லத்தா காய்ச்சல் ல சோறு எறங்கலை… உன்னை பார்த்துட்டா இந்த கட்டை வெந்துடும்’னு “எனும் போதே பதறினாள் பனிமலர்.
“ஏன் பாட்டா இப்படி எல்லாம் பேசுற…? எனக்கு இருக்கிறது நீயும் ஆச்சியும் தான்.. இப்படி எல்லாம் பேசாதீங்க “குரல் தளுதளுத்தது மலருக்கு.
“சரி விடுடி ,அவிக ஏதோ சொணக்கத்துல பேசி இருப்பாவ..ஏதும் கஞ்சி குடிச்சியளா மலரை வைக்க சொல்லுதேன் குடிக்கியளா ” என்று ஆச்சி கேட்க
” சரி வைக்க சொல்லு மா ” என்றதும் மலர் ஆச்சியை பார்க்க .,”அடி என்னடி என்னை பாக்குத,போ.உன் வூட்ல நீ தான் செய்யணும்… இது என்ன பெரத்தியா வூடா ….?”என்று சொல்லும் போதே மலரின் சித்தி உள்ளே நுழைந்தார்.
“கஞ்சி காய்ச்சி குடுக்க கூடவா ஆள் இல்லாம வர சொன்னோம்… இங்க வேளைக்கு வேளை வித விதமா ஆக்கி போட நான் இருக்கேன்… பேத்தினு எம்மவ இருக்கா ஆனாலும் அவருக்கு மூத்தார் மகளை தானே தேடுது.அதான் வர சொன்னேன்… உங்க பேத்தியை வேலை வாங்க இல்ல “முகத்தை திருப்பி கொள்ள மிகச் சரியாக சங்கரனும் உள்ளே நுழைந்தார்.
“நல்லா இருக்கியா மா!!” என்று மகளை கேட்டவர் தன் அத்தையிடம் “அத்தை வந்ததும் வராததுமா ஏன் வம்ப கட்டுறீங்க…?அவ இல்லைனா இந்த வீடு வீடா இருக்குமா… ஏதோ என் மகளை வளர்க்குறீங்க, என் மூத்த பொண்டாட்டியோட அம்மாங்கிறதாலையும் தான் பேசாம விடுறேன்” என கூறி விட்டு வெளியேறினார். செண்பகவல்லி ஆச்சியை கர்வமாக பார்த்த மலரின் சித்தி பின்னாலேயே சென்று விட்டார் .
“அவ கெடக்குறா விடு, மலரு நீ பாட்டன்ட்ட பேசிட்டு இரு. நான் பெரியவ வீட்டுக்கு போயிட்டு வந்திடுதேன்…” என்று எழுந்து கொண்டவர் ” உடம்பை பார்த்துக்கிடுங்க நான் ரவைக்கு வாரேன் “கிளம்பி விட்டார்.
பக்கத்து தெருவில் இருந்த பெரிய மகளின் வீட்டிற்கு செல்ல…” அட அம்மாச்சி… வரேன்’னு சொல்லவே இல்லை” அவரை கட்டிக் கொண்டு கொஞ்சினாள் சூரியகாந்தி.
“யம்மா வாம்மா… நேத்து பேசினப்ப கூட வரேனு சொன்னியா நீயி…?அவ வரவச்சாளாக்கும் ஏம்மா மலருமா வந்திருக்கா… எங்கம்மா” என செண்பகவல்லியை பேசவே விடாமல் பேசினார். .
“ஏன்டி வாசப்படியிலேயே நிற்க வச்சு பேசிட்டு இருக்க உள்ள வாங்க அத்த… “என்று பொன்னுசாமி அழைக்க உள்ளே நுழைந்தார் செண்பகவல்லி.
“ஏன்யா அவரை போய் பார்த்து பேசுனியளா… “என்று செண்பகவல்லி ஆச்சி கேட்டதும்
பொன்னுசாமி மெதுவாக .,”எங்க அத்த அவங்க தான் தெனத்துக்கு ஒரு சண்டை’னு இழுக்கறாங்க என் தம்பி பொண்டாட்டிக்கு உறவு ஒட்டி இருந்தாலே ஆகாது…எங்க மவள காணலை… பாட்டனை பார்க்க போயிடுச்சா..?”என்று மலரை கேட்க
“அவளை அங்கனக்குள்ள இருக்க சொல்லிட்டு வந்திருக்கேன்.இந்தா இப்ப வந்திடுவா…” என்றவரிடம் காபியை நீட்டினார்.
அதை குடித்தபடியே, “ஏன்த்தா சூரியா பள்ளிகூடத்துக்கு போகலையா வீட்டுல இருக்கவ “என கேட்க.
“ஆச்சி பரிட்சை நடக்குது… அதான் மத்யானமே விட்டாங்க… நான் மொத பஸ்ல வந்தேன்…. நீங்க அடுத்த பஸ்ல வந்திருக்கீங்க… “என்று பேசும் போதே மலர் உள்ளே நுழைந்தாள்.
“அட தங்கம் வாடா வாடா… எம்புட்டு வருஷம் ஆச்சு உன்னை பார்த்து… பிள்ள வளர்ந்துட்டா, ஏன் மா வேலை எல்லாம் புடிச்சிருக்கா.?உன்னை வந்து பார்க்க கூட முடியலை.. நீயும் லீவு விட்டா வருவனு பார்த்தா வர்றதில்லை… உன் அண்ணன் ஃபோன் போடயில எல்லாம் கேட்பான் ” வாஞ்சையாக வருடினார் .
பொன்னுசாமி மலரை வரவேற்றவர் “நான் போய் கோழி வெட்டி குடுத்து விடுறேன் ராத்திரிக்கு குழம்பு வச்சிடு ஏன் ஆயா மீன் புடிக்குமா…!!” என்க
“அட நீங்க வேற மாப்ள அவ இந்த கோழிக்கறி தவிர வேற எதையும் சாப்பிடுறது இல்லை. தூத்துக்குடியில இருந்துகிட்டு மீன் சாப்பிடாத ஆளு இவளா தான் இருப்பா… ” என்று சிரித்தார்.
“அதெல்லாம் நான் வைக்கிற குழம்புல புள்ள ஒரு பிடி சோறு சேர்த்து சாப்பிடும் “என்றார் மலரின் பெரியம்மா.
“இருக்கிறது போதும் பெரியம்மா… நம்ம வீடு தானே சாப்பிடலாம் “என்று சொல்ல
”அக்கா நீ பேசாம இரு… உடம்பை பாரு ஒடிசலா இருக்க…” என்று சூரியகாந்தி சொல்ல மலர் சிரித்தபடி.,” நீ மட்டும் எப்படி இருக்கியாம்… நல்லா படிக்கிறியா சூரியா, பரிட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க ??” என்று கேட்டாள்.
“அதெல்லாம் சூப்பரா எழுதி இருக்கேன் கா… சரி சரி நீ வா தோட்டத்துக்கு வரை போயிட்டு வருவோம்” என கூறி அழைத்து சென்றாள்.
மலரும் சூரிய காந்தியும் தோட்டத்திற்குச் சென்றதும் போர் போட்ட இடத்தை பார்த்து கொண்டிருக்க அங்கே சிவசக்திபாலன் தன் நண்பன் வீரமலையுடன் வந்தான்.