ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,’ ஆத்துவாரியில என்ன?? ‘என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார்.

“ஏ புள்ள மலரு…. வா உன்னை உங்க அண்ணன் வர சொல்லுச்சு… அதுக்கு சந்தோஷத்துல தலைகாலு புரியலை வந்து பாரேன்… அந்த அதிசயத்தை… கிட்ட தட்ட நாற்பது வருஷம் கழிச்சு இந்த அதிசயம் நடக்குது புள்ள,  ஏ சூரியா நீயும் வாடி… யக்கா மறுபடியும் நானே கொண்டு வந்து விடுறேன்”என சித்திரை செல்வியிடம் சொல்லி விட்டு கிளம்பினார்.

“அடி இருடி, நானும் அந்த அதிசயத்தை வந்து பார்க்கிறேனே”என்றபடி சித்திரைசெல்வியும் கிளம்பினார். 

காட்டாறு ஓடும் இடத்திற்கு சென்றால் அங்கே சளசளவென்று தண்ணீர் அடித்து ஓடியது. ஆம் அடித்து பெய்த மழையில் காட்டாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதுவும்  அத்துணை வேகமாக சளசளவென்று ஓடிக் கொண்டிருந்தது.  செம்மண் தண்ணீரின் வரத்தினால் மேலும் சிவந்து அவ்விடத்தை செந்நிறபூமியாக மாற்றிக் கொண்டிருந்தது.

இளைஞர்களும் சிறுவர்களும் சிறுமிகளும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.

“ஏஏஏஏஏ நம்ம ஊருக்கு விமோசனம் பொறந்திடுச்சுல… தண்ணி சத்தத்தை பாரேன், யப்பா யப்பா எப்படி ஓடுது… இனிமே நீர்மட்டம் உசந்துக்கும்… இனி வெள்ளாமையை பாரு… எப்படி நடக்குதுனு… “என்று பெருமைப்பட்டனர்.

ஊர்ப் பெரியவர்கள் சிலர் .,”ஏலேய் முருகா நெனச்சதை சாதிச்சுப்புட்டிங்கல… தரிசா போயிரும் னு நெனச்ச பூமியை செழிக்க வச்சுடுவீங்கடா… அதுப்பாருயா இத்தனை நாளும் மழை பேஞ்சது,  தண்ணீ ஒரு விரல் அளவு கூட ஓடலை, இன்னைக்கு பாருயா அடிச்சு ஓடுது… இந்த செம்மண் இத்தனை நாளும் அமுங்கி கெடந்தது இன்னைக்கு தண்ணி ஓடவும் வெளிய வந்து நான் செந்நிறபூமி தான் , என் பவுசு அப்படியே தான் இருக்கு னு காமிச்சிடுச்சு… முருகா சாதிச்சுட்டடா “என்றனர் முருகனின் தோள் தட்டி…

“சாதிச்சுட்டேன் இல்ல சித்தப்பு… சாதிச்சுட்டோம் …. இதுக்கு அடித்தளம் யாரு தெரியுமா… நம்ம கருப்பசாமி சித்தப்பா மவன் சிவசக்தியும் , அவங்க கூட்டாளி ரெண்டு பேர் இதோ வெற்றியும் , வீரமலையும் தான்… அப்புறம் நம்ம ஊரு வாண்டுப்பயலுவ…. நம்ம பொம்பளை பிள்ளைக.. மத்தப் பயலுகளும் தான் காரணம்… அவங்க இல்லாட்டி இதெல்லாம் இல்லை… வெட்டிப்பயலுக னு சொன்னீகளே… இப்ப அந்த வெட்டிப்பயலுக வெகுண்டெழுந்து செஞ்ச காரியத்தால தான் ஊர் செழிக்க போவுது… தரிசான பூமி செந்நிறபூமியா சிவந்து நிற்க போகுது… “என்று பெருமை பேசினார் முருகன்.

“அது உண்மை தான் பா இந்த சிவா பயலை நானே திட்டி இருக்கேன்… வெட்டியா சுத்துறியே டா ன்னு… சாதிச்சுப்புட்டான் பய….”. என்றார்.

மலருக்கு கண்களில் கண்ணீர் அருவியாய் வழிய, சிவா அழைக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள்.

சங்கரன் தண்ணீர் ஓடுவதைப் பார்த்து விட்டு அமைதியாக நின்றார்.

சூரியா கைபேசியை வைத்திருக்க தனஞ்செயன் அழைத்தான்.

“மாமா சிவா மாமா எங்க அவரை பேச சொல்லு… சீக்கிரம் சொல்லு”என்றாள் சூர்யா.

“எதுக்குடி பறக்குற அவன் இன்னும் வரலை… ஹேய் ஒரு நிமிஷம் இந்தா இதோ வந்துட்டான் …டேய் வாடா உன் சோளத்தட்டை ஏதோ சொல்லணுமாம் “என்று கிண்டல் செய்ய சிவா.,” சொல்லுங்க அண்ணியாரே !!”என்று அலைபேசியில் பேசினான்.

“மாமா… அண்ணினு சொல்லாத நல்லாவே இல்ல… “என்றவள் .,”வீடியோகால் பண்ணுங்க… இருட்டா தான் இருக்கு உங்க கிட்ட ஒண்ணு காட்டணும்”என்றாள் அவசரமாக.

“மாமனுகளை பார்க்க அவ்வளவு அவசரமா…?? அப்படி என்ன காட்டப் போற…?? உங்க அக்கா ஏதாவது வித்தியாசமா பண்ணிட்டாளோ”என்று வம்பு செய்தவன்,  இணைப்பை துண்டித்து விட்டு காணொளி அழைப்பில் வந்தான்.

“அக்கா நீ பேசு.. நீ பேசு”என்று கொடுக்க… மலர் கேமரா முன்பு வந்ததும் முகத்தை திருப்பி கொண்டான் சிவா.

“மாமா திரும்பி பாரு… “என்று சூர்யா சத்தமிட அவனோ “பனி ஃபோன் ல பேசிக்கலாம் “என்றான் மெதுவாக.

“சக்தி என்னைப் பாரு…. “என்க

அவனோ.,”வேணாம் மா”என்றான்.

“சரி இதைப் பாரு…. அமைதியாக கேளு ஏதாவது சத்தம் கேட்டா சொல்லு “என்று கைபேசியை திருப்பினாள்.

ஒரு நிமிடம் அனைவரும் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை தண்ணீரில் அடிக்க அது பளபளத்தது.

தண்ணீர் ஓடும் சத்தமும் கேட்க ஒரு நிமிடம் உறைந்துப் போனான் சிவா.

“தம்பி தண்ணி வந்திடுச்சு டா…. நீ சாதிச்சுட்ட டா “என்று சத்தமிட்டார் முருகன் சந்தோஷக் களிப்பில்.

சிவாவிற்கு கண்ணில் நீர் நிற்காமல் வர சிரிப்புடன் கண்ணீர் சிந்தினான்.

“பனி நம்ம ஊரு நம்ம…. நம்ம… ஊர்ல தண்ணி….” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை…. 
அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் மாப்பிள்ளை, அண்ணா ,பங்கு, பங்காளி, மச்சான், மாமா, என்று ஒரே குரலில் கத்தி “சாதிச்சுட்டோம் டா…. “என்றனர்.

சிவா, தினகரன் ,தனஞ்செயன் மூவரும் அங்கே மகிழ்வாய் கத்தினர்.
சந்தோஷ ஆர்ப்பரிப்புகள் முடியவும் சித்திரை செல்வி வாங்கி சிறிது நேரம் பேசினார். 

மலரோ சிவாவிடம் பேச துடித்து கொண்டிருந்தாள் .

அவனுக்கும் அங்கே அதே நிலை தான்…. “எப்போதடா மலரிடம் பேசுவோம் “என்று நினைத்திருக்கும் போதே மலரிடம் கைபேசியை கொடுத்தனர்.

எடுத்துக் கொண்டு அவசரமாக வீட்டிற்கு ஓடினாள்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு தன் காதல் மனைவியின் முகம் பார்த்தவன்,  கண்ணீரில் தத்தளிக்க மலரோ உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாள்.

“நீ அழுத்தக்காரன் டா…” என்று சொல்ல அவனோ .,”என் பொண்டாட்டி கத்து தந்தது தான்”என்று சிரித்தான் கண்களில் நீர் ததும்ப .

“எப்போ வருவ…??? உன் கூட இருக்கனும்… ??”என்று காதலாக கூறியவள் அருகில் இருந்திருந்தால் எண்ணற்ற இதழ் ஒற்றல்களை தந்திருப்பான்… இணையவழி காதலோ கண்களால் தந்து கொண்டிருந்தது இதழ் ஒற்றல்களை…

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஒரு வாரத்திற்கு பிறகு மலர் வழக்கம் போல வயலுக்கு கிளம்பிட சூர்யா கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள்.

“அத்தை… நான் மாட்டை பிடிச்சுட்டு போறேன் நீங்க மெதுவா வாங்க…!! அப்புறம் மாமா வந்தா டிபன் பாக்ஸ் ல இஞ்சி துவையல் இருக்கு மறந்துடாம எடுத்து வச்சு சாப்பாடு போடுங்க….” என்றவள் தனது கைபேசியையும் செண்பகவல்லி ஆச்சிக்கு சிறிது இஞ்சி துவையலையும் கம்மஞ்சோற்றையும் எடுத்து கொண்டு கிளம்பினாள்.

வேலுத்தம்பி வேகமாக.,”ஆயா மலரு…. அந்த பொட்டிக் கடைக்காரன் கிட்ட சொல்லி பட்டணம் பொடி மட்டும் கொடுத்து விட சொல்லு,  காலையில இருந்து மூக்கு நமநமங்குது”என்றார்.

“சரி தாத்தா…”. என்று விட்டு கிளம்பினாள்.

போகும் வழியிலேயே செண்பகவல்லியிடம் தூக்குவாளியை கொடுத்து விட்டு மரகதத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு பின்னர் வயலுக்கு செல்ல சங்கரன் வழியில் எதிர்பட்டார். மனிதர் சற்று உடல் சோர்ந்து தளர்ந்திருந்தார். 

மலரைப் பார்த்து விட்டு பேச எத்தனிக்க,  அவளோ அவரை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.

இத்தனை வருடங்களாக அவர் கண்டு கொள்ளாமல் இருந்தார். இப்போது மலர் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.

செங்காந்தள் மலர் இதழ் அவிழும் நிலையில் இருந்தது. அங்கே பன்னீர் ரோஜாவின் மணம் கமழ ,அதன் நிறமோ பார்ப்போர் கண்களை பறித்தது. 

மாட்டை பிடித்துக் கொண்டு சென்றவள் புற்கள் வளர்ந்த இடத்தில் கட்டி விட்டு பருத்தி காட்டிற்குள் சென்றாள்.

‘கள்ளிபூச்சி எதுவும் இருக்கிறதா…!!’ என்று ஆராய்ந்து விட்டு,  ‘மருந்து தெளிக்கலாமா இல்லை இயற்கை உரம் எதுவும் வைக்கலாமா…??’ என்ற சிந்தனையுடன் உழன்று கொண்டிருந்தவள் எதிரே நின்றிருந்தான் சிவா.

பிரமை என்றெண்ணியவள் அவனை கடந்து போக…. புன்னகையுடன் நின்றவனோ .,”இந்தா டீச்சரம்மா நான் உன்னை அப்படி லவ் பண்றேன் நீ எனக்கு என்ன பதில் சொல்லப் போற ??”என்ற பழைய உரையாடலை நினைவுபடுத்திட , திடுமென திரும்பியவள் மகிழ்ச்சியில் பேச்சற்று போனாள்.

அவன் தான் ,அவனே தான்…. தன் காதல் மனைவியை காண அவளிடம் சொல்லாமலேயே ஓடி வந்து இருக்கிறான். 

உதடுகடித்து கண்ணீர் சிந்தியவள் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் இடம் ,பொருள், ஏவல் எதுவும் பாராமல்…. தன்னவனின் முகத்தை முத்தங்களால் நிறைத்து கொண்டிருக்க நாணம் கொண்ட பருத்தி பூக்களோ செங்காந்தள் மலரின் சிவப்பை தன்னுள் தத்தெடுத்து கொண்டது பிரிந்த தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு…  “டீச்சர் இது பப்ளிக் ப்ளேஸ் வீட்டுக்கு போயிடலாமா… ??”
கிறக்கமாய் கேட்டான் கள்வனவன்.

கண்களை துடைத்து கொண்டு அவன் கழுத்து வளைவில் கை போட்டு கட்டிக் கொண்டவள்.,” வரேன் னு சொல்லவே இல்லை…. லீவு கிடைக்கலை னு சொன்ன… “அடுக்கடுக்காக கேள்வி கேட்க

அவனோ சிரித்தபடியே “ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம் னு ஆசையில “என்று இழுத்தவன் அவளது கையை எடுத்து விட்டு அவளின் தோள் மீது கையைப் போட்டபடி நடந்தான்.

“என்ன டீச்சர் பாப்பா வயலை தலைகீழா மாத்தி வச்சிருக்கீங்க… ஹேய் இது நாம வச்ச செடி தானே பூ பூக்க போகுது போல…. “என்று பேசும் போதே வண்டு வந்து ரீங்காரமிட்டு சுற்ற செங்காந்தள் மலர் மலர்ந்தது.  இருவரும் அர்த்தமாய் சிரித்து கொண்டனர்.

வீட்டிலோ தனஞ்செயன் அறைக்குள் இருக்க சூரியா கல்லூரிக்கு சென்று இருந்தவள் பாதி வழியிலேயே மீண்டும் வீடு திரும்பி விட்டாள்.

தனஞ்செயன் வீடு வந்த செய்தியறிந்து…  அறைக்குள் நுழைந்தவள் மகிழ்வாய் கண்ணீர் சிந்த …. கண்ணீரை துடைத்து விட்டவன்.,”படிப்பாளி ஏன் இப்படி வந்ததும் அழுக…. ?? நிஜமாகவே வந்துட்டேன் கண்ணை துடைச்சுக்க இன்னும் ஒரு மாதம் இங்க தான்…. “என்றவன் இதமாய் அணைத்துக் கொண்டான் தனஞ்செயன்.

“போ மாமா வரேன் னு சொல்லவே இல்லை என்னை ஏமாத்திட்ட “என்று சிணுங்கினாள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வெற்றியும் , வீரமலையும்,  நண்பன் வந்த செய்தி அறிந்து வீட்டிற்கு வர சிவாவும் மலருடன் இணைந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

“டேய் மாப்ள… வாடா… எப்படி டா இருக்க… “என நண்பர்கள் அணைத்துக் கொள்ள,  மூவரும் இணைந்து பேச ஆரம்பித்து விட்டனர்.

சித்திரை செல்வியோ மகன்கள் இருவரும் வந்த மகிழ்ச்சியில் கணவனை வேலை வாங்கி கொண்டிருந்தார்.

“மணப்பாறைக்கு போய் நல்ல மீனா பார்த்து வாங்கியாங்க…. அப்புறம் வெடைக் கோழி வீட்டுல இருக்கு பிடிக்கிறேன்….  அந்த முனியப்பன் கடையில நல்ல இளம் ஆட்டுக்கறியா பார்த்து வாங்கிக்கங்க….” என்று பொரிந்து கொண்டிருக்க சிவா சிரிப்புடன்… “செல்வி நான் ஒரு மாசம் இங்க தான் இருக்கப் போறேன் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொண்ணா சமைச்சு சாப்பிட்டுக்கலாம்…. இப்ப அந்த சாம்பாரையும் வத்தல் குழம்பையும் கண்ணுல காட்டு அங்க வெறும் அசைவமா பார்த்து சாப்பிட்டு திகட்டிடுச்சு”என்றான்.

அதற்கும் கருப்பசாமி தான் சிக்கினார்.

“அப்புறம் என்ன தம்பியே சொல்லிட்டான் நீங்க போய் எல்லா காயும் வாங்கிட்டு வந்திடுங்க அப்படியே ஆப்பிள் ஆரஞ்சுனு எல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க ஏன்த்தா மலரு… உனக்கு இந்த ஜூஸெல்லாம் போடத் தெரியுமில்ல… “என்று கேட்க

அவளோ சிரிப்புடன்”ம்ம்ம் “என்று தலையாட்டினாள்.

கருப்பசாமியோ மலரிடம் ., “மருமவளே பேசாம நானும் வெளிநாட்டுக்கு போயிடலாம் னு நினைக்கிறேன்” என்றார்.

“ஏன் மாமா… ??”

“அது வேற ஒண்ணும் இல்ல மா அப்பவாவது உன் மாமியாரு எனக்கு பார்த்து பார்த்து வித விதமா ஆக்கி போடுவா இல்ல அதுக்கு தான் சொன்னேன்”என்றதும் அனைவரும் சிரித்து விட்டனர்.

“நெனச்சுக்கிட்டாளாம் கெளவி வயசு மாப்ளைக்கு… போங்க போங்க உங்களுக்கு நான் ஆக்கி போட்டதே இல்லையாக்கும் போங்க போய் காயெல்லாம் வாங்கிட்டு வாங்க “என்று முறைப்புடன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சென்றார்.

தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும் …
வெற்றியும் வீரமலையும் சிவாவிடம் பேச ஆரம்பித்தவர்கள் பேசிக் கொண்டே இருக்க மலர் சமையலை கவனித்தாள்.

“டேய் விடுங்கடா நான் போய் என் பொண்டாட்டி கிட்ட நாலு வார்த்தை பேசனும்… அச்சோ இப்ப தானே பாசத்தை ஓவரா பொழியுறானுக… டேய் அவ முகத்தைப் பார்த்து முழுசா ரெண்டு வருஷத்திற்கு மேல ஆகுது டா “என மனதினுள் புலம்பியவன் வெளியே அப்பாவியாய் சிரித்துக் கொண்டான்.

“மாப்ள வாடா அப்படியே ஆத்துவாரியை போய் பார்த்துட்டு வருவோம் ‘என வெற்றி அழைக்க சிவாவிற்கு பொறுமையே பறந்தது. கோபத்தை அவர்களிடம் காட்ட முடியாதே… வேறு வழி ….. அவர்களோடு கிளம்பி விட்டான்.

“மச்சான் ஒரு நிமிஷம் போயிட்டு இந்தா வந்திடுறேன்” என சமையலறைக்குள் ஓடியவன் அங்கே சமைத்து கொண்டிருந்த மலரை பின்னிருந்து அணைத்து விட்டு காதோரம் கிசுகிசுத்தான் .

“பனி மா… போயிட்டு உடனே வந்திடுறேன்… விட மாட்டேங்கிறானுக… சீக்கிரம் ஃப்ரீ ஆகிடு…” என்றவன் அவளது இடை வளைத்து இதழை நெருங்கியவனை வீரமலை அழைத்தான்.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ இவனுகளோட ஒரு ரொமான்ஸ் பண்ண விடுறானுகளா ….”என்று சலித்தவனை பார்த்து நகைத்தவள்.,” போயிட்டு வா… சூர்யா வர்றா போ… ப்ப்ச்… போயிட்டு வான்னு சொன்னேன்”என்று வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்தாள்.

‘எங்கே சூர்யாவா வருவாள்…?? அவளால் தான் தனஞ்செயன் கைப்பிடியில் இருந்து விலக முடியவில்லையே … அவனுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது நம் நாயகனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை பாவம்… நண்பர்களுடன் வெளியே சென்றவன் பின் மதிய உணவிற்கு தான் வீட்டிற்கு வந்தான்.

…… தொடரும்