திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர். 

தனஞ்செயன் சிரிப்புடன்… “டேய் என்னடா காலையில தான் சொன்னேன் நீ தான் டா மாப்ள மாதிரி இருக்கிறன்னு , நெசமாவே மாப்பிள்ளையா வந்து நிற்கிற… இப்ப நிம்மதியா..? “என்று கேட்க

சிவா .,”பரம திருப்தி டா அண்ணா…”என்றான் தலையை இடவலமாக ஆட்டி சிரித்தபடியே.

மலருக்கு திருமணம் முடிந்து விட்ட மகிழ்ச்சி இருந்தாலும், பெற்றவர் இப்படி ஏதோ மூன்றாவது மனுசியைப் போல நடத்தியது அவளுக்கு வலியை தந்திருந்தது.

திருமணம் முடிந்து இரு தம்பதிகளையும் வீட்டிற்கு அழைத்து செல்ல பாக்யாவும் இன்னும் இரண்டு பெண்கள் இணைந்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினர்.

சித்திரைசெல்வி வேகமாக பால் பழம் எல்லாம் எடுத்துக் கொண்டு வர “செல்வி!, சாமி ரூம்ல விளக்கு ஏத்திட்டு அப்புறம் இதெல்லாம் குடு. “என செண்பகவல்லி சொல்லவும் இரு மருமகள்களையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார் செல்வி.

“அம்மாடி ஆளுக்கு ஒரு விளக்கை ஏத்திட்டு எல்லாம் நல்லபடியாக நடக்கணும் னு வேண்டிக்கங்க… “என்று விட்டு வெளியே வந்தார்.

மணமக்களுக்கு பால் பழம் கொடுக்க வெற்றி வம்பு செய்து கொண்டிருந்தான்.

“ஏ மாப்ள இனிமே டீச்சர் சொல்றதை கேட்டு நடந்துக்க… இல்ல குச்சியை எடுத்து வெளுத்துடுவாங்க டீச்சரம்மா… யம்மா சூரியா நீயும் கொஞ்சம் உங்க அக்கா கிட்ட இருந்து கத்துக்க.அப்ப தான் தனஞ்செயனை சமாளிக்க முடியும் “என்றான்.

“டேய் அவன் குச்சி எடுக்காமலேயே டீச்சரம்மா பேச்சை தான் டா கேட்குறான் நீ வேற “என்று வீரமலை சிரித்தான்.

மலர் ஹாஸ்யமாக புன்னகை சிந்திட, அவளின் கை சிவாவின் கைக்குள் இருந்தது.

**********

இங்கே

சங்கரபாண்டி திருமணம் முடிந்ததும் வடிவரசியை அழைத்துக் கொண்டு உடனே தூத்துக்குடி கிளம்பி விட்டான். 

எங்கே மலர் சொன்னது போல காவல் அதிகாரியை அழைத்து வந்திடுவாளோ என்ற பயமும், அவள் பிடித்த பிடியில் தொண்டை கட்டிக் கொள்ள மருத்துவரை அணுகிட வேண்டும் என்று வேகமாக கிளம்பி விட்டான்.

வடிவரசிக்கு பெருமை பிடிபடவில்லை. ஏசி காரில் பயணித்தவளுக்கு மனம் சிறகின்றி பறந்தது.

இதுவே சிவாவையோ இல்லை தனஞ்செயனையோ திருமணம் செய்திருந்தால் வெறும் இரு சக்கர வாகனத்தோடு தன் பயணம் முடிந்திருக்கும்’ என நினைத்தவள் தானாக தனக்கு அதிர்ஷ்டம் வாய்த்ததாக நினைத்து மகிழ்ந்து கொண்டாள்.

கூட வந்த இரு பெண்களுக்கும் தான் வடிவரசியை நினைத்து கவலையாக இருந்தது.

பாவம் சிறு பெண் இவனை எப்படி சமாளிக்க போகிறாளோ என்று… ஏனெனில் சங்கரபாண்டி பற்றி நன்றாக அறிந்து கொண்டவர்கள் அவர்கள். அதனாலேயே இந்த கவலை.. 

“மாமோய் வண்டியை வெரட்டி ஓட்டு அந்த சண்டிராணி கழுத்தை பிடிச்சதுல தொண்டை எல்லாம் கவ்வுது… தலையை வேற கிறுகிறுக்குது… எல்லாம் உங்க அப்பனால வந்தது ல…” என்று வடிவரசியை இடிக்க… அவளோ “எங்க அப்பாவால தான் இன்னைக்கு என்னை கட்டி இருக்கீங்க அந்த நெனப்பு இருக்கட்டும் “என்றாள் அவள் பதிலுக்கு

இனி வடிவரசி வாழ்வை தானே கவனித்து கொள்வாள் சங்கரபாண்டியுடன் அவளது வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்
.

*

******

இரவுப் பொழுது ஆனதும்… சூரியாவையும் மலரையும் தயார் செய்ய தனஞ்செயன் சிவா இருவரும் அவரவர் அறையில் இருந்தனர்.

“சூரியா, மலரு ரெண்டு பேரும் நல்ல நேரம் முடியறதுக்குள்ள ரூமுக்கு போங்க.அத்த ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணி அனுப்புங்க.யம்மா எல்லோரும் தட்டு வாங்கிக்கங்க… அப்புறம் மருமவளுகளா! ரெண்டு பேரும் வெள்ளென எழுந்துக்கணும்”என்று விட்டு அனுப்பி வைத்தார் சித்திரை செல்வி.

தனஞ்செயன் சூரியகாந்தியின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க நாணம் கொண்ட பெண்ணவளோ சிரம் தாழ்த்தி உள்ளே நுழைந்தாள். 

“சும்மாவே வெட்கப்படுவா இப்ப கேட்கவே வேண்டாம்… மனசைக் கட்டுப்படுத்திக்கிட்டு பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிச்சிடுடா தனா… அவ முகத்தை பார்த்தா அப்புறம் அவ்வளவு தான்.. “என நினைத்து கொண்டு சூர்யாவை அழைத்து அமர வைத்தான்.

“ஹான் சூர்யா உன் கிட்ட ஒண்ணு சொல்லவா ??”

“சொல்லுங்க மாமா”என பாலை டேபிளில் வைத்தவள் அவன் காலில் விழப் போக அவனோ “ஹேய் இதெல்லாம் வேண்டாம் உட்காரு” என்று தன் அருகில் அமர்த்தி., “சூர்யா அது வந்து.,நான் ஊருக்கு போயிட்டு வந்திடுறேன் அதுக்கப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம் நீயும் படிச்சு முடி சரியா? நான் சொல்றது உனக்கு புரியுதா? “என்றான் அவளின் மனநிலையை அறியும் நோக்கில்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க னு எனக்கு புரியுது மாமா. நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க மாமா.”என்றாள் தலை குனிந்து கொண்டே.

“சரி நீ தூங்கு நான் விடிய கருக்கல்ல வரேன் பின்னாடி பக்கமா தோட்டத்துக்கு போயிடுறேன் சரியா?”என்று எழுந்து கொள்ள .,

“மாமா இதை மட்டும் குடிச்சிட்டு போங்க”என டம்ளரை கொடுக்க அதை வாங்கி குடித்தவன்”மிச்சத்தை நீ குடிச்சிட்டு படுத்துக்க…  தனியா படுத்துப்ப தானே…? “என்றான்.

“அதெல்லாம் படுத்துப்பேன் மாமா நீங்க கிளம்புங்க எனக்கு படிக்க வேண்டியது இருக்கு… “என தன் பெட்டியில் இருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு தனஞ்செயனை அனுப்பி விட்டு கதவை சத்தமின்றி சாத்தினாள்.

இங்கே சிவாவின் அறையிலோ அவன் இல்லை வெறுமையாக இருக்கவும் மலர் சுற்றி முற்றி பார்த்திட அவளது கைபேசி அழைத்தது.

சிவா தான் அழைத்திருந்தான். 

“என்ன டீச்சரம்மா மாமனைத் தேடுறீங்களோ???”என்றான் நகைப்புடன்.

“இந்த நேரத்தில் எங்க போன…??” என்க

“தோப்பு வீட்ல இருக்கேன். நான் தான் சொன்னேனே வீடு வாங்கி தந்த பிறகு தான் நமக்குள்ள எல்லாம்.. நான் அங்க இருந்தா சும்மா இருக்க மாட்டேன் அதான் வந்துட்டேன்”என்றான்.

“ம்ம்ம் ஆனாலும் அநியாயத்துக்கு என் பேச்சை கேட்கிறடா “என்றாள்.

“டா போடுறிங்களா டீச்சர்… “

“ஆமா அப்படி தான்.. நீ வா சக்தி உன் கிட்ட பேசனும்”என்றாள் சற்று தாழ்ந்த குரலில்.

“ஹஸ்கி வாய்சில் பேசினா என் சபதம் என்ன ஆகறது டீச்சர்…?மாமா மனசை கலைக்காம போய் தூங்கி ரெஸ்ட் எடுங்க போங்க டீச்சர், அநியாயத்துக்கு இன்னைக்கு ஹெவி ஃபைட் சீன் வேற உங்களுக்கு. காஞ்சனா ரேஞ்சுக்கு இன்னைக்கு அந்த சங்கரபாண்டியை தூக்கி நட்டமா இல்ல நிறுத்தி இருந்தீங்க”என்று கிண்டல் செய்தான்.

“நீ வர மாட்டியா… ??”பிடித்த பிடியில் நின்றாள் மலர்.

தன் உறுதி தளர்வதை உணர்ந்தவன்.,”பனி மா ப்ளீஸ் நான் அங்க வந்தா சரி வராது சொன்னா கேளு டா” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான் சிவா.

“சரி போ “என்று இணைப்பை துண்டித்து விட சிரித்தபடியே தோப்பு வீட்டை திறந்தான் . தனஞ்செயனும் பின்னாடியே வந்து சேர்ந்தவன் வீட்டில் மின்விளக்கு எரிவதை கண்டு,’ இந்த நேரத்தில் யார் வந்திருப்பாங்க?’என குழப்பத்துடன் உள்ளே சென்றான். 

“டேய் நீ இங்கே என்ன டா பண்ற… ??”தம்பியை கேட்க

அவனோ.,”சார் என்ன பண்ண வந்தீங்க அதை தான் நானும் பண்ண வந்தேன்…!!. “என்றான் நக்கலாக.

“ப்ப்ச் இன்னும் ரெண்டு நாளில் ஊருக்கு கிளம்பிடுவேன் அதுக்குள்ள அந்த புள்ள மனசை கலைக்க வேணாமுனு வந்துட்டேன் டா இதை வீட்ல சொன்னா கேட்க மாட்டாங்க அதான் சூரியா கிட்ட சொல்லிட்டு வந்தேன் ஆமா நீ ஏன் வந்த ?”என்றான் பாயை விரித்தபடி.

அன்று மலர் பேசியதை கூறியவன் “அவளுக்கு அந்த வீடு தான் டா உசுரு…. அதை குடுத்தா தான் அவ சந்தோஷமா இருப்பா. இத்தனை வருஷமும் நிம்மதியா தூங்கினதே இல்ல இங்க வந்து தான் நிம்மதியா இருக்கேன்னு சொன்னா டா… அந்த நிம்மதியையாவது நான் தரணுமே அதுக்காக தான். வீட்டை வாங்கித் தந்துட்டு தான் மத்த வேலை எல்லாம்…”என்றான் தலையணையை போட்டு படுத்தவன்.

“உன்னை மாதிரி இருப்பேனான்னு தெரியலடா ஆனா உன்னில் பாதியாவது நான் சூரியா கிட்ட இருக்கணும் டா. எனக்கே ஆச்சரியமாக இருக்கு டா நீ இப்படி எல்லாம் பேசுவியா மாறுவியா ன்னு.காதல் ஒரு மனுசனை எப்படி வேண்டுமானாலும் மாத்திடுது இல்ல… பாரு… வெட்டியா”என்று தனஞ்செயன் சொல்லும் போதே தலையணையால் அடித்தவன் “போதும் போடா ரொம்ப ஓட்டாத…. ஏதோ வெளிநாடு எல்லாம் போய் சம்பாதிச்சுட்ட, அதனால இந்த பகுமானம் இல்லாட்டி நீயும் அந்த ஆலமரத்தின் அடியில் ஒரு வெட்டிப்பயலா தான் டி உட்கார்ந்து இருக்கணும். வெரசா தூங்கு.விடியல்ல எழுந்து போனா தான் நம்ம செல்வி கண்ணுல சிக்காம இருப்போம். இல்ல அவ்வளவு தான் நாம மாட்டுறதும் இல்லாம பாவம் மலரையும், சூரியாவையும் சேர்த்து மாட்டி விட்டுடுவோம் தூங்குடா “என்றான் சிவா.

“அலாரம் ஒரு மூணு மணிக்கா வைடா…. “என்று விட்டு படுத்த சகோதரர்கள் தங்கள் மனம் விரும்பிய பெண்களை திருமணம் முடித்த நிம்மதியில் உறங்கிப் போயினர்.

*********

இங்கே மலரோ சிவாவின் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அறையை அதிகம் பயன்படுத்தாதது போல காணப்பட்டது அவன் தான் எந்நேரமும் வெளியே உறங்கிடுவானே எங்கிருந்து அறையை பயன்படுத்த… சுவரில் வித விதமாக அவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தது. 

கண்களில் கூலிங் கிளாஸ் சகிதம் சுற்றுலா சென்ற இடத்தில் எல்லாம் புகைப்படம் எடுத்திருந்தான். அவன் படித்த புத்தகங்கள் சில நோட்டுகள் பயன்படுத்திய பேனா பென்சில் எல்லாம் இருக்க ஒரு புத்தகத்தை எடுத்து புரட்ட அதில் இருந்து விழுந்தது மலரின் புகைப்படம். திருவிழாவில் மொளைப்பாரி தூக்கி செல்லும் போது எடுத்த புகைப்படம்.

“இதை எங்கிருந்து எடுத்திருப்பான் ?”என்று யோசிக்க சூர்யா ஒரு நாள் சொன்னது நினைவு வந்தது.

சிவா தினகரனை பார்க்க வந்து விட்டு சென்றான் என்று.அதன் பிறகு தான் அவளின் புகைப்படம் வீட்டில் இல்லை என்று நினைவு வந்தது.

“ஃப்ராடு பையன் ஃபோட்டோவை சுடுறதுக்காகவே வீட்டுக்கு வந்திருக்கான் “என சிரித்து விட்டு போய் படுத்து விட்டாள்.

மூன்று மணிக்கு அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு வந்து தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டனர்.

“அம்மணிக்கு தூக்கத்தை பார்த்தியா…?தூங்கும் போது மூஞ்சியைப் பாரு… இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் விளம்பரத்தில வர்ற குழந்தையாட்டம்… “என சிரித்து கொண்டே கீழே தலையணையை போட்டு படுத்து கொண்டான் சிவா.

“மலரு விடிஞ்சு போச்சு எழுந்திருமா “என்று செல்வியின் குரல் கேட்க கண்களை கசக்கி எழுந்து கொள்ள கீழே படுத்திருந்த சிவா கண்ணில் பட்டான். 

‘எப்ப வந்து படுத்திருப்பான்… ??’என நினைத்து கொண்டு அவனருகில் சென்று அமர்ந்தாள்.

“சக்தி எழுந்து மேல படு… விடிஞ்சிடுச்சு… அண்ணி யாராவது வந்து உள்ள பார்ப்பாங்க”என்றாள்.

திடுமென எழுந்தவன் “பனி அதுக்குள்ளயா மணி ஆயிடுச்சு ?”என கேட்டபடி எழுந்து விட்டான்.

“ஆமா மணி நாலரை..நீ தூங்கு நான் குளிச்சிட்டு வரேன்…”என்றவள் தனது உடைமைகளை எடுத்து கொண்டு பின் பக்கமாக சென்றாள்.

“காலையிலேயே இவ்வளவு நெருக்கமாக வந்து உட்கார்ந்தா நான் எப்படி சமாளிக்க.. இனி எங்கிருந்து தூங்க? இதுக்காகவே சீக்கிரம் ஒரு வேலையை தேடணும் “என புலம்பினான் கட்டிலில் அமர்ந்து இருந்தவன்.

********

இங்கே தனஞ்செயனோ உள்ளே நுழைந்ததும் படித்துக் கொண்டிருந்த சூரியா தான் தென்பட்டாள்.

“ஹேய் நீ தூங்கலையா??”என்று கேட்க

“இப்ப தான் மாமா எழுந்தேன்… ஹாஸ்டலில் எழுந்து பழக்கம் ஆகிடுச்சு… பரிட்சை நெருங்குது இல்ல அதான் படிக்க ஆரம்பிச்சுட்டேன்”என்றாள்.

“சரி சரி படி நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்”என்று படுத்து விட்டான்.

விடிந்ததும் எழுந்தவர்கள் சித்திரை செல்விக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருக்க, வெளியே சங்கரன் வீட்டு வேலையாள் மருது சீர்வரிசை சாமான்கள் கொண்டு வந்திருந்தான்.