வடிவரசி வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியிருந்தாள். 

இதை அறிந்த முத்துலெட்சுமிக்கோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

“அச்சோ அவ அப்பா வந்தா என்ன பதில் சொல்லுவேன்” என புலம்பியபடி  வேலை செய்து கொண்டிருந்த மருதுவை அழைக்கலாம் என்று எண்ணும் போதே முத்துலெட்சுமியின் கைபேசி அலறியது. 

“சொல்லுங்க மதனி”என்று சுரத்தேயின்றி பேச எதிர் முனையிலோ .,”ஏன் முத்து உன் மக என்ன வண்டியில வராம பஸ்ஸுல ஏறுறா , வண்டி ரிப்பேரா? ,எதுவும் விஷேஷத்துக்குப் போறாளா…? இவ்வளவு நகை போட்டுக்கிட்டு அதுவும் தனியா… ஒரு காரு கீரு எடுத்து அனுப்ப கூடாது “என்று கேட்க முத்துலெட்சுமிக்கு போன உயிர் திரும்பி வந்தது. 

“மதனி… அது தான் பாருங்க நான் சொல்ல சொல்ல கேட்காம வந்துட்டா நீங்க என்ன பண்றீங்க அவளை ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டே நிக்க வைங்க , இந்தா காரை எடுத்துக்கிட்டு வந்திடுறேன்… நான் வர்றேன்னு சொன்னா கோபத்துல போயிருவா “என்று நைச்சியமாக பேசி அந்த பெண்மணியை வடிவரசியை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு மருதுவிடம் அவசரமாக காரை வரச் சொல்லும்படி கூற, பத்து நிமிடத்தில் கார் வந்து விட்டது. 

மணப்பாறைக்கு விரைந்து சென்றார் முத்துலெட்சுமி. 

சொன்னது போலவே அந்தப் பெண் வடிவரசியை இழுத்து பிடித்து பேசிக் கொண்டிருந்தாள். 

வடிவரசிக்கும் வேறு வழி இல்லை ஏனெனில் அவள் எதிர்பார்த்தவன் இன்னும் வரவில்லை அதனாலேயே தனியாக நிற்க பயந்து அந்தப் பெண்ணுடன் பேசியபடி நின்றிருந்தாள். 

முத்துலெட்சுமி வந்து நிற்கவும் வடிவரசியின் முகம் பேயறைந்தாற் போல ஆகி விட்டது. 

“வா வா முத்து… சரி நீ புள்ளையை பத்திரமாக அனுப்பிட்டு வீட்டுக்கு வா. எங்க வீட்டுக்காரர் வந்திருப்பாரு உனக்காக தான் இம்புட்டு நேரம் நின்னேன் “என்று கூறி விட்டு அந்தப் பெண் கிளம்பி விட்டாள். 

கண்ணில் ரௌத்திரம் தெறிக்க எதிரில் நின்ற தன் மகளை இழுத்து காருக்குள் அமர்த்தி விட்டு டிரைவரை சற்று நேரம் எங்கேயாவது சென்று விட்டு வரும்படி கூறி விட, அவனும் சென்று விட்டான். 

அவன் சென்றதும் வடிவரசியின் முடியை கொத்தாகப் பற்றி “ஏன் டி உனக்கு எவ்வளவு தைரியம்….? நகை பணத்தை எடுத்துக்கிட்டு எவன் கூட ஓடிப் போகப் பார்த்த… ஓடுகாலி நாயே…. எவன் டி அவன்”என்று பல்லை கடித்தபடி கேட்க.,”மம்மி விடு வலிக்குது மம்மி. …”என்று சிணுங்கியவளை, ஓங்கி விட்டார் ஒரு அறை. 

கன்னத்தை பிடித்து கொண்டு கோபத்துடன் முத்துலெட்சுமியைப் பார்க்க அவரோ “எவன் கூட ஓடிப் போகப் பார்த்த. ….!! ம்ம்ம்….. வாயைத் திறந்து சொல்லுடி “என்றிட வலியோடு வாயைத் திறந்தாள் வடிவரசி. 

“அவரு அமெரிக்காவுல வேலை பார்க்கிறாரு…. கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னையும் கூட கூட்டிட்டுப் போறேன் னு சொல்லி இருக்காரு… அமெரிக்கா போக நிறைய செலவு ஆகும் இல்ல, அவர் கிட்ட இருக்க பணம் எல்லாம் டாலரா தான் இருக்காம்,  அதனால் தான் நான் பணம் எடுத்துட்டு வரேன் னு சொன்னேன்… நம்ம கிட்ட இருக்க பணம் பத்தலைனா என்ன பண்றதுனு தான் நகையையும் சேர்த்து எடுத்துட்டு வந்துட்டேன்… நீ வேணுன்னா பாரு நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்கு போயி எவ்வளவு பெரிய பணக்காரியா வரேன்னு “என்றாள் கண்கள் மின்ன.

முத்துலெட்சுமிக்கு அய்யோ என்றிருந்தது. 

‘இப்படி பைத்தியக்காரியாய் வளர்ந்து தொலைத்திருக்கிறாளே…!!’ என்ற எரிச்சல் மண்டியது அவருக்கு. 

ஆழ்ந்த பெருமூச்செறிந்தபடி .,”ஆமா அவனை எங்க பார்த்த எப்படி பழக்கம்… ??”என்று கேட்க 

“அவரு நம்ம ஊரு திருவிழாவுக்கு கார்ல வந்திருந்தாரு… பேரு கௌதம்…. அங்கிருந்த பொண்ணுங்கள்ளையே நான் தான் ரொம்ப அழகா இருந்தேனாம்… இவ்வளவு அழகான பொண்ணு போயும் போயும் வில்லேஜ் ல வாழறதான்னு ரொம்ப வருத்தப்பட்டாரு …. எனக்கு நிறைய கிஃப்ட் எல்லாம் தந்திருக்காரு… இதோ இதைப் பாரு இந்த ஃபோன் கூட அவர் வாங்கித் தந்தது தான்”என்று தொடுதிரை கைபேசியை எடுத்து பெருமிதமாக காட்டினாள். 

‘அப்படியே அவளை தூக்கி போட்டு மிதிக்கலாமா…!!’ என்று தோன்றியது முத்துலெட்சுமிக்கு . 

“சரி அவனுக்கு ஃபோன் பண்ணு… அப்புறம் ஏதாவது தப்புதண்டா பண்ணிடலையே… “என்று தாய்க்கே உரிய தவிப்புடன் கேட்க

அவளோ, “அது வந்து அது வந்து “என்று இழுத்தாள். 

“சொல்லித் தொலைடி நாசமாப் போனவளே ஏதாவது தப்பு பண்ணிட்டியா…??”என்று பதைபதைத்தார்.

“அதெல்லாம் இல்ல மா…. நான் கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாம் னு சொல்லிட்டேன்…. அப்புறம் தான் நீ தனா மாமாவை கட்டிக்க சொன்னியே.சரி அவரும் துபாய்க்கு போயிட்டு வந்திருக்காரே னு ஒத்துக்கிட்டேன் அது மட்டுமில்லாமல் தனா மாமாவை அந்த சூரியா லவ் பண்ணினா அவரும் தான். அந்த சூரியாவுக்கு என்னை விட அழகா இருக்கிறதா நெனப்பு.ஸ்கூல் ல படிக்கும் போது பசங்க எல்லாம் அவளையே சுத்தி வருவானுக.அப்ப எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா…?? அதான் அவ ஆசைப்பட்ட மாமாவை நான் கட்டிக்கிட்டு அவளை அழ வைக்க நினைச்சேன்….” என்றாள்.

“ஆனா அவளை அழ வைக்கிறதை விட நான் இன்னும் பெரிய பணக்காரியா ஆகறது தான் முக்கியம் னு அவர் எனக்கு புரிய வச்சாரு,அதனால தான் நான் கிளம்பி வந்துட்டேன் “என்றாள் பெருமையாக 

“படிப்பு தான் ஏறலைனு பார்த்தா அறிவும் மழுங்கிப் போய் தான் இருக்கு….” என்று நொந்து கொண்டவர் தன்னை சமன் செய்து விட்டு .,”சரி அவனுக்கு ஃபோன் பண்ணு “என்றார். 

உடனே அந்த பையனுக்கு அழைத்திட அவனும் இதோ வந்து விட்டேன் என்று தகவல் கூறினான்.  

“இதோப் பாரு டி அவன் வந்ததும் நான் சொன்னது மாதிரி சொல்ற புரியுதா என்று சொல்ல வடிவரசியும் சரி “என்றிட முத்துலெட்சுமி வேகமாக அவளை அழைத்து கொண்டு ஒரு கடைக்கு சென்று விட்டு வெளியே வந்தார். . 

அவனும் வந்து விட வடிவரசி ஒரு ஆட்டோவின் அருகில் நின்றிருந்தாள். 

கழுத்து நிறைய நகைகளுடன் நின்றிருந்த வடிவரசியை கண்டதும் அவன் முகம் மலர்ந்தான்.  

“ஹேய் அரசி ரொம்ப சாரி…. லேட் ஆகிடுச்சு ஆக்ஸுவலி அமெரிக்காவில் இருந்து கால் வந்திடுச்சு,  நம்ம மேரேஜுக்கு அப்புறம் தங்க ஒரு பங்களா ரெடி பண்ண சொல்லி இருந்தேன் அது ரெடி ஆகிடுச்சாம்… அதான் எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க… நாம ரெண்டு நாளில் அமெரிக்கா கிளம்புறோம்”என விழி விரித்து சொன்னவனிடம் ஆச்சரியமாக “நெஜமாவா கௌதம்…?! ஆனா நீ பாஸ்போர்ட் எனக்கு வாங்கணும் னு சொன்னியே !!”என்றாள்.

“அட அதுக்கு தான் உன்னை இன்னைக்கே வர சொன்னேன்… சரி பணம் இருக்கு தானே…?உனக்கு நான் அமெரிக்கா போனதும் உன் பேர்ல எல்லா பணத்தையும் போட்ருவேன்” என்றான்.  

“சரி சரி…இப்ப நாம எங்க போறது… ??”என்று கேட்க.. 

“மன்னார்குடியில் என் ப்ரெண்டு வீடு இருக்கு அங்க போய் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலையில் கல்யாணம் பண்ணிக்கலாம் …அப்புறம் பணம் இந்த நகை எல்லாம் என் கிட்ட கழட்டி குடு,  ட்ரெயின் ல போகும் போது பாதுகாப்பா போகனும் இல்ல…. நான் என் காரை எடுத்துட்டு வந்திருப்பேன் பட் என் பேரண்ட்ஸ் சந்தேகப் படுவாங்க இல்லையா அதான்”என்றான் நைச்சியமாக

வடிவரசியும் நகைகளை கழற்றி பணப்பையில் வைத்து அவனிடம் கொடுத்து விட்டு நிற்க,  அவனோ “நான் போய் ட்ரெயின் டிக்கெட் எடுத்துட்டு வரேன் நீ இங்கேயே வெயிட் பண்ணு “என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

இல்லையில்லை வேக வேகமாக நடந்தான். 

முத்துலெட்சுமி கீழே இறங்கி வந்தவர் “வண்டியில ஏறுடி “என்றார். 

“ம்மா அவர் டிக்கெட் எடுத்துட்டு வரேன் னு சொன்னாரே “என்று கேட்க… நடு ரோட்டில் அடிக்க தயங்கிய முத்துலெட்சுமி… “நீ ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அவனுக்கு கூப்பிடு… “என்று விட்டு யாருக்கோ அழைத்து பேசினார் முத்துலெட்சுமி. 

சற்று நேரத்தில் வடிவரசி கௌதமிற்கு அழைக்க அவனின் கைபேசி எண்ணோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

“ம்மா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் னு வருது மா”என்றாள் பரிதாபமாக . 

“ம்ம்ம் சரி வா வீட்டுக்கு போய் மறுபடியும் பேசுவோம்”என்று பதமாய் பேசி அழைத்து சென்றவர் , வீட்டிற்கு சென்ற அடுத்த நிமிடம் அவளது அறைக்குள் வைத்து அடி பின்னி எடுத்து விட்டார். நல்ல வேளையாக கவரிங் நகை எது தங்கம் எது என்று தெரியாமல் கவரிங்கை எடுத்து போட்டு விட்டு சென்றிருந்தாள். நகைகளை லாக்கரில் வைத்த தன் அறிவை எண்ணி மெச்சிக் கொண்டார் முத்துலட்சுமி. இல்லாவிட்டால் மொத்த நகைகளும் போயிருக்கும்.

முகமெல்லாம் வீங்கிப் போய் கிடந்தவளை நிமிர்த்தி .,”இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தா அவன் உனக்கு பிள்ளையும் குடுத்துட்டு நகை பணம் எல்லாம் எடுத்துக்கிட்டு போயிருப்பான்… நீ ஏதாவது ஊர்ல பைத்தியக்காரி மாதிரி அலைஞ்சிருப்ப… இனிமே வீட்டை விட்டு எங்கேயாவது நகரு , உன்னை பேசிக்கிறேன். இனிமே இது சரி வராது… வர்ற மாப்பிள்ளைக்கு கட்டி வச்சிடுறேன் அப்ப தான் உனக்கு புத்தி வரும்”என்று கத்தி விட்டு வெளியே சென்றார். 

‘நொடிப் பொழுதில் ஒரு ஃப்ராடுகாரனிடம் ஏமாற இருந்தோமே …!!’என்று நொந்தவள் மலர் ஒரு முறை தன்னை எச்சரித்தது நினைவு வந்தது அவளுக்கு. 

மலர் பள்ளி முடிந்து தோழியுடன் பேக்கரிக்கு செல்ல அங்கே வடிவரசியும்,  கௌதமும், ஒரு ஜூஸ் வாங்கி இருவரும் நெருக்கமாக அமர்ந்து குடித்து கொண்டிருந்த காட்சி கண்ணில் பட …’இருவரும் காதலிப்பார்கள் போல ‘என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டாள் மலர். 

ஆனால் கௌதம் ஜூஸை குடித்து முடித்து விட்டு வடிவரசியிடமே பணம் வாங்கியவன் பில்லை கொடுத்து விட்டு அவளை அனுப்பி விட்டு அங்கேயே அமர்ந்தான். சில நிமிடங்களில் இரு ஆண்கள் அங்கே வந்து கௌதமிடம் பேச ஆரம்பித்து விட்டனர். 

பேச்சு வாக்கிலேயே வடிவரசியை ஏமாற்றி பணம் பறிப்பதை பற்றி பேச, மலரோ அதிர்ந்து போனவள் இதைப் பற்றி வடிவரசியிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து அவளிடம் பேச ,அவள் பொறாமையில் பேசுவதாக கூறி மலரை திட்டி அனுப்பி விட்டாள் வடிவரசி.

“நிஜமாகவே நான் ஏமாற இருந்தேனா…? அய்யோ அம்மா மட்டும் வராம இருந்திருந்தால் என் நெலம என்ன ஆகி இருக்கும்”என்று மனம் பதைத்தாள் வடிவரசி.  

அதன் பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை அவள். 

*******

பொன்னுசாமி சூரியாவின் திருமணத்திற்கு சங்கரனை முறையாக அழைக்க வந்திருந்தார். 

என்ன இருந்தாலும் பங்காளி முறை ஆயிற்றே…  

முத்துலெட்சுமியோ,” வர முடியாது “என்று தாம் தூம் என குதித்து கொண்டிருந்தார். சங்கரன் பதவிசாக “நான் திருமணத்திற்கு வருகிறேன்”என்று சம்மதித்தார். 

பொன்னுசாமிக்கே ஆச்சரியமாக இருந்தது. பொன்னரிடமும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார் பொன்னுசாமி.

சங்கரனோ மனதில் வேறொரு திட்டம் ஒன்றை தீட்டியவர் சங்கரபாண்டியிடம் விரைவில் திருமணம் நடத்திடலாம் என்று சொல்ல, அவனும் இது தான் சமயம் என்று சம்மதித்தவன் தன்னோடு நான்கு பேர் தான் வருவார்கள் என்று விட்டான். 

சங்கரனுக்கும் ஆட்கள் நிறைய வேண்டாமென்றே தோன்றியது. சரி என்று சம்மதித்தார்.

மலரை நேர் வழியில் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியாது என்று உணர்ந்தவர் குறுக்கு வழியில் திருமணத்தை நடத்திட எண்ணினார் .

இதை எல்லாம் அறியாத மலரோ தனஞ்செயன், சூரியகாந்தியின் திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருந்தாள். 

இதோ அதோ என்று திருமண நாளும் வந்து விட்டது. 

முதல் நாள் இரவு பெண் அழைப்பிற்காக சூரியா வீட்டிற்கு செல்வி உறவினர் பெண்களை அனுப்பி வைத்திட, அவர்களும் பெண்ணை அழைத்து கொண்டு வந்தனர். 

சிவா சமையல் கூடத்தில் மளிகை சாமான்கள் எல்லாம் இறக்கி கொண்டிருந்தான். 

பெண் வீட்டார் மண்டபத்திற்கு வந்து விட்டதாக வீரமலை கூற “சரிடா”என்று விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

மலர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சிவாவைத் தேடினாள். 

“மலரு.. அவன் சமையல் கூடத்தில் இருக்கான் போ “என போற போக்கில் தகவல் கூறி விட்டு சென்றான் வெற்றி. 

“சமூக சேவகரே என்ன பிஸியா…??” என்று கேட்டுக் கொண்டே காபியை கொடுத்தாள். 

“ம்ம்ம் ஆமா அண்ணன் கல்யாணத்தில் வேலை செஞ்சா தான் நம்ம கல்யாணத்துக்கு அவன் செய்வான் “என்றான்.

“ஓஓஓ அப்படியா… சரி சரி… இது உனக்காக எடுத்தேன்” என ஒரு கவரை நீட்டியவள் ,”காலையில இது தான் போடணும்… “என்றாள். 

“ஹோ ஓஹோ மேடம் மேட்சிங் மேட்சிங்கா எடுத்திருப்பீங்க போல…. காலையில நாம துணைப் பொண்ணு மாப்பிள்ளை… சும்மா மண்டபத்தையே கலக்குறோம்”என்று சொல்ல.,” ம்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும் காலையில் ஒழுங்கா என் முகத்தைப் பார்த்து பேசுற “என்றபடி காபி டம்ளரை வாங்கி கொண்டாள்.

“ம்ம்ம் ம்ம்ம்”என்றதும் அவள் செல்ல திருமண வேலையில் மூழ்கிப் போனான் சிவா.

இங்கே சங்கரன் வீட்டிற்கு பத்து மணிக்கு மேல் வந்திறங்கினான் சங்கரபாண்டி.

“மாப்ள காலையிலேயே உங்களுக்கும் மலருக்கும் கல்யாணம் நம்ம வீட்டிலேயே “என்றார் சங்கரன். 

….. தொடரும்