மலர் சிவா தன் சபதத்தை நிறைவேற்றி வைப்பான் என்று செண்பகவல்லி ஆச்சியிடம் ஆவேசமாக கூற அவரும் புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டார்.
மழை நின்றதும் சிவா வண்டியை வீட்டில் விட்டவன்,அமைதியாக வீட்டிற்குள் செல்ல கருப்பசாமி கடுகடுவென இருந்தார்.
“ஏன் டா எங்கப் போய் சுத்திட்டு இப்படி நனைஞ்சுட்டு வர்ற, அடங்கி வீட்டுல இருக்க தெரியாதா உனக்கு… நான் அய்யலூர் சந்தைக்கு போறேன் னு சொல்லிட்டு தானே போனேன்.. அவன் டிக்கெட்டு வாங்க திருச்சி போயிருக்கான்… திடுதிப்புனு மழை வந்து செனை மாடு மழையில நனைஞ்சு போச்சு, அவ ஒத்த பொம்பளை எப்படி இழுத்து கட்டுவா ம்ம்ம்… அந்த மனுசனுக்கும் வயசாவுது. தொணைக்கு யாரும் இல்லாம மாட்டை புடிச்சு இழுத்து அது இந்தா காலை போட்டு மிதிச்சு வச்சிருக்கு… நீ இருந்திருந்தால் மாட்டை புடிச்சு கட்டி இருக்கலாமா…? இப்ப பாரு என்ன ஆச்சு… பொறுப்பு இல்லாம ஊர் சுத்திட்டு வார… “என்று திட்டினார்.
சிவாவோ .,”இந்தாம்மா உன் கிட்ட திருச்சிக்கு இன்டர்வியூ போறேன் னு சொல்லி விட்டு தானே போனேன்… எனக்கு என்ன ஜோசியமா தெரியும் மழை வரும் னு… ஏன் தனியா பிடிச்சு கட்டுன நீ… அக்கம் பக்கத்தில் ஆளே இல்லையா பெரிய ஜான்சிராணி பேத்தி மாதிரி போய் சாகசம் பண்ணி இருக்குற…. ஆஸ்பத்திரிக்கு போவோமா”என்று கேட்க
செல்வியோ.,”அட எனக்கு ஒண்ணும் இல்ல டா நீ திருச்சி போனதை மறந்து போயிட்டேன்…. ஆஸ்பத்திரி எல்லாம் போக வேணாம் நான் மஞ்சபத்து போட்டுட்டேன் சரி என்ன ஆச்சு யா வேலை கெடைச்சிடுமா ??”என்று ஆவலாக கேட்டார்.
“அட ஏன் மா நீ வேற அவனுக முன் பணம் கட்டு முக்காடு போடு னு சொல்லிட்டு இருந்தானுக நான் வீட்டுல கேட்டு சொல்றேன் னு வந்துட்டேன்.”என்றான்.
“பணம் கட்டினா வேலை கெடைச்சிடும்னா கட்டுய்யா, நான் உன் அப்பா கிட்ட வாங்கி தரேன்”என்று செல்வி சொன்னதும்… “இல்லம்மா முன்பணம் கேட்குறது எனக்கென்னவோ சரியாப் படலை… ஏமாத்திட்டாங்கன்னா அவ்வளவு தான் ஏற்கனவே உங்க கிட்ட நான் வாங்குற பேச்செல்லாம் பத்தாதா இதுல இந்த பிரச்சினையை இழுக்கணுமா… அதான் வந்துட்டேன் “என்று பேசிக் கொண்டிருக்கும் போதே தனஞ்செயன் உள்ளே நுழைந்தான்.
“யய்யா டிக்கெட் கிடைச்சிடுச்சா ??”என்றதும்
“கெடைச்சாச்சு கெடைச்சாச்சு….இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பணும்”என்றான்.
“ம்ம்ம் இந்த லீவுலையே கல்யாணத்தை முடிச்சிடலாம் னு நினைச்சேன் எங்க நடக்கலையே… எல்லாம் கூடி வர்ற நேரத்தில்”என்று செல்வி சொல்லும் போதே தனஞ்செயன் இடை வெட்டியவன்,” இப்ப என்ன என்னால தான் எல்லாம் கெட்டுப் போச்சுனு சொல்ல வர்றியா…?? ஏன் மா புடிக்காத புள்ளையை கட்டி வாழுன்னா எப்படி வாழ்றது , அதுக்கு பேசாம நான் இப்படியே இருந்துட்டு போறேன் … ச்சே வீட்டுக்கு வந்தா உன் கூட இதே ரோதனையா போச்சு , இனிமே இந்த ஊருக்கு வந்தா தானே… இனி நீ ஒண்ணும் போய் எனக்காவ பொண்ணு தேட வேணாம்… நான் நம்ம பொன்னுசாமி மாமன் மவ சூரியாவை தான் விரும்புறேன், அவளை தான் கட்டிக்குவேன் அவளுக்கும் இதுல சம்மதம் தான் , நீயும் அப்பாவுமா போய் பொண்ணு கேட்குறிங்களா இல்லை நானே போய் கேட்டு கட்டிக்கிடட்டுமா…?” என்றான் தடலாடியாக.
தனஞ்செயனின் தடாலடி பேச்சில் உறைந்த சித்திரை செல்வியோ,” டேய் என்னடா பொசுக்குனு இப்படி சொல்ற… பொன்னுசாமி அண்ணனும் சங்கரன் அண்ணனும் பங்காளிக டா, ஏற்கனவே சம்மந்தம் கலைஞ்ச எடத்துல மறுபடியும் பங்காளி பொண்ணை கேட்டா தருவாகளா… ??”என்றதும்
சிவாவோ முந்திக் கொண்டு .,”ஏன் தர மாட்டாங்க… பொன்னுசாமி மாமனுக்கு நம்ம குடும்பத்து மேல நல்ல அபிப்பிராயம் உண்டு , அதுவும் இல்லாம சங்கரன் மாமன் வீட்டோட அவங்களுக்கு நெதமும் ஒரு வாரப்பாடு ( சண்டை )தான் அந்த மாதிரி இது ஒரு சண்டையா இருந்துட்டு போவும் அம்புட்டு தான் மத்தபடி நாம ஒண்ணும் ஒண்ணு மண்ணா இருக்கிற குடும்பத்தை பிரிக்கலை சரியா… ம்மா அவனே இப்ப தான் மனசு வந்து அந்த சோளத்தட்டையை ( சூரியாவை )கட்டிக்கிறேன் னு சொல்றான், பண்ணி வைமா …. என்ன பாட்டா நான் சொல்றது சரி தானே !!”என்று வேலுத்தம்பியையும் துணைக்கு இழுத்தான்.
“ஆமா செல்வி நம்ம சிவா சொல்ற மாதிரியே செய்யலாம் நம்ம ஊர் கோவில்ல தாலி கட்டி வீட்ல பந்தலை போட்டு சாப்பாட்டை போட்டா வேணாம்னா இருக்கு… “என்றார்.
“அதுக்கில்லை மாமா அது வந்து பத்திரிக்கை அடிக்கணும், நம்ம சொந்தபந்தத்துக்கு எல்லாம் வைக்கணும் …பொடவை ,துணிமணி , மாங்கல்யம், ஏகப்பட்ட வேலை இருக்கு… இதெல்லாம் ஒரு வாரத்தில் முடிக்கிற காரியமா மாமா இன்னும் உங்க மகன் என்ன சொல்லுவாரோ…. “என கருப்பசாமியின் முகத்தை பார்த்தபடியே தயங்கித் தயங்கிப் பேசினார் சித்திரைசெல்வி.
“அது தான் சொல்றேனுல்ல மருமவளே …. பத்திரிக்கை அடிக்க வேணாம் வெத்தலைபாக்கை வச்சு ஊருக்குள்ள மட்டும் பத்திரிக்கை வைப்போம் நெருங்கிய சொந்தத்துக்கு மட்டும் சொல்லி கல்யாணத்தை முடிக்கலாம்… நாளைக்கே நாள் நல்லா இருந்தா கூட பொடவை தாலி எல்லாம் எடுத்து வந்திடலாம்… ஏலேய் தனா… !! காலையில வரைக்கும் பொறுத்துக்க… நேரமே பொன்னுசாமி கிட்ட நானே பேசுறேன் ஊருக்கு போவையில புது மாப்பிள்ளையா தான் போற… “என்றதும் தனஞ்செயனுக்கு சற்று வெட்கம் வந்து விட்டது.
சிவா சிரித்தபடியே”பாட்டாவ் ஓ பேரனுக்கு வெட்கமெல்லாம் வருது… பாரேன்…!!” என்று விட்டு ,”பாட்டா இதெல்லாம் சரி தான்…. அப்படியே என் ஆளையும் என் கூட சேர்த்து வச்சுட்டா உனக்கு புண்ணியமா போவும்…. “என்றவனிடம் .,
“அது என் கையில இல்லையே பேராண்டி… உன் கையில தான் இருக்கு…. மலரு கிட்ட நீ என்ன சொன்ன… செண்பகவல்லி என் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுச்சு அதனால பேத்தி சொன்ன மாதிரி ஏதாவது உருப்படியா செய்…. அப்புறம் நிதானமாக கல்யாணத்தை பண்ணலாம் “என்றார் வேலுத்தம்பி.
கருப்பசாமி தந்தையிடம், அவர் கூறுவது போலவே செய்து விடலாம் என்று கூறி விட்டு பெட்டிக் கடையை நோக்கி நடையை போட்டார்.
“ம்ம்க்கும் சொல்லிடுச்சா கெழவி… எதை பேசுறீகளோ இல்லையோ இதை சரியா பேசிடுங்க “என்று சிரித்தவன் கயிற்று கட்டிலை தூக்கி கொண்டு வெளியே சென்றான்.
“ஏய்யா மழை பேஞ்சு காத்து விசு விசுன்னு( சிலுசிலுவென்று) அடிக்குது, இப்ப எதுக்கு வெளியே போற… ?உள்ளேயே படு சாமி “என்றார் சித்திரை செல்வி.
“ம்மா உள்ளார புழுக்கமா இருக்கும். நமக்கு மூஞ்சியில சில்லுனு காத்து பட்டா தான் தூக்கமே வரும்…. “என்றவன் வெளியே படுத்து கொண்டான்.
கருப்பசாமி பெட்டிக்கடையில் நின்று திருட்டு பீடியை இழுத்து விட்டு , வாடை தெரியாமல் இருக்க இரண்டு கிராம்பை வாங்கி மென்றுக் கொண்டு வந்தார்.
வெளியே படுத்திருந்த சிவாவை கண்டவர்… “தொரைக்கு ஏழு மணிக்கே கண்ணை கட்டிடுச்சோ…!! இழுத்து போர்த்தி சாஞ்சுட்ட கஞ்சி கிஞ்சி குடிச்சியா இல்லையாடா…??” என்றதும் “அதெல்லாம் சாப்டாச்சு… கிராம்பு போட்டும் பீடி வாடை போகலை…. செல்வி கிட்ட திட்டு வாங்காம போய் பேஸ்டை வச்சு பல்லு வெளக்கிடுங்க”என்றான் மூடிய கண்களை திறவாமலேயே….
“அதுக்கு தான் அந்த பொட்டிக்கடைக்கார பய கிட்ட சொன்னேன். டேய் எப்போதும் தர்ற பூமார்க் பீடியே தாடான்னு கேட்டானா அவன்… எனக்கே வாடை அடிக்குது… அவன் தான் அது இல்லை மாமானு இது புது பிராண்டுனு குடுத்தான்…. ஏற்கனவே உன் அம்மாவுக்கு முழியெல்லாம் மோப்பம் புடிக்கும் இன்னைக்கு நான் தீர்ந்தேன்… “என்றபடி கொல்லைபுறத்திற்கு சென்றார் மகனின் அறிவுரையை தட்டாது கேட்கும் தந்தையாக..
“அதுக்கு பீடீ இழுக்காம இருக்கணும், நீ ரயில் இஞ்சின் கணக்கா பொகை விட்ருப்ப அதான் நாறுது… செல்வி கிட்ட சிக்காம இருந்தா சரி தான்… “என்று சொல்லியபடி உறங்கிப் போனான்.
********
மறு நாள் காலையில் முருகன் வேதனையாக அந்த சாலையை பார்த்துக் கொண்டிருக்க , சிவா பூ வாங்க வந்தவன் என்ன ஏதென்று விசாரித்தான்.
“ப்ப்ச் அவ்வளவு மழை பேஞ்சு கடைசியில ஒண்ணுமே இல்லாம போச்சுடா தம்பி…. பாதி நெலத்தோட வடிஞ்சு போச்சுன்னா.. பாதி இந்த சீமைக்கருவேல மரமே குடிச்சிடுது… நானும் யூனியன் ல சொல்லி இந்த மரத்தை வெட்ட ஏற்பாடு பண்ண சொல்றேன் ஒருத்தரும் வந்த பாட்டை தான் காணோம்”என்றார் கவலையாக.
“அண்ணே யூனியனை பார்த்தா எல்லாம் வேலைக்கே ஆவாது…. நாமளே பேசாம செஞ்சுட வேண்டியது தான்… ஆமா அதுக்கு எதுக்கு நீ ரோட்டை பார்த்து விட்டு இருக்க… ??”என்று கேட்டான்.
“நீ வேற டா தம்பி இது மண்ரோடு னு நெனைச்சியா…?இது காட்டாறு டா… மழைத்தண்ணி முழுசும் இது வழியா தான் கொளத்துக்கு போகும்…. எப்பவாவது தண்ணி வர்றதால இப்படி நடந்து நடந்தே ரோடா மாத்தி வச்சுட்டானுக…. இது மட்டும் சரியா இருந்திருச்சு… இந்நேரம் நேத்து பேஞ்ச மழைத்தண்ணி எல்லாம் கொளத்துல தேங்கி இருக்கும்… “என்றார் முருகன்.
சிவா வண்டியில் இருந்து இறங்கியவன்… அந்த பாதையை வெறித்து பார்த்து விட்டு… “எண்ணே இந்த பூவை குடுத்துட்டு வரேன் பொறவு பேசிக்கலாம்… நீ என்ன பண்ற..? அந்த ஜேசிபி டிரைவரை வண்டியை எடுத்துக்கிட்டு வர சொல்லு “என்றான்.
“யோவ் அவன் ஒரு மணி நேரத்துக்கு எழுநூத்தி ஐம்பது ரூபாய் வாங்குவானே ?!”என்றார் தவிப்பாக
“ப்ப்ச் அதை நான் பார்த்துக்கிறேன் ண்ணே நீ சொன்னதை மட்டும் செய்… “என்றவன் தனது கைபேசியில் இருந்து வெற்றிக்கு அழைத்தான்.
“டேய் மச்சி நீ என்ன பண்ற… வீரமலையை கூட்டிக்கிட்டு டீசல் வாங்கிட்டு வர்ற…. அப்படியே நம்ம பயலுவ எவனாவது இருந்தா எல்லாரையும் அழைச்சுட்டு ஆலமரத்தடிக்கு வர சொல்லு… “என்று இணைப்பைத் துண்டித்து விட்டு பூ வாங்கச் சென்றான்.
பூ வாங்கி கொடுத்து விட்டு,” ம்மா எல்லாம் கணக்கா வாங்கிட்டேன் அப்புறம் நீங்க மட்டும் போயிட்டு வந்திடுங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… டேய் நல்லவனே பீரோவில நல்ல சட்டையா பார்த்து எடுத்து போட்டுட்டு போடா ..இந்த பூ போட்டது ,சிலுக்கு ஜிப்பா ,இது மாதிரி எதுவும் எடுத்து போட்ராத ஏற்கனவே அந்த சோளத்தட்டை உங்க அண்ணன் துபாய் ல எந்த அட்ரஸுல இருந்தார்னு நக்கல் பண்ணுவா !!”என்றான்.
“ஹ்ஹேஹேய்… போடா எனக்கு சோறு போட ஆளா இல்ல டீச்சரம்மாவை பத்தி என்ன நெனைச்ச…?? சாம்பார் வச்சா இன்னைக்கு பூராம் சாப்பிடலாம் அம்புட்டு ருசியா இருக்கும்… நேத்து குடிச்ச சுக்குகாபி இன்னும் நாக்குலேயே நிக்குது…. “என்று சிரித்தான்.
“அடேய் கல்யாணம் முடியறதுக்குள்ள விருந்தை முடிச்சிட்ட போல… சரி சரி எந்த வேலையா இருந்தாலும் வெரசா முடிச்சுட்டு வா அந்த புள்ள உன்னைத் தான் தேடும் “என்றான் தனஞ்செயன்.
“அது நான் பார்த்துக்கிறேன் நீ போய் மாமன்ட்ட பதனமா பேசி கல்யாணத்தை முடிக்கிற வழியைப் பாரு “என்றவன் தனது இரு சக்கர வாகனத்தில் பறந்தான் சிவசக்திபாலன் .
“சிவனேசண்ணே அவன் மதுரைக்கு அவங்க ஆயா வீட்டுக்கு போயிருக்கான்… அங்க கறி தோசையும் பன் பரோட்டாவும் தின்னுட்டு ,மீனாட்சி கோவில் பார்ப்பேனேன்னு பீத்திக்கிட்டு போனாண்ணே…!! அங்க கபடி எல்லாம் பெரிய ஆளுங்க கூட வெளையாடுவானாம்”என்றான் ஒரு சிறுவன் தான் அங்கே போக முடியவில்லையே என்ற ஆதங்கத்தை மறைத்தபடி..
“அட விடுடா பொல்லாத கறிதோசை ,பன் பரோட்டா , உனக்கு அது தானே டா வேணும் நாம மதுரையில இருந்தே வரவழைப்போம் டா… நான் சொல்றது மட்டும் கேட்டிங்கன்னா இந்த திருவிழாவிற்கு நம்ம ஊர் ல கபடி போட்டி ஏற்பாடு பண்றோம்…. அப்படியே கிரிக்கெட்டு போட்டியும் உண்டு அப்புறம் திருவிழா அன்னைக்கு ஆர்கெஸ்ட்ரா போட கலெக்டர் கிட்ட பர்மிஸன் வாங்கி பத்து நாளைக்கு போடுவோம்…. நான் சொல்றதை கேட்குறீங்களா ??”என்று கேட்டான் சிவா.
ஆர்கெஸ்ட்ரா , கபடி , என்றதுமே அந்த சிறு வாண்டுகளுக்கு முகம் மலர்ந்து விட்டது.
“நீ சொல்லுண்ணே செஞ்சிடுவோம்…”என்றான் ஒரு சிறுவன் வேகமாக
“நம்ம மாரிச்சாமியண்ணே மவன் ஃபோர்ஸா இருக்கான்டா மாப்ள என்று விட்டு,” டேய் இப்ப நாம இந்த ரோட்டுல கெடக்குற பிளாஸ்டிக் பேப்பரு தேவை இல்லாத குப்பை எல்லாம் பொறுக்க போறோம் … அதை ஒரு குரூப் செய்றிங்க… செத்த பெரியவனுகளா இருக்கவனுக… இந்த முள்ளு மரத்தை வெட்ட வெட்ட பூராத்தையும் ஒதுங்க வைக்கிறோம் அப்புறம் ஜேசிபி வருது டா… அது இந்த வாய்க்காலை பறிச்சுக்கிட்டு வரும் அடுத்த மழை வரும் போது இந்த வாய்க்கால் ல தண்ணி போறதை பார்க்கிறோம் என்ன சரியா…. ?? சுறுசுறுப்பாக வேலை செய்றவனுக்கு நம்ம தலைவர் படம் ரிலீஸ் ஆகும் போது திருச்சி கூட்டிட்டு போய் படம் பார்க்க வைப்பேன் இப்ப செய்யலாமா வேலையை…. “என்றதும் சிறுவர்களுக்குள் ஆர்வம் பொங்கிட ,நெகிழிப்பைகளை பொறுக்க ஆரம்பித்து விட்டனர்.
“மாப்ள நம்ம சரியா தானே செய்றோம்… ??”என்று சந்தேகத்திற்கு வெற்றியை ஒரு முறை கேட்டுக் கொண்டான் சிவா.
“சிவா இது சரியான வேலை தான்…. கண்டிப்பா அடுத்த கோடைக்கெல்லாம் நம்ம ஊர் ல தண்ணீர் பஞ்சம் இருக்காது இதுக்கு நான் உத்தரவாதம் தரேன்… “என்றார் முருகன்.
“நீ சொன்னா சரியா தான் ண்ணே இருக்கும்…”என லுங்கியை மடித்து கட்டியவன், சீமைக்கருவேல மரம் ஒன்றை வெட்ட தயார் ஆகினான்.
ஊர் பெருசுகள் இரண்டு மூன்று பேர்….. “ஏலேய் என்னடே பண்றீங்க….?? தூர் வார்ற மாதிரி தெரியுது… செய்ங்க செய்ங்கடே…. உங்க தலைமுறைக்காவது இந்த காட்டாத்துல தண்ணி வரட்டும்”என்று சொல்ல இளைஞர் அணி சுறுசுறுப்பாக வேலையை மேற்கொண்டது.
அதே நேரத்தில் தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காக சென்றிருந்தான்.