செந்நிற பூமி-14                      

சங்கரன் தனக்குக் கிடைக்க போகும் பதவிக்காக மலரின் வாழ்வை சிக்கலில் இழுத்து விட நினைக்க, முத்துலெட்சுமியோ, ‘ சிவா கண்டிப்பாக மலரை விட மாட்டான்’ என்ற நம்பிக்கையில் வடிவரசியை சங்கரபாண்டிக்கு திருமணம் செய்து வைத்திடலாம் என எண்ணி கொண்டிருந்தார். 

மலரோ சிவா தன்னை பார்க்காமல் சென்றதைப் பற்றி எண்ணிக் கொண்டே பொன்னருடன் வீட்டிற்கு சென்றாள். 

“ப்ப்ச் நீ ஏன் பொருவே அவன் பேசுனதையே மனசுல நினைச்சுட்டு வர்ற சாதாரணமாக இரு… இந்த பாட்டன் இருக்கிற வரைக்கும் உனக்கு பிடிச்சவனை தவிர வேற எவனையும் உன் பக்கத்துல விட மாட்டேன் வயசானவன்னு மட்டும் நினைச்சுடாத… இன்னைக்கும் உன் பாட்டன் பத்து பேரை எதிர்த்து நின்னு சண்டை போடுவேன், ஏ பேச்சை மீறி எவன் இந்த கருத்தம்பட்டிக்குள்ள கால எடுத்து வைக்கிறான்னு பார்க்கிறேன்… கோரைப்புல்லை அறுத்து போடுற மாதிரி அறுத்து போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்”என்று பொன்னர் கூறவும் , மலர் அமைதியாக தன் வீட்டிற்கு சென்றாள். 

விஷயம் கேள்விப்பட்ட பொன்னுசாமியோ அதற்கு மேல் குதித்தார். இருவரையும் சமாதானம் செய்வதற்குள் செண்பகவல்லியும் மரகதமும் ஒரு வழி ஆகி விட்டனர். 

*********

சங்கரன் வீட்டில் இருந்து வந்த சிவாவோ நண்பர்களிடம் சங்கரனை திட்டிக் கொண்டிருந்தான். 

“பட்டு னு அடிச்சிட்டாரு மாப்ள மனசே ஒரு மாதிரியா போச்சு வந்த கோவத்துக்கு அவர் கையை உடைச்சிருப்பேன்… மலர் வந்து தடுத்துட்டா இல்ல இன்னைக்கு ஒரு கலவரமே நடந்திருக்கும்… “என்றான் கோபமாக 

“விடு டா ஏதோ மக கல்யாணத்திற்கு ஒத்துக்கலைனு கோவத்துல கை நீட்டி  இருப்பாரு ..” என்றான் வீரமலை. 

“இல்ல டா வீரா… செக்க செவேல்னு இருக்கிறதுக்கும் அதுக்கும் கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சு சிவந்து போயிருச்சு தெரியுமா…பொன்னன் தாத்தனுக்கு அவளை பத்தின கவலை தான், ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கா மாப்ள அவ சுயம்பு மாதிரி டா,  அவளைப் பற்றி தெரியும் போது இன்னும் நல்லா வச்சுக்க தோணுதுடா…  இந்த வடிவு புள்ள எவ்வளவு பகுமானமா இங்க இருக்கு ஆனா அத்தனை சொத்துக்கும் உரிமைகாரி தூத்துக்குடியில் கவர்மென்ட் பள்ளியில் படிச்சு லீவு விட்டா வேலைக்கு போயினு ஆச்சியையும் பார்த்துகிட்டு இருந்திருக்கா…  ஆசைப்பட்டதை கூட வாங்கி சாப்பிட்டது இல்லையாம் மாப்ள…  இம்புட்டு கஷ்டமும் அந்த ஆளால தானே?!, அவர் மட்டும் என் மக எங்கூட தான் இருக்கும் னு சொல்லி இருந்தா நல்லா வாழ்ந்து இருப்பா இல்ல..!” என்று கவலை கொண்டான்.

“நீ வேற மச்சான்… மலரு இங்கிருந்தா அந்த முத்துலெட்சுமிக்கு அடிமை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருப்பா…  ஏதோ அதுக்கு நல்ல நேரம் நல்லபடியா வாழுறா…விடு மச்சான் அதான் நீ இருக்க இல்ல நல்லபடியா பார்த்துக்க ” என்றான் வெற்றி. 

“கண்டிப்பாக டா , இனிமே நான் இருக்கிறேன் டா அவளுக்கு. ஆனா அந்த ஆளை நான் விடுறதா இல்லை மாப்ள” என்று பல்லைக் கடித்தான். 

வீரமலையும்,  வெற்றியும்   மாறி மாறி சிவாவை சமாதானம் செய்து கொண்டிருந்தனர். 

அதற்குள் முருகன் வந்து அழைத்திட ,அவரோடு கிளம்பி சென்றனர் நண்பர்கள் மூவரும். 

**************

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தனர் தனஞ்செயனும், சூரியகாந்தியும். 

“இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா வர சொன்னீங்க ?என்ன விஷயம் னு சீக்கிரம் சொல்லுங்க? புக் வாங்கப் போறேன் னு பர்மிஸன் கேட்டுட்டு வந்திருக்கேன்”என தனாவின் முகம் பார்க்காமலேயே பேசினாள் சூர்யா. 

“நீ ஹாஸ்டலை விட்டு எப்போ கருத்தம்பட்டி க்கு வருவ…?” என கேட்டதும் சூர்யாவோ மூக்கு விடைக்க ,”அது எதுக்கு உங்களுக்கு.??”… என்றாள். 

“சூர்யா நீ செய்றது கொஞ்சங் கூட சரி இல்லை . அவ்வளவு தான் சொல்வேன்… புரிஞ்சுக்கோடி அந்த சம்மந்தம் நின்னு போச்சு எத்தனை தடவை சொல்றது…? தயவு செஞ்சு நீ வீட்டுக்கு வா நான் உன் வீட்டில் பேசுறேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் மறுபடியும் கிளம்பணும் சூர்யா… சொல்றதைக் கேளு “என்றான்.

திருமணம் நின்று போனது சூர்யாவிற்கு புதிய தகவல்… மனதிலோ ஆயிரம் குழப்பங்கள் .’அன்று வடிவரசி வேறு விதமாக சொன்னாளே இவர் திருமணம் நின்று விட்டதாக சொல்கிறாரே?!’ என்ற யோசனையுடன் இருக்க ,தனஞ்செயன் அவளை உலுக்கி கொண்டிருந்தான். 

“சூர்யா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ என்ன டான்னா இப்படி புள்ளையார் கணக்கா உட்கார்ந்து இருக்க? “என்க 

“இல்ல மாமா ,அந்த வடிவு என்னைய அன்னைக்கு பார்க்க வந்தா!, நீங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதாகவும், இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம் னும் சொல்லி இந்த பத்திரிக்கையை தந்தா…. நீங்க பேச கூப்பிட்டதும் உங்களை திட்டணும் னு தான் இதை எடுத்துக்கிட்டு வந்தேன் … நீங்க கல்யாணம் நின்னு போச்சு னு சொல்றீங்க “என்றாள் குழப்பமாக 

தனஞ்செயன் பத்திரிக்கையை திருப்பி பார்த்து விட்டு .,”எவ்வளவு பெரிய ஃப்ராடு பாரு… !! ச்சே,  இப்படி ஒரு புள்ளையை நான் பார்த்ததே இல்லை “என்று கடிந்து கொண்டவன் .,”நீயும் இதை நம்புனியாக்கும்… ஒரு வார்த்தை உன் அண்ணன் கிட்டயோ இல்ல,  உன் அப்பா அம்மா கிட்ட ,ஏன் அதுவும் வேணாம் மலரு கிட்ட கேட்டிருக்க வேண்டியது தானே ???”என்று திட்ட , 

சூர்யா மெதுவாக .,”இல்ல மாமா நான் அதை யோசிக்கிற நிலைமையிலேயே இல்லை சாரி மாமா “என்றாள் தலையை குனிந்து கொண்டே. 

“ம்ம்ம் இப்ப சொல்லு சாரி மாமா பூரி மாமா ன்னு , ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டு இருந்தா இவ்வளவு நாள் இங்க கெடக்க வேண்டி இருந்திருக்குமா ? மரியாதையா பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு வீட்டு பக்கம் வந்து சேருற… உன் வீட்டில் பேசி கல்யாணத்தை முடிச்சிட்டு நான் துபாய் கிளம்புறேன்… நீ அதுக்குள்ள படிப்பை முடிக்கிற …”என்றதும் செவ்வானமாய் சிவந்து போனாள் சூரியகாந்தி. 

“ஏன் மாமா கல்யாணம் முடிஞ்சு பொறவு எதுக்கு துபாய்க்கு இங்கேயே வேலை தேடிக்கலாமே ..?!”என்றவளை ரசனையாக பார்த்து விட்டு .,”இதெல்லாம் வக்கனையா பேசு ஆனா சொல்றதை காது குடுத்து கேட்காத “என செல்லமாக கோபித்து கொண்டவன் .,”ரெண்டு வருஷம் கழிச்சு வந்திடுவேன் டி அப்புறம் இங்க வந்ததும் ஒரு மளிகை கடையை போட்டு உட்கார்ந்து விட வேண்டியது தான்…” என்றான். 

“ம்ம்க்கும் ப்ளான் எல்லாம் நல்லா தான் போடுறீங்க… நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு பண்ணி வைக்குதே,  இன்னும் அந்த வடிவரசி என்னவெல்லாம் செய்ய காத்திருக்காளோ. அது சரி ஏன் மாமா மலரக்காவுக்கு நான் போன் பண்ணவே இல்லை அவங்க கல்யாணமுமா நின்றுச்சு “என்று கேட்டவளை முறைத்து விட்டு.,” நான் தானே உனக்கு பிரச்சினை, உங்க அக்கா என்ன பண்ணுச்சுனு அது கிட்ட பேசாம இருக்க…. பாவம்டி அந்த பொண்ணு…. இந்த சிவா பய வேற அதை பத்தி பேசினா என்னனு கூட கேட்க மாட்டேங்கிறான்…. அந்த புள்ளைக்கு அவங்க அப்பன் வேற இடத்துல பேசி முடிச்சுட்டதா கேள்வி பட்டேன்… எங்கம்மா அவங்க வூட்டு பேச்சை எடுத்தாலே கத்துது , அதனால அது கிட்ட கேட்கவே முடியலை… அப்பாவும் அப்படி தான்… நீயாவது உன் அக்கா கிட்ட பேசு… சரியா…சரி சரி மழை வர்ற மாதிரி இருக்கு கிளம்பு உன்னை காலேஜ் ல விட்டுட்டு நானும் கிளம்புறேன் “என்று எழுந்து கொண்டான். 

“சரி மாமா… ஏதுக்கும் அந்த வடிவரசி பேச வந்தா பேசாதீங்க, நான் ஊருக்கு வந்ததும் இருக்கு அந்த மேனா மினுக்கிக்கு… இந்த பத்திரிக்கையை குடுத்து ரெண்டு நாளா சோறு திங்க விடாம பண்ணிப்புட்டா “என்று திட்டிக்கொண்டே எழுந்தாள். 

“உனக்கு சுயபுத்தி இருந்திருக்கணும்,  அவ சொல்றா இவ சொல்றானு அவசரப்பட்டு முடிவெடுத்தா இப்படி தான் புலம்பணும் “என்று நக்கலடித்தான். 

அவனை முறைத்து விட்டு “சும்மா சும்மா அதையே சொல்லி காட்டாதீங்க என் நிலைமையில் இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் “என சலித்தபடி நடந்தாள் அவனோடு. 

“ஏன் மாமா எனக்கு ஒரு சந்தேகம் ?ஆமா நீங்க எப்படி என்னை விரும்ப ஆரம்பிச்சீங்க எனக்கு தெரியவே இல்ல… ?!”

“நீ எப்படி விரும்புனியாம்…?” 

“அது அது… !!”என்றவள் நகத்தை கடிக்க 

“நகத்தை கடிக்காம சொல்லுடி… ” வாயில் வைத்த கையை பிடித்து தன் கையில் பொத்திக் கொண்டான்.

“எல்லாம் துபாய் போன பிறகு தான்…  நீ அப்ப எல்லாம் என் கிட்ட சாதாரணமா பேசுவ…  மாமானு நானும் பேசுவேன் அப்போ எல்லாம் எதுவும் தெரியல ஆனா நீ பாட்டுக்கு துபாய் போயிட்டியா நான் ஸ்கூலுக்கு போகும் போதெல்லாம் நீ கூப்பிடுற மாதிரியே தோணும்,  அப்பறம் டைபாய்டு வந்து வீட்டில் இருந்தப்ப பழமெல்லாம் வாங்கிட்டு வந்து தந்தீயே, ஆஸ்பத்திரியில் சேர்த்தியே… மாமா, அப்போல இருந்து ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது ஆனா உன் கிட்ட சொல்ல பயம் நீ வெளிநாடுக்கு போனதால தான் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற னு சொல்லிட்டினா அதான் பயமா இருந்துச்சு தெரியுமா? ஆனா உனக்கும் வடிவுக்கும் கல்யாணம் பேசி முடிச்சதும் தாங்கவே முடியலை அதான் வந்து திட்டிட்டேன்” என்றாள் மெதுவாக. 

“ம்ம்ம்… இல்லாட்டி மனசுக்குள்ள வச்சுட்டே மறுகிட்டு இருந்திருப்ப, அப்படி தானே…  ஆனால் நான் அப்படி இருந்திருக்க மாட்டேன்… எங்க அம்மா உன்னை தான் பொண்ணு பார்க்க அழைச்சுட்டு போகும் னு நினைச்சேன் டி ஆனா வடிவு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுச்சு …” என்று சலித்தவனோ,” நான் துபாய்க்கு போன போது தான் எனக்கும் புரிஞ்சுது இந்த ரெட்டை வாலை விரும்புறேன் னு… ” என்றான் கிண்டலாக. 

“மாமா… போங்க கிண்டல் பண்றீக , நான் இப்ப ஒத்தை சடை தானே போட்டு இருக்கேன்… “உதடு பிதுக்கினாள். 

“சும்மா டி உனக்கு ரெட்டைச்சடையும் ,தாவணி பாவாடையும் தான் அழகு…”  என்றான் ரசனையாக. 

அவளை விடுதியில் விட்டு விட்டு மணப்பாறைக்கு கிளம்பினான். 

**********

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நீலவானம் கரிய நிற மேகங்களால் சூழப்பட்டிருக்க மழை வரும் அறிகுறியை கூறிக் கொண்டிருந்தது மெல்லிய ஒலியில் கேட்ட இடி சத்தம்… காற்று சுழன்றடித்து கொண்டிருக்க டீக்கடையில் அமர்ந்திருந்த பெருசோ இடுங்கிய கண்களை விரித்து .,கருமேகம் சூழ்ந்த வானை பார்த்து கொண்டு,” மேகம் எல்லாம் புள்ளதாட்சி புள்ளையாட்டம் நிறைஞ்சு தான் இருக்கு… பேஞ்சா ரெண்டு ஒழவு மழை பேயலாம், எங்க இந்த காத்து வந்து அப்படியே கருக்கலை எல்லாம் சொழட்டி இழுத்துக்கிட்டு போவுதே…” என்று இழுத்து பேசினார். 

“இது வருஷா வருஷம் நடக்குறது தானே பெருசு என்னவோ புதுசா நடக்கிற மாதிரி சலிச்சுக்கிற…!! மழைக்காலம் வர்றப்ப எல்லாம் இப்படி தான் காட்டாப்பு காட்டிபுட்டு போவுது, இந்த கருத்தம்பட்டிக்குள்ள மழையா பேயக் கூடாதுனு இந்த கருக்கல் எல்லாம் வரம் வாங்கியாந்து இருக்கும் போல, அந்த கையை ஓங்கி நிற்கிற மகாமுனி நமக்கு கருணை காட்ட மாட்டேங்கிறாரே என்ன பண்ண…??” என்று அந்த டீக்கடைக்காரர் சலித்து கொண்டார். 

“ஏன் மழை ஒழுங்கா பேஞ்சா மட்டும் நமக்கு தண்ணி வந்திடுமாக்கும்,  அட போ மாமா,  நீயும் இந்த பெருசு கூட சேர்ந்து பேசிகிட்டு… “என்றான் வீரமலை. 

“ஏன் டா வராது…?  மழை பேஞ்சா அதை சேமிச்சா ஏன் வராம போவுது… ? நாலு தடவை நல்ல மழை பேஞ்சா நம்ம ஊருக்கும் தண்ணி வரும் “என்றார் அந்த பெரியவர். 

“அட போ தாத்தா… “என்றவன் மழைத்தூறலை கண்டு.,”பெரும் பெருந்தூத்தலா விழுது தாத்தோவ் , வா வீட்ல விட்டுடுறேன். எண்ணே கடையை எடுத்து வச்சுட்டு நீயும் கிளம்பு ஆளே இல்லாத கடைக்கு டீயாத்திக்கிட்டு இருப்ப … ” என அந்த பெரியவரை அழைத்து கொண்டு கிளம்பினான் வீரமலை. 

மழை நன்றாக பிடித்து கொண்டது. 

சிவா எங்கோ வெளியில் சென்று வந்தவன்,  நன்றாக நனைந்து விட,  வண்டியும் மலர் வீடு இருக்கும் தெருவில் வந்து நின்று போனது. 

“அடக் கெரகமே!!  இது என்ன இப்படி நின்னு போச்சு… ?!,தள்ளிக்கிட்டே இந்த மழையில எப்படி போறது?  பனி வீட்டுல நின்னு போகலாம் னா நாம வேணும்னே வந்து நின்னு சீன் போடுறதா நினைப்பாளே…, ம்ம்ம் இப்ப என்ன செய்றது… ?? வேற எங்கிட்டாவது நிற்போமா…. “என மழையில் தள்ளிக்கொண்டு வந்தபடி யோசித்தவனை, மலர் பார்த்து விட ,செண்பகத்தை அழைத்து சிவாவை கூப்பிடுமாறு கூறினாள். 

“ஏலே பேராண்டி… அட உன்னை தாம்ல…”. என்றதும்.,”அச்சச்சோ கெழவி பார்த்திடுச்சே இப்ப என்ன சொல்லி சமாளிக்க…. ?? “என நினைத்தவன் .,”அப்பாயி நான் ஒண்ணும் வேணும் னு வரலை… வண்டி நெசமாலுமே நின்னு போச்சு… ஓ பேத்தியை பார்க்க வந்தேன்னு தப்பா நினைச்சுக்க போவுது , நாங்க எல்லாம் ரோசக்காரனுக…. அவங்க சொன்னதை செய்யாம முகத்தை பார்க்க மாட்டோம்… “என்றான் நனைந்தபடியே 

“ஆச்சி மொதல்ல உள்ள வர சொல்லு. மழையில நனைஞ்சு சளி பிடிக்க போகுது.. வியாக்கானம் பேசிக்கிட்டு”என்றவள் அவனை பார்த்திட,  அவனோ குனிந்த தலை நிமிராமல் வண்டியை ஓரங்கட்டி விட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். 

துண்டை நீட்டியவள்.,” என் மூஞ்சியை ஒண்ணும் பார்க்க வேணாம். மொதல்ல தலையை துவட்ட சொல்லு ஆச்சி… மழை வருதுனு தெரியுது இல்ல வீட்ல அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது தானே … ?!  கேளு பாட்டி உன் பேரன் கிட்ட “என முகத்தை திருப்பி கொண்டாள். 

“வேணும் னா சுத்துவாக,  வேலை விஷயமாக திருச்சி போனேன் அதான் மழையில மாட்டிக்கிட்டேன் சொல்லு அப்பாயி உன் பேத்தி கிட்ட”என்றான் தலையை துவட்டியபடி

“ஏட்டி நான் என்ன ரெண்டு பேருக்கும் தூது போற புறாவா , உங்க பேச்சு ல என்னை எதுக்கு இழுக்குறிக?, பேசுறதுனா ரெண்டு பேரும் நேருக்கு நேராக பேசுங்க ல “என்று விட்டு குளிருக்கு இதமாக போர்வையை போர்த்தி முடங்கி கொண்டார் செண்பகவல்லி ஆச்சி. 

மலர் முகத்தை திருப்பி கொண்டு சிரித்தாள். 

சிவாவோ .,”இந்த கெழவி இருக்கே… யப்பா சரியான ஆளு பா”என்று முணுமுணுத்து கொண்டான்.  

சற்று நேரத்தில் சூடான பஜ்ஜியும், பால் இல்லாத சுக்கு காபியும் கொண்டு வந்து வைத்தாள்.  

அதை எடுத்து குடித்தவன் பஜ்ஜியை சாப்பிட .,”வேலை விஷயம் என்ன ஆச்சு கிடைக்குமா ???”என்று கேட்கவும்.,

“இல்ல அவனுக முன் பணம் கட்ட சொல்றானுக… கட்டினா முப்பதாயிரம் சம்பளமாம் , ஏதோ ஃப்ராடு பண்ற கம்பெனி மாதிரி தெரிஞ்சுது அதான் வீட்டுல பேசிட்டு சொல்றேங்கனு சொல்லிட்டு வந்துட்டேன்… “என்றான். 

“சரி சரி “என்று அமைதியாக அமர்ந்து இருக்க

“பனி உங்க அப்பா எதுக்கு அடிச்சாரு…?? கன்னத்தில் ஏதாவது மருந்து போட்டியா..?!,  தடம் பதிஞ்சிருந்தது ” என்று கேட்டான். 

” இல்ல போடலை, சரி ஆகிடுச்சு,  தூத்துக்குடியில் இருந்து என்னை பொண்ணு பார்க்க வந்தானே !!, அவனை கல்யாணம் பண்ணிக்கனுமாம்… நான் முடியாதுனு சொல்லிட்டேன் அவன் ஏற்கனவே என் கிட்ட வம்பு வளர்த்தவன்… கல்யாணம் பண்ணிக்க சொல்லி நடுராத்திரியில் வீட்டுக்குள் புகுந்துட்டான். அப்போ தான் ஆச்சிக்கு கை உடைஞ்சது… நீ பெரியப்பா கூட வந்து இங்க கூட்டிட்டு வந்த…!!”  என்றாள்.  

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு எதுவுமே என் கிட்ட சொல்லலை ???”என்று கேட்டதும் .,”அவனை போலீஸ் ல புடிச்சு கொடுத்துட்டேன் அதான் எந்த பிரச்சினையும் வராதுனு நினைச்சேன், ஆனா அவன் இங்க வந்து அவர் மனசை மாத்தி கல்யாணம் வரை கொண்டு வருவான்னு தெரியாது”என்று சொல்ல , சிவாவோ “சரி விடு இனி ஊருக்குள்ள அவன் காலை எடுத்து வச்சா நான் பார்த்துக்கிறேன்… மழை விட்டுடுச்சு நான் கிளம்புறேன் “என்று அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் எழுந்தவனை உறுத்து பார்த்தவள் “சார் சொன்ன சொல்லை காப்பாத்துறிகளோ,  அப்ப என் முகத்தை பார்க்க மாட்ட ??”என்று கேட்க .,”சொன்ன சொல்லை காப்பாத்தினா தான் என் பொண்டாட்டிக்கு பிடிக்கும் நான் அவ பேச்சை ஒரு நாளும் மீற மாட்டேன் அதை என் பொண்டாட்டி புரிஞ்சுக்கிட்டா தேவலை “என்று விட்டு துண்டை தூக்கி தோளில் போட்டு கொண்டு சென்றான்.

அவன் போகின்ற வழியை பார்த்து புன்னகைத்தவள் , அவன் மீதம் வைத்திருந்த சுக்கு காபியையும் கடித்து வைத்த பஜ்ஜியையும் ருசி பார்த்துக் கொண்டிருந்தாள்.

செண்பகவல்லி கண்களை மூடிக் கொண்டு .,”வூட்டுக்காரன் மிச்சம் வச்சது தேனா இனிக்குமே….!!குடி குடி “என்றார். 

“ஆச்சி நீ தூங்கலையா ??”என சாப்பிட ….”தூக்கம் வரலை… எழுந்து உள்ளே போவ முடியலை இல்லாட்டி போயிருப்பேன் “என்றவர்…. “ஏட்டி அவன் தான் உன் மேல அம்புட்டு பிரியம் வச்சிருக்கானே கட்டிக்கிட வேண்டியது தானே !?, அவன் அப்பன் ஆத்தா கிட்ட நான் பேசுறேன்ல,  நீ உன் வீம்பை ஒதுக்கி வச்சுட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுல “என்றார் ஆவலாக 

“இது வீம்பு இல்ல ஆச்சி வைராக்கியம்… என் வைராக்கியத்தை என் புருஷன் காப்பாத்துவான்… அவனை மட்டமா பேசுன அந்த அம்மா மூஞ்சியில நாங்க ஜெயிச்சு கரியை பூசணும்…. எனக்காக சக்தி செய்வான் .. “என்றாள் உறுதியாக 

…. தொடரும்