முருகன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியதும் வெற்றி சிவாவின் தோளில் கை போட்டு கொண்டு .,“மாப்ள மலர் கிட்ட பேசினேன் டா” என்றதும் அதிர்ந்து போய்,“ டேய் நேத்து நடந்ததுக்கு எதுவும் பனியை திட்டிடலையே ?”என்றான் அவசரமாக.
“ஏன் டா ???”
“இல்லடா அது நான் நல்லபடியாக இருக்கணும் னு தான் அப்படி பேசுச்சு. நீங்க பாட்டுக்கு திட்டி எதுவும் விடலையே.”என்று அவசரமாக கேட்டு விட்டு வெற்றியைப் பார்க்க ,வீரமலை நடந்ததை கூறி விட்டான்.
சிவாவோ நெற்றியை தேய்த்தபடி.,“ஏன் டா இப்படி பண்ணீங்க பனி நான் நல்லா இருக்கணும் னு தான் டா அப்படி பேசினா . நீங்க வேற சரி விடு பேசிபுட்ட ,இனி மாத்த முடியாது.” என திருப்பூர் செல்ல நினைத்ததை பற்றி கூறி விட்டு .,”அந்த ஐடியாவை விட்டுட்டேன் மச்சான். . திருச்சியிலேயே ஏதாவது வேலை தேட வேண்டியது தான். “.என்றான்.
“சரி அப்ளை பண்ணு ஏதாவது வேலை கிடைக்காம போகுது” என்று வெற்றி சொல்ல ஆமோதித்தான் சிவா.
மணப்பாறையில் மாலை வரை இருந்து விட்டு கிளம்ப மலர் பள்ளி முடிந்து வந்தாள்.
சங்கரபாண்டி மணப்பாறை பேருந்து நிலையத்தில் காத்திருந்தான்.
சங்கரபாண்டியை கண்டு கொண்டவள் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் இயல்பானவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருக்க, அங்கே பேருந்து வரவும் அதில் ஏறிக் கொண்டாள். சங்கரபாண்டியோ ஏமாற்றத்துடன் சுமோவில் சென்று விட்டான்.
வீடு வந்தவளுக்கு சங்கரபாண்டி,’ எப்படி இங்கே வந்தான் ..? நம்மை தேடி தான் வந்திருப்பானோ..?’ என பல எண்ணங்கள் மனதை அலைகழிக்க ,சுய உணர்வு இல்லாதவளாய் தனது கைப்பையை போட்டு விட்டு படுத்து விட்டாள்.
“ஏட்டி மலரு என்ன ஆச்சுல ஏன் இப்படி வந்ததும் சாஞ்சுட்டவ?, ஒடம்பு சொவமில்லையா (சுகமில்லையா) என்னல பண்ணுது ?”என மலரின் நெற்றியில் கை வைத்து பார்க்க ,
“எனக்கு ஒண்ணும் இல்ல ஆச்சி.!!” என்று எழுந்தமர்ந்தவள் ,”அந்த பாண்டி பயலை இன்னைக்கு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன் ஆச்சி. எதேச்சையாக வந்த மாதிரி தெரியலை எனக்கென்னவோ என்னைத் தேடி வந்த மாதிரி தான் தெரிஞ்சது. “என்று சொல்ல செண்பகவல்லி அதிர்ந்தவர்.,
“ஏட்டி மலரு உன் பாட்டன் தூத்துகுடியில் இருந்து உன்னை பொண்ணு பார்க்க வந்துட்டு போனதா உன் அப்பன் சொன்னதா சொன்னாவ. ஒரு வேளை அந்த பாண்டி பயல் தான் மாப்ளையா இருக்குமோ” என்றார்.
மலருக்கு சிவா சொன்னது எல்லாம் நினைவு வந்தது. ‘கண்டிப்பாக தன்னை பெண் பார்க்க வந்தது சங்கரபாண்டியாக தான் இருக்கும்’ என்று உறுதியாக நம்பினாள்.
அதே நேரத்தில் பொன்னுசாமியும் மரகதமும் வந்து விட, இருவரிடமும் செண்பகவல்லி விஷயத்தை கூறினார் .
“அந்த மடப்பயலுக்கு கிறுக்கு தான் புடிச்சிருக்குனு நெனைக்கிறேன். நீ ஒண்ணும் கவலைப்படாத பொருவே, அவனை ஒரு வாங்கு வாங்கிட்டு வரேன். மாப்ள பார்க்கற மொகரக்கட்டையை பார்க்கல ,என்ன ஏதுனு விசாரிக்காம தான் பேசுனானா, என் கிட்ட பவுசா வேற சொல்லிட்டு போறான். மலருக்கு வேற மாப்ள பார்த்து நிச்சயம் பண்ண போறேன் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் னு.. நீ தைரியமா இரு பொருவே.. நான் அவனை பேசிக்கிறேன் புள்ளையை கூட இருந்து வளக்க தெரியாத துப்பு கெட்டவன் மாப்ள பார்க்க மட்டும் முன்னத்தி ஆளா வந்து நிற்பானோ. “என சரமாரியாக திட்டி விட்டு பொன்னுசாமி உடனே சங்கரனை பார்க்க செல்வதாக கூற மலர் தடுத்து விட்டாள்.
“நான் நேரடியாக அவர் கிட்ட பேசுறேன் பெரியப்பா”என்று சொல்ல மரகதமும் சரி என்று ஒப்புக் கொண்டார்.
மலர் சங்கரனை பார்க்க சென்றாள்.
சங்கரன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து உள்ளே நுழையவும்., மலர் வரவும் சரியாக இருந்தது.
வந்ததும் நேரடியாக கேட்டு விட்டாள்.
“தூத்துக்குடியில் இருந்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்களா ??”.என்று கேட்க
“ஆமா வந்தாங்க. நானே உன்னை கூப்பிட்டு பேசணும் னு இருந்தேன். பையன் பேர் சங்கரபாண்டி உன்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து பிடிச்சு போய் வந்து பொண்ணு கேட்டாரு. எடம் நல்ல இடம் அதனால கட்டி தர ஒத்துக்கிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் நம்மூர் கோவில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம் னு இருக்கேன். உனக்கும் காலாண்டு லீவ் தானே. அதுக்கு அப்புறம் நீ வேலைக்கு கூட போக வேணாம் மா நல்ல வசதியான குடும்பத்தில் தான் உன்னை கட்டி கொடுக்க போறேன் இதை பத்தி நானே பேசலாம் னு இருந்தேன் மா”என்று சங்கரன் சொல்வதை அமைதியாக கை கட்டி கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
முத்துலெட்சுமிக்கு நம்பிக்கை பிறந்தது இவள் நிச்சயம் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று ..
“ஏதாவது சொல்லும்மா ??”என சங்கரன் கேட்டதும் மலர் அமைதியாக.,”எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு ??”என்றாள்.
“நான் உன் அப்பா மா “என்று சங்கரன் சொன்னதும் சட்டென சிரித்து விட்டு மலரோ .,”அந்த நினைப்பு இருக்கா உங்களுக்கு? நீங்க ஒரு அப்பாவா எனக்கு இது வரை என்ன செஞ்சீங்க. .. மாப்பிள்ளை பார்க்கிற உரிமையை மட்டும் நீங்களா எடுத்துப்பிங்களா “என்று கேட்க,
சங்கரனோ .,”அப்போ கருப்பசாமி மகனை பார்க்கும் போது மட்டும் ஏன் ஒத்துக்கிட்ட??”என்றார்.
“சிவாவை பார்த்தது நீங்க இல்ல என் பாட்டா எனக்காக தேர்ந்தெடுத்தார். சிவாவா வந்து என்னை பொண்ணு கேட்டாரு புரிஞ்சுதா”என்று அழுத்தமாக உரைத்தாள்.
“சரிம்மா இப்போ என்ன குறைஞ்சு போச்சு. சங்கரபாண்டி உன்னை பார்த்து பிடிச்சு வந்து பொண்ணு கேட்டாரு , நல்ல வசதியான இடம் நல்ல சம்பாத்தியம் அதனால சம்மதிச்சேன் ஆனா அந்த கருப்பசாமி மவன் என்ன வசதில இருக்கான்.? அதனால தான் அந்த சம்மந்தத்தை வேண்டாம் னு சொன்னேன் என் மக நல்லா வசதியா வாழனும் னு நான் நினைக்க கூடாதா ??”என்று கேட்டதும் மலர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
முத்துலெட்சுமி எரிச்சலாக .,”இப்ப எதுக்கு சிரிக்கிற நீ ??”என கேட்டதும். “ஒருத்தி பிறந்து மூணு வயசுல இருந்து வராத பாசம் அக்கறை எல்லாம் இப்ப வருதா உங்களுக்கு. நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு என் பாட்டாவும் ஆச்சியும் உழைத்து வளர்க்கும் போது வராத அப்பா பாசம், அக்கறை எல்லாம் இப்ப வருதா. ?? வேணாங்க இந்த அக்கறையும் பாசமும் எனக்கு வேணாங்க.நீங்க எப்போதும் போல முத்துலெட்சுமிக்கு புருஷனாகவும் வடிவரசிக்கு அப்பாவாகவும் மட்டும் இருங்க. . உங்க வாழ்க்கையில் எப்படி வேதவல்லி இறந்த காலமோ அதே தான் வேதவல்லி மகளுக்கும். நிகழ்காலத்தில் உங்களுக்கு வேதவல்லி பொண்டாட்டியாகவும் இல்லை, இந்த பனிமலர் உங்க மகளாகவும் இல்லை. இனி என் வாழ்க்கையில் குறுக்க வராதீங்க. மீறி வந்தால் யார் என்னனு பார்க்க மாட்டேன்.” என எச்சரித்தவள் வெளியேற போக சங்கரனோ அவளை அடித்து விட்டார்.
சங்கரன் மலரை அடிக்கவும் , பொன்னரை சிவா வண்டியில் கொண்டு வந்து இறக்கி விடவும் சரியாக இருந்தது. வண்டியை விட்டு கீழே இறங்கியதும் உள்ளே ஓடி வந்தவன் நேரே சங்கரனின் சட்டையை பிடித்து விட்டான்.
“யாரை கை ஓங்குறீங்க??? உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் பனியை அடிச்சிருப்பிங்க”என்று கோபத்துடன் கேட்க, முத்துலெட்சுமி சிவாவை பிடித்து இழுக்க அவனோ சங்கரனின் சட்டைக் காலரை விடாது பிடித்து இருக்க .,”சக்தி அவரை விடு. .சக்தி விடுன்னு சொல்றேன் இல்ல.”என்று கத்தியதும் பிடியை தளர்த்தினான் சிவசக்திபாலன்.
“ஏய் வெளியே போடா. எவ்வளவு தைரியம் இருந்திருந்தா என் புருஷன் சட்டையை பிடிச்சிருப்ப. போடா வெளியே “என முத்துலெட்சுமி சிவாவை தள்ளி விடவும், நிலை தடுமாறியவன் சற்று சுதாரித்து. “மலரை எதுக்கு அடிச்சீங்க னு இப்ப சொல்லலை. “என மீண்டும் எகிறினான்.
“சிவா வெளியே போ. இது எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை நான் பார்த்துக்கிறேன்.” என கூறியவுடன் அவளை பார்த்திடாமல், பொன்னரிடம் திரும்பி.,”இதோப் பாரு தாத்தா அவர் ஏன் என் பனியை அடிச்சாருனு எனக்கு தெரிஞ்சாகனும். “என்றான் கோபமாக .,
“என் மகளை நான் அடிப்பேன் , உதைப்பேன் அதை கேட்க நீ யாரு டா என் வீட்டை விட்டு வெளியே போடா முதல்ல”என்று சங்கரனும் பதிலுக்கு எகிற. பொன்னர் சிவாவை சமாதானம் செய்து வெளியே அழைத்து சென்றார்.
“இந்தா பாரு பேராண்டி நான் விசாரிக்கிறேன் நீ கவனமா வீட்டுக்கு போ. “என்று அவனை அனுப்பி வைப்பதில் குறியாக இருக்க .,”ஏன் தாத்தா ..? அது என்ன கெட்டப் பழக்கம் வயசுக்கு வந்த புள்ளையை கைநீட்டுறது. அவ என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கட்டும் அதுக்காக அடிப்பாரா அந்த பெரிய மனுசன். யோவ் மாமா இன்னொரு தடவை என் பனியை அடிக்க கை ஓங்குனனு தெரிஞ்சுது அப்புறம் மாமனாருனு கூட பார்க்க மாட்டேன். விட்டு வெளாசிப்புடுவேன். பார்த்துக்க கேட்கிறதுக்கு ஆள் இல்லை னு நினைச்சியா யார் சொல்லி ஆடுறன்னு தெரியும் யா. அவ மேல இனி ஒரு தரம் கை வைக்கிறதைப் பார்த்தேன் அவளுக்கு அப்பனாவது. ஒண்ணாவது ஓங்குற கையை ஒடிச்சு போட்ருவேன். பெரிய மனுசன் சின்ன மனுசன் எல்லாம் பார்த்துட்டு இருக்க மாட்டேன் “என உறுமி விட்டு சென்றான்.
இங்கே சங்கரனோ தாம் தூம் என குதித்து கொண்டிருந்தார்.
“என்ன நடக்குது இங்க? உன்னை அடிச்சா அவன் வந்து சப்போர்ட் பண்றான். இதோப் பாரு மலரு . நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காட்டாலும் சங்கரபாண்டிக்கு கட்டி தர நான் முடிவு பண்ணிட்டேன் பொம்பளை பிள்ளையா லட்சணமா கல்யாணத்துக்கு தயார் ஆகற வழியைப் பாரு “என்று கத்தியவரிடம் இப்போதும் அமைதியாக.,”இத்தனை வருஷமா தூத்துக்குடியில இருந்து வராதவ, ஏன் திடீரென இங்க வந்து தங்கி இருக்கேன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கிங்களா இல்ல என் கிட்ட கேட்டு தான் இருக்கீங்களா. நல்ல இடம் வசதியான குடும்பம் னு தலையில் தூக்கி வச்சுட்டு ஆடுறீங்களே அந்த சங்கரபாண்டி நடுராத்திரியில் வீட்டுக்குள் வந்து “என்று சொல்லும் போதே பொன்னர் இடை மறித்தார்.
“ஏ பொருவே இதெல்லாம் சொன்னா மட்டும் உன் அப்பனுக்கு உன் நெலம புரிஞ்சிடுமா என்ன. வயசுக்கு வந்த புள்ளையை ஒரு வயசான மனுசி கூட இருக்க வைக்கிறோமே அவ பாதுகாப்பா இருப்பாளா இல்லையானு என்னைக்காவது யோசிச்சிருக்கானா. ஆனா அவன் சின்னமவளுக்கு பத்திரமா போயிட்டு வர வண்டி ,செல்லுபோனு ,எல்லாம் வாங்கி குடுப்பான். நீ இவங்கிட்ட நியாய தர்மம் பேச வந்திருக்கியே வா பொருவே போவோம். எப்படி அந்த சங்கரபாண்டிக்கு உன்னை கட்டி வைக்கிறான்னு நானும் பார்க்கிறேன் . ஏலேய் அப்பன் வயசானக் கட்டை னு பார்க்காதடா என் பேத்திக்கு ஒண்ணுன்னா ஒவ்வொருத்தன் குடலையும் உருவிருவேன் அம்புட்டு இஷ்டம் இருந்தால் அவனுக்கு உன் மக வடிவரசியைக் கட்டி வைத்து மாப்ளைனு கொண்டாடு அவனை. “என்று முத்துலெட்சுமி சங்கரன் இருவரையும் எரிப்பது போல பார்த்து விட்டு மலரை அழைத்து கொண்டு வெளியேறினார்.
சங்கரனுக்கு உண்மை புரிந்தாலும் அவரது பதவி ஆசை வேறு எதையும் யோசிக்க விடவில்லை. மலரை சங்கரபாண்டிக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே உறுதி பூண்டு இருந்தார்.
முத்துலெட்சுமிக்கு சிவாவின் மீது கோபம் இருந்தாலும்,’ மலரை அவன் கண்டிப்பாக விட மாட்டான். சங்கரபாண்டிக்கு தனது மகளை கட்டி வைத்திடலாம் ‘என மனதில் நினைத்து கொண்டிருந்தார்.