சங்கரனும் முத்துலெட்சுமியும் பெண் தர முடியாது என்று தீர்மானமாக கூறி விட, கருப்பசாமி அதை விட கடுமையாக மலரை விட்டால் வேறு பொண்ணா கிடைக்காது என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.
சித்திரைசெல்வி வீட்டிற்கு வந்து புலம்பி கொண்டிருக்க முத்துலெட்சுமி வீட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செல்வியை பார்க்க வந்திருந்தார்.
“ஏன் அண்ணி நீ எதுக்கு புலம்புற ?? அந்த மலரு புள்ளைய பொண்ணு பார்க்க தூத்துகுடியில் இருந்து கார்ல வந்தாக, அவக வந்துட்டு போன பெறகு தான், அவங்க தலைகால் புரியாமல் பேசுறாங்க, ஆடுறாங்க. நீ உன் மவனுகளுக்கு வேற எடத்துல பொண்ணை பாரு ஏன் நம்ம பொன்னுசாமி மாமன் மவ சூரியா இல்ல, அதை உன் பெரிய மவனுக்கு பேசி முடிக்கிறது. நல்ல அமைதியான புள்ள. சிவாவுக்கு பாக்யா கல்யாணம் முடிஞ்சதும் நல்ல பொண்ணா பார்த்துக்கலாம், திருச்சியில என் அக்கா மக இருக்கா நல்ல படிப்பு ,வேலைக்கு போறா. மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கிறா “என்று வந்த வேலையை முடித்து விட்டு கிளம்பினார் அந்த பெண்மணி.
சித்திரை செல்வி வேலுத்தம்பியிடம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
“நம்ம சிறும்பாயி சொன்னது தான் சரி மாமா.., நான் முடிவு பண்ணிட்டேன். நம்ம தனாவுக்கு வெளியே இருந்து பொண்ணு எடுத்துக்குவோம் உள்ளூர்காரிகளே வேண்டாம். . என்ன பேச்சு பேசுறா அந்த முத்துலெட்சுமி?. ஏதோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி பெரிய பணக்காரன் வந்து பொண்ணு கேட்டானாம், அதுக்கு இவ்வளவு பவுசு. அவ மவளுவளுக்கு பணக்காரன் மாப்ளையா கெடைக்கும் போது என் மவனுக ராசா மாதிரி இருக்கானுக, அவனுகளுக்கு கிடைக்காமலா போயிடும்”என்று நொடித்தவரை கருப்பசாமி கடிந்து கொண்டார்.
“ஆமா உன் பெரிய மவனுக்கு பொண்ணு கிடைக்கும். ஓ சின்ன மவனை யோசிச்சு பார்த்தியா? , வெட்டியில சுத்துற பயலுக்கு எவன் வந்து பொண்ணு குடுப்பான். இல்ல, எந்த பொண்ணு தான் கட்டிக்கும் சொல்லு. அதான் அந்த புள்ள வசதியான எடம் வரவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிடுச்சு போல “என்றார்.
சிவசக்திபாலன் இதை எல்லாம் கேட்டு விட்டு உள்ளே வந்தவன் .,”ப்பா என்னப்பா சொல்ற மலருக்கு வேற எடத்துல பேசி முடிச்சாங்களா ஏன் நீங்க விட்டிங்க ???”என கத்த
கருப்பசாமியோ கோபத்துடன் .,”ஆமா டா வேற இடத்துல தான் பேசி முடிச்சிட்டாங்க. என்ன சொன்ன. ?? நான் ஏன் சும்மா விட்டேன்னா. அந்த சங்கரன் அசிங்கமா கேட்குறான், உன் மவன் என்ன வேலை பார்க்கிறான் எந்த தைரியத்தில் பொண்ணு கேட்டு வந்து நிக்கிறன்னு, தனாவை மனசுல வச்சு தான் உனக்கு பொண்ணு குடுக்கவே சம்மதிச்சாங்களாம். “என்று அவரும் தன் பங்கிற்கு கத்தினார்.
கோபத்தில் கதவை எட்டி உதைத்தவன், நேரே மலரிடம் போய் நின்றான்.
மலர் அவனைப் பார்த்து விட்டு சட்டென திரும்பி முருகனிடம் ஒரு பேப்பரை கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருந்தாள்.
“இதெல்லாம் பசங்க எழுதுன தீர்வு அண்ணா. சும்மா தான் தண்ணி பிரச்சினையை தீர்க்க வழி சொல்ற மாதிரி கட்டுரை எழுதுங்கடானு சொன்னேன். அதுல எப்படி எழுதி இருக்கானுக பாருங்க நம்ம பசங்களுக்கு பயங்கர அறிவுண்ணே. இந்த கட்டுரையை படிங்களேன். . எந்த வித உதவியும் இல்லாமல் அவனே எழுதி இருக்கான். இது கூட நல்ல ஐடியாவா எனக்கு தோணுச்சு நீங்க படிச்சுட்டு சொல்லுங்க நடைமுறைக்கு இது சாத்தியமான்னு “என்றவளை சிவா அழைத்தான்.
“நீ போம்மா சிவா கூப்பிடுறான். நான் இதை படிச்சுட்டு சொல்றேன்”என்று அனுப்பி வைக்க, சிவா வேகமாக அவளை தனியே பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
“என்ன சக்தி எதுக்கு இப்படி இழுத்துட்டு வர்ற? விடு சக்தி. .”என்று கையை உதற
அவனோ .,”உங்க வீட்டில் உனக்கு வேற மாப்ள பார்த்திருக்காங்களாம் ???” என்று கோபத்துடன் கேட்க
“என்ன பைத்தியம் மாதிரி உளர்ற சக்தி , உன்னைத் தானே பேசி முடித்து இருக்காங்க.” என்று புரியாமல் கேட்டவளை இழுத்து பிடித்தபடி .,”தூத்துக்குடியில் இருந்து உன்னை பொண்ணு பார்க்க வந்துட்டு பேசி முடிச்சிருக்காங்க. நீ ஒத்துக்காம எப்படி பேசி முடிப்பாங்க. ஏன் உனக்கும் நல்ல பணக்கார மாப்ளை தான் வேணுமோ? அதான் சத்தமில்லாமல் ஒத்துக்கிட்டியோ “என்று கேட்டதும் சுள்ளென்று கோபம் வந்தது மலருக்கு.
“சக்தி நீ அதிகமா பேசுற இங்கிருந்து போயிடு.!! நான் ஏற்கனவே உன் மேல கடுப்புல இருக்கேன். நீ போ இங்கிருந்து “என்று அவளும் பதிலுக்கு திட்டினாள்.
“போறேன் டி போறேன் இதை கட்டி என் பொண்டாட்டி ஆக்கிட்டு போறேன் “என தனது பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து கட்ட முயல அவனை தள்ளி விட்டு ஒரே அறையாக அறைந்து விட்டாள் .
“வா என் கூட” என்று இழுத்து சென்றாள் தோட்டத்திற்கு. ஊரே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை எல்லாம் பொருட்படுத்தாது இழுத்துச் சென்றாள்.
இன்னும் கோபம் குறையாமல் தான் நின்றிருந்தான் சிவா.
“நீ எல்லாம் என்ன தைரியத்தில் என் கழுத்தில் தாலி கட்ட வந்த , வேண்டான்டா என்னைப் பேச வைக்காத. உனக்கா புரியுதா இல்லையா?. நீ வாழற வாழ்க்கை சரி தானா..? சொல்லு. ம்ம்ம். அப்பா பணத்துல உட்கார்ந்து சாப்பிட்டு உடம்பை வளர்த்துட்டு, அடுத்த சந்ததியை உருவாக்க கல்யாணமும் பண்ண வந்துட்ட. நான் சுயநலமா பேசுறதாகவே நீ நினைச்சுக்க. அன்னைக்கு உன்னால ஒரு குடம் தண்ணீர் பிடிக்க முடிஞ்சுதா சொல்லு. என்னைக் காலம் முழுவதும் வச்சு எப்படி காப்பாத்துவ?. ம்ம்ம் சொல்லு. காதல் வாழ்க்கைக்கு அவசியம் தான். ஆனா காதலே வாழ்க்கை ஆகிடாது. நீ கொண்ட காதலுக்கு நான் என்னைத் தந்துட்டா , மனப்பசியும், உடல் பசியும், தீர்ந்து விடும் ஆனா வயிற்றுப்பசி தீராது. தீரவேத் தீராது. உன் அப்பா அம்மா உனக்கு சோறு போடுவாங்க உன்னை கட்டிக்கிட்டதுக்காக போனா போகுதுனு எனக்கும் போடுவாங்க நாளைக்கு நாம பெத்த பிள்ளைகளுக்கும் போடணும் னு என்ன அவசியம் அவங்களுக்கு வந்தது. உன்னை மட்டும் அவங்க பெத்துக்கல, அண்ணன் தங்கைனு ரெண்டு பேர் உன் கூட சேர்ந்து அவங்க பாசத்தை பங்கு போட்டு இருக்காங்க. அவங்களும் உன்னைப் போலவே எதிர்பார்த்தா என்ன செய்வ? . இந்த ஊரில் இருந்து விவசாயம் பண்ணி வாழ முடியுமா. அட அதைத் தான் நீ செய்து இருக்கியா? இல்லையே, உன் அம்மா அப்பா தானே பார்த்துக்கிறாங்க இவ்வளவு ஏன் வெளிநாடு போயிட்டு வந்த உன் அண்ணன் செய்யலையா..? முதல்ல இங்க குடிக்க தண்ணீர் இருக்கா, நீ குடிக்கவே தண்ணி கிடையாது.. இதுல நாளைக்கு உன் பிள்ளையும் வந்து தண்ணி இல்லாம கெடக்கனும். முதல்ல உன் வீட்டில் உள்ளவர்கள் பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய். அப்புறம் வா திமிரா வந்து தாலியோட நில்லு ஏத்துக்கிறேன். உனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கு. உன் பேரை சொன்னா நீ செஞ்ச செயல் தான் எல்லாருக்கும் நினைவு வரனும், அதை விட்டு விட்டு உன் பேரை கேட்டதும். அவனுக வெட்டிப்பயலுக.. வீணா ஊர் சுத்திட்டு அலையிறவனுக னு சொல்லக் கூடாது. நீ கொண்டு வந்த தாலியை கொடு” என்று வம்படியாக பிடுங்கி தன் முந்தானையில முடிந்தவள்.”இப்போ என்னை இழுத்துட்டு வந்ததை ஊரே பார்த்திருக்கு. என்னைக்கு இருந்தாலும் நீ மட்டும் தான் என் புருஷன். பணத்தை காட்டியோ பதவியைக் காட்டியோ என்னை பணிய வைக்க முடியாது. நீயே என்னை விட்டுட்டுப் போனாலும் நான் என்னை சுத்தி சுத்தி வந்த சக்தியோட நினைப்பில் தான் வாழுவேன். புரியுதா?. சாதிச்சு காட்டிட்டு நானும் இந்த ஊருக்காக உழைச்சிருக்கேன், சொந்தக்கால்ல நிக்க என்னாலையும் முடியும் னு உன் குடும்பத்திற்கு நிரூபிச்சு காட்டு. அப்புறம் வந்து என் முந்தானையில இருக்க தாலியை எடுத்து உரிமையா கட்டு. தலை நிமிர்ந்து நிற்க போற உன் கிட்ட தலை குனிந்து தாலி வாங்கிக்கிறேன் . இப்படி பேசிட்டு அவங்க மாப்ளைனு சொல்றவனை கட்டிப்பேன் னு கனவு கூட காணாத . என்னை கட்டிக்க உலக பணக்காரனே வந்தாலும் சம்மதிக்க மாட்டேன். அதே சமயம் நீ உன்னை நிருபிக்கிறதுக்கு முன்னாடி வந்து நின்னா உன்னையும் கட்டிக்க மாட்டேன். கடைசி வரை இப்படியே இருந்துடுவேன். முடிவை நீயே எடு. அதுவரை நான் இருக்கும் திசை பக்கம் கூட வந்திடாத, என் முகத்திலேயே முழிச்சுடாத. மீறி வந்த அது தான் நான் உன்னை பார்க்கிற கடைசி சந்திப்பா இருக்கும். “என்று அவனைப் பார்க்காமல் நடந்து தன் வழியில் சென்றாள்.
சிவசக்திபாலன் இடிந்து போய் நின்றான். வீரமலையும் ,வெற்றியும் முருகனிடம் சிவா இருக்கும் இடத்தை கேட்டு கொண்டு வந்து விட்டனர்.
“ஏய் என்னடா ஆச்சு ஏன் இங்க நிற்கிற மலரு கூட இருக்கன்னு முருகண்ணே சொல்லுச்சு, நீ என்ன டான்னா தனியா நிற்கிற டேய் சக்தி!. டேய் அழறியா !! அடேய் இது என்ன டா ஆம்பள அழுதுகிட்டு. . என்ன மச்சான் ஆச்சு என்று கேட்க.” சிவாவோ அப்படியே சரிந்து அமர்ந்தான்.
“மலருக்கும் என்னைப் பிடிக்கலைடா.இத்தனை நாளும் நான் அவ என்னை விரும்புறான்னு நம்பினேன் ஆனால்” என்று சற்று முன்னால் மலர் பேசியதை வெற்றியிடம் கூறினான்.
“அவளுக்கு என்ன உலக அழகினு நினைப்பா இருடா நான் போய் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்”என கோபத்துடன் எழுந்த வெற்றியை இழுத்து அமர்த்தியவன்.,”வேணாம் மச்சான் விடு எல்லோருக்கும் நான் வெட்டிப்பயலா தான் தெரியுறேன், ஏன் அந்த வடிவரசி கூட அதை தானே சொல்லி வேணாம்னு சொல்லுச்சு. முத்துலெட்சுமி அத்தையும் அதை சொல்லி தானே அசிங்கப்படுத்துச்சு. ஏன் என் வீட்ல என்னை எங்க அம்மா அப்பா திட்டலை. மலருக்கு தெரிஞ்சதுலயா ஆச்சரியம். என்ன மத்தவங்க மாதிரி நேரடியாக நீ வெட்டிப்பயடா உன்னை கட்டிக்க எனக்கு விருப்பம் இல்லை னு சொல்லிட்டு போயிருக்கலாம் இப்படி வேறொருத்தனை கட்டிக்க சம்மதம் சொல்லி இருக்க வேண்டாம் “என்று சோர்ந்து போய் பேசியவன் எழுந்து சென்று விட்டான்.
வெற்றிக்கு கோபம் பீறிட்டது. வீரமலையிடம் கண்டமேனிக்கு மலரை திட்டிக் கொண்டிருந்தான்.
“நான் போய் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன் டா வீரா, நீ கூட வா அவளுக்கு மனசுல பெரிய உலக அழகினு நினைப்பு. பிடிக்கலைனா ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கணும் அவனும் மனசை தேத்திக்கிட்டு இருந்திருப்பான். அதை விட்டுட்டு இத்தனை நாள் பேசிப் பழகி விட்டு அந்த குடும்பமும் நிச்சயம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டு இப்ப முடியாது னு சொன்னா என்ன அர்த்தம் .. நான் இன்னைக்கு ரெண்டு ல ஒண்ணு பார்க்காம விடப் போறதில்லை”என வண்டியில் போகும் போதே மலரை திட்டியபடி சென்றான் வெற்றி. வீரமலையோ .,”டேய் எனக்கென்னவோ. மலரு எதையோ மனசுல வச்சுக்கிட்டு தான் இப்படி பேசி இருக்கும் னு தோணுது. அந்த புள்ள நல்ல புள்ள தான் டா. நீ பாட்டுக்கு ஏதாவது பேசி அது மனசை கஷ்டப்படுத்தி விட்டுறாத.அந்தப் பொண்ணு என்ன சொல்லிட்டுப் போயிருக்கு உன்னைத் தவிர வேற எவனையும் கட்டிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கு. இவன் ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் அந்த புள்ள சொன்னதைப் புரிஞ்சுக்காம பேசிட்டு போறான். நீ மலரை எதுவும் சொல்லாத அவ்வளவு தான் சொல்வேன் “என்று எச்சரிக்கை செய்தான்.
“நீ வாடா எனக்கு தெரியும்”என்று விட்டு மலரின் வீட்டு முன்பு வண்டியை நிறுத்தினான் வெற்றி.
செண்பகவல்லி தான் திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
“என்னல கூட்டுக்காரனுவ ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீய, என்ன சோலில எம்மூட்ல ( என் வீட்டில்) ?”
“எங்க அம்மாயி உன் பேத்தி? அது கிட்ட தான் பேச வந்தேன் “என்றதும்
“இப்ப தான் அவ கோவிலுக்கு போறேன் போனா. செத்தோடம் இருந்தியன்னா பார்க்கலாம்ல ..”
“இல்ல அம்மாயி நான் நேரா போய் பார்த்து பேசிக்கிறேன் “என கூறி விட்டு.,”வீரமலை ஏறுடா போவோம்”என தனது இரு சக்கர வாகனத்தை இயக்கினான்.
கோவிலில் வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்தபடி மலரைத் தேட அவளோ தூணில் சாய்ந்திருந்தாள் கண்களை மூடிக் கொண்டு.
அவளருகில் சென்றவன்.,” மலரு “என்று அழைக்க கண்களை திறந்தவள் சட்டென்று தனது கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்தாள்.
“சொல்லுண்ணா “என்றவளிடம் ,”தனியா பேசனும் இங்க வேணாம் நாளைக்கு காலையில் ஸ்கூலுக்கு போகும் போது சீக்கிரம் கிளம்பி அன்னபூர்ணா ஹோட்டல் கிட்ட வெயிட் பண்ணு வரேன்”என கூறி விட்டு அங்கிருந்து போய் விட்டான் .
வீரமலையோ,“என்னடா ஏதோ திட்டப் போறன்னு பார்த்தா உடனே ஆஃப் ஆயிட்ட. .”
“இல்லடா அந்த புள்ள நான் கூப்டதும் கண்ணை தொடைச்சுச்சு கவனிச்சியா ?? அதுவும் ஏதோ மனசுக்குள்ள போட்டு மறுகுதுனு நினைக்கிறேன் டா. அதான் திட்ட மனசு வரலை. காலையில் என்ன ஏதுனு கேட்போம்.நீ சொன்ன மாதிரி சிவா இந்தப் பிள்ளையை தப்பா நினைச்சிருக்கானோன்னு தான் மாப்ள தோணுது ” என்று கூறி விட்டு வீரமலையை அவன் வீட்டில் இறக்கி விட்டு கிளம்பினான்.
மறுநாள் காலையில், சிவாவோ தன் துணிகளை எடுத்து பைக்குள் அள்ளித் திணித்துக் கொண்டிருந்தான்.
“ஏய்யா எவ்வளவு நேரமா கேட்கிறேன் எங்கய்யா கிளம்புற. ??? அப்பா ஏதோ கோவத்துல திட்டி இருப்பாருடா நீ இரு. ..நான் அவர் கிட்ட பேசுறேன்.” என கெஞ்சிக் கொண்டிருந்தார் சித்திரை செல்வி.
“யாரும் எனக்காக பரிஞ்சும் பேச வேணாம். என்னை புரிஞ்சும் நடக்க வேணாம் நான் வேலைக்கு போவாம இருக்கிறது தானே உங்களுக்கு பிரச்சினையா இருக்குது.. நான் திருப்பூர் போறேன், படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காட்டியும் நான் மூணு வேளை கஞ்சி குடிக்கிறதுக்கு வேலை கெடைக்காம போகப் போகுதா. ஒரு பனியன் கம்பெனில சேர்ந்து கூட வேலை பார்த்து என் வாழ்க்கையை பார்த்துக்கிறேன்.இனிமே உங்க உழைப்புல நான் ஒரு பருக்கை கூட திங்கல, ஆள விடுங்க சாமி . அதே மாதிரி எனக்காக போய் எவளையும் பொண்ணும் கேட்க வேணாம். ஏதோ நான் எப்படி இருக்கேனோ அப்படியே ஏத்துக்கிற பொண்ணா இருந்தா கட்டி குடும்பம் நடத்துறேன் இல்லையா இப்படியே வாழ்ந்துட்டுப் போறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனா கல்யாணத்துக்கும், பாக்யா கல்யாணத்துக்கும் , சொல்லி அனுப்புங்க இல்லையா அதுவும் வேணாம் “என பையை தூக்கி கொண்டு செல்ல கருப்பசாமி பையை பிடுங்கி எறிந்தார்.
“உன் மனசுல என்ன டா நினைச்சுட்டு இருக்க? ஏன் நாலு வார்த்தை நான் திட்ட கூடாதோ.? , தொரைக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திடுமே. அந்த முத்துலெட்சுமி அப்படி பேசும் போது எனக்கு கோபம் வராதா. நீ பாட்டுக்கு ஒரு வேலை வெட்டிக்கு போயிருந்தா யாராச்சும் நாக்கு மேல பல்லு போட்டு பேசி இருப்பாங்களா?.” என திட்டினார்.
“அதுக்கு தான் வேலைக்கு போறேன்னு சொல்றேன் அதுக்கும் ஒத்துக்கிட மாட்டேங்கிறிங்க. ஏன் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தா இப்ப என்ன கௌரவ குறைச்சல் உங்களுக்கு. “என்று பதிலுக்குக் எகிறினான்.
“நல்லா வேலை பார்த்தியே பனியன் கம்பெனியில. போய் முழுசா ஒரு மாசம் அங்க காலம் தள்ள முடியாம டைபாய்டு காய்ச்சலோட திரும்பி வந்த. அதுக்கு அப்புறம் நானும், உங்க அம்மாவும் உன் உடம்பை தேத்த பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். இதுல பெருசா பேசுறான் பேச்சு. . போடா போய் வயக்காட்டை பாரு போ. அது தான் நமக்கு காலம் முச்சூடும் இருக்கும்”என்றார் கருப்பசாமி.
“ஆமா ஆமா அங்க அப்படியே தண்ணி அருவி மாதிரி பாஞ்சு கொட்டுது. இதுல வயலை கவனிக்கனுமாக்கும். . தண்ணி இல்லாம அவன் அவன் ஊரை விட்டு போயிட்டு இருக்கான். வயலைப் பார்க்கணுமாம் வயலை. என்னை நிம்மதியா இருக்க விட்டுறாதீங்க “என்று கடுப்படித்து விட்டு வண்டியை எடுத்து கொண்டு சென்றான் சிவா.
வெற்றி இடையிலேயே அவனுக்கு அழைத்து மணப்பாறைக்கு வரும்படி கூறி விட்டு இணைப்பை துண்டித்தான்.
“இவனுக வேற நேரம் காலம் தெரியாம அங்க வா இங்க வா ன்னு கூப்பிட்டுகிட்டு”என்று முணுமுணுத்து கொண்டே மணப்பாறைக்கு சென்றான்.
மலர் அன்னபூர்ணா உணவகத்தில் காத்திருக்க வெற்றி வீரமலை இருவரும் வந்து விட்டனர்.
“சீக்கிரம் என்ன விஷயம் னு சொல்லுங்கண்ணா எனக்கு கிளாஸ் இருக்கு “என்று அவசரப்படுத்தினாள் .
“முதல்ல உட்காரு மா”என்று விட்டு இரண்டு காபியை மட்டும் ஆர்டர் செய்தான்.
“வெற்றி நீ பேசிட்டு இரு நான் இதோ வந்திடுறேன்”என வீரமலை சிவாவை அழைத்து வர சென்றான்.
“ஏன் மா சிவா கிட்ட என்ன பேசுன அவன் சோர்வாகவே திரியுறான் “என்று ஒன்றும் தெரியாதது போலவே கேட்டிட மலர் சற்று கடுமையாக.,”ஏன் உங்க ஃப்ரெண்டு உங்க கிட்ட ஒண்ணும் சொல்லலையா. ??”
“இல்லம்மா என்ன ஆச்சு ??”என்று கேட்க முதல் நாள் சிவா தாலி கட்ட வந்ததை கூறினாள்.
“சரிம்மா அவன் செஞ்சது தப்பு தான். ஆனா நீ ஏன் வேற மாப்ளைக்கு சம்மதம் சொன்ன நீ செஞ்சது தப்பு தானே அவனை விரும்பிட்டு வேறு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது”என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
“நானா.. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறேன் னு இதுவரை சொல்லலை .. சக்தி என் பாட்டா எனக்காக தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை அது மட்டுமில்லாமல் எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். . ஏன் தெரியுமா அவனுக்கு நான் அழுதா பிடிக்காது .என் கண்ணுல தண்ணி வந்தா அவனுக்கு கஷ்டமா இருக்கும். நான் அழக் கூடாது னு சொன்ன முதல் ஆள் அவன் தான் என் பாட்டா ,ஆச்சி, பெரியம்மா பெரியப்பா ,இவங்க எல்லாம் கூட நான் அழுதா கண்ணை துடைச்சு விட்டு சரி விடு எல்லாம் சரி ஆகிடும் னு சொல்வாங்க ஆனா சக்தி அப்படி இல்ல உனக்கு நான் இருக்கேன் நீ இனி அழாத னு சொல்வான். நான் கரெக்டா வீட்டுக்கு வந்துட்டேனா. இல்லையா, சாப்டேனா னு என்னை பெத்தவர் இது நாள் வரை கேட்டதோ நினைச்சதோ இல்ல. ஆனா என் சக்தி இதை எல்லாம் தெரிஞ்சுப்பான். ஆனா இதுவரை என் கிட்ட பேசி சாப்டியா, வந்துட்டியா னு கேட்டது இல்ல, என் ப்ரெண்டு நம்பர் வாங்கி அவ கிட்ட எல்லாம் கேட்டுப்பான். நான் பேச மாட்டேன் னு அவனுக்கு தெரியும்.. இருந்தாலும் சாதாரண லவ்வர் மாதிரி இதுவரைக்கும் ஏன் பேசலை, இதுவரை ஏன் என் கிட்ட பேசலை னு ஒரு நாள் கூட கேட்டதில்லை. எல்லார் கண்ணுக்கும் அவன் வெட்டியா சுத்தினது தெரிஞ்சதுனா எனக்கு என்ன தெரிஞ்சது தெரியுமா. அவனுடைய அக்கறை. நான் அவனை கவனிச்சது இல்லை னு நினைச்சிருப்பான் ஆனா நான் அவனை மட்டும் தான் கவனிச்சேன் னு எனக்கு மட்டும் தான் தெரியும். காலையில் எழுந்து அவங்க அம்மாவுக்கு வேலை செய்றது. திட்டுற மாதிரி திட்டிக்கிட்டு கரெக்டா அவன் அப்பா சாப்பிடும் நேரத்திற்கு சாப்பாடு கொண்டு போய் தர்றது, அவன் பாட்டாவுக்கு யாருக்கும் தெரியாமல் மூக்கு பொடி வாங்கி தர்றது. அவன் தங்கச்சி பாக்யாவை மணப்பாறைக்கு போறேன் மணப்பாறைக்கு போறேன் னு சொல்லி வாரா வாரம் ஹாஸ்டல் ல போய் பார்த்துட்டு பணம் தந்து விட்டு வர்றது. வீரமலை காலையில் சாப்பிட மாட்டார் னு தெரிஞ்சு தினமும் தானும் அவரோட சேர்ந்து கடையில் சாப்பிடுறது ஏன் உங்களால லாங் டிரைவ் பண்ண முடியாது னு தெரிஞ்சு தானாகவே உங்க கூட வர்றது எல்லாம் அவனுடைய நல்ல குணம். அது மட்டுமில்லாமல் ஸ்கூல் பசங்களுக்கு ஹெல்ப் பண்றது எல்லாம் நான் கவனிச்சிருக்கேன். இவ்வளவு நல்ல குணம் உள்ளவனை அன்னைக்கு அந்த முத்துலெட்சுமி என்ன பேச்சு பேசினாங்கனு தெரியுமா. ?? அவனை வெட்டிப்பயன்னு தெரிஞ்சு தான் வேணும்னே எனக்கு கட்டி வைக்க நினைச்சதா சொன்னாங்க.”என்று அன்று முத்துலெட்சுமி மலரிடம் பேசியதை விவரித்தாள் மலர்.
அன்று மலர் வந்ததும் சங்கரன் பஞ்சாயத்து அலுவலகம் செல்வதாக முத்துலெட்சுமியிடம் கூறி விட்டுச் செல்ல அங்கே மலர் நின்றிருந்தாள். முத்துலெட்சுமியோ தானாக பேசியபடி பணத்தை எடுத்து பீரோவில் வைத்தார்.
“இந்த அம்மாவுக்கு நகை ஒண்ணு தான் கேடு. . அந்த வெட்டி பயலுக்கு கட்டி வச்சு அவளை என் காலடியில் விழுந்து கெடக்க வைக்கணும் அப்போ தான் நான் நிம்மதியா இருப்பேன்” என்று பீரோவை பூட்டினார்.
“என் மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் உங்க காலடியில அடிமையா கெடக்குற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன் ம்ம்ம்.” என கேட்க
“ஓஓஓ நீ வந்துட்டியா எல்லாம் கேட்டுட்ட போல . ஆமாம் டி நீன்னா எனக்கு சுத்தமா பிடிக்காது ஏன் தெரியுமா காரணம் உங்க அம்மா. நான் விரும்பின ஒருத்தரை கட்டிக்கிட்டு உன்னையும் பெத்துக்கிட்டாளே அது தான் காரணம் . உன் அப்பனுக்கு என்னை எல்லாம் கண்ணே தெரியல, உன் அம்மாகாரி தான் கண்ணுக்கு தெரிஞ்சா. .நான் வசதி இல்லாத வீட்ல பொண்ணு எடுக்க மாட்டேன் னு சொன்ன உங்க அப்பாயிக்கு ஒத்து ஊதினாரே உன் பாட்டன்.. ஏதோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி உன் ஆத்தாகாரி உன் அப்பனை கட்டிக்கிட்டு வலம் வந்தாளே . என் வயித்தெரிச்சலை வாங்கி கொட்டிக்கிட்டாளே .நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாளா நீ பிறந்த மூணு வயசுல செத்துப் போனா. அவ செத்து உன் அப்பன் கிறுக்கு பிடிச்ச மாதிரி கெடக்கார்னு வேகமா வந்து என்னை பொண்ணு கேட்டாரு உன் பாட்டன். அப்போ கூட அவர் எனக்கு கிடைச்சிட்டார் னு நினைச்சேன் ஆனா என் மாமியா அவர் அறையில கூட விடல உன்னை வளர்க்க தான் கட்டி வச்சாங்களாம். உன் மனசுல இடம் பிடித்து அப்புறம் உங்க அப்பா மனசு மாறினா நான் அவர் கூட வாழனுமாம் அப்புறம் என்ன வெங்காயத்திற்கு என்னை கட்டி வச்சாங்க. அதுல இருந்து உன்னைப் பார்த்தாலே பிடிக்கலை. அந்த வேதவல்லி மினுக்கினது எல்லாம் நினைவுக்கு வந்தது யார் கிட்டயாவது அந்த கோவத்தைக் காட்டனும். அதுக்கு எல்லாம் பழி வாங்க வேதவல்லி மாதிரியே பொறந்த நீ தானே கிடைச்ச. கிழவி செத்தப் பிறகு உங்க அப்பா தன்னால என் வழிக்கு வந்தாரு. இதோ சந்தோஷமா வாழுறேன். எந்த வசதியை காரணம் காட்டி என்னை கட்டி வைக்க மாட்டேன் னு சொன்னாங்களோ அதே வசதி இல்லாத வாழ்க்கையை உன்னை கடைசி வரை இருக்க வைக்க போறேன் இல்ல .அந்த நிம்மதியில் நான் சந்தோஷமா வாழுவேன். “என்றார் ஆங்காரமாக.
மலர் அதிர்ந்து நிற்க அவளை உலுக்கியபடி .,”என்னம்மா மகாராணி இப்ப புரியுதா நான் ஏன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னேன்னு. நீ காலம் முழுக்க என் மக காலடியில் விழுந்து கெடக்கனும் னு தான் ஒரு வீட்டுல உங்களை கட்டி வைக்க ஒத்துக்கிட்டேன். அதுவும் அந்த சிவா பய எப்படியும் ஒரு வேலைக்கு கூட போக மாட்டான். அவங்க அண்ணனை நத்தியே( தொற்றுதலாக) வாழ நினைப்பான்.. அப்படி வாழும் போது என் மக போடுற பிச்சையில நீ வாழும்படி ஆவும், அப்ப என் மனசு குளிர்ந்து போகும். என்ன சொன்னா உன் ஆத்தாகாரி. சாவும் போது கூட அவ திமிர் அடங்கலை.. என்ன சொன்னா என்ன சொன்னா எனக்கு அவ வாழ்க்கையை பிச்சையா தர்றேன் வாழ்ந்துட்டு போடி ன்னு சொன்னா. இப்ப யார் பிச்சை போடுறா ன்னு புரியுதா உனக்கு. இந்த கல்யாணம் நடந்தா நான் நினைச்சது நடக்கும் னு நினைச்சா அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்க விடுவேனா நானு. இப்ப போட்ட போடுல அவங்க மவனை உலுக்கி என் முடிவுக்கு கொண்டு வந்திட மாட்டாங்க. நீ கடைசி வரை என் கிட்ட இல்ல என் மக கிட்ட பிச்சை எடுத்து தான் டி வாழனும் “என்று மீண்டும் ஆங்காரமாக சொல்லியவரை அழுத்தமாக பார்த்து விட்டு.,”உன் பணத்திலோ இல்லை உங்க புருஷனோட பணத்திலோ வாழக் கூடாது னு தான் என் சுய சம்பாதியத்தில் வாழுறேன். நீங்க என்ன சொன்னாலும் என் அம்மா போட்ட பிச்சையில தான் நீங்க வாழறீங்க. உண்மையைச் சொல்லுங்க அதுக்காகவா என் அப்பாயி உங்களைப் பொண்ணு கேட்டு வந்தாங்க.நல்லா இருந்த என் அம்மா கிட்ட உங்களுக்கும் என் அப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி அவங்களை நோகடிச்சு கடைசியில் நொந்து போய் இறந்தாங்க என் அம்மா. யாரு சொன்னா நான் கஷ்டப்பட்டு வாழ்ந்தேன்னு நான் நிம்மதியா சந்தோஷமா ஒரு மகாராணி போல வாழுறேன் இனியும் வாழ்வேன். யாரை வெட்டிப்பய னு சொன்னீங்களோ அவனை இந்த ஊரே மெச்சுற மாதிரி ஒரு ஆளா மாத்திட்டு கல்யாணம் பண்ணிப்பேன். இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனை மாத்துவேன்.நீங்க எந்த எண்ணத்தில் அவனை எனக்காக தேர்ந்தெடுத்திங்களோ எனக்கு தெரியாது ஆனா அவனை மாதிரி ஒரு நல்லவனை கட்டிக்க உங்க மகளுக்கு குடுத்து வைக்கலை. அவன் வாழ வைப்பான் என்னை ஒரு மகாராணி போல. இந்த ஊரே தூக்கி கொண்டாடும் அவனை அதை நீங்க பார்க்க தான் போறீங்க “என்று விட்டு வெளியே வந்தவள் மீண்டும் உள்ளே வந்து .,”அதே மாதிரி இன்னொரு விஷயமும் கேட்டுக்கங்க. தனஞ்செயனுக்கு உங்க மகளை கட்டி வைக்க நீங்க என்ன தகிடுதத்தம் பண்ணாலும் அது நடக்காது. இது ஒரு சவாலாகவே நீங்க எடுத்துக்கங்க.” என கூறி விட்டு வெளியேறினாள்.
இத்தனையும் வெற்றியிடம் கூறி முடித்தவள் இறுதியாக தனது முந்தானையை எடுத்து காட்டி.,”இந்த முடிச்சுல அவன் கொடுத்த தாலி இருக்கு. எனக்காக அவனே வாங்கின பரிசு. லவ் பண்ற பொண்ணுக்கு யார் யாரோ என்னெல்லாமோ பரிசு தந்திருப்பாங்க, ஆனா அவன் எனக்கு தர நினைச்ச பரிசு இந்த மாங்கல்யம்.இதை வாங்கிட்டு அவ்வளவு சந்தோஷமா என் கிட்ட சொன்னான் எல்லார் முன்னிலையிலும் என் பனிக்கு நான் வாங்கிய மாங்கல்யம் னு சொல்லி கட்டுவேன் னு. இதை கட்டுற உரிமையை என் சக்தியை தவிர வேற எவனுக்கும் உரிமையும் கிடையாது தகுதியும் கிடையாது. அவனை ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல ஏமாத்திட்டேன் னு நீங்க என்ன வேண்டுமானாலும் நினைச்சுக்கங்க அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நீங்க யாருமே என்னை புரிஞ்சுக்கலைனாலும் அவன் என்னை புரிஞ்சுப்பான் நான் சொல்லாமலே அவனுக்கு புரியும் நான் ஏன் கோபமா இருக்கேன்னு. ஆனாலும் அவன் கிட்ட சொல்லித் தான் இருக்கேன். என் பேச்சைக் கேட்டு அவன் நடந்துப்பான். மத்த யார் எதை பேசினாலும் எனக்கு கவலை இல்லை. நான் கிளம்புறேன் அண்ணா எனக்கு டைம் ஆச்சு. என் கிட்ட நீங்க இப்படி பேசினேன்னு சொல்லிடாதீங்க அப்புறம் உங்க மேல கோவப்பட போறான். வரேன் அண்ணா “என்று வெளியே சென்றாள். வெற்றிக்கு மனம் முழுவதும் நிம்மதி பரவியது. நிச்சயம் இவள் தான் தன் நண்பனின் மனைவி என்று திடமாக நம்பினான்.
வீரமலை மட்டும் தனியே வந்திட வெற்றியோ.,”எங்கடா அவன்??”என்று கேட்க .,”அவன் ஃபோன் பண்ணி நான் முருகண்ணே கூட தாலுகா ஆபீஸ் போறேன் னு சொல்லிட்டு வச்சுட்டான் டா ஆமா மலரு என்னடா இப்படி பேசிட்டு போகுது. சிவா கிட்ட சொல்லலாமா வேணாமா? “என கேட்டதும்
வெற்றியோ புன்னகை முகத்துடன் .,”அவனுக்கு சரியான ஆள் மலர் தான் டா , மலர் சொன்னது போல தான் சிவா பேசுறானான்னு பார்க்கலாம் “என்று அன்னபூர்ணா உணவகத்தில் சாப்பிட்டு கிளம்பினர்.
முருகனோடு தாலுகா அலுவலகம் வந்திருந்த சிவாவோ.,”ஏன் முருகண்ணே எதுக்கு இங்க வந்தீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா..??”
“ஆமா சிவா நம்ம கொளத்தை தூர் வார மனு கொடுத்திருந்தேன் ஒண்ணுக்கும் வேலைக்கு ஆகலை இங்க இன்னைக்கு தாசில்தார் வர்றாராம் அதான் அவர் கிட்ட ஒரு மனு போட்டு வைப்போம். ஏதாவது நடவடிக்கை எடுக்கிறாங்களான்னு பார்க்கலாம். இல்லையா நேரா கலெக்டருக்கு தான் மனு கொடுக்கணும்”என்று பேசியபடி மெதுவாக.,”சிவா என் பொண்டாட்டி ஒரு விஷயம் சொன்னா அது உண்மையா ??”என்று கேட்க
“என்னண்ணே விஷயம் .. ??”என்றான் புரியாமல்.
“ஒண்ணுமில்லை முத்துலெட்சுமி அத்த உங்க வீட்டு சம்பந்தம் வேண்டாம் னு சொல்லிடுச்சாமே, அப்புறம் தூத்துகுடியில் இருந்து மலரை பொண்ணு கேட்டு வந்திருந்தாங்களாம், அந்த மாப்ளைக்கு மலரை கட்டப் போறதா கேள்வி பட்டேன். நல்ல புள்ள. உன்னை பத்தி உயர்வா பேசும்.. அது என் கிட்ட அடிக்கடி உன்னை பத்தி பேசுற ஒரே விஷயம் அவன் ஒரு நாளைக்கு இந்த ஊரே கொண்டாடுற மாதிரி நடந்துப்பான் அண்ணா னு தான். நிறைய பேசும் நல்ல புள்ள “என்றதும் சிவா புன்னகைத்தான்.
“எனக்கு தெரியும்ண்ணே பனிக்கு என்னை பத்தி என்ன நினைப்பு இருக்கும் னு. “என்றவன் தனஞ்செயன் வடிவரசியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும் அதன் பிறகு நடந்த சம்பவங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.
“இவ்வளவு நடந்து போச்சா. ஆனா நான் ஒண்ணு மட்டும் சொல்வேன் சிவா, மலரைக் கல்யாணம் பண்ணிக்க நீ குடுத்து வச்சிருக்கணும் எப்படியாவது மலர் கிட்ட பேசி சம்மதம் வாங்கு கல்யாணம் பண்ணிக்க.” என பேசிக் கொண்டே தாசில்தாரிடம் மனுவை கொடுத்து விட்டு வந்தனர்.
வெளியே வந்தவனை கண்டு கொண்டனர் வெற்றியும் வீரமலையும். “டேய் உன்னை ஹோட்டலுக்கு வர சொன்னா இங்க என்னடா பண்ற??”என்று கேட்க
அவனோ .,”சும்மா தான் டா. எதுக்கு வர சொன்னீங்க ??”என்று பேசியபடி நடக்க, முருகனோ.,”சிவா நீ கிளம்பறதுனா கிளம்பு கமலா வர்றேன் னு சொல்லுச்சு நான் சந்தைக்கு போயிட்டு பஸ் ல வந்துக்கிறேன்”என்று விடைபெற்றுக் கொண்டார்.