பகுதி-08

சங்கரனின் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக வந்து விட்டனர் செல்வியும் ,கருப்பசாமியும், கூடவே வேலுத்தம்பி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு நான்கு பேரை அழைத்து வந்தனர்.

மலர் பள்ளி செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள். செண்பகவல்லி குளித்து விட்டு புடவை மாற்றி வரவும், சங்கரன் வீட்டு வேலையாள் வந்து நின்றான்.

“என்னல என்ன வேணும்? ஏதோ ஆடு திருடுறவன் மாதிரி வந்து நிக்க. என்ன சோலி என் வூட்ல ??”என்று கேட்க “அட அப்பாயி. உங்களையும் பாப்பாவையும் வீட்டுக்கு வர சொல்லி பாட்டன் சொன்னாரு அதான் கூப்ட வந்தேன்.” கிளம்பி வாறிங்களா ??”என ராகம் போட்டான் வந்தவன்.

“எதுக்கு ல. திடுதிப்பென்று வர சொல்லி இருக்காவ? “என்று கேட்க.

“அது தெரியாது அப்பாயி உங்க ரெண்டு பேரையும் வர சொன்னாங்க சொல்லிட்டேன் அம்புட்டு தான் “என்று நடந்தான்.

“ஆச்சி நேத்து தான் பார்த்தேன். ஒண்ணும் சொல்லலையே இப்ப வர சொல்லி இருக்காரு? “என்றபடி தன் ஆச்சியை அழைத்து கொண்டு சென்றாள் சங்கரன் வீட்டிற்கு.

பொன்னர் பின் பக்கமாக வரும்படி அழைத்தார். இருவரும் சென்றனர்.

“எதுக்கு பாட்டா இந்த நேரத்தில் வர சொன்னீங்க.?ஸ்கூலுக்கு வேற நேரமாச்சு?”என்று சலித்தவளை பொன்னர் விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி கூறினார்.

“எதுக்கு பாட்டா. ??”

“ஏ பொருவே உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காக. நீ ரெடியா தானே இருக்க. செண்பகம் அந்த மேசையில நகை பெட்டி இருக்கு எடுத்து போட்டு விடு. அப்படியே அந்த மல்லியப்பூவை வச்சு விடு. “என்று சொல்ல, செண்பகவல்லி மகிழ்ச்சியாக ஓடினார் தன் வயதைக் கூட பொருட்படுத்தாமல்.

பனிமலருக்கோ முகம் இறுகியது.

‘யார் திடீரென வந்திருக்காங்க . யார் என்னனு தெரியலையே. ??’மனதில் குழம்பினாள்.

பொம்மை போல அலங்காரம் செய்து கொண்டு இருக்க. வடிவரசியை அலங்காரம் செய்து விட்டு பொன்னனை தேடி வந்தார் முத்துலெட்சுமி.

அங்கே அமர்ந்திருந்த செண்பகவல்லியையும் மலரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு”இன்னும் பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன், அழைச்சுட்டு வாங்க. “என்று மொட்டையாக கூறி விட்டு சென்றார்.

சங்கரனோ பொன்னுசாமி, மரகதம் , சூரியகாந்தி மூவரையும் தானே சென்று அழைத்து வந்தார்.

சிவசக்திபாலன், தனஞ்செயன் இருவரையும் வரவழைத்து விட்டனர்.

சக்தி அமைதியாக தன் அண்ணனுடன் அமர்ந்திருந்தான்.

மனதிலோ பயப்பந்து உருண்டது.

மலரை தன் அண்ணனுக்கு தான் பேசுவார்கள் என்று.

தனஞ்செயனுக்கு வேறொரு எண்ணம் இருந்தது. அவனும் மனதினுள் பிரளயத்தை அடக்கி கொண்டிருந்தான்.

பனிமலரை சூர்யா அழைத்து வரவும், வடிவரசியை முத்துலெட்சுமி அழைத்து வந்தார்.

சித்திரைசெல்வி நிறைவாக. “பொண்ணு எல்லாம் ஏற்கனவே பார்த்த பொண்ணு தான், இருந்தாலும் முறைனு ஒண்ணு இருக்குல்ல. அதான் வந்தோம். அப்புறம் ஐயர் கிட்டவே சாதக பொருத்தத்தையும் பார்த்திடுவோம். முடிஞ்ச அளவு ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வச்சுக்கிடலாம். இவங்க கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பாக்கியாவுக்கு பார்க்கணும். “என்றார்.

“அதுக்கென்ன செல்வி பார்த்திடுவோம். ஐயரே பெரிய புள்ள ஜாதகத்தை தனா தம்பிக்கும், அரசி ஜாதகத்தை சிவா தம்பிக்கும் ,பாருங்க. “என்றதும் தனா , சிவா இருவரும் எழுந்து விட்டனர். மலர் சிவாவை பார்த்து கொண்டிருந்தாள்.

“ஏன் தம்பி எழுந்தீங்க இருங்க பொருத்தம் பார்த்திடுவோம் அப்புறம் ஜாதகம் கூடி வந்தா கையை நனைச்சிடலாம் பூவும் வச்சிடலாம் “என்று சங்கரன் சொல்ல.

வேலுத்தம்பி தான் காப்பாத்தினார்.

“அது வயல்ல கடலை ஊண வர சொல்லி இருக்கோம் அதான்… வரும் போதே சொன்னானுக நீங்க பார்த்துட்டு வாங்க நாங்க காட்டு வேலையை பார்த்துக்கிறோம்’னு நான் தான் சம்பிரதாயத்துக்காக பார்த்துட்டு கிளம்புங்கனு சொன்னேன் அதான் கிளம்பிட்டாங்க “என்றதும் .,”ஆமாம்”என்று தலையாட்டி விட்டனர்.

“அட இருங்க வந்தது வந்தாச்சு எவ்வளவு நேரம் ஆகப் போகுது.. ஐயரே சீக்கிரம் பாருங்க “என்றார் சங்கரன்.

இரு ஜோடிகளின் ஜாதகமும் பொருத்தம் பார்க்கப்பட்டது.

“ஆஹா எல்லா பொருத்தமும் நல்லா பொருந்தி இருக்கு நீங்க பேஸா கல்யாணத்தை முடிக்கலாம்” என்றார்.

வடிவரசி வாயெல்லாம் பல்லாக சிவாவை பார்க்க, அவனோ கடுப்பாக நின்றிருந்தான். மலரின் பார்வை நிலத்தை நோக்கி இருந்தது.

தனஞ்செயனின் பார்வை சூரியாவிடம் இருக்க, செண்பகவல்லி இரு ஜோடிகளையும் பார்த்தவண்ணம் நின்றிருந்தார்.

“இதென்ன இவன் இங்க பார்க்கிறான். அவன் அவளை முறைக்கிறான். இந்த. மலரு ஒண்ணும் சொல்லாம தரையை பார்த்து நிற்கிறா. என்ன பண்ண போகுதுகளோ தெரியலையே “என்றெண்ணி கொண்டு நின்றார். வேறு வழி.

இருவரும் பொறுத்திட இயலாது கிளம்ப . வடிவரசி ,மலர் இருவரையும் உள்ளே அனுப்ப ஐயர் திருமணத்திற்கு நாள் பார்த்தார். தனஞ்செயனும் சிவசக்தியும் வெளியேறி விட்டனர்.

“வர்ற ஆவணி இருபது நல்ல நிறைஞ்ச வளர்பிறை முகூர்த்தம் இருக்கு .அப்பவே விவாஹத்தை முடிச்சிடலாம். எல்லாருக்கும் சம்மதம் தானே”என்றிட அனைவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.

“அப்போ சரி நான் நிச்சய பத்திரிக்கை மேலோட்டமா எழுதிடுறேன். “என்று எழுதி முடித்து வாசித்தார்.

“ஆவணி மாதம் இருபதாம் தேதி ….”என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்து மணமக்கள் பெயரை கூற அனைவரும் அதிர்ந்து போயினர்.

அவர் தனஞ்செயன் வடிவரசிக்கும் ,சிவசக்திபாலன் பனிமலருக்கும் , விவாஹம் செய்யப்படுவதாக அனைவராலும் முடிவெடுக்கப்பட்டது என்று முடித்தார்.

இது முத்துலெட்சுமி ஏற்பாடு என்பது ஒருவராலும் அறியப்படவில்லை.

“சாமி தனஞ்செயனுக்கும் மலருக்கும் ,வடிவரசிக்கும் சக்திக்கும் தான் ஜோடி “என்க

 ஐயரோ திகைத்து பின் தெளிவாக .,”சொல்றேன் னு தப்பா எடுத்துக்காதீங்க. நான் எப்படி பேர் சொன்னேனோ அது போல தான் பொருத்தம் பார்த்திருக்கேன். நான் சொன்ன மாதிரியே விவாஹம் பண்ணினா ரெண்டு ஜோடியும் ஷேமமா இருப்பா அவ்வளவு பொருத்தம் இரு ஜோடிகளுக்கும்…” என்றார்.

கருப்பசாமி தயக்கமாக.,”இது தான் பொண்ணுனு ரெண்டு பேருக்கும் காட்டின பிறகு மாத்தினா நல்லா இருக்காதே சாமி. அதான் யோசிக்கிறேன்”என்றார்.

“பிடிக்கிறதை விட ஜாதகப் பொருத்தம் நல்லா இருக்கு. ரெண்டு பேரும் மனமொத்த தம்பதியாக வாழுவாங்க பசங்க கிட்ட பேசிப் பாருங்க ஒத்துக்கிட்டா பண்ணிடுங்க இல்லாட்டி உங்க மனதிருப்திக்காக வேண்டுமானால் ஜோடி மாத்தி பொருத்தம் பார்க்கிறேன்”என்று மீண்டும் ஒரு முறை ஜாதகத்தை புரட்டினார்.

ஏனோ அவர் முகத்தில் மலர்ச்சி இல்லை. எல்லோரும் எதிர்பார்ப்புடன் நோக்க வேலுத்தம்பி தான் இம்முறையும் பேசினார்.

“சாமி வேண்டாம் விட்டுடுங்க பேரனுக கிட்ட நான் பேசுறேன்.. அதெல்லாம் என் பேச்சை தட்ட மாட்டானுக. அப்புறம் பொண்ணை பெத்தவங்க தான் சொல்லணும் “என்றதும் சங்கரன் வாய் திறக்கும் முன்பே ,”இந்த பொருத்தமும் பரவாயில்லை தான் ஆனா அது மாதிரி இது இல்லை “என்றார் தயக்கமாக.

“சாமி அதான் நான் சொல்றேனே ரெண்டு பேர் கிட்டயும் நான் பேசிக்கிறேன் “என்றார் வேலுத்தம்பி.

இதை கேட்பதற்கு தான் மலர் அந்த இடத்தில் இல்லை எப்போதோ வெளியேறி இருந்தாள். அவளுக்கு சக்தியை உடனே காண வேண்டும் . அதே சமயம் தனாவிடமும் பேசிட வேண்டும் என்று விரைந்து சென்று இருந்தாள்.

சிவா தன் நண்பர்களுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

“விடு மாப்ள. பொண்ணு தானே கேட்டு இருக்காங்க. உன் அம்மா கிட்ட பேசுவோம் டா. இதுக்கு போய் இடிஞ்சு உட்கார்ந்து இருக்க. நாங்கள் பேசுறோம் டா”என்று சமாதானம் சொல்ல. அவனோ மனம் ரணமாக பேசினான்.

“ப்ப்ச் மலர் என்ன முடிவு எடுத்திருக்கான்னே தெரியலையேடா. அவ பெரியவங்க சொல்றதை தான் கேட்பா. அதனால நான் தான் என் மனசை மாத்திக்கணும் எனக்கு தெரிஞ்சு தனாவுக்கும் மலரை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்…” என்றிட மலர் சிவாவை தேடி வந்து விட்டாள். வெற்றி ,வீரமலை, இருவரும் அவளைக் கண்டதும் எழுந்து நின்றனர்.

“டேய் மலரு டா !!”என்று கிசுகிசுத்து விட்டு. அங்கிருந்து செல்ல சிவாவோ.,”இருங்கடா நானும் வரேன்”என வம்படியாக நகர மலர் அவனை அழைத்தாள்.

“சக்தி ஒரு நிமிஷம் “என்று கூப்பிட. அவனோ நக்கலாக .,”ம்ம்ம் சொல்லுங்க முதல்ல வாழ்த்துக்கள், அண்ணி ஆகப் போறீங்க. அண்ணன் கிட்ட ஏதாவது முக்கியமான விஷயமா பேசணுமா அண்ணி “என்று ஏளனத்துடன் கேட்க

அவனை முறைத்து விட்டு., “ஓஓஓ அப்போ நான் அண்ணியா வர்றதுல உங்களுக்கு முழு விருப்பம் சம்மதம் அப்படி தானே. !!”என்று கேட்க அவனோ அமைதியாக நின்றிருந்தான்.

“லவ் பண்றேன் னு பின்னாடியே சுத்துவ.இப்ப அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கனு அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பேசினா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டி விட்டு வருவ அப்படி தானே. ம்ம்ம் சரி.. அப்படியே இரு. உன் கிட்ட பேச வந்தேன் பாரு என்னை சொல்லனும். “என்று அங்கிருந்து போய் விட்டாள்.

சக்தி தலை குனிந்து கொண்டே நிற்க, வீரமலை வந்து உலுக்கவும் சுயம் பெற்றிட .,”டேய் எருமை இதுக்கு மேல ஒரு பொண்ணு வந்து சொல்வாளாடா கல்யாணம் பண்ணிக்க சொல்லி. அந்த பொண்ணு உன் மேல தான் டா ஆசைப்பட்டு இருக்கு இதுக்கு மேல நீ தான் பார்த்துக்கணும் உங்க வீட்டில் பேசு அவ்வளவு தான்”என்று கூறினான்.

சிவாவிற்கு அப்போது தான் அவள் கூறியது புரிந்திட சங்கரன் வீட்டை நோக்கி ஓடினான் . அங்கே மலர் இல்லை எப்போதோ தன் வீட்டுக்கு சென்று இருக்க இங்கே முத்துலெட்சுமியிடம் வடிவரசி கத்திக் கொண்டிருந்தாள்.

“ஏன் மா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. சிவா மாமாவை தான் நான் கட்டிப்பேன் னு உங்க கிட்ட சொன்னேனா இல்லையா.ஆனா நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க இப்போ தனா மாமாவுக்கு என்னையும் அவளுக்கு சிவா மாமாவுமா முடியாது மா.. “என்று கத்தினாள்.

“ஏய் கொஞ்சம் வாயை அடக்கி பேசு. நான் உன்னை பெத்தவ அந்த நினைப்பு இருக்கட்டும்”என்றார் பல்லை கடித்தபடி..

“ம்மா எனக்கு சிவா மாமாவை கட்டி வை இல்லைனா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். “என்றாள் வடிவரசி.

“கட்டி வச்சு.விட்டத்தை பார்த்து விட்டு இருக்கியா. போடி பொழைக்க தெரியாதவளே. அந்த வெட்டிப் பயலுக்கு உன்னை கட்டி வைக்கிறதுக்கு பாலுங் கிணத்துல தள்ளிடலாம். இதோப்பாரு வடிவு. தனா வெளிநாட்டுக்கு எல்லாம் போய் நல்லா சம்பாதிக்கிறான் பணக்காரன். அவனை கட்டிக்க நினைக்காம போயும் போயும் வெட்டிப் பயலை கட்டிக்க நினைக்கிற. ஏன் டி உன் புத்தி இப்படி போகுது “என்றார்.

“ம்மா எனக்கு தெரியாது எனக்கு சிவா மாமா தான் வேணும் “என்று பிடிவாதம் பிடித்தாள்.

முத்துலெட்சுமியோ இவளை அதட்டினால் சரி வராது. அன்பா சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு வடிவரசியின் அருகில் அமர்ந்து.,”இதோப் பாரு அரசிமா அம்மா உனக்கு எப்பவாவது கெடுதல் நினைச்சிருக்கேனா. சொல்லு. நீ சிவாவை கல்யாணம் பண்ணி இந்த மணப்பாறையை விட்டுக் கூட தாண்ட முடியாது. இங்கேயே கடைசி வரை அந்த மலர் கையை எதிர்பார்த்து வாழற மாதிரி ஆகிடும்.. இதே நீ தனாவை கல்யாணம் செய்துக்கிட்டா. வெளிநாட்டுக்கு போகலாம் கார்ல வரலாம் போகலாம். நீ மலரை அதிகாரம் பண்ணலாம். நகை நட்டு னு பவுசா வாழலாம். நீயே யோசிச்சு முடிவு எடு அந்த தனாவுக்கு சம்பளமே எண்பதாயிரமாம். இந்த காட்டுல முக்கால்வாசி அவன் பேர் ல தான் இருக்குதாம். கல்யாணம் ஆகிட்டா நீதான் அதுக்கு முதலாளி. இங்க இருக்கிற சொத்துபத்து அங்க இருக்கிற தோட்டம் எல்லாம் உனக்கு தான். நீயே முடிவு எடு. ரொம்ப நல்ல வாழ்க்கை இதை விட்டுடாத “என்று வடிவரசியின் மனதை கரைத்து கொண்டிருந்தார்.

வடிவரசி குழப்பத்துடன் வெளியேற முத்துலெட்சுமிக்கு புது நம்பிக்கை பிறந்தது. கண்டிப்பாக தன் மகள் ஒப்புக் கொள்வாள் என்று.

இதை எல்லாம் கேட்ட செண்பகத்திற்கு கோபம் வந்தாலும். மலரின் மனதை தெரிந்து கொண்டு பின்னர் பேசிக் கொள்ளலாம் என விட்டு விட்டார்.

சிவா வடிவரசி ,முத்துலெட்சுமி, பேச்சை கேட்டு அதிர்ந்து போனவன். “அடிப்பாவிகளா பணம் தான் உங்களுக்கு முக்கியம். அடச்சே இப்படி இருக்காங்களே !!”என்று நினைத்து கொண்டு நகர்ந்தான்.

தனஞ்செயனோ மனதில் பாரத்துடன் மாமரத்தின் அடியில் நின்றிருக்க சூரியா வந்தாள்.

“அப்புறம் மாமா வாழ்த்துக்கள் பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணிக்க போறீங்க. மெம்பரோட மருமகன். பெரிய பண்ணைக்காரர் ஆகிட்டீங்க . வடிவரசி அழகான பொண்ணு.”என்று சொல்ல தனஞ்செயனுக்கு கோபம் வந்து விட்டது.

“சூர்யா வேணாம் என்னை கோவப்படுத்தாத பொண்ணு பார்க்க போற விஷயமே எனக்கு தெரியாது .காலையில் தான் தெரியும். பொண்ணு தானே பார்த்து இருக்காங்க. கல்யாணம் பண்ண முடிவு பண்ணலையே. நான் எங்க வீட்ல எப்படி பேசனுமோ அப்படி பேசிப்பேன். நான் உன்னை தவிர வேறு யாரையும் கட்டிக்க மாட்டேன் புரிஞ்சுதா. சும்மா என்னை கோவப்படுத்தாத சொல்லிட்டேன் “என்று விறு விறு என்று நடந்தான்.

சூரியா கண்களில் நீருடன் அவன் போகும் திசையை வெறித்திருந்தாள்.

இவர்களின் உரையாடலை வடிவரசியும் கேட்டிருந்தாள்.

….தொடரும்.