அத்தியாயம்-07

சிவா மலர் இருவரும் சேர்ந்து செடிகளை நட , அதை வடிவரசி பார்த்து விட்டு வீடு சென்றவள் கோபமாக கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள் .

அப்போதும் அவள் கோபம் அடங்கவில்லை. மீண்டும் எதையோ போட்டு உடைக்கப் போக, அதற்குள் முத்துலெட்சுமிக்கு தகவல் போனது அவர் விரைந்து வந்தார். 

“அரசி என்ன இது இப்போ நிறுத்தப் போறீயா இல்லையா ??” என்று அவளது கையைப் பிடித்திட வடிவரசியோ கோபம் குறையாமல் கத்தினாள். 

“அவளை இந்த ஊருக்கு வரவழைச்சு நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை இழக்க வச்சுட்டீங்க இப்ப சந்தோஷமா உங்களுக்கு….?”என்று கத்த முத்து வேகமாக கதவை சாத்தி விட்டு வந்தார். 

“இங்க உட்கார் அரசி” என்றவர் .,”என்ன விஷயம் னு பொறுமையா சொல்லு….? நான் தீர்வு சொல்றேன்.. “என்றார் மகளிடம் ஆதரவாய் பேசி.

வடிவரசி வரும் போது நடந்ததை எல்லாம் கூறி விட்டு.,”இதோப் பாரு மம்மி எனக்கு சிவா மாமாவை கட்டி வை… இல்ல அவ கவுத்திடுவா போலிருக்கு …. ச்சே இதுக்கு தான் சொன்னேன் கேட்டிங்களா இப்ப பாருங்க … என்ன பண்ணிட்டானு …. “என்று தாம் தூம் என குதித்தாள். 

முத்துவிற்கு விஷயம் என்னவென்று புரிந்தது. தன் மகளின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்த போதிலும்… தன்னை சமன் படுத்தி கொண்டு.,”இதுக்கா இவ்வளவு சங்கடப்பட்ட… அட நீ நல்ல பிள்ளை போ பொருவே…. அவளுக்கு அம்புட்டு திறமை எல்லாம் கிடையாது…. அவ அவனை காதலிக்கிறான்னு நினைச்சியா… ஸ்ஸ்ஸப்பா…. அதெல்லாம் எதுவும் கிடையாது… மரம் தானே நட்டாங்க,  இதுக்கு ஏன் நீ குதிக்கிற…. அட அவ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டா…. அவளுக்கு நான் மாப்ள பார்த்துட்டேன்… அடுத்த வாரம் பார்க்க வர்றாங்க…. வந்த சுருக்குல கல்யாணத்தை முடிச்சிடுறேன்… நீ சொணங்காத”என்று பொய்யாய் ஒரு காரணம் சொல்லி சமாளித்தார். 

“நீ நிஜமா தானே சொல்ற மம்மி. இதோப்பாரு மம்மி எனக்கு சிவா மாமா தான் வேணும்… அவ எதுவும் இடையில் வந்தா அப்புறம் பார்த்துக்க ” என எச்சரித்தாள் வடிவரசி. 

‘போயும் போயும் அந்த வெட்டிப்பய தான் இவ கண்ணுக்கு தெரிஞ்சிருப்பான் போல எல்லாம் நம்ம தலையெழுத்து …எனக்குனு வந்து பொறந்திருக்கே ‘என்று மனதில் சலித்துக் கொண்டார் முத்துலெட்சுமி.

“ஹான்! அதெல்லாம் நான் வர விடுவேனா மா நீ சந்தோஷமா இரு மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று சமாதானம் செய்தார்.

மனதிலோ., ‘இதை நாம கண்டுக்காம இருந்தாலே நாம நினைச்சது நடந்திடும்’என்று மகிழ்ந்தார். 

மலரோ இது எதுவும் அறியாமல் தன் வேலையை கவனித்தாள். பொன்னர் சற்று உடல்நலம் தேர்ந்து காட்டிற்கு செல்ல ஆரம்பித்து விட்டார். 

செண்பகவல்லி பொன்னுசாமியின் வீட்டிற்கு சென்று இருக்க, விடுமுறை ஆதலால் மலர் பொன்னரை காண காட்டிற்கு சென்றாள். 

“ஏ பொருவே அட மலரு என்ன இந்த பக்கம் காத்து வீசுது… என்ன வெவரம்… “என்று கேட்க அவளோ சிரித்துக் கொண்டே .,”ஏன் வரக் கூடாதா??”என்று விட்டு அருகே வந்தாள். 

“உன் காட்டுக்கு நீ வராம யாருத்தா வருவா வா வா ” என்றார் பொன்னர். 

“பாட்டா “என்று அதட்டியவள் .,”நீங்க ஏன் இந்த வேலை எல்லாம் செய்துட்டு இருக்கீங்க ” என்று கேட்கவும் 

“சரி சரி நீ இரு நான் போய் அந்த பக்கம் புதரா கெடக்கு அதை சுத்தம் பண்றேன் நீ அந்த இருப்புசட்டியை எடுத்துக்கிட்டு வா “என்று அவள் கூறியதை கண்டு கொள்ளாமல் அந்த பக்கம் சென்றார். 

மிகச் சரியாக சிவா அங்கே வந்தான்.  

“ஹை டீச்சரம்மா… என்ன இந்த பக்கம் வந்திருக்கா…. போய் பேசலாமா.! திட்டுவாளோ..! ,திட்டுனாலும் வாங்கிக்கலாம்… ” என்று முணுமுணுத்தபடி செல்ல அங்கே வீரமலை ,வெற்றி , இருவரும் அவனைத் தேடிக் கொண்டு வந்து விட்டனர். 

“டேய் மச்சான்… டேய்… “என்று கத்த ., 

“வந்துட்டாய்ங்களா… நாம இருக்க இடத்தை எங்க இருந்து கண்டு பிடிக்கிறாய்ங்க “என்று புலம்பியபடி திரும்பினான் .

“டேய் சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்ட, ஆமா வர்றியா மணப்பாறை வரை போயிட்டு வருவோம்…. குறிஞ்சியில் மட்டன் பிரியாணி வாங்கி தரேன்”என்று வெற்றி கேட்க .,

இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்தவன் “வரேன்… ஒரு பத்து நிமிஷம் இரு உன் தங்கச்சி அந்த பக்கம் இருக்கா, நாலு வார்த்தை மட்டும் பேசிட்டு வந்திடுறேன்…. “என்று ஓடினான்.

“இவன் ஒருத்தன் டா அந்தப் பொண்ணு பின்னாடியே அலைஞ்சுட்டு”என சலித்தபடி அமர்ந்தான் வெற்றி. 

மலரைத் தேடி வந்தவன் விசிலடித்தான். 

“என்ன டீச்சர் மேடம் இந்த பக்கம்??”என்று கேட்க… 

மலர்.,”பாட்டாவை பார்க்க வந்தேன் “என்று சொல்லி கொண்டே நடந்தாள். 

“ஓஓஓ சரி சரி நான் மணப்பாறைக்கு போறேன்…. ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா வாங்கிட்டு வருவேன் “என்று இழைந்தவனை இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்தாள்.

“சரி சரி முறைக்காதீங்க… ஏதோ மாமன் மகளாச்சே அதான் ஆசையா கேட்டேன்… வேண்டாம் னா விடு…” என்றதும் எதுவும் பேசாமல் நடந்தாள். 

“ஏதாவது சொல்லுறாளா பாரு… “என்று முனகியவன் அவளின் பின்னால் நடந்திட…. அவள் பொன்னரை நோக்கி சென்றாள்.

அவர் புதரை சுத்தம் செய்து கொண்டிருக்க…. இருவரும் அருகில் சென்றனர். 

“இரு பாட்டா நான் வெட்டுறேன் “என்று அருகில் செல்ல .,”வேண்டாம் பொருவே அவ்வளவு தான் .. அட கருப்பசாமி மவனா எப்படியா இருக்க ? என்ன இந்த பக்கம்…? “என்றபடி, அடுத்த இடத்திற்கு நகர ,சட்டென வழுக்கியபடி காலை உள்ளே விட்டு விட்டார்.

“உன் பேத்தியை சைட் அடிக்க தான் வர்றேன் “என்றான் கிண்டலாக 

சடுதியில் அவரைப் பிடித்து கொண்ட மலர் “பாட்டா பாட்டா “என்று அலறிட, அவரின் எடையை தாங்க முடியாமல் திணறினாள். சிவா பதறி விட்டான் சடுதியில் நடந்த சம்பவத்தில் 

“தாத்தா இரு… இரு மலரு நீ விடு நான் புடிச்சுக்கிறேன். நீ போய் அங்க வெற்றி இருப்பான் கூட்டிட்டு வா… வேகமாக ஓடு…. நான் பார்த்துக்கிறேன்… நீ போ மலரு “என அவசரப் படுத்தினான். 

“பாட்டா பாட்டா “என்று அலறியவள் கண்ணீருடன் வெற்றியை நோக்கி ஓடி விஷயத்தை கூற இருவரும் ஓடி வந்தனர். 

வெற்றி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு .,”எப்டி மாப்ள… உள்ள போனாரு.. சரி சரி புடிச்சு இழு… பாட்டா இந்தா புடிச்சுக்கிறேன் ஒண்ணும் இல்ல கால மெதுவா அசைச்சு எடு….. நான் கையை புடிச்சிருக்கேன் சரியா… “என மூவருமாக சேர்ந்து அவரை இழுத்து வெளியே போட்டனர். 

அதற்குள் ஊரும் கூடி விட பொன்னரை கட்டிலில் அமர வைத்து விட்டு தண்ணீரை கொடுத்தவன் … அங்கிருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல மலர் கண் கலங்கியபடி பொன்னரின் கையைப் பிடித்து நின்றாள். 

ஊரார் அனைவரும் பாராட்டி விட்டு நகர மலரை சமாதானம் செய்து கொண்டிருந்தார் பொன்னர். 

“இப்ப எதுக்கு அழுதுகிட்டு …. அதான் காப்பாத்தியாச்சு இல்ல…. அப்புறம் ஏன்…? ?”என்றான் அவளது அழுகை பொறுக்க மாட்டாமல் 

“நல்லா சொல்லுப்பா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன் கேட்பேனான்னு அடம் பிடிக்குது…. “என்று பொன்னர் மெதுவாக எழுந்து கொண்டார். 

“இப்ப எங்க போறீங்க ??”என்று கையைப் பிடிக்க .,”இரு பொருவே அந்த பக்கம் ஒதுங்கிட்டு வரேன் “என நடந்தார். 

“தேங்க்ஸ் “என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

“சரி நீ அழுகாத… நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு….  கண்ணை தொடைச்சுட்டு வீட்டுக்கு போ… “என்று அவள் அனுமதி இன்றி கண்ணீரை துடைத்து விட்டவன் ,  தன் நண்பர்களுடன் சென்று மீண்டும் திரும்பி “தேங்க்ஸ் சொன்னதுக்கு பதிலா உனக்கு ஏதாவது வேணும் னு கேட்டு இருக்கலாம்…. சந்தோஷமா வாங்கி தருவேன் “என்று சொல்ல அழுத முகத்துடன் முறைத்தாள். 

“நீ அந்த பொண்ணு கிட்ட அடி வாங்காம அடங்க மாட்ட வாடா போவோம்… யப்பா மலரு பாட்டன பத்திரமா கூட்டிட்டு போ…. முடிஞ்சா உங்க அப்பா கிட்ட சொல்லி இந்த மாதிரி மூடாம கெடக்குற போர்வெல் குழியை எல்லாம் மூட சொல்லு… இவரா இருக்கவாசி புடிச்சு இழுத்துட்டோம்…. சின்ன பிள்ளைனா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்… ஒரு சுஜித்தை இழந்து அழுத மாதிரி அழ வேண்டியது தான்…. போர் போடையில ஆர்வமா தோண்ட வேண்டியது…. தண்ணி வரலைனா அதை என்னனு கூட கண்டுக்கிறது இல்ல… சுஜித் னு ஒரு குழந்தை இறந்து போகவும் அறிவு வந்து குழியை மூட சொல்லி அரசாங்கம் உத்தரவு போட்டுச்சு.ஆனா எவன் மதிக்கிறான் அது சரி ஒரு வார்டு மெம்பரே அதை செய்யலையே?! “என்று வெற்றி சொல்ல மலருக்கு புரிந்தது. தன் பாட்டா விழுந்தது மூடப்படாமல் இருந்த போர்வெல் குழி என்று..

கண்களை துடைத்து விட்டு பொன்னனை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு சென்றவள் நேரே சென்று நின்றது சங்கரனிடம் தான் . 

“என்னம்மா ??”என்று கேட்டார் என்றும் பேசாத மகள் இன்று தன் முன்பு வந்து நிற்பதை கண்டு… 

மலரோ நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். பொன்னர் விழுந்ததை கூறி விட்டு பின்பு… “முதல்ல அந்த போர் போட்ட இடத்தை எல்லாம் மூட சொல்லுங்க இல்ல வேறு ஏதாவது செய்ங்க…. இன்னைக்கு அவர் பெரியவர் இழுத்து பிடிச்சு காப்பாத்தியாச்சு….. இதுவே சின்ன குழந்தைங்க விழுந்தா என்ன ஆகறது….?இதோ சுஜித் விழுந்து இறந்து போனானே எத்தனை வசதியான உபகரணங்கள் வந்தும் காப்பாத்த முடிஞ்சதா…?அது மாதிரி இன்னொரு முறை நடக்க விட்ராதீங்க…. “என்றாள். 

முத்துலெட்சுமி எல்லாவற்றையும் கேட்டு விட்டு வேகமாக.,” இதோப் பாரு மா எல்லா குழியையும் மூடனும்னா செலவு ஆகும்… ஏற்கனவே தண்ணி வராத கடுப்பில் இருக்கிறவங்க இதை எல்லாம் செய்வாங்களா…. நீ வேற …. வந்தா வந்த வேலையை மட்டும் பாரு அது போதும்… “என்று சொல்ல மலர் பதில் பேசாமல் சங்கரனை பார்த்தபடி நின்றிருந்தாள். 

“இதுவரை நீ எதுவும் என் கிட்ட கேட்டதில்லை. முதல் முறையாக கேட்டு இருக்க கண்டிப்பாக செய்றேன் மா… நம்ம காட்டுல மட்டுமில்லை நம்ம ஊர் ல யார் யார் எல்லாம் போர் போட்டு இருக்காங்களோ அவங்க கிட்ட பேசுறேன்… பஞ்சாயத்துல வீஏஓ கிட்ட பேசி முடிவு எடுக்கிறேன்…. “என்றவர்.,” சாப்டியா மா… “என்று கேட்டார். 

அவளோ.,”ரொம்ப சந்தோஷம்… “என்று வெளியேறினாள். போகின்ற மகளை கண்களில் நீர் துளிர்க்க பார்த்து கொண்டிருந்தார் சங்கரன். 

“அதுக்கு எல்லாம் எவ்வளவு செலவு ஆகும்… ஏன் தேவை இல்லாத வேலை பார்க்கிறீங்க உங்க அப்பாவை யார் அங்க போக சொன்னது? …. இவர் போய் உழைச்சா தான் நாம சோறு திங்க முடியுமா ??”என்று பேசியவரை முறைத்து விட்டு “உள்ளே போ முத்து… இதுல நீ தலையிடாத “என்று விட்டு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு கிளம்ப முத்துலெட்சுமிக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. 

“இருக்கட்டும் கவனிச்சுக்கிறேன் “என்று உள்ளே சென்றார். 

சொன்னது போலவே சங்கரன் பஞ்சாயத்தில் பேசி போர் குழிகளை மூடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க முயற்சித்தார். முதலில் தன்னுடைய தோட்டத்தில் உள்ள குழிகளை மூட ஆள் அனுப்பினார். முருகனிடம் இந்த விஷயத்தை சொல்லவும்,’ ஊர் இளைஞர்களை வைத்து செய்திடலாம்’ என யோசனை கூறியவன் முதலில் சிவாவிடம் பேசி சம்மதிக்க வைத்தார். 

சிவாவோ வேலை செய்வதற்காக பணம் பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து வேலை செய்ய வைத்தான் ஊர் இளைஞர்களை

சொன்னது போலவே பணமும் வாங்கி தந்திருந்தான். 

பொன்னுசாமி தனது தோட்டத்தில் ஏற்கனவே அந்த வேலையை செய்திருந்தார்.  

எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது… வடிவரசி சிவாவைப் பற்றி தன் அன்னையிடம் கூறி விட்ட மகிழ்வில் கணிணி வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.  

சூரியா கல்லூரிக்கு சென்று வர , மலரும் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். 

சிவா பேருந்து நிலையத்தில் நின்று தினமும் அவளை பார்த்து விட்டு செல்வான்.  அதனையும் மலர் கவனித்துக் கொண்டு தானிருந்தாள். 

‘ஒரு மனுசன் தினமும் இவ போற வர்ற வழியையே பார்க்கிறானே னு கண்டுக்கிறாளா பாரு அழுத்தம் புடிச்சவ’ என்று மனதுக்குள் தான் திட்ட முடிந்தது அவளை… அவளிடம் கேட்டால் உன்னை யார் பார்க்க சொன்னது என்று கேட்பாளே 

மற்ற முறைப்பெண்களை வம்பு செய்வது போல இல்லை மலர் விஷயம் என்பதை வெகு விரைவில் உணர்ந்து கொண்டான் சிவா.  மலரை கிண்டல் செய்யவோ, இல்லை சாதாரணமாக அவளிடம் பேசவோ இயலவில்லை அவனால் அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ ஒரு குறுகுறுப்பு அலைகடலின் ஆர்பரிப்பு அவனுள், காரணமேயின்றி ஏற்படும் மகிழ்ச்சிக்கு பெயர் காதலென்று உணர்ந்து கொண்டான். ஆனால் அவள் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை தான் அவனால் கண்டறிய இயலவில்லை. 

*********

“செல்வி எல்லாம் எடுத்து வச்சுட்டியா சீக்கிரம் மா நல்ல நேரம் முடிஞ்சிடப் போகுது இல்ல… வெரசா கிளம்பு….”என்று துரிதப்படுத்தினார் கருப்பசாமி. 

“இதோ வந்துட்டேங்க …ஆமா ஏங்க பசங்களை அழைச்சுட்டு போக வேண்டாமா…. ??”என்று கேட்டார் செல்வி. 

“இல்ல செல்வி, மொத நாம போய் சம்மதம் கேட்டுக்கிட்டு ஜாதகம் சரியா பொருந்தி வந்ததும் கல்யாண தேதி குறிச்சிட்டு அப்புறம் பசங்களை அழைச்சுட்டு போவோம் என்ன ??”என்றார். 

“சரி” என்று சம்மதித்த செல்வி சங்கரன் வீட்டிற்கு பெண் கேட்பதற்காக கிளம்பினார் . 

இங்கே மலருக்காக சிவா தான் சம்பாதித்த பணத்தில் மாங்கல்யம் வாங்கி இருந்தான் அங்கே அவளைப் பெண் கேட்க போகிறார்கள் என்று கூறியதும். 

….. தொடரும்.