தூறல் 6:
கண்மணி பரீட்சை சமயம் தினமும் வீடு வந்து செல்ல நேரம் இருக்காது என்று ஜானகியிடம் சொல்லி கல்லூரியிலே தங்கிக் கொண்டாள். இதை சித்துவிடம் சொல்லவில்லை .

அலுவலகத்தில் தேவ் ,”ஏன் டா ஒரு மாதிரி இருக்க. ஒரு வாரமா சரி இல்லையே! என்ன ஆச்சு! சிஸ்டர் எப்படி இருக்காங்க. அடுத்த வாரம் பார்ட்டி நியாபகம் இருக்குல.. ஆனந்த், கிருஷ்ணன் வரேன் சொல்லி இருக்காங்க.. நம்ம கம்பனி பத்தாவது ஆண்டு விழா வேற வருது! நான் மட்டும் பேசிகிட்டே இருக்கேன் ! என்ன ஆச்சு. சிஸ்டருக்கும், உனக்கும் எதாவது சண்டையா?”
“உன் சிஸ்டர் என் கண்ணில் பட்டா தான சண்டை போட முடியும்” ..
“என்ன டா இன்னுமா பரீட்சை முடியல ! ஒ, இன்று தான் முடியும் சொன்னாங்க…”
“என்னது பரிட்சையா?”

ஒ! மேடம் விடிய விடிய பரிட்சைக்கு தான் படித்தாங்களோ! அன்று அதுக்கு தான் சண்டை வந்ததே! இதை எப்படி மறந்தேன் .
ஒரு மாதம் முன்பு கண்மணி வெற்றியிடம் “மாமா, சாரி! உங்களை தொந்தரவு செய்ய மன்னிக்கணும். எனக்கு செமஸ்டர் பீஸ் கட்டனும். என்னுடைய டெபிட் கார்டு எதோ வேலை செய்ய மாடீங்குது. இல்லை என்றால் அதையே உபயோகபடுத்தி இருப்பேன்.”
“இதுக்கு எதற்கு டா சாரி . இனி உன் தேவை எல்லாம் சித்தார்த்திடமே கேளு! அவனை தான் உனக்கு கார்டியனா போட்டு இருக்கு” .அவள் யோசனையை கண்டு “என்ன மருமகளே! ஹிட்லரிடம் எப்படி கேட்க என்று யோசிக்கிறியா” என்ற போது கண்மணி சிரித்து விட்டாள்.
அன்று இரவு கண்மணி ஒரு பேப்பரை நீட்டி “எல்லாம் சரியா இருக்கா பாருங்க !”
“என்ன பேப்பர்! நீ என்ன எல் கே ஜி யா படிக்கிற! படிக்க தெரியும் ல .படிச்சுக்கோ!”
“எனக்கு ஒரு 3500 கொடுங்க.”
அவளை விநோதமாக பார்த்தான் .”இந்த பேப்பரில் கார்டியன் மட்டும் போட்டு இருந்தா பத்தாது . செமஸ்டர் பரிட்சைக்கு கார்டியன் தான் பணம் கட்டனும்.”
“இத்தனை நாள் யார் கட்டினாங்களோ அவங்களையே கட்ட சொல்லு.”
“எங்க அப்பாவிடம் சொல்லலாம். பாவம் பெரிய தொழில் அதிபர், அவர் பெண்டாட்டி பரிட்சைக்கு பணம் கட்ட பைசா இல்லை எண்ணி விட்டார்கள் என்றால் உங்களுக்கு தான் அசிங்கம் .எனக்கு ஒன்றும் இல்லை .நான் அவரிடமே கேட்டுக்கிறேன்” என்று அவள் அப்பாவை அழைத்தாள்.

கோபத்தை கட்டு படுத்தி “அதை கட் பண்ணு. இப்ப என்ன செய்யணும் சொல்லற?”
அவன் கப்போர்டில் இருந்து ATM கார்டு எடுத்து கொடுத்தான் .

அதை கையில் வாங்கி அவன் பாஸ்வர்ட் pin, சொல்லுவான் பார்த்துக் கொண்டு இருந்தாள் .
“ஹே பட்டிக்காடு! அது என் விசிடிங் கார்ட் இல்லை . பணம் எடுக்கும் கார்ட். உனக்கு இதை எப்படி உபயோக படுத்தனும் தெரியுமா? இதை மெசினில் போட்டா பணம் வரும் “
கண்மணிக்கு வந்துதே கோபம் .”உலகத்திலே நீங்க மட்டும் தான் படித்தவங்க, அறிவாளி நினைப்பா! அது எப்படி அப்படி நினைக்கலாம் . கார்டு கொடுத்தா பாஸ்வர்ட் சொல்லுவீங்க என்று பார்த்துக் கொண்டு இருந்தேன் . இந்த கார்டு மெசினில் போட்டு உங்க பேரை சொன்னா தானா பணம் வந்திடுமா? கார்டு கொடுத்தா பாஸ்வர்ட், பின் நம்பர் சொல்லணும் தெரியாது .நீங்க எல்லாம் என்னத்த தொழில் செய்து கிழிக்கிறீன்களோ!அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.”
“வேண்டும் என்றே நான் படிக்க கூடாது என்று தான திட்டம் போடறீங்க! நான் பரிட்சையே எழுதல ..போதுமா ?”
“நான் எப்ப அப்படி சொன்னேன்” என்றதை கேட்க அவள் அங்கு இல்லை .
அடுத்த நாள் அவள் கல்லூரி கிளம்பும் போது அவள் பை மீது பணம் வைத்து ,பக்கத்திலே கார்ட் வைத்து, பின் எழுதி வைத்து இருந்தான் .
அப்ப, என்ன கோபம் வந்தது என்று அதை நினைத்து இப்ப சிரித்துக் கொண்டு இருந்தான் .
தேவ் சித்துவை விநோதமாக பார்ப்பதை பார்த்து
“பரீட்சை என்றா சொன்ன?“
“ஆமாம் வீட்டில் இருந்து போயிட்டு வர நேரம் ஆகுது என்று என் தங்கை வினிதாவும், கண்மணி சிஸ்டரும் ஹாஸ்டலிலே தங்க முடிவு செய்து இருந்தாங்க! பத்து நாளா வீட்டில் வினி இல்லாமல் போர் டா! அவ இருந்தா வீடே கலகலப்பாக இருக்கும்.”
சித்துவும் மனதில் கண்மணி பற்றி அதையே உணர்ந்தான்.
கண்மணி வீட்டில் இருந்தால் எந்நேரமும் அதிதி, பிரவீன் மூவரும் அரட்டை கச்சேரி தான். பத்து நாளாக வீடே அமைதியாக இருப்பதை எண்ணி சித்துக்கு ஆச்சரியம். அப்போது எதனால் யோசிக்க முடியாமல் இருந்தவன் இப்ப, கண்மணியால் தான் என்று உணர்ந்தான்
கண்மணிக்கு ஏற்கனவே வினிதாவை தெரியும். ரெண்டு வருடம் பள்ளி படிப்பை இருவரும் ஈரோட்டில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். தேவ் அவன் தந்தை இறந்த பிறகு அவன் தங்கையும் ,அம்மாவையும் அவனுடனே அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் .
“எப்ப டா பரீட்சை முடியுது சொன்ன? இன்று தான?”
தேவ “ஆமாம் டா! நான் போய் வினியை அழைத்து வரணும்” .
பத்து நாள் கழித்து கண்மணியை பார்க்க உள்ளமும் உடலும் பரபரத்தது.
“டேய் அந்த மீட்டிங் இருக்கே!” என்ற சித்துவிடம் “ஆமாம்! மறந்தே போயிட்டேன். சரி அவளையே வர சொல்லிவிடறேன்”.
“வேண்டாம் தேவ். பாவம் வினி . உன்னை எதிர் பார்த்து ஏமாந்து போவாள். உனக்கு பதிலா நான் போய் அழைத்து வரேன் .நீ மீட்டிங் அட்டெண்ட் செய்” என்றவுடன் சித்துவை சந்தேகமாக பார்த்து ,விஷமமாக சிரித்து “எங்கயோ இடிக்குதே! என்ன விஷயம் ..ஒழுங்கா சொல்லிடு.. சித்து, நீ கண்மணி சிஸ்டரிடம் இன்னும் நடந்ததை எல்லாம் சொல்லலையா ? எத்தனை தடவை சொல்வது .சீக்கிரம் சொல்லிவிடு டா! நீயே பிரச்சினையை பெரிது செய்யாத ?”
“டேய், அவ சின்ன பெண் ! ஒழுங்கா என்னை புரிந்து கொள்வாளா சந்தேகமா இருக்கு டா! எனக்கு அவளிடம் இந்த விஷயத்தை பேசவே பயமா இருக்கு . அவ அப்பா மீசைக்காரனை நினைத்தால் கொஞ்சம் உதரளாகவே இருக்கு.”
“நீ எடுத்து சொன்னா சிஸ்டர் கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க .நீ சொல்லும் அளவிற்கு எல்லாம் சின்ன பெண் இல்லை” என்று தைரியம் கொடுத்தான் .
அப்பவே தேவ் மனதில் உன்னை அறியாம உன் மனசு மாறத் தொடங்கி இருக்கு சித்து! கண்மணி எப்படி நினைத்தால் உனக்கு என்ன? அவளை பார்த்து எதற்கு பயப்படனும். பிடிக்கவில்லை என்றால் பத்து நாளா ஏன் அவளை காணாம தவிக்கிற ! உன் மாற்றத்தை பற்றி நான் சொல்ல போவது இல்லை. உனக்கா ஒரு நாள் புரியும் என்று சிரித்துக் கொண்டான் .
“டேய் என்ன கிளம்பலையா ?”
“கிளம்பறேன் !”
உல்லாசமாக அவன் கண்மணியை பார்க்க விரைந்தான் .
கல்லூரி வாசலிலே காத்துக் கொண்டு இருக்கும் போது தேவை இல்லாமல் கண்மணி மனதில் ஆசையை விதைக்கிறேனோ? என்னால் எதையும் கண்டுக்காமல் நிம்மதியா இருக்க முடியுமா? கண்மணி நம்புவாளா? இப்படியே இருந்தால் பிரிவது சுலபம். இப்ப எப்படி இருக்கேனோ அப்படியே இருந்திட வேண்டியது தான்.

கண்மணி தூரத்திலே சித்து காரை கண்டு கொண்டாள். அத்தை எனக்காக டிரைவரை அனுப்பி இருக்காங்களோ? கண்மணி வினியுடன் ஆசையாக காரை நெருங்கும் போது வண்டி சீறி பாயிந்தது.
“வினி! அது எங்க கார் தான் . என்னை அழைத்துக் கொண்டு போகாமல் எங்க அவசரமா போகுது” .
“நம்மளை கவனித்து இருக்க மாட்டாங்க கண்மணி . நீயே சொல்லறியே ஏதோ அவசரம் என்று. எதாவது அவசர வேலையா கிளம்பி போய் இருக்க போறாங்க. நமக்கு கல்லூரி பஸ் வந்துவிட்டது . வா இதிலே போய்டலாம்” என்ற போது கண்மணிக்கு மனதில் ஏதோ நெருடல்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஜானகி நலனை விசாரித்து “அத்தை, நம்ம வண்டியை கல்லூரிக்கு அனுப்புனீங்களா?அதே போல வண்டியை பார்த்தேன்” .
அட, சின்ன பெண், நான் வண்டி அனுப்புவேன் எதிர் பார்த்து ஏமாந்து போய் இருக்காளே! இது ஏன் எனக்கு தோணாமல் போச்சே ! இதுவே அதிதி சொல்லாமலே அனுப்பி இருக்கேனே, வெறும் வாய் வார்த்தையால் தான் மக சொல்கிறேனா என்று வருந்தினாள்.
ஜானகி முக உணர்வுகளை படித்து ஐயோ! நான் ஏன் அனுப்பவில்லை கேட்கிறேன் நினைத்து விட்டார்களா?
ஜானகி வருந்துவது பிடிக்காமல் ” தேவ் அண்ணா வரேன் சொன்னாங்க அத்தை. கடைசியில் ஏதோ வேலையினால் வரமுடியல சொல்லிடாங்க . பத்து நாளா பொழுது போச்சா! என்ன செய்தீங்க? ஒழுங்கா மாத்திரை சாப்பிடீர்களா? நான் பரிட்சையை சூப்பெரா செய்து இருக்கேன் .எங்க ஹிட்லரை காணோம்” ..
“என்னிடமே என் பையனை ஹிட்லர் சொல்லறியா? ஜாக்கிரதை .. இரு ஹிட்லரிடமே சொல்லறேன்.”
“அச்சோ அத்தை! தெரியாம சொல்லிட்டேன் . உங்க பையனை போல நல்லவரை, வல்லவரை நான் பார்த்ததே இல்லை. தெரியுமா?”
சாப்பிடும் போது பிரவீன் வந்தான். “பாபி, எங்க போனீங்க! உங்க கல்லூரிக்கு இன்று வரலாம் நினைத்தேன்.அந்த சமந்தாவை நேரில் பார்க்கலாம் நினைத்தால் கடைசி நிமிடத்தில் வேலை. இன்னும் ரெண்டு மாதம் பொறுத்து இருக்கனுமா? எப்படியாவது உங்க கல்லூரி பிகரை செட் செய்து தீரனும் .எனக்கு நீங்க தான் உதவி செய்யணும் பாபி !”
விளங்கிடும் என்று முனுமுனுத்தாள்.
“என்ன பாபி, ஓயாமல் படித்து இளைத்து விட்டீர்கள் போல !”
“அதை ஏன் கேட்கிறீர்கள் தேவரே! படித்து எல்லாம் இல்லை . இந்த ஒரு வாரமா தான் சாப்பாட்டையே சாப்பிட்டேன்! என்ன முழிக்கிறீங்க தேவரே! சாப்பிடும் நேரத்தில், சாப்பிட விடாமல் ஜோக் என்று ஏதோ மொக்கை போடுவதால், கஷ்டப்பட்டு சிரித்து வயிற்றில் காற்றை அடைத்துக் கொள்கிறேன் போல !அது தான் என் உடம்பில் வித்தியாசம்!”
“பாபி, டூ மச் . நான் இனி பேசவே போறது இல்லை.”
“ரொம்ப நல்லது டா” என்ற ஜானகியிடம் கண்மணி ஹை 5 தட்டிக் கொண்டாள்.
“பாபி , நீங்க தேவர் ,தேவர் சொல்லி நாளைக்கு என்னை கல்யாணம் செய்யும் வீட்டில் ஜாதி பிரச்சினையை கொண்டு வர போறீங்க!”
அவன் விளையாடுவது தெரியாமல் கண்மணி சீரியசாக “அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கோ!”
“பாபி யோசிக்கும் அளவிற்கு என்ன சொன்ன! பாவம்,இல்லாத மூளையை கசக்கறாங்க பாரு “என்று அதிதி வந்தாள்.
கண்மணிக்கு புரிந்தவுடன் “என்னிடம் வேண்டாம் . ஜாக்கிரதை! எனக்கு பொல்லாத கோபம் வருமாக்கும்” என்று கண்களை உருட்டி , ஒரு விரல் காட்டி மிரட்டினாள்.
“உங்களுக்காவது கோபம் வரதாவது ! உங்களுக்கு கோபம் வந்தா எப்படி இருக்கும் பார்க்கணும் ஆசை !ஆனா நீங்க தான் எப்போதும் இப்படி சிரித்த முகமாகவே இருக்கீங்களே ! எங்க அம்மாவுடன் இந்நேரம் ஒரு சண்டையை தொடங்கி ஜானகியை கொஞ்சம் டெரர் செய்து, பயபடுத்தி இருக்க வேண்டாம்! வேஸ்ட் பாபி !”
“அச்சோ !சண்டையா !”என்று அலறினாள்.
“அண்ணா ரொம்ப லக்கி தான்” .
கண்மணி கோபத்தைக் கண்டு உங்க அண்ணா எப்படி அலறுவான் கொஞ்சம் நாளில் பார்க்க தான போறோம்..

பிரவீன் தட்டை பார்த்து “ஹாய் வீண்! பூரியா !அது தான் முதல் ஆளா வந்துட்டியா ?” என்ற அதிதியிடம்
“ஒய் !ஒழுங்கா பேர் சொல்லு . ‘வீண்’ சொல்லாத எத்தனை தடவை சொல்லறது” என்று அதிதிக்கும் பிரவீனுக்கும் சண்டை தொடங்கியது.
அப்போது பார்த்து கண்மணி செல் “டண்டனக்க, நக்கா நக்கா” பாட்டு அலறியது .
அச்சோ! இந்த வீணா போன வீணா இந்நேரத்திலா கூப்பிடனும்.
“பாபி” என்று இருவரும் அவள் பக்கம் திரும்பினர் .
“அச்சோ! நான் இல்லை” என்றால் பாவமாக!
அனைவரிடமும் சந்தோஷமாக, கலகலப்பாக பேசும் கண்மணியை பார்த்து ஜானகிக்கு பெருமை . இப்படிப்பட்ட மருமகள் தான வேண்டும் என்று வேண்டினேன். எப்படியோ சித்துக்கு ஏற்ற ஜோடியா கல்யாணம் செய்து வைத்தாச்சு! ஒரு வழியா சித்து பிரச்சினை முடிந்தது . கண்மணி இப்படி சாதுவா இருந்தாலும், அவன் மாமனார், சிவம் அண்ணாவிடம் சித்து பருப்பு எப்படியும் வேகாது. அது தான வேண்டும் .
“அத்தை, எனக்கு ஒரு மாதம் லீவ். பத்து நாள் ஊருக்கு போயிடு வரட்டா ..தம்பி பிறந்த நாள் வேற வருது”.
“ஹே பாபி! நான் இன்னும் கண்ணனை பார்த்ததே இல்லை . உங்களை அழைக்க வரும் போது கண்டிப்பா வரேன். மாமா ,கண்ணன் எல்லாரையும் பார்க்கணும்.”
“கண்டிப்பா வாங்க. அவனும் சந்தோஷபடுவான். கண்ணனுக்கு இங்கயே படிக்கணும் ஆசை .சீட் வாங்கிட்டு தான் சென்னை பக்கம் வருவானாம்” என்று ஆசையா தம்பி பற்றி பெருமையா பேசிக் கொண்டு சென்றாள்.
அதிதி பிரவீனை அடித்து “பாபி ,அவங்க தம்பி மீது எத்தனை பிரியமா இருக்காங்க பாரு !நீயும் இருக்கியே!”
“மனிதர்கள் மீது பாசமா இருக்கலாம். மிருகங்கள்,ஜந்துக்கள் மீது கூடாது அதி ! அது தப்பு”
பல்லைக் கடித்து “உன்னை ……….!போடா ஒரங்குட்டான். அண்ணா வரட்டும், அப்புறம் பேசிக்கிறேன்!”
“கடைசி வருடம் அதனால் ப்ராஜக்ட் செய்யணும், பத்து நாளிலே வந்திடுவேன் அத்தை.”
“வெளியே போய் செய்யணுமா? உதவி வேண்டும் என்றால் சித்துவிடம் கேட்டுகோ !அவன் கம்பனியிலே செய்யலாமே”
பிரவீனும் “ஆமாம் அண்ணி, நம்ம கம்பனியே இருக்கே!”
அச்சோ அவருடனா? வீட்டிலே நான் படும் அவஸ்தை போதாது!
உடனடியாக “வேண்டாம் ,வேண்டாம் அத்தை. வந்தவுடன் V.S சொல்யுஷன்ஸ் இன்டர்ன் ப்ரஜெக்ட் செய்ய போறேன்!”
பிரவீன் அதிர்ந்து “வி எஸ் சொல்யுஷன்ஸ் ஆ ..யார் மூலமா கிடைத்தது ..”
“நானே தான் ட்ரை செய்தேன். என்னை வர சொல்லி இருக்காங்க” .
ஜானகி பிரவீனிடம் கண்களால் ஏதோ பேசினாள். அது அவர்கள் கம்பெனி என்று கண்மணிக்கு தெரியாது.
“உங்களுக்கு அந்த கம்பனியை தெரியுமா தேவரே! கஷ்டப்பட்டு தான் பிடித்தேன். இன்டர்ன் வேலைக்கே பல ரவுண்டு வர சொன்னாங்க. என் பிரண்ட் ஐஸ் கூட அந்த கம்பெனியில் எப்படி எடுத்தாங்க, ஆச்சரியம் சொன்னா. பெரிய கம்பனி தான் போல! எனக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு அவர்களுக்கு திறமை இருக்கா பார்த்திடலாம் .என்ன நான் சொல்வது சரி தான தேவரே!”
“அண்ணாக்கு தெரியுமா?”
“இல்லை. இன்னும் சொல்லவில்லை . இன்று தான் போன் வந்தது .என்ன அத்தை, சத்தம் காணோம்!”
“பெரிய கம்பனி டா !அது தான் ஆச்சரியம் ..”
ஜானகி மருமகளிடம் “நீ எப்படி ஊருக்கு போவ .சித்துக்கு எப்படி வேலை தெரியலையே!”
நான் கூப்பிட்டவுடன் உங்க மகனும் வந்துட்டாலும் …
அவனுடன் போவதற்கு போகாமலே இருக்கலாம் .
“அவரை எதற்கு தொந்தரவு செய்திட்டு அத்தை . பாவம் அவர் . எந்நேரமும் வேலை தான்.”
“அதுக்கு தான் மாறுதலா எங்கயாவது போய்ட்டு வாங்க சொல்லறேன்! நீ தான் அவனை மாற்றனும்!”
உங்க மகன் அப்படியே என்னை ஆல்ப்ஸ் மலைக்கு அழைத்து போயிட்டாலும். கடல் தண்ணீர் கூட வற்றிவிடும்! இவங்க மகனை கண்டிப்பா மாற்ற முடியாது என்று மனதில் திட்டிக் கொண்டாள்.
அவள் அத்தை மகன் ஷ்யாம் சென்னை வந்து இருந்தான் . அவனுடனே கிளம்புவதாக முடிவு செய்யப்பட்டது .
சித்தார்த்துக்கு தெரியாமல் பிளான் போடறீங்க.. என்ன நடக்கும் பார்க்கலாம் ..
அடுத்த அத்தியாயத்தில் தூறலா?? இடி மழையா பார்க்கலாம்.