ஓடி வந்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவனை கையில் அள்ளிக்கொண்டு ஆதி வாசலை நோக்கி ஓடினான். ஏனென்றே புரியாமல் கண்ணில் கண்ணீர் சிதறியது. சத்யாவிற்கு தனக்காக ஒருவன் இந்தளவு உயிரையே பணயம் வைத்தானே என்பது இன்னமும் நடுக்கம் தான்! அவனும் அண்ணன் பின்னாலேயே ஓடியிருந்தான்.
அவர்களுடன் நான்கு பேர் துணைக்குப் போக, மீதம் இருந்தவர்கள் எல்லாரும் அவ்விடத்தை தன் காட்டுப்பாட்டில் எடுத்திருந்தனர்.
விவேக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார்கள். கத்தி குத்து ஆழமாக விழுந்திருக்கிறது. நிறைய ரத்தம் வீணாகியிருந்தது என்று மருத்துவர் சொன்னார். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எழுந்து நடமாடவே ஐந்தாறு மாதங்கள் ஆகிவிடும் என்றும் சொல்லியிருக்க,
கேட்ட ஆதிக்கு அவன் உயிர் பிழைத்து விட்டான் என்று மகிழ்வதா? இல்லை இப்படியொரு நிலையில் இருக்கிறான் என்று வருந்துவதா என்று புரியவில்லை.
பூஜிதா, சத்யா கூட அங்கேயே தான் இருந்தார்கள். ஆதி தான் கவனித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட நினைத்தான். ஆனால், இருவருமே போக மறுத்து விட்டார்கள்.
அன்றைய நாளின் அலைச்சல்களும் அலைப்புறுதல்களும் அத்துடன் முடிவதாக இல்லை போலும்! முதல் மழைத்துளி விழ தான் போக்கு காட்டும். பிறகு சடசடவென பிடித்துக் கொள்ளுமே! அதுபோல தான் நிதர்சனங்களும் போல! ஒன்று தெரிந்துவிட்ட பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி வந்து நிற்கிறதோ என்னவோ?
சற்று நேரத்தில் தகவல் சொல்லப்பட்டிருந்த விவேக்கின் அம்மா சுந்தரியும், தங்கை நந்தினியும் பதறியபடி அங்கு வந்து சேர்ந்தார்கள்.
“சார் என் பையனுக்கு என்ன ஆச்சு? அவனை பார்க்கணும் சார்…” என கதறியபடி சுந்தரி கேட்க, நந்தினி பேசக்கூட தெம்பற்றவளாய் அழுது கொண்டிருந்தாள்.
“பயப்படாதீங்க மா… ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. எதுவும் ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” தன் துக்கத்தை ஒதுக்கி வைத்து ஆதி தான் ஆறுதல் சொன்னான்.
“ஐயோ! கடவுளே! என் புருஷனை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டது போதாதா? இன்னமும் என் வீட்டுல காவு வாங்கி தான் ஆகணுமா உனக்கு” என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதவரைப் பார்க்க எல்லாருக்கும் நெஞ்சம் கனத்து போனது.
“சார் நிஜமாவே என் பையனுக்கு ஒன்னும் இல்லை தானே? அவன் என்கிட்ட திரும்பி வந்துடுவான் தானே? அவனை எபப்டியாச்சும் மீட்டு கொடுத்துடுங்க சார், எங்க வீடு, நகை எல்லாத்தையும் வித்து கொடுத்திடறோம். அவனை மட்டும் காப்பாத்தி கொடுத்துடுங்க. அவனுக்கு எதுவும்ன்னா அதுக்கப்பறம் நானும் என் பொண்ணும் கூட உயிரோட இருக்க மாட்டோம்” என்று ஆதியின் கையைப் பற்றிக் கெஞ்சிக் கொண்டிருந்தவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே அவனுக்குப் புரியவில்லை.
சத்யாவிற்கு அந்த அம்மா அழுக அழுக தாங்க முடியவில்லை. வேகமாக அவனும் வந்து, நம்பிக்கையான குரலில், “கவலைப்படாதீங்க மா. டாக்டர்ஸ் விவேக் நல்லா இருக்காருன்னு சொல்லியிருக்காரு. நீங்க பயப்படாதீங்க, பாருங்க உங்க பொண்ணும் பயந்துக்கிறா. வந்து உட்காருங்க, வாங்கம்மா” என்று ஆறுதலாக சொல்லி அழைத்தான்.
பூஜிதாவும் ஆதரவாக நந்தினியின் அருகில் நின்று கொண்டாள். அவளுக்கும் இந்த அம்மாவின் வேதனையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை, அதோடு இதற்கு மூல காரணம் தன் தந்தை என்ற எண்ணம் வேறு அவர்மீது எல்லையில்லா கோபத்தையும் வெறுப்பையும் வந்தது.
சத்யாவை ஏறிட்டுப் பார்த்த சுந்தரி அம்மாவின் கண்கள் வியப்பிலும் ஆச்சரியத்திலும் விரிந்து போனது. துக்கப்பந்து வந்து தொண்டையை அடைத்துக் கொள்ள மேற்கொண்டு எதுவும் பேசும் நிலையில் கூட அவர் இல்லை. அவனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் மனம் ஏனோ படபடப்பாக இருந்தது.
“நீ ஏன் சாமி மறுபடியும் வந்த?” என்றார் கண்ணீருடன். சூழ இருந்தோருக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.
அழுதபடியே, “உன்னை உங்க அப்பா பார்த்தாங்க, என்னவோ அவருக்கு உறுத்தவும் உன்னைத் தேடி வந்தவரு திரும்பி பிணமா தான் வந்தாங்க, இப்ப நீ ஏன் சாமி விவேக் கண்ணுல விழுந்த?” என்று கண்ணீரைக் கொட்ட, ஆதி அதிர்ந்தான் என்றால், சத்யாவால் எதுவும் பேசக்கூட முடியவில்லை. முகமெல்லாம் சொல்ல முடியாத வேதனையின் சாயல்!
“உன்னை பத்து மாசம் சுமந்து நான் தான் பெத்தேன். அந்த பாசம் நிறைய இருக்கு, நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்ன்னு தான் எம் புள்ளைங்களுக்கு வேண்டிக்கும் போது உனக்கும் சேர்த்து வேண்டிப்பேன். ஆனா, விவேக் நம்ம குலசாமிப்பா… அவனை நான் பெறா இருந்திருக்கலாம். ஆனா, என் ரத்தத்தை பாலா கொடுத்துத் தான் வளர்த்தேன், அவன் எங்க மேல உயிரா இருக்கான், எங்களுக்கும் அவன் மட்டும் தான் உலகம்… ஆனா பாரு உன்னை பார்த்துட்டானே! என் புள்ள என்ன பாடு பட்டிருப்பான்”
ஆதி மனதளவில் எப்படித் தடுமாறினானோ அதே தடுமாற்றம் அந்த தாயிடம் என அவனுக்குப் புரிந்தது. இன்னொரு கசப்பான உண்மை அவன் உடன்பிறந்த சகோதரன் விவேக் என்பது! காரணமே இல்லாமல் அவனை தன் வட்டத்தில் இணைத்தானே! அவனுடன் பேசும்போது பெரும் ஆறுதலாக உணர்ந்தானே! அவனுக்கு ஒன்று என்கையில் உயிரையே பறிகொடுத்தது போலத் துடித்தானே! இதுதானே ரத்த பந்தம்! இதனை வேண்டாம் என்ற முடிவை எடுத்து விட்டாலும் மனதிற்குள் எத்தனை வேதனை?
உடன்பிறந்தவன் தனக்கே இந்த நிலை என்றால், பத்து மாதம் சுமந்து பெற்றவள் மனம் என்ன பாடுபடும்?
சுந்தரியும் தெளிவான மனநிலையில் இருந்திருந்தால், அவரால் இப்படி பேசியிருந்திருக்க முடியாது! மகனின் நிலை அவரை அவராக இருக்க விடவில்லை. சத்யாவிற்கு உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை என்பது கூட புரியாமல் மனதில் இருப்பதை எல்லாம் கவலையிலும் ஆதங்கத்திலும் கொட்டிக் கொண்டிருந்தார்.
சத்யாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது! அப்படியென்றால் எதிரில் நிற்பவர் அவனின் சொந்த அம்மா. எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது என்று நினைத்தான்! என்னதான் அவன் மனதில் அம்மா என்கிற பிம்பம் தெய்வானை என்றபோதும், ஏழு வயதிலேயே வலிக்க வலிக்க அவரின் பாசத்தை, அரவணைப்பை இழந்து போனானே!
இப்பொழுது இவர் தான் அம்மா என்றதும் மனம் பரவசப்பட்டு நிற்கிறது! அந்த பரவசத்தை மகிழ்ச்சியை நிதானித்து அனுபவிக்கும் சூழல் இப்போது இல்லை என்றாலும், இனி எப்பொழுதுமே அந்த சூழல் வராது என்று உணர்த்தும் அம்மாவின் சொற்கள் அவனின் உயிர்வரை வலித்தது.
நீ வேண்டாம் என தன்னைப் பெற்ற தாய் சொல்வது மாபெரும் கொடுமை அல்லவா? மனம் நொந்து போகாதா?
“வேணாம் சாமி, அப்படி கூப்பிடாதே!” என்று அழுதபடியே சொன்னார் அவர். எந்த தாயுக்கும் வலி நிறைந்த தருணம் தான்! பெற்ற பிள்ளை ஒரு பிழையும் செய்யாத நிலையிலும் ஒதுக்க வேண்டும் தண்டிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும் அன்னையால்? ஆனால், இங்கே பாச சிறையில் கட்டுண்டு கிடப்பவருக்கு விவேக்கா? சத்யாவா? என்ற கேள்வி வந்தால், விவேக்கை தான் தேர்ந்தெடுக்கும் அந்த அன்னையின் மனம்!
வினோதமாக இங்கே வளர்த்த பாசம் பெற்ற பாசத்தை விடவும் மிஞ்சி நின்றது!
சத்யா விக்கித்து போய் நிற்க, “உன்னை நான் தான் பத்து மாசம் சுமந்து பெத்தேன், ஆனா உன்னை என் மனசறிஞ்சு தொலைக்கலை சாமி. உன்னை தொலைச்சது கூட எனக்கு தெரியலை. எனக்கு தான் கடவுள் இன்னொரு முத்தை கொடுத்துட்டாரே! ஆனா உன் மேல பாசம் இல்லாம இல்லை சாமி. நிறைய பாசம் வெச்சிருக்கேன். ஆனா என் புள்ள விவேக் மேல உசுரையே வெச்சிருக்கேன் சாமி… எனக்கு புரியுது, பெத்தெடுத்த உனக்கு நான் செய்யறது அநியாயம் தான்! அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சிடுய்யா, என்னால உன்னை எப்பவும் ஏத்துக்க முடியாது” என்று சொல்லி அழ, அவன் மனதளவில் சிதறிப் போனான்.
எந்த மகனுக்கும் இப்படியொரு நிலை வந்துவிடக்கூடாது. அவன் கண்கள் கரகரவென நீரைப் பொழிந்தது. நந்தினி அம்மா சொல்வதன் அர்த்தம் புரிந்து விக்கித்து போய் நின்றிருந்தாள். அவளுக்கும் அழுகையாக வந்தது.
பூஜிதாவால் இந்த காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. இவ்வளவு கடினமான முடிவை எடுத்துவிட்ட தாயின் வலியும் வேதனையும் அவளுக்குப் புரிந்தது. இந்த சுழலில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது உடைந்து நிற்கும் சத்யாவின் வேதனையும் மனதை அறுக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடூர மிருகமான தந்தையை அவள் இன்னொரு முறை பார்க்க கூட விரும்பவில்லை. ஏன் இப்படி பாவத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார் என மனதளவில் அழுதாள்.
இதே முடிவைத் தானே நாமும் எடுத்திருந்தோம், அப்படியானால் விவேக்கும் சத்யாவை போல நம் முடிவு தெரிந்தால் உடைந்து போவானோ என ஆதியும் கலங்கிப் போனான்.
சத்யாவின் கலக்கத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாமல், “இப்ப ஏன்மா ஏதேதோ பேசறீங்க? இதெல்லாம் நிதானமா இருக்கும்போது பேசிக்கலாம். ஒருத்தனை ஏத்துக்கிறது மூலம் இன்னொருத்தனை இழந்துடுவோம்ன்னு எந்த அவசியமும் இல்லையே” என்றான் ஆதி, அவரின் கையை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்து. அந்த தாயுக்கு மட்டுமில்லாமல் தனக்கும் சொல்லிக் கொண்டான்.
தம்பி யாரென்றே தெரியாத போது தேடிப்போக வேண்டாம் என்று மனதைக் கட்டுப்படுத்த முடிந்தவனால், அது விவேக் என்று தெரிந்த பிறகு மனது தடுமாறத் தொடங்கிவிட்டது. தன் முடிவில் அவனால் உறுதியாக நிற்க முடியவில்லை! சத்யா வேண்டும் என்ற அதே மனம், அதற்காக விவேக்கை இழந்து விட மாட்டேன் என்றும் சொல்லிக் கொண்டது. மனித மனம் விசித்திரமானது தான்!
“தம்பி உங்களுக்கு புரியாது, இவனை தேடி தான் இவங்க அப்பா போனாங்க, உண்மையைக் கண்டு பிடிச்சிட்டதா எனக்கு போன் கூட செஞ்சாங்க. ‘நமக்கு பிறந்த குழந்தையை வீரராகவன்னு ஒருத்தன் தான் மாத்தி வெச்சிருக்கான். அரசியல் பின்புலம் இருக்கிறவன், அவனை எதுவும் பண்ண முடியுமான்னு தெரியலை. அதோட இதை நாம கண்டுபிடிச்சதால நம்ம இழக்கப் போறது விவேக்கை. எனக்கு அதில் உடன்பாடில்லை’ அப்படின்னு தான் அந்த மனுஷன் சொன்னாரு, ஆனா அவர் தேடி வந்ததை தெரிஞ்சுக்கிட்ட வீரராகவன் அவரை கொன்னுட்டான் தம்பி. இப்ப விவேக் நிலையும் இப்படி இருக்கு… இங்கே வந்த பார்த்தா நான் பெத்த பிள்ளை இங்கே இருக்கான், என் நிலைமை எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பாருங்க” என்று சுந்தரி அம்மா அழுதபடி சொல்ல,
இப்பொழுது விவேக்கின் இந்த நிலைக்கும் வீரராகவன் தான் காரணம் என்ற உண்மையைச் சொல்ல முடியாமல் மற்றவர்கள் நின்றிருந்தார்கள்.
ஆதி மட்டும் ஆறுதல் குரலில், “பொறுமையா இருங்கம்மா. நம்ம பின்புலமும் குறைவானது இல்லை, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். இப்ப நீங்க பதட்டப்படாம இருங்க” என்று சொல்லி அவரை ஒரு இருக்கையில் அமர வைத்தான்.