காதல் வானவில் 9

அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் முடிந்து இரு ஆண்டுகள் முடிவடையபோகிறது.அனைவரும் இப்போது அவர்களின் புராஜக்ட் வேலைகளில் பணியமர்த்தப்பட்டு வேலையில் மூழ்கிவிட்டனர். விஜய்,கீர்த்தனா,வருண்,மிருணாளினி அவர்களுடன் மேலும் இருவர் ஒரு குழுவில் இருந்தனர்.கார்த்திக்கு பயிற்சி முடியவும் அவன் பெங்களூர் கிளைக்கு சென்றுவிட்டான்.

அன்று காலையிலிருந்தே விஜய் சற்று பரபரப்பாக காணப்பட்டான்.இன்று அவர்களுடைய திட்டபணி முடிவினை சமர்பிக்கும் நாள்.அதனால் அனைவருக்குமே சற்று பதட்டமாக தான் இருந்தது.தனது வேலைகளை முடித்து அவனது டீம் லீடரிடம் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டவன் மீண்டும் தனது இருக்கைக்கு வர அப்போது அவனின் அருகே வந்த வருண்,

“டேய் மச்சி…எல்லாம் ரெடி டா….பிரசன்டேஷன் எப்போவாம்…லீட் என்ன சொன்னாரு….”என்று கேட்க,விஜயோ ஏதோ யோசனை செய்தவாறு அமர்ந்திருக்க,

“டேய்….விஜய்…என்னடா….”என்று கேட்டான்.

“ம்ம்…எல்லாம் கரெக்டா தான் இருக்கு….ஆனா நம்ம டீம் வொர்க் எல்லாரும் ஒரே மாதிரி ஆன்சர் பண்ணுவாங்களா…அது தான் யோசனையா இருக்கு…”என்று தன் எதிரே மடிக்கணினிக்குள் தலைவிட்டுக் கொண்டு இருந்த மிருணாளினியை பார்த்தவாறே விஜய் கேட்டான்.வருணுக்கும் அதே நிலை தான்.அவனும் இந்த இரு வருடமாக பார்க்கிறான் தானே டீமை பொருத்தவரை அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் தான் செயல்படுவர்.ஆனால் மிருணாளினியை தவிர அவள் ஒருவளே எப்போதும் எதிர்வாதம் புரிவாள்.சில நேரங்களில் அவளது வாதம் சரியாக இருந்தாலும் பல நேரங்களில் அது தேவையில்லாத ஒன்றாகவே தோன்றும்.

அதிலும் விஜய் ஏதாவது கூறினால் அதற்கு கண்டிப்பாக அவள் எதிராக தான் செயல்படுவாள்.இதனால் இருவருக்குள்ளும் பேச்சு என்பதே சுத்தமாக அற்று போனது.இதனால் டீமில் ஒற்றுமை குறைவாக உள்ளது என்று அவர்களது லீடர் போன முறை சற்று காட்டமாகவே சொல்லிவிட்டார்.அதன் பொருட்டே விஜய்க்கு யோசனையாக இருந்தது.

எப்போதும் தெளிவாக இருக்கும் விஜய் இன்று சற்று பதட்டத்துடன் இருப்பது வருணுக்கே சற்று பதைப்பாக தான் இருந்தது.இவர்கள் இருவரும் நினைத்தது போலவே பிரசன்டேஷனின் போது மிருணாளியின் பாகம் சரியாக இல்லாமல் போனது.அதனால் பிரசன்டேஷன் முழுவதுமாக குளருபடியில் முடிய,மிருணாளினியினால் அனைவருக்குமே அன்று டீம் லீடரிடம் நல்ல வெகுமதி கிடைத்தது.இதில் அனைவரின் ஒட்டுமொத்த பொறுப்பையும் கையாண்ட விஜய்க்கு சற்று அதிகமாகவே கிடைத்தது.

“என்ன விஜய் இப்படி பண்ணிட்ட…எனக்கு அடுத்தது நான் உனக்கு தான் லீடர் பொறுப்புக்கு மேலிடத்தில ரிவரன்ஸ் கொடுத்திருக்கேன்…இப்போ போய் இப்படி பண்ணி சொதப்பிட்டீங்க….”என்று அவனிடம் காய,விஜய்க்கு முகத்தை எங்கு வைப்பது என்றே தெரியவில்லை.மிகவும் தலையிரக்கமாக போனது அவனுக்கு.வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து இது நாள் வரை எந்த அவபெயரும் இல்லாமல் இருந்தவனுக்கு இன்று முகத்தில் கரி பூசினது போல் இருந்தது.

“ஐ ம் சாரி சார்…”என்ற வார்த்தைகள் மிகவும் உள்ளே போன குரலாக ஒலித்தது.

“ட்ஸ் ஓகே மேன்….எனக்கு என்னமோ அந்த மிருணாளினி இந்த புராஜக்ட்க்கு சரியா வருவாங்கனு தோணல….ஐ நீட் டு டேக் அக்‌ஷன்…”என்று சற்று தீவிர முக பாவனையுடன் அவர் கூற,விஜய் அமைதியாக நின்றான்.அவனுக்குமே அவர் கூறுவது தான் சரியெனப்பட்டது.அவள் ஒருவளால் அனைவரும் பாதிக்கப்படுவது நல்லதாக படவில்லை அவனுக்கு அதனால்,

“எஸ் சார்….எப்போதும் அவங்க பண்றது தான் சரின்ற கோணத்தில தான் அவங்க வாதம் இருக்கும்…அதனால மத்த டீம் மெம்பருக்கெல்லாம் கஷ்டம் தான்….”என்று இது நாள் வரை அடக்கி வைத்திருந்த மனதின் குமுறுலை அவரிடம் கொட்டிவிட்டான்.அவரும் தீவிரமான முகபாவத்துடன்,

“ம்ம்…தென் வீ நீட் டூ சேஞ் கர்….”என்று கூறிவிட்டு சற்று சிந்தனை வாய்ப்பட்டவராக இருந்தார்.விஜய்க்குமே சற்று மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியாதே என்று அமைதியாக இருந்தான்.சற்று நேர சிந்தனைக்கு பின்,

“விஜய் இப்ப நியூ ஜாயினி பூரணி…அவங்க அவுட் கம் நல்ல இருக்கு…அவங்கல இந்த புராஜக்ட்ல ஜாயின் பண்ணிக்கலாம்….”என்று கூற

“ஓகே சார்…”என்று கூறிவிட்டு அவரிடம் இன்று நடந்த குளருபடிகளை எவ்வாறு தீர்ப்பது என்று கேட்டுக் கொண்டு தான் வெளியில் வந்தான்.

அலுவலக கேண்டீனில் அமர்ந்திருந்தனர் கீர்த்தனாவும்,மிருணாளினியும்.

“என்னடி இப்படி பண்ணிட்ட…உன்கிட்ட விஜய் முன்னேடியே சொன்னான் தான….ஏன் இப்படி கவனிக்காம விட்ட…”என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.மிருணாளினியோ ஏதோ சிந்தனை வாய்ப்பட்டவள் போல் அமர்ந்திருக்க,கீர்த்தனாவிற்கு கோபமாக வந்தது.

“ஏய் நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா கனவு கண்டுகிட்டு இருக்க….”என்று அவளை உலுக்க,

“ப்ச்…கீர்த்தி….நான் என்ன வேணும்னா பண்ணனேன்….ஏதோ சொப்பிடுச்சி…விடேன்….”என்று அவளும் பதிலுக்கு கோபமாக கத்த,கீர்த்தனா அதிரிந்து விழிக்கும் போதே,

“ஓ…மேடம்க்கு…அவ்வளவு திமிரா போச்சா…நீ தெரியாம பண்ண சரி அதுக்கு நாங்க எல்லாரும் பேச்சு வாங்கனுமா…”என்று அவர்களின் பின்னிருந்து விஜயின் குரல் கேட்கவும் இருவருமே அதிர்ந்து பின்னே திரும்பி பார்க்க,அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் விஜய்.

ஏற்கனவே டீம் லீடரிடம் பேசிவிட்டு வந்தவனுக்கு மனது ஒருநிலையில்லாமல் தவிக்க,மீண்டும் ஒருமுறை அவரிடம் மிருணாளினி பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவன்,அவரின் அறைக்கு செல்ல,அவரோ வேறு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.ஒருவித சோர்வுடன் தனது இருக்கையில் அமர்ந்தவன்,எப்போதும் போல் மிருணாளினியின் இருக்கையை பார்க்க அது காலியாக இருந்தது.

மனதில் பல எண்ணங்கள் ஊர்வலம் வர தலையை தாங்கியவாரு அமர்ந்துவிட்டான்.என்ன மாதிரிஉணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.அனைத்து விஷயங்களிலும் தெளிவுடன் செயல்படுபவன் மிருணாளினியின் விஷயத்தில் மட்டும் தடுமாற்றமாக உணர்ந்தான்.அவனின் மனதின் எண்ணங்களை மூளை ஏற்றுக் கொள்ள மறுத்தது.அதற்கு காரணம் மிருணாளினியின் திமிர் பிடித்த செயல்கள்,அதுவே விஜயின் ஈகோவை மிகவும் சீண்டிவிட்டிருந்தது.

எவ்வளவு நேரம் விஜய் அவ்வாறு அமர்ந்திருந்தான் என்று அவனுக்கு தெரியவில்லை,தன் தோள்களை யாரோ தொடவும் தன்னிலை பெற்றவன் திரும்பி பார்க்க அவனின் அருகில் வருண் நின்றிருந்தான்.

“மச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க….லீட் ரொம்ப பேசிட்டாரா….”என்று கேட்க,விஜயோ இல்லை என்னும் விதமாக தலையாட்டினான்.

“ப்ச் விடுடா…வா கீழ போய் ஒரு கப் காபி குடிச்சிட்டு வருவோம்…கொஞ்சம் பெட்ரா இருக்கும்…”என்று வருண் அழைக்க,விஜய்க்குமே காபி கூடித்தால் சற்று தேவலாம் போல் இருக்கும் என்று உணர்ந்தவன் அவனுடன் கேண்டீனுக்கு வந்தான்.

“பார்த்தியா மச்சி…அங்க எவ்வளவு பிரச்சனை போயிக்கிட்டு இருக்கு….இங்க இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கா பாரு….”என்று ஓரத்தில் ஒரு டேபிலின் மீது பார்வையை பதித்து வருண் கூற,அவன் கூறியதை வைத்தே அது கீர்த்தனா என்று உணர்ந்தான் விஜய்.

“டேய் மச்சி எனக்கு ஒரு டவுட் டா….”என்று மிகவும் தீவிரமான முகபாவத்துடன் வருண் கேட்க,விஜயோ,

“என்ன….”என்றான்.

“இவளை கட்டிக்கிட்டா…நான் சாப்பாடுக்கே தனியா சம்பாரிக்கனும் போலவே….”என்று கூற,

“அவ திங்குற நொருக்கு தீணிய விட்டுவிட்டு பேசிறியே மச்சி..அதையும் சேர்த்துக்க…”என்று விஜய் கூற,வருணின் நிலைமை தான் பாவமானது.

வருண்,கீர்த்தனாவிடம் தன் காதலை கூறி ஒரு வருடம் ஆகிறது.முதலில் மறுத்தவள் பின் வருணின் அன்பில் கரைந்து அவனின் காதலை ஏற்றுக் கொண்டாள்.என்னதான் காதல் என்று கூறிவிட்டாலும் வருண் அவளிடம் எந்தவிததிலும் வரம்பு மீறி நடந்து கொண்டது கிடையாது.அதுவே கீர்த்தனாவை மேலும் அவனிடம் இழுத்தது.வருண் தன் காதலியை ரசித்துக் கொண்டிருக்க,

“டேய் பார்த்தது போதும் போய் காபி வாங்கிட்டு வா…”என்று அவனின் தோள்களை தட்டி அனுப்பினான் விஜய்.வருண் சென்றவுடன் கீர்த்தனா,மிருணாளினி நோக்கி வந்தவன் காதுகளில் கீர்த்தனா அவளிடம் கேட்டதும் அதற்கு மிருணாளினியின் அலட்சிய பதிலும் காதில் விழ அதுவரை இருந்த இலகு தன்மை நீங்கி மீண்டும் முகம் இறுக்கம் கொண்டது.ஏற்கனவே மிருணாளினியின் மீது கோபத்தில் இருந்தவனுக்கு இப்போது அவளின் விட்டேத்தியான பதிலில் கோபம் கிளர்ந்தெழ,

“நீ செஞ்ச தப்புக்கு நாங்களும் தலைகுனியனுமா….சொல்லு….”என்று ஆத்திரமாக கேட்டான்.விஜய் நின்ற தோரணையே அவன் தன்னை மிகவும் கட்டுபடுத்திக் கொண்டு நிற்கிறான் என்று உணர்ந்த கீர்த்தனா,

“விஜி….விடு….ஏதோ தெரியாம நடந்திடுச்சு….இனி அப்படி நடக்காது….”என்று இரஞ்சலாக கேட்க,இன்று அவன் யார் கூறுவதையும் கேட்கும் நிலையில் இல்லை,

“நீ சும்மா இரு கீர்த்தி….இவளால எவ்வளவு அசிங்கமா போச்சி…பார்த்த தான….அதை கேட்டா சரியா கூட பதில் சொல்லமாட்டாங்களாமா மேடம்….”என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,

“விஜய்….தி ஸ் யுவர் லிமிட்…நான் தான் சரியா கவனிக்கலனு சொல்லுறேன்ல….”என்று மிருணாளினியும் சற்று திமிராக பேச,அவ்வளவு தான் விஜய்க்கு அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மொத்தமும் வெளி வந்தது.

“என்ன என்ன…லிமிட்…நீ தப்பு செய்வ அதுக்கு நாங்க பொறுப்பாகனுமா…நீ போன தடவை இதே மாதிரி சொதப்புனது தெரிஞ்சி தான் நான் உன்கிட்ட அவ்வளவு தடவை சொல்லி சரிபாரு சொல்லிட்டு போனேன்….அப்பெல்லாம் பெரிய இவ மாதிரி பேசுன…இப்ப நீ செஞ்ச தப்புக்கு டீம் மொத்ததுக்கும் பேச்சு வாங்கியாச்சு…நீ என்னனா ரொம்ப அலட்சியமா பேசுற….எப்போதும் நீ செய்யறது தான் சரின்ற மாதிரி பேச வேண்டியது….மத்தவங்க என்ன சொல்லுறாங்கனு காது கொடுத்து கேட்கறது இல்லை….எல்லாம் திமிர்….”என்று அவன் பேசிக் கொண்டே செல்ல,

“விஜய் ஸ்டாப்பிட்….ரொம்ப ஓவரா பேசாத….தப்பு நடந்து போச்சு…அதுக்காக நீ என்னவேனா பேசலாம்னு இல்லை….”என்று மிருணாளினியும் கொதிக் கொண்டு பேச,கீர்த்திக்கு நிலைமை கை மீறி போவதை போல் இருந்தது.

“விஜி….விடு விஜி….ப்ளீஸ்….”என்று மீண்டும் கெஞ்ச,

“ஏய் என்ன எப்போ பார்த்தாலும் அவன் கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க…விடு நான் தான் தப்பு….”என்று மிருணாளினி கீர்த்தனாவிடமும் கத்த,விஜய்க்கு மேலும் கோபம் ஏறியது,அதே கோபத்துடன் ஏதோ கூறவர அதற்குள் அவர்களிடம் வந்த வருண்,

“விஜய்….உன்னை லீட் கூப்பிடாரு வா போகலாம்….”என்று அவனது கையை பிடித்து கிட்டதட்ட இழுக்க,அன்று விஜயின் வாயில் சனி புகுந்து கொண்டான் போலும்,

“ஏய் அவக்கிட்ட எதுக்கு எகுறுற….எல்லாரும் உன்னை மாதிரி தனியாளுனு நினைச்சியா…இன்னோரு தடவை கீதூ கிட்ட இப்படி பேசுன நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்….சொந்தம் பந்தம் நட்புனு கூட்டுக்குள்ள இருந்திருந்தா எல்லாரோட வலியும் புரியும் உனக்கு எங்க அது புரியபோகுது….”என்று  மேலும் ஏதோ கூறவர,

“விஜி….விஜய்”என்று கீர்த்தனா வருண் இருவரும் ஒரு சேர கத்தியேவிட்டனர். இருவரின் அதிர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு அப்போது தான் தோன்றியது தான் அதிகமாக பேசிவிட்டது.எதிரே நின்ற மிருணாளினியின் முகத்தை காண அவள் முகமோ அவ்வளவு கசங்கி கண்கள் சிவந்து எப்போது வேணாலும் அழுதுவிடுபவள் போல் இருந்தாள்.தன்நெற்றியை தேய்த்துக் கொண்ட விஜய்,

“ஐ ம்….”என்று அவளிடம் பேசவர,வேகமாக தன் கைபையை எடுத்தவள் யாரின் முகத்தை பார்க்காமல்,

“நான் கிளம்புறேன்….”என்று பொதுவாக கூறிவிட்டு செல்ல,

“மிருணா…நில்லு…”என்று கீர்த்தனா பின் செல்ல எத்தனிக்க,

“வேணாம் கீர்த்தி….நான் கொஞ்சம் தனியா இருக்கனும்…ப்ளீஸ்…”என்று குரல் கமற கூறிவிட்டு சென்றுவிட்டாள்.