காதல் வானவில் 8

காலை வேளையில் தன் பால்கனியில் நின்று கொண்டிருந்த விஜய்க்கு மிருணாளினியின் குரல் கேட்கவும் சற்று பரபரப்பானது.வேகமாக பால்கனியில் இருந்து கீழே பார்க்க அங்கு அடர் சிவப்பு கலர் குர்த்தியில் தேவதை போல் நின்றிருந்தாள் மிருணாளினி.விஜய்க்கு அவளின் மீது வைத்த கண்ணை எடுக்கவே மிகவும் சிரம்மாக இருந்தது.காலை நேரத்து வெயில் அவளின் முகத்தில் விழுந்து அவளது அழகை மேலும் கூட்டியிருந்தது.கீர்த்தனா ஏதோ கூற அதற்கு அவள் சிரித்துக் கொண்டு பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

மிருணாளினி முழுமையாக சிரித்து இன்றைக்கு தான் பார்க்கிறான்,அவ்வளவு அழகாக இருந்தது.சிரிக்கும் போது அவளது கன்னங்களில் விழுந்த குழியை கண்டவனுக்கு அவனது மனதும் அதில் விழுவது போல் பிரம்மை எழ சற்று பயந்து தான் போனான்.சற்று நேரத்தில் என்னவெல்லாம் நினைத்துவிட்டேன் என்று தன்னையே திட்டிக் கொண்டு மீண்டும் கீழே பார்க்க அங்கே இருவரும் இல்லை.மனது சற்று ஆசுவாசம் அடைந்தது.

“ராட்சசி….இவளை பார்த்தாலே மனசுல என்னனவோ பண்ணுது….இது சரியில்ல மகனே….அந்த முசுடுக்கு மட்டும் இது தெரிஞ்சுது உன் கதை அவ்வளவு தான்…சரியான ராட்சசி….”என்று தன்னை கட்டுக்குள் கொண்டுவர படாதபடு பட்டுவிட்டான் விஜய்.

ஆனால் அவனின் கட்டுபாடுகள் எல்லாம் மிருணாளினியை தன் வீட்டில் காணும் வரை தான் நீடித்தது.தன் தலையை உலுக்கிவிட்டு குளிக்க சென்றவன்,குளித்து முடித்துவிட்டு தன் அறையில் இருந்து கீழே இறங்கினான்.வரவேற்பறையில் கீர்த்தனாவின் குரல் கேட்டது.

“பிசாசு…வந்துட்டா போல…நீலாம்மா….நீலாம்மானு….”என்று தனக்குள் செல்லமாக தன் நண்பியை திட்டிக் கொண்டே கீழே இறங்க,அங்கு ஹால் சோபாவில் அமர்ந்து இவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினி தான் கண்ணில் விழுந்தாள்.நீலவேணி,கீர்த்தனாவின் உரையாடலை ரசித்தப்படி அமர்ந்திருந்தாள்.அவளது முகத்தில் அழகிய புன்னகை கீற்றாக அரும்பி இருந்தது.எப்போதும் ஒருவித இறுக்கத்துடன் இருப்பவளை இன்று புன்னகை முகமாக பார்க்க விஜய்க்கு மனதுக்கு இதமாக இருந்தது.

“விஜிமா…ஏன் அங்கேயே நின்னுட்ட…வா…சாப்பிட….”என்று தன் அன்னையின் குரலில் தன்னிலை பெற்றான் விஜய்.

“ஆங்…வரேன்….”என்றுவிட்டு மாடி படியில் இருந்து இறங்க,மிருணாளினியும் விஜயை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.சந்தன டீஷர்ட்,பிளாக் டிராக் பேண்ட் என்று இலகுவான உடையில் இருந்தான்.மாடியில் இருந்து இறங்கி வந்தவன்,மிருணாளினியை பார்த்து வா என்னும் விதமாக தலையாட்டிவிட்டு தன் அன்னையிடம் சென்றான்.

“என்னமா புதுசா ஆள் எல்லாம் வீட்டுக்கு வந்துருக்காங்க…”என்று நக்கலாக கூற,அதுவரை புன்னகை பூசியிருந்த மிருணாளினியின் முகம் கூம்பி போனது.அவன் தன்னை தான் கூறிப்பிடுகிறான் என்று நினைத்தவள் வேகமாக இறுக்கையை விட்டு எழுந்துவிட்டாள்.அவள் எழுந்ததை கண்ட நீலவேணி,

“நீ ஏன்மா எழுந்துட்ட….உக்காரு அவன் உன்னை சொல்லல…இதோ இவளை தான் சொல்லுறான்…இதுங்க இரண்டுக்கும் வேற வேலையில்லை….”என்றவர்,மிருணாளினியிடம் சென்று அவளின் கைகளை பற்றி அழைத்து வந்து,

“வா நீயும் எங்களோட சாப்பிடு….”என்று விட்டு பரிமாறினார்.

“ம்க்கூம்…அதனே இவ என்னைக்கு என்னை சரியா புரிஞ்சிருக்கா…சரியான திமிருபிடிச்சவ….”என்று தன் மனதிற்குள் மிருணாளினியை திட்டிக் கொண்டான்.

கீர்த்தனா விஜயை முறைத்துக் கொண்டே சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.அதை கவனித்த விஜய்,

“ஒழுங்கா சாப்பிடு…இல்லை சாம்பாரை எடுத்து தலையில ஊத்திடுவேன்….”என்று மிரட்டல் போல கூற,அவனை பார்த்து முகம் காட்டிய கீர்த்தனா தன் சாப்பிட தொடங்கினாள்.

“ஏன்டா பிள்ளையை திட்டுற…நீ சாப்பிடு கீதூமா…”என்று பரிவாக கூறினார்.மிருணாளினிக்கு தான் சற்று என்று அவர்களுடன் ஒன்ற முடியவில்லை ஏதோ தான் தனிமை பட்டது போல் ஒரு உணர்வு,அதே யோசனையுடன் அவள் சாப்பாட்டை அளந்து கொண்டிருக்க,அதை கவனித்த நீலவேணி,

“என்னமா…ஏன் சாப்பிடாம இருக்க…உனக்கு பிடிக்கலையா…”என்று கேட்க,

“இல்லை…இல்லை ஆன்ட்டி….நல்லா தான் இருக்கு…”என்று கூறினாள்.மிருணாளினி எவ்வளவு முயன்றும் அவளது குரல் உடைந்தது போல் ஒலிக்க அதை நீலவேணியும்,கீர்த்தனாவும் கவனிக்கவில்லை ஆனால் விஜய் கவனித்துவிட்டான்.தன் முன்னே இருந்த தண்ணீரை அவளிடம் நகர்த்தி வைத்தவன்,

“ஐ திங் யூ நீட் திஸ்….”என்று கூறிவிட்டு எழுந்து கை கழுவ சென்றான்.எழுந்து செல்லும் அவனை ஒரு நொடிக்கு அதிகமாக பார்த்தன மிருணாளினியின் விழிகள்.பின் வேகமாக விஜய் கொடுத்த தண்ணீரை பருகினாள்.நீலவேணி அப்போது தான் கீர்த்தியுடன் சமையல் அறைக்கு சென்றிருந்தார்,அதனால் இவர்களை கவனிக்கவில்லை.அவர்கள் இருவரும் வருவதிற்குள் தன்னை சமன் செய்து கொண்டாள் மிருணாளினி.

சமையல் அறையில் இருந்து வெளி வந்த நீலவேணி,

“இந்தமா…உனக்கு நெய் தோசைனா பிடிக்குமாமே…கீதூ…சொன்னா….”என்று கூறிக் கொண்டே அவள் தட்டில் வைத்தார்.அவளும் அதை ரசித்து உண்ண,அவளை வாஞ்சையாக பார்த்தவர்,

“உன் அப்பா,அம்மா எல்லாம் டெல்லில தான் இருக்காங்கலா…என்ன பண்ணுராங்க….”என்று கேட்க,மிருணாளினியின் கை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் நீலவேணியை பார்த்தாள்.கீர்த்தனாவும்,விஜயும் மிருணாளினி என்ன கூறிவாள் என்று காதை தீட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தனர்.

“எனக்கு யாரும் இல்லை ஆன்ட்டி….”என்றுவிட்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்.நீலவேணிக்கு தான் அதிர்ச்சியாக இருக்க,

“என்னமா என்ன சொல்லுற நீ….”என்று பதட்டமாக கேட்க,மிருணாளினியோ அமைதியாக,

“எனக்கு யாரும் இல்லை ஆன்ட்டி….என்னை கார்டியன் தான் பார்த்துக் கிட்டாரு படிக்க வச்சாரு….”என்று கூறினாள்.விஜய் ஒரளவிற்கு கனித்திருந்தான் தான் அதனால் அவனுக்கு இது பெரிதாக படவில்லை.ஆனால் மற்ற இருவரும் சற்று கலங்கி தான் போனர்.

“மிருணா….இனி உனக்கு யாரும் இல்லைனு சொல்லாத….உனக்கு எப்பவும் நான் இருக்கேன்….”என்று வேகமாக சென்று தன் தோழியை அனைத்துக் கொண்டாள் கீர்த்தனா.மிருணாளினிக்கு கீர்த்தனாவின் வார்த்தைகள் அவ்வளவு ஆறுதலைக் கொடுத்தது.நீலவேணிக்கோ மிருணாளினி எதையோ மறைப்பதாகவே தோன்றியது இருந்தும் அவராக எதையும் கேட்கவில்லை.அதன் பின் இரு நாட்கள் மிருணாளினி கீர்த்தனாவுடன் இருந்துவிட்டு சென்றாள்.

அந்த மாத இறுதியில் வேலைக்கான பயிற்ச்சிகள் தொடங்க இருந்தன,மிருணாளினி நிறுவனத்தின் பக்கத்திலேயே ஒரு வீட்டில் வாடகைக்கு பேசி குடி வந்தாள்.அங்கிருந்து அவள் நிறுவனம் செல்ல ஒரு அரை மணிநேரம் ஆகும்,அதனால் தனக்கென்று ஒரு வண்டியும் வாங்கிக் கொண்டாள்.

கீர்த்தனாவின் மூலம் மிருணாளினியை பற்றி அனைத்தும் விஜய்க்கு தெரிந்தாலும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ள மாட்டான்.இவ்வாறு இவர்களின் கண்ணாமூச்சு ஆட்டம் அவர்களது பயிற்சி காலத்திலும் தொடர்ந்தது.