ஒருவழியாக ஹச்.சோ.டியிடம் பேசிவிட்டு தனது வகுப்புக்குள் நுழைய அங்கே அவனது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தாள் மிருணாளினி.அவளைக் கண்டவுடன் விஜய்,
“ஓ…இவளும் நம்ம கிளாஸா…”என்று நினைத்தவன் மனதில் இன்று காலை நடந்தவை அனைத்தும் நினைவில் வர ஒருவித இறுக்கமான முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தான்.
மிருணாளினியும் விஜயைக் கண்டவுடன்,
“இவனா…இவனும் இந்த கிளாஸ் தானா….”என்று மனதில் நினைத்தவாறே அவனை முறைத்துவிட்டு தன் முகத்தை திருப்பியிருந்தாள்.
விஜயும் அவள் முகத்தை திருப்பவும் மேலும் கடுப்பானவன்,
“திமிர்…திமிர்….உடம்பெல்லாம் திமிர் இவளுக்கு….இவளால நான் எவ்வளவு அசிங்கபட்டு வந்திருக்கேன்….திமிரு பிடிச்சவ….”என்று மனதில் அவளை வருத்தெடுக்க,அப்போது அவனது பக்கத்தில் அமர்ந்திருந்த கார்த்தி விஜயின் கைகளை சுரண்டி,
“மச்சி…கொஞ்சம் தள்ளேன்…எனக்கு மறைக்குது….”என்று தீவிரமாக சொல்ல,விஜய் அவனை புரியாமல் பார்த்தான்,ஏனென்றால் வகுப்பில் ஆசிராயர் இருந்தாலே ஏனோதானோ என்று இருப்பவன் கார்த்தி இன்று இன்னும் வகுப்பு தொடங்கவேயில்லை அதற்குள் அவன் என்ன எழுதுகிறான் என்று அவனது நோட்டையும் போர்டையும் மாறி மாறி பார்க்க,கார்த்தியோ,
“மச்சி உன்னை கொஞ்சம் சாஞ்சி உக்கார சொன்னேன்டா….நீ என்னை தப்பா நினைச்சிட்ட….”என்று அசடு வழிய,
“டேய் வருண் இவன் கீழ விழுந்ததுல இவனுக்கு ஏதாவது ஆயிடுச்சா….”என்று விஜய் கேட்க,வருணோ,
“அவனுக்கு ஒண்ணுமாகலை…ஆனா நம்ம கிளாஸ்க்கு புதுசா வந்திருக்க பொண்ணாளால நிறைபேருக்கு ஏதெதோ தான் ஆயிடுச்சு போல….”என்று கூற,விஜய் திரும்பி மிருணாளினியை பார்க்க,அதே நேரம் அவளும் இவன் பக்கம் திரும்பினாள் ஒரு நிமிடம் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டன பின் வேகமாக அவளும் திரும்பிக் கொண்டாள் இவனும் திரும்பிவிட்டான்.
“மச்சி….மச்சி அவ என்னை பார்த்தா டா…..வாவ்…எவ்வளவு அழகா இருக்கா….”என்று மயக்கத்துடன் கார்த்தி கூறி முடிக்கும் முன் அவனது முதுகில் ஒங்கி அடித்திருந்தான் விஜய்.
“டேய் உனக்கு என்னடா வந்தது….”என்று கார்த்தி மேலும் ஏதோ கூறவருவதை விஜய் கவனிக்காமல் வருணிடம்,
“நீ ஏன்டா ஒருமாதிரி இருக்க….”என்று வருணின் வாட்ட முகத்தைக் கண்டு கேட்க,அதற்கு வருண் பதிலளிக்கும் முன் கார்த்தி,
“எல்லாம் அந்த லூசு கீர்த்தி இன்னைக்கு வரலைனு பார்த்திக்கிட்டு இருக்கான்….”என்று கூறிவிட்டு மேலும் இரண்டு அடிகளை வாங்கினான் வருணிடமிருந்தும்,விஜயிடமிருந்தும்.
“டேய் போதும் போதும்…விடுங்கடா….”என்று அவன் கத்தவே தொடங்க,
“இன்னும் ஒருதடவை கீர்த்தியை பத்தி ஏதாவது தப்பா பேசின…தொலைச்சிடுவேன்….”என்று விஜய் அடிக்குரலில் மிரட்ட,அவனது குரல் பேதத்திலும்,சிவந்த கண்களும் கார்த்திக்கு சற்று கிலியை ஏற்படுத்தியது.
“நான் சும்மா….”என்று தயங்கியவாரே கூற,
“சும்மா கூட அவளை பத்தி நீ இனி பேசாத….எனக்கு சுத்தமா பிடுக்கலை…”என்று கோபமும் வருத்தவுமாகவே வந்தது வருணின் குரல்.
“டேய் சாரி சாரி மச்சான்….”என்று வருந்தியே கூறினான் கார்த்தி.கீர்த்தனாவிற்கு இன்று காய்ச்சல் அதனால் அவள் வகுப்பு வரவில்லை.
விஜய்,வருண்,கீர்த்தனா மூவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்தனர்.விஜயும்,கீர்த்தனாவும் சிறுவயது முதலே நண்பர்கள்,வருண் இவர்களுடன் கல்லூரியில் இணைந்திருந்தான்.வருணுக்கு கீர்த்தியின் வெகுளியான பேச்சும்,அவளது குழந்தை முகமும் அவனை அவள்பால் இழுத்தது.கண்டதும் காதல் என்பது போல் இருந்தது அவனது நிலை.ஆனால் விஜய் தான் முதலில் படிப்பு அதன் பிறகே இந்த காதல் எல்லாம் என்று கண்டிப்புடன் கூறிவிட அவன் கூறிவது சரி என்று உணர்ந்த வருணும் அமைதியாகி விட்டான்.அதனால் கீர்த்தனாவிற்கு வருணின் காதல் எல்லாம் தெரியாது அவளுக்கு வருண் எனபவன் நண்பன் மட்டுமே.
வகுப்பு தொடங்கவும் இவர்களின் பேச்சும் நின்றது.ஆசிரியர் புதிய மாணவியை அனைவருக்கும் அறிமுகம் செய்தார்.அவர் கூறியதிலிருந்து அவளது மிருணாளினி என்றும்,டெல்லியில் இருந்து இங்கு வந்திருப்பதாகவும் தெரிந்தது.அவளது அறிமுக படலம் முடியவும் ஆசிரியர் வகுப்பு எடுக்க தொடங்க சிலர் அதில் கவனமானார்கள் என்றால் சிலர் மிருணாளினியை பற்றி பேசிய படி இருந்தனர்.அதே போல் தான் இங்கு கார்த்தியும் வருணிடம்,
“ஏன் மச்சி டெல்லியிலேந்து இங்க படிக்க வந்திருக்கா….பார்த்தா பெரிய இடத்து பொண்ணுமாதிரியும் இருக்கா…”என்று தன் முக்கிய சந்தேகத்தை கேட்க,வருணோ தன் கடமை எழுதுவது என்பது போல் இருக்க,
“பாடத்தில ஒரு டவுட்டும் கேட்டுடாத…ஆனா இதெல்லாம் டவுட் கேளு….”என்று பல்லிடுக்கில் விஜய் பதில் கூற,அடுத்த நிமிடம் கார்த்தியின் வாய் மூடியிருந்தது.
அன்றைய பொழுது மிருணாளினிக்கும்,விஜய்க்கும் சற்று இறுக்கமாகவே கழிந்தது.அடுத்த நாள் காலை நண்பர்களுடன் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு விஜய் கல்லூரிக்குள் வர,
“விஜி…விஜி….”என்று அழைத்தபடி அவனின் பின்னே ஓடி வந்தாள் கீர்த்தனா.அவனும் அவளைக் காண தான் இன்று சற்று முன்தாகவே கல்லூரிக்கு வந்திருந்தான்.
“ஏய்….கீதூ….பார்த்துவாடி….எப்படி இருக்க…உடம்பு எப்படி இருக்கு….”என்று அவளின் உடல் நிலை பற்றி விசாரிக்க,அவளோ அவனது கைகளை பற்றி வேகமாக இழுத்துக் கொண்டே,
“அதெல்லாம் நான் நல்லா தான் இருக்கேன்….நீ வா உனக்கு முக்கியமான ஒருத்தரை அறிமுகம் செய்யுறேன்…வா….வா….”என்று இழுக்க,விஜயின் பின்னே வந்த வருணும்,கார்த்தியும்,
“அது யாருமா முக்கியமான ஆளு….எங்களுக்கும் சொல்லேன்….”என்று ராகம் பாடினர்.
“நீங்களும் வந்துட்டீங்களா….வாங்க…வாங்க…உங்களுக்கும் சேர்த்தே அறிமுகம் செய்து வைக்குறேன்….”என்று கூறிக் கொண்டே விஜயின் கை பிடித்து இழுத்து சென்றாள்.
“கையை விடுடி….நானே வருவேன்….”என்று விஜய் கூற,அவளோ அதைக் காதில் வாங்கினாள் தானே.இது இவர்களது சிறு வயது பழக்கம்,கீர்த்தனாவிற்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ இல்லை முக்கிய விஷயம் பேச வேண்டும் என்றாலோ அவனின் கையை பிடித்து கொண்டு தான் செல்லுவாள்.விஜய் அவளிடம் கையை விடும்படி கேட்டாள் நான் கையை விட்டா நீ பாதியிலேயே ஓடிடுவ அதான் என்று கீர்த்தனா சோகம் போல கூற அவளது பாவனையில் அவனுக்கு சிரிப்பு தான் வரும்.அதே போல் தான் இன்று நடந்தது.அவர்களின் பிணைப்பைக் கண்ட வருணுக்கு எந்தவித மனசஞ்சலமும் வராது.ஆனால் கார்த்தி அப்படி இல்லையே,
“கார்த்தி ஒரு சில பந்தங்களுக்கு பெயரே கிடையாது…ஆனா ரொம்ப புனிதமானது….அதெல்லாம் மனரீதியான பந்தம்….உனக்கு இதெல்லாம் புரியாது விடு….வா யாரு அந்த முக்கியமான ஆளுனு நாமளும் பார்க்க போவோம்….”என்று அவனின் தோள்களில் கை போட்டு இழுத்து சென்றான்.
கீர்த்தனா,விஜயை இழுத்துக் கொண்டு கேண்டீனில் ஒரு இருக்கையில் அமர் செய்தவள்,
“கொஞ்ச நேரம் சும்மா இரு விஜி….ஆங்….அதோ….அங்க இருக்கா…இரு நான் கூட்டிட்டு வரேன்….எங்கேயும் போகக்கூடாது….”என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை வேறு செய்துவிட்டு சென்றாள்.
“என்னடா உன்னை மிரட்டு போறா….”என்று வருண்,விஜயின் தோள்களில் தட்டிவிட்டு அமர,கார்த்தியும் பக்கத்தில் அமர்ந்தான்.
“மச்சி….மச்சி…அய்யோ….அங்க பாரு….இவ கீர்த்தானவோட பிரண்டா….எனக்கு தெரியாம போச்சே….”என்று பதட்டத்துடன் கூற,மற்ற இருவரும் யார் என்று திரும்பி பார்க்க,அங்கே மிருணாளினியின் கைகளை பற்றிக் கொண்டு விஜயை போலவே இழுத்துவந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.அதை கண்ட விஜயின் கண்கள் சற்று இடுங்கின,இவளா அந்த முக்கியமான ஆளு என்று நினைத்தவன் தன் முகத்தை திருப்பிக் கொள்ள,எதிரே கார்த்தியோ வாய் நிறைய ஜொள்ளுடன் அமர்ந்திருந்தான்.அதில் மேலும் கடுப்பான விஜய்,தன் கையில் உள்ள ஒரு நோட்டால் அவன் தலையில் தட்டி,
“என்னடா ஈஈன்னு பல்லைக்காட்டிக் கிட்டு இருக்க….”என்று கேட்க அவன் கவனிக்கும் நிலையில் இல்லை.அதற்குள் அவர்களிடம் நெருங்கி இருந்த கீர்த்தனா,
“வா….மிருணா…வா…இங்க வந்து உக்காரு….”என்று விஜயின் பக்கத்தில் உள்ள நாற்காலியில் உக்கார் வைத்துவிட்டு அவளும் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தாள்.
“அப்பா….எங்க போயிட்ட நீ….நான் உன்னை இங்க தான இருக்க சொன்னேன்….”என்று படபடவென்று கேள்விகளை தொடுக்க,அதற்கு பதில் கூறாமல் கீர்த்தனாவின் கைகளில் தன் தண்ணீர் பாட்டிலை திணித்த மிருணாளினி,
“முதல்ல குடி அப்புறம் பேசு….”என்று அவளை சற்று ஆசுவாச படுத்த,கீர்த்தனாவும் மறுக்காமல் தண்ணீரை பருகியவள்,பக்கத்தில் அமர்ந்திருந்த விஜயைக் காட்டி,
“நான் சொல்லல என்னோட பெஸ்ட்டினு…அது இவன் தான் விஜய்…..”என்று விஜயை மிருணாளினிக்கு அறிமுகம் செய்ய,அவனை வரும் போதே கண்டுவிட்டவளுக்கு பெரிதாக எந்த தாக்கமும் இல்லை போலும்,இல்லை தன்னை இயல்பாக காட்ட முயன்றாளா என்பது அவளுக்கு தான் வெளிச்சம்.
“ஹாய்…..”என்று பொதுவாக கூறினாள்.
“விஜி….இது மிருணாளினி…உனக்கு அடுத்தது எனக்கு பெஸ்ட் பிரண்டுனா அது இவ தான் விஜி…”என்று பெருமையாக கூற,விஜயோ கீர்த்தியை முறைத்த வண்ணம் மிருணாளினியின் பக்கம் திரும்பாமலே,
“ஹாய்….”என்றான்.அதுவே மிருணாளினிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது இருந்தும் கீர்த்தனாவிற்காக அமைதிகாத்தாள்.
“போதும்டா வழியுது….”என்று செய்கை செய்து காட்டினான்.ஆனால் கார்த்தி அதை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதை போல்,
“அப்புறம் நீ ஏன் டெல்லியிலேந்து இங்க வந்து படிக்க வந்திருக்க….”என்று கேட்க,அதற்கு மிருணாளினி பதில் அளிக்கும் முன்,
“கீதூ….இவங்க தான் நீ சொன்ன முக்கியமான ஆளா….”என்று விஜய் நக்கலாக கேட்க,மிருணாளினிக்கு கோபம் வந்துவிட்டது வேகமாக தனது இருக்கையில் இருந்து எழுந்தவள்,
“கீதூ…நீ பேசிட்டு வா…நான் கிளாஸ்க்கு போறேன்…”என்று பொதுவாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
“டேய் விஜி…ஏன்டா இப்படி பண்ண…பாரு அவளுக்கு கோபம் வந்துடுச்சு…போ எனக்கும் உன்மேல கோபம்…போ…”என்று முகத்தை திருப்ப,
“ஏய் கீதூ…என்ன இது நான் சும்மா சொன்னா உன் பிரண்டு கோச்சுகிட்டு போயிட்டா…நான் என்ன பண்றது….”என்று விஜய் அவளின் தோள்களில் கை போட்டுக் கொண்டே கேட்க,அவனது கைகளை கோபமாக தட்டிவிட்டாள் கீர்த்தி,
“போ..என்கிட்ட பேசாத…அவ எனக்கு மட்டும் பிரண்ட் கிடையாது நம்ம எல்லாருக்கும் தான்…”என்றவள் வேகமாக எழ முயற்சி செய்ய,அவளது குரல் பேதத்தில் துணுக்குற்றவன்,
“ஏய் கீதூ…அழுவுறியா…இங்க பாரு…”என்று அவளது முகத்தை திருப்ப,அவளோ திரும்புவேனா என்று அடம்பிடித்தாள்.வருணும்,கார்த்திக்குமே கீர்த்தியின் அழுகை மனதை பிசைய,
“ஏய் விடு…நீ போய் பேசினா…எல்லாம் சரியாகிடும்…”என்று கூற,அப்போதும் அவளது முகம் தெளியவில்லை.விஜய்க்கே கீர்த்தனாவின் இந்த கலக்கம் கண்டு ஒருமாதிரியாக இருந்தது.எப்போதும் இப்படி அழுபவள் எல்லாம் கிடையாதே என்று நினைத்தவன்,
“என்ன கீதூ…ஏன் இப்படி அழற…”என்று அவளை பார்த்து கேட்க,
“நீ ஏன் இப்படி மிருணா கிட்ட பேசினா….நானும் வந்திலேந்து பார்க்குறேன்….நீ அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசலை….நீ எனக்கு எப்படியோ அதே போல தான் அவ எனக்கு உன்கிட்ட சொன்னேன் தான….அப்படி இருக்கும் போது நீ இப்படி பண்ணுவனு நான் நினைக்கல விஜி…”என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
விஜய்க்கு இந்த கீர்த்தனா மிகவும் புதிது.இவ்வளவு எல்லாம் சுற்றம் கவனிப்பவள் கிடையாது ஆனால் இன்று இவ்வளவு விஷயங்களை கவனித்து இருக்கிறாளா என்று நினைத்துக் கொண்டவன் மனதில் தன்னைவிட அந்த மிருணாளினி அப்படி என்ன முக்கியம் என்ற எண்ணமும் சேர்ந்தே உதித்தது.