வயது – 8
சென்னையின் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஒன்றான எம்ஆர்சி யில் வானத்தில் பவனி வரும் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே இறங்கி மண்டபத்தில் இளைப்பாறியது போல் மின் விளக்குகளாலும்,புகைப்படக்காரர்களின் கேமராவிலிருந்து படபடவென வந்த ஒளியினாலும் ,அங்கு குவிந்திருந்த பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்ற பணக்கார வர்கத்தின் மேனியில் மின்னிய வைரங்கள் போன்ற ஆபரத்தினாலும் அந்த இடமே மின்னியது.
இவை அனைத்திற்கும் சற்றும் குறைவில்லாமல்,மேடை முழுவதும் மலர்களாலும் விளக்குகளாலும் ஜொலித்தது .மேடையை சுற்றி உள்ள மூன்று பக்கச் சுவர்களும் மணம் வீசும் மலர்களால் மட்டுமே வடிவமைத்து நிறைந்து காணப்பட்டது.மேலும் மேடையின் மேல் புறத்திலிருந்து நீளமாக மூன்று ராட்சஷ சண்டிலர்ஸ் தன் பங்குக்கு அந்த இடத்தை தேவலோகமாகா மாற்றியது.மேடையின் தரை கூட புதுவிதமான அழகிய மலர்களால் நிரம்பிய கிளாஸ் ஃபளோர் ஆக இருந்தது.
சுருக்கமாக சொல்ல போனால் சங்கர் படத்திற்கு போடப்பட்ட செட் போல் காட்சியளித்தது அந்த மண்டபம்.ஆனால்,அதற்கு நேர்மாறாக மணமக்களோ மணிரத்னம் பட நாயகன்,நாயகி போல மேடையேறி வருபவர்களுடன் ஒரு சிறு சிரிப்பு மற்றும் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பரிமாறிக் கொண்டு இருந்தனர்.
ஆராதனா சாதாரணமாகவே அழகி இன்றோ பார்ப்பவர்களை திரும்பித் திரும்பிப் பார்க்க தூண்டும் பேரழகியாக இருந்தாள்.அனிஷா மற்றும் அவளின் குழுவில் உதவியால் பொன் பட்டுநூல் நிறத்தால் ஆன லாங் கவுன்,அதில் பொடிப்பொடியாக வைரத்தாலும் மாணிக்கத்தாலும் செய்தது போல் பூக்கள் கவுனின் கீழ்ப்பாக்கத்திலும் கைகளிலும் அங்கங்கே தெளித்தது போல் இருக்க அதற்கு பொருத்தமாக கழுத்தில் ஒற்றை வைர நெக்லஸ்.பூக்கள் வடிவிலான அந்த நெக்லஸ் நடுவில் சிவப்பு கல் பதித்து பாந்தமாக இருந்தது.அதற்கு ஏற்றார்போல் பூக்கள் வடிவிலான தொடுகளும்,கொடியும் அதற்குள் படர்ந்து வளர்ந்த இலையுமாக வளையலும் உடை அலங்காரத்திற்கு ஏற்றார்போல் சிகை அலங்காரமும்,முக அலங்காரமும் என்று அனைத்து அவளை மெருகேற்றி காட்டியது.
இவை அனைத்தையும் விட அவள் அழகிற்கு பலம் சேர்த்தது அவள் மனதில் இருந்து வந்த புன்னகையே தான்.அதிகமாகவும் இல்லாமல்,அளவாக செயற்கை தன்மை இல்லாமல் உள்ளத்திலிருந்து வந்த புன்னகை நாம் நினைத்ததோ இல்லை இது கிடைக்காது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒன்று நமக்கு கிட்டினால் நமக்குள் தோன்றும் உவகைக்கு அளவுகோலே கிடையாது .அது தரும் தேஜஸும் தனி அழகுதான்.
ஆனால் இதற்கு அனைத்திற்கும் நேர்மாறாக முகத்தில் செயற்கையான புன்னகையை ஒட்டிக்கொண்டு பிளாக் மற்றும் கிரே கலர் கோட் சூட்டில் மேடை ஏறி வருபவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசி கொண்டு ‘நாய் வேஷம் போட்டால் குறைத்து தான் ஆக வேண்டும்’ என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் தான் போட்டிருக்கும் மணமகன் வேஷத்திற்கு தன் கோபத்தையும் குமறலையும் வெளியே காட்டாமல் சிறு புன்னகையை பூசிக்கொண்டு நடிக்க வேண்டியதாக போயிற்று.இல்லை என்றால் அவன் வாழ்க்கையை நான்கு பேர் விமர்சித்து அது சிரிப்பாய் சிரித்து விடுமே என்ற பயம்.
வருபவர்களை வரவேற்று பேசி அவர்களை கவனிக்க சொல்வது என்று அனுராதாவும் திவாகரும் பரபரப்பாக இருக்க, அரவிந்த் பந்தி,வரும் கூட்டத்தை சமாளிப்பது மற்றும் வரும் விஐபிகளை பார்த்து கவனிப்பது என்று பிஸியாக இருந்தான்.பிரகாஷ் காலையிலிருந்து செழியன் அருகில் இருந்தவன், அவர்களின் தொழில் நண்பர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் கூட்டம் வந்ததும் அவர்களை காண கீழே இறங்கி விட்டான்.சிவராமனையும் பார்வதியையும் எவ்வளவு சொல்லியும் விடாமல் அனுராதா தன்னுடன் நிறுத்திக் கொண்டு அனைவருக்கும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார்.சிவராமனின் பக்கத்தில் இருந்து பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை,பார்வதி கூப்பிட முனைந்தாலும் ஆராதனா அதற்கு விடவில்லை. மிகமிகக் குறைவாக ஒரு சிலர்தான் அழைத்திருந்தனர் அதனால் அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. கடந்த இரண்டு நாட்களில் பிரகாஷும் அவனின் குடும்பமும் ஆராதனாவிற்கு மிகவும் பரிச்சயமாகி விட்டனர். அதனால் மேடையில் அனிஷாவுடன் பிரியாவும் ஆராதனாவிற்கு தேவைப்படும் நேரத்தில் துணையாக இருந்தனர்.
கொஞ்சம் கூட்டம் குறைய பிரகாஷ் தங்களுடைய கல்லூரி நண்பர்களுடன் மேடை ஏறி வர, பல வருடங்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பட்டாளத்தை கேட்கவா வேண்டும்.அந்த இடமே களைகட்டியது.அவர்களை பல வருடங்கள் கழித்து பார்த்த சந்தோஷம் செழியனிடமும் இருந்தது.
நண்பர்கள் என்றால் ஆண்கள்,பெண்கள் என்று அனைவரும் அடங்க, மேடையேறிய அனைவரும்
தங்கள் வாழ்த்துக்களை கூறி கலாய்க்க தொடங்கினர்.அதிலும் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி “கல்யாணத்த கொஞ்சம் லேட்டா பண்ணாலும் செழியன் லேட்டஸ்ட்டா பண்ணிட்டான்…பொண்ணு ‘A’ கிளாஸ் தான்” என்க
இன்னொருத்தி ” செழியன் மட்டும் என்ன சாதாரணமா? நம்ம காலேஜ் டேஸ்ல அவன் தான் மொத்த காலேஜ்க்கும் குழலும் இல்லாத நவீன கண்ணன்…இப்போ உள்ள டேர்ம்ல சொல்லனும்னா ‘ப்ளே பாய்’ “என்று சொல்லி சிரிக்க
செழியனுக்கோ ‘மானம் கப்பல் ஏறுதே’ என்று இருந்தது.அதே நேரம் ஆண்கள் புறத்தில் இருந்து “அது என்ன காலேஜ் டேஸ்ல இப்பயும் செழியனுக்கு மவுசு குறையல தான்…இப்ப விட்டா கூட மேனகா அவனை கொடுத்திட்டு போயிடுவா”
மற்றொருவனும் “ஆமாமா அப்ப காலேஜ் டேஸ்ல பார்த்ததை விட இப்ப இன்னும் ஹாண்ட்சம் ஆயிட்டான்…இப்ப மட்டும் அவ பார்த்தா கண்டிப்பா திரும்பவும் லவ் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருவா” என்றான்.
இதற்குமேல் இதை விடக் கூடாது என்ற எண்ணத்துடன் பக்கத்திலிருந்த பிரகாஷின் காதில் “டேய் !!! என்னடா வேடிக்கை பார்க்கிற…மானம் போகுது…சீக்கிரம் இவங்கள கூட்டிட்டு போடா” என்று அவனைக் கடிக்க ஆரம்பித்தான்.
பிரகாஷ் ஒருவழியாக எல்லோரையும் சமாளித்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு கீழே இறங்குவதற்கு முன் செழியனின் காதில் “எல்லோரும் பார்ட்டிக்கு நீயும் வரணும் கேட்டுகிட்டே இருக்காங்க…சீக்கிரம் வந்திடு” என்று சொல்லி விட்டு இறங்கினான்.
‘இது வேற இருக்கா… முடியலடா சாமி!!!’ என்ற நினைப்புடன் திரும்பஆராதனாவோ அவனையே ஒரு மாதிரியாக குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள் .’இவ எதுக்கு இப்படி பார்த்துக்கிட்டு இருக்கா?’ என்று எதுவும் புரியாமல் ‘என்ன?’ என்பது போல புருவத்தை உயர்த்திக் கேட்க அப்போதும் விடாமல் அவனையே குறுகுறுவென்று பார்த்தபடி “யாரு மேனகா?!’ என்று கேட்டாள்.
பொசசிவ்னஸ்,ஒருவகையான உரிமை உணர்வு.இது என்னுடையது ,தனக்கு மட்டுமே இது சொந்தம் என்று ஒரு பொருள் மீதோ இல்லை நபர் மீதோ நமக்கு ஏற்படும் ஒரு உணர்வு.இந்த உணர்வு குழந்தையிடம், நண்பர்களிடம்,காதலர்களிடம் ஏன் கணவன் மனைவியிடம் என்று பலதரப்பட்ட மக்களிடம் இந்த உணர்வு எழும்.இதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதுதான் ஆட்டத்தின் சுவாரஸ்யமே,அன்பை அடித்தளமாகக் கொண்டு எழும் இந்த உணர்வு அதே அன்புடன் பிணைக்கும் நூல் கயிறாக இருந்தால் அன்பும் காதலும் வலுப்பெறும்.சற்று வேறுபட்டு அன்பு என்ற இடத்தை கோபமும் அகங்காரமும் வந்து சூழ்ந்தால் அது தூக்குக் கயிறாக மாறி ஆட்டத்தையும் முடித்துவிடும்.
அந்த உரிமை உணர்வில் தான் செழியனை பார்த்து கேட்டால் ஆராதனா.”என்ன கேட்ட?” என்று மறுபடியும் அவன் கேட்க
“உங்க பிரெண்ட்ஸ் சொன்னாங்கல அது யாருன்னு கேட்டேன்” என்று மறுபடியும் அவள் கேள்வியை தொடுக்க
ஏற்கனவே இருந்த கடுப்பில் இதுவும் சேர்ந்து அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.அதில் கடுப்பான அவன் “உன்னோட மாமியார்” என்று சொல்ல அவளும் நக்கல் சிரிப்புடன் “பரவாயில்லையே அந்தக் காலத்தில் என்னோடு மாமியாருக்கு நல்ல பேரு வச்சிருக்காங்க… ஆனால் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு அழுது வடிஞ்ச பழைய பேரு” என்று கேட்க
“ஏய்!!!!!!!” என்று அவளை திட்டுவதற்கு கேமிராகாரரோ “சார் ப்ளீஸ்…” என்று இருவரையும் சேர்ந்து நிற்க சொல்ல வேறு வழியில்லாமல் செழியன் பல்லை கடித்துக்கொண்டு கடுப்பலைகளுடன் நிற்க ஆராதனா பெரிய சிரிப்புடன் அவன் பக்கத்தில் நெருங்கி ஜோடியாக நிற்க ,அவர் “சார் கொஞ்சம் சிரிங்க” என்று சொல்ல அதற்கு செழியன் “இதுவே போதும் இதோட எடுங்க” என்று விட்டான்.அந்த புகைப்படக்காரரும் மனதில் ‘இந்த கேஸ் தேறாது போல’ என்ற நினைப்புடன் கேமராவை அழுத்தினான்.அவர்களை இயல்புடன் எந்த ஒரு வெளிப்பூச்சும், நடிப்பும்,செயற்கை தன்மையும் இல்லாத அந்த நிலையை அழகாக தனக்குள் உள்வாங்கியது அந்த கேமரா.
*******************************
“சியர்ஸ்” என்ற பெரும் கூச்சலோடு அனைவரும் தங்கள் கையில் இருந்த மதுபான கோப்பையை மற்றவர்களின் கோப்பையோடு மோதிக் கொண்டு தங்களின் தொண்டையில் சரிக்க ஆரம்பித்தனர்.
ரிசப்ஷன் முடிந்த கையோடு அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து இருந்தான் செழியன்.தன் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் நோக்கத்துடன்.
“நம்ம எல்லாரும் கெட் டு கெதர் வைக்கணும் சொல்லிட்டு இருந்தோம்.ஆனா அது செழியனோட மேரேஜ்ல நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று அந்த கும்பலில் ஒருத்தனான மகேஷ் கூறினான்.
“ஆமாண்டா மாமா எவ்வளவு வருஷமாச்சு இப்படி நம்ம எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிச்சு” என்று மற்றொருவன் ஆமோதிக்க
மகேஷ் “என்னடா செழியா…எதுவும் பேசாம அந்த கிளாஸையே பார்த்துட்டு இருக்க”
” வேறென்ன இருக்க போகுது…இவ்வளவு நாள் தனிக்காட்டு ராஜாவாக இருந்த நம்ம இனிமே எப்படி இருக்க போறோம் என்கிற கவலையா இருக்கும்” என்றான் பிரகாஷ்.
” உண்மைதான் மச்சான் கஷ்டம் தான் அது…ஆனால் கொஞ்சம் சுகமான கஷ்டம் தான்… நமக்குனு ஒரு ஜீவன் நம்மள நம்பி இருக்கிறது …அது ஒரு வகையான சந்தோஷம் தானே” என்று கூட்டத்தில் ஒருவன் சொல்ல அதைக் கேட்டுக்கொண்டே ஒரு விதமான சிரிப்புடன் மதுவை சிறிது சிறிதாக தன்னுள் இறக்கினான்.
“அதுவும் கரெக்ட் தாண்டா…நம்மள நமக்காகவே குறையோ,நிறையோ அதோடு ஏத்துக்கிற ஜீவன் இருக்குன்னா அது நம்மளோட லைஃப் பார்ட்னர் தான்” என்ற பிரகாஷின் பேச்சை எல்லோரும் ஆமோதிக்க இவை அனைத்தையும் எதுவும் பேசாமல் ஒரு வித அமைதியுடன் ஒருவித சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த செழியனுக்கு வழக்கம்போல் ‘குட் நைட்’ என்று குறுஞ்செய்தி வர அதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இவர்களின் பேச்சை கேட்டதாலோ இல்லை என்ன தோன்றியதோ ‘இரவு வணக்கம்’ என்று சொல்லி முதன்முதலாக அவளுக்கு பதில் அனுப்பினான். பின் அனைவரிடமும் விடைபெற்று தன் அறைக்கு வந்து நித்திரையை தழுவ முயன்றான்.
*********************************
அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அனைத்தையும் மறக்கும் அளவிற்கு குடித்து கொண்டிருந்தான் அதர்வா.ஆனால் அவன் எவ்வளவு குடித்தும் அவனால் எதையும் மறக்க முடியவில்லை மாறாக அனைத்தும் அவன் கண்முன்னே படமாக ஓடி கொண்டிருந்தது.
அவன் எதிரே அமர்ந்து இருந்த அவன் நண்பன் சத்யாவிற்கு புரிந்தது அவன் கண்கள் போதையினால் சிவக்கவில்லை,கோபத்தினால் சிவந்துள்ளது என்று இருந்தும் அவனை அமைதியாக்கும் பொருட்டு பேச தொடங்கினான் .
“அதர்வா!!!இப்ப எதுக்கு நீ இப்படி கோபப்படுற…இதனால என்ன பிரோயஜனம்”
“உனக்கு புரியாது சத்யா…என்னோட வலிய அனுபவிச்சா தான் தெரியும்”
“முகத்துல கரிய பூசி ஊரே கைகொட்டி சிரிச்சா எப்படி இருக்கும் அப்படி இருக்கு
என்னோட நிலைமை …இதை அனுபவிச்சாதான் தெரியும் உனக்கு”
சத்யாவிற்க்கு அலுத்து போய்விட்டது. சென்னைக்கு வந்ததில் இருந்து இதைத்தான் உருபோட்டு கொண்டிருக்கிறான்.
“சரி டா…அத விட்டு தள்ளு எவ்ளோ நாள் தான் அதையே நினைச்சிட்டு இருப்ப…போய் தொலையுது சனியன்னு விடுவியா…” என்று அவன் கூறிமுடிப்பதற்குள் பாய்ந்து வந்து அவன் கழுதை பிடித்திருந்தான் அதர்வா.
“அத் …அதர்வா…விட ..விடுடா…வலிக்குது …” என்று கஷ்டப்பட்டு அதர்வாவின் கைகளை விலக்க முயன்று கொண்டிருந்தான் .ஆனால் அவன் பிடியோ இரும்பு பிடியாக இருந்தது.அவன் மனது போலவே
அதர்வா சக்கரவர்த்தி,மும்பையில் அவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை ..அவன்
ஒன்றும் மக்களுக்காக போராடியோ அல்லது நேர்மையாக ,நன்றாக உழைத்துஉச்சத்தை தொட்டோ அவன் பிரபலம் ஆகவில்லை .அவனின் கட்டபஞ்சயதும், அடிதடியும் , துணிந்து செய்யும் கொலையும் , ரியல் எஸ்டேட் என்று பல பேரின் வயித்தெறிச்சலால் தான் அவன் அனைவராலும் கண்டறிய பட்டான்.
சத்யாவின் திணறலில் கைகளை விலக்கியவன் அவனை நோக்கி கோபமாக “எப்படி டா என்ன விட சொன்ன…என்னோட சாம்பிராஜ்ஜியத்துல என்ன விழ்த்த யாராலையும் முடியாது இருமார்போட இருந்தேன்…ஆனா இப்ப என்னோட நிலைமையை பார்த்து எனக்கே அசிங்கமா இருக்கு…சே!!! விடமாட்டேன் நான் விடமாட்டேன்…இதுக்கு காரணமான யாரையும் நான்
விடமாட்டேன் …உன்னால முடிஞ்சா எனக்கு உதவு இல்ல இடத்தை காலி பண்ணு” என்றான் .
“மன்னிச்சுடு அதர்வா…நான் உன்னோட நல்லதுக்கு தான் சொன்னேன்…ஆனா உன்னோட மனசுல இப்படி ஒரு கோபம் இருக்கும்னு நான் நினைக்கல …நான் இன்னைக்கு சென்னையில் ஒரு நல்ல இடத்துல இருக்கேன்னா அதுக்கு நீ தான் காரணம்…அதை நான் மறக்கல….எப்படி உன்னோட நண்பன் எனக்கு நண்பனோ அப்படி தான் உன்னோட எதிரியும் எனக்கு எதிரி இனிமேல் நீயே மன்னிச்சாலும் நான் விட மாட்டேன்” என்று அவனை சமாதான படுத்தினான்.
யாரை அழிப்பேன் என்று சொன்னானோ அதே நபர் தன்னையும் ஆட்டம் காண வைப்பார் என்று சத்யாவிற்கு அப்போது தெரியவில்லை.
*******************************
அந்த காலை வேளையில், மங்கள வாத்தியத்துடன் கூடிய பரபரப்பான அந்த மண்டபம் கல்யாணத்திற்கான முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது என்று பறை சாற்றியது.
ஆட்கள் வந்த வண்ணமே இருந்தனர்.அனைவரும் நிற்காமல் சுற்றி சுற்றி அனைத்தையும் சரி பார்த்து கொண்டிருந்தனர். செழியனுக்கு துணையாக பிரகாஷ் இருக்க,தாய் தந்தையர் ஸ்தானத்தில் அனுராதாவும்,திவாகரும் பூஜை செய்தனர்.அதேபோல் ஆராதனாவிற்கு சிவராமனும் ,பார்வதியும் செய்தனர்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் சொன்னது போல் ‘Mrs.செழியன்’ ஆக மாற போகிறோம் என்று ஒரு கலவையான உணர்வு அவளை பாடாய் படுத்தியது.முகூர்த்தப் பட்டுப்புடவை மாற்றி அனைத்து அலங்காரமும் முடிந்து கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன மாதிரி உணர்கிறோம் என்று சத்தியமாக அவளுக்கு பிடிப்படவில்லை.
இது தான் ஆசைப்பட்டு ஏற்றுக் கொள்ள விரும்பும் வாழ்க்கை தான்.இவ்வளவு நாட்கள் இந்த நிமிடத்திற்காக காத்திருந்தாள்.ஆனால் இன்றோ அதோ இதோ என்று அவள் எதிர்பார்த்த அந்த நிமிடம் வந்துவிட்டது.ஆனால் ஏதோ ஒரு பய பந்து அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.தான் ஆரம்பித்து வைத்த ஆட்டம் நல்லதாகவே அமையவேண்டும்,நல்லதாகவே முடிய வேண்டும் என்ற எண்ணத்தால் கூட அந்த பயம் இருக்கலாம்.
அதுவும் முதல் முதலாக செழியன் பதிலுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அவளை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.மேலும் அவனுக்கு பதில் அனுப்ப அவளுக்கு கொள்ளை ஆசை தான்.ஆனால், தான் ஏதாவது சொல்லப் போக அதனால இந்த நல்ல தொடக்கம் கெட்டு விடுமோ என்ற பீதி அவள் மனதை கவ்வியது.
தன் சிந்தனையில் உழன்ற அவளை “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயரின் குரல் நிகழ்காலத்திற்கு கொண்டு சேர்க்க, தன்னை சரி செய்து கொண்டாள்.பின் அனுராதாவும் பார்வதியும் அறைக்குள் வந்தனர்.ஆராதனாவை பார்த்ததும் முகம் கொள்ளா சிரிப்பும் சந்தோஷ கண்ணீரும் சேர்ந்து கொள்ள அதனுடன் அவளை அணைத்து அவளுக்கு திருஷ்டி கழித்து மணவறைக்கு அழைத்து சென்றனர்.
நேற்று ரிசப்ஷனுக்கு இருந்த மேடை அலங்காரம் முற்றிலும் மாற்றப்பட்டு இப்பொழுது அரண்மனை போல பெரிதாக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.செழியனோ மனையில் அமர்ந்து ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல அவனும் சொல்லிக்கொண்டிருந்தான்.
மனையில் ஆராதனாவும் வந்து அமர தன் பக்கத்தில் அவள் அமரும் அரவம் உணர்ந்தும் கரும சிரத்தையாக மந்திரம் சொல்லுவதிலேயே இருந்தான்.
பின் ஆராதனாவும் பூஜையில் சேர்ந்துகொள்ள என்று கொஞ்ச நேரம் கடந்து செழியனின் மனம் ‘என்ன இன்னும் எதுவும் பேசாம இருக்கா…இந்நேரம் நம்மகிட்ட ஏதாவது பேசி டென்ஷன் பண்ணி இருப்பாலே…ஒருவேளை அவளே ஏதாவது டென்ஷன்ல இருக்காலோ’ என்று நினைத்தபடி லேசாக திரும்பி அவளைப் பார்த்தான்.
அவளோ மனம் முழுவதும் வேண்டுதலும்,கோரிக்கைகளுமாகா ஹோமத்தின் முன்னர் அமர்ந்து இருந்தாள். ஏனோ அவளை அமைதியாக இப்படி பார்ப்பது வினோதமாக இருக்க அவன் அவள் பக்கம் சிறிது சாய்ந்து கொஞ்சம் செருமி “பார்த்து பார்த்து ஓவர் நடிப்பில உன்னையும் மீறி ஹோமத்தில் விழ போற” என்று நக்கல் செய்ய
ஆராதனா ஆச்சர்யமாக அவனை பார்த்து மெலிதாக சிரித்து பின் கண்ணடிக்க அவனின் மனம் ‘டேய்!!! இவ திருந்தவே மாட்டா’ என்று எண்ணியபடி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
பின் வேதங்கள் ஓதி ,அனைவரின் ஆசியும் பெற்று அனுராதா,திவாகர் தாலி எடுத்து கொடுக்க அதை கையில் வாங்கிய செழியன் எதைப்பற்றியும் நினைக்காமல் ஒரு நிமிடம் கடவுளிடம் ‘இனி எந்த ஒரு கசப்பான நிகழ்வுகளும் தான் வாழப்போகும் இந்த வாழ்க்கையில் நடக்காமல் இருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் மாங்கல்யத்தை ஆராதனாவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டான்.போட்டவனின் கைகளில் அவன் மனைவியின் கண்ணீர் துளிகள் வந்து விழுந்தது.
ஆராதனாவின் அவிழ்க்க முடியாத வாழ்க்கை முடிச்சுயில் இந்த மூன்று முடிச்சு மூலமாக தன்னையும் இணைத்துக் கொண்டான் செழியன்.
செழியன் அவனை சுற்றி பின்னி இருக்கும் இந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பானா?! இல்லை சிக்கி தவிப்பானா?!
அனைத்தும் விதி வசம்!!!
” இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா “