வயது – 11
தன் கோபத்தை எல்லாம் அடக்கி கொண்டு அந்த அறையை அளந்துகொண்டு இருந்தார் ஜெயபிரகாசம்.எத்தனை எத்தனை கனவுகள்,ஆசையோடு இருந்தேன்.அனைத்தும் பாழாகிவிட்டதே என்ற ஆதங்கம் அவருக்கு. அப்போது அறைக்கு வந்த ஜானகியை பார்த்து அவரின் கோபம் பன் மடங்கு ஏறியது.
“நீ நினைச்சது நடந்ததா ரொம்ப சந்தோசம் படாத எப்படி இருந்தாலும் நான் தான் கடைசில ஜெயிப்பேன்…அது உனக்கு நல்லா தெரியும்”
ஜானகி,ஒரு வருத்த முறுவலுடன் ‘ஒரு பிள்ளை வாழ்க்கை கெட்டு சீரழிஞ்சுடுச்சு, இன்னொரு பிள்ளை எங்க இருக்குனே தெரியல…ஆனா இவரு தான் நினைச்சதே நடக்கனும்னு இப்படி பாவத்துக்கு மேல பாவம் செஞ்சிட்டு இருக்காரு’ என்று மனதுக்குள் வருந்தினார்.
அவருடைய மௌனத்தை பார்த்து மேலும் கடுப்பான ஜெயபிரகாசம் “என்னடி!!! இப்படி அமைதியா இருந்து இருந்து தான் எனக்குத் தெரியாமலே எனக்கு பின்னாடி குழி பறிச்சிங்க…அதே மாதிரி இப்பவும் திட்டம் போடுறியா?” என்று அவர் உறுமினார்.
ஒரு வெறுமையான விரக்தியுடன் கூடிய சிரிப்பை சிந்தி ” நீங்க சொல்ற மாதிரியான எண்ணமோ இல்ல திட்டம் போட்டு ஏமாத்துற புத்தியோ இருந்தா நான் ஏன் உங்ககிட்ட ஏமாந்து இருக்க போறான்” என்ற அவரின் குரலில் சிறிதும் நக்கல் இல்லை கவலை மட்டுமே நிரம்பியிருந்தது.
“உனக்கு இவ்வளவு தைரியம் வந்துருச்சா என்னையே எதிர்த்து பேசுற…எனக்கு தெரியாம என்ன என்னமோ பண்ற…என்ன பயம் விட்டு போச்சா? இல்ல உன்னோட பொண்ணு இருக்கான்னு தைரியமா?இருக்கிற இடம் தெரியாம அழிச்சுடுவேன் உன்ன மட்டும் இல்ல நீ பெத்து வச்சு இருக்கியே அந்த சனியனையும் தான்”
“ரொம்ப நல்லது பேசாம அதை செய்யுங்க… என்ன கொன்னுடுங்க நான் பண்ண தப்புக்கு தண்டனையா அதை ஏத்துக்கிறேன்…என் தப்புக்கு அவ ஏன் சிலுவை சுமக்கும்…அவ நல்ல மனசுக்கு எங்க இருந்தாலும் நல்லா இருப்பா…இருக்கணும்”
“போடி பைத்தியக்காரி…உன்னையும் இல்ல அவளையோ கொல்லுறது எனக்கு ஒரு விஷயமே கிடையாது…ஆனா உங்கள கொல்லுறதுனால எனக்கு என்ன பயன்? சொல்ல போனால் நஷ்டம்தான்…அவ தான் எனக்கு கிடைச்சிருக்க துருப்பு சீட்டு அதை எடுக்கிறதுக்கு தேவை படுற ஏணி நீ…காரியம் ஆகனும் என்னை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்.”
மனைவி,மக்களை விட என்ன போதை அவரைப் பிடித்து ஆட்டுகிறது.அந்த பாழாய் போன பணமும்,பதவியுமா…சே…இந்த அற்ப புகழுக்காக எத்தனை எத்தனை பாவங்கள்,தவறுகள் தீமைகளை இவர் செய்கிறார்.மனம் கசந்து விட்டது ஜானகிக்கு.
“ஏங்க இப்படி…அவ உங்க பொண்ணு தானுங்க…அவளை இப்படி கஷ்டப்படுத்தி சித்திரவதை செய்யுறீங்க…உங்களுக்கு கொஞ்சம் கூட மனசுல ஈரம் இல்லையா?!?!”
“ஏன் இல்லை…நிறைய இருக்கு ஆனா அதுக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்க மாட்டேங்கறீங்க…நீயும் உன் பொண்ணும் சரி நம்ம புருஷன்,நம்ம அப்பா நம்மளோட நல்லதுக்கு தான் சொல்லுறார் நினைச்சு என் பேச்சைக் கேட்டு நடந்து கிட்டா இத்தனை பிரச்சனை ஏன் வரப்போகுது இல்ல நான் ஏன் இப்படி கொடுமையா நடந்துக்க போறேன்… யோசிச்சு பாருங்க எனக்கும் உங்க மேல பாசம் இருக்கு” என்று சொல்லியவரை அற்பமாக பார்த்தார் ஜானகி.
“நீங்க நல்லதுக்கு சொல்றீங்களா?! இதுதான் சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்லுவாங்க” என்று கூறியவரை மறு வார்த்தை பேச விடாமல் அவரது கன்னத்தில் தன் கையால் பலம் கொண்டு அறைந்துவிட்டு கழுத்தை நெறித்தார் தான் ஆம்பிளை என்று நிரூபிப்பதாக நினைத்துக்கொண்டு.
“என்னடி!!! பேச்சு எல்லாம் வேற மாதிரி இருக்கு சத்தமில்லாமல் மேல அனுப்பிடுவேன்…சீக்கிரம் உன் பொண்ண கண்டுபிடிச்சு கொண்டு வரேன்… எனக்கு காரியம் ஆகணும்னு மட்டும் இல்ல…உனக்கு காரியம் பண்ணவும் கூட்டிட்டு வரேன்” என்று கூறியவர் இன்னும் கழுத்தில் அழுத்தம் குடுக்க மூச்சு விட முடியாமல் கண்கள் பிதுங்கி கலங்கியவாறு இருந்த அவரை காப்பாற்றும் பொருட்டு ஜெயபிரகாசத்தின் பேசிக்கு அழைப்பு வந்தது.
“ச்சை” என்று கையை உதறி அவரை கீழே தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான் அந்த மனித உருவில் இருக்கும் அந்த மிருகம்.
‘இன்னும் எத்தனை காலத்திற்கு கஷ்டப்படுவது?எத்தனை சோதனைகளை தாங்குவது?’ என்று அந்த தாயுள்ளம் தன் மகளுக்காக எண்ணி வருந்தி கடைசியில் கடவுளிடம் தன் வேண்டுதலை வைத்து சரணடைந்தது.
*************************
காலையில் கண் விழிக்கும் போதே முதலில் செழியன் பார்த்தது அவனும் ,ஆராதனாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை தான்.
அவர்களின் படுக்கைஅறைக்கு நேர் எதிர்புறமாக மிக பெரிய படமாக பிரேம் செய்து மாட்டபட்டு இருந்தது.அவர்களின் புகைப்படம் மாட்டியது வேறுயாரும் இல்லை அனுராதா தான்.அதுவும் தங்களின் படத்தை வேறு அறைக்கு மாற்றிவிட்டு இந்த படத்தை படுக்கை அறையில் மாட்டியவரும் அவரே.
புகைப்படத்தை பார்த்து அவனுக்கு சலிப்பு வந்தது.அதற்கு காரணம் அவளின் ஆட்டத்தை ஆடி ஆதிக்கத்தை நிரப்பி கொண்டு இருந்தாள்.இப்போது செழியனின் தனிப்பெரும் ஆச்சி போய் ஆராதனாவின் ஒப்புதலையும் பெற்று கூட்டணி ஆச்சி வைத்துகொள்ளும் நிலைக்கு வந்து இருந்தான் செழியன்.
அதிலும் கடந்த ஒரு வாரமாக அவளின் ஆட்டத்தை சொல்லில் அடங்க மாட்டாது.காலையில் அவன் துயில் களையும் போதே அவள் காபி கோப்பையுடன் தரிசனம் தருவாள்.குடிக்காமல் அவன் விட்டுவிட்டாலோ இல்லை அதை அலட்சியம் படுத்தினாலோ அவனுடைய ஜாக்கிங் ஷூ தன்னுடைய ஜோடியை பிரிந்துவிடும்… அலுவலகத்துகு உடுத்த அவள் எடுத்து வைத்ததுக்கு மாறாக அவன் அணிந்தால் அடுத்த நாள் அந்த சட்டை சுத்தம் செய்வதற்கு துடைக்கும் துணியாக தான் அது பயன்படும் …அவள் பரிமாறும் உணவை தவிர்த்தால் அவனின் அலுவலக கோப்பு இல்லை அவனின் போன் இடம் மாறி சென்று ஒளிந்துகொள்ளும் …இவள் கால் செய்யும் பொழுது அவன் எடுக்காமல் கட் செய்தால் அடுத்த நாள் அவன் காண்டக்ட்ஸ் பாதி அழிந்து போய்விடும் …எவ்வளவு கடுப்படித்தாலும் இவனையே சுற்றுவாள் அவனுக்கே சந்தேகம் வந்துவிடும் …இவள் ஹட்ச் நாய்குட்டியா?! இல்லை காலை சுற்றும் விஷ பாம்பா?! என்று இதையெல்லாம் நினைக்கும் போதே காபியுடன் வந்தாள் ஆராதனா.
காபியை பொன்சிரிப்புடன் அவள் நிட்ட அதை தலைவிதியே என்று வாங்கினான் அவளின் கணவன்.
“ஒரு வாரமா என்னோட காபி குடிக்கிறிங்க ஒரு நாளாவது காபி எப்படி இருக்குனு சொல்ல மாட்டேங்கிறீங்க”
‘ம்ம்ம்…உன் தலை’ என்று சொல்லி காபியை அவள் தலையில் கொட்ட ஆசைதான் ஆனால் அப்படி செய்யமுடியாதே செய்தால் பின்விளைவுகளை விட அவள் உடனே போனை எடுத்து ஊரையே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டால் ஒன்றும் இல்லை அந்த வாயாடி பிரியாவை அல்லவா கூப்பிடுவாள் என்று நினைத்து கொண்டு வழக்கம் போல் தன் முறைப்பையே பரிசாக வழங்கினான் .
“சரி சரி…காலையிலேயே உங்க காதல் பார்வையை என் மேல விசாதிங்க”
இதையெல்லாம் கண்டும் கண்டுக்காமல் குளியலறையை நோக்கி சென்று கொண்டிருந்தான் செழியன்.
“ஒரு நிமிஷம்”
திரும்பி “என்ன” என்று வார்த்தையில் கேக்காமல் பார்வையால் கேட்டவனை
‘இதுக்கு ஒன்னு குறைச்சல் இல்ல’ என்று நினைத்து கொண்டு “இன்னைக்கு மாமா வீட்டுக்கு போகணும் ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன்” என்றாள்.
திருமணம் முடிந்து இருந்ததிலிருந்து சிவராமன் இவர்களை விருந்துக்கு அழைத்து கொண்டு தான் இருக்கிறார்.போகக்கூடாது என்று எதுவும் செழியனுக்கு இல்லை அதே சமயம் போகவும் ஆர்வம் காட்டவில்லை.சிவராமனும் விடாமல் இரண்டு நாள் முன்பு வீட்டிற்கு வந்து வற்புறுத்தி அழைத்து விட்டு சென்றார்.
அப்பொழுதே நினைத்துவிட்டான் யாருக்காக இல்லை என்றாலும் அவருக்கும் அவரின் வயதுக்கும் மரியாதை தந்து இந்த வாரத்தில் ஒரு நாள் அவர் வீட்டுக்கு சென்று தலையை காட்டி விட்டு விட வேண்டும் என்று.அதை ஆராதனாவிடமும் சொல்லியிருந்தான்.அதைத்தான் அவள் நினைவு படுத்தினாள்.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு நான் குளிச்சு கிளம்புறேன்…நீயும் கிளம்பு” என்று சொல்லி குளியலறைக்குள் அவன் செல்ல
“நீயும் கிளம்பு” என்று அவன் சொன்ன தொனியில் அவன் குரலில் சொல்லி காமித்து விட்டு “கொஞ்சம் சிரிச்சு கிட்டே சொன்னா தான் என்ன?! அவர் சொத்து குறைஞ்சுடுமா?! முசுடு முத்தப்பன்” என்று முனகி தன் வேலையை பார்க்க சென்றாள்.
பின் இருவரும் கிளம்ப,காரில் ஏறி ஆராதனா வந்து விட்டாளா என்று திரும்பிப் பார்க்க அடர் பச்சையில் சிவப்பு வர்ணத்தில் சின்ன ஜரிகை கொண்ட சேலையில் வந்தவள் அவன் பக்கத்தில் முன்னிருக்கையில் கதவை திறந்து அமர்ந்து செழியனை பார்த்து புன்னகைத்தாள்.
அவன் பார்வையின் பொருள் புரிந்தவள் “இல்ல நான் பின்னாடி உட்கார்ந்தா நான் என்ன உனக்கு டிரைவரா கேப்பிங்க…அப்புறம் நான் இறங்கி முன்னாடி உட்காரணும் எதுக்கு டைம் வேஸ்ட் ,எனர்ஜி வேஸ்ட் நான் வேற விருந்துக்கு போறோம்னு காலைல கொஞ்சம் தான் சாப்பிட்டேன் அதான்…” என்று இழுத்தவளை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.”ஐயோடா” என்று அவன் மனம் உள்ளே கூக்குரல் விட தன் தலையை உலுக்கி காரை கிளப்பினான்.
அது வார இறுதி என்பதால் கூட்டமாகவே சாலை முழுவதும் காணப்பட்டது. அவர்களும் முக்கியமான சாலையின் மையத்தில் மாட்டி கொண்டனர் சிக்னலில் நின்ற காரின் கண்ணாடியின் வழியாக எதையோ அவள் தேட எதை தேடுகிறாள் என்று புரியாமல் முழித்தான் செழியன்.
பின் அவனே “என்ன ஆச்சு இதையோ தேடுற மாதிரி இருக்கு யாராவது தெரிஞ்சவங்க பார்த்தியா?” என்று வினவினான்.
“தெரிஞ்சவங்கள தேடலை ஆனா ஒருத்தங்களை எதிர் பார்த்தேன்”
“யாரு?!”
“பூக்காரங்கள இந்த சிக்னல்ல பூ விப்பாங்களே அவங்கள” அவள் பதிலில் எதுவும் புரியாமல் அவளை குழப்பமாகப் பார்த்தான் செழியன்.
அவன் பார்வையை புரிந்து கொண்ட அவள் “இல்லை இந்த படத்துல வர்ற மாதிரி இந்த சிக்னல்ல அவங்க வந்து பூ விப்பாங்க ,நீங்களும் வேற வழி இல்லாம அத உங்க கையால வாங்கி பிடிக்காத மனைவிக்கு கொடுப்பிங்கனு நெனச்சேன்…கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கும்ல…தமிழ் சினிமா பொறுத்த வரைக்கும் இப்படி தான் ஸ்டார்ட் ஆகும்…மௌனராகத்துல இருந்து ராஜாராணி வரைக்கும் இது தான ஃபார்முலா?” என்ற அவனையே கேள்வி கேட்க
செழியனின் எண்ண ஓட்டத்தை சொல்லியா தெரியவேண்டும் மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் அவளை நோக்கி “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” என்க
“கண்டிப்பா சொல்லுங்க”
“உங்க மாமா வீட்டுக்கு போறவரைக்கும் தயவு செஞ்சு கொஞ்சம் வாய மூடிட்டு வா…மீறி பேசணும் நினைச்சா கண்டிப்பா பூ வாங்குவேன் ஆனா உன் தலையில் வைக்க இல்ல உனக்கு ஒரு போட்டோ ரெடி பண்ணி அதுல தொங்க விட”
“க்கும் …உங்களுக்கு வெள்ளைவேட்டி கட்டி மைனர் மாதிரி கையில மல்லிகைப்பூ சுத்திவிட்டு அழகு பாக்கலாம்னு நெனச்சேன் இல்ல இல்ல அத நான் காதுல தான் வைப்பேன் சொல்லுற மனுஷன் என்ன பண்றது…ஒர்ஸ்ட் பீஸ்…தேறவே தேறாது” என்று முனகி கொண்டே அவள் மறுபக்கம் திரும்பினாள்.
“என்ன ?!”
தன் இரு கைகளையும் வாயின் மேல் குறுக்காக வைத்து ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையை ஆட்டி நல்ல பிள்ளை போல் பாவனை செய்தாள் அவனின் மனைவி.
*************************
“பார்வதி சீக்கிரம் வா மாப்பிள்ளை வந்துட்டாரு” என்று சொல்லியபடி வீட்டின் வாசலில் வந்து நின்ற காரை நோக்கி சென்றார் சிவராமன்.
அவரின் குரலைக் கேட்டு பின்னால் அவரின் மனைவியும் வந்து சேர்ந்தார்.காரை நிறுத்தி விட்டு இறங்கிய செழியன்,ஆராதனாவை சிரித்த முகத்துடன் “வாங்க மாப்பிள்ளை,வாம்மா ஆரா” என்று அழைத்தனர்.
“அத்தை!!! எப்படி இருக்கீங்க?!” என்று கேட்ட படியே அவரை அணைத்தவள்,பின் பேசியபடியே அனைவரும் உள்ளே சென்றனர்.பெண்கள் இருவரும் ஹாலில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பின் சமையலறைக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர்.
ஹாலில் அமர்ந்து இருந்த செழியன் வீட்டையே பார்ப்பதை உணர்ந்த சிவராமன் “என்ன ஆச்சு மாப்பிள்ளை… ஏதாவது வேணுமா? உங்க வீடு மாதிரி எல்லாம் இங்க ரொம்ப வசதி இருக்காது தான்” என்றவரிடம்
“அய்யோ அப்படி எல்லாம் இல்ல சார்…உங்கள் வீடு ரொம்ப வித்தியாசமா ட்ரெடிஷனலா இருக்கு நான் இந்த பீல்டுல இருக்கிறதுனால சும்மா பார்த்தேன்” என்று அவனும் வெளிப்படையாக பேசினான்.
“அப்போ வாங்க…உங்களுக்கு வீட்ட சுத்திகாட்டுறேன்” என்று அவனை மேலே கூட்டிச் சென்றார் சில விஷயங்களை பேச வேண்டும் என்ற எண்ணத்துடன்.மேலே சென்று வீட்டை பார்த்தவனை கவர்ந்தது அங்கு ஒரு அறையின் உட்புற சுவர் முழுவதும் புத்தகங்களால் நிரம்பி இருந்த மர அலமாரி.
“இது எல்லாம் உங்க கலெக்ஷனா?”
“ஆமா மாப்பிள்ளை புரோபஷன் தாண்டி எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப பிடிச்ச ஹாப்பி…அப்புறம் இந்த சார் வேண்டாமே எனக்கு ரொம்ப உங்கள தூரமா தெரியுது” என்றார்.
“அப்ப நீங்களும் என்ன பேர் சொல்லி கூப்பிடுங்க… இந்த பார்மாலிட்டி வேண்டாம்” என்று நல்லவிதமாக அவனும் பேசினான்.
“அதுவும் சரிதான்,அப்புறம் செழியன்…” என்று தயங்கியவாறே சிவராமன் பேச
“என்னாச்சு?சொல்லுங்க ஏன் தயங்குறீங்க இப்பதான் பார்மாலிட்டி வேண்டாம்னு சொன்னேன்”
“இல்ல நீங்க எப்படி இதை எடுத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியல…எனக்கு உங்க மனசு புரியுது உங்களுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு ஈடுபாடு இல்லைனு எனக்கு தெரியும்”
செழியனுக்கு இதைக் கேட்டு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.’இவருக்கு தெரியுமா எப்படி? ஒருவேளை அவ அவளோட மாமாகிட்ட மட்டும் சொல்லிட்டாளா?’ எதுவும் பேசாமல் சிவராமனை பார்க்க அவரே தொடர்ந்தார் “உங்க தனிப்பட்ட விஷயங்கள்,விருப்பு வெறுப்பில் நான் கருத்து சொல்ல முடியாது, சொல்லக்கூடாது தான்…எனக்கு பிள்ளைங்க கிடையாது ஆராதனா தான் எங்களுக்கு மகள்,மருமகள் எல்லாம்…உங்களை என்னோட பையன் நினைச்சு ஒன்னு சொல்லலாமா”
ஏனோ அவரிடம் முகத்தில் அறைந்தது போல் பேசத் தோன்றாமல் “சொல்லுங்க” என்பது போல் அவன் தலையை அசைத்து சைகை செய்தான்.
“ஒரு புத்தகத்தோட முதல் பக்கத்தை வச்சு கடைசி பக்கத்தை முடிவு பண்ணக்கூடாது…முதல்ல நம்மள சிரிக்க வைக்கலாம் கடைசியா அழுக வைக்கலாம் இல்ல யோசிக்க வைக்கலாம் ஏன் சோகமா கூட இருக்கலாம்…நாம நினைக்கிறதும் நமக்கு நடக்குறதும் தான் முதலும் முடிவும் நினைக்கிறது தப்பு… நல்லா இருக்கேன்னு அதே பக்கத்தில இருக்கிறது முட்டாள்தனம்..அதேபோல முதல் பக்கத்தை வைத்து மொத்த கதையும் படிக்காமலே முடிவு பண்றது தப்பு…வாழ்க்கையும் அது மாதிரிதான் தொடக்கம் நமக்கு சாதகமாக இல்லைனு அதே மாதிரி தான் முடிவும் இருக்கணும்னு இல்ல…இன்னைக்கு சரின்னு படுறது நாளைக்கு தப்புன்னு படலாம் இன்னும் கொஞ்ச நாள் போகி அது சரின்னு தோணலாம்…இது நம்ம சந்திக்கிற மனிதர்களுக்கும் பொருந்தும்”
“நடுவுல மாற்றம் , திருப்பம்னு என்ன வேணா நடக்கலாம்,ஆனா அதையெல்லாம் தாண்டி நம்ம வாழ்க்கையை நம்மை எப்படிக் கையாளுகிறோம், அமைச்சுக்குறோம் தான் ரொம்ப முக்கியம். அதுல தான் சுவாரஸ்யமும் கூட” என்று தன் மனதில் நினைத்ததை கூறி முடித்து செழியனை பார்த்தார்.
அவர் பேசியதைக் கேட்டு அவன் மனதில் ‘ஏன் இது ஒரு நல்ல தொடக்கமாக நினைக்கக்கூடாது’ என்று ஒரு விதை விழுந்தது.
“நான் சொல்லுறது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்” என்றவரின் பேச்சை இடைமறித்தது ஆராதனாவின் குரல்.
“இங்கதான் இருக்கீங்களா நான் கீழே தேடிட்டு இருந்தேன்…சாப்பாடு ரெடி அத்தை சாப்பிட உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாங்க” என்று அழைத்தாள்.
பின் அனைவரும் சாப்பிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.ஏனோ வந்த போது இருந்ததை விட அவர்களிடம் கொஞ்சம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான் செழியன். கிளம்பும் நேரத்தில் ஆராதனாவிடம் தனியாக சிவராமன் “ஒரு பொய்யில ஆரம்பிக்கிற வாழ்க்கை எப்படி இருக்கும் நான் சொல்ல தேவை இல்லை அதை நீயே கண்கூடா பார்த்து அனுபவிச்சு இருக்க…அதுக்குனு நான் உன்னை தப்பு சொல்லல உன் நிலைமை புரியுதுமா…அதே சமயம் உண்மைய சீக்கிரம் நீயே சொல்லி எல்லாத்தையும் சரி பண்ணிட்டு ஆராதனா” என்று கூறியவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் சரி என்பது போல் தலையை அசைத்து விடை பெற்றாள்.
அவளே எல்லா உண்மையும் கூற முயலும் போது அதைக் கேட்கும் நிலையில் செழியன் இருக்க போவதில்லை என்று யார் அவளுக்கு கூறுவது.
***************************
ஆராதனாவின் மனநிலை ஒருவித மகிழ்ச்சியுடன் தன்னவனின் அருகில் நல்ல விதமாக செலவு செய்த நேரங்களையும்,அனுபவத்தையும் எண்ணி கொண்டிருந்தாள்.
போகும்பொழுது நிறுத்தப்பட்ட அதே சிக்னலில் இப்பொழுதும் நிறுத்தப்பட அவனையும் மீறி கண்கள் அந்த சிக்னலில் ஏதாவது பூக்காரர்கள் இருக்கிறார்களா,தென்படுகிறார்களா என்று பார்க்க தூரத்தில் ஒரு பெண் பூ விற்பதை பார்த்தான்.பார்த்தவுடன் காலையில் அவள் சொன்ன விளக்கமும்,தியரியும் ஞாபகம் வந்து ஒரு சிறு புன்னகை தோன்றியது. அந்த மனநிலையில் உடனே திரும்பி அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க
அவனின் பதியோ “உன்னை நான் அறிவேன்” என்ற ரீதியில் அவனைப் பார்த்து கண்ணடித்து கொண்டிருந்தாள்.
“எப்பவும் நம்ம வாழ்க்கைல நடந்து முடிஞ்ச கடந்தகாலத்தை நினைச்சு வருத்தப்பட்டோ இல்ல எதிர்காலத்தை நினைச்சு பயந்தோ வாழக்கூடாது…இந்த நிமிஷம் என்ன நமக்கு சந்தோசமோ அத தான் நாம நினைச்சு சந்தோசப்பட்டு வாழனும் அதனால …” என்று அவள் இழுக்க
‘அதனால’ என்று அவன் ஏறிட்டு பார்த்தான்
அவளோ கள்ள சிரிப்புடன் “அதனால பேசாம அந்த பூக்காரம்மா கிட்டயிருந்து ரோஜா வாங்கி என்கிட்ட கொடுத்து ‘ ஐ லவ் யூ’ சொல்லிடுங்க”
பதிலுக்கு காதல் பார்வையா கிடைக்கும்,அக்னி பார்வையை வீசி “உன்ன…” என்று திட்டுவதற்குள் சிக்னலும் போட்டுவிட கோவத்தை அடக்கி அதில் கவனத்தை திருப்பினான்.
சிரிப்பை தேக்கியபடி ஜன்னல் பக்கம் திரும்பிய ஆராதனாவின் சிரிப்பு மொத்தமும் துணி வைத்து துடைத்தது போல விதிர்த்து போனாள்.அவள் நேரெதிரில் இருந்த சுமோவில் உள்ள நபரை பார்த்து அவள் இதயம் நின்று துடித்தது என்று தான் சொல்ல வேண்டும் .
எந்த நிழலையும்,நிஜத்தையும் கடந்து வந்ததாக நினைத்தாளோ அதுவே அவளை தொடர்வதை உணர்ந்து திகைத்தாள்.நல்ல வேலை செழியன் போக்குவரத்தில் கவனம் செலுத்தியதால் அவன் அவளின் திகைத்த தோற்றத்தை பார்க்கவில்லை.
அவளின் மனம் முழுவதும் ‘தான் அவர்களின் கையில் கிடைத்து சீரழிவதை விட எங்கு தன்னை பற்றி செழியன் அறிந்து கொண்டு தன்னை வெறுத்து விடுவானோ?’ என்று தான் பயந்தது.
மீண்டும் செழியனை இழக்க அவள் விரும்பவில்லை…சிக்னல் முடியவும்,அவர்களின் கார் வேறு திசை செல்லவும் சரியாக இருந்தது.செழியனுக்கு தெரியாமலே ஆராதனாவை அந்த கொடிய கும்பலிடம் இருந்து காப்பாறினான்.வீடு சேரும் வரை ஆராதனா எதுவும் பேசவில்லை.
இதே செழியன் தான் பின்னொரு நாளில் ஆராதனா கெஞ்சி கேட்டும் மனம் இறங்காமல் இந்த கயவர்களிடம் சிக்க வைப்பான் என்றும் அதனால் பல துயர சம்பவங்கள் நிகழ்ந்து ஆராதனா சாவின் விளிம்பிற்கே செல்வாள் என்றும் அப்பொழுது யாருக்கும் தெரியவில்லை.
ஆடு-புலி ஆட்டம்,ஓநாய்-நரிகளின் சூழ்ச்சியும் தந்திரங்களும் சேர்ந்து சுவாரஸ்யமாய் இனிதே தொடங்கியது!!!
” சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே…
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும் “