காதலாகி கைதியானேன் 04 12089 நித்யா மறுப்பாக தலையசைத்தாள். “போக விட மாட்டாங்க.. பொண்ணுங்க தான் அவங்க கௌரவம்.. அவளை என்ன வேணாலும் அவங்க பண்ணலாம்.. நாங்க எதுவும் செய்யக்கூடாது பதிலுக்கு.. செஞ்சா இப்படி பண்ணுவாங்க…” என்று அவள் அழ அவளை தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள் ருத்ரா. அரவிந்தனுக்கு கால் செய்தவள் “எங்க இருக்க மேன் நீ..” என்று கேட்டிருக்க அவன் என்ன சொன்னானோ.. “இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க இருக்கணும்.. நித்யா வீட்டுல.. கார் எடுத்திட்டு வா…” என்று கூறி அழைப்பை துண்டிக்க, அந்த பாட்டி மீண்டும் எழுந்தவர் நித்யாவின் கையை பிடித்துக் கொள்ள “ஏய் நீ பாடி ஆகாம போக மாட்ட..” என்றவள் அவளை நோக்கி முன்னேற “ஐயோ இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்குமா..” என்று சத்தமாக அவர் ஒப்பாரி வைக்க “பொம்பளை, வயசானவ இதெல்லாம் பார்க்கவே மாட்டேன்.. வாயிலேயே மிதிச்சிடுவேன்.. அந்த அளவுக்கு கொலை வெறியில இருக்கேன்… மரியாதையா அமைதியா இருந்துக்கோ… இல்ல கஞ்சா கடத்துற பொம்பளை ன்னு சொல்லி தூக்கி உள்ள வச்சிடுவேன்…” என்று காலை வேறு தூக்கி காட்டவும், பயத்தில் சற்றே வாயை மூடினார் அவர். இதற்குள் அரவிந்தன் வண்டியுடன் வந்து விட நித்யாவை கையை பிடித்து அழைத்துக் கொண்டு அவள் முன்னேற “அம்மா..” என்று வலியில் கத்திவிட்டாள் அவள். அவளால் அடி எடுத்து வைக்கவே முடியவில்லை. அவள் நிலையை பார்த்தவள் வந்த வெறியில் அந்த பாட்டியை இப்போது நிஜமாகவே மிதித்து விடுவோமா என்று கூட யோசித்தாள். ஆனால் அப்போது நித்ய முக்கியமாகப்பட சற்றும் யோசிக்காமல் அவளை இரு கைகளிலும் குழந்தையை போல் தூக்கிக் கொண்டாள் ருத்ரா. நித்யா வலியில் முகம் சுருக்கி கொள்ள, “கொஞ்சம் பொறுத்துக்கோ.. ஹாஸ்பிடல் போய்டலாம்..” என்றவள் வெளியே வர, இதற்குள் வெளியே கூட்டம் கூடி இருந்தது. அரவிந்தன் நிலைமையை உணர்ந்தவன் லோக்கல் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட, அவர்கள் இன்னும் வந்து சேர்ந்திருக்க வில்லை. நித்யாவை தூக்கி செல்ல விடாமல் தடுப்பதே அங்கிருந்தவர்கள் எண்ணமாக இருக்க, அவர்களை மதிக்கவே இல்லை ருத்ரா. “அரவிந்த்..” என்று அழைத்தவளின் குரலில் அரவிந்தன் கார் கதவை திறக்க, நித்யாவை உள்ளே அமர்த்தினாள் ருத்ரா. அவள் முழுவதுமாக பயந்து போயிருக்க “படுத்துக்கோ..” என்று சிரித்துக் கொண்டே கூறியவள் காரை வெளிப்புறம் பூட்டி விடுமாறு அரவிந்தனுக்கு கண்ணை காட்ட, அப்படியே செய்தான் அவன். அதன் பின்பே அங்கிருந்தவர்களிடம் அவள் திரும்ப, அவர்களுக்கு எதிரில் வந்து இறங்கினார் சந்தனபாண்டியன். நித்யாவின் தந்தை. நேரே ருத்ராவிடம் வந்தவர் “என்ன பண்ணிட்டு இருக்கிங்கமா நீங்க.. யார் வீட்டு பெண்ணை யார் தூக்குறது.. எதுக்கு என் பொண்ணை கைது பண்ணி இருக்கீங்க..” என்று அவர் கத்த “உங்க பொண்ணை கைது பண்ணி இருக்கிறதா யார் சொன்னது??? அவங்களுக்கு இப்போ மருத்துவ உதவி தேவை.. அதுக்குதான் கூட்டிட்டு போறேன்..வழியை விடுங்க.” என்று அவள் நிதானமாகவே கூற சந்தனபாண்டியன் அடங்கவே இல்லை..”அவளை உங்களோட அனுப்ப முடியாதும்மா… எங்க வீட்டு கௌரவம் அவ.. அவளை நீங்க கூட்டிட்டு போனா, நாங்க எல்லாம் தூக்குல தான் தூங்கணும்.. உங்களுக்கு விசாரிக்கணுமா நான் உங்ககூட வரேன்.. என் மகளை விட்டுடுங்க..” என்று அவர் மீண்டும் தொடங்க “உங்க மகளை விசாரிக்க அழைச்சிட்டு போறதா நான் சொல்லவே இல்லையே.. எதுக்கு அவளை விசாரிக்கணும்??? ” என்று சந்தனபாண்டியனை ஆழம் பார்த்தவள் தலையை அசைத்துக் கொண்டு “ஆனா உங்ககிட்ட நிச்சயம் விசாரிக்கணும். அதுக்கு இன்னொரு நாள் வரேன்.. இப்போ வழியை விடுங்க..” என்று அழுத்தமாக அவள் உரைக்க “அவளை நீங்க இங்கிருந்து கூட்டிட்டு போக முடியாதும்மா…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றவர் “டேய் மாணிக்கம் கதவை திறந்து அவளை வெளியே இழுடா..” என்று சத்தமாக கூற, அரவிந்தன் “ஏய்..” என்று அதட்டிவிட்டான். “யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க தெரியுமா.. அத்தனை பேரையும் தூக்கி உள்ள வச்சிருவேன்.. இப்போ வழியை விடல..” என்று ஆஜானுபாகுவாக இருந்த அவன் ஒருபக்கம் மிரட்ட, அவன் அருகில் நின்றிருந்தவர்கள் சற்றே பின் வாங்கினர். ருத்ரா சந்தனபாண்டியனிடம் “நீங்களா அனுப்பி வச்சா உங்களுக்கு மரியாதை.. இல்ல மீடியாக்கு தகவல் கொடுத்திருவேன்… உன் பொண்ணு உன் கூட நிக்க மாட்டா போல.. அதுவே பெரிய ப்ளஸ் எனக்கு.. மீடியா வரவச்சு அவங்க முன்னாடி உன் பொண்ணை தூக்கிட்டு போகட்டுமா.. இல்லை நானே இப்போ கூட்டிட்டு போகட்டுமா… “யோசிச்சுக்கோ.. உன் மானம் போனது உன் ஊரோட போகணுமா.. இல்ல இந்தியா முழுக்க தெரியனுமா..” என்று அவரை மிரட்ட அவரோ மீண்டும் “நீங்க மட்டும் அவளை கூட்டிட்டு போயிட்டீங்க.. நாங்க குடும்பமே விஷத்தை குடிச்சு செத்திடுவோம் மேடம்..” என்று மிரட்டலாக கூற “எப்படி? திலீபனுக்கு ஊத்தி கொடுத்தீங்களே… அப்படியா.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. குடிச்சிட்டு சாவு.. மக்கள்தொகையில ஒன்னுரெண்டு குறையட்டும்.. மொதல்ல வீட்ல வச்சிருக்க பாரு அந்த கிழட்டு கொரங்கு அவளுக்கு ஊத்து. நீங்க எல்லாம் பெத்தவங்க..வழியை விடுய்யா..” என்று கத்தியவள் காரின் முன்பக்கம் ஏறினாள். அரவிந்தன் அவள் ஏறவும் காரை எடுத்துவிட அவர்கள் வாகனத்தின் முன்னால் வந்து நின்றனர் அந்த ஊர் காவல்துறையினர். அதிலிருந்த இன்ஸ்பெக்டர் இறங்கி வந்து ருத்ராவுக்கு வணக்கம் வைக்க, தலையசைத்து ஏற்றுக் கொண்டாள். அவரை கேள்வியாக பார்க்க “மேடம்.. ஏதோ பிரச்சனைன்னு..” அவர் இழுக்க “புடு….. கறதுக்கு வந்திங்களா… சினிமா போலீசா நீங்க எல்லாம்… எல்லாம் முடிஞ்ச உடனே வந்து நிற்கிற.. நிமிர்த்துறேன் இரு உங்களை எல்லாம்… ” என்றவள் அந்த காவலர் அதிர்ந்து பார்க்கும்போதே “அங்க நீ கழட்ட ஒன்னும் இல்ல.. கிளம்பு.” என்று விட்டாள். அரவிந்தனிடம் தலையசைக்க அவன் காரை எடுத்து சற்று முன்னேற, அவள் வண்டி நின்றிருந்த இடத்தில் இறங்கியவள் வண்டியை எடுத்துக் கொள்ள அரவிந்தன் காரை எடுத்தான். அவனை பின்தொடர்ந்து அவள் செல்ல, அரவிந்தன் அந்த மருத்துவமனையின் முன் தன் காரை நிறுத்தி இருந்தான். ருத்ரா வண்டியை நிறுத்தி இறங்கியவள் நித்யாவின் அருகில் வந்து அவள் இறங்க கைகொடுக்க, அவள் கையை பிடித்துக் கொண்டு இறங்கி அவள் நிற்கவும், அரவிந்தன் நர்ஸோடு வரவும் சரியாக இருந்தது. அந்த செவிலி அவள் நிலையை பார்த்தவள் அவளை சக்கர நாற்காலியில் அமர சொல்லி அழைத்து சென்றுவிட்டார். அதற்கு மேல் நித்யா மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் வந்துவிட, ருத்ரா அந்த அறையின் வாசலில் அமர்ந்து விட்டாள். மருத்துவர் அந்த பெண்ணோடு வந்தவர்களை உள்ளே அழைப்பதாக செவிலி வந்து சொல்ல உள்ளே சென்றாள் ருத்ரா. அந்த பெண் மருத்துவர் ருத்ராவை பார்த்ததும் “என்ன ஆச்சு மேடம் இவங்களுக்கு.. எப்படி மனசு வருது.. இப்படியெல்லாம்… ” என்று அவர் கோபமாக பேச, “முதல்ல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க டாக்டர்… எல்லாமே நான் உங்களுக்கு பொறுமையா சொல்றேன்.. தீக்காயம் மாதிரி இருக்கு.. அவளை மொதல்ல பாருங்க..” என்று விட்டு வெளியே வந்துவிட்டாள். வெளியே வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அப்போதும் ஒருகாலை மடித்து மற்றொரு காலின் மீது போட்டுக் கொண்டவள் அந்த இருக்கையில் பின்னால் சாய்ந்து தான் அமர்ந்திருந்தாள். கண்ணில் கண்டதை மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்துக் கொண்டிருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்?? என்ற ஆத்திரம் தான்… பெற்ற மகளையே சாதிக்காக பலியிட துடிக்கும் இவர்களை கொன்று போட்டால் கூட தப்பில்லை என்றுதான் தோன்றியது அந்த நிமிடம். “திலீபன் கொலையில் சந்தனபாண்டியனின் பெயர் மட்டும் வரட்டும்.. இதற்கும் சேர்த்து மொத்தமா முடிச்சிடறேன்…” என்று கறுவிக் கொண்டாள் ருத்ரா. அவள் அங்கே அமர்ந்திருந்த நேரம்தான் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் அழகர். ஆம்.. அது அவன் வேலை பார்க்கும் மருத்துவமனை தான். அன்றைய புறநோயாளிகளை கவனித்து விட்டு அவன் தன்னறைக்கு திரும்பிக் கொண்டிருக்க, தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே ருத்ரா. ஒருநிமிடம் யாருக்கு என்னவோ?? என்று தான் தோன்றியது அழகருக்கு. அவள் மீது கோபம் இருந்தாலும், இது நேரமில்லை என்று அவள் அருகில் சென்றான் அழகர். தலையை பின்னால் சாய்த்து இருந்தவள் முதலில் அழகரை கவனிக்கவே இல்லை. கண்களை மூடிக் கொண்டு அவள் இருக்க, அழகர் தான் “மேடம்..” என்று அழைத்திருந்தான். அரவிந்த் இல்லையே என்று அவன் குரலில் ருத்ரா நிமிர்ந்து பார்க்க, நிச்சயம் அழகரை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவனை பார்த்த நொடி “ஓஹ்.. மிஸ்டர் நியாயம்..” என்றுவிட்டாள் அவள். அழகரின் முகம் சிவந்து போக, “ஹேய்.. உங்களை பார்த்த உடனே அதான் நியாபகம் வந்தது சொல்லிட்டேன். கலாய்க்க எல்லாம் இல்லை மிஸ்டர். கள்ளழகர்..” என்று அவள் சாதாரணமாகவே கூற அழகர் சற்றே நிதானித்துக் கொண்டான். “என்னாச்சு மேடம் இங்க…ஏதாவது பிரச்சனையா.. யாருக்கும் முடியலையா..” என்று கேட்க, ருத்ராவுக்கு சற்றே வியப்பாக இருந்தது அவனை எண்ணி…. நிச்சயம் அக்கறையாக தான் கேட்டான்.. “அவ்வளவு நல்லவனாடா நீ ” என்று நினைத்துக் கொண்டவள் சைகையில் அந்த அறையை காட்டினாள். “ஒரு பேஷண்ட் உள்ளே இருக்காங்க. எனக்கு ரொம்ப முக்கியமான சாட்சி.. கொஞ்சம் முடியல அவங்களுக்கு…” என்று பதில் கொடுக்க “நான் பார்க்கிறேன்..” என்று உள்ளே நுழைந்தான் அவன். ருத்ரா அவனை தடுத்து விட்டாள். “உள்ளே ஆல் ரெடி பார்த்திட்டு இருக்காங்க அழகர்.. நீங்க கிளம்புங்க..” என்றுவிட்டாள். அவனுக்கு சற்றே அவமானமாக இருந்தது அந்த நொடிகள்.. உதவி செய்ய என்று சென்றிருக்க, அவள் முகத்தில் அடித்ததை போல பேசிவிட, “தேவையா..” என்று கேட்டது மனசாட்சி. அவன் அமைதியாக நகர, ருத்ரா “உள்ளே இருப்பது ஒரு லேடி.. ஊர்க்கார பொண்ணு.. காயமும் காலுக்கு மேலதான்… நீங்க உள்ளே போறதை எப்படி எடுப்பாங்க சொல்ல முடியாது..” என்று கூறினாள். ஆனாலும் அவள் இருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை. அவள் உட்கார்ந்திருந்த விதமும் மாறவில்லை. அவள் இதை சொன்னதே பெரிய விஷயம்தான் என்பது அழகருக்கு புரிய, தலையசைத்து கொண்டு நகர்ந்தான் அவன். அவன் நடந்து அந்த காரிடாரை கடக்கும் பொது அவன் எதிரில் பதட்டமாக வந்து கொண்டிருந்தார் சந்தனபாண்டியன். அழகரை கண்டவர் “அழகரு.. “என்று அவன் கையை பற்றிக் கொள்ள, அவனுக்கு புரியவே இல்லை. யாருக்கும் முடியவில்லையோ என்று அவன் பார்க்க, அவரோ அழுதே விட்டார். அவரும் முறைக்கு அவனின் சித்தப்பா தான். அவர் தந்தையின் ஒன்றுவிட்ட சொந்தம். அவ்வபோது தந்தையை பார்க்க வீட்டுக்கும் வந்து செல்லும் மனிதர் தான். இவர் ஏன் அழுகிறார்?? என்று யோசித்தவன் “என்னாச்சு சித்தப்பா.. என்ன விஷயம்?? எதுக்கு அழறீங்க??” என்று கேட்க அவன்கூட இருந்த ஒருவர் தூரத்தில் அமர்ந்திருந்த ருத்ராவை கைகாட்டி அவனிடம் எதையோ சொல்ல, ருத்ராவை திரும்பி பார்த்தான் அழகர். சந்தனபாண்டியன் ஓய்ந்து போனவராக காணப்பட, “எதுக்கு நித்யாவை இவங்க தூக்கிட்டு வரணும்?? என்ன நடந்திருக்கும்??? ” என்று யோசனையில் நின்றுவிட்டான் அழகர். சந்தனபாண்டியனோ “அழகரூ… இது நீ வேலை பார்க்கிற இடம் தானே.. நித்யாவை என்கூட அனுப்பி வச்சிடுய்யா.. அந்தம்மா கிட்ட கொஞ்சம் சொல்லு.. என் மக போலீசு, கேஸ்ன்னு அலைய வேண்டாம் ஐயா..” என்று அவர் அழ அவரை அழைத்துக் கொண்டு ருத்ராவிடம் வந்தான் கள்ளழகர். ருத்ரா அப்படியே அமர்ந்திருக்க “மேடம்.. எதுக்காக நித்யாவை நீங்க அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க.. அவ என்ன தப்பு செஞ்சா..” என்று அவன் ருத்ராவிடம் கேட்டு நிற்க “முதல்ல நீங்க யாரு?? எதுக்கு உனக்கு பதில் சொல்லணும் நான்..??” என்று நக்கலாக அவனை கேட்டுவிட்டாள் ருத்ரா. அவனுக்கு இவன் வக்காலத்தா என்று தோன்றிவிட அதன் வெளிப்பாடே இந்த அலட்சியம். “மேடம்.. நீங்க அரெஸ்ட் பண்ணி இருக்கறது என் தங்கச்சியை.. இவர் என்னோட சித்தப்பா..” என்று அவன் வேகமாக கூற,இருந்த இடத்திலிருந்து எழுந்து விட்டாள் அவள். “ஹேய்… யாருய்யா நீ.. ஊர்ல எவனை பார்த்தாலும் சொந்தக்காரன்.. சித்தப்பா, பெரியப்பான்னு வந்து நிற்கிற..” என்றவள் உண்மையில் அவனை எரிச்சலாகவே பார்க்க “மேம்.. பார்த்து பேசுங்க.. என் தங்கச்சியை நீங்க எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்..காலேஜ் படிக்கிற பொண்ணு அவ..” என்று அழகர் கூற “உள்ளே இருக்கறது யாருன்னு கேட்டியே.. உன் தொங்கச்சிதான்.. அவளை இப்படி குத்துயிரும், குறை உயிருமா ஆக்கியது இதோ உன் சித்தப்பன் தான்… கேளு.. என்ன செஞ்சாரு அவர் பொண்ணை??” என்று ஆத்திரமாக கூறியவள் மீண்டும் இருக்கையில் அமர்ந்துவிட்டாள். அவன் தன் சித்தப்பாவை திரும்பி பார்க்க, தலையை குனிந்து கொண்டார் அவர். மேலும் “நான் எதுவும் செய்யலை அழகர்.. அம்மாதான் அண்ணேன் பேச்சை கேட்டுகிட்டு சூடு போட்ருச்சு.. அடிச்சு வேற வச்சிடுச்சு..” என்று அவர் தயங்கி தயங்கி கூற அதிர்ந்து போனான் அவன். தன் தங்கை வயதே இருக்கும் பெண். தங்கையும் கூட.. இவர்களுக்கு எப்படி மனம் வந்தது என்று நொந்து போனான் அவன். கோபமாக அவரை முறைத்தவன் அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தான். எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை அவன். நித்யாவின் உடல்நிலை முக்கியமாகப்பட, உள்ளே சென்றிருந்தான். அங்கிருந்த மருத்துவர் அவள் நிலையை விளக்க, அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும் வேகம்தான். நித்யா மயக்கத்தில் இருக்க, அவள் தலையை கோதி கொண்டு நின்றிருந்தான். இதற்குள் ருத்ரா அறைக்குள் நுழைய,அவள் கண்டது தங்கையின் தலையை கோதிக் கொண்டு நின்ற அழகரை தான்.